திருவிளையாடல் புராணம் 39 : மாய பசுவினை வதைத்த படலம்.
திருவிளையாடல் 39 : மாய பசுவினை வதைத்த படலம்.
பாண்டிய தேசத்தில் சைவத்தை ஒழித்து சமணத்தை நிலைநாட்டியே தீரவேண்டும், சைவம் கொஞ்சமும் அடையாளமின்றி அழியவேண்டும் என மிகுந்த ஆவேசத்தை மனதில் கொண்ட சமணர்கள் காஞ்சிபக்கம் இருந்து மீண்டும் மீண்டும் பாண்டியநாட்டுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.
அந்த முயற்சியில்தான் ஒருமுறை மாய யானை, இன்னொருமுறை நாகம் என ஏவி விட்டார்கள். அவர்களின் இலக்கு பாண்டிய தேசத்தை மன்னன் இல்லாத் தேசமாக திண்டாடவிட்டு அந்தக் குழப்பத்தில் மக்களைக் குழப்பலாம் புதிய ஆட்சியினைக் குழப்பலாம் எனும் திட்டமாய் இருந்தது.
மன்னன் அனந்தகுணபாண்டியன் சிறந்த சிவபக்தனாய் இருந்தான். அவன் வழி குடிகளும் மிகச் சிறந்த பக்தியினை ஆலவாயனிடம் கொண்டிருந்தார்கள். மன்னன் இருக்கும் வரை இந்த மக்களை மதம்மாற்ற முடியாது, பாண்டிய தேசத்தை தங்கள் வசப்படுத்த முடியாது என யோசித்துக் கொண்டே இருந்தது சமண தரப்பு.
அவர்களின் இரு முயற்சி தோற்ற நிலையில் அடுத்து எப்படி பெரும் ஆபத்தை பாண்டிய நாட்டுக்குக் கொடுக்கலாம் எனச் சிந்தித்தார்கள்.
அதன்படி பாம்பு, யானை என இரு மாய உருவங்கள் பலனற்ற நிலையில் மன்னனை எப்படி அழிப்பது எனச் சிந்தித்தவர்கள் இந்துக்களின் புனிதமான அடையாளம் ஒன்றால் ஊடுருவ எண்ணினார்கள். மிகப் புனிதமான ஒரு அடையாளத்தில் ஆபத்தை அனுப்பினால் மன்னன் குழம்பிவிடுவான் அதை தொடமாட்டான் என மிக நுணுக்கமாகத் திட்டமிட்டார்கள்.
அவ்வகையில் அவர்களுக்கு கிடைத்தது பசு வடிவம்.
பசு இந்துக்களுக்குப் புனிதமனாது. கோமாதா என வணங்கப்படுவது. இந்துக்கள் பாரம்பரியத்தில் தாய்க்கு கொடுக்கப்படும் அத்தனை மரியாதையும் அன்பும் பசுவுக்கும் உண்டு.
பசுவினை தொழுவதும் உணவு கொடுப்பதும் காப்பதும் பெரும் புண்ணியம், பசுவினை வணங்குதல் பெரும் புண்ணியம்.
இதனால் சமணர்கள் பசுவடிவில் ஒரு ஆபத்தை களமிறக்கிவிட எண்ணி பெரும் யாகம் செய்தார்கள். பிரமாண்டமாகச் செய்யபட்ட அந்த யாகத்தின் முடிவில் மாய பசுவடிவில் ஒரு துஷ்ட சக்தி எழுந்தது.
சமணர்கள் தங்கள் யாகம் பலித்ததில் மிக மிக மகிழ்ந்தார்கள். கடும் உற்சாகத்தோடு பசுவினை அனந்த பாண்டியனை நோக்கி மதுரைக்கு அனுப்பினார்கள்.
பிரமாண்ட உருவான அந்தப் பசு மதுரை நோக்கிச் சென்றது. சமணர்கள் அதன் பின்னால் சோழப்படைகளுடன் வழக்கம் போல் வந்து கொண்டிருந்தார்கள்.
மிக பெரிய குன்று போன்ற அந்த பசு மதுரை பக்கம் வரும் போது மக்கள் அரண்டு போனார்கள். அப்படி ஒரு பசுவினை அவர்கள் கண்டதில்லை, மிக அழகாக இருந்தது ஆனால் கண்களில் ஒரு ஆவேசமிருந்தது.
மிகப் பெரிய வடிவில் மடிநிறைய பாலுடன் அது வந்தது. மக்களை ஏமாற்ற அதன் நெற்றியில் குங்குமமெல்லாம் இடப்பட்டிருந்தது; கழுத்தில் மணி கிடந்தது; நெற்றியில் சங்கு இருந்தது.
இந்த வடிவத்தால் அதனை மக்கள் வணங்கினார்கள். ஆனால், அது பயிர்களை அழிப்பதும், கண்ட இடமெல்லாம் மிதித்துப் போடுவதும், எல்லாவற்றையும் நாசமாக்குவதாகவும் ஓடித் திரிந்தது.
மக்கள் அதைக் கட்டுப்படுத்த முயன்றார்கள். ஆனால், முடியவில்லை. கயிறுகளை வீசிப் பார்த்தார்கள் அது கயிற்றை அறுத்து ஓடியது.
தளைகள் இதர விஷயளங்களைக் காட்டி அதை இழுக்கப் பார்த்தார்கள். பசுக்கு பிடித்தமான அகத்தி கீரையெல்லாம் கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால், பசு அடங்கவில்லை.
அது பெரும் அட்டகாசம் செய்தது. பயிர்கள் நிலங்கள் என எல்லாமும் பாழாகிக் கொண்டிருந்தன.
விஷயம் மன்னனுக்குச் சென்று மன்னனின் சேனைகள் வந்தன. யானைகளைக் கட்டுப்படுத்தும் சங்கிலி எல்லாம் வீசியும் பசு அடங்கவில்லை, அருகில் வந்தவர்களைத் தூக்கிவீசிக் கொண்டிருந்தது.
மன்னனின் யானைப்படையின் பெரிய யானைகள் பசுமுன் செல்ல அஞ்சின, அவை திரும்பி ஓடின. இனி பலத்தால் பசுவினை அடக்கமுடியாது என்பது புரிந்து போயிற்று.
பசுக்களோடு வாழ்ந்து பசுவின் மனம் குணமெல்லாம் அறிந்த சமூகத்துக்கு வந்த பசு சாதாரணம் அல்ல என்பதும் தெரிந்தது.
அந்தணர்கள் வேதம் ஓதுபவர்கள் இதர சாஸ்திரம் அறிந்தவர்கள் வந்தார்கள், வந்தவர்கள் தங்கள் சக்தியால் இது மன்னனை குறிவைத்து வந்த பசு என்பதை அறிந்து கொண்டார்கள்.
ஆம். அதன் அட்டகாசமும் அப்படித்தான் இருந்தது. எல்லா அழிவுகளையும் செய்தால் தடுக்க சேனை வரும், அந்தச் சேனையினைத் துவம்சம் செய்தால் மன்னன் வருவான் என்பதால் அதன் இலக்கு மன்னனாக இருந்தான்.
நாடு பரப்பானது. பெரும் கேடு வந்திருப்பதாக மக்கள் அஞ்சினர். அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாச் சூழலில் மதுரை முழுக்க அல்லோலப்பட்டது.
மன்னனிடம் விஷயம் சொல்லப்பட்டது, அவன் குழம்பினான்.
இது பசு என்பதால் கொல்லவும் முடியாது அதே நேரம் இதை விட்டுவிட்டால் மதுரையினை அழித்துவிடும் தன்னையும் அழித்துவிடும் என அஞ்சியவன் நேரே ஆலவாய் நாதனிடம் சென்றான்.
ஆலவாய் நாதர் சன்னதியில் கலங்கினான், “எம் பெருமானே, யானையும் நாகமுமாக பெரும் பூதங்கள் வந்ததை நீ அழித்துப் போட்டது போல இந்தக் கொடிய பசுவுக்கும் நீயே முடிவு கட்டி எங்களைக் காப்பாற்று” எனக் கதறினான்.
அந்நேரம் “பாண்டியா அஞ்சாதே” எனும் குரல் கேட்டது. பாண்டியன் பெரும் நம்பிக்கையோடு பூஜைகள் செய்தான், ஆபத்து நீங்கும் வரை அங்கிருந்து அகலமாட்டேன் என முடிவோடு அமர்ந்தான்.
பசுவினை மனிதர்கள் கொல்லமுடியாது என்பதால் சிவன் தன் திருவிளையாடலைக் காட்டினார். அவர் உத்தரவு கொடுக்க நந்தி பெரும் காளையாய் உருக்கொண்டு எழுந்தது.
அந்நேரம் பசுவானது கோட்டையின் வாசல் பக்கம் வந்திருந்தது, கதவை உடைத்து உள்ளே வர முயன்றுகொண்டிருந்தது.
அந்தக் காளை ஆவேசமாய் பசுவினை நோக்கிச் சென்றது. இரண்டுக்கும் இடையே சண்டை தொடங்கியது. சண்டை உக்கிரமானது, நெடுநேரம் நடந்த சண்டையில் பசு காளைக்கு ஈடு கொடுத்து நின்றது.
பின் அந்த அற்புதம் நடந்தது.
காளை தன் உருவினைப் பெரிதாக்கியது, பசுவும் பெரிதாக்கியது. ஆனால், ஒரு கட்டத்தில் காளையின் பிரமாண்டத்துக்கு பசுவினால் வரமுடியவில்லை.
அந்தக் காளையின் கூரியக் கொம்பு, அழகான திமில், ஆடும் கழுத்து தசை, கூரிய முடி கொண்ட வால், வரிந்த மேனி அழகு எனக் கண்ட பசு மெல்ல சொக்கி மயங்கி நிற்க ஆரம்பித்தது.
அப்படித் தன்னிலை மயங்கி மோகத்தில் நின்ற பசுவினைக் காளை கொன்றுப் போட்டது, அதன் உடலில் இருந்த அசுரன் அழிந்து போனான்.
மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆலவாயன் சன்னதியில் பூஜையில் இருந்த மன்னனிடம் நடந்த அத்தனையும் சொல்லப்பட்டன, மன்னன் தங்களைக் காத்த சிவனுக்கு விழா எடுத்துக் கொண்டாடினான்.
இதுதான் மாயப்பசுவினை அழித்த திருவிளையாடல், இதன் சாட்சிகள் இன்றும் உண்டு.
பசு அழிந்ததும் தன் பிரமாண்ட ஸ்தூல உடலை உதறிய நந்தி சிவனிடம் திரும்பினார், அந்த மலை ரிஷப மலை என்றாயிற்று, இடப மலை என்பதும் அதுவே.
அந்த மாயப்பசு மலையாய் விழுந்து பசுமலை என்றாயிற்று.
இன்றும் பசுமலை மதுரை அருகே உண்டு, ரிஷபமலைதான் இன்று அழகர்மலை என வழங்கப்படுகின்றது, அதன் தோற்றத்தை உற்றுப்பார்த்தால் அது காளை வடிவில் தெரியும் அதன் அருகில் பசுவடிவில் பசுமலையும் இப்போதும் உண்டு.
இந்த மலை சக்திவாய்ந்தது. எதெல்லாம் மாய அசுரத்தனமோ, எதெல்லாம் மாயை செய்த பெரும் கொடுமைகளோ அவற்றை அழிக்கும் சக்தியினை அவற்றை வெல்லும் சக்தியினை இந்த மலை வழங்கும்.
அதற்கு பெரும் உதாரணமாக வந்தவர் இராமபிரான்.
இராமபிரான் சீதையினை மீட்க அமைந்த காலங்களில் இந்த மலையில் வந்து தங்கினார். அப்போது அகத்திய முனி இந்த மலையின் பெருமையினை அது அமைந்த வரலாறு எல்லாம் இராமனுக்கு விளக்கினார்.
இராமன் அந்த மலையினைத் தொழுதான். இராமபிரானுக்கு அகத்தியர், “அதித்ய ஹிருதயம்” அங்குதான் உரைத்தார், அகத்திய பெருமானின் வாக்குப்படி மதுரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி ஆலவாயனை தொழுது வழிபட்டார்.
அப்போது “தசரதன் மைந்தனே, நீ சேது பந்தனம் அமைத்து இலங்கேஸ்வரனைக் வென்று சீதையினை மீட்கக்கடவாய்” என அசரீரியாய் வாழ்த்தினார் சிவன்.
அதன் பின்பே இராமன் இலங்கைக்கு வானரங்கள் துணையோடு இலங்கைக்குச் சென்று இராவணனை வீழ்த்தி மனைவியோடு திரும்பும்போது முதல் காரியமாக ஆலவாய் நாதன் போலவே ஒரு லிங்கத்தைச் செய்து வணங்கினான், அது இராமேஸ்வரம் என்றானது, அந்த லிங்கம் இராமலிங்கம் என்றானது.
இவ்வாறு இந்த ரிஷப மலை இராமாயணத்துடன் தொடர்பு கொண்டது, எக்காலமும் சாட்சியாக இராமபிரான் வாழ்வில் இணைந்து சாட்சியாக நிற்கின்றது.
இந்தத் திருவிளையாடலின் தாத்பரியம் புரிந்து கொள்ள எளிமையானது, கொஞ்சம் ஆழமானது.
அதாவது, மாயைகள் என்பது எல்லா வகையிலும் வரும், அது உண்மை போலவே வரும், நிஜம் போலவே வரும், பெரிய குழப்பம் தரும்.
மாயை பசுவடிவில் வந்தது என்பது, தீயவர் நல்லவர் போல் வருவர், தீமைகளும் நன்மையான குணம் போல் வந்து நம்மை ஏமாற்றும் என்பது.
அதனால் எல்லாவற்றையும் சிவனிடமே விட்டுவிட்டு நன்மை தீமை என எல்லாம் சிவனிடமே விட்டுவிட்டால் நமக்கு எது நல்லதோ அதைத்தான் சிவன் தருவார்.
நன்மை தீமையினை இறைவனிடம் நாடுங்கள் நல்லதை அவர் தருவார் என்பதை இது போதிக்கின்றது. பசுவடிவில் வந்த அசுரன் போல் தீயவர்கள் தீமைகள் பல வடிவில் வரலாம் அந்நேரம் சிவனிடம் அடைக்கலமானால், ஆபத்தை எல்லாம் சிவனே முறியடித்து நல்ல காவலைத் தருவார்.
மாயைகளை வெல்லும் சக்தி மனிதனுக்கில்லை, அது பல்வேறு வடிவங்களில் வரும்போது அதனைத் தனியே வெல்ல மானிடனால் முடியாது, அந்நேரம் சிவனை சரணடைந்தால் அவர் உதவியில் வெல்லலாம் என்பதைப் போதிக்கின்றது இந்தக் காட்சி.
நிச்சயம் அந்த சிக்கல் பெரியது. அது பசுவடிவில் வந்த ஆபத்தை தடுக்கவும் முடியவில்லை அதே நேரம் விடவும் முடியாது, அப்படியான நேரம் சிவனே வந்து ஆச்சரியமான வகையில் அந்தச் சிக்கலை தீர்த்துத் தருவார்.
அந்தச் சிக்கல் உறவுகளாக இருக்கலாம், எதிர்க்க முடியாப் பந்தமாக இருக்கலாம், வாய்விட்டு சொல்லமுடியாச் சிக்கலாக இருக்கலாம், விசித்திரமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் நீங்கள் இருக்கலாம், எது என்றாலும் இந்தத் தலம் அதை நீக்கித் தரும்.
மாயை சொந்த பந்த உருவில், புனிதமான உருவில் எந்த உருவில் வந்தாலும் அதை நீக்கி நம்மை காப்பார் சிவன்.
மானிட வாழ்வு ஏகப்பட்ட மானுடருடன் பிணைந்துவாழும் சாபம் கொண்டது, அங்கே சக மானுடரை நம்பித்தான் அவன் வாழவேண்டும். அது விதி.
இந்த நம்பிக்கையில்தான் அயோக்கியர்களும் அவர்கள் வழி மாயைகளும் புகுந்து மானிடரை ஆட்டிவைக்கின்றன, மானிடன் சக மானுடனை நம்பாமலும் முடியாது முழுக்க நம்பினாலும் ஆபத்து.
இந்தக் குழப்பத்தைத்தான் ஆலவாயன் தீர்த்துத் தருவார், மானுட உறவில் எது நன்மையானதோ எது சரியானதோ அதைமட்டும் அவர் அனுமதித்து தருவார், பொய்களும் பொய்யர்களும் பொய்யான உறவும் ஆலவாயன் சன்னதியில் நிற்க முடியாது.
அதனால் உங்கள் மனதில் , உறவுகளில், தொழிலில் ஆயிரம் குழப்பங்கள் இருக்கலாம். சக மானுடரில் யாரை நம்புவது நம்பாமல் இருப்பது எனும் பெரும் குழப்பம் வரலாம், அந்நேரம் ஆலவாயனிடம் சரணடையுங்கள். எது நல்லதோ அதைமட்டும் அந்த சிவன் உங்களுக்குத் தருவார்.
இந்த ஆலயம் மாயைகள் நீக்கித் தரும் ஆலயம், இராமபிரான் இங்கு வழிபட்டார் என்றால் அவரும் மாயைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.
உறவின் மாயை தாண்டி, மாய மான் எனும் இல்லாத ஒரு மானால் அவரின் வாழ்வே திசைமாறி, மாயா தேவியின் வம்சத்தில் வந்தவனான இராவணனால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்தத் தலம் இராமபிரானைப் பாதித்த மாயையினையே ஒழிக்க அவருக்கு சக்தி தந்தது. அந்த இராவண மாயையினை மாய வம்சத்தை அழித்து இராமன் தான் இழந்ததை எல்லாம் பெற்றார்.
மதுரை ஆலவாயன் ஆலயம் அந்த வரத்தை தரும், மாயையால் எதெல்லாம் இழந்தீர்களோ, வஞ்சக மோசடிகளால், மாய மயக்கங்களால் எதனை எல்லாம் இழந்தீர்களோ, எப்படியெல்லாம் பாதிக்கபட்டீர்களோ அதை எல்லாம் மாற்றி எல்லா நலனையும் உங்களுக்கு திரும்பத் தரும்.
இன்று அந்த ரிஷபமலை அழகர் மலை என அழைக்கப்படுகின்றது. அங்கு அழகர் கோவில் பெரும் எழிலுடன் எழுந்து நிற்கின்றது, இந்த அழகர்தான் மீனாட்சி திருமணம் நடக்கக் காரணமானார்.
அதாவது, மீனாட்சி திருமணம் என்பது ஒரு ஜீவாத்மா மாயை தாண்டி பரமாத்மாவோடு இணையும் நிகழ்வைச் சொல்வது. அழகர் மலை எனும் ரிஷ்பமலையில் இருந்து அந்த மாயையினைத் தாண்டி வரும் சக்தியினைப் பரம்பொருள் அழகராக நின்று தருகின்றது.
அந்த வரம் ஆலவாயன் சன்னதியில் நிறைவடைகின்றது.
மதுரைக்குச் செல்லும்போது இந்த அழகர்மலையில் முதலில் வேண்டி பின் ஆலவாயனிடம் சரணடையுங்கள், அழகர்கோவிலில் நிற்கும் போது இராமனும் அகத்தியனும் உங்கள் நினைவில் இருக்கட்டும்.
இராமனின் மாபெரும் சிக்கலுக்கு அந்த மலையில்தான் அகத்தியரால் தீர்வு கிடைத்தது. மாய மானால் உருவான அவன் எல்லாப் பிரச்சினைகளுக்கும் இங்குதான் முதல் வழி பிறந்தது. அங்கிருந்து ஆலவாயன் தலம் சென்று வணங்கிய இராமர் பின் தன் பெரும் எதிரியினை வென்று இழந்ததைப் பெற்றார்.
அவ்வழி அழகர்மலையில் அந்த ரிஷப மலையில் வணங்கி அங்கிருந்து ஆலவாயனிடம் வந்து எல்லாப் பிரச்சினைகளையும் அறிக்கையிடுங்கள், இராமனும் அனந்த பாண்டியனும் அறிக்கையிட்டது போல் எல்லாமும் கொட்டுங்கள். அவர்களுக்கெல்லாம் அவர்களைப் போல பலருக்கு பெரும் ஞானவழி தந்த அந்த சோமசுந்தரப் பெருமான் உங்களுக்கும் எல்லாமும் நன்றாக தருவார். இது சத்தியம்.