திருவிளையாடல் புராணம் 33 : சிவன் வேடனாக வந்த படலம்
திருவிளையாடல் புராணம் 33 : சிவன் வேடனாக வந்த படலம்.
அந்நாட்களில் மதுரையினை விக்கிரமபாண்டியன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். சீரும் சிறப்புமாக மதுரையினை அவன் சைவ பூமியாக சிவனின் பிரதிநிதியாக ஆட்சி செய்து கொண்டிருந்தான். சிவன் சாட்சியாக அவன் ஆட்சி சிறந்திருந்ததால் எல்லாத் தேவதைகளும் நவக்கிரகங்களும் அங்கு எல்லா நலன்களையும் அருளின.
மக்கள் நல்ல மனத்தெளிவும் நிரம்ப ஆரோக்கியமும் பெற்றிருந்தார்கள். மக்கள் சரியாக இருக்கும் நாடு எப்போதும் பெரும் வாழ்வு வாழும். பழக்கிய யானைகளைக் கட்டுபடுத்துவது எளிது என்பது போல் எல்லா அறமும் அறிந்து கடும் உழைப்பினைக் கொட்டி நாட்டை வளமாக்கி வைத்த மக்களை ஆள்வதும் அவனுக்கு எளிதானதாய் இருந்தது.
மக்களும் மன்னனும் சிவனுக்காக, சிவன் தன் மக்களுக்காக என அந்த பூமி சைவபூமியாய் மிக சிறந்த வகையில் ஜொலித்தது. பாரதகண்டம் மட்டுமல்ல உலகெல்லாம் இருந்து சைவர்கள் வந்து சிவனை வழிபட்டுச் சென்றார்கள். சைவம் சம்பந்தமான எல்லா விவாதமும் சொற்பொழிவும் இதர பக்தி விஷயங்களும் அங்கு நாளெல்லாம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அடியார்களுக்கு அன்னதானம் என்பது வைகை நதிபோல் இடையறாது அங்குநடந்த விஷயம்.
திருநீறு அணிந்த நெற்றிகளும், “சொக்கநாதா, ஆலவாய் நாதா” எனச் சொல்லும் வாய்களும், சிவ பெருமையினை கேட்கும் காதுகளும், சிவனுக்காகவே இயங்கும் கால் கை கொண்ட மானுடர்களாக அங்கு எல்லாருமே சிவகணங்கள் போல் இருந்தார்கள்.
சைவம் எப்போதுமே எதிர்ப்புக்களை கொண்ட மதம், அந்தத் தர்மத்துக்கு எக்காலமும் எதிர்ப்பு ஏதோ ஒருவகையில் இருந்து கொண்டே இருக்கும். எதிரிகள் இல்லாத ஒரு மானுடனே சிறக்கமாட்டான், அவன் ஆற்றல் வெளிப்படாது எனும் போது மதத்துக்கும் அது பொருந்தும்.
தங்கம் நெருப்பில் நின்றுதான் தன்னை நிருபிக்க முடியும், கல் நீரிலும் மழையிலும் வெயிலிலும் போராடித்தான் தன்னை நிருபிக்க முடியும், ஒரு புலி சிங்கம் என்றாலும் அது பல இடங்களில் போராடித்தான் தான் யார் எனக் காட்டமுடியும்.
இருளில்தான் வெளிச்சமே தன்னை நிருபிக்கமுடியும். மாயை இருந்தால்தான் யோகியர் தங்களை நிறுத்திக் காட்டமுடியும், மகா சக்திபடைத்த மூலிகைகளின் அருமை தெரியக் கூட நோய்கள் அவசியம்.
அப்படி இந்து மதத்துக்கும் சில எதிரிகள் எக்காலமும் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் சைவத்தை அழிக்க சிவவழிபாட்டை முடக்க இந்த சனாதனத்தை உலகை விட்டே விரட்ட கடுமையாக முயல்வார்கள்.
அவர்களுக்கும் எல்லாச் சக்திகளும் சித்தியும் கிடைக்கும். அதைக் கொண்டு பெரும் ஆட்டம் ஆடிப்பார்ப்பார்கள். ஆனால், மழைக்காலத்தில் ஆலமரத்தின் மேல் பாசி போல் படர்வார்களே தவிர அவர்களால் அங்கே ஏதும் செய்துவிட முடியாது, கொஞ்ச நாளிலே மறைந்தும் போவார்கள்.
இந்தச் சுழற்சி எக்காலமும் உண்டு. ஏதோ ஒரு மதம் ஒவ்வொரு பெயரில் சனாதனத்தோடு எந்நாளும் மோதிக்கொண்டே இருக்கும், அப்படி அன்று மோதிக்கொண்டிருந்த மதம் சமணம்.
இவர்களுக்கு வேத வழிபாடுகள் பிடிக்காது. சாஸ்திர சம்பிரதாயங்கள் பிடிக்காது. ஒரு மானுடன் கட்டுப்பாடாக வாழவேண்டியவன், சிந்திக்க தெரிந்த மிருகம் மனிதன் என்பதால் அவனுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் அவசியம்.
ஒரு எந்திரத்துக்கு அறிவு கொடுப்பது எவ்வளவு ஆபத்தோ அப்படியான ஆபத்து மிருக வடிவில் உடலமைப்பினைக் கொண்ட மானிடனுக்கும் கொடுப்பது. ஆனால், ஆத்ம ஈடேற்றத்தின் வழிமுறைக்காக அங்கேதான் ஆத்மா தங்கியிருக்கின்றது.
இந்த ஆத்மாவினை ஈடேற்றிச் செல்ல, அந்த ஆத்மா கர்மம் முடித்துச் செல்ல அந்த மனிதனுக்குப் பல கட்டுப்பாடுகள் அவசியம். வேதம் சாஸ்திரம் வழிபாடுகள் என நிரம்ப அவசியம். அவனை ஒவ்வொரு நொடியும் ஏதோ ஒரு காரணம் சொல்லி நிறுத்தி வைக்கவும், பிடித்து ஒரு கட்டுக்குள் வைக்கவும் காரணம் அவசியம்.
இந்துமதம் அதை ஒவ்வொரு நொடி, ஒவ்வொரு திதி, ஒவ்வொரு நாளுக்கும் ஒரு காரணமாகச் சொல்லி அவனை நிறுத்திவைத்தது. ஒரு கட்டுக்குள் வைத்தது. நல்ல இந்து அந்தக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரை உடலாலும் மனதாலும் சரியாக இருப்பான்.
மானுட பலவீனம் எல்லாம் தாண்டிச் சரியாக இருப்பான்.
இதனைப் புரிந்துகொள்ளாதவர்கள் அது சரியில்லை என்பார்கள். இவை இல்லாமலே இறைவனை அடையலாம் என்பார்கள். சனாதனம் என்பது எல்லா வகையிலும் 365 பாகையிலும் மானுடரின் பூலோக வளமான வாழ்வுக்கும் ஆன்மீக வாழ்வுக்கும் காவல் என்பதை புரியாதவர்கள் அந்தத் தர்மத்தை அழிக்க எண்ணுவார்கள், அதுவே சரி அதுதான் தங்கள் கடமை, தங்கள் வழியே சரி என மல்லுக்கு நிற்பார்கள்.
அப்படி ஒரு சமணக் கூட்டம் காஞ்சியில் இருந்தது. அது அப்போது காஞ்சியில் இருந்து ஆட்சி செய்த சோழ மன்னனை வளைத்து சோழநாட்டை முழுச் சமணநாடாக மாற்றியும் வைத்தது.
பாரத கண்டமெங்கும் இன்னும் உலகமெங்கும் சமணம் பரவவேண்டும், சனாதனம் ஒழியவேண்டும் என உருவாகிய அம்மதம், மானுட பலவீனங்களைக் குறிவைத்து நகர்ந்தது.
மானுடரின் மிகப்பெரிய பலம் சுகவாசம். அவன் கஷ்டப்பட்டு செய்வதை எளிதாகச் செய்யலாம் என்ற உடனே மாறிவிடுவான் ஆனால் அதன் அபாயத்தை அறியமாட்டான்.
ஒரு மனிதன் கஷ்டப்பட்டு உழைத்தால் உடலுக்கு நல்லது. ஆனால், அவன் உழைப்பினைத் தன் எந்திரத்தால் சுருக்கிவிட்டு பின் உடல் பயிற்சி மையம், இன்னும் ஊரெல்லாம் ஓடி ஓடி உடலைக் காப்பதைக் காணமுடியும்.
ஆம். சில விஷயங்களில் மானுடன் இங்குக் கஷ்டபட்டே தீரவேண்டும். என்னதான் எந்திரம் வந்து கொண்டே இருந்தாலும் இன்னொரு பக்கம் மானுடன் ஏதோ ஒருவகையில் சிரமப்பட்டே தீரவேண்டும் இதுவிதி.
இதனைப் புரியாத சமணம், கஷ்டமே வேண்டாம் எளிதில் முக்தி எனச் சொல்லி மக்களைக் குழப்பியது. இன்னும் கல்வி மருத்துவம் என இந்துக்களின் ஞானத்தைத் திருடி இந்துக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தது.
இந்தக் கண்டத்து மக்கள் எப்போதும் சனாதானிகள். இவர்கள் எல்லோரையும் மதம்மாற்றுவது என்பது ஒருகாலமும் முடியாது. இதனால் இக்கும்பல்கள் எப்போதும் சிறியவை ஆனால் தந்திரமாக அரசனை மதம்மாற்றி வைத்து அவனைக் கொண்டு மக்களைக் குழப்பி அடித்து நாட்டில் சைவ ஒழிப்பினைச் செய்யும்.
அப்படிச் சோழநாட்டையும் இன்னும் பல நாடுகளையும் சமணத்தால் நிரப்பிய கும்பல் பாண்டிய நாட்டையும் குறிவைத்தது, அது சோழமன்னனைப் பாண்டியனுக்கு எதிராக தூண்டிவிட்டது.
சனாதனத்து எதிரான மதமெல்லாம் எப்போதும் ஒரு வெறுப்புணர்வை கொண்டிருக்கும். சமணமும் அப்படி வெறுப்பினை வீசிற்று. சோழமன்னன், பாண்டியனை இரு காரணங்களுக்காக வெறுத்தான்.
சமண விதிப்படி திருநீறு அணிந்தவனைக் கண்டால் தீட்டு, சிவசிவ என்ற குரலைக் கேட்டாலே தீட்டு, அவ்வகையில் பாண்டியன் இவனுக்கு தீட்டானான். அப்படியே அவனின் வளமான நாடும் படையும் செல்வமும் இவனுக்கு அச்சுறுத்தலைக் கொடுத்தன.
அந்த அச்சத்தை சமணர்கள் நெருப்பாக வளர்த்தனர். எந்நேரமும் பாண்டியன் படையோடு வந்து காஞ்சியினைத் தாக்குவான் என அச்சுறுத்தின.
பாண்டியனைப் படையால் வெல்லமுடியாத மன்னன் யோசித்தான், அவன் தயக்கத்தைக் கண்ட சமணகும்பல் போர் அல்லாமல் தந்திரமாக ஒரு மாய வழியில் பாண்டியனைக் கொல்ல வழி சொன்னது.
அதாவது பெரிய யாகம் செய்து துஷ்ட சக்திகளைக் கொண்டு பெரிய அழிவு சக்தி ஒன்றை உருவாக்கி அதைக் கொண்டு பாண்டியனை அழிப்பது, யாகத்தினாலும் உரிய மந்திர உச்சாடங்களாலும் எதையும் சாதிக்கலாம் என அவர்கள் நம்பினார்கள், ஆனால் எல்லாமே ஈசனுக்கு உட்பட்டு அவன் அனுமதியோடே நடக்கும் என்பதை மறந்தார்கள்.
இம்மாதிரி யாகம் பெரும் செலவுப் பிடிக்கும், பெரிய பந்தல் ஆயிரக்கணக்கான வகையில் யாகப் பொருட்கள் மந்திரமும் இதர காரியமும் செய்ய திறமையானவர்கள் எனச் செலவும் அதிகம், மன்னன் அதை அனுமதித்தான்.
படைதிரட்ட ஆகும் செலவைப் போல இதற்கும் நிதி ஒதுக்கிப் பெரும் போர் போல அதைச் செய்தான்.
பெரும் ஆட்கள் வேண்டும் என்பதால் சமணர்கள் தங்கள் ஆட்களை எல்லாம் அழைத்தார்கள்.
அஞ்சன மலை எனும் கர்நாடக பகுதி மலை (அனுமர் இங்குதான் அவதரித்தார்), கிரவுஞ்ச மலை எனும் ஆந்திரா பக்கமுள்ள மலை, கோவர்த்தன மலை உத்திரபிரதேசம் பக்கமுள்ள மலை, திரிகூடம் எனும் பாண்டிய நாட்டு குற்றால மலை, அத்தி பர்வத மலை எனும் திருவண்ணாமலை பக்கமுள்ள மலை, சையம் எனும் ஆந்திர பக்க மலை (நந்திமலை பகுதிகள்), ஹேம கூட மலை எனும் துங்க பத்ரா ஆற்றின் கரை மலை, விந்திய மலை என எட்டு மலையில் இருந்தும் சமணர்களை அழைத்தனர்.
அவர்கள் வந்து மன்னனிடம் பாண்டியனைக் கொல்ல “அபிசார வேள்வி” என ஒன்றை தொடங்வேண்டும் என்றார்கள், மன்னன் இசைவு தெரிவித்தான்.
தந்திரமிக்கச் சமண கும்பல் தாங்கள் யாகத்தால் பாண்டியனைக் கொன்றால் நாட்டில் ஒரு பகுதி வேண்டும் எனக் கோரிற்று, மன்னனும் ஒப்புக்கொண்டான்.
இந்தச் சமண கும்பல் அபிசார வேள்வி எனும் பயங்கரமான வேள்வியினை எழுப்பிற்று.
இது தாருகாவனத்தில் ரிஷிகள் செய்தது. அதிலிருந்துதான் யானை, மான், முயலகன் என அழிவு சக்திகள் வந்தன. சிவன் அவற்றை அழித்துப்போட்டார். அதே யாகத்தை பாண்டவர்க்கு எதிராக துரியோதனும் செய்தான், கிருஷ்ணர் பாண்டவரைக் காப்பாற்றினார்.
அப்படியான சக்திமிக்க இந்த யாகம் காஞ்சியில் தொடங்கப்பட்டது. இந்த யாகத்தால் பயங்கரமான உருவினை எழுப்பி எந்த வடிவிலும் எழுப்பி யாரையும் கொல்லமுடியும்.
அந்த யாகம் சில மாதங்கள் நீண்டது, ஏகப்பட்ட துஷ்ட சக்திகளை அழைத்து ஒரு பெரிய அழிவு சக்தியினை யானை வடிவில் உருவாக்க முயன்றார்கள், அது வெற்றியுமானது.
அந்த யாகத்தின் புகை பிரமாண்டமாய் எழுந்து அப்படியே ஒரு யானை உருவுக்கு வந்தது, அந்தப் புகை இறுகி யானையாக நின்றது, அதைக் கண்ட சமணர்கள் உற்சாகமாய் மந்திரங்களைச் சொல்ல அதற்கு உயிர் வந்தது.
உச்சமாக அதற்கு சக்திகொடுக்கும் மந்திரங்களைத் தொடர்ந்து சொல்லிப் பெரும் தீயினை அவர்கள் எழுப்பியபோது யானை வெறி கொண்டு பாண்டிய நாட்டை நோக்கி ஓடியது.
பெரிய மலை அசைவது போல் அந்த யானை ஓடியது. அதற்குப் பெரும் தும்பிக்கையும் இன்னும் சில விஷேஷமான கைகளும் இருந்தன, ஏகப்பட்ட தந்தங்களும் இருந்தன.
அவற்றைக் கொண்டு கண்ணில் பட்டதையெல்லாம் தூக்கி வீசி கொம்புகளால் சரித்துப் போட்டு வெறியாட்டம் ஆடியபடி அது மதுரையினை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அதன் மகா பிரமாண்ட உருவத்தால் காவேரி ஆற்றைக் கூட முழங்காலில் நின்று தாண்டி வேகமாக ஓடி வந்தது.
அதன் இலக்கு மன்னன் விக்ரம பாண்டியன் என்பதால் அது சரியாக அவனை நோக்கி பிரம்மாண்ட இருள் போல் வந்தது.
பெரிய விசித்திரமான யானை பாண்டிய நாட்டில் நுழைந்து எல்லாம் உடைத்துப்போட்டு முறித்துப் போட்டு மதுரை நோக்கி முன்னேறிவருவதை அறிந்த பாண்டியப் படைகள் அதனைத் தடுத்து நிறுத்த முயன்றன, வழக்கமாக மதயானையினைக் கட்டுபடுத்தும் எல்லா முயற்சிகளும் செய்யப்பட்டன.
பெரிய பெரிய ஓசைகளை டமாரங்களை அடித்து விரட்டுதல், பழக்கப்பட்ட யானைகளைக் கொண்டு தடுப்பது என எல்லாம் செய்துபார்த்தார்கள். மாபெரும் அனுபவம் கொண்ட பாகன்களாலும் அதைத் தடுக்க முடியவில்லை.
பெரிய பாண்டிய நாட்டு யானைகளையே அது தூக்கி எறிந்தது, எந்த எதிர்ப்புக்கும் கட்டுப்படவில்லை, பாண்டிய நாட்டு யானைப்படைகள் மொத்தமாக வந்தும் அதனை அடக்குதல் இனி எளிதில்லை என்றாயிற்று நிலைமை.
நெருப்புக்குக் கூட அது அஞ்சவில்லை, யானையினை அடக்கும் கடைசிகட்ட முயற்சியான நெருப்புக்கு அது அடங்கவில்லை, வைக்கோலை பந்தாகச் சுருட்டி விசினாலும் அது கடந்தது.
ஒரு கட்டத்தில் அது மறைந்து ஆட ஆரம்பித்தது, சட்டென மறைவதும் திடீரென யனைகளைத் தூக்கி எறிவதுமாக நின்றது.
யானை இனி மதுரைக்குள் வரக்கூடும் என நகர மதில்கள் வலுவாக்கப்பட்டன, பெரிய பெரிய பள்ளம் வெட்டப்பட்டது, தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
யானையினை எரித்துக் கொல்ல எண்ணெய் எல்லாம் சேர்க்கப்பட்டது. ஆனாலும், யாருக்கும் நம்பிக்கை இல்லை.
கிடைத்த தகவல்கள் எல்லாம் அச்சத்தைக் கொடுத்த நிலையில் மன்னன் விக்ரம பாண்டியன் சோர்ந்து போனான், அவனுக்கு அந்நேரம் குழந்தையும் இல்லாமல் இருந்தது, அவனுக்கு ஏதும் நேர்ந்தால் நாட்டின் நிலைமை குழப்பமாகிவிடும்.
இதனால் அதிர்ந்து அஞ்சியவன் நேரே சென்று ஆலவாயன் சன்னதியில் கதறினான், “அன்னலே, இந்தப் பெரும் ஆபத்தில் இருந்து நான் எப்படி என் மக்களைக் காப்பேன், இந்த நாட்டை எப்படிக் காப்பேன்” எனக் கதறிக்கொண்டிருந்தான்.
யானை பாண்டிய மன்னனைக் கொல்லும், மன்னன் இல்லா பாண்டிய நாட்டை பிடித்துவிடலாம் எனத் தயாரானான் சோழன், சோழனைக் கொண்டு பாண்டிய நாட்டை சமணபூமியாக்கலாம் எனத் தயாரார்கள் சமணர்கள்.
அங்கே பாண்டியன் ஆலவாயன் சன்னதியில் கதறிக்கொண்டிருந்தான், அந்நேரம் ஒரு அசரீரி ஒலித்தது.
“பாண்டியா கலங்காதே, நகருக்கு கிழக்கே ஒரு அட்டாலையினை நிறுவு, நாமே யானையினை வீழ்த்துவோம்” என அது சொன்னது.
அட்டாலை என்றால் கண்காணிப்பு கோபுரம், வேட்டைக்கான பரண் போன்ற உயர்ந்த மேடை.
மன்னன் உடனே அந்த மேடையினை அமைத்தான். பதினாறு தூண்களைக் கொண்டு உறுதியாக அமைத்தான், மின்னல் வேகத்தில் ஆங்காங்கே ஆலயத்துக்காக செதுக்கப்பட்ட கல்தூண்களைக் கொண்டு அதை உயரமாக அமைத்தான்.
எல்லோரும் பதை பதைப்புடன் காத்திருந்தார்கள், பெண்கள் குழந்தைகள் பசுக்களெல்லாம் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.
மன்னனைச் சுற்றி அவனின் மெய்க்காவல் படை நின்றது. எஞ்சியிருந்த யானைப்படை தயாராக தீபந்தங்களுடன் நின்றது, நெருப்பு ஒன்றே கடைசி ஆயுதமாக ஆனால் நம்பிக்கையின்றி இருந்தது.
சிவனடியார்கள் சிவனைத் துதித்தபடியே இருந்தார்கள். ஆலவாய் நாதனுக்கு இடைவிடாத பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.
எல்லோர் கண்களிலும் அச்சத்தின் கலக்கம் தெரிந்தது, எல்லா முகங்களிலும் பயம் படிந்திருந்தது.
எல்லோரும் அஞ்சியபடியே பெரும் பிளிறலுடன் கருமேகம் இறங்கி வந்தது போல் அந்தக் கொடிய யானை வேகமாக வந்தது. அதன் தோற்றத்தைக் கண்டதுமே எல்லோரும் கலங்கினார்கள், அதை வீழ்த்தும் சக்தி தங்களுக்கல்ல உலகிலே யாருக்குமில்லை என நடுங்கினார்கள்.
இனி தங்களால் ஏதும் முடியாது என உணர்ந்து “ஆலவாயா…” எனக் கதறியபோது அந்தக் காவல் கோபுரத்தில் ஒரு வேடன் கையில் அம்பும் வில்லுமாக நின்றார்.
யானை வேகமாக வந்து கோட்டையினை நெருங்க முயலும் போது வேடன் பூட்டிய வில்லில் இருந்து அம்பைச் செலுத்தினார்.
ஒரு அம்பு ஒரே ஒரு அம்பு சென்றது. முதலில் சிறிய அம்பாக இருந்தது. யானையினை நெருங்க நெருங்க உலக்கை போல் ஆயிற்று, இன்னும் பெருத்து சிறிய தூண்போல் ஆனது, பெரிய தூண் போல் அது மாறி யானையின் மந்தகத்தை சரியாக பிளந்து குத்தி நின்றது.
மந்தகத்தில் அடிபட்டதால் யானையின் இரத்தமும் மூளையும் வெளியேறியது, அண்டமே நடுங்கும்படி பெரிய பிளிறலைச் செய்த யானை அங்கே வீழ்ந்து இறந்தது.
நம்பமுடியா அதிசயமாக யானை வீழ்ந்ததை கண்ட பாண்டிய வீரர்கள் பெரும் உற்சாகம் கொண்டனர், அதே நேரம் யானையின் பின்னால் உற்சாகமாகப் பாண்டிய நாட்டை பிடிக்க வந்த சமணரும், சோழ வீரர்களும் திகைத்தனர்.
அவர்களைப் பாண்டிய வீரர்கள் முறிய அடித்தனர். சோழன் உயிர் தப்பி ஓடிப்போனான். சமணர்கள் சிதறிப் போனார்கள். ஆளாளுக்கு ஒரு மூலைக்கு ஓடி மறைந்தார்கள்.
மேடை மேல் நின்ற வேடனை நோக்கி மன்னன் சென்றான். வந்தது சிவன் என்பதால் அப்படியே பணிந்தான், அவனுக்கு உயர்ந்த மேடை மேல் நின்று ஆசி வழங்கினார் சிவன்.
“ஐயனே, பாண்டிய நாட்டுக்கு வந்த ஆபத்தை நீர் முறியடித்து தந்த இந்த இடத்தில் இருந்தே நீர் எம்மக்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்” எனத் தன் விண்ணப்பத்தை வைத்தான் மன்னன்.
சிவன் அதை ஏற்றுக்கொண்டு எல்லா மக்களையும் மதுரையினையும் கை நீட்டி ஆசீர்வதித்து மறைந்து போனார். அவரை அங்கே மக்கள் வழிபடத் தொடங்கினார்கள், பெரும் அதிசயங்கள் நிகழ ஆரம்பித்தன, மன்னனுக்குக் கொடுத்த வாக்கின்படி எக்காலமும் அந்த இடத்தில் நின்று சிவன் மக்களைக் காக்கின்றார்.
யானையினைக் கொன்ற கனை நரசிம்மமாக மாறி உக்கிரமாக நின்றது, உண்மையில் நரசிம்மமே அங்கே அம்பாக வந்திருந்தார்.
அவரை உரோமரிஷி முனிவரும் பிரகலாதனும் வந்து அவரை ஆற்றுப்படுத்தினார்கள், மன்னன் பல வரங்களைப் பெற்றான். நல்லாட்சி நடத்தினான். அவனுக்கு இராஜசேகரன் எனும் மகனும் பிறந்தான்
இதுதான் சிவன் வேடனாக வந்த திருவிளையாடல்.
இந்தத் திருவிளையாடல் பல உண்மைகளைப் போதிக்கின்றது. முதலாவது, எந்த மாந்த்ரீகமோ பில்லி சூனியமோ, செய்வினையோ எதுவோ எல்லாமே சிவன் அனுமதியுடனே நடக்கின்றது என்பது.
சிவன் அதை ஆரம்பத்திலே தடுத்திருக்கலாம் ஆனால் மதுரையில் மன்னன் என்ன செய்கின்றான் எனபதற்காக அதை அனுமதித்தார், மன்னன் சிவனிடம் அடைக்கலமானான், அந்த இடத்தில் அந்த ஏவலை அழித்துப்போட்டார்.
சிவனை அண்டினால் எல்லா ஏவலும் பில்லி சூனியமும் நீங்கும், சிவனருள் முன் எந்த ஏவலும் சூனியமும் நில்லாது, அவரை முழுக்க நம்பும் போது எல்லா ஏவலும் நீங்கும் என்பது இந்தத் திருவிளையாடலின் போதனை.
சிவனை அண்டி நின்றால் எந்த மாய பூதமும், எந்தப் பெரிய பேய் பைசாசமும் நில்லாது என்பதும், தாருகாவனத்து ரிஷிகளின் ஏவலையே ஒழித்து அந்த யானையினை உரித்து, அந்த மானை ஒழித்து அந்த முயலகனை ஒழித்த சிவன், தன்னை நம்புபவரை எல்லா ஏவல் ஆபத்தில் இருந்தும் காப்பார்.
யோக தத்துவத்தில் இந்தத் திருவிளையாடல் நல்ல போதனையினைத் தரும். அதாவது, மனதின் மாய ஆசைகள் பெரும் யானைப்போல் ஒருவனை வீழ்த்தவருபவை, மனதின் எல்லா ஆசைகளும் ஒரு கட்டத்தில் பெரிய உருவாக மாய உருவாக மாறி ஆட்டிவைக்கும்.
அவை ஆத்மாவினை விழுங்கும் ஆபத்தும் வரும், அந்நேரம் சிவனை மனதில் உயர்ந்த இடத்தில் வைத்தால் மனதில் வைத்துப் போற்றினால் அவர் அருளால் அந்த மாயைகள் அழியும், ஆன்மா சிவனால் காக்கப்படும் என்பதும் தாத்பரியம்.
மாய ஆசைகள் பெரும் உருவாக ஆடும்போது சிவனை அண்டினால் பெரும் பலன் உண்டு , சிவன் அந்த மாயைகளை அழிப்பார் என்பது இங்குப் போதிக்கப்படுகின்றது.
சிவனை மிஞ்சிய சக்தி எதுவுமில்லை என்பதை இந்த திருவிளையாடல் சொல்கின்றது.
இந்தத் திருவிளையாடல் நடந்ததன் சாட்சி இன்றும் என்றும் உண்டு. அந்த மாய யானை விழுந்து கல்மலையாக இறுகியது, அந்த இடம் இன்று ஆனைமலை என அழைக்கப்படுகின்றது.
அந்த மலையினைக் கண்டாலே யானையின் சக்தியினை உணரலாம், யானை விழுந்துகிடக்கும் அதே உருவில் அந்த மலை இன்றும் இந்தத் திருவிளையாடலின் சாட்சியாக அங்கு உண்டு.
அந்த அம்பு நரசிம்மமாக மாறிய இடத்தில் உக்கிர நரசிம்மர் ஆலயம் இன்றும் உண்டு.
அட்டாலையில் சிவன் நின்று யானையினை வீழ்த்திய இடமே அட்டாலைபட்டி என்றாகி பின் அரிட்டாபட்டி என மருவிவிட்டது, அங்கு வயல்வெளியில் ஒரு சிவாலயம் முன்பு இருந்தது
பின் அது அந்நிய ஆட்சியில் சிதைந்து போனாலும் அந்த ஆலயத்தின் எஞ்சிய சுவடுகள் இன்றும் உண்டு, பின்னாளைய படையெடுப்பில் அது அழிந்துபோனது என்றாலும் அந்த சிவாலயம் அருகிருக்கும் குகைக்கு மாற்றப்பட்டது.
இன்று அந்த “அட்டாலை சேவகர்” ஆலயத்தின் அடிதளம் மட்டும் எஞ்சியுள்ளது, அங்கே விக்ரம பாண்டியனின் கல்வெட்டு ஒன்றும் உண்டு.
மதுரை ஏகப்பட்ட படையெடுப்பால் சிதைந்த நகரம் என்பதால் இந்த ஆலயம் சிதைந்து இடம்மாறிவிட்டது.
மதுரைக்குச் செல்லும் போது இந்த ஆனைமலை பகுதிக்குச் சென்று அந்த அரிட்டாபட்டிக் குகையில் இருக்கும் “அட்டாலை சேவகரை” காணத் தவறாதீர்கள்.
உரிய காலம் வரும்போது இன்று அடிதளம் மட்டும் எஞ்சியிருக்கும் அந்த அட்டாலை நாதர் ஆலயம் மீள கட்டப்படும், அதுவரை குகைகோவிலில் வழிபடுங்கள்.
அந்த அட்டாலை சேவகர் நீங்கள் என்ன கேட்டாலும் தருவார், நோய் உள்ளிட்ட நெருக்கடி, பண நெருக்கடி, ஏவல் பில்லி சூனிய கொடுமை என எல்லாம் நீக்கி உங்களுக்குப் புத்திர பாக்கியமும் தருவார், ஆலவாய் நாதனோடு இந்த அட்டாலை சேவகர் சிவனையும் வணங்கி வேண்டிய வரத்தைப் பெற்றுக்கொள்வது உங்களுக்கான வாய்ப்பு.