திருவிளையாடல் புராணம் 31 : கணையில் பெயர் பொறித்த படலம்.
திருவிளையாடல் புராணம் 31 : கணையில் பெயர் பொறித்த படலம்.
வங்கி சேகரன் மதுரையில் கோட்டைக்கட்டி, சிவனின் நாகம் காட்டிய எல்லைப்படி கோட்டைக்கட்டி பெருவாழ்வு வாழ்ந்தான். ஒரு மன்னன் பெரும் செல்வத்தோடு வாழும் போது எதிரிகள் பெருகுவது இயல்பு.
அப்படி பாண்டியனுக்குச் சோழன் விக்ரமன் என்பவன் எழுந்தான். அவனுக்கு மதுரையின் பெரும் செல்வத்தைக் கொள்ளையிட்டுச் செல்வம் கொழிக்கும் நாட்டில் தன் ஆட்சியினை நிறுவும் ஆசை எழுந்தது.
ஊழிக்காலம் முடிந்து மானுட இனம் புதிதாக எல்லாம் உருவாக்கிய காலத்திலும் அந்த அடிப்படை மனம் மாறவில்லை, அந்தக் குணம் மாறாது.
ஆசையும் மயக்கமும் அது செய்யவைக்கும் காரியங்களும் எக்காலமும் உண்டு, மானுட இனம் உள்ளவரை உண்டு.
அதனால் அரசுகள், அதிகாரப் போட்டிகள், போர்கள் எல்லாம் மானுடம் உள்ளவரை உண்டு.
செல்வமிகு நாட்டைக் கொள்ளையிடச் சக்தி கொண்டவன் முயல்வதும், அவனால் முடியாவிட்டால் கொள்ளையில் பங்கு என ஆசைக்காட்டி சிலரை அழைத்துவருவதும் எக்காலமும் உள்ள வழமை.
அப்படி விக்ரம சோழன், பாண்டிய நாட்டைக் கொள்ளையிட பெரும் அணிதிரட்டினான். அவன் படையில் வடநாட்டு மன்னர்கள் இணைந்தார்கள், பெரிய படையாக அது கடல் போல் நின்றது.
சோழன் தெற்கு நோக்கி நகர்ந்தான், அவன் பெரும் படையும் கடல் அலை போல் ஆர்ப்பரித்து முன்னே வந்து கொண்டிருந்தது.
பெரும் படை திடீரென சூறாவளிபோல் வருவதினைக் கண்ட வங்கிய சேகரன் அஞ்சினான், அவன் யுத்தத்தை எதிர்பார்க்கவுமில்லை, அதற்கான தயாரிப்பிலுமில்லை.
ஒரு வலுவான சேனை உருவாக சில மாதங்களாவது ஆகும். வீரர்களைத் திரட்டி பயிற்சி அளித்து குதிரைகள், யானைகள் வாங்கி அவற்றைப் பழக்கி இன்னும் ஆயுதம் செய்வது, படைகளுக்குத் தேவையான பொருட்களை உணவு வரை ஏற்பாடு செய்வது என்பது பெரும் காலம் எடுக்கும் காரியம்.
இதனால் அவன் மிக அஞ்சினான். இருக்கும் படையினைக் கொண்டு வெல்வது என்பது முடியாது. கோட்டை இருப்பதால் கொஞ்ச காலம் தாக்குப்பிடிக்கலாம். ஆனால் கோட்டை வீழ்ந்தாலோ, முற்றுகை தளர்ந்தாலோ ஒன்றும் செய்துவிட முடியாது.
தன்னால் இனி மக்களையும் தன்னையும் காக்கமுடியாது என அஞ்சியவன் ஓடிச்சென்று ஆலவாயன் சன்னதியில் சரணடைந்தான்.
“எம்பெருமானே, எதிர்பாரா ஆபத்தில் சிக்கிக் கொண்டேன், எதிரிகளின் நோக்கம் அறியாமல் அவர்களை உளவு பார்த்துதயாராகாமல் இங்குக் கோட்டை கட்டுவதிலே கவனமாகிவிட்டேன்.
ஆனால், நான் செய்த தவறை எதிரிகள் செய்யாமல் கூடிவிட்டார்கள். என் பலவீனம் அறிந்து ஒன்று சேர்ந்து நிற்கின்றார்கள், நான் இப்போது என்ன செய்வேன்?
எம்பெருமானே நீரே இனி இந்த ஆலவாய் பட்டணத்தையும் அதன் மக்களையும் காக்கவேண்டும்” எனப் பணிந்தான்.
அப்போது ஒரு அசரீரி கேட்டது, “மன்னா கலங்காதே, தைரியமாக யுத்தத்துக்குச் செல்வாய். வெற்றி உனக்கே, யுத்தம் என்னுடையது” என்றது.
அந்தச் செய்தி கேட்டதும் மரணப்படுக்கையில் கிடப்பவனுக்கு மருந்து கிடைத்து அதனால் நலம் பெற்றவன் போல் எழுந்தான் பாண்டியன்.
அவனிட்ம இருக்கும் சேனையினைத் தயார் செய்தான். அவனும் தயாரானான். ஆலவாயன் சந்நிதியில் வணங்கிய அவன் சேனை “ஆலவாயன் நம்மோடு” எனச் சொன்னபடி களத்துக்கு வந்தது.
அங்குப் பெரும் போர் மூண்டது. பாண்டியனின் கனத்த யானைகள் பிளிறியபடி முன்னேறின. குதிரைகள் கனைத்தபடி புகுந்தன.
பாண்டிய மறவர்படை தீரம் காட்டிற்று, இரு படைகளும் இரு மேகம் போல் மோதிக்கொண்டு கலக்கத் தொடங்கின.
ஆனால், சோழன் கடுமையான தயாரிப்பில் வந்திருந்தான். அந்த விக்ரமசோழனின் ஆணைக்குக் கட்டுப்பட்ட வடதேச படைகள் பல வியூகங்களில் தாக்கின.
அந்தத் தாக்குதலில் பன்முனை தாக்குதலில் பாண்டியன் தடுமாறினான். அவன் தடுமாற்றம் கண்ட சோழன் இன்னும் வேகமாக தாக்கினான்.
சோழப்படைகளின் பெரும் தாக்குதலில் பாண்டிய படைகள் திகைத்தன. அதுவரை தாக்கிய பாண்டிய படைகள் பின் தற்காப்பில் ஈடுபட்டன.
மின்னல் போல் பாயும் ஈட்டிகள் ஒருபக்கம், மழைபோல் பொழியும் அம்புகள் இன்னொருபக்கம், புகுந்து வளைத்து அடிக்கும் சோழ குதிரைகளின் வியூகம் ஒருபக்கம் எனப் பாண்டியன் திகைத்தான்.
யுத்தம் சோழர்பக்கம் சாய்ந்தது. சிவன் வாக்குப்படி நம்பிக்கையாய் போரிட்ட பாண்டியனுக்கு வெற்றி விலகிச் சென்றுகொண்டே இருந்தது.
இனியும் களத்தில் நின்றால் பாண்டியன் உயிருக்கே ஆபத்து என்பதால் அவனைத் தளபதிகள் பின்வாங்கச் சொன்னார்கள்.
அவன் மறுத்தான், “சிவனே.. ஆலவாயா..என்னை ஏன் கைவிட்டாய்” என அலறினான். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
தளபதிகள் அவனை வேகமாக பாதுகாத்து கோட்டைக்குள் அனுப்பும்படி வேகமாக பின்வாங்கினார்கள், கோட்டை நோக்கி விரைந்தார்கள்.
கடும் காவலோடு பாண்டியன் கோட்டைக்குள் போக முயல்வதை கண்ட சோழன் அதைத் தடுக்க பெரும் படைகளை ஏவினான். எனினும், அதை முறியடித்து பாண்டியபடை கோட்டையினை நெருங்கிற்று.
பாண்டியன் மிகச் சோர்ந்து போனான். கோட்டைக்குள் அவன் சென்றுவிட்டால் அடுத்து சோழனின் முற்றுகை, அதைத் தொடர்ந்து நிச்சயம் படுதோல்வி எனக் காட்சி மாறிவிடும்.
கோட்டை அருகே வந்தவன் திரும்பிப் பார்த்தான். அங்கே பாண்டிய கொடி வீழ்ந்து சோழ கொடி எழுந்து கொண்டிருந்தது.
“ஆலவாயா .. உன் வாக்கும் பொய்யோ, நீயும் பொய் உரைப்பாயோ” என அவன் மாபெரும் குரலில் கத்தில் அலறி கலங்கி நின்றான்.
இனி போராட என்ன உண்டு என அவன் சோர்ந்து வாளை கீழே விட்டு குதிரையிலே கவிழ்ந்து கொண்டான்.
சோழன் வெற்றி சங்கு ஊதினான், சோழ சேனை பெரும் ஆரவாரம் செய்தது.
சோர்ந்துபோன பாண்டியர் பக்கம் அவர்கள் கோட்டை கதவு திறக்க தயாரானது, அந்நேரம்தான் அந்த அதிசயம் நடந்தது.
பாண்டியர் கோட்டை கதவு திறந்த நேரம் சோழர்களும் வேகமாக உள்ளே வர முயன்று சீறினர். திறந்த கதவு வழியாக புகுந்துவிடும் அல்லது கோட்டை வாசலை கைப்பற்றும் வேகம் இருந்தது.
பயிற்றுவிக்கபட்ட சோழப்படை குதிரைகள் தடைகளைத் தாண்டி அசத்தின, பாண்டியர் இன்னும் திகைத்துக் கலங்கினார்கள்.
அந்நேரம் அரசன் அருகில் ஒரு வீரன் வந்தான், அவன் கையில் வில்லும் முதுகில் அம்புகளும் இருந்தன, ஆறடி உயரமும் தலையில் கொண்டையும் நெற்றியில் திருநீறும் அணிந்திருந்தான்.
போருக்கான கவசத்தில் பெயருக்கு ஏதோ அணிந்திருந்தான்.
அவன் தன் வில்லின் நாணை தட்டினான், அந்த ஓசை இடிபோல் இருந்தது, பாண்டியன் திரும்பிப் பார்த்தான். சோழபடைகள் ஏதோ இடி எனத் திகைத்தன.
அவன் தன் வில்லில் பாணத்தை பூட்டி ஏவினான், அது பலவாய் பிரிந்து சென்று சோழப் படையினைத் தாக்கியது.
முதலில் அதனை யாரும் நம்பவில்லை, சரியாக பார்க்கவும் முடியவில்லை. அடுத்த அஸ்திரத்தை அவன் ஏவும்போதுதான் திகைத்துப் போனார்கள்.
அவன் ஏவும் கணை ஒரே நேரத்தில் பலரைக் கொன்றது, ஒரே வில்லில் ஏகப்பட்ட அம்புகளை ஏவும் வித்தைகாரனோ என அவனை நோக்கினார்கள்.
அவனோ மின்னலிலும் வேகமாக எய்து கொண்டிருந்தான். அதைக் கவனமாகப் பார்த்தபோது நடுங்கிப் போனார்கள். கையில் இருந்த ஆயுதங்களை விட்டு ஒடுங்கி நின்றார்கள்.
காரணம், அது அவர்கள் என்றல்ல, யாருமே அதுவரை ஏன் இன்றுவரை காணாத அதிசயம்.
ஆம். அவனின் ஒரு அம்பு பல அம்புகளாகப் பிரிந்தது. பிரிந்தவையும் நேராகச் செல்லாமல் பாம்பு போல் வளைந்து தாக்கிற்று.
இந்தத் தாக்குதலை யாராலும் சமாளிக்க முடியாது என அஞ்சியவர்களை நோக்கி சோழன் வந்தான், வந்தவன் அந்த அம்புகளில் ஒன்றை தனக்குத் தரும்படி கேட்டான்.
வீழ்ந்து கிடந்த வீரனின் உடலில் இருந்த அம்பு ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார்கள். பொதுவாக ஒரு ஆயுதத்தில் அந்த நாட்டின் லட்சினை இருக்க வேண்டும் என்பது அந்நாளைய விதி.
போரில் பயன்படும் ஆயுதத்தில் அந்தந்த நாட்டு லட்சினை இருக்கும்.
இவ்வகை ஆயுதம் பாண்டியநாட்டை சார்ந்ததாய் இராது எனச் சந்தேகம் கொண்ட சோழன் அதை உற்று நோக்கினான், அந்த அம்பிலே சுந்தரேசன் என எழுதியிருந்தது.
சுந்தரேசன் என்பவன் எந்த நாட்டு மன்னன் என முதலில் யோசித்தவன் திகைத்தான். குழம்பினான். பின் கண்களை மூடி சிந்தித்தபோது அவனும் சிவபக்தன் என்பதால் திடுக்கிட்டான்.
இப்போது அந்த வீரனைக் கண்டான், அவன் ஒரு மர்மப் புன்னகை கண்டது இவனுக்கு விளங்கிற்று.
அவன் யுத்தத்தை உடனே நிறுத்தச் சொன்னான். ஆனால், கண்ட காட்சியினை வாய்விட்டு சொல்ல மனமில்லாமல் நின்றான், சொன்னால் யாரும் நம்பப்போவதுமில்லை என்பது போல் நின்றான்.
அவன் போரை நிறுத்தச் சொன்னான், உடனே நிறுத்தச் சொன்னான்.
ஆனால், அவனோடு வந்த இதர அரசர்கள் மறுத்தனர், பாண்டியன் பின்வாங்கியிருக்கும் இந்நேரம் அவனை விடக் கூடாது எனப் பாய்ந்தார்கள், சோழனோ செய்வதறியாது நின்றான்.
அவர்கள் முன்னேறி வரும் போது அந்த வீரன் தன் கணைகளை இன்னும் வேகமாக்கினான். ஒரே ஆறு கிளைகளாய் பிரிவது போல் அவன் கணைகள் பிரிந்தன. அதுவும் பெரும் காட்டாறு அருவியாய்க் கொட்டிச் சிதறுவது போல் அவனின் அம்புகள் பாய்ந்தன.
ஒரே அம்பு நூறாய் ஆயிரமாய்ப் பிரிந்தது. ஒரே அம்பு பலவாய்ப் பிரிந்து ஈட்டி போல் யானைகள் மேல் பாய்ந்தன.
வீரர்கள் சரிந்தார்கள், யானைகள் பிளிறிச் சரிந்தன, குதிரைகள் விழுந்தன.
எங்கும் யாராலும் அம்புகளைத் தடுக்க முடியவில்லை. எங்கிருந்து வருகின்றது என்பது கூடத் தெரியவில்லை. கேடயத்தைக் கொண்டு முழுக்க மூடி சுவருக்குள் அமர்ந்தது போல் அமர்ந்தாலும் அவை தலைக்கு மேல் வந்து விழுந்தது.
இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை அறிந்து பகைவர்கள் ஓடத் துவங்கினார்கள். அந்தக் களமே வீழ்ந்த வீரர்கள், விலங்குகள் ரத்தம் குடல் சதையாக கிடந்தது. நரிகளும் கழுகுகளும் சூழத் தொடங்கின.
எதிரிப்படைகள் ஓடின. சோழனும் அந்த மண்ணை தொட்டு வணங்கிவிட்டு ஓடினான், அவன் யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாய் சிலைபோல் சென்றான்.
அவன் முன்னால் சுந்தரேசன் எனப் பெயர் பொறிக்கப்பட்ட அம்பு வைக்கபட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே சென்றான் விக்ரம சோழன்.
பாண்டிய சேனை வெற்றி சங்கை ஊதிற்று, மன்னன் வெற்றிப்பெற்றதால் வாகை பூ சூட்டப்பட்டு மாலையிடப்பட்டது. எங்கும் பெரும் ஆரவாரமும் மகிழ்வும் வந்தன.
மன்னனோ அந்த வீரனைத் தேடினான், அவன் தன் வில்லின் நாணைக் கழற்றி கொண்டிருப்பதை கண்டான், தன் வீரர்கள் புடைசூழச் சென்றவன் “வீரனே நீ யார்? எங்கிருந்து இந்த அரிய கலையினை கற்றாய், யார் உன் குரு?
நீ வா, உன்னை என் அரண்மனையில் கௌரவிக்கின்றேன்” என அழைத்தான்.
வீரனோ மெல்லச் சிரித்தான். பின், சத்தமாய் சிரித்தான். பின், உற்சாகமாய் சிரித்தவன், “மன்னா சற்று நேரத்துக்கு முன் என்ன சொன்னாய்” எனச் சொல்லிவிட்டு மறைந்தே போனான், சட்டென மறைந்தான்.
மன்னனுக்கு வந்தது யார் என விளங்கிற்று, அவசரமாய் ஆலவாயன் சந்நிதி நோக்கி ஓடினான்.
“சிவனே, நான் பின்வாங்கும் போது உன்னை நோக்கி அபச்சாரமாய் பேசியது பெரும்தவறு, என் தெய்வமே நான் உம்மை நம்பாமல் நான் அபச்சாரமாய் பேசிவிட்டேன், என்னை மன்னித்துவிடு” எனக் கதறினான்.
அங்கே ஒரு ஒளி தோன்றி மறைந்தது. எல்லோரும் கரம் குவித்து வணங்கி நின்றனர். மன்னன் நா தழுதழுக்க இறைவனைப் பணிந்து நின்றான். பின் பெரும் விழா எடுத்தான்.
அதன்பின் எந்த ஆபத்துமின்றி அவன் பெரும் பலத்துடன் எதிரிகள் அச்சுறுத்தல் இன்றி ஆட்சி செய்து சிவனைக் கொண்டாடினான்.
இதுதான் சிவன் கணையில் பெயர் பொறித்த படலம், சிவன் தன்னை நம்பியவரை எப்படியும் காப்பார் என்பதும், எந்நிலையிலும் அவர்களைக் கைவிடமாட்டார் என்பதும் இந்தத் திருவிளையாடலில் நிரூபிக்கப் பட்டது.
வங்கிய சேகரன் சிவனைத் தவிர எதையும் சிந்திக்கவில்லை, அவன் மனமும் செயலும் சிவனாகவே இருந்தார். நகர எல்லை தெரியா நிலையில் சிவனை அழைத்த அவனே, சோழன் பெரும் ஆபத்தாக வரும்போதும் சிவனை அழைத்தான்.
சிவன் அவனுக்கு நல்வாக்கு சொன்னார்.
ஆனால், அவன் ஒரு சோதனை வந்தவுடன் சிவனை நம்பவில்லை. தன்னை கைவிட்டதாக எண்ணி நொந்தான், சிவன் தன்னை கைவிட்டுவிட்டார் என நம்பிக்கையற்று சொன்னான்.
பின், சிவனே வந்து அவனுக்காக ஆச்சரியமாக போரிட்டு அவனைக் காத்தபின்பே மீண்டும் மன்னிப்பு கேட்டு நம்ப தொடங்கி பணிந்தான்.
சிவன் எனும் பெரும் தெய்வம் எல்லாக் காலத்திலும் எல்லா நிலையிலும் தன் இயல்பில் மாறாதவராய் இருக்கின்றார். ஆனால், பக்தனின் மானுட மனம் தடுமாறும். அது அலைபாயும்.
அது நம்பிக்கை அவநம்பிக்கை என மாறி மாறி ஊசலாடுகின்றது, நிலையாய் நிற்பதில்லை.
ஆனால், சிவன் தன் பக்தனை மறப்பதில்லை. தன் வாக்கையும் பொய்க்கவிடுவதில்லை.
இங்கே சோழன் மானுடபலம் எல்லாம் திரட்டி வந்தான், மானுட ரீதியாக அவனே பெரும் பலசாலியாக நின்றான். அவனிடம் மானுட பலத்தில் பாண்டியன் தோற்றான்.
ஆனால், தெய்வபலம் இறங்கிவந்து அவனைக் காத்தது, தன் சக்தி என்ன என்பதை மானுட பலத்துக்கு அப்பால் சிவன் காட்டினார்.
சிவனை நம்புவோர் ஒரு காலமும் கெட்டுப்போவதில்லை, அவன் பகைவர் வெவ்லது இல்லை. நம்பியவருக்கு சோதனை வரும் அப்படியே எதிரிக்கு கிடைப்பது தற்காலிக வெற்றியே, நிரந்தர வெற்றி சிவனுக்கும் அவரை முழுக்க நம்புவோர்க்கே என்பதை சொல்லும் திருவிளையாடல் இது.
தன் பக்தர்களோடு சிவன் விளையாடுவாரே தவிர அவர்களைக் கைவிடமாட்டார் என்பதைச் சொல்லும் காட்சி இது.
எதிரிகள் யாராகவும் இருக்கட்டும், அவர்கள் மிக மிக பலமானவர்களாக சக்திவாய்ந்தவர்களாக இருக்கட்டும். உங்களால் மோதி வெல்லமுடியாதவர்களாகவே இருக்கட்டும்.
கவலை கொள்ளாதீர்கள். இந்த ஆலவாயனை நம்பி நில்லுங்கள். எதிரி யாராக இருந்தாலும் அவர் அடக்கித் தருவார். உங்களைக் காப்பார், நீங்கள் செய்யவேண்டிய ஒரே காரியம் எந்நிலையிலும் நம்பிக்கையாய் காத்திருப்பது, அந்த நம்பிக்கை உங்களைக் காக்கும்.
தன்னை நம்பியவன் இடையில் அவநம்பிக்கை கொண்டாலும் தன் வாக்குக்காய் அவனை காக்க வந்த சிவன், தன்னை நம்பும் பக்தனைக் கைவிடுவாரா என்ன?
லௌகீக வாழ்வில் சிவனை முழுக்க நம்பும் போது உங்கள் பிரச்சினைகளை ஆச்சரியமான முறையில் சிவன் தீர்த்துத் தருவார். எது உங்கள் பலவீனமோ அது பலமாய் பன்மடங்கு பெருகி உங்களைக் காக்கும்.
ஆன்மீகமாய் இது அற்புதமான பொருளைத் தரும். சிவனை நீங்கள் தேடும்போது மாயை பல வடிவில் வரும், மாயைகள் பெரும் பெரும் படையாய் வரும், அந்நேரம் பல இடங்களில் மனம் வீழலாம் தடுமாறலாம். பெரும் தோல்வி போன்ற சூழல் வரலாம்.
அந்நேரம் சிவனில் நிலைத்திருங்கள். உங்கள் தவம் மேலும் மேலும் பலமாகும். அற்புதமான முறையில் மாயைகளை வென்று ஞானம் அடைவீர்கள், மாய எதிரிகளை மாய வடிவில் சிவனே நின்று வீழ்த்துவார், மாயங்களை வெல்வதாலே அவர் மாயாண்டி என வணங்கவும்படுகின்றார்.
தன்னை நம்புவோரின் வேண்டுதலுக்காக எல்லா மாயங்களையும் செய்பவர் அந்தச் சிவன். அவரை முழுக்க நம்புங்கள். நம்பமுடியா அதிசயம் செய்து அவர் உங்களைக் காத்து முழு வெற்றி தந்து எக்காலமும் காப்பார். இது சத்தியம்.