திருவிளையாடல் புராணம் 36 : அரவம் கொன்ற படலம்.

திருவிளையாடல் புராணம் 36 : அரவம் கொன்ற படலம்.

அக்காலத்தில் குலோத்துங்கனின் மகன் அனந்த குணபாண்டியன் மதுரையினைச் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவனும் பாண்டிய வம்சத்தவனாகையால் சந்திரகுல வழமைப்படி மிகப்பெரிய சிவபக்தனாய் இருந்து மக்களுக்கும் வழிகாட்டி ஒரு அடியார்போல் வாழ்ந்து வந்தான்.

“மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி” என்பதால் நாட்டில் மக்களும் சிவபக்தியில் மிகுந்த ஈடுபாடோடு இருந்தார்கள். நல்ல பக்திமுறையும், முறைநெறி வாழ்வும் கொண்ட தேசம் எப்போதும் பெரும் வாழ்வு வாழும். அப்படிப் பாண்டியநாடும் பெரும் செல்வமும் சிறப்பும் கீர்த்தியும் கொண்டு ஒரு குறையின்றி வாழ்ந்து வந்தது.

எல்லா வளமும் கொண்டு, கடல் முதல் மலைவளம் வரை கொண்டு, நீர் வளம் மிகுந்து கலைகளும் தமிழும் வளர்ந்து எல்லா வகையிலும் மின்னிக் கொண்டிருந்தது.

அதன் மீன்கொடி மேகங்களை தொட்டாற்போல நீடு உயர்ந்து நின்றது.

இந்துமதம் தர்மத்தின் வழிநிற்கும் மதம். தர்மத்துக்கு எப்போதுமே சோதனை உண்டு என்பதால் இந்தச் சனாதன தர்மமத்துக்கும் அதன் தர்மத்தின் சிறப்பைச் சொல்லும்படி எக்காலமும் சோதனை உண்டு.

ஒவ்வொரு காலத்திலும் இன்னொரு மதம் அதனைப் புடம்போட வந்து தொல்லை செய்து கொண்டே இருக்கும். கடும் சோதனை கொடுக்கும். ஆனால், அந்தச் சோதனையில் இந்துமதமே வென்று நிலைக்கும்.

இந்தச் சோதனை எல்லாக் காலத்திலும் உண்டு. ஒவ்வொரு காலத்திலும் இப்படிச் சோதிக்க வரும் மதங்களுக்கு ஒரு பெயர் உண்டு, அன்று அதன் பெயர் சமணம்.

இந்தச் சமணர்கள் எங்கெல்லாம் சனாதனம் உண்டோ அங்கெல்லாம் அழித்துப்போட கிளம்புவார்கள். கல்வி, மருத்துவசேவை என மக்களுக்குள் ஊடுருவும் கும்பல் மிக மிக நுணுக்கமாக எப்போதும் அரசனைக் குறிவைக்கும்.

அரசனை மதம்மாற்றினால் நாடு கைக்கு வரும், அரசனைக் கொண்டே சனாதனத்தை அழித்துச் சமணத்தை நிலைக்கவைக்கலாம், சர்வ அதிகாரம் பொருந்திய மன்னன் வழியில் மக்களும் வருவார்கள் என்பது கணக்கு.

இதனால் அரசர்களை மதம்மாற்ற பார்ப்பார்கள், முடியாவிட்டால் கொன்றுவிட்டு குழப்பம் செய்து சனாதனத்துக்கு சக்தி இல்லை நாங்களே சிறந்தவர்கள் எனச் சொல்லி இன்னும் பலவகையான குழப்பங்களை இரகசியமாகச் செய்து சமண அரசனைக் கொண்டுவருவார்கள்.

எல்லா மக்களையும் மதம்மாற்றுவது முடியாத கதை அல்லது பெரும் காலம் எடுக்கும் விஷயம், அங்கே அரசன் எனும் ஒரு நபரைக் குறிவைத்தால் போதும் எல்லாம் செய்துவிடமுடியும்.

இப்படியான சமணர்கள் பாண்டியனைக் குறிவைத்தார்கள். அந்நேரம் பாண்டியனுக்கும் சேரனுக்கும் முறுகல் இருந்தது, அது எப்போதும் உண்டு.

பாண்டிய நாட்டின் பிரதானம் வைகையும் தாமிரபரணியும். இந்த இரு நதிகளின் மூல இடங்களை அந்த மலையடிவாரங்களைச் சேரர்கள் கைப்பற்ற நினைப்பார்கள், காரணம் சேரநாடு மலைபூமி நெல் வயல்கள் குறைவு.

இதனால் இப்பக்கம் ஊடுருவ முயல்வார்கள் அல்லது ஒரு மிரட்டலில் வைத்து வேண்டியன பெற முயல்வார்கள்.

பாண்டியருக்கு சேரநாட்டு யானைகள், சேரநாட்டின் வாசனைப் பொருட்கள் முதல் மிளகுவரை அவசியம். அக்காலத்தில் நல்ல மிளகுதான் சமையலில் காரம் சேர்க்க பயன்பட்டது, மிளகாய் வற்றல் எல்லாம் அன்று இல்லை.

வியாபாரம் சில கணவாய்கள் வழி நடந்ததால் ஆரியங்காவு கணவாய், செங்கோட்டை கணவாய், ஆரல்வாய்மொழி கணவாய் பக்கமெல்லாம் சேரர்க்கும் பாண்டியருக்கும் இப்பாதையினைக் கைப்பற்றுவது யார் எனும் ஒரு போட்டி உண்டு.

இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது முரண்கள் வரும், சிலநேரம் அது போராக வெடிக்கும்.

அப்படியான சேரர்கள் துணையுடன் பாண்டிய மன்னனை வீழ்த்த முனைந்தனர் சமணர் கும்பல்கள். மதுரைக்கு மேற்கு பக்கம் அதாவது கம்பம் பக்கம் மலையில் பெரிய யாகம் நடத்தினார்கள்.

சேரநாட்டு அதர்வண வேதத்துடன் சமணர்களின் யாக முறைகளும் சேர்ந்து மிகப் பெரிய துஷ்ட சக்தியினை வேண்டி அது நடத்தப்பட்டது, மந்திர முழக்கங்கள் முழங்க யாக பொருட்கள் கொட்டப்பட்டன, யாகத்தின் பலன் மெல்ல மெல்ல உருவானது.

சில மாதங்கள் தொடர்ந்து நடந்த யாகத்தினால் பிரபஞ்சத்தின் மாய சக்திகளின் ஒரு பிரிவான துஷ்ட சக்தி அங்கு இறங்கியது. இந்தப் பிரபஞ்சத்தில் எல்லா வகையான சக்திகளும் உண்டு, பிரபஞ்சத்துக்கும் மானுடருக்கும் ஒரு தொடர்பை தருவதுதான் வேதங்கள்.

அதர்வண வேதம் அதைத் தரும். பிரபஞ்சத்தின் எல்லாச் சக்திகளையும் பெறமுடிவது போல துஷ்ட சக்திகள் அழிவைத் தரும் சக்திகளையும் ஈர்க்க முடியும்.

அப்படி அழிவு சக்திகளை அந்த யாகம் ஈர்த்தது, நெருப்பும் ஆகுதிகளும் மந்திர உச்சாடனைகளும் சேரும் போது அது சாத்தியாமாகின்றது.

அந்த யாகத்தின் முடிவில் ஒரு பயங்கர உருவம் தோன்றியது. பனையளவு எழும்பிய புகையில் அந்த உருவம் சிரித்தபடி நின்று என்ன வேண்டும்? எனக் கேட்டது.

“மதுரையினை ஆளும் பாண்டிய மன்னன் அனந்தகுண பாண்டியன் அழியவேண்டும், சனாதன தர்மத்தை வாழவைக்கும் ஆதாரமான அவன் அழியவேண்டும்.

அதுவும் மதுரையிலே அவன் செத்துக் கிடக்க வேண்டும், மன்னனே அழிந்ததைக் கண்டு மக்களெல்லாம் கலங்கிக் குழம்பி நிற்க வேண்டும்.

ஏ அரக்கசக்தியே! உனக்கு இன்னும் எல்லாம் தருவோம் வேண்டியன எல்லாம் செய்வோம், நீ அந்த மதுரை பாண்டியனை அழித்துப்போடு, உருத்தெரியாமல் முடக்கிப் போடு.

மதுரைபட்டணம் ஒரு நாகத்தால் எல்லையிடபட்டதாம், சிவன் கழுத்தில் கிடந்த நாகமாம். அதனால் நீயும் நாகவடிவில் சென்று நாகத்தால் எல்லையிடப்பட்ட மதுரரையின் மன்னனை எல்லோரும் காண அழித்துப்போடு.

சிவனின் நாகம் பெரிதா இல்லை நாங்கள் அனுப்பிய இந்த நாகம் பெரிதா எனப் பார்த்துவிடலாம். எங்கள் பலத்தினை காட்டும்படி நீ மன்னனை அழித்து ஆலவாய் நாதன் ஆலயத்தையும் அழித்துப்போடு” எனச் சொல்லி அனுப்பினார்கள்.

அரக்கன் பிரமாண்டமான நாகமாய் உருமாறினான். வைகை நதி ஒரு நாகமாய் உருமாறியது போல் மாறினான், அந்தத் தலை ஒரு மலை போல் இருந்தது. உடல் அசையும் போது தரை அதிர்ந்தது. அந்த வால் பெரிய மரங்களையே எளிதாகப் பிடுங்கி வீசிற்று.

ஆதிசேஷன் பூமிக்கு வந்தது போல் அது பெரும் அச்சம் காட்டிற்று. காண்போர் எல்லாரும் நடுங்கிப் போனார்கள், சமணர்கள் புன்னகைத்தார்கள்.

வானில் தலை தூக்கி நின்ற அதன் மூச்சிலே அக்னி கொதித்தது, அந்த ஜூவாலையில் உயர்ந்த மரங்களின் மேற்பாகம் கருகின, பறவைகள் அலறியபடி காத தூரம் பறந்தன‌.

பெரும் ஆவேசத்துடன் கண்களில் எரிமலை போல் ஆத்திரம் தெரிய அந்நாகம் படமெடுத்து நின்றது. வானமே முறமானது போல் நின்றது.

சமணர்கள் உத்தரவு கொடுத்ததும் அது மதுரை நோக்கிப் பாய்ந்தது. செல்லுமிடமெல்லாம் பெரும் அழிவுகள் உண்டாயின. அது நகர்ந்த தடம் ஒரு பெரிய கால்வாய் போல் உருவாகும்படி பதிந்தது, அந்த அக்னி மூச்சிலே எல்லாம் கருகின‌.

மக்கள் அலறினார்கள்; காவல்காரர்களால் அதை அடக்க முடியவில்லை; பொதுவாக எல்லா நாகங்களும் மந்திரங்களுக்கும் வழிபாடுகளுக்கும் கட்டுப்படும்; நாகத்தை அடக்கும் வித்தகர்களாலும் மந்திரம் கற்றவர்களாலும் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

முன்னால் வந்து மந்திரம் சொன்னவர்களெல்லாம் அதன் அக்னியில் அழிந்து போனார்களே தவிர நாகத்தை ஒன்று செய்யமுடியவில்லை.

இதனால் இது வேறுமாதிரியான நாகம் என்பதை அறிந்தவர்கள் என்ன செய்வது என அறியாமல் திகைத்தார்கள். எதிர்ப்பட்ட யானைகளையே தன் வாலால் சுழற்றி அடிக்கும் நாகத்தை யார் என்ன செய்துவிடமுடியும்.

நாகம் மதுரை நோக்கிச் செல்வதை அவதானித்தவர்கள் மன்னனிடம் விஷயத்தைச் சொன்னார்கள். நடந்து கொண்டிருப்பதை கேள்விப்பட்ட மன்னன் அப்படியே அமர்ந்து யோசித்தான்.

இது சமணர்கள் முன்பு ஏவிய கொடிய யானை போன்றது, மீண்டும் சமணர்கள் தங்கள் தொல்லையினை ஆரம்பித்துவிட்டார்கள் என கலங்கியவன் நேரே ஆலவாயன் சன்னதிக்குச் சென்றான்.

சென்றவன் மனமுருக பிரார்த்தித்தான்.

“எம்பெருமானே! முன்பு சமணர் ஏவிவிட்ட யானைபோல இம்முறை ஒரு நாகம் வந்திருக்கின்றது, மதுரையினை நோக்கி அது வேகமாக வருகின்றது.

மக்கள் அஞ்சி நடுங்குகின்றார்கள். மன்னனாக மக்களை காப்பது என் கடமை என்பதால் நான் செல்கின்றேன், ஒரு நாட்டுக்கு வரும் நல்லதும் கெட்டதும் மன்னனின் வாழ்வைப் பொறுத்தது.

மன்னன் சரியாக நல்லவழியில் இருந்தால் நாட்டை நன்மைகள் தேடி வரும், மன்னன் சரியில்லை என்றால் ஆபத்தும் சாபமும் கஷ்டமும் தேடிவரும்.

இங்கு எது நடந்தாலும் அது மன்னனைத்தான் சாரும்.

நானோ உன்னைத் தவிர ஏதும் அறியாதவன், உன் வழி ஒன்றையே அறிந்து அதன்படி நிற்பவன். இப்போது வரும் நாகம் என்ன சோதனையோ தெரியவில்லை, உம்மேல் பாரத்தை இட்டு நான் அதனை அழிக்கச் செல்கின்றேன். இனி நீயே எம்முடன் இருந்து காத்துவரவேண்டும்” என உருக்கமாக வேண்டினான்.

அவனுக்கு அதிக அவகாசமில்லை, நாகம் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதனால் அவன் சிவனிடம் உருக்கமாக வேண்டிக்கொண்டு தன் வில்லையும் பாணங்களையும் சிவன் முன்னால் வைத்து வணங்கிவிட்டு குதிரை ஏறினான்.

மேற்குவாசல் வழியாக வேகமாகச் சென்றவன் எதிரே கண்ட நாகத்தைக் கண்டதும் மிரண்டான், வாழ்நாளில் யாருமே பார்க்கமுடியாத நாகம் அது.

பனை உயரத்தில் மலையினை குடை பிடித்தல் போன்றபடி படமெடுத்து அது நின்றது, உடலெல்லாம் வளைந்த பெருமரம் போல் இருந்தது.

மன்னன் தன் சேனைகளுடன் அதனை எதிர்த்தான். அம்புகளை மழை போல் அதன் படம் நோக்கிப் பொழிந்தார்கள், ஈட்டிகளை ஏவினார்கள்.

ஆனால், அதெல்லாம் அந்த நாகத்தை தொட்டுக் கூட பார்க்கவில்லை. தன்னைச் சிலிர்த்து மேல் எழும்பிய நாகத்தில் எல்லாமே ஒட்டிக் கொண்டன, ஊசிபோல் குத்தி நின்றது, அது உடலை சிலிர்த்ததும் எல்லாமே விழுந்தன‌.

அது தொடர்ந்து முன்னேறி வந்தது.

பாண்டிய சேனைகள் அதை விடாமல் தாக்கின. அம்புகளும் ஈட்டிகளும் பலனற்றுப் போன நிலையில் நெருப்பு பந்துகள் வீசப்பட்டன‌.

அதையும் நாகம் தாண்டியது.
மன்னன் குதிரைப் படை, யானைப் படை, தேர் படைகளை எல்லாம் தன் வாலால் சுருட்டி வீசி எழுந்து நின்றது நாகம்.

பெரும் பள்ளம் இடப்பட்டு நெருப்பு சுவர் எழுப்பப்பட்டது. அதுதான் கடைசி ஆயுதம் ஆனாலும் நாகம் மிக எளிதாக அதையும் ஊடுருவிற்று.

இனி ஏதும் செய்ய முடியாது எனும் நிலையில் மன்னன் சோர்ந்தான். நாகமோ மன்னனை விழுங்கும் வேகத்தில் குறிவைத்து வந்தது.

யானையினைக் கட்டும் சங்கிலிகளைக் கொண்டும் அதனைக் கட்டமுடியவில்லை. அது அதையெல்லாம் உடைத்துப் போட்டு முன் வந்தது.

எல்லா ஆயுதமும் பலனற்ற நிலையில் மன்னன் சோர்ந்து அமர்ந்தான், “சொக்கநாதனே இனி என்ன செய்வோம்?” என நொந்து அமர்ந்துவிட்டான்.

யாருக்கும் என்ன செய்வது எனத் தெரியாத நிலையில் மன்னன் தன் அருகே ஒரு விசித்திரமான அம்பு கிடந்ததைக் கண்டான்.

அதன் நுனி பிறைநிலா போன்ற அமைப்பில் இருந்தது, மன்னனுக்கு சிவன் தலையில் இருக்கும் நிலவு நினைவுக்கு வந்தது.

“சொக்கநாதா…” என நம்பிக்கை கொண்டவன் அந்த பிறைநிலா முனை கொண்ட அம்பினைப் பாம்பின் மேல் குறிபார்த்து செலுத்தினான்.

பாம்பை நெருங்க நெருங்க அம்பு பெரிதானது, கொஞ்சம் கொஞ்சமாக அது வளர்ந்து பிரமாண்டமானது, அந்த அம்பு பாம்பை இரு துண்டாக வெட்டிப் போட்டது.

எல்லோரும் ஆர்ப்பரித்தார்கள். அந்தக் கொடிய பாம்பு இரண்டாக வெட்டுப்பட்டுக் கிடந்தது.

ஆனாலும், அந்த நாகம் அடங்கவில்லை.‌ தன் முதல் பாதியினைக் கொண்டு எழப்பார்த்தது முடியாமல் தடுமாறிய நாகம் தன் இறப்பை உணர்ந்து விஷத்தைக் காற்றில் கக்கிற்று.

அந்தக் கொடிய விஷம் காற்றில் கலந்தது. வெம்மையும் விஷமும் கொண்ட காற்று பெரும் துன்பம் கொடுத்தது. கால்நடைகள் மடியத் தொடங்கின. மக்கள் தடுமாறினார்கள்.

நாகத்தை வீழ்த்தினாலும் அதன் நச்சு மக்களை பாதித்து எல்லோரையும் கொன்றுவிடும் எனும் பெரும் அச்சம் எழுந்த நிலையில், குருஷேத்திரப் போரின் கடைசியில் அஸ்வத்தாமன் செய்தது போல் நாகம் சாகும் போது செய்த பெரும் கொடுமை எல்லோரையும் உறையவைத்தது.

மன்னன் மறுபடியும் ஆலவாயன் சன்னதிக்கு சென்று மன்றாடினான்.

“பெருமானே! அந்த நாகம் உம் அருளால் வீழ்ந்தாலும் கொடிய விஷம் காற்றில் பரவி எல்லோரையும் கொல்லத் தொடங்குகின்றது, அன்று பாற்கடலின் நஞ்சை உண்டு எல்லோரையும் காத்த எம்பெருமானே, இந்தப் பெரும் துயரில் நின்று எங்களைக் காப்பாயாக” என மன்றாடினான்.

சிவன் அவன் கோரிக்கையினை ஏற்றுத் தன் தலையில் இருந்த நிலவில் இருந்து சில துளி அமிர்தம் பெய்ய சித்தம் கொண்டார், அதன்படி காற்றுத் தூய்மையாகி நஞ்சு நீங்கிற்று.

மக்கள் எல்லோரும் அரசன் தலைமையில் தங்களைக் காத்த ஆலவாயனைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

இதுதான் அரவம் கொன்ற படலம். சிவன் மதுரையினை அழிக்கவந்த நாகத்தை கொன்றுப்போட்டு அதன் விஷத்தில் இருந்தும் மக்களைக் காத்த படலம்.

இந்தத் திருவிளையாடல் ஆழ்ந்த ஞானம் ஒன்றைப் போதிக்கின்றது.

அதாவது, சில நேரம் மாயைகள் கூட உண்மை போலவே வரும். சில மாய ஆசைகள் நியாயமான ஆசைகள் போல் வந்து நம்மை வீழ்த்தும். அந்த மாயநாகத்திடம் இருந்து சிவனருளில் தப்ப வேண்டும் என்பதே இந்தத் திருவிளையாடலின் போதனை.

அந்த மதுரை நாகம் ஒன்றால் எல்லையிட்டு அடையாளம் காட்டப்பட்டது, சிவன் கழுத்தில் இருக்கும் நாகமே வழிகாட்டிய இடம் அது.

அப்படியான மதுரைக்கு நாக வடிவிலே ஆபத்து வந்தது. அடிப்படையில் அங்கு வாழவைத்ததும் நாகம்; அழிக்க வந்ததும் நாகம்.

அங்கே சிவன் வந்து நாகத்தை அழித்தார்.

இப்படித்தான் வாழ்வுக்கான அவசியம் என வரும் ஆசைகள் நியாயமான ஆசைகள் போல் வந்து நம்மை மாயையில் வீழ்த்திக் கொன்றுவிடும்.

சரியான வகையில் செல்வதாக சென்று நம்மை அறியாமலே மாயையில் வீழ்ந்துவிடுவோம்.

மாயைகள் நியாயமான ஆசை போல் கடமை போல் நம்மை ஆட்கொள்ளும் அப்படியே அழித்துவிடும்.

இந்த ஆசைகள் அடிமனதில் நாகம்போல் பதுங்கும், திடீரென சட்டென விழிக்கும் பெரும் தீங்கினை விளைவிக்கும்.

இந்த மாயைகளில் இருந்து தப்பும் வரத்தை சிவனேதான் அருள்வார். அவரை அண்டினால் இப்படியான மாய நாகங்கள், மாய ஆசைகளில் இருந்து விடுதலை ஆகலாம் என்பதைச் சொல்கின்றது திருவிளையாடல்.

இன்னும் ஒரு பெரும் தத்துவம் உண்டு.

ஒரு மாய ஆபத்து முறியடிக்கபட்டாலும் அதன் பக்க விளைவுகள் நிறைய உண்டு. ஒரு மாயையினை வீழ்த்தும் போது அது இன்னும் பல மாயைகளை உருவாக்கிவிட்டே செல்லும்.

சூரபத்மன் பல வடிவங்களில் மாறினான் என்பது அதுதான். அப்படி மாயைகளும் அழியும் போது இன்னும் சில வடிவங்களை ஆபத்துக்களாக தரும் .அங்கும் கவனமாக இருத்தல் வேண்டும்.

சுருக்கமாக இந்தத் திருவிளையாடல் போதிப்பது, என்றோ பாற்கடலில் எழுந்த விஷத்தை சிவன் குடித்தார் என்பது மட்டுமல்ல விஷயம், எப்போதெல்லாம் தன் அடியார்களுக்கு ஆபத்தோ அப்போதெல்லாம் சிவன் அந்த விஷத்தை தான் ஏற்றுக் கொள்கின்றார்.

எவன் சிவனைத் தேடி வருவானோ, யார் ஆன்மீகத்தில் முழுக்க கரைகின்றார்களோ, யாரை சிவன் ஆட்கொண்டாரோ அவர்களிடமிருந்து முதலில் கெட்டது அனைத்தும் அகற்றப்படும்.

ஒரு ஆத்மாவின் கெட்ட கர்மா அனைத்தும் சிவன் ஏற்றுக்கொள்கின்றார். எல்லாவித தீமைகளையும் அவர் ஏற்றுக்கொண்டு தன் அடியாரைக் காக்கின்றார். எதெல்லாம் கண்டு அஞ்சுகின்றோமோ எதெல்லாம் ஆபத்தோ அதை எல்லாம் சிவன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தன்னில் எடுத்துத் தன்னை அண்டியவர்களைப் பக்தர்களைக் காக்கின்றார் என்பதே இங்குப் போதிக்கபடும் நீதி.

உங்கள் பிரச்சினை எதுவாகவும் இருக்கட்டும், நீங்கள் அறிந்தது அல்லது அறியாதது என எதுவாகவும் இருக்கட்டும் அது பற்றியெல்லாம் கவலையின்றி உங்கள் வேண்டுதலை சிவன் முன்னால் மதுரை சொக்கநாதன் முன்னால் வையுங்கள்.

எதைக் கண்டு அஞ்சுவீர்களோ அந்தக் கண்ணுக்கு தெரியும் ஆபத்து அகற்றப்படும். உங்கள் கண்ணுக்கு தெரியாத மாய ஆபத்துக்களும் சிவனருளால் அகற்றப்படும். அறியா ஆபத்தையும் சிவன் தன்னில் எடுத்து உங்களைக் காப்பார். எல்லா வகையிலும் அவரை அண்டினால் முழுக்காவல் உண்டு. இது சத்தியம்.