மார்கழி சதயம் நீலகண்ட தீட்சிதர் குருபூஜை

மார்கழி சதயம் நீலகண்ட தீட்சிதர் குருபூஜை

25/12/2025 அன்று மார்கழி சதய நட்சத்திர‌ நாள், அந்நாளில் ஒரு மாபெரும் மகானை அவதாரத்தை ஆதிசங்கரர், ராமானுஜர் சாயல் கொண்ட ஞானத் திருவுவரும் ஒன்றை நினைத்து பார்த்து வழிபடவேண்டியது தமிழக இந்துக்களின் தலையாயக் கடமை.

மதுரையில் எக்காலமும் மீனாட்சி உண்டு, அவள் ஆட்சி உண்டு எனும் மெய்சிலிர்க்கும் உண்மையும், அவள் காலம் காலமாகத் தன் அடியார்களைக் கொண்டு தன் ஆலயத்தை மீட்டெடுத்துக் கொண்டே இருக்கின்றாள் என்பதற்கு இந்த அவதாரமும் ஒரு சாட்சி.

மதுரை ஆலயம் யுகங்களைத் தாண்டியது. அதே நேரம் பல ஆபத்துக்களைக் கடந்தே வந்தது. சமணர் கால ஆபத்தை மூர்த்தி நாயனார் மன்னராகித் தவிர்த்தார், மீண்டும் சமணர் அட்டகாசம் செய்தபோது திருஞானசம்பந்தர் வந்து மீட்டார்.

அப்படிப் பல வகையில் மீண்ட ஆலயம் மறுபடியும் சுல்தானியர் காலத்தில் சீரழிந்தது. ஆம், இன்று காணும் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் பாண்டியர் கால தொடர்ச்சி அல்ல, அது மாலிக்காபூர் காலம் இன்னும் சுல்தானிய 40 வருட காலங்களில் நொறுக்கப்பட்டு உடைக்கப்பட்டு கொஞ்சம் கோவிலும் மீதி அழிபட்ட நிலையில்தான் கிடந்தது.

நாயக்கர்கள் கம்பண்ண உடையார் தலைமையில் வந்து சிக்கந்தரை ஒழித்து மதுரையினை மீட்டாலும் அம்மன் சந்நதியில் சில வழிபாடுகள் நடந்ததே தவிர முறையான பூஜை, கொண்டாட்டம், தேர் என எதுவுமில்லை. ஆலய சந்நதியே இடிபாட்டுடன் கிடக்கும் போது என்ன விதி பின்பற்றமுடியும்.

இதனால் 40 ஆண்டுகளுக்குப் பின் அக்கோவிலில் சென்று இடிபாடுகள் மத்தியில் சிவனையும் மீனாட்சியினையும் வணங்கமுடிந்ததே தவிர எங்கும் உடைந்த தூண்களும் கற்குவியலும் உடைபட்ட சிற்பமுமாகவே ஆலயம் சோமநாதபுரி ஆலயம் போல் அழிபட்டுக் கிடந்தது.

ஆம், அப்படித்தான் கிடந்தது. பெரும் அழிவினை அங்கே மாலிக்காபூரும் துக்ளக் வம்சமும் செய்திருந்தது, நாயக்கர்கள் வைஷ்ணவர்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் தங்கி ஸ்ரீரங்கம் கோவிலைத்தான் புதுபித்துக் கொண்டிருந்தார்கள் காரணம் இதே அழிவு அங்கும் நடந்திருந்தது, திருச்சியே அவர்கள் தலைநகராகவும் இருந்தது.

இந்நிலையில் அன்னை மீனாட்சி எந்தக் கம்பண்ண உடையாருக்கு வாள் கொடுத்து திருவண்ணாமலையில் இருந்து மதுரைக்கு அழைத்து வந்தாளோ அதே மீனாட்சி தன் ஆலயம் புத்தொளிப்பெற்று பெரும் ஆகம விதிப்படி பூஜையும் கொண்டாட்டமும் நடக்க இருவரை அழைத்துவந்தாள்.

முதலில் அவள் திருமலை நாயக்கனை திருச்சியில் இருந்து மதுரைக்கு அழைத்தாள், அவன் கனவில் சிவனே தோன்றி மதுரைக்குச் செல் என்ற பின்பே அவன் மதுரை வந்தான்.

அவன் மன்னன், அவனிடம் அதிகாரம் ஆட்சி செல்வாக்கு எல்லாம் உண்டு. ஆனால், அதே நேரம் பக்தியில் ஆகமநெறியில் சிறந்த கரைகண்ட ஒரு ஞானி இல்லாமல் எப்படி ஆலயம் புத்துயிர்பெறும்? அதனால் ஒரு மகா ஞானியினையும் அழைத்துவந்தாள்.

அவர்தான் நீலகண்ட தீட்சிதர், அப்பையா தீட்சிதரின் சகோதர வம்சம்த்தில் வந்தவர், இவர்களெல்லாம் பரத்வாஜ முனிவரின் வழிதோன்றல்கள். அப்பையா தீட்சிதர் 104 நூல்கள் எழுதி இந்துமத தத்துவங்களை மிக ஆழமாக நிலை நிறுத்திய ஞானி, செஞ்சி நாயக்க மன்னர்களால் 15 ஆம் நூற்றாண்டில் ஆதரிக்கப்பட்டவர்.

அவரின் சகோதரன் வம்சமாக இந்த நீலகண்ட தீட்சிதரும் 16 ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் பக்கம் அவதரித்தவர், அன்னைமேல் அளவிடமுடியாப் பக்தி அவருக்கு இளமையில் வந்தது, காஞ்சிபுரம் அம்மன் கோவிலில் வழிபட்டு சுற்றிக்கொண்டிருந்தவரை அன்னையே கனவில் தோன்றி மதுரைக்குச் செல்லப் பணித்தாள்.

அப்போதுதான் மதுரையில் திருமலை நாயக்கன் சிவன் உத்தரவுப்படி வந்து பெரும் பணிகளைச் செய்ய ஆரம்பித்தான். அது அவன் ஆட்சியின் தொடக்ககாலமாய் இருந்தது, அப்போது அவனுக்கு மாளிகையுமில்லை, இந்த மீனாட்சியம்மன் ஆலயமும் இடிபாடுகளுடன் இருந்தது. அவன் மெல்லத் தன் ஆட்சியினைத் தொடங்கினான்.

அப்படி அவன் தொடங்கியபோதுதான் மதுரைக்குள் வந்திருந்தார் நீலகண்ட தீட்சிதர், அவருக்கு அந்த ஊர் புதிது. இந்தப் பகுதிகள் புதிது , மன்னனும் அவருக்குத் தெரியாது , பொதுவாக மன்னர்கள் உரிய ஆவண அடையாளமில்லாதவனை நம்பக் கூடாது என்பதும் விதி.

மதுரை வந்த நீலகண்ட தீட்சிதர் அன்னையிடம் மனதை அப்படியே ஒப்படைத்தார், முழுக்க அங்கே இடிபாடுகள் நடுவில் தியான நிலையில் அமர்ந்தார். அவருக்குள் ஒரு சக்தி ஊடுருவிற்று, அன்னை அவரை முழுக்க ஆட்கொண்டாள், அவர் போதிக்கத் தொடங்கினார்.

சமஸ்கிருதம், தமிழ் எனப் பலமொழிகளில் வல்லவராயிருந்த அவருக்கு எல்லாப் புராணமும் வேதமும் தெரிந்திருந்தது, அப்போது சைவ வைணஷ்ண கருத்துமோதல்கள் அடிக்கடி நடக்கும், அதுவும் சைவபூமியான மதுரைக்கு வைஷ்ணவ மன்னன் வந்தது, சில கருத்துவேறுபாடுகளைச் சிலரிடம் கொண்டிருந்தது.

மதுரையினை நாயக்கர்கள் கைப்பற்றிய நாள்முதல் கவனமாகவே கையாண்டார்கள், அது பாண்டிய பூமி என்பதும் பாண்டியரில் சிலர் அதனை மீளக் கோரியதும் அதனால் ஒருமாதிரியாக லாவகமாக மதுரையில் அதிகம் தலையிடாமலே நாயக்கர்கள் இருந்தார்கள். ஆனால், சிவன் அழைப்பில் திருமலை நாயக்கன் வந்தாலும் இந்த அச்சம் உள்ளூர இருந்தது.

இதனால் அவன் அடிக்கடி மாறுவேடத்தில் நகருக்குள் சுற்றுவதும் மக்கள் என்ன பேசிக்கொள்கின்றார்கள், தன்னை ஏற்றுக்கொள்கின்றார்களா என உளவுபார்ப்பதும் அடிக்கடி நடந்தது.

மதுரையில் தன் ஞானத்தால் மெல்ல மெல்ல சுடர்விட்டுக் கொண்டிருந்தார் நீலகண்ட தீட்சிதர், சைவருக்கும் வைஷ்ணவருக்குமான வாதங்களில் அவரும் சேர்த்துக்கொள்ளபட்டார், அன்னையின் கருணையால் அவர் எல்லாம் அறிந்தவர் என உணர்ந்த மக்கள் அவரை ஆதரித்தனர், அனுதினமும் மாலை வைகையாற்றின் மணல் மேட்டில் அவர் பிரசங்கம் நிகழ்த்துவார்.

மன்னன் தன் மாறுவேடப் பணியில் இந்தக் கூட்டத்தை அவதானித்தான். என்ன பேசுகின்றார்கள் எனக் கேட்க அவனும் பாமர மக்கள் போல சென்று நின்றான், நீலகண்ட தீட்சிதர் பேச பேச அருவிப்போல் கொட்டும் அவர் ஞானத்தை மீனாட்சியம்மன் புகழை சைவ வைஷ்ணவ தாத்பரியத்தை அவர் பேச பேச உருகிப்போனான்.

சிக்கல்கள் நிறைந்த மதுரை ஆட்சியில் இந்த ஞானி அரண்மனையில் இருக்கவேண்டும் என அவன் முடிவு செய்தான், அவர் பேசிமுடிக்கும் வரை முழுக்கக் கண்களை மூடிக் கேட்டவன் அவர் தங்குமிடம் எல்லாம் விசாரித்துவிட்டு அரண்மனைக்குத் திரும்பினான்.

அவன் மதுரைக்குச் சொக்கநாதன் பிரதிநிதியாக வந்தவன் என்பதால் இவருக்கு என்ன பொறுப்பு தரலாம் எனச் சிவனிடம் வேண்டிவிட்டு தூங்கினான். அப்போது வந்த காட்சியில் ஒரு அந்தணர் நீலகண்டரைத் தன் அருகில் அமரவைத்த காட்சியினை கண்டவன் மறுநாளே அவருக்குப் பல்லக்கு அனுப்பி அழைத்து வர ஏற்பாடு செய்தான்.

மேள தாளம் முழங்க மன்னனின் உத்தரவுப்படி அவர் அழைத்து வரப்பட்டார், தன் அவையினைக் கூட்டி சான்றோர்கள் கற்றோர்கள் முன்னிலையில் “இம்மனிதன் பெரிய ஞானி எனக் கண்டேன், உங்களுக்கு இவர்மேல் நம்பிக்கை இருந்தால் என் தலைமை அமைச்சராக்குவேன்” என அறிவித்தான்.

அவை கேட்ட எல்லாக் கேள்விக்கும் மிகுந்த பொறுமையுடனும் கூரிய அறிவுடனும் நீலகண்டர் பதில் சொல்ல சொல்ல அவை மிகுந்த மௌனத்துடன் அவரைச் சரணடைந்தது. நீலகண்ட தீட்சிதர் ஒரே நாளில் மன்னனின் தலைமை அமைச்சரானார்.

அன்னை மீனாட்சியினை வணங்கி தன் பணியினைத் தொடங்கினார் நீலகண்டர், அனுதினமும் அங்கு முக்கால பூஜை செய்வதும், வழிபடுவதும் அவரின் வழமையாயிற்று.

அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் மாணிக்கவாசகர் போல அவர் அங்குப் பெரும் செல்வாக்கை பெற்றார், பதவியில் மட்டுமல்ல செயலிலும் அதே பக்தி அதே ஞானம் இருந்தது, மாணிக்கவாசகர் இரண்டாம் முறை வந்ததுபோல் அவரின் செயல்கள் இருந்தன‌.

இவரிடம்தான் மன்னன் திருமலை நாயக்கன் மதுரை ஆலயத்தை மீள நிர்மாணிக்கும் காரியத்தை ஒப்படைத்தான். அவர்தான் சுல்தான் காலத்தில் சீரழிந்து கிடந்த கோவிலை மறு நிர்மாணம் செய்தார்.

மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் செய்ததை போல் இங்கு மதுரை ஆலயத்தை மீள நிர்மாணித்தது இவர்தான், இன்று காணும் மீனாட்சி அம்மனுக்கு முன்பிருக்கும் மண்டபம் இன்னும் பல மண்டபம் அவரே கட்டியது.

மதுரை ஆலயத்தில் சுல்தான்கள் ஆட்சியில் சீரழிந்த பூஜை முறைகளை இவர்தான் நெறிப்படுத்தினார், ஆறுகால பூஜைகள் விழாக்கள் என இப்போது காணும் எல்லாமும் இவர் ஏற்படுத்தியது.

அதுவரை மதுரையில் சைவ சமய பேதங்கள் இருந்தன, மதுரை அழகர் கோவில் விழா தனியாகவும், மீனாட்சி விழா தனியாகத்தான் நடந்தது, இதை ஒன்றாக்கி சித்திரை விழா என அறிவித்ததில் திருமலை நாயக்கருக்கு ஆலோசகராக இருந்தவர் இவர்தான்.

சுமார் 25 ஆண்டுகள் போராடி அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை ஆலயத்தைச் சீரமைத்தனர், அதன் பின்பே ஆலயம் இயல்பு நிலைக்கு வந்தது, கோவில் மண்டபமும் சிற்பமும் இதர காரியங்களெல்லாம் முழுமைப் பெற்றன‌.

மதுரை ஆலயம் மறுபடி ஜொலிக்க ஆரம்பித்தது, நீலகண்ட தீட்சிதர் ஒரு தவமுனியாக நின்று இதனைச் சாதித்தார், தான் தேர்ந்துகொண்ட அடியார் மூலம் அன்னை தன் ஆலயத்தை மீட்டுக் கொண்டாள்.

இப்படி ஜொலித்த ஆலயமே பின்னாளில் குமரகுருபரை அழைத்தது. அன்னை அவருக்கு முத்துமாலை சாற்றி காசிக்கு அனுப்ப திருவுளம் கொண்டாள், திருமலை நாயக்கரும் நீலகண்ட தீட்சிதருமே அவரைக் காசிக்கு அனுப்பினார்கள்.

காரணம், காசியில் அன்று ஆலயம் அழிந்து கிடந்தது. பூஜை எதுவுமில்லை. மொகலாயரின் ஆட்சியில் அப்படி அலங்கோலமாகக் கிடந்தது. குமரகுருபரர் சென்று ஷாஜகானின் மூத்த மகன் தாரா ஷிக்கோவிடம் வாதாடி பின் சிங்கம் மேல் அமர்ந்து அற்புதம் செய்து சகலகலாவல்லி பாடலைப் பாடி அவனைப் பணியவைத்து ஆலயத்தை மீட்டு வழிபாடுகளை நடத்தி அங்கே ஆஸிரமம் அமைத்துத் திருப்பணிகளை மேற்கொண்டார்.

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம். இப்படித் துலங்கியபோது காசியும் பின்னர் துலங்கிற்று, தேசம் கண்ட மெய்சிலிர்க்கவைக்கும் வரலாறுகள் இவை, காசிக்கும் மதுரைக்கும் இடையே உள்ள பந்தத்தை மீள மீள சொன்ன சாட்சிகள் இவை.

மதுரை ஆலயம் துலங்க துலங்கத்தான் வீரசிவாஜி இந்து நெருப்பாய் எழுந்து மாபெரும் இந்துராஜ்ஜியம் அமைத்துக் காட்டினான், இதுவும் வரலாறு.

மதுரை ஆலயத்தை இப்படி கட்டிமுடித்தபின்பே மன்னன் திருமலைநாயக்கன் தனக்கான மாளிகையினைக் கட்ட தொடங்கினான், அதற்கான இடத்தை நீலகண்ட தீட்சிதரே காட்டினார், அப்போதுதான் சுல்தான்களுக்கு அஞ்சி அக்கால இந்துக்கள் புதைத்த சிலைகள் பல மீண்டன, அப்படி மீண்டதுதான் முக்குறுணி பிள்ளையார் சிலை எனும் பிரமாண்ட சிலை. அது இப்போதும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உண்டு.

அன்னைக்கு கோவிலும் மன்னனுக்கு மாளிகையும் எழுந்தபின் மிக அமைதியாக தன் பெரும் நூல்களை எழுதினார் நீலகண்ட தீட்சிதர்.
அவை சமஸ்கிருதம் தமிழ் என இரண்டுமாக இருந்தது.

அவர் வடமொழியில் இருந்த நூல்களைத் தமிழுக்கும், தமிழில் இருந்த பல ஆழமான நூல்களைச் சமஸ்கிருதத்துக்கும் மாற்றிக் கொடுத்தார்.

நீலகண்ட தீக்ஷிதரின் மிகப் பிரசித்தி பெற்ற காவியம் “சிவலீலார்ணவம்”, சிவ லீலைகளாகிய பெருங்கடல் என்று பொருள், மதுரையில் ஈசன் செய்த 64 திருவிளையாடல்களை சமஸ்கிருதத்தில் பாடி இந்தப் பெயரை அவர் இட்டார்.

22 காண்டங்களில் இரண்டாயிரத்துக்கு இரண்டு பாடல்கள் குறைவாக இயற்றப்பட்ட மகாகாவியமாக இதனைப் பாடி முடித்தார்.

எட்டு காண்டங்கள் கொண்ட “கங்காவதரணம்’ (கங்கை கீழிறங்கியது) பகீரதன் கதை. “நீலகண்ட விஜய சம்பு’ திருப்பாற்கடலைக் கடைந்த புராணம் , பிரபஞ்சத்தைக் காக்க சிவன் ஆலகால விஷத்தைக் குடித்து நீலகண்டனாக ஆன கதை என எல்லாமும் அழகுறப் பாடிவைத்தார்.

அவரின் “நள சரித நாடகம்’ அழகானது. ஆனால் முழு பிரதியும் கிடைக்கவில்லை . “கலி விடம்பனம்’ என்ற 102 பாடல்களைக் கொண்ட நூலை அன்றே எழுதினார். அதில் கலிகால கொடுமைகளெல்லாம் சொல்லி எச்சரித்தார்.

பத்ரு ஹரியின் நீதி சதகத்தைப் போலமைந்த 105 பாடல்களமைந்த “சபாரஞ்ஜன” எனத் தத்துவ நூலை எழுதினார், அப்படியே பர்த்ருஹரியைப் போல 101 பாடல்களில் ஒரு “வைராக்ய சதகம்” எழுதினார்.

தன் இன்ப துன்பங்களைக் கண்டு களைத்து, அமைதியை விரும்பும் ஒரு முதிய உள்ளத்தின் “சாந்தி விலாசம்’ என்ற அமைதி தரும் பாடல் தொகுப்பைப் பாடினார்.

அன்னை மேல் கொண்ட பக்தியால் “சிவோத் கர்ஷ மஞ்சரி’, “சிவ தத்வ ரஹஸ்ய’, “சண்டி ரஹஸ்ய’, “குரு தத்வ மாலிகா’, “ஸெளபாக்ய சந்த்ராதபா’ என்ற சாக்த மத தாத்பரியங்களையும் பாடிவைத்தார்.

இப்படி மேலும் பல நூல்கள். சிவனைப் பற்றியே பாடிய அவர், கண்ணனது குழந்தைப் பருவம் பற்றிய “முகுந்த விலாசம்’ என்ற நூலையும், “ரகு வீரஸ்தவ’ அல்லது “ராமாயண ஸாரஸங்க்ரஹ’ என்று ராமன் மேல் 33 பாடல்களையும் பாடினார்.

இதுபோக அவர் செய்துவைத்த பாடல்கள் ஏராளம், அவை காளிதாசனின் பாடல் போல் அற்புதமான உவமை கொண்டவை. அதே நேரம் அதிசங்கரரின் பாடல்கள் போல் ஆழமானவை.

பருவங்கள் மாறிவரும்போது எல்லாமும் மாறும், கிடைப்பதைக் கொண்டு வாழ்வை நீட்டித்துச் செல்லவேண்டும், எந்த நேரம் எது உண்டோ அதை வைத்து இறைவனுக்கு நன்றிச் சொல்லி வாழ்தல் வேண்டும் என்பதை அழகாகச் சொல்கின்றார்.

“போதவிழ் தாமரை இல்லையெனில்
புதிய தாழம் பூஇலையோ?
சோதியாம் நிலவு இல்லையெனில்
சுந்தர மன்மதன் இங்கிலையோ?
ஏதும் அன்னங்கள் இல்லையெனில்
எழில்மிகு மயில்கள் இங்கிலையோ
ஏதோ ஒரு பொருள் இல்லையென
ஏங்கித் தவிப்பது எதற்காக?”

அவர் கர்மயோகியாக வாழ்ந்தார், சிலநேரம் மீனாட்சியம்மன் சந்நதியில் தனித்து அமர்ந்தும்பாடினார், யாரும் கைதட்டினால் அவர் மனம் புகழ் கொள்வதுமில்லை, யாரும் இல்லை என்பதற்காய் அவர் பாடாமல் இருந்ததுமில்லை. அதை இப்படிப் பாடுகின்றார்.

“வீணை இசையை எழுப்புகிறது; அங்ஙனமே தான் குழலும். குழந்தைகளும் ஊமைகளும் கூட அந்த இசையைக் கேட்கிறார்கள். ஆனால் கவிதையைக் கேட்பதற்கோ அதன் இனிமையைச் சுவைப்பதற்கோ ஓரிருவர் இருக்கலாம்; அல்லாது இல்லாமலும் இருக்கலாம்” என்பவர் தொடர்கின்றார்.

“கவிதை யென்பது கலைகளின் சிகரம்
கவிதா தேவியின் கருணைப்ரசாதம்
மனிதரைப் புகழ்ந்து பாடுவதாலே
மாண்பு குறைந்து மதிப்பை இழக்கும்.
அனைவர் விருப்பமும் அள்ளியே தந்திடும்
அற்புதக் காமதேவனுவாம் பசுவை
ஏரில் பூட்டி உழுவதை ஒக்கும்.
கொடுப்பவர் குறைகளைக் கவியும் கூறான்.
கார் மேகத்தைக் கருதிப் பார்த்தால்
நீரைப் பொழியும் என்பத னாலதன்
கருமைக் குறையைப் பேசுவார் யாருளர்?”

காளிதாசன் போலவே தாமிரபரணி ஆற்றைப் பற்றி அவர் சொல்லும் வர்னணை அவ்வளவு அழகானது.

“தாமிரபரணி கடலில் கலக்குமிடத்தில் கடல் அலைகளால் முத்துக்கள் வாரி இறைக்கப்படுகின்றன. அகஸ்திய கோத்திரத்தில் பிறந்தவள் என்ற மரியாதையுடன் கடலரசன் புஷ்பங்களை வாரி இறைத்து தாமிரபரணியை எதிர்கொண்டு அழைத்துச் செல்வது போலிருக்கிறது இது”

இப்படிக் காளிதாசனின் மறுவடிவமாக நின்று இந்துக்களின் காவியம், தெய்வம், புராணம் என எல்லாமும் பாடிய அவரை அன்னை பெரும் யோகி எனக் காட்டிய நிகழ்வு அவரின் அந்திம காலத்தில் நடந்தது.

அப்போது நீலகண்ட தீட்சிதர் முழுப் பரிபூரண சித்த நிலையினை அடைந்த்திருந்தார், மதுரை மீனாட்சி என்பவள் அரசர்குரிய தெய்வம் மட்டுமல்ல, மக்களுக்கானவள் மட்டுமல்ல அவள் சித்தர்களுக்கும் யோகியருக்குமான வாலை குமரி.

அவள் சித்தர்களை உருவாக்குவாள், திரிகால யோகியரை உருவாக்குவாள், பெரும் ஞானகுருபரம்பரைக்கு அவளே மூலம், அதனால் நீலகண்ட தீட்சிதரையும் முழு யோகியாக மாற்றி ஆட்கொண்டிருந்தாள்.

அப்போது புதுமண்டபத்தை அவன் பிரமாதமாக பிரமாண்டமாக புராணக் கதை சொல்லும் சிற்பங்களுடன் கட்ட விரும்பினான். பொறுப்பு வழக்கம்போல் நீலகண்ட தீட்சிதரிடமே வந்தது.

அவர் வரவேற்பு தூண் அருகே சிவனில் இருந்து பிரம்மனும் விஷ்ணுவும் தோன்றிய காட்சியினைச் சிற்பமாக்கியபோது இதை ஏற்றுக்கொள்ள முடியாது, நாராயணனே முழு முதற் கடவுள் என வைஷ்ணவர்கள் வாதம் செய்தனர். இதனால் மண்டப பணி பாதிக்கப்பட்டது.

சைவ வைணவ கருத்து மோதலைத் தீர்க்கும் பொறுப்பும் நீலகண்டரிடமே சேர்ந்தது மன்னன் வைஷ்ணவன் என்பதால் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாகவேண்டும் என அவர்கள் போராடினார்கள்.

ஆனால், தன் வாத திறத்தாலும் புராணங்களின் ஆதாரம், வேத தத்துவம், இதிகாச காட்சிகளையெல்லாம் காட்டி அவர்கள் பதில் பேசமுடியாபடி மடக்கினார் நீலகண்ட தீட்சிதர். பின், அந்தச் சிலை தூணுடன் நிறுவப்பட்டது. இன்னும் அந்தக் காட்சி அங்கு உண்டு.

இந்த மண்டபத்தில்தான் மன்னனுக்கும் அவன் ராணிகள் 11 பேருக்கும் சிலைவைக்க முடிவு செய்தார் நீலகண்ட தீட்சிதர், அதுதான் அவரின் சோதனைக்கும் வழியாயிற்று.

இந்தச் சிற்பத்தை செய்தவன் சுமந்த ஆச்சாரி, அவன் பட்டத்து ராணியின் சிலையினை செதுக்கும் போது அச்சிலையின் இடது தொடையில் உளி தவறி விழுந்து ஒரு சிறிய வடு உண்டாயிற்று.

தெய்வங்கள் சிலை, மன்னர் சிலை, சாதுக்கள் சிலை அரசகுடும்ப சிலை வழுவில்லாமல் பழுதில்லாமல் வடிக்கவேண்டும் என்பது விதி, இதனால் முதல்முறை அந்தச் சிலையினை எடுத்துவிட்டு வேறு கல்லில் வடித்தான் சிற்பி.

அதே தவறு மீண்டும் நிகழ்ந்தது, அவன் அதிர்ந்துபோனான். மூன்றாம் முறை அவன் எவ்வளவோ கவனமாயிருந்தும் அவனை மீறி அதே தவறு உளிபட்டு நடந்தது.

எந்தச் சிலையிலும் வராத தவறு பட்டத்து ராணி சிலையில் அதுவும் இடது தொடையில் மட்டும் வருவது ஏன் அன அஞ்சியவன் நீலகண்ட தீட்சிதரிடம் நடந்ததை சொன்னான், காரணம் இதற்கு மேல் செதுக்க கல்லுமில்லை வழியுமில்லை. இனி மண்டபத்தையே இடித்து கட்டினால்தான் உண்டு எனுமளவு வேலை முடிந்த நேரம்.

அவன் சிக்கலை அப்படியே நீலகண்டரிடம் சொன்னான். அவர் சொன்னார், “சிற்பியே, சில நேரம் மானிட தவறுகளே இறைவனின் விருப்பமுமாகும், நாம் அதை நம் தவறு என நினைத்தாலும் அங்குத் தெய்வமே செயலாற்றும்.

இது திரும்ப திரும்ப நடக்கிறது என்றால் அப்படியே இருக்கட்டும்” எனச் சொல்லிவிட்டார். சிற்பியோ மன்னன் கேட்டால் என்ன சொல்வது என மருவினான், “நான் சொன்னேன் எனச் சொல்” என மட்டும் சொன்னார் நீலகண்ட தீட்சிதர்.

அவருக்கு உண்மை தெரிந்தது. ஒரு பெண்ணுக்கு இடது தொடையில் மச்சம் இருப்பின் தெய்வாம்சம் பொருந்திய ராஜ அரியணையில் இருப்பாள். இது சாமுத்திரிகா லட்சணம் சொல்லும் உண்மை, இதை அவர் முழுக்க அறிந்திருந்ததால் அவர் இதுவே அன்னையின் விருப்பம், ராணிக்கும் மச்சம் அப்படி இருந்திருக்கலாம் எனத் தனக்குள் சொல்லிக்கொண்டார்.

அந்தச் சிலையில் தொடையின் தழும்பு அப்படியே இருந்தது.

மன்னர் திருமலை நாயக்கன் மண்டபத்தைச் சுற்றிப்பார்க்க வந்தான். அப்போது தன் சிலையினைக் கண்டு ரசித்தவன் இதர மனைவியர் சிலையினைப் பார்த்து புன்னகைத்தான், அப்படியே அந்தப் பட்டத்து ராணி தொடையில் இருந்த அந்த அடையாளம் கண்டு அதிர்ந்தவன் அதை வெளிகாட்டவில்லை, அது அப்படியே அவள் தொடையில் இருந்த மச்சம்போல் இருந்தது.

எப்படி இவனுக்கு இந்த ரகசியம் தெரிந்தது என அதிர்ச்சி அடைந்தவன் இந்தத் தழும்பு எப்படி வந்தது எனத் தெரியாதவன் போல் கேட்டான், சிற்பியோ “இதெல்லாம் நீலகண்ட சாஸ்திரிக்குத் தெரியும்” எனப் பதிலளித்துவிட்டு தான் தப்பியதாக எண்ணிக்கொண்டான்.

மன்னன் எங்கும் அதிகம் பேசக்கூடாது, அதுவும் ஊழியர்களிடம் வாதாட கூடாது என்பது விதி. இதனால் அந்த இடத்தினை விட்டு அகன்றவன் தனக்கும் ராணிக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் எப்படித் தீட்சிதர்க்குத் தெரிந்தது எனக் கடுமையாகச் சிந்தித்தான். அவன் மனதில் சிவன் கழுத்தில் இருந்த ஆலகால விஷம் பரவிற்று.

அன்னை தன் பக்தனை மிகபெரிய இடத்துக்கு உயர்த்த இதைச் செய்கின்றாள் என்பதை அறியாதவன் தீட்சிதர்மேல் பெரும் சந்தேகம் கொண்டான், எப்படியோ பட்டத்து ராணியினை இவர் தவறாகப் பார்த்திருக்கின்றார் என முடிவெடுத்தவன் அவர் கண்களைப் பொசுக்கும்படி தன் ஆட்களுக்கு உத்தரவிட்டான்.

சேகவர்கள் அதிர்ந்துபோனார்கள், கொடிய எதிரிக்குச் செய்யும் கடும் தண்டனை நாட்டின் முதலமைச்சருக்கு அதுவும் தெய்வீக மனிதருக்கா என மிரண்டு போனார்கள். ஆனாலும், மன்னன் உத்தரவை நிறைவேற்ற அவர் இல்லம் செல்ல முடிவெடுத்தார்கள், கைகளில் இரும்புக் கம்பியும் அதைப் பழுக்கவைக்க சில ஆயத்தங்களுடன் சிலர் கிளம்பினார்கள்.

முற்றும் உணர்ந்த சித்த நிலையில் இருந்த நீலகண்டர் தன் யோகத்தால் நடந்ததை நடக்க இருப்பதைக் கண்டார், “தாயே நான் அறிந்து செய்த பிழை இல்லை இது. என் கர்மவினை, மன்னன் வந்து என் கண்களைப் பறித்தால் அது என் தவறு என்றாகிவிடும், நானே முந்தி கொள்கின்றேன்” என்றவர் இரு கற்பூரத்தை ஏற்றி அன்னைக்குக் காட்டியவர் சட்டென “தாயே மீனாட்சி” என்றபடி கண்களைத் திறந்து உள்ளே இட்டுக்கொண்டார்.

அவரின் கண்கள் எரிந்து குருடாயின, அவர் அழவுமில்லை ஆர்ப்பரிக்கவுமில்லை. எல்லாம் கடந்த உடலைக் கடந்த ஞானநிலையில் இருந்தவர் கண் என்பது மானிட உடலுக்குத் தேவை அன்றி ஆத்மாவுக்குத் தேவையில்லை என்பதுபோல் அமர்ந்திருந்தார்.

நடந்ததை சேவகர்கள் சொல்ல மன்னன் அதிர்ந்தே போனான். இது எப்படி வெளித்தெரிந்தது என்பதில் குழம்பிப் போனான். காரணம், அவன் உத்தரவிட்டதும் சேவகர்கள் சென்றார்கள், அதற்குள் அவரே தன்னைக் குருடாக்கியது எப்படி ? அப்படியானால் அவருக்குத் தான் மனதால் உணர்ந்து தெரிந்தது எப்படி எனத் திகைத்துப் போனான்.

அவன் அவசரமாக அன்னையிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அவரைச் சந்திக்க முடிவெடுத்து மீனாட்சி சன்னதிக்குச் சென்றபோதுதான் அந்தப் பெரும் அதிசயம் நடந்தது, சேவகர்களே மிரண்டார்கள்.

ஆம், அந்த சந்நதிமுன் குருடனாய் அமர்ந்திருந்தார் நீலகண்ட தீட்சிதர், அவரைப் பொறுத்தவரை அவர் தன் வீட்டில் மீனாட்சி சிலை முன் கண்ணைக் குருடாக்கினார், இப்போது எங்கிருக்கின்றோம் என்பது அவருக்கும் தெரியாது.

மன்னன் அவரை நோக்கி பெரும் வருத்தத்துடன் அடியெடுத்து வைக்கும் போது அவர் உருக்கமாகப் பாடத் தொடங்கினார். கண் தெரியா நிலையிலும் மனதில் இருந்த மீனாட்சி திருக்கோலம் கொண்டு பாதம் முதல் தலைவரை அவளைத் துதித்து “பாதகேசிதம்” பாடினார்.

பின் தீர்க்கமாகச் சொன்னார், “அன்னையே, இது என் கர்மவினையால் நடந்தது, என் கர்மத்தின் பெரும் பாதிப்புபடி மன்னனால் நான் குருடாக வேண்டும் என்றது, இன்று நடந்தது, என் கர்ம்வினையினைக் கழிக்கவே நீ என்னை இங்கு அழைத்து வந்திருக்கின்றாய். இதனால் உன் கோவிலுக்குத் திருப்பணி செய்துமுடித்தபின் என் கண்ணையும் வாங்கிக் கொண்டாய்.

என் கர்மம் முடித்த நிறைவில் நான் பாடுகின்றேன் ஏற்றுக்கொள்” எனச் சொல்லித் தன் நிலையினைச் சொல்லிப் பாடினார்.

அவர் பாட பாட எல்லோரும் உருகிப் போனார்கள் , மன்னன் மனம் கசிந்தான், தெய்வீகச் சக்தியால் அங்கு வந்த அனைவரும் சொக்கிப் போனார்கள்.

அவர் 60 பாடல்களைப் பாடி, 61 ஆம் பாடலை இப்படிப் பாடினார்.

“செய்யாத அழகினவாய்த் திப்பியமாய்
அறிவிக்கும் சேய ஆகிப்
பொய்யாமல் மங்களமாய் யாவைக்கும் மேலாம்உன் பொற்றாட் பூவை
மையார்ந்த மனத்தடியேன் பால் எழுந்த
கருணையினால் வந்து காட்டின் ஐயோநான் எவ்விழியால் கண்டு மனம்
குளிர்வேன்அங் கயற்கண் அம்மே”

என அவர் பாடியபோது அவருக்குக் கண்பார்வை மீள வந்தது, நம்பமுடியாமல் மிகுந்த ஆச்சரியத்துடன் அன்னையினைக் கண்டவர் மீதி 40 பாடல்களை மிக மிக உற்சாகமாகப் பாடி முடித்தார்.

தன் துன்பக்கடலை இன்பக்கடலாக அன்னை மாற்றியதற்காக இப்பாடல் “ஆனந்த சாஹரம்” என வடமொழியிலும் “இன்பக்கடல்” எனத் தமிழிலும் பதிந்து கொண்டது.

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி, கம்பனின் சரஸ்வதி அந்தாதி, நமச்சிவாய கவிராயரின் உலகம்மை அந்தாதி போல நீலகண்ட தீட்சிதர் தனக்கு வந்த பெரும் சோதனையில் இருந்து மீளும்போது பாடிய இந்த “ஆனந்த சாஹரம்” பெரும் பிரசித்தியானது.

மன்னன் மிகுந்த வேதனையுடன் அவரிடம் கேட்டான், என் தண்டனை உமக்கு எப்படி முன்பே தெரிந்தது?

அவர் சொன்னார், “ராணியின் இடது தொடையில் மச்சம் உண்டு என்பது ஞான திருஷ்டியில் அம்மன் அருளில் தெரிந்தது போலவே தெரிந்தது”

நாடாளும் மன்னன் அவர் பாதம் விழுந்து அம்மன் சந்நிதியில் மன்னிப்புக் கோரினான், செய்தி அறிந்து வந்த ராணியும் அவர் பாதம் பணிந்து கதறினாள், அவர் சபித்துவிடுவாரோ எனும் அச்சம் இருவருக்கும் இருந்தது.

அவர் அவர்களை அன்னையின் பெயரால் வாழ்த்தி எழுந்திருக்க செய்து அவர்கள் குலம் சொக்கன் பெயரால் வாழும் என வாழ்த்தினார்.

இச்சம்பவத்துக்குப் பின் மதுரை ஆலயத்தில் கண்பரிகார வழிபாடும் பூஜையும் பிரசித்தியானது, இன்றும் கண் சம்பந்தமான பல நோய்களைத் தீர்க்கும் தலமாக அத்தலம் இருப்பதும் இதில் இருந்துதான்.

தலைமை அமைச்சன் அரண்மனையில் எல்லா உரிமையும் பெற்றவன். அந்தபுரம் வரக்கூட அனுமதிபெற்றவன் எனத் தீட்சிதரை மானிட சுபாவத்தில் மன்னன் தண்டிக்க நினைத்தது மீனாட்சி அருளில் இப்படி மாறிப்போனது.

அதன்பின் அவர் அங்கு தங்க விரும்பவில்லை. தன் அந்திம காலத்தினைத் தாமிரபரணிகரையில் வாழ விரும்புவதாகச் சொன்னார், மன்னன் அங்கே வற்புறுத்திப் பார்த்தான். ஆனால், முடியவில்லை.

மன்னன் இனி ராயர்கோபுரத்தைக் கட்டமாட்டேன், தீராப் பழிக்கு ஆளானேன் எனச் சொல்லி அந்த வேலையினை நிறுத்தினான், இன்னும் அது அப்படியே உண்டு.

தீட்சிதரோ மீனாட்சி அன்னையினை மனமுருக பிரார்தித்து அவள் சந்நிதியிலே சிலநாள் தங்கியிருந்தவர் மன்னனிடம் உத்தரவு கேட்டுவிட்டு தெற்கு நோக்கிக் கிளம்பினார், அவர் தோளில் ஒரு கிளி அமர்ந்திருந்தது.

“தாயே, நான் தவம் செய்யவேண்டும், உலக்கை சத்தம் கேட்காததும் மக்கள் இரைச்சல் மட்டுமல்ல கோழியோ நாயோ பசுவோ கத்தாத இடம் எனக்கு வேண்டும்” என அவர் மனமார கேட்டுக்கொண்டு நடந்தார்.

அவர் செல்லுமிடமெல்லாம் அமைதியாக இருந்தது கிளி, அவர் பல சிவதலங்களைத் தரிசித்துவிட்டு, நெல்லையப்பரைத் தரிசித்துவிட்டு, மேற்கு நோக்கி நகரும் போது தாமிரபரணி ஓரமாக இருக்கும் பாலமடை எனும் கிராமத்திற்கு வரும்போது அக்கிளி சடசடவென சிறகுகளை அசைத்து பறந்து அங்கே வட்டமடித்துப் பின் மறைந்தே போனது.

இதுவே தனக்கான இடம் என்பதை உணர்ந்தவர் மன்னனுக்கு ஓலை அனுப்பினார், மன்னன் அவ்விடம் அவருக்கு எனச் சாசனமே எழுதித் தந்தான். அது இன்றும் உண்டு.

நீலகண்ட தீட்சிதருக்கு வயதுமாயிற்று, அவர் வாழ்வில் காசியினைக் காணமுடியாப் பெரும் ஏக்கம் இருந்தது, மன்னனிடம் அனுமதி உதவி பெற்றுக் கோவில் பணி முடிந்த பின்பு காசிக்குச் செல்ல பெரும் விருப்பம் கொண்டிருந்தார், ஆனால் அது நடவாமல் போனது.

“என் தாயே காசிக்கு என்னை அனுப்பாமல் தவிர்த்தாயே குமரகுருபரன் கொண்ட யோகம் எனக்கில்லையோ” என முறையிட்டார், அவ்வளவுதான் அவர் முன்னால் இருந்த கலசத்தில் இருந்து கங்கை பொங்கி ஓடிற்று.

ஆம், அவர் நம்பமுடியா அதிசயத்தைக் கண்டார். கலயத்தில் இருந்த நீர் கங்கை நீராக வழிந்தோட காசியில் அவர் நின்றார், கங்கை பெரிதாக ஓடிக்கொண்டிருந்தது. அங்கே நீராடி அன்னையினைக் காசிநாதனை மனமுருகப் பிரார்த்த்தார். விழுந்து வணங்கினார். இது போதும் தாயே போதும் போதும் என அவர் சொன்னபின்பே பாலமாடையில் இருப்பதை உணர்ந்தார்.

அவர் கங்கையினை அங்கே கொண்டுவந்ததால் அந்த இடம் “நீலகண்ட சமுத்திரம்” என்றாயிற்று, அங்கே காசிநாதன் மங்களாம்பிகை கோவிலைக் கட்டி மீனாட்சி சந்நதி கட்டி வழிபட்டவர் அங்கே மார்கழி சதயம் அன்று சித்தி அடைந்தார். அவரின் சமாதி அங்குதான் உண்டு.

இன்றும் அங்குக் கோழிகள் கூவுவதில்லை; நாய்கள் கத்துவதில்லை; பறவைகள் சத்தமுமில்லை. ஓரிரு வீடுகளைத் தவிர பெரிதாக ஊர் பெருகுவதுமில்லை. மிக மிக பெரிய அமானுஷ்ய சக்தி அங்கே நிலவுகின்றது, அதிர்வுகளை அள்ளிக் கொடுக்கும் தலம் இது, இன்றும் மீனாட்சி அன்னையின் பெயர் சொல்லி அங்கு வேண்டினால் கிடைக்காத வரம் என எதுவுமில்லை. அங்கு இப்போதும் அருள் தருகின்றார் தீட்சிதர்.

அந்த மாபெரும் சித்தயோகிக்கு மார்கழி சதயம் குருபூஜை நாள்.

மதுரை ஆலயத்தின் மிகப்பெரிய சாட்சி இவர். சுல்தான்களால் சீரழிந்து இடிந்தும் தவிடுப்பொடியாகக் கிடந்த மதுரை ஆலயத்தை திருமலைநாயக்கனுடன் சேர்ந்து மீளக்கட்டி இன்று நாம் காணும் ஆலயமாய் முழுப் பூஜைகள் விழாக்கள் கொண்ட ஆலயமாய் மாற்றித் தந்தவர் உருவாக்கித் தந்தவர் அவர்தான்.

திருவரங்கத்துக்கு ராமானுஜர் போல இங்கு எல்லா விதிகளும் உருவாக்கித் தந்து வழிபாடுகளை மீள ஏற்படுத்தித் தந்தவர் அவர்தான், அவர் இல்லையேல் இன்றுள்ள ஆலயம் இல்லை.

திருமலை நாயக்கன் வரம் பெற்றவன். திருப்பணிகள் பல செய்யப் பிறந்தவன். அவனுக்கு அன்னை மீனாட்சி வழிகாட்ட அனுப்பிய சித்தன் இந்த நீலகண்ட தீட்சிதர்.

சுல்தான்கள் பாழாக்கிய தன் ஆலயத்தை தன் பக்தர்களைக் கொண்டே மீட்டெடுத்த மீனாட்சி அவர்களைக் கொண்டே காசிவரை மீட்டெடுத்த மீனாட்சி இன்றும் தன் பக்தனின் நினைவினை அந்த ஆலயத்தில் தாங்கி நிற்கின்றாள்.

அவள் சந்நிதி அருகே உள்ள மண்டபமும் இன்னும் பல மண்டபங்களும் நிற்கும் பெரிய தூண்களும், புது மண்டபமும் அவர் பெயரை எக்காலமும் தாங்கி நிற்கும்.

இன்றும் வேலை முடியா ராயர் கோபுரமும், பட்டத்து ராணி இடது தொடையில் தழும்பு கொண்ட சிலையும் மதுரை ஆலயத்தில் நடந்த வரலாற்றை அறுதியிட்டு சொல்கின்றன‌.

நீங்கள் எந்தப் பெரிய இக்கட்டில் துன்பத்தில் இருந்தாலும் மதுரை ஆலயத்தில் நீலகண்ட தீட்சிதரின் “இன்பக்கடல்” எனும் பாடலைப் பாடி வணங்கினால் நிச்சயம் பெரும் அதிசயம் உங்களிலும் நடக்கும், அவர் பெயரைச் சொல்லி கேட்பதை அன்னை தடுப்பதில்லை.

அப்படியே நெல்லை பக்கம் செல்லும்போது பாலமடை பக்கம் இருக்கும் அவரின் சமாதிக்குச் செல்லுங்கள், அங்கு அவரை வீழ்ந்து வணங்கி உங்கள் குறைகளை எல்லாம் சொல்லுங்கள். உங்கள் அகக்கண் திறக்கும், வாழ்வில் எல்லா வழியும் திறக்கும்.

மார்கழி சதயம் அவருக்கான குருபூஜை நாள் , அவரை நினைந்து வழிபடுவோர்க்கு உடல்குறை மனக்குறை என எதுவும் வாரா, எல்லாமும் நலமாகும்.

அவர் பெயரைச் சொல்லி வணங்கும் குழந்தைகள் பெரும் கல்வி பெறுவார்கள், ஞானமடைவார்கள், பெரும் ஞான அறிவு குழந்தைகளாய் வளர்வார்கள்.

மதுரையில் இருப்போர் நாளை மறவாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லுங்கள், அவருக்காய் விளக்கேற்றி மன்றாடுங்கள். அந்த ஞானப்பெருமகன் இல்லையென்றால் இப்போதிருக்கும் ஆலயமுமில்லை வழிபாடுமில்லை, அந்த நன்றிகாவது மதுரையில் அவரை வணங்குங்கள்.

நெல்லை பக்கமிருப்போர் பாலமடை சென்று அவரை வணங்கிப் பணியுங்கள். ஒரு மலர் இட்டு அந்த மகானை வணங்கினாலும் அன்னை மீனாட்சி கோடிப்பலன் உங்களுக்குத் தருவாள்.

மதுரை என்பது சிவபூமி. இறைவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட இடம், அங்கு அவன் தான் யார் என நிருபிக்க பல சோதனைகளை அனுமதிப்பார், உரிய நேரம் வரும்போது அன்னையும் அப்பனும் தங்கள் சக்தியினைக் காட்டித் தங்கள் ஆலயத்தைப் புனிதத் தலத்தை மீட்டெடுப்பார்கள்.

அப்படி இந்தத் திருபரங்குன்றம் சோதனையும் அன்னையின் புன்னகையில் விரைவில் தீரும் , அன்று திருமலைநாயக்கனையும் நீலகண்ட தீட்சிதனையும் அழைத்த அன்னை நிச்சயம் தன் அடியார்களை அழைத்து வந்து தனக்குரியவற்றை மீட்டெடுத்துக் கொள்வாள்.

மார்கழி சதயமன்று நீலகண்ட தீட்சிதரை அன்னை மீனாட்சி நினைவுடன் வணங்கும் எல்லோருக்கும் அவளின் பெரும்கருணையும் காவலும் நீக்கமற நிறைந்து நிற்கட்டும். எல்லோரும் எல்லாமும் பெற்று வாழட்டும். ஞானமும் செல்வமும் எல்லோருக்கும் நிரம்ப பெருகட்டும்.