திருவிளையாடல் புராணம் : 51மதுரம் எனும் அமிர்தம் சிந்திய படலம்
திருவிளையாடல் புராணம் : 51
மதுரம் எனும் அமிர்தம் சிந்திய படலம்.
அப்போது மதுரை எனும் நகரமில்லை, அது கடம்பவனம் எனும் காடாகக் கிடந்தது. மணவூர் என அதற்குக் கிழக்கேதான் மக்கள் குடியிருப்பும் வயல்களும் எல்லாமும் இருந்தன. அந்த மணவூரில் இருந்துதான் பாண்டிய மன்னர்கள் செங்கோல் செலுத்தினார்கள்.
அதாவது, மதுரையம்பதி எனும் அந்த ஆலவாய்நாதனின் மூர்த்தி யுகங்களைத் தாண்டியது. ஊழிக்காலத்தில் எல்லாம் அழிந்தாலும் அது நிலைத்து நின்றது. ஊழிக்காலத்தில் உயிர்கள் மறைந்து பின் தோன்றும்போது எல்லாம் மாறிவிடும். புதிய நிலம், புதிய மக்கள், புதிய நகரங்கள், புதிய கடல்கள், புதிய பூமி எனத் தோன்றிவிடும். அப்படி இந்த மூர்த்தி மட்டும் நிலையாக இருக்க மற்ற எல்லாமும் மாறிக்கொண்டே இருந்தது.
அப்படியாகப் பாண்டிய மன்னர்கள் மணவூரில் இருந்து ஆட்சி செலுத்த இந்தக் கடம்பவனம் காடாகக் கிடந்தது. இந்திரன் அந்தக் கடம்பவனத்தில் இருந்த ஒளிவீசும் லிங்கத்தை அந்தச் சிவனைத் தரிசித்தே தன் பாவங்களைத் தீர்த்தான், சாப நிவர்த்திப் பெற்றான். அப்படியான லிங்கம் அந்தக் கடம்பவனம் எனும் காட்டில் தனித்துக் கடம்ப மர அடியில் இருந்தது.
மணவூரில் தனஞ்செயன் என ஒரு வணிகன் இருந்தான், இவன் பாண்டிய நாட்டின் மேற்கு பக்கம் சென்று அதைத் தாண்டிச் சென்று வணிகம் செய்பவன். இதனால் அடிக்கடி இந்தக் கானகத்தைக் கடக்க வேண்டி வரும், அப்படி ஒருமுறை அவன் பயணம் மேற்கொண்டிருந்தபோது இரவாகிவிட்டது.
அந்த இரவில் கானகத்தில் சிக்கிக் கொண்டவன் முடிந்தவரை காட்டுவழி பாதையில் நடந்தான். போராடி நடந்தான். இனியும் நடந்தால் ஆபத்து எனக் கருதியவன் ஓரளவு பாதுகாப்பான இடத்தில் படுத்து உறங்க எண்ணினான்.
அவன் சிவபக்தன், மாபெரும் சிவபக்தன் என்பதால் வழமைபோல் சிவனை தியானித்துவிட்டு இந்த நடுக்காட்டில் தனக்குக் காவல் செய்யும்படி கேட்டுக்கொண்டு
தன் மூட்டையினைத் தலையணையாக வைத்துக் கொண்டு, துண்டை விரித்துப் படுத்து உறங்க முயன்றான். அப்போதுதான் அந்த அதிசயத்தைக் கண்டான்.
தொலைவில் ஒரு வெளிச்சமும் சில ஆட்கள் நடமாட்டமும் இருந்தது, அவன் அஞ்சியபடியே எழுந்து அதை நோக்கினான்.
அச்சம் மிகுந்ததால் தொலைவில் இருந்தே ஒரு மரத்தின் பின்னால் இருந்து நோக்கினான். அங்கே அந்த லிங்கம் மின்னல் ஒளிபோல் சுடரிட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது. அப்படி ஒரு ஒளியினை அவன் அதற்கு முன் கண்டதில்லை.
அந்த லிங்கத்தின் விமானம் எட்டு பிரமாண்ட யானைகளால் தாங்கப்பட்டு பூலோகம் காணாத அழகில் ஜொலித்துக் கொண்டிருந்தது.
வணிகன் இன்னும் அருகில் சென்று பார்க்கத் தொடங்கினான். அங்குச் சிலர் லிங்கத்துக்கு அபிஷேகம் செயதார்கள். அவர்கள் அதிசய மனிதர்களாய் இருந்தார்கள்.
ஒருவன் லிங்கத்தின் முன் பணிந்து கிடந்தான்; ஒருவன் லிங்கத்தின் முன் சென்று கைநீட்டினான்; அக்னி பற்றியது. அதைக் கொண்டு தீபமேற்றி வழிபட்டான். இன்னொருவன் லிங்கதுக்குத் தன் கைகளால் நீராபிஷேகம் செய்தான். அந்நேரம் மெல்லிய காற்று அழகாய் வீசிற்று.
ஒரு தெய்வீக பசு அங்கே நின்றது, இவர்கள் அழைத்ததும் அது வந்து பாலை சுரந்து கொட்டிற்று. அது அபிஷேகப் பாலானது.
லிங்கத்துக்கு அந்த மனிதர்கள் எல்லா வழிபாட்டையும் செய்யத் தொடங்கினார்கள். இவர்கள் யார் என அவன் குழம்பும் போதே அவனைத் தொட்டு ஒருவன் சொன்னான்.
“மானிடா, நாங்களெல்லாம் தேவர்கள். இன்று சோமவாரம் என்பதால் இந்தச் சிவனை வழிபட வந்தோம், நீயும் வா, சிவன் முன் எல்லோரும் சமம்” என்றான்.
தேவர்களுடன் சேர்ந்து அந்த வணிகனும் அங்கு வழிபட்டான். தேவர்களுக்கு எல்லா உதவிகளும் பூஜைக்குச் செய்தான். மிகுந்த பக்தியுடன் அந்தச் சிவனை வணங்கி நின்ற வணிகனுக்குப் பெரும் உவகை உண்டாயிற்று, ஆனந்தத்தில் திளைத்தான்.
பூஜையெல்லாம் முடிந்து தேவர்கள் விடைபெற்றனர். அந்நேரம் காட்டுப் பறவைகளும் கத்த ஆரம்பித்தன. விடியலின் அறிகுறியினைப் புரிந்து கொண்ட வணிகன் நடந்ததை சிந்தித்தபடியே மணவூர் திரும்பினான்.
அவன் மனமோ ஒரு நிலையில் இல்லை. மிகவும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அவனுக்குள் நிறைந்திருந்தது. ஆனால், இதனை மன்னரிடம் தெரிவிப்பது தன் கடமை என உணர்ந்தான்.
நாட்டில் எது அபூர்வமாக கிடைத்தாலும் மன்னனுக்குக் கொடுக்கபட வேண்டும் என்பதும் அபூர்வ நிகழ்வுகள் நடந்தால் அவனுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதும் விதி என்பதால் மன்னனை சந்திக்க விரைந்தான்.
அப்போது மதுரையினைக் குலசேகர பாண்டியன் ஆட்சி செய்து கொண்டிருந்தான்.
அவனிடம் சென்று நடந்ததை சொன்னான் வணிகன். மன்னன் அந்த அதிசயத்தை கேட்டுக்கொண்டான். ஆனால், குழம்பினான். காரணம், ஒரு அரசன் எல்லாவற்றையும் நம்பிவிடக் கூடாது என்பது ராஜபாடம்.
இதுபற்றி அவன் சிந்திக்கும் போதே அவன் கனவில் சிவன் எழுந்தருளினார், “குலசேகரா, கடம்பவனத்தில் நாமே அமர்ந்துள்ளோம், நீ அந்தக் காட்டைத் திருத்தி எமக்கோர் ஆலயம் அமைத்து அதைச் சுற்றி நகரமொன்றை நிர்மாணம் செய்வாயாக” எனச் சொல்லி ஆசிகூறி மறைந்தார்.
மறுநாள் மன்னன் தனஞ்செயனையும் மற்றும் அரச பரிவாரங்களையும் ஞானியரையும் சாஸ்திரம் அறிந்த பண்டிதர் அர்ச்சர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு கடம்பவனம் புகுந்தான்.
அங்கே சென்று தனஞ்செயன் வழிகாட்டலில் பொற்றாமரைத் தடாகத்தின் ஓரமாய் அமர்ந்திருந்த சிவனைக் கண்டு வீழ்ந்து வணங்கினான்.
“பாண்டிய குலத்தை உமக்குப் பணிசெய்ய தேர்ந்தெடுத்த எம்பெருமானே! அதில் உமக்குக் கோவில்கட்டும் பெரும் பணி எமக்கே கிடைத்ததென்றால் என் மேல் நீர் கொண்ட கருணைதான் என்ன? இனி எல்லாப் பரம்பரையும் என்னைப் போற்றுமே” எனச் சொல்லி சொல்லி வணங்கினான்.
பின் பெரும் ஏற்பாடுகள் நடந்தன. மன்னன் அங்கே முகாமிட்டான். அரண்மனையே அங்கு மாறிற்று. மாட்டுவண்டிகளும், யானைகளுமாய் அங்குக் காட்டை திருத்த மக்கள் குவிந்தார்கள்.
மன்னன் எல்லா ஏற்பாடுகளையும் செய்தபோது ஒரு கவலை கொண்டான். அது ஆகமவிதிப்படி எப்படி இந்த ஆலயத்தை அமைப்பது, மிகச் சரியாக அமையவேண்டுமே எனும் கவலை எழுந்தது.
அப்போது ஒரு முனிவர் அங்கே கையில் ஏடுகளுடன் வந்தார். தான் சிற்ப சாஸ்திரம், சிவாகம சாஸ்திரத்தில் தேர்ந்தவன் என்றும் இங்குக் கோவில் கட்டுவதால் தனக்கு வேலை கிடைக்குமென நம்பி வந்ததாகவும் சொன்னார்.
மன்னன் அவரின் திறமையினைச் சோதிக்க விரும்பினான், அவரிடம் சில கேள்விகளைத் தன் அரண்மனை மந்திரிகள் ஞானியர்கள் புடைசூழ வைத்துக் கேட்டான்.
அவர் மிக மிக துல்லியமாய் ஆகம விதிப்படி கோவில் அமைய வேண்டிய விதத்தை விளக்கிச் சொன்னார். மூர்த்தம் இத்தனை உயரம் என்றால் விமானம் எவ்வளவு உயரம், கருவறை எப்படி அமைய வேண்டும், அங்குக் கும்பம் எப்படி அமைய வேண்டும், இதர மண்டபம் எப்படி அமையவேண்டும் என விளக்கினார்.
பிரகாரங்களின் நீள அகலம், கோவிலின் வாஸ்து என எல்லாமும் அழகுற விளக்கினார். உலகில் எங்கும் சஞ்சரிக்கும் பிரபஞ்ச அதிர்வுகளை ஒரு இடத்தில் குவிப்பதுதான் கோவில் என்பதையும் அது எப்படியான கோணத்தில் எப்படி அமைத்தால் சக்தியுடையதாக இருக்கும் என்பதையும் நுணுக்கமாக விளக்கினார்.
மன்னன் பெரும் திருப்தியும் மகிழ்வும் கொண்டு கோவிலை மட்டுமல்ல நகரை நிர்மாணிக்கும் பொறுப்பினை அவரிடமே கொடுத்தான், அவரும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.
அவர் தலைமையில், அவர் வழிகாட்டலில் கோவிலும் ஊரும் நிர்மாணிக்கப்பட்டது. முனிவர் அந்த ஊருக்குக் காவல் தெய்வங்களும் நிர்மாணித்துக் கொடுத்தார்.
நகருக்கு மேற்கே கரியமாணிக்க பெருமாளையும்; கிழக்கே ஐயனாரையும்; வடக்கே பத்ரகாளியினையும்; தெற்கே சப்தமாதர்களையும் காவலுக்கு நிறுத்தினார்.
எல்லாம் அழகுற அமைந்து, மிக அழகான கோவில் மாடங்களுடன் இருபக்கமும் வீடுகள் எழும்ப தெருக்கள் அழகான கூடல்கள், எல்லாம் சரியாக முடிந்தது. ஆனாலும், அந்த ஊருக்கு என்ன பெயர் இடுவது என மன்னன் மீண்டும் குழம்பினான். அப்படியே இந்த நகரை எப்படிப் புனிதபடுத்துவது எனும் கவலையும் வந்தது.
இந்து மரபில் ஒரு வீடுகட்டி குடியேறினாலே பல பூஜைகளை செய்வார்கள். தோண்டப்பட்ட நிலம், வெட்டப்பட்ட மரங்கள், அம்மரங்களில் தங்கியிருந்த தெய்வங்கள், உலோகங்களை உருக்கியதால் வந்த பாவங்கள் இன்னும் கல்லை உடைத்ததால் வரும் சில சாபங்களுக்கான பரிகாரம் எனப் பலவற்றைக் கொண்டது.
ஒவ்வொன்றுக்கும் உயிர் உண்டு, ஒரு தேவதை உண்டு எனச் சொல்லும் இந்துமதம் இப்படிப் புதிய வீடுகளைக் கட்டி முடிக்கும்போது சில பூஜைகளைச் செய்து அவற்றைச் சாந்தப்படுத்தி பரிகாரம் செய்வார்கள்.
இங்கோ ஒரு நகரமே நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றது. பெரிய கோவிலும், ஊரும் உருவாக்கபட்டிருக்கின்றது, காவல் தெய்வங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நகருக்கே எப்படிப் பூஜை செய்து, பாவம் போக்கி புனிதப்படுத்துவது எனக் குழம்பினான் மன்னன். மீண்டும் சித்தரையே சரணடைந்தான்.
சித்தர் அவனைக் கோவில் முன் அழைத்துச் சென்றார். திடீரென அவர் விஸ்வரூபமாக மாறி நின்றார். அப்படியே வானில் சிவபெருமானாக சித்தர் உருமாறினார்.
மன்னன் மெய்சிலிர்த்து வியர்த்து உருகி வானம் பார்த்து நின்றான். சிவனோ புன்னகையுடன் தன் சந்திர பிறையில் இருந்து சில சொட்டு அமிர்தத்தை அந்நகரின் மேல் சிந்தினார்.
அந்த அமிர்தம் காற்றில் பரவி நகர் முழுக்க எழுந்து நகரை புனிதமாக்கிற்று. வேறு எந்தப் பூஜையிலும் கிடைக்காத பெரும் பலனை சில துளி அமிர்தம் கொடுத்தது, அந்த நகரம் புனிதமானது.
தான் குடியிருக்கும் நகரை தன் சிரசின் அமிர்த துளிகளால் மதுர துளிகளால் சிவன் புனிதப்படுத்தினார். சிவ மதுரம் விழுந்த இடம் என்பதால் அது மதுரா என்றானது பின் மதுரை என மருவிற்று.
அந்த மதுரையில் முதலில் குடியேறினான் குலசேகரன்; அவனே அக்கோவிலில் வழிபட்டு அரசபரிபாலனம் செய்து மதுரையினை மிக நன்றாக சிவபாத சேகரனாக ஆட்சி செய்து சிவனில் கலந்தான்.
அவனுக்குப் பின் அவன் மகன் மலையத்துவஜன் அரசனாக சிவனின் தொண்டனாக மதுரையினை ஆட்சி செய்ய அரியணை ஏறினான்.
இதுதான் மதுரம் எனும் அமிர்தம் சிந்திய படலம். மதுரைநகர் எப்படி உருவானது என்பதை இந்தப் படலம் விளக்குகின்றது.
இது ஆழ்ந்த தாத்பரியத்தையும் சொல்கின்றது.
ஒவ்வொரு ஆன்மாவும் உள்ளே ஒரு கானத்தில் அறியாமை இருளில் சிக்கிக் கிடக்கின்றது. சிவனருளில் மாயைகளை அகற்றி அந்த ஆத்மாவினை தன்னில் உணர்ந்தால் சிவனை உணரலாம், அடையலாம் என்பதைச் சொல்கின்றது.
“உள்ளம் பெரும்கோவில் ஊனுடம்பு ஆலயம்” எனத் திருமூலர் சொன்ன தத்துவம் இதுதான்.
சிவனைத் தேடி நிற்கும் ஆத்மாவினைச் சிவனே வந்து புனிதப்படுத்தி தன்னில் ஏற்றுக்கொள்வார் என்பது இந்தப் படலம் விளக்கும் போதனை.
மதுரை ஆலயத்தில் சிவனை உளமாரப் பணிந்து வழிபட்டால் நம் ஆத்மா பரிசுத்தமாகும். சிவனே தன் அமிர்தம் தந்து தன் அடியாரின் ஆத்மாவினைச் சுத்தப்படுத்துவார், தன்னோடு சேர்த்துக் கொள்வார்.
இந்தப் படலம் யோக தத்துவமும் கொண்டது. சந்திரகலை எனும் இடகலை மூச்சை, சூரியகலை எனும் வடகலை மூச்சுடன் கலந்து யோகத்தில் நிலைத்திருந்தால் உச்சந்தலையில் அமிர்தம் சுரந்து ஞானமும் முக்தியும் சாத்தியமாகும்.
இதனையும் நுணுக்கமாகத் இந்த திருவிளையாடல் போதிக்கின்றது.
ஔவையார் இதனைத் தன் ஞானகுறளில் பாடுகின்றார்.
“நிலாமண்டபத்தி னிறைந்த வமிர்துண்ணில்
உலாவலா மந்தரத்தின் மேல்”
குண்டலினியானது சந்திர மண்டலத்தில் அதாவது துரியத்தினை அடையும்போது சுரக்கும் அமிர்தத்தினையும் பருகி துரியம் கடந்த நிலையில் அந்தரத்தில் அதாவது பிரபஞ்ச வெளியில் சஞ்சரிக்கும் ஆற்றல் கிடைக்கும்.
“மூல நிலமிசை மூன்றா நிலத்தினில்
ஆல மருந்துஞ் சிவம்”
மூலத்தில் இருக்கும் மண் தத்துவமாகிய மூலாதாராத்தில் இருக்கும் குண்டலினி சக்தியானது, மூன்றாவது நிலமாகிய சந்திர மண்டலத்தினை அடையும்போது அதாவது துரியத்தினை அடைந்து பரவொளியுடன் கலக்கும்போது அங்கு நீல கண்டனாகிய சிவன் தென்படுவான்.
இதையே பத்ருஹரியாரும் பாடுகின்றார்.
“மூல நெருப்பை விட்டு மூட்டி நிலா மண்டபத்தில்
பாலை இறக்கி பசி ஒழிவது எக்காலம்”
இந்தத் தத்துவமேதான் இந்துக்களின் ஞானமரபில் சிவன் தலையில் பிறைநிலா சூடியிருக்கும் தத்துவம். இதையும் இந்தத் திருவிளையாடல் ஆழமாகப் போதிக்கின்றது.
மதுரையம்பதியில் வழிபடுவோரின் ஆத்மா பரிசுத்தமாகும். அது தன் சாப பாவமெல்லாம் நீங்கி சிவனுடன் கலக்கும் நல்வரத்தை பெறும் என்பதைப் போதிக்கின்றது. இந்தத் திருவிளையாடல், மதுரையில் சிவனை தரிசித்து தங்கள் ஆத்மாவினைச் சுத்தம்செய்வோர் பாக்கியவான்கள், அவர்களுக்கு எல்லாமும் நலமாகும். மறுமையும் வாய்க்கும். இது சத்தியம்.