திருவிளையாடல் புராணம் 40 : குலபூஷணனுக்கு பொற்கிழி தந்த படலம்.

திருவிளையாடல் புராணம் 40 : குலபூஷணனுக்கு பொற்கிழி தந்த படலம்.

அப்போது பாண்டிய நாட்டை குலபூஷண பாண்டியன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன் மாபெரும் சிவபக்தன், சிவனைப் பாண்டிய தேசத்தின் மன்னராக முன்னிறுத்தி தான் ஒரு சேவகனாக நின்று பாண்டிய நாட்டை திறம்பட ஆட்சி செய்து வந்தான். பாண்டிய நாடு வளம் கொழித்தது.

பெருகி வரும் வைகையும், அது கொடுத்த பெரும் விளைச்சலும் எல்லா வகை நிலத்தின் செல்வமும் கொடுத்தன. வைகை தாமிரபரணியின் பெருக்கால் நெல் உள்பட எல்லாமும் விளைந்து கொட்டின, கரிசல் காட்டு பூமி நவதானியம் கொடுத்தது.

மலைகளில் இருந்து சந்தனம், தேன், யானைகள் என எல்லாமும் அள்ளி அள்ளி எடுக்கப்பட்டன. பாண்டிய நாட்டின் கடற்கரைகள் உலகின் மிகச் சிறந்த முத்துக்களைக் கொடுத்துக் கொண்டிருந்தன‌.

நீர்வளம் மிக்க நாட்டில் செழுமை வரும், அந்த செழுமை செல்வம் தரும், செல்வம் வியாபாரம், பெரும் சந்தைகள் என எல்லாம் தரும்.

உணவும் பணமும் மிகும் இடத்தில் கலைகளும் இன்னும் பலவகை அறிவும் வளரும், இவற்றைக் காக்கச் சேனைகள் வலுக்கும்.

இப்படி எல்லாமும் கொண்ட நாடாக பெரும் செல்வமும் சேனையும் கொண்ட நாடாக பாண்டி நாடு திகழ்ந்தது, இது அனைத்துக்கும் காரணமாக மழை இருந்தது.

மழைதான் எல்லாச் செல்வத்துக்கும் அடிப்படை, மழையில்லையேல் நல்ல முத்துக்கள் கூட கடலில் விளையாது, முத்து உருவாக கருமேகத்தின் நிழலும் தூறலும் அவசியம்.

மும்மாரி கொட்டிய பாண்டிய நாட்டில் ஆலவாய் நாதன் கோவிலைத் தலைமையாக கொண்டு எல்லா ஆலயங்களும் செழித்தன. எல்லா ஆலயங்களிலும் ஆறுகால பூஜையும் யாகங்களும் ஹோமங்களும் முறையாக நடந்து கொண்டிருந்தன‌.

யாகங்களும் வேத மந்திரங்களும் தவறாமல் ஒலித்து கொண்டிருந்தன, வேத பாடசாலைகளும் யாக மண்டபங்களும் பெருகின‌.

பாண்டியன் குலபூஷணன் அப்பழுக்கற்றச் சிவபக்தனாக விளங்கினான். எல்லாமே சிவமயம் எனக் கருதியவன் மனதில் மெல்ல மெல்ல ஒரு மாற்றம் வந்தது. அது வேதங்கள் யாகங்களெல்லாம் அவசியமில்லை என அவன் மனம் திசைமாறிற்று.

இதனால் வேதம் ஓதுதலும் யாகங்களும் மெல்ல மெல்ல பின்னடைந்தன. இறைவன் ஒருவனே போதும் அவனிடம் வேண்டினால் எல்லாமே கிடைக்கும், அங்கே வேதங்களெல்லாம் அவசியமில்லை என மன்னன் சொல்லிவிட அதுவே விதியாயிற்று.

அதன் விளைவாய் வேதம் ஓதுதல் குறைந்தது, யாகங்கள் குறைந்தது, வேதப் பண்டிதர்கள் வேறு தேசங்களுக்குச் சென்றார்கள். காரணம், அவர்கள் வேதங்களை யாகங்களை நம்பி வாழ்பவர்கள், அதனால் வேறு தேசங்களுக்கு வருத்தமாய்க் கிளம்பினார்கள், வேதபாடசாலைகள் அருகின‌.

மன்னன் நிதி இல்லாவிட்டால் இவை இயங்கமுடியாது என்பதால் வேத நாத ஒலி பாண்டிய நாட்டில் குறைந்தது போயிற்று. மன்னனோ எல்லாமே சிவன் அவர் போதும் இதெல்லாம் அவசியமில்லை எனத் தன் போக்கில் வழிபட்டு வந்தான்.

அதே நேரம் பாண்டிய நாட்டில் மெல்ல மெல்ல மழைவளம் குறைந்தது. மழை குறைய வைகை முதலிய ஆறுகள் நீரின்றி தவித்தன, கால்நடைகளுக்குக் குடிநீர் இல்லை விளைச்சல் இல்லை, அதனால் வியாபாரம் இல்லை.

வியாபாரம் இல்லாவிட்டால் அரசுக்கு வரியுமில்லை, அரசு என்பது வரியின்றி இயங்கமுடியாது, அரசன் திகைத்துப் போனான், ஊழியர்க்கு சம்பளம் கூட கொடுக்க முடியவில்லை, நாடு பலமிழந்தது எங்கும் பஞ்சமும் குழப்பமும் மட்டுமே மிஞ்சிற்று, என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை.

மன்னன் நிலைகுலைந்தான். காரணம், நாட்டின் ஒவ்வொரு அசைவும் அரசன் செய்யும் பாவபுண்ணியங்களைப் பொறுத்தது, ஒரு அரசன் பாவங்களின்றி நல்லாட்சி செய்தால் நாடு செழித்து வாழும், அரசன் தவறு செய்தால் குடிகள் பாதிக்கப்படுவர்.

மன்னன் தான் ஏதோ தவறு இழைத்துவிட்டதாக கருதினான். ஆனால், அதைப் புரிந்துகொள்ள முடியாதபடி அகங்கார மாயை அவனை மூடியிருந்தது. ஏதோ இறைவனுக்குத் தன் மேல் கோபம் எனக் கருதினானே தவிர எதனால் கோபம் என்பதை அவனால் அறியமுடியவில்லை.

எல்லாம் தான் சரியாக‌ச் செய்ததாக கருதிய அவன் பின்பும் ஏன் இச்சோதனை என்பதில் அவன் மனம் குழம்பி நேரே சிவனைச் சரணடைந்தான். சிவ பாதத்திலே அமர்ந்து கொண்டு தனக்கோரு பதில் கிடைக்க வேண்டும் என வேண்டத் தொடங்கினான்.

பின் அந்தப் பதில் கிடைக்கும் வரை சிவனை விட்டு அகலமாட்டேன் என அங்கே படுத்துக் கொண்டான். இரவும் பகலும் அகலாது உண்ணாது ஆலவாயன் சன்னதியிலே பதில் வேண்டிக் கிடந்தான்.

தான் செய்த தவறு அவனுக்குப் புரியவில்லை. பின்னர் ஏன் தேசம் இப்படி மழையின்றி வறண்டு பெரும் இன்னலில் ஏன் இருக்கின்றது எனச் சிவனிடம் வாதிட்டுக் கிடந்தான்.

அந்நேரம் அவனுக்காய்ச் சிவனே இறங்கி வந்து அவன் கனவிலே ஒரு சித்தர் வடிவில் வந்து சொன்னார், “பாண்டியா, உன்னிடத்தில் உள்ள குறையின் பொருட்டு இந்தத் தேசம் இந்த இன்னலை அடைந்தது.

நீ வேதமறிந்த பண்டிதர்களை ஆதரிக்க மறுத்தாய், வேதங்கள் அவசியமல்ல என நீயாக சொல்லிக்கொண்டு வேதமும் வேத பண்டிதர்களும் வேண்டாம் என்றாய்.

நான் வேதங்களைப் பற்றி உனக்குச் சொல்கின்றேன்.

வேதமே எனது ஆசனம், அதனையே நான் பாதத்திலும் அணிந்திருக்கின்றேன். என் வாகனமும் வேதமே, நான் அணிந்திருக்கும் கோவணம், வேதமே என் கண்கள், வேதமே என் வாக்கு, என் காலின் தண்டமும் வேதமே.

வேதமே என் கால் சிலம்பு; வேதமே என் உருவம்; அதுவே என் சுவாசம்; வேதமே இந்தப் பிரபஞ்சத்தை இயக்கி வருகின்றது. ஒருவனுக்கு ஆணவ அகங்காரமும் நீக்கி முக்தியும் அளிப்பதும் வேதங்களே.

அந்த வேதங்களை வழிவழியாக காத்து வருபவர்கள் அந்தணப் பண்டிதர்கள். அந்த மந்திர உச்சாடனைகள் மூலம் அவர்கள் வேதங்களை நிறுத்துகின்றார்கள். வேதம் உச்சரிக்கப்படும் இடம் எல்லாச் சூழலும் நன்மையாகும். வளமாகும்.

அவர்களின் யாகங்களே மழையாக பொழிகின்றன, அப்படித்தான் யாகங்களும் ஹோமங்களும் இந்த மண்ணுக்காக அவர்கள் செய்ய செய்ய மழை கொட்டிற்று. தேசமும் வாழ்ந்தது.

நீ வேதங்களைப் புறக்கணித்தாய், அவசியமற்றது என்றாய். அதாவது, வேதத்தை புறக்கணிக்கின்றேன் என நீ என்னையே புறக்கணித்தாய், யாகங்களையும் ஹோமங்களையும் நிறுத்திவிட்டாய் அதனாலே மழையின்றிப் போனது.

பாண்டியா, வேதங்கள் வாழாத உலகம் வாழாது , உலக இயக்கத்துக்கு வேதங்கள் மகா அவசியம்.

நீ இனி திருந்தி வேதங்களை அணைக்ககடவாய், உன் தவற்றின் பொருட்டே இந்தத் தண்டனை வந்தது. இந்தப் பஞ்சகாலம் தீரும் வரை நான் உனக்கொரு வழி தருவேன்.

இதோ இந்தப் பொற்கிழியினை எடுத்துக் கொள். இது எடுக்க எடுக்க உனக்கு நிதி தரும். பஞ்சகாலம் தீருமட்டும் தரும், அதைக் கொண்டு நீ அந்தணர்களை ஆதரிப்பாய். வேத பண்டிதர்களை ஆதரிப்பாய். அவர்கள் மனம் குளிர்ந்து வேதம் ஓத ஓத நாடு செழிக்கும்” எனச் சொல்லி மறைந்தார்.

பாண்டியன் கண்விழித்தான். அவன் முன் அந்த பொற்கிழி கிடந்தது.

பாண்டியன் எழுந்தான். கண்களில் நீர் வழிய ஆலவாயனுக்கு நன்றி சொல்லி தன் தவறுக்கு மன்னிப்பு கோரினான். பெருமூச்செடுத்து அழுதவன் ஆலவாயனுக்கு பெரும் பூஜை செய்துவிட்டு அந்தப் பொற்கிழியினைத் தங்க தட்டில் வைத்து யானைமேல் ஏற்றி பெரும் ஊர்வலமாக அரண்மனை வந்து சேர்ந்தான்.

விரதம் இருந்து வழிபாடுகளை முடித்து திருநீறு இட்டு மணிமுடி இன்றி ஒரு அடியார் போல் ஓராடை அணிந்து அந்தப் பொற்கிழியில் இருந்து நிதி எடுத்தான், அது நிரம்ப கொடுத்துக் கொண்டே இருந்தது.

அதைக் கொண்டு முதல் காரியமாக மறை அந்தணர்களை ஆதரித்தான்; வேத பாட சாலைகளைப் புதுப்பித்தான்; அன்றாட வேத வாழ்வினைத் தொடங்க உத்தரவிட்டான்; பெரும் யாகங்களும் ஹோமங்களும் செய்ய வழிசெய்தான்.

பல நாடுகளில் இருந்து பெரும் பெரும் வேத வித்வான்களை வரவழைத்தவன் பெரும் யாகம் நாடெங்கும் செய்தான். வேதம் வாழ வாழ நாடு மீண்டும் நல்ல நிலை அடைந்தது.

வேதங்கள் வழி நாடு செழித்து மன்னனின் கருவூலமும் நிறைய தொடங்கியபின் அந்தப் பொற்கிழியில் நிதி வருவது அவசியற்றது என்பதால் நின்று விட்டது.

குலபூஷணன் வேதங்களைக் கண் எனப் போற்றி பெரும் வேத காவலனாய் ஆட்சி செய்தான். வேதங்கள் வாழ்ந்ததால் அவன் ஆட்சிக்கும் நாட்டுக்கும் ஒரு குறை வராமல் எல்லாம் நலமாய் இருந்தது.

இந்தத் திருவிளையாடல் வேதங்களின் முக்கியத்துவத்தை போதிக்கின்றது. வேதம் என்பது பிராமணர் வாழ உருவாக்கப்பட்ட கட்டுகதை என்பதெல்லாம் அபத்தம்.

பிராமணர் அதைக் கொண்டு தங்கள் போஜனத்தை தவிர ஏதும் செய்துவிடமுடியாது. அவர்களின் ஆறுவித கடமைகளில் பெறுவதை தானம் செய்வதும் ஒன்று என்பதால் வேதங்கள் அவர்கள் வாழ என்பதெல்லாம் பெரும் அபத்தம்.

வேதங்கள்தான் இந்தப் பிரபஞ்சத்தை இயக்குபவை, அவ்வகையில் இந்த உலகத்தையும் அவைகளே இயக்குகின்றன. மானிடர் வாழவும் இந்தப் பிரபஞ்சம் வாழவும் வேதம் அவசியம்.

வேதங்கள் வாழ்ந்தவரை இந்தியா எனும் இந்தப் பாரத தேசம் பெரும் வாழ்வு வாழ்ந்தது. அந்த வேதம் வாழ்ந்த தேசமெல்லாம் செழித்தது.

பௌத்தம் வேதமற்ற வாழ்வு சாத்தியம் வேதமின்றி நாடும் உலகமும் மானுடமும் இயங்கும் எனச் சொல்லி வேதங்களை முடக்கியபோது இந்தத் தேசத்தின் வீழ்ச்சித் தோன்றிற்று.

ஆனாலும், இரண்டாயிரம் ஆண்டுகளாக இத்தேசம் நிலைத்து நிற்க வேதங்களே காரணம். உலகில் எந்த இனமும் சந்திக்காத அளவு பெரும் போர்களை ஆதிக்கங்களை இந்த நாடு சந்தித்து மீண்டு இன்றும் இந்துபூமியாக இந்த மண் நிற்க வேதங்கள் இன்னும் ஓதப்படுதலே காரணம்.

வேதங்கள் ஓத ஓத நாடு வாழும், இன்னும் முழுக்க இந்த தேசமெங்கும் வேதங்கள் எழுந்து நிற்கும் போது இந்த நாடு பெரும் உச்சத்தில் நிலைக்கும்.

வேதங்கள் என்பது பிரபஞ்ச இயக்கத்தின் பாஷை, அதை உணர்ந்த ரிஷிகள் அதை மனதால் படித்து மானிடர்க்குத் தந்தார்கள். அண்டம் எனும் இந்த மஹாபிரபஞ்சம் உருவாகி இயங்கும் மொழியும் வழியுமே வேதங்களாயின‌.

அந்த வேதங்கள் எனும் பிரபஞ்ச மொழியுடன் பரம்பொருளுடன் பேசும்போது எல்லாமும் நடக்கின்றது.

அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்பதால் உடல் இயங்கும் மொழியும் மனம் இயங்கும் மொழியும் அதுவே ஆகின்றது.

சுயம்புவாய், உத்தமமானதாய், தத்துவங்களின் தாங்கும் ஆதி பொருளாய் விளங்குகிறது. எங்கும் நிறைந்த வடிவமாய் விளங்கும் இச்சொக்கலிங்கம் வேதங்கள் அணைத்துக்கும் பராபரன். ஞானவடிவானவன், நிர்மயன்.

அந்தப் பரப்பிரமமாகிய இம்மூர்த்தியின் வடிவமே வேதமாகும்.

முனிவர்களே, லிங்கமும் வேதமும் வேறல்ல. வேதம் சாகைகளின் பேதத்தினால் பலவிதங்களாகப் பிரிநதுள்ளது.

ஆதிபரம் பொருளாகிய எம்பெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்ததாலே மும்மூர்த்திகளானார்.

நான்முகனாகி மூன்று உலகங்களையும் படைத்து, விஷ்ணுவாக இருந்து அனைத்தையும்பாதுகாத்து ருத்திரனாகி எல்லாவற்றையும் அழிக்கின்றார்.

விங்கத்தின் கீழ்பாகம் பிரம்ம‌னாகும்; நடுபாகம் விஷ்ணு வடிவமாகும், மேலேயுள்ள குழவி போன்ற பாகம் ஈசன். இந்த மூவகை தத்துவங்களிலிருந்து எல்லாத் தத்துவங்களுமே தோன்றுகின்றன. ஆன்ம தத்துவத்திலிருந்து அகாரமும் வித்தியா தத்துவத்திலிருந்து உகாரமும், சிவ தத்துவத்தில் இருந்து மகரமும் தோன்றின.

இந்த அகர உகர மகர அதாவது அ+உ+ம் எனும் கலவையால் ஓம் எனும் பிரணவம் உருவாயிற்று.

அந்தப் பிரணவத்தில் இருந்தே அடுத்த தாரக மந்திரமாகிய மூன்று வடிவங்களைக் கொண்ட காயத்திரி உண்டாயிற்று. அது ஸமஷ்டி என்றும், வியஷ்டி என்றும் இருவகையாக விரும்பிய பொருள்களைப் பெறுவதற்குக் காரணமாக விளங்குகிறது.

இந்தக் காயத்ரியில் இருந்துதான் நால்வகை வேதங்களும் வந்தன‌.

முனிவர்களே, நான் உங்களுக்கு இன்னமும் உரைப்பேன், வேதங்கள் வந்த வகையினை ஆழகாக உரைப்பேன்.

இந்த நால்வகை வேதங்களும் காயத்திரியில் இருந்துதான் வந்தன. அவை இன்னும் இன்னும் பலவாய்ப் பெருகின‌.

பிரணவத்தில் இருந்து அகரம் இன்னும் பலவற்றை தோற்றுவித்தது, அதன்படி லிங்கத்தின் உச்சமாகிய ஈசான முகத்தில் இருந்து சிவாகமங்கள் இருபத்தெட்டும் தோன்றின.

கிழக்கு முகமான தத்புருஷ மூகத்திலிருந்து இருபத்தோரு சாகைகளோடு ரிக்வேதம் தோன்றியது.

தெற்கு முகமான அகோர முகத்திலிருந்து நூறு சாகைகளோடு யஜுர்வேதம் உண்டாயிற்று.
வடக்கு முகமான வாமதேவ முகத்திலிருந்து ஆயிரம் சாகைகளோடு சாமவேதம் தோன்றியது.

மேற்கு முகமான சத்யோஜாத முகத்திலிருந்து ஒன்பது சாகைகளோடு அதர்வணவேதம் தோன்றியது.
வேதங்கள் நான்குவகை, அப்படியே வர்ண பிரிவுகளும் அதைத் தாங்கும் ஆஸ்ரமங்களும் நான்கு வடிவங்களாயின‌.

தருமங்களும், யாகம் முதலான கருமங்களும் வேதங்களின் நெற்றியிலே தோன்றின.
வேதங்களைக் கர்மகாண்டம், ஞான காண்டம் என இருவகைப் படுத்துவர். கர்மகாண்டம் சொக்கலிங்க மூர்த்தியின் பூஜாவிதிகளைத் தெரிவிக்கும். ஞான காண்டம் அப்பெருமானுடைய சச்சிதானந்த வடிவத்தைக் கூறும்.

வேரிலே ஊற்றப்படும் தண்ணீர் கிளைகள் மூலம் இலைகளுக்குப் பரவுவது போல் எம்பெருமானுக்குச் செய்யப்படும் வழிபாடுகள் அவ்விறைவன் வடிவமாகிய தேவர்களை அடைகின்றன.

உலகத்தினர் சுகங்களை அனுபவித்து மோக்ஷத்தைப் பெறுவதற்காகவே சிவ அர்ச்சனை புரிய சிவ லிங்கம் காரணமாக இருக்கிறது.

வேதங்கள் பல சாகைகளைக் கொண்டு தேடியும் உணராது மயங்க, சிவலிங்க பூஜை முறையாலும், ஞான காண்டத்தில் கூறப்பட்ட தெளிவினாலும் ஈசனை எளிதில் அறியலாம்.

சிவ பூஜை முதலான நற்கருமங்களாலே ஞானம் உண்டாகிறது. அக்கருமங்கள் உள்ளத் தூய்மையைக் கொடுக்கும். அதனால் சாந்தி ஏற்படும். அச்சாந்தியினாலே அஷ்டாங்க யோகத்தை அடையலாம். சிவபக்தி, சிவபூஜை, சிவதரிசனம், சிவலிங்கம் ஸ்தாபித்தல், சிவனடியார் வழிபாடு சிவ சின்னம் தாங்குதல், குருபக்தி ஆகிய எல்லாவற்றையும் ஞானத்தால் அறியலாம்.

ஈசனே வேதவடிவம் என்பதை “சிவ சகஸ்ரநாமம்” சொல்கின்றது. பிரம்மபுத்திரர்களில் ஒருவரான தண்டி என்பவர் காலம் காலமாக இருந்த வேதங்களை நெறிபடுத்தும்போது இதனைத் தொகுத்தார்.

இது உபமன்யு முனிவரால் மகாபாரத்தில் கிருஷ்ண பகவானுக்கு உரைக்க பட்டது. பகவான் கிருஷ்ணர் இதைத் தர்மனுக்கு உபதேசித்தார்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் மட்டுமல்ல, “சிவ சகஸ்ரநாமம்” எனும் சிவனின் ஆயிரத்தெட்டு நாமமும் மகாபாரத்தில் இருந்துதான் உருவானது.

அது சொல்கின்றது.

“ஓம் ப்ரமாணாய நமஹ‌” அதாவது நீயே வேதங்கள் மற்றும் சாத்திரங்களின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் அதிகாரம் கொடுத்து உண்மையை அறிவதற்கு ஆதாரமானவர்.

“ஓம் வாஜஸநாய நமஹ” அதாவது நீயே சூரியன் உருவில் வேதத்தின் ஒரு கிளையான வாஜஸநேயம் எனும் வடிவாக விளங்குபவன்.

“ஓம் லிங்காத்யக்ஷாய நமஹ” அதாவது நீயே இருப்பிலுள்ள அனைத்துக் கருத்துகளுக்கும் உள்ள பல்வேறு வகைச் சாட்சிகளைப் புரிந்து கொள்ளச் செய்பவன், வேதாந்த சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள ப்ரத்யக்ஷம், அனுமானம் முதலிய பிரமாணங்களின் தலைவன்.

“ஓம் வேதகாராய நமஹ” அதாவது நீயே வேதங்களைத் தோற்றுவித்தவன், “ஓம் மந்த்ரகாராய நமஹ” அதாவது நீயே மந்திரங்களைத் தோற்றுவித்தவன்.

“ஓம் அதர்வசீர்ஷாய நமஹ” அதாவது தர்வண வேதத்தை தலையாகக் கொண்டவன் நீயே.

“ஓம் ஸாமாஸ்யாய நமஹ” அதாவது ஸாமவேதத்தை முகமாய் உடையவன் நீயே.

“ஓம் ருக்ரஸஹஸ்ராமிதேக்ஷ ணாய நமஹ” அதாவது எண்ணற்ற ஆயிரக்கணக்கான ருக்வேத மந்திரங்களைக் கண்களாகக்கொண்டவன் நீயே.

“ஓம் யஜு: பாதபுஜாய நமஹ” அதாவது யஜுர்வேதத்தைக் கால்களாகவும், தலைகளாகவும் உடையவன் நீயே.

“ஓம் குஹ்யாய நமஹ” அதாவது மறைபொருளாயிருக்கிற உபநிஷத் வடிவினன் நீயே.

“ஓம் ப்ரகாசாய நமஹ” அதாவது கர்ம காண்டத்தின் (வேதத்தின் ஒரு அங்கமாக தொகுக்கப்பட்டுள்ள சடங்குகள், சம்பிரதாயங்களின்) ஒளியாய் விளங்குபவன் நீயே.

“ஓம் சித்தார்த்தாய சந்தோவ்யாகரணோத்தராய நமஹ” அதாவது வேதங்கள் மற்றும் வேத விளக்கத்தின் இலக்கணத்தில் முடிவாக ஏற்படும் சரியான தீர்மானங்களின் பொருள் வடிவினன் நீயே.

“ஓம் ப்ரஹ்மவிதே நமஹ” அதாவது வேதங்களின் பொருளை அறிந்தவன் / உணர்ந்தவன் நீயே.

“ஓம் வ்யாஸாய நமஹ” அதாவது வேத வ்யாசர் வடிவம் எடுத்தவன் நீயே.

ஆம். ஈசனே வேதங்களின் வடிவம். இந்த சஜஸ்ரநாம பெயர்கள் சொல்லும் பொருள்தான் இந்தத் திருவிளையாடலில் ஈசன் சொல்லும் போதனை விளக்கம்.

சிவபிரானின் பெருமையைக் முறையை விளக்கும் விதமாகவே யஜூர் வேதம் அமைந்திருக்கிறது. பிர்பஞ்ச சக்திகளை வசப்படுத்தி உலகிற்கு நன்மைகளை உண்டாக்குவதே வேள்வியின் நோக்கம் மந்திரங்களை ஓதுவதால் உள்ளமும், இடமும் தூய்மை ஆகும். பிரசித்தியான “ஸ்ரீ ருத்திரம்” யஜூர் வேதத்தில் இடம் பெறுகிறது.

யஜூர் வேதமே “நமசிவாய” எனச் சிவனின் அடையாளத்தை சொல்கின்றது.

“த்ரயீவேத்யம் ஹ்ருத்யம் த்ரிபுரஹர மாத்யம் த்ரிநயனம்
ஜடாபாரோதாரம் சல துரகஹாரம் ம்ருகதரம்
மஹாதேவம் தேவம் மயி ஸதய பாவம் பசுபதிம்
சிதாலம்பம் ஸாம்பம் சிவ மதி விடம்பம் ஹ்ருதி பஜே”

மூன்று வேதங்களால் அறியத் தக்கவர், (அதர்வண வேதம் பின்னரே வந்தது) மனதிற்கினியவர், முப்புரங்களை அழித்தவர், அனைத்துக்கும் முதல்வர், மூன்று கண்களை உடையவர், சடைகளைத் தாங்குவதால் கம்பீர தோற்றம் உடையவர். பாம்பை மாலையாக உடையவர், மானைக் கையில் ஏந்தியவர். தேவர்களிற் சிறந்தவர், பிரகாசமானவர், தயை உடையவர், சகல உயிர்களுக்கும் நாயகர். அறிவிற்கு இருப்பிடம், அம்பிகையுடன் கூடியிருப்பவரான சிவபெருமானை என் உள்ளத்தில் தியானம் செய்கிறேன் என்பதிலே சசலமும் அடங்கி விடுகின்றது.

இதன் அர்த்தம் சிவனின் தோற்றமே அவரின் அடையாளமே வேதங்கள் என்பது.

சிவன் அருள்திரட்டு சொல்கின்றது.

“நடன சபேச! சிதம்பர நாதா! , விடாமல் சொல்வதற்கு உரியவனே! அறிவு வடிவானவனே! முக்தி அளிப்பவனே! வேத வடிவம் ஆனவனே! நடனத்தில் வல்லவனே! சபையில் உள்ள ஈசனே! சிதம்பரத்தில் உள்ள தலைவனே” என்கின்றது.

இதனையே அப்பர் சுவாமிகள் தன் தேவாரத்தில் பாடுகின்றார்

“அங்கதிரோனவனை அண்ணலாக் கருத வேண்டா
வெங்கதிரோன் வழியே போவதற்கு அமைந்து கொள்மின்
அங்கதிரோனவனை உடன்வைத்த ஆதிமூர்த்தி
செங்கதிரோன் வணங்கும் திருச்சோற்றுத் துறையனாரே” என்றும்

“அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கன் ஆவான் அரன்உரு அல்லனோ
இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார் கல்மனவரே”

ஈசனே வேதம் வேதமே ஈசன் என்பதால் வேதவழி வாழ்வு ஒருவனை முக்தி அடையச் செய்யும், ருத்ரபசுபதி நாயனார், சோமாசிமாற நாயனார் போன்றோர் அதற்கு பெரும் உதாரணங்கள்.

வேதவழி வாழ்வு ஆத்மாவினைச் செம்மைபடுத்தும் அப்படியே வேதவழி வழிபாடும் யாகமும் மந்திரமும் நாட்டை வளப்படுத்தும், நல்வாழ்வு வாழவைக்கும்.

அன்று நாடெங்கும் கோவில்களும் வேதசாலைகளும் பெருகியிருந்த காரணம் இதுதான். ஊரெல்லாம் யாகமும் ஹோமங்களும் வேத வழிபாடுகளும் இருந்ததன் காரணமும் அதுதான்.

அதுதான் கோவில்களில் பிரதானமாய் இருந்தது. அந்தக் கோவிலும் தங்கத்தால் மூடும் அளவு செல்வமாயும் அந்நியர் வந்து அள்ளும் அளவு பெரும் செல்வாக்குமாய் இருந்தது.

வேதங்கள் வாழ நாடு வாழும். வேதமே ஈசன் வடிவம் என்பதால் வேதங்களைச் சரியாக பின்பற்றுதலே ஈசனை வழிபடுதலும் அவரை அடையும் வழியுமாகும் என்பதை இந்த திருவிளையாடல் சொல்கின்றது.

வேதவழி வாழ்வே சனாதன தர்ம வாழ்வு, அதுவே மகா சிறப்பினைத் தரும், வேதமில்லா சனாதனம் உயிரற்ற உடல், நீரற்ற குளம் அதனால் பயனேதுமில்லை. சனாதன தர்மத்தின் ஆணிவேரும், அஸ்திவாரமும் வேதமே என்பதைப் போதிக்கின்றது.

ஆலவாயன் சன்னதிக்குச் செல்லும் போது சிவ சகஸ்ர நாமம் சொல்லுங்கள். வேதங்களைச் அந்தணர்களை போற்றுங்கள். தேவாரத்தை படியுங்கள். வேதம் போதிக்கும் எல்லா வழிகளிலும் அந்த நாதனை வணங்குங்கள். இந்தப் பிரபஞ்சத்தின் எல்லா வளமும் பலமும் ஐஸ்வர்யமும் கிடைக்கும், ஞானமும் முக்தியும் சாத்தியமாகும். இது சத்தியம்.