திருவிளையாடல் புராணம் 32 : கால் மாற்றி ஆடிய படலம்.

திருவிளையாடல் 32 : கால் மாற்றி ஆடிய படலம்.

அது மதுரையினை விக்ரம பாண்டியனின் மகன் இராஜசேகர பாண்டியன் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். ஆட்சி, போர், நிர்வாகம் தாண்டி நுணுக்கமான‌ கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த அவன் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து கொண்டிருந்தான்.

அவன் சிவபக்தன். முழு அடியாரான சிவபக்தன் ஆலவாய் நாதனை மிகுந்து போற்றி நின்ற பூரண பக்தன். அப்படியானவன் கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். அந்தக் கலைகளை அவன் போற்றி நிற்க காரணம் சிவனை அந்த கலைகளில் சிவனைப் போற்றி வழிபடலாம் என்பது.

அந்த இராஜசேகர பாண்டியன் எவ்வளவுக்கு நீர் நிலைகளைப் பெருக்கி விளைச்சலை அதிகரித்தானோ, எவ்வளவுக்கு முத்துக்கள் வளம், பாண்டிய நாட்டின் மலைவளத்தை காத்தானோ, எப்படி மக்களுக்கு ஒரு குறை இன்றி ஆட்சி செய்தானோ, எப்படி தமிழ் வளர்த்து சிவனைப் போற்ற வழி செய்தானோ அவ்வளவுக்கு கோவில்கள் எழுப்புவதிலும் அங்கு எல்லாக் கலைகளை வளர்ப்பதிலும் சரியாக இருந்தான்.

அவன் வெறும் மன்னன் மட்டுமல்ல அவனே பாடல் இயற்றுவான், பாடுவான், இசை அமைப்பான், இசையின் எல்லா நுணுக்கங்களையும் அறிந்திருந்ததால் அவன் பாடல் இனிமையாக இருந்தது.

எல்லாக் கலைகளிலும் வல்ல மன்னன் என அவன் போற்றி கொண்டாடப்பட்டான், அவனின் கலைகளெல்லாம் சிவனை வணங்கவும் போற்றவுமே அடிப்படை காரணமாக இருந்தது.

ஆகமங்கள் அனைத்திலும் அவன் வித்தகனாய் இருந்தான். சாஸ்திரங்கள் அவன் விரல் நுனியில் இருந்தன, எல்லா வித தர்க்கமும் அறிவும் அவனின் நாவில் எதிர்தரப்பின் கேள்விக்காய்க் காத்திருந்தது.

அர்த்த சாஸ்திரம் முதல் எல்லா வகையான சாஸ்திர முறைகளும் அறிந்திருந்தான். மிகப் பெரிய ஞானியாய் எல்லாக் கலைகளிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தான்.

அப்படிபட்டவன் புகழ் எல்லாத் திக்கும் பரவியிருந்த போது அவனுக்கு சவால்விடும் அரசன் ஒருவன் சோழ நாட்டில் உருவாகியிருந்தான், அவன் கரிகாலன் எனும் கரிகால் பெருவளத்தான்.

அவன் ஆச்சரியமான வகையில் உருவாகியிருந்தான், அவன் குலத்தை உள்நாட்டு எதிரிகள் அழித்து அவனை கொல்லமுயன்றபோது யாரும் அறியாவகையில் தன் தாய்மாமனோடு தப்பினான். சிறிய வயதிலே தலைமறைவானவன் கரூர் பக்கம் தலைமறைவாய் இருந்து வளர்ந்து பின் உரிய நேரம் காவேரிபூம்பட்டினத்தைக் கைபற்றினான்.

அவனின் பகைவரெல்லாம் குறுநில மன்னரும் சேரரும் இந்த இராஜசேகரனின் தந்தை படைகளும் சேர்ந்தும் அவனை அசைக்கமுடியவில்லை.

அவன் உலகமே வியக்கும் வகையில் உறையூர் அருகே காவேரிக்கு கல்லால் அணைகட்டி அதனை பிரித்து திருப்பி வறண்ட பகுதிகளை செழிக்கவைத்து பெரும் விளைச்சலை உருவாக்கி சோழநாட்டின் பொற்காலத்தைத் தொடங்கியிருந்தான்.

அவனும் சிவபக்தன் அவனின் பெரும் பக்தி திருவானைக்காவல் ஆலயத்தில் இருந்தது. நம் சிலந்தியும் யானையும் சிவனை வழிபட்ட அந்த ஆலயம் சோழர்களின் பிரசித்தியான ஆலயம், அவர்களின் குலதெய்வம் போல மிக முக்கியமானது.

செங்கோட்சோழன் கட்டிவைத்த ஆலய சந்நிதி அது.

அந்த ஆலய ஜம்புலிங்கேஸ்வரர் சோழர்களின் மகா பிரசித்தியான தெய்வம், அந்தத் தலம் நீர்தலம் என்பதால் இன்னும் விரும்பி வழிபட்டார்கள் சோழர்கள்.

நீர்தான் உலகின் ஆதாரம். அது காவேரி எனும் வடிவில் சோழநாட்டை பெரிதாக காத்துக்கொண்டிருந்தது, அதன் எல்லாச் செல்வங்களுக்கும் ஆதாரமாய் இருந்தது, அந்த நீரை எங்களுக்குத் தந்த ஈசன் என அதனை இந்தக் கோவிலில் நீர்தந்த ஜம்புலிங்கேஸ்வரர், நீர்தல நாயகர் எனக் கொண்டாடினார்கள்.

அப்படியாக வந்த சோழ மரபில் அந்தச் சிவன் மேல் பெரும் பக்தி கொண்டிருந்த கரிகாலன் இந்த இராஜசேகர பாண்டியனுக்கு சரிநிகர் சவாலாக விளங்கினான்.

அரசியலில் ஒரு இராஜதந்திரம் உண்டு. அது பெரும் அவசியமில்லாமல் கட்டாய தேவை இல்லாமல் தனக்கு சரிக்கு சமமான எதிரியுடன் மோத கூடாது, அதே நேரம் ஒதுங்கவும் கூடாது, மிக கவனத்துடன் கூடியபடி பகையில் உறவு, உறவில் பகை எனக் கொண்டு செல்லுதல் வேண்டும்.

அப்படி சோழன் தன் அவையின் புலவனை தூதாக மதுரைக்கு அனுப்பினான், அவன் வந்த நோக்கம் அதியமானின் தூதராக முன்பு ஒளவையார் எல்லா வேந்தர்களையும் நுணுக்கமாக எச்சரித்தது போன்றது.

அந்தத் தூதனை வரவேற்று உபசரித்து அவனோடு பேசிக்கொண்டிருந்தான் பாண்டியன், இருவரும் ஒருவரை ஆழம் பார்க்கும் வகையில் வாதங்களைச் செய்தார்கள்.

பாண்டியனின் திறமை மிக ஆழமானது. எல்லாக் கலைகளிலும் தேர்ச்சிப் பெற்றிருக்கின்றான் என்பதை அறிந்து கொண்டான் புலவன், அதே நேரம் கரிகால்சோழனும் அசாத்தியமானவன் என்பது பாண்டியனுக்கும் தெரிந்தது.

வாதத்தின் இறுதியில் தங்கள் மன்னர் ஆடல் கலையில் வல்லவர் எனத் தன் கடைசி அஸ்திரத்தை வீசினான் புலவர், பாண்டியனிடம் இதற்குப் பதில் இல்லை.

சிவன் தாண்டவமாடியது எங்கள் சிதம்பர ஆலயம், ஆடல் கலையினை எம்பெருமானே சோழர்களுக்குத் தந்தார், அவரை ஆடி வணங்கும் எம் மன்னரின் நடனம் அவ்வளவுக்குச் சிலாகிப்பானது, பார்ப்போரை கட்டி இழுத்து அழவைக்கும் வகையில் எம்மன்னர் நடனமிடுவார்.

அதுவும் நிலத்தில் மட்டுமல்ல நீர் நடனத்திலும் அவரை மிஞ்ச முடியாது, நீரில் நடனம் என்பது சோழர்களுக்கான கலை, அங்கே எம்மன்னர் தலை சிறந்தவர் என்றான் புலவன்.

பாண்டியனிடம் பதில் இல்லை சற்று அமைதியானான். ஏற்கனவே கரிகால் சோழனின் மகள் ஆதிமந்தி கதையின் மூலமும் இன்னும் சோழநாட்டின் காவேரியில் நீர் நடனங்கள் பிரசித்தி என்பதும் அவனுக்குத் தெரியும்.

ஆட்டனத்தி ஆதிமந்தியின் காதலும் அந்த நீர்நடனமும் வெகு பிரசித்தி என்பதால் பாண்டியன் யோசித்தான், கரிகாலன் அக்கலையில் சிறந்திருப்பது நிச்சயம் உண்மை.

இது வெறும் நடனம் என நகர்ந்துவிட முடியாது, நடனமே உடலை வலுப்படுத்தும் விளையாட்டினை விட நடனம் முக்கியமானது, அது உடல் பொருள் ஆத்மா ஐம்புலன்கள் என எல்லாவற்றையும் ஒரு புள்ளியில் குவிப்பது.

நடனம் என்பது உடல்பலம் உள்ளபலம் எல்லாம் கொண்டுவரும், ஒரு தெய்வீக யோகத்துக்கு சமம்.

இந்தப் பலத்தை சோழ மன்னனே ஆடிப்பெற்றால் அவனோடு அவன் தேசமும் பெறும், மன்னன் செய்வதை மக்கள் அப்படியே பின்பற்றுவார்கள்.

கரிகால் சோழனே நீர்நடனம் ஆடினால் என்றால் சோழர்களுக்கு அது இயல்பாய்வரும் அங்கிருந்து அற்புதமான வீரர்கள், ஆற்றல் மிகுந்தவர்கள் வருவார்கள், அது பெரும் பலத்தை சோழநாட்டுக்கு கொடுக்கும்.

சேரர்களும் இதில் வித்தகர்கள் ஆட்டனத்தி அப்படித்தான் உருவானான்.

நீர் நடனம் என்பது நாட்டின் காவலும் கூட, இந்தக் கலையில் தேர்ந்துவிட்டால் ஒரு படை ஆற்றை எளிதில் கடக்கும், இன்னும் ஆற்றினை நீர் நிலையினைக் கடக்கும் எதிர்தரப்புக்கும் சவால்விடும்.

எல்லா வகையிலும் மிக மிக முக்கியமான நடனத்தை இனி பாண்டிய மக்களுக்கு சொல்லிக்கொடுத்தல் வேண்டும், அதனால் தானே அதனை கற்கவேண்டும் என முடிவு செய்தான்.

பாண்டிய நாட்டின் மதுரையில் வெள்ளியம்பல சபை உண்டு, அங்கே வெள்ளியில் நடராஜ பெருமான் திருவுருவம் உண்டு, ஆடலுக்கு அவர்தான் அரசர்.

அந்த வெள்ளி அம்பல நாதர் சந்நிதிக்குச் சென்றான் இராஜசேகர பாண்டியன், நாட்டில் இருந்தும் அண்டை தேசங்களில் இருந்தும் வெகுசிறந்த நடன ஆசிரியர்களை வரச்செய்தான்.

நாடாளும் மன்னனுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பது என்றால் கொடுப்பினை அல்லவா? ஆக சிறந்த ஆசிரியர்கள் வந்தார்கள், மன்னன் அவர்களிடம் மாணவனாக பரதம் பயில ஆரம்பித்தான்.

பரத முனிவர் கொடுத்த அந்த நாட்டியக்கலை நுணுக்கமானது. உடலின் ஒவ்வொரு உறுப்பையும் இயங்க வைப்பது, கை கால்கள் எல்லாம் இடைவிடாமல் இயங்கி கொண்டே இருக்க வைக்கும் கலை அது.

இதனால் அவன் அடிக்கடி களைத்துப் போனான். ஓய்வெடுத்து நடனம் பயலும் அவசியம் வந்தது. வீர விளையாட்டுக்கள் பயிலும் போது வரும் களைப்பு, இந்த பரதம் படிக்கும் போதும் வந்தது பற்றி சிரித்துக் கொண்டான்.

வேகமாக அவன் பரதம் கற்றுக் கொண்டிருந்த அவன், கொஞ்சம் கொஞ்சமாக முழுக்க சிவன் நினைவில் கரைந்தே போனான்.

பரதம் என்பது இசையோடு கூடிய கலை, இசை பாடல்கள் பாடும் போது ஆடவேண்டிய கலை, அந்தப் பாடல்கள் சிவனைத் துதிப்பதாக அவர் பெருமையினைச் சொல்வதாக இருந்ததால் சிவனின் நினைவில் அவன் அடிக்கடி மூழ்கிக் கரைந்து கொண்டே இருந்தான்.

ஒரு கட்டத்தில் எல்லாம் சிவமயமான நிலையில் அவன் சிவனை ஒரு குருவாக கொண்டாடினான், தன் முன் நின்று சிவனே குருவாக தனக்கு பரதம் சொல்லித் தருவதாக கருதி தன் முன் அவனே நிற்பதாகக் கொண்டாடினான்.

நாளுக்கு நாள் அந்த அன்பு பெருகி கொண்டே வந்தது.

அவனுக்கு கடும் பயிற்சி காரணமாகக் கால்வலி வந்தது. மன்னனுக்குக் கால்வலி என்றால் நாடு தாங்குமா? எல்லா வைத்தியர்களும் இராஜவைத்தியன் தலைமையில் கூடிக் காலுக்கு தைலமிட்டு இன்னும் மருந்து கொடுத்து தாங்கிக் கொண்டிருந்தார்கள்.

அவன் அந்த கால்வலியோடு நடராஜரை நோக்கினான், அவர் ஒற்றைக் காலில் நின்றுகொண்டிருந்தார்.

அவன் பரிதவித்துப் போனான், கலங்கிப் போனான். தன்னை ஒரு மன்னன் என மானுடர் கொண்டாடித் தன் வலிக்கு சிகிச்சை அளிக்கும் நேரம் மன்னர்களுக்கு மன்னரும், தன் குருவுமான சிவன் ஒரே காலில் நிற்பது எப்படி என்பது அவனுக்கு வலியாயிற்று.

சிவன்மேல் கொண்ட அன்பால் குருமேல் கொண்ட உன்னதமான ஆத்மார்த்தமான பாசத்தால் அவன் அழுதான்.

“ஓ சிவனே ஒற்றைகாலில் நிற்கின்றீரே இது உமக்கு வலிக்காதா?”

அன்பு எப்போதும் அறிவினைப் பல இடங்களில் அகற்றிவிடும், அதுவும் உளமான பாசமான அன்பு முழுக்க தெய்வத்தை காணும் உருவில் காட்டிவிடும்.

அதுவும் இந்துக்களின் மரபு அதனில் கரை கண்டது.

தெய்வத்திருவுருனை வைத்து அதற்கு பள்ளி எழுப்பி, அபிஷேகம் செய்து, வாசனை திரவியம் பூசி, உடை அணிந்து நகைபூட்டி உணவு படைத்து, தேரில் வைத்து இழுத்து பல்லக்கு சுமந்து, பள்ளியறை அனுப்பி தெய்வத்தை அரசனுக்கு மேல் கொண்டாடும் சமூகம்.

அந்தச் சமூகத்தின் உன்னதமான பக்தனாக அவன் சிவனை நோக்கினான்.

தெய்வத்தின் பள்ளியெழுச்சி முதல் பள்ளியறை பூஜை முதல் எப்படி ஆத்மார்த்தமாகச் செய்வோமோ அப்படித் தெய்வத்தின் நடனக்கோலத்தையும் நாம் காணவேண்டும் எனக் கண்டவன், சிவனுக்கும் கால்வலி வருமே எனக் கலங்கினான்.

தனக்கு வைத்தியர்கள் தந்த தைலத்தை அவர் ஒற்றைகாலில் பூசினான், கண்ணீர் விட்டான், தனக்குத் தந்த மூலிகைகுளிகைகளை அவர் முன் வைத்து வணங்கினான்.

சிவன் அவன் செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தார். அவன் அன்பில் கரைந்து கொண்டே இருந்தார்.

அவன் தன் நடனப் பயிற்சியின் போது அவனுக்கு கால்வலி வருவதும் அப்போது தனக்கு தரப்படும் தைலத்தை அவன் சிவனுக்கும் கொடுப்பதும் வாடிக்கையாயிற்று.

அந்நேரம் சிவராத்திரியும் வந்தது.

மன்னன் சோமநாதர் சந்நிதியில் சிவராத்திரி நோன்பையும் வழிபாட்டையும் மேற்கொண்டான். நாலுகால பூஜையினை அங்கே செய்து வழிபட்டவன் நான்காம் கால பூஜை தேவர்களுக்கானது என்பதால் வெள்ளியம்பல நாதனை வழிபட சென்றான்.

இரவெல்லாம் சிவநினைவில் இருந்ததால் அவனுக்கு முழுக்க முழுக்க சிவனே மனதில் சிந்தையில் எண்ணத்தில் நினைவில் எங்குமாக இருந்தார், அந்த நிலையில் அவன் முழுக்க சிவநினைவாகி சொன்னான்.

இனியும் பொறுப்பதில்லை எனப் பக்தியின் உச்சத்தில் சொன்னான்.

“எம்பெருமானே, அவ்வப்போது நடனமாடும் எனக்கே இரு கால்களும் வலிக்கின்றன, ஒரே காலில் நிற்கும் உமக்கு வலிக்காதா.

என் குருவே, என் தகப்பனே, என் அரசனே உம்மால் இதனைத் தாங்கமுடியலாம் ஆனால் என்னால் முடியாது, எனக்காக உமது காலை ஊன்றிக் கொள்ளும்.

இதை நீர் செய்யாவிட்டால் ஒரே காலில் நீர் நிற்கும் கோலத்தை நான் காண சகிக்காமல் செத்தே விடுவேன், என் கண்முன்னே நீர் வதைபடுவதை என்னால் காணமுடியவில்லை” எனச் சொன்னவன் அந்தக் காரியத்தைச் செய்தான்.

தன் வாளை எடுத்து தன் வயிற்றில் பாய்ச்ச முயன்றான், அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

“பாண்டியா” எனும் குரல் கேட்டது, பேரொளி சூழ்ந்து கொண்டது, அங்கே வெள்ளி அம்பல நாதரின் பாதம் மட்டும் தென்பட்டது.

“சிவனே, எம் அரசனே” எனப் பணிந்து வீழ்ந்த பாண்டியன் மெல்ல தலை தூக்கிப் பார்த்தான்.

சிவன் இடதுகாலை ஊன்றி நின்றார், மன்னன் வார்த்தைகள் இல்லா நிலைக்கு பரவசமாகி கையினைக் கூப்பித் தொழுது நின்றான்.

பின் மெல்ல இடதுகாலை மட்டும் ஊன்றி வலதுகாலை மேலே உயர்த்தினார் சிவன்.

அத்தோடு அந்தக் காட்சி மறைந்து சிலை இயல்பு நிலைக்கு வந்தது. ஆம். தன் அடியானுக்காக அவன் தன் மேல் கொண்ட பெரும் பக்தியின் வேண்டுதலுக்காக காலை மாற்றி அருள்புரிந்தார் சிவன்.

இன்றும் இந்தக் கோலத்தில்தான் மதுரையில் வெள்ளியம்பல நாதனாக அவர் அருள்பாலிக்கின்றார், எல்லா நடராஜ சிலைகளில் இருந்து அவர் மாறி அங்கு மட்டும் இடது காலை ஊன்றி வலதுகாலை தூக்கி ஆடும் கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.

இதுதான் கால்மாற்றி ஆடிய படலம்.

இங்கு ஆழ்ந்து கவனிக்கதக்க விஷயங்கள் சில உண்டு.

முதலாவது, எப்படி தமிழக வரலாறு மறைத்து எழுதப்பட்டது என்பது. முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, மயிலுக்குப் போர்வை கொடுத்த போகன் போன்றோர் மானுட நேயமும் கொடைத்தன்மையும் கொண்டவர்களாகக் சித்தரிக்கபட்டார்கள்.

இது மடமை என அறிவினால் சொல்லப்பட்டாலும் அவர்களின் இரக்கம் எனும் குணத்தால் அழியா இடம் பெற்றது.

ஆனால், ஒரு பக்தன் தன் அபரிமிதமான பக்தியால் தெய்வ விக்ரகத்தில் இறைவனைக் கண்டு அவருக்குக் கால் வலிக்குமே என அழுத பெரும் வரலாற்றைச் சொல்லமாட்டார்கள்.

இங்கே இந்துக்கள் வரலாறு இப்படித்தான் மறைக்கப்பட்டிருக்கின்றது.

இந்தத் திருவிளையாடலில் இறைவன் செய்த காரியங்கள் பல உண்டு. வெளியே இது பக்தனுக்காகக் கால் மாற்றிய படலம் எனச் சொல்லப்பட்டாலும் பின்னணியில் இரு உன்னதமான சிவபக்தர்களின் போர் தவிர்க்கப்பட்டது.

ஆம். கரிகால் சோழன் சாதாரணமானவன் அல்ல, அவன் பாண்டியரை வெல்ல காலம் பார்த்துக்கொண்டிருந்தான், பகையினைக் கொண்டிருந்தான்.

அவன் திருவானைக்கா சிவன் பக்தன், அங்கே தன்னை வழிபட்டவனுக்கு மதுரையில் இருப்பவனும் என் பக்தனே எனக் காட்டினார் சிவன், சிவனே பாண்டியனுக்காக காலை மாற்றி நின்றார் என்றால் அவனிடம் எப்படி மோதுவது எனக் கரிகாலன் ஒதுங்கினான்.

இப்படி தன் அடியார்கள் இருவரும் மோதாமல் சிவன் சமாதானம் அருளினார்.

இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் பரத கலையின் பலன், அது வெறும் நடனம் அல்ல சிவனைத் தன்னுள் உணரும் யோகம் என்பது.

அதுவரை சிவன் வேறு தான் வேறு எனும் எண்ணம் கொண்டிருந்த பாண்டியன் இந்த நடனத்தை கற்கும் போதே தான் வேறு சிவன் வேறு இல்லை எனும் நிலையினை அடைந்து தன்னைப் போல் சிவனுக்கும் கால் வலிக்கும் எனும் நிலையினை எப்படி அடைந்தான்?

அவன் சிவமாகவே எப்படி பரத கலையால் மாறினான்? ஏன் பரத முனிவர் இந்த நடனத்தைத் தந்தார்? எத்தனையோ நடனங்கள் இருக்க இதனை மட்டும் கோவில்களில் அரங்கேற்றம் செய்தார்கள், இன்றுவரை அக்கலை ஏன் முக்கியமானதாகக் கொண்டாடப்படுகின்றது.

அது எப்படி உருவானது?

அறுபத்து நான்கு கலைகளில் ஒன்றாகக் கருதப்படும் பரதக்கலை, பாரத நாட்டின் தெய்வீகக் கலையாக போற்றப்படுகின்றது. காரணம், ஆரம்ப கால மக்கள் அதிக துயரத்தில் ஆழ்ந்து கிடந்தனர். இந்நிலை மாறி எங்கும் இன்பம் உண்டாகும் வண்ணம், அனைவரும் புரிந்து கொள்ளுமாறு நான்கு வேதங்களில் இருந்து ஒரு பொழுதுபோக்கை உருவாக்குமாறு இந்திரன் பிரம்மாவை வேண்டினார்.

இதற்கமைய இருக்கு வேதத்தில் இருந்து நாட்டியத்தையும், யசூர் வேதத்திலிருந்து அபிநயத்தையும், சாம வேதத்திலிருந்து இசையையும், அதர்வ வேதத்திலிருந்து ரஸத்தினையும் தொகுத்து ஐந்தாம் வேதமாக நாட்டியக்கலையினை படைத்தார்.

பிரம்மா தான் படைத்த நாட்டியக்கலையை முதலில் பரத முனிவருக்கு கற்பித்தார். இதனைப் பரதர் கந்தர்வர்கள், அப்சரஸ் பெண்களுக்கு கற்றுக் கொடுத்தார். பின்னர் கைலயங்கிரியில் சிவன் முன்னிலையில் இப்பெண்கள் நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என்பவற்றை ஆடிக்காட்டினர்.

இதனைக் கண்டு மகிழ்ந்த சிவன் தான் இயற்றிய நர்த்தனத்தை நினைவு கூர்ந்து தண்டு முனிவரை அழைத்து அதனை பரதருக்கு கற்றுக் கொடுக்கும்படி கூறினார். தண்டு முனிவரால் எடுத்துச் சொல்லப்பட்டமையால் இது ‘தாண்டவம்’ எனப் பெயர் பெற்றது.

பார்வதி தேவி லாஸ்யம் என்னும் நடனத்தினைப் பாணனின் மகளும், அனுருத்திரனின் மனைவியுமாகிய உசைக்கு கற்றுக்கொடுத்தார். உசை இதனை துவாரகையிலுள்ள இடைச்சேரிப் பெண்களுக்குக் கற்பித்தார். பின் இவர்கள் மூலம் இக்கலை உலகெங்கும் பரவியது.

பரதமுனிவரால் உருவாக்கப்பட்டதலாலேயே பரதம் என்ற பெயர் வந்தது, அவர் ஒரு யோக முனி.

பரதம் என்பது வெறும் நடனமோ, கேளிக்கையோ சந்தோஷ நடனமோ அல்ல. அது ஒரு யோக தத்துவம். ஆடுவோரும் காண்போரும் மனம் ஒன்றி இறைவனை தியானிக்கும் அற்புதமான ஒரு ஞானக்கலை.

பரதம் என்ற சொல், ப – பாவம், ர – பண் [இராகம்], த – தாளம் என்ற மூன்றையும் குறிக்கும். அதாவது, உடல், ஆத்மா, மனம் எனும் மூன்றைறையும் இணைக்கும் கலை அது.

“”கைவழி நயனஞ் செல்லக் கண்வழி மனமும் செல்ல”
மனம் வழி பாவமும் பாவ வழி ரசமும் சேர”

என்பது பரத சாஸ்திரத்தின் அடிப்படை.

அதாவது. கண்ணும் கையும் உடலும் மனமும் ஒரே புள்ளியில் இணைவதே பரதம். இந்தக் கலை பரத முனிவரால் ஏற்படுத்தப்பட்டது, அடிப்படையில் இது யோகாசனம்.

யோகத்தில் 108 நிலைகள் உண்டு. இந்த 108 நிலைகளையும் 108 கர்ணங்கள் எனச் சொல்லி அதனடிப்படையில் உருவான யோக நடனமே பரதம்.

இதை முறையாகச் செய்தால் யோகத்தின் படிநிலை ஒவ்வொன்றாய் துலங்கும், ஒரு கட்டத்தில் யோகத்தின் பலன் முழுமையாய் தெரியும்.

இந்தக் கலை அன்று ஆலயங்களில் மட்டுமே இருந்தது. அரசன் மண்டபத்தில் ஆயிரம் நடனங்கள் ஆடப்பட்டாலும் பரதம் என்பது தெய்வக் கலையாக தெய்வ சந்நிதி முன்னால் மட்டும் ஆடபட்டது.

அது ஆடுவோரையும் பாடுவோரையும் காண்போரையும் தெய்வச் சிந்தனையில் மனதை ஒருமுகப்படுத்தும் சிந்தனையில் செலுத்தும் ஒரு கலையாய் இருந்தது.

அந்தக் கலையில் புராணம் சொன்னார்கள், தெய்வ நிலைகள் சொன்னார்கள், பக்தியும் ஞானமும் போதித்தார்கள்.

அது முழுக்க யோகக் கலை. இந்துக்களின் தனி சொத்து. அது ஒரு வழிபாடு, அது ஒரு அற்புதமான யோகம்.

ஆம். அது யோகம். பரத நாட்டியம் என்பது ஆடுவோரும் அதைக் கவனிப்போரும் தன்னை அறியாமல் மனம் உடல் ஆத்மா என மூன்றும் ஒரு புள்ளியில் இணைவது‌ இந்நிலையில் யோகம் கைகூடும். எப்படி தவம் செய்யும் ஒருவனுக்குச் சக்கரமெல்லாம் துலங்கி பெரும் யோக நிலை வாய்க்குமோ இந்தக் கலையிலும் கைகூடும்.

அதுதான் பரத கலையின் உச்சம். சிவனை அடைதல் தெய்வநிலை அடைதல் என்பதுதான் இங்கும் பாண்டியனுக்கு நடந்தது. சிவன் அவனுக்கு போதித்த உண்மை அதுதான்.

வலதுகாலை சிவன் இடதுகாலுக்கு மாற்றினார் என்பது யோக கலையின் மூச்சு குறியீடு. இடகலை பிங்கலை அதாவது நாசியின் இரு மூச்சுக்கள் வலதுநாடி இடது நாடி எனும் இரு மூச்சுக்களை மாறி மாறி சீர்படுத்தினால் அந்த யோகத்தில் நிலைத்தால் இறைவனை அடையலாம் என்பதும் அங்கு போதிக்கப்பட்டது.

இடகலை நாடி என்பது இடப்பக்கம் வரும் மூச்சு அதுவும் வலப்பக்க மூச்சும் சமப்பட்டால் அங்கே யோகம் சித்தியாகும், அதனை போதிக்கும் தத்துவம் இது.

மகா முக்கியமாகச் சிவனில் பாதி சக்தி, இடபாகம் சக்திக்கானது. சக்தியே என்னை இயக்குகின்றாள், அந்த மகா சக்தியே என்னில் இன்று இயக்குகின்றாள் எனத் தன் பக்தனுக்கு சிவன் சொன்ன போதனை அந்தக் காட்சி.

ஆம். அங்கே அவர் காட்டியது என்னில் பாதி தேவி, இடபாகம் அவளுடையது என்பது.

மீதமுள்ள நான்கு சபைகளிலும் அல்லாமல், எங்கும் அல்லாமல் மதுரையில் அதை நடத்தி என்னில் பாதி சக்தி என்றும் இடதுபாதம் காட்டி இவளே என்னை தாங்குகின்றாள் ஏன் சிவன் சொல்லவேண்டும்?

அது மீனாட்சியின் மண், அன்னை சக்தி ஆளும் மண், அங்கே என்னில் பாதியான தேவி உண்டு, இது அவள் இராஜ்ஜியம் எனச் சொல்லாமல் சொன்னார் சிவன்.

அதனாலேதான் நாளாவட்டத்தில் அந்தக் கால் மாற்றி ஆடிய சிலை, அந்த வெள்ளியம்பல சிலை அந்த ஆலயத்துகுள்ளே வந்தது.

பரதம் என்பது சிவனை அடையும் கலை, அது வெறும் நடனம் அல்ல. அது பொழுதுபோக்கும் விஷயமோ கேளிக்கையோ அல்ல‌.

அது யோகம், முழு யோகம். அந்த யோகத்தில் அந்த நடனத்திலே சிவநிலை அடையலாம் என்பதே இந்தத் திருவிளையாடலின் போதனை.

108 அபிநயங்கள் இன்றும் மதுரை ஆலயத்தில் ஏகப்பட்ட தூண்களில் உண்டு. அவை எல்லாம் உடலுக்கான யோக ஆசன அசைவுகள்.

அதனை முறையாகச் செய்து, முறையாக நடனம் பயின்றால் இறைவனை அடையலாம். இசை போல நடனமும் இறைவனை அடையும் வழி என்பதை இந்தத் திருவிளையாடல் சொல்கின்றது. நடனத்தில் சிறக்க சிதம்பர நடராஜரை வணங்குதல் மரபு.

அப்படியே மதுரை ஆலயத்தில் வணங்கினால் மாபெரும் சிறப்பும் புகழும் கீர்த்தியும் ஞானமும் கிடைக்கும். அது அழியாப் பெரும் புகழைத் தரும் என்பதை இந்தத் கால்மாற்றி ஆடிய படலம் மூலம் சிவன் உலகுக்குச் சொன்னார். நடனம் என்பதை கர்மாவாகக் கொண்டவர்கள் சென்று அங்கு வணங்கினால் பெரும் பலன் நிச்சயம்.

தன்மேல் பெரும் அன்பு கொண்டு தன்னிலே அவனை உணர்ந்து, தன்னில் ஒருவனாக எந்த பக்தன் தன்னை வழிபடுவானோ அவனை சிவன் எக்காலமும் கைவிடுவதில்லை. அவனுக்காக மாபெரும் அதிசயங்களை இறைவன் செய்வார் என்பதை நம்புங்கள். அந்த ஆலவாய் நாதனை உங்களின் குருவாக உங்களின் நண்பனாகக் கொள்ளுங்கள். அந்தச் சிவன் உங்களுக்கு ஆச்சரியங்களை அதிசயங்களை செய்து காப்பார். இது சத்தியம்.