திருவிளையாடல் புராணம் 38 : நக்கீரனுக்கு தமிழ் இலக்கணம் உபதேசித்த படலம்.
திருவிளையாடல் புராணம் 38 : நக்கீரனுக்கு தமிழ் இலக்கணம் உபதேசித்த படலம்.
நக்கீரனைக் கொண்டு சிவபெருமான் செய்த திருவிளையாடல் மூன்று கட்டமாக வருகின்றது. முதலில், தருமிக்காக அவனுடன் வாதிட்டு அதன் முடிவில் அவரைப் பொற்றாமைரைக் குளத்தில் தள்ளியது. இரண்டாவது, பொற்றாமரைக் குளத்தில் இருந்து அவரை மீட்டருளியது. மூன்றாவது, அவருக்கு பெரும் இலக்கண ஞானம், தமிழ் அறிவு கொடுத்தது.
அதுதான் இந்தத் திருவிளையாடல்.
நக்கீரனைச் சிவபெருமான் சோதித்து பின் ஆச்சரியமாகக் காத்து மீட்டபின் வழக்கம் போல அவர் தமிழசங்கத்தில் பிரதான புலவராய் இருந்தார். நாள் தோறும் பொற்றாமரைக் குளத்தில் நீராடி சொக்கனையும் அன்னையினையும் பணிந்து வந்தார்.
அவரை நன்கு அறிந்திருந்த சிவன் ஒருமுறை அவர் வழிபட்டுச் செல்லும் போது தேவியிடம் சொன்னார்.
“தேவி, கீரன் நல்ல புலவன். ஆனால். அவனிடம் தமிழ் இலக்கணக் குறைபாடு உள்ளதை அறிவாய் அல்லவா, இன்னும் அவன் தமிழ் மொழியின் இலக்கணம் அறிதல் வேண்டும், இலக்கணமின்றி எப்படி ஒருவன் மொழியினைச் சரியாக பயன்படுத்தமுடியும்?
அதனால் யாரைக் கொண்டு அவனுக்குத் தமிழ் இலக்கணம் போதிக்கலாம் என யோசிக்கின்றேன்” என்றார்.
அன்னை சொன்னாள். “பிரபு, தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை, நமது திருமணத்தின் போது கயிலாயத்தில் எல்லாத் தேவர்களும் இமயத்தில் குவிந்துவிட தென் திசை மேலோங்கி வடதிசை தாழ்ந்தது.
அந்நேரம் இந்த நிலத்தை சமப்படுத்த மொத்த தேவர்களுக்கும் நிகரான ஒருவரை தென்முனைக்கு அனுப்ப நீங்கள் தேடியபோது அகத்தியனைக் கண்டெடுத்தீர்கள்.
அகத்தியனோ தெற்கே செல்லத் தயங்கினான். காரணம், அது தமிழ்மொழி பேசும் பகுதி அவனோ தமிழை அறியாதவன் என்பதால் தயங்கினான். சுவாமி நீர்தான் அவனுக்குத் தமிழ் இலக்கணம் போதித்துத் தெற்கே அனுப்பினீர், இப்போது அவன் பொதிகை மலையில் தவம் செய்து கொண்டிருக்கின்றான். தன் சீடர்களுக்கும் தமிழ் இலக்கணம் பொதித்துக் கொண்டிருக்கின்றான்.
அவனைக் கொண்டு கீரனுக்குத் தமிழ் இலக்கணம் போதிக்கலாம் என்பது என் அபிப்ராயம்” என்றாள்.
சிவன் புன்னகைத்தார். காரணம், அவரின் திட்டம் அதுவாகவே இருந்தது. அதனை தேவி வாயால் சொல்ல வைத்தார்.
சிவன் அகத்தியரை மனதால் நினைத்து பணியிட அதனை மனதால் உணர்ந்த அகத்திய முனி தன் மனைவி லோப முத்திரையுடன் மதுரைக்கே வந்தார்.
வந்தவர் பொற்றாமரைக் குளத்தில் நீராடி அன்னையினை, அப்பனை பணிந்து வணங்கி பின் நக்கீரரைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னார்.
நக்கீரன் சிவபெருமான் தன்மேல் கொண்ட அன்பை நினைந்து அப்படியே உருகிப்போனார். உறைந்து போனார். பின் சிவன் சன்னதியில் சென்று “எம்பெருமானே, என்னை நீர் உயிர்பிழைக்க வைத்ததுமல்லாமல் என் பாடல் நன்றாய் வருவதற்கு என் புலமையினையும் செப்பனிட வழி செய்தீரோ” என வணங்கி ஆசிபெற்று அகத்தியரிடம் திரும்பினார்.
அகத்தியர் அவருக்குத் தமிழ் இலக்கணம் சொல்லிக் கொடுக்க தொடங்கினார், நக்கீரன் அதை கவனமாகக் கற்றார்.
தமிழ் இலக்கணத்தில் ஒவ்வொரு புள்ளியும் அவருக்குப் புரிய ஆரம்பித்தது. எல்லாமும் கற்ற நக்கீரர் தான் எழுதிய முந்தைய நூல்களைப் படித்துப் பார்த்து நாணினார், அவ்வளவு பிழைகள் இருந்தன.
இவற்றை வைத்தா கர்வம் கொண்டிருந்தோம், இதைக் கொண்டா இறையனாரிடமே கொக்கரித்தோம் என்றெல்லாம் தலை குனிந்த நக்கீரனின் கர்வம் ஒழிந்தது. பின் தன் பாடலின் பிழைகளைத் தானே சரிசெய்தார் நக்கீரர்.
அதன் பின் மிக மிகச் சுத்தமான இலக்கணத்துடன் அவர் அற்புதமான பாடல்களைப் பிழையின்றிக் கொடுத்தார்.
நக்கீரனின் தமிழ் மிகச் சரியானதை அடுத்து, அவர் இலக்கணப் பிழையின்றி தமிழில் பாடுவதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தார் சிவன்.
இதை அடுத்தே தன் சீடன் தொல்காப்பியன் மூலம் தமிழ் இலக்கணத்தை எழுதி வைத்தார் அகத்தியர்.
நடந்ததைக் கண்டு தேவிக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. அதை சிவனிடமே கேட்டாள்
“ஐயனே, நீர் எல்லாம் அறிந்தவர், தமிழ் இலக்கணத்தை நீர்தான் அகத்தியனுக்கே போதித்தீர். அப்படியான நிலையில் அகத்தியனுக்கு தாங்களே போதித்திருக்கலாமே? ஏன் அகத்தியனை அனுப்பினீர்கள்?” என்றார்.
புன்னகைத்த சிவன் சொன்னார், “தேவி எனக்கென சில விதிகள் உண்டு, அதன்படி என்னை முழு மனதோடு எதிர்பார்ப்பின்றி வழிபடுவோர், செல்வங்களை ஏழைகளுக்கு அள்ளிக் கொடுப்போர், பொறாமை இல்லாதவர், சொன்ன சொல் தவறாதவர், குற்றமற்ற உள்ளத்தை கொண்டவர்க்கே நேரடியாக என்னால் உபதேசிக்க முடியும்.
அகத்தியன் குறைகாண முடியாதவன் பெரும் யோகி அதனால் அவனுக்கு நானே போதித்தேன். ஆனால், கீரன் அப்படி அல்ல, அவனிடம் பொறாமை உள்ளிட்ட பல குணங்கள் உண்டு அதனாலே நான் அகத்தியனை வரவழைத்தேன் என்றார்.
தேவி புன்னகைத்து சந்தேகம் நீங்கினாள்.
நக்கீரன் தான் பெற்ற இலக்கணத்தை எல்லாப் புலவர்க்கும் சொல்லிக்கொடுத்தான், அதனால் அந்தத் தமிழ்சபை பிழையில்லாப் பாடல்களை கொடுத்தது, நக்கீரனும் தலைமை புலவராகத் தகுதியோடும் புகழோடும் விளங்கினான்.
இதுதான் நக்கீரனுக்கு தமிழ் இல்க்கணம் போதித்த படலம், இது நிறைய தத்துவங்களைப் போதிக்கின்றது.
முதலில், உணரவேண்டிய விஷயம் தமிழ் அகத்தியனுக்கு முன்பே இருந்தது. அதை உருவாக்கியவர் சிவபெருமானே, சிவனே தமிழை உருவாக்கி தென்னக மக்களை பேசவும் வைத்தார், தமிழரின் மூலம் சிவமே.
ஆனால், நாளாவட்டத்தில் அதன் இலக்கண மரபுகளை பின்பற்ற யாருமில்லை, இலக்கணமின்றி பிழையான தமிழும் முறையற்ற வகையிலும் அவர்கள் பேச தொடங்கியபோது தன் சீடன் அகத்தியனைத் தென்னகம் அனுப்பினார்.
அந்நேரம் தமிழ் பேசும் மக்கள் மேல் சிவன் ஒரு அதிருப்தியில் இருந்திருக்கின்றார், கயிலாயம் தாழ்ந்து தென்முனை உயர்ந்தது என்பது உலக லௌகீக காட்சி மட்டும் அல்ல, தென்முனை மக்கள் கர்வத்திலும் ஏதோ ஒரு மமதையிலும் மேலிருந்தது நிஜம்.
அதனை உடைக்க அகத்தியரைச் சிவன் அனுப்பினார். அகத்தியர் மங்கோலிய சீன இனத்தவர் இன்றைய திபெத் பக்கம் இருந்தவர், அவரின் குள்ள உருவமும் ஒடுங்கிய கண்களும், ஆடு போன்ற தாடியும் அவர் அந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதைச் சொல்லும்.
அவருக்கு முதலில் தமிழே தெரியாது, சிவபெருமானே அவருக்குத் தமிழ் போதித்து அனுப்பினார் என்பது இங்கு சொல்லப்படும் உண்மை.
அடுத்து பல விஷயங்கள் நுணுக்கமானவை.
அதாவது, தமிழ் சிவன் உருவாக்கிய மொழி, அந்த மொழி சரியாகப் பேசபட்டால் சிவன் மகிழ்கின்றார், அது சரியாக உச்சரிக்கப்படும் இடத்தில் சிவனருள் உண்டு.
இதனால்தான் அக்கால தமிழகம் எல்லா வகையிலும் செழிப்புற்று விளங்கியது. எப்போது தமிழ் சரியாக உச்சரிக்கப்படவில்லை எழுதப்படவில்லைக் என்றால் சிவனின் கோபம் பெருகிவிடும் அதன் பின் அந்த இனம் பெரும் சங்கடங்களைச் சந்திக்கும்.
தமிழ்மொழியினை அழகுற பேசுவது எழுதுவதுமே இறைவன் வரமருளும் விஷயம். இதனாலே எக்காலமும் தமிழ்மேல் பற்றுக்கொண்டோர் அன்று புலவர்களாக பெருவாழ்வு வாழ்ந்தார்கள், மன்னனாக வாழ்ந்தார்கள்.
நம் கண்முன்னும் தமிழைக் கொண்டாடியவர்கள் கொண்டாடுபவர்கள் பெரும் வாழ்வு வாழ்வதை அவதானிக்க முடியும். தமிழ் எங்கெல்லாம் உயர்த்திப்பிடிக்கபட்டு பிழையின்றி பேசப்படுமோ அவர்கள் வாழும் காலத்திலும் காலம் தாண்டியும் நிலைப்பார்கள்.
காரணம், அது சிவன் உருவாக்கிய மொழி. ஒரு வகையான மந்திர மொழி. அம்மொழி பேசும்போது ஏற்படும் அதிர்வுகள் ஒருவித யோக பலனை கொடுக்கும், சிவன் உருவாக்கிய மொழியின் சக்தி அது.
அப்படியான தமிழை நல்ல உச்சரிப்புடன் அதற்குரிய விதிகளுடன் பேசுதல் அவசியம், அது சிவனருளைப் பெற்றுதரும்.
சிவன் யார்மேல் கருணையாய் இருக்கின்றாரோ அவர்களை உரிய நேரத்தில் நல்ல குருவினை அனுப்பி ஆட்கொண்டு நல்லபடியாக வழிநடத்துவார் என்பதை இந்த காட்சி போதிக்கின்றது.
அடுத்து இந்தத் திருவிளையாடல் சொல்லும் போதனை இலக்கணம் எனும் விதி எல்லா வகையிலும் அவசியம் என்பது.
இந்த பிரபஞ்சமும் அதன் படைப்புக்களும் ஒரு விதிக்கும் இலக்கணத்துக்கும் கட்டுப்பட்டவை. இங்கு எல்லாமே ஒரு விதியில் இயங்குகின்றன.
அதன் அமைவு இயக்க வடிவம் என எல்லாமே ஒரு அடிப்படை விதியில் உண்டு. அந்த விதிதான் அழகு. அந்த விதிதான் அதனதன் தர்மத்தை செய்யவைக்கும். அந்த விதிதான் சரியான குழப்பமில்லா இயக்கத்தையும் கொடுக்கும்.
அது பிரபஞ்ச நட்சத்திரம் சூரியன் சந்திரன் முதல் எல்லாவற்றுக்கும் பொருந்தும், பூமியின் இயக்கத்துக்கும் பொருந்தும்.
பூமியில் மழை முதல் நிலம் வரை எல்லாமே ஒரு அழகான விதியில் இயங்குகின்றன; அதில்தான் ஆறுகள் ஓடுகின்றன; நிலங்கள் செழிக்கின்றன. இன்னும் என்னவெல்லாமோ நடக்கின்றன.
அப்படி இலக்கணமே விதியாகின்றது. அந்த விதிதான் முறையான இயக்கத்துக்கு வழி செய்கின்றது.
இயற்கையில் இறைவன் படைத்த படைப்பெல்லாம் அவ்வளவுக்கு இலக்கணமானவை, மானிட உடலும் அப்படி இலக்கணத்தினை உடையது.
எல்லாமே ஒரு இலக்கணம் என்பதால் மானுடர்க்கும் சில விதிகள் உருவானது. அவை சட்டம் ஒழுங்கு எனச் சமூகத்தில் அடையாளமிடப்பட்டது.
இந்த அடிப்படையில்தான் லௌகீக ஆன்மீக வாழ்வும் அமைந்திருக்கின்றது.
இந்தப் பூமியில் ஒவ்வொருவனுக்கும் ஒரு தொழில் உண்டு. அது அடிப்படை இந்த வாழ்வில் அது முக்கியம். ஆனால், ஒவ்வொரு தொழிலுக்கும் அது உற்பத்தி என்றாலும் வியாபாரம் என்றாலும் சிந்தனை என்றாலும் என்ன வேலை என்றாலும் ஒரு ஒழுங்கு அவசியம், ஒரு இலக்கணம் அவசியம்.
இதனைச் சரியாக உணர்ந்தவர்களே முத்திரை இட்டார்கள், தொழிலில் ஒவ்வொருவருக்கும் ஒரு அடிப்படை அறிவும் புரிதலும் அவசியம்.
இந்தத் திருவிளையாடல் என்பது யாரோ ஒரு புலவன் அவனுக்குத் தமிழ் இலக்கணம் தெரியவில்லை அதைச் சிவன் சொல்லிக்கொடுத்தார். உரிய குரு மூலம் சொல்லிக் கொடுத்தார் என்பதோடு முடியும் விஷயம் அல்ல.
புலவனின் தொழில் பாடுவது, அடிப்படையே சரியாக தெரியாதவன் எப்படிப் பாடுவான் என சிவன் தானே வந்து வரமருளிய கருணையினைச் சொல்வது.
ஆம். ஒவ்வொரு மானுடனுக்கும் ஒரு தொழில் அவசியம். அந்தத் தொழிலில் அடிப்படை விஷயம் புரிதலும் நல்ல தேர்ச்சியும் அவசியம், அடிப்படை ஞானம் அவசியம்.
சிவனை வணங்கினால் அந்த வரத்தை இறைவன் தருவார். சிவனைப் பணிந்தால் அந்தத் தொழிலும் வாழ்வும் சிறக்கும் என்பது இங்குச் சொல்லப்படும் போதனை.
நீங்கள் யாராகவும் இருங்கள், உங்கள் தொழிலில் ஆயிரம் சிக்கல் இருக்கலாம். தொட்டது துலங்காமல் இருக்கலாம், பெரும் நஷ்டம் தொழிலில் இருக்கலாம்.
அந்தத் தொழில் உற்பத்தி, வியாபாரம், கலை, அலுவலகம், இல்லை உத்தியோகம் என எதுவாகவும் இருக்கலாம், எதுவும் உங்களுக்கு வாய்க்கா நிலையில் இருக்கலாம்.
அப்படியான நிலையில் நீங்கள் சிக்கிவாடினால் எதிர்காலம் தெரியாமல் கடும் நஷ்டத்தில் தொட்டதெல்லாம் துலங்காமல் தவித்தால் இந்த ஆலவாய் சிவனிடம் வந்து பணியுங்கள்.
எது உங்கள் தொழிலோ அதன் அடிப்படை ஞானமும் அறிவும் உங்களுக்குப் போதிக்கபடும். சிவன் அந்த வரத்தை அருள்வார். அடிப்படை இலக்கண விதிகள் அறியப்படும். எல்லாத் தொழிலும் சிறக்கும்.
ஆலவாய் சிவன் அந்த வரத்தை அருள்வார்.
மிக மிகக் கவனிக்கவேண்டிய வார்த்தைகள் சிவன் பார்வதியிடம் சொன்ன அந்த வார்த்தைகள்.
“என்னை முழு மனதோடு எதிர்பார்ப்பின்றி வழிபடுவோர், செல்வங்களை ஏழைகளுக்கு அள்ளிக் கொடுப்போர், பொறாமை இல்லாதவர், சொன்ன சொல் தவறாதவர், குற்றமற்ற உள்ளத்தைக் கொண்டவர்க்கே நேரடியாக என்னால் உபதேசிக்க முடியும்”
ஆம். சிவனை வழிபடும் போது மனதில் பல சுத்தங்கள் முக்கியம். அங்கே சிவனை அன்பால் வழிபட வேண்டுமே அன்றி பொருளுக்கும் பணத்துக்கும் புகழுக்குமாய் எதையோ எதிர்பார்த்து வணங்குதல் நலல்தல்ல, சிவன் வியாபாரி அல்ல பேரம் பேசி வரம் வாங்க, அவர் மகாதேவன்.
இந்தப் பூமிக்கு ஒவ்வொருவரும் கர்மம் கழிக்க வந்திருகின்றோம். அந்தக் கர்மம் கழிக்க என்ன பலமோ அதைச் சிவனே தரும்போது, நமக்கு என்ன வேண்டும் என அவருக்குத் தெரிந்திருக்கும் போது அதை மீறி கேட்பது பேராசை.
பேராசை சிவனுக்குப் பிடிக்காது. அகங்காரம் கொண்டோர், தான தர்ம்ம செய்யாச் சுயநலக்காரர், சத்தியம் தவறுவோர், வஞ்சகமும் பொறாமையும் கொண்ட மனம் இவை எல்லாம் சிவனுக்குப் பிடிக்காது.
எனினும், பக்திக்குப் கட்டுப்படுபவர் சிவன், இவை எல்லாம் ஒருவன் கொண்டிருந்து தன்னிடம் வந்தாலும் கருணாமூர்த்தியான அவர் அந்நிலையிலும் அருள் பாலிக்க விரும்புவார், யார் மூலமாவது அதைச் செய்வார்.
ஆனால் குற்றமற்ற, ஆசைகளற்ற நெஞ்சத்துடன் அவரைச் சரணடைந்தால் அவரே நேரடியாக வழிநடத்துவார்.
இங்கே அகத்தியர், நக்கீரன் என இருவர் காட்டப்படுகின்றார்கள். இருவருமே சிவபக்தர்கள். இருவருமே சிவனை வணங்குபவர்கள்.
ஆனால், அகத்தியருக்குச் சிவனே நேரடியாக போதித்தார். காரணம், அவர் எந்த எதிர்பார்ப்புமின்றி சிவனிடம் முழுக்கச் சரணடைந்தார், தன்னை சிவனின் கருவியாக்க தன்னையே தந்தார்.
அவருக்குச் சிவன் நேரடியாகப் போதித்தார்.
ஆனால், நக்கீரன் அப்படி அல்ல. அவருக்கு எல்லாமே தான் எனும் அகம்பாவம் இருந்தது, தான் பெரும் கவிஞன் தான் சொல்வதே சரி எனும் கர்வம் இருந்தது, மற்ற புலவர்கள் மேல் பொறாமையும் இருந்தது.
அதனால் சிவன் அவருக்கு நேரடியாக வரவில்லை. மாறாக, அகத்தியர் மூலம் சில விஷயங்களைக் கொடுத்தார். சில காரணங்களை முன்னிட்டு கொடுத்தார்.
இந்தத் திருவிளையாடல் போதிப்பது அதுதான். எல்லா அசுத்தங்களையும், எல்லா துர்குணங்களையும் அகற்றி சிவனிடம் சரணடைந்தால் உங்கள் குறைகள் எல்லாமும் நீக்கி உங்களுக்கு எந்த பொருளின் இலக்கணம் வேண்டுமோ அதைத் தந்து உங்களை உயர்த்துவார்.
உங்கள் வாழ்வினையே அவர் மாற்றித்தருவார்.
அப்படியே முக்தித் தேடி அலையும் ஆன்மீக வாழ்வுக்கும் சில இலக்கணம் உண்ட. முழுமையான மனதுடன் மதுரை ஆலவாய் சிவனைச் சரணடைந்தால் அவரே உங்களுக்கு அந்த இலக்கணங்களைச் சொல்லித்தந்து முக்தி பேறும் அளிப்பார்.
முக்கியமாக நினைவில் வைக்க வேண்டியது தமிழ்க்கடவுள் முருகன் என்பதுமட்டுமல்ல, தமிழை உருவாக்கித் தந்ததும் அதற்கு அகத்தியனைக் கொண்டு இலக்கணம் தந்ததும் சிவபெருமானே.
தமிழ் என்பது மந்திரமொழி. அதனைச் சரியாகப் கற்பதும் கற்பிப்பதும், அந்த மொழியினைச் சரியாக உச்சரிப்பதும் சிவதொண்டு, தமிழ் வளர்ப்பது என்பது சிவதொண்டு.
இந்த மண் தமிழ்வளர்த்தது என்றால் அதை மொழி என்பதால் மட்டும் வளர்க்கவில்லை, அம்மொழி சிவனின் மொழி என்பதால் அது சிவதொண்டுமானது.
இதனாலே உலகில் எந்த மொழியில் இல்லாத அளவு நீதி நூல்களும், வேத நூல்களும், இலக்கியமும், இன்னும் தேவாரம் திருவாசகம் போன்றவையெல்லாம் தமிழில்தான் வந்தன.
தமிழை வளர்க்கவேண்டியது ஒவ்வொரு சிவனடியாரின் கடமை. அது மொழிக்காக அல்ல. அந்த மொழியில் சிவனைப் போற்றி நிற்கும் பல பாடல்களை அழியா காவியங்களை உருக்கமாக எழுதிவைக்க, சிவபெருமை சொல்லி வைக்க.
சிவன் தந்த மொழியிலே சிவனைப் பாடுதல் என்பது சிவபெருமான் மகிழ்ந்து வரமருளும் வழிபாடு. இதனாலே சிவபெருமான் அகத்தியனை முருகனை இங்கு அனுப்பியதோடு மட்டுமல்லாமல் தானே தமிழகத்தின் பல இடங்களில் வந்து அமர்ந்தும் கொண்டார்.
இந்நேரம் ஒரு கேள்வி எழும். அப்படியானால் சமஸ்கிருதம் வேண்டாமா? தமிழில் அர்ச்சனைதான் சரியா என்பது.
ஆகமவிதி என்பது வேறு, இஷ்ட வழிபாடு என்பது வேறு. ஆகம விதிபஅபடிதான் சிவாலய பூஜைகள் நடக்க வேண்டும் என்பதால் அவை சமஸ்கிருத வேதமந்திரங்களுடனேதான் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், பக்தர்கள் வழிபாடும் கொண்டாட்டமும் போற்றுதலும் துதித்தலும் கட்டாயம் தமிழில்தான் நடத்தப்பட வேண்டும், தேவாரம் திருவாசகமெல்லாம் அப்படித்தான் உருவாயின.
தமிழை வளர்த்து சிவதொண்டு செய்வது ஒவ்வொரு இந்துவின் கடமை என்பதும் இங்கே போதிக்கப்படுகின்றது.
ஆலவாய் நாதனின் மதுரை ஆலயம் இதற்காகவே சங்கம் வைத்து தமிழை வளர்த்தது, சிவனே முன்னின்று அதனை வளர்த்தார்.
அந்த ஆலவாய் நாதனிடம் வந்து உங்கள் துயரமெல்லாம் கஷ்டமெல்லாம் சொல்லுங்கள். சிவனே வந்து உங்களுக்கு எதுபற்றிய இலக்கணம் வேண்டுமோ அதைத் தருவார். உங்கள் வாழ்வே மாறும், நல்ல இலக்கணப்படி எல்லாமே சரியாக அமையும், பெரும் வாழ்வும் புகழும் உங்களைத் தேடிவரும் முக்தியும் சமீபமாகும். இது சத்தியம்.