திருவிளையாடல் புராணம் 52 : மலையத்துவஜன் பெற்ற மலர்க்கொடி.

திருவிளையாடல் புராணம் 52 : மலையத்துவஜன் பெற்ற மலர்க்கொடி.

குலசேகர பாண்டியன் சிவபெருமான் குடியிருக்கும் கடம்பவனத்தை திருத்தி நகரமாக்கி அதனைச் சிவபெருமான் சூடிய நிலவின் மதுரத்தால் புனிதமாக்கி, மதுரை எனும் நகரை உருவாக்கி, பாண்டியரின் தலைநகராக்கி, சீரும் சிறப்புமாகப் பாண்டிய குலத்துக்கு அஸ்திபாரமிட்டுச் சிவனோடு கலந்தபின் அவன் மகன் மலையத்துவஜன் அரசனானான்.

மலையத்துவஜன் என்பது கயிலாய மலையில் குடியிருக்கும் சிவனின் பெயரன்றி வேறல்ல‌.

அவன் தகப்பனைப் போலவே மிகச்சிறந்த சிவபக்தனாக இருந்தான். சோமசுந்தரர் ஆலயத்தில் அனுதினமும் தொழுதபின்பே தன் காரியங்களைத் தொடங்குவான். மதியம் அவரைத் தரிசித்துவிட்டே உணவருந்துவான். மாலை அவரைத் தரிசித்துவிட்டே உறங்கச் செல்வான். அந்த அளவு மூவேளை அவரைத் தரிசித்து அவரே தனக்கு அரசன், சர்வேஸ்வரன் என மனதால் உருகி நின்றான்.

மனுநீதி தவறாத ஆட்சியும் வேதநெறி தவறாத புனிதமான தெய்வகாரியமும் இரு கண்களெனப் போற்றி அரசாட்சி செய்து வந்தான், அவனால் மூவுலகிலும் செல்வாக்கு பெறமுடிந்தது. தேவலோகம் அவனை மிகச் சிறந்த நண்பனாகக் கருதிற்று. இந்திரன் அவனின் நண்பனுமானான்.

இந்த மலையத்துவஜ‌ன் சோழ நாட்டின் அரசனான சூரசேனன் எனும் சோழனின் மகள் காஞ்சனமாலை என்பவளை மணம் செய்திருந்தான். எல்லா வகை நிதியும் சேனையும் பெரும் செல்வாக்கும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு ஒரே ஒரு குறை இருந்தது.

அது அவனுக்கு இன்னும் வாரிசு இல்லை என்பது.

அவன் எவ்வளவோ மன்றாடியும் அந்தக் குறை தீரவில்லை. இதனால் எப்போதும் மனக்குறையில் அவன் இருந்தான். அதையெல்லாம் தாண்டி வேதமுனிகளை அழைத்து அடிக்கடி அஸ்வமேத யாகம் செய்வது அவன் வழக்கமாயிருந்தது, அப்படி 99 அஸ்வமேத யாகங்களை முடித்திருந்தான்.

இன்னும் ஒரே ஒரு யாகம் செய்தால் அது 100 அஸ்வமேதயாகமாகிவிடும். அதன்பின் அவனுக்கு இந்திர பதவி கிடைத்துவிடும், இது இந்திரனுக்குப் பெரும் கலக்கத்தைக் கொடுத்தது.

இன்னொருவன் என்றால் இந்திரன் தன் படையால் பலத்தால் தன் சக்தியால் அவனைக் குழப்பிவிடுவான், வீழ்த்திவிடுவான். ஆனால் சோமசுந்தரனின் பக்தனும், வேதவழி மனுநீதிவழி வாழ்பவனை அவனால் தொடமுடியவில்லை.

இதனால் அவனுக்கு அவனின் பலவீனம் கண்டு ஒரு ஆலோசனைச் சொன்னான்.

அதாவது, பிள்ளையில்லாதவர்கள் இன்னொரு குடும்பத்துப் பிள்ளையினை சுவீகாரமெடுக்கலாம் ஆனால் அரசகுடும்பத்தால் அது முடியாது. காரணம், அரசகுடும்ப பிறப்பு என்பது வழிவழியாக வரவேண்டிய ஒன்று.

இதனாலே அரசனுக்கு அரசகுமாரி திருமணம் செய்துவைக்கப்பட்டாள். வழி வழியாக அந்த அரச வம்சத்து ஞானமும் ஆட்சி நடத்தும் திறனும் இப்படியே வழி வழியாக வந்தது, வம்ச வம்சமாக கடத்தப்படுவது.

அதனால் அரசர் அல்லாத குலத்தின் குழந்தையினை அவர்களால் தத்தெடுக்கமுடியவில்லை. அவர்களுக்கோ குழந்தையில்லை எனக் கடும் குழப்பத்திலும் கவலையிலும் இருந்தார்கள்.

இதை ஒரு வாய்ப்பாக எடுத்து உள்ளே புகுந்தான் இந்திரன். அவனுக்கு மலையத்துவஜ‌ன் அஸ்வமேதயாகம் செய்யக்கூடாது எனும் எண்ணம் மட்டும் இருந்தது, அதைத் தந்திரமாகச் செய்தான்.

“நண்பா, நான் உனக்கோர் ஆலோசனைச் சொல்கின்றேன். இதுவரை எத்தனையோ அஸ்வமேத யாகம் செய்து உனக்கு என்னாயிற்று? நீயோ பெரும் அரசன் இதற்குமேல் உனக்கு என்னவேண்டும்?

இப்போது உனக்குத் தேவை ஒரு வாரிசு அல்லவா? அதனால் புத்திர காமேஷ்டி யாகம் செய்து உனக்கோர் வாரிசு பெற்றுக்கொள், அதுதான் உனக்கும் உன் நாட்டுக்கும் நல்லது, அரசனின் பெரும் கடமை நாட்டின் எதிர்காலம் பற்றியது அல்லவா?” என அவனைத் தூண்டிவிட்டான்.

மலையத்துவஜனும் நிறைய யோசித்து அதன்படி புத்திர காமேஷ்டியாகம் செய்ய தீர்மானித்தான், பெரும் வேதபண்டிதர்களை அழைத்துப் பெரும் யாகசாலை கட்டி நல்ல நாளில் யாகத்தை தொடங்கினான்.

யாகம் வளர்ந்தது, மன்னனும் ராணியும் யாகத்தின் முன் அமர்ந்திருந்தார்கள். பெரும் மந்திரங்கள் முழங்க நெருப்பில் ஆகுதிகள் இட இட நெருப்பு ஓங்கி எழ எழ சில அறிகுறிகள் தெரிந்தன‌.

காஞ்சன மாலையின் இடதுகண் துடித்தது, யாகத் தீ வலது பக்கம் சுழித்து எரிந்தது. அந்நேரம் தடாகத்தில் தாமரை பூத்தது போல் மலர்ந்த முகத்துடன் ஒரு குழந்தை எழுந்து வெளிவந்து காஞ்சனமாலை மடியில் வந்து அமர்ந்தது.

அக்குழந்தை மற்ற குழந்தைபோல் இல்லாமல் மூன்று மார்புக்கான அடையாளம் பெற்றிருந்தது, அதனை முதலில் யாரும் கவனிக்கவில்லை.

குழந்தை ஓடிவந்து தன் மடியில் அமர்ந்த மகிழ்ச்சியில் காஞ்சனமாலை சிவனுக்குக் கண்ணீருடன் நன்றி சொன்னாள், யாகத்திலிருந்து கிடைத்த குழந்தை தெய்வக் குழந்தையாகக் கொண்டாடப்பட்டது.

யாகங்கள் எப்போதும் சக்திவாய்ந்தவை, எல்லையற்ற ஆற்றலைக் கொண்டிருக்கும். இந்தப் பிரபஞ்சத்திடமிருந்து எல்லாச் சக்திகளையும் எல்லா வகை செல்வம் ஆற்றலையும் ஈர்த்துத் தருபவை, சரியாகப் செய்யப்படுமிடத்தில் யாகங்களால் அற்புதங்களை எளிதாகச் செய்யமுடியும்.

அப்படி மன்னனுக்கு ஒரு குழந்தை கிடைத்தது, யாகம் வெற்றி அடைந்தது. இந்திரனும் புன்னகைத்தான்.

அந்நேரம் சிவபெருமானும் மெல்ல புன்னகைத்ததை யாரும் அறியவில்லை.

முற்பிறவியில் அவள் விசுவாவசு என்பவன் மகளாய் விச்சாவ‌தி எனப் பிறந்திருந்தாள். விசுவாவசு பண்டிதனாய் இருந்ததால் எல்லா ஞானவழிகளையும் அவளுக்குப் போதித்தான், அவளோ சிறுவயதிலே அன்னை தேவி மேல் பக்தி கொண்டவளாய் இருந்தாள்.

ஒருநாள் அவள் தன் தந்தையை வணங்கி, “அப்பா, தேவியை வழிபடுவதற்கு ஏற்ற சிறந்த புண்ணிய தலம் எது?” என்று கேட்க அவன் சொன்னான்.

“மகளே, பூலோகத்திலே துவாதசந்தம் என்ற பெயருடைய நகரம் ஒன்று, அதைப் பூலோக சிவலோகம் என்றும் சொல்வர். தேவிக்கு உரியதான சக்தி பீடங்கள் அறுபத்து நான்கிலே அது முதன்மையானது.

(மதுரைக்குச் துவாதசந்தம் என்றொரு பெயரும் உண்டு, துவாத சந்தம் என்பது தலைக்கு மேல் 12 அங்குலமுள்ள சக்கரம், அது துலங்கும்போது இந்தப் பிரபஞ்சத்துடன் கூடிவிடும் ஞானம் கிடைக்கும்.

ஒருவகையில் ஞானியர் தலையில் கொண்டை வைப்பதும், அரசனுக்கு மகுடம் சூட்டப்படுவதும் இந்தத் தாத்பரியமே.

மதுரை தலத்தில் அப்படிப்பட்ட யோக சாதனை எளிது என்பதால் அங்கு உச்சந்தலைக்கு மேல் உள்ள சக்கரம் துலங்குதல் அன்னை வரத்தால் எளிது என்பதால் இந்தப் பெயர் அன்றே இருந்தது.

துவாத சந்தம் என்றால் ஆத்மா இறைவனோடு இணைந்து துவாத நிலை தாண்டி ஒரு நிலையாவது எனப் பொருள். மதுரையம்பதி அந்த வரத்தை வழங்கும்.

பொற்றாமரை என யோக மொழியில் சொல்லப்படுவதும் ஏறக்குறைய அதே உச்சந்தலை சக்கரமே.

விராட புருஷன் எனும் இந்தப் பூமியின் அம்சமானவனுக்கு அந்த மதுரையம்பதிதான் உச்சந்தலை சக்கரம் என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டியது)

என்றவன் தொடர்ந்தான்.

“மகளே, பஞ்சசுவரன், யக்ஷன், வசுபூரணன், சுவச்சவித்தரன் ஆகிய நால்வரோடு நானும் அங்கே சென்று சோமசுந்தரப் பெருமானையும் அங்கயற்கண்ணி அம்மையாரையும் வழிபட்டு வரங்களைப் பெற்றுள்ளோம். அந்தத்தலமே உன் பூஜைக்கு ஏற்றதாகும்” என்றான் விசுவாவசு.

அதைக் கேட்டதும் விச்சாவதி தந்தையிடம் விடைபெற்று மதுரையை அடைந்தாள். பொற்றாமரையில் நீராடி, இறைவனைத் தரிசித்து அங்கயற்கண்ணியைப் பிரார்த்தித்துக் கொண்டு விரதம் இருக்கலானாள்.

அவள் விரதம் கடுமையாக இருந்தது, மாதக்கணக்கில் நீடித்தது.

அவள் தைமாதத்திலே பகலில் மட்டும் உணவு உட்கொண்டாள். மாசியிலே பகலில் விரதமிருந்து இரவில் உணவு கொண்டாள்; பங்குனி மாதத்தில் யாசகம் பெற்ற உணவையே உட்கொண்டாள்.

சித்திரையில் இலைகளை மட்டும் உணவாகக் கொண்டாள், வைகாசி மாதத்தில் எள்ளுப்பொடியால் தயாரிக்கப் பட்ட உணவை மட்டும் உண்டாள், ஆனி மாதத்தில் சாந்திராணி நோன்பு இருந்தாள்.

ஆடியிலே பஞ்சகவ்யமும், ஆவணியிலே பாலும், புரட்டாசியில் சுத்த நீரும் உட்கொண்டாள்; ஐப்பசியில் தர்ப்பைப் புல்லின் நுனியிலே தேங்கி நிற்கும் நீரை ஆகாரமாகக் கொண்டாள்.

கார்த்திகையில் காற்றுதான் அவளுக்கு ஆகாரம், மார்கழியில் அதுவுமில்லை.

இவ்வாறு கடுமையான விரதத்தினால் நாணல் போல் மெலிந்த தேகத்துடன் அவள் தேவியை வழிபட்டு வந்தாள்.
அவளுடைய பூஜையால் மகிழ்ந்த தேவி, மூன்று வயதுப் பெண் குழந்தையாக அவள் முன்தோன்றி அவளுக்குத் தரிசனம் தந்தாள்.

விச்சாவதி அந்த அற்புதக் கோலத்தைக் கண்டு மெய் சிலிர்த்து தேவியை நமஸ்கரித்து தொழுது பணிந்து எழுந்தாள். அன்னை அவளிடம் “இவ்வளவு கடும்தவம் இருக்கும் என் அன்புகுரியவளே உனக்கு என்ன வரம் வேண்டும் சொல் எனக் கேட்டாள்”

அதற்கு விச்சாவதி உருகிக் கேட்டாள், “அம்மையே, உன் திருவடிகளில் என்றும் நீங்காத பக்தியினை எனக்கு அருள வேண்டும். மேலும், எந்தக் கோலத்தில் இப்போது நீ எனக்குக் காட்சி தந்தாயோ , அப்படியே நீ எனக்கு மகளாய் வரவேண்டும்” எனக் கேட்டாள்.

அன்னை புன்னகைத்துச் சொன்னாள், “இதே மதுரையில் மலையத்துவஜ‌ன் மனைவியாக நீ வரும்போது உனக்கு மகளாக நான் வருவேன், உன் மடியில் வளர்வேன்” என உறுதியளித்தாள்.

இது இப்பிறப்பில் காஞ்சனமாலைக்கு மறந்துவிட்டது. ஆனால், வரம்கொடுத்த தெய்வம் அதை மறக்காமல் தான் சொன்னபடி கொடுத்து புன்னகைத்து நின்றது.

தனக்கு முன் ஜென்மம் மறைக்கப்பட்டிருந்தாலும் உணர்வால் வரும் பந்தத்தால் தடாதகையின் மேல் தன் உயிரையே வைத்து வளர்க்கத் தொடங்கினாள் காஞ்சனமாலை.

சில நாட்களில் மன்னனுக்கு அக்குழந்தைக்கு மூன்று தனங்கள் இருப்பது தெரியவந்தது, மன்னன் ஏற்கனவே பெண் மகவு கிடைத்ததில் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்திருந்தான், அவனுக்கு ஆண்மகவு எதிர்பார்ப்பாய் இருந்தது. அரசன் மனம் அப்படி எதிர்பார்த்ததில் ஆச்சரியமில்லை.

அதே நேரம் கிடைத்த பெண் மகவும் இப்படி மூன்று தனங்களோடு இருப்பது இன்னும் வருத்தமானது. காரணம், அலங்கோல பிறப்பு அரசுக்கு ஏற்றதல்ல, சில லட்சணங்கள் குறைவு என்பது அங்கு விரும்பப்படுவதல்ல‌.

இதனால் மன்னன் வருத்தமுற்ற நேரம் அவனுக்கோர் அசரீரி கேட்டது.

“மலையத்துவஜா, ஏன் அவளை எண்ணிக் கலங்குகின்றாய். அது நான் கொடுத்த செல்வமன்றோ? ஒரு ஆணைப்போல அவளுக்கு எல்லா அரசப்பயிற்சியும் கொடுத்து வளர்த்து வா, தடாதகை எனும் பெயரோடு அவள் வளரட்டும். அவளுக்கான மணாளனைக் காணும்போது அவளின் மூன்றாம் மார்பு மறைந்துவிடும். அவளால் உன் நாடும் உலகமும் சிறப்புப்பெறும்” என்றது.

மன்னன் அசரீரிக் குரல் கேட்டபின் பெரும் உற்சாகம் அடைந்தான், யாகம் செய்த அர்ச்சகர்களுக்கு வாரி வாரி வழங்கினான். சிறை கைதிகளை விடுவித்து மகிழ்ந்தான், அக்கம் பக்கம் நாட்டுக்குப் பரிசுகளை அனுப்பினான், அவர்களும் நிறைய பரிசுகளை அனுப்பினார்கள்.

பாண்டிய நாட்டிலே பெரும் விழா எடுத்து தடாதகைக்குச் சோமசுந்தரர் சந்நிதியிலே தேன் தொட்டு வைத்து “ஓம் நமசிவாய” என ஓதவைத்து, காதில் கம்மலிட்டு பெரும் பூஜை செய்து மக்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடினான்.

தடாதகையினை ஒரு அரசகுமாரனைப் போல வளர்க்கத் தொடங்கினான். அவளும் எல்லாவற்றையும் சுலபமாகக் கற்றாள், வயலில் நீர் இட்டு வளர்க்கும் பயிர்போல் அல்லாமல் ஏற்கனவே மறைந்திருந்த ஊற்று வெடித்தது போல் அவளுக்கு எல்லாமே இயல்பாக வந்தது.

அரகுமாரியாக இல்லாமல் அது எல்லாக் குழந்தைகளுடன் இளமையிலே கலந்து களங்கமற்று விளையாடிற்று. பொம்மை விளையாட்டு, வீதியில் மணல் வீடு கட்டி விளையாட்டு என எல்லா விளையாட்டுக்களையும் அது எல்லாக் குழந்தைகளுடனும் விளையாடிற்று.

கலகல சிரிப்பும், களங்கமற்ற தெய்வீக முகமும் பட்டுப்பாவாடை சட்டையும், கண்களிலே குறும்பும் இதழில் இனிமையும் கொண்டு, கைநிறைய வளையலும் காலில் கொலுசுமாக அது தேவாம்சமாக வந்து விளையாடியபோது எல்லோருக்குமே செல்லக் குழந்தையானது.

காலம் வேகமாக ஓடியது, ஓடும் ஆற்றினை மறித்து வளர்க்கப்படும் பயிரினைப் போல தடாதகை எல்லாக் கலைகளும் பெற்று வளர்ந்தாள்.

அவளுக்கு வேத மந்திரங்களும் ஞானமும் மறையும் அத்துப்படியாயின. சோமசுந்தரபெருமானுக்குரிய எல்லாப் பூஜா விதிகளும் மனப்பாடமாயின, ராஜரீகம் எனும் அரசு செலுத்தும் கலை அவளுக்கு இயல்பாய் வந்தது.

ஜாதகம் முதல் எல்லாக் கலைகளும் அவள் கரங்களில் அடங்கின, எல்லா வித கலைகளும் ரகசிய வித்தைகளும் அவள் விரல் நுனிக்கு வந்தன‌.

யானைகளை எளிதாக அடக்கிக் காட்டினாள். குதிரைகள் அவளுக்குக் கட்டுப்பட்டன. சொன்னதைச் செய்தன. வாள் அவள் கைகளில் புயலென சுழன்றது, வேலும் வில்லும் அவள் கண்காட்டிய இடத்தில் சரியாகப் பாய்ந்தன‌.

ஆயிரம் ராஜகுமாரர்களுக்கு ஈடானவள் எனும் அளவு அவள் பெரும் இடம் அடைந்தாள்.

மன்னன் அவளைக் கண்டு பெருமிதம் அடைந்தான். அவனுக்கும் வயது ஏறிக்கொண்டே சென்றது. அவன் கடம்பவன நாதர் சந்நிதியில் காலம் கழிக்க விரும்பி ஆட்சியினை மகளிடம் கொடுக்க முடிவு செய்தான். அவள்பால் தேசமும் அறிஞர்களும் மந்திரிகளும் ரிஷிகளும் கொண்டிருந்த அதே நம்பிக்கையினை அவனும் கொண்டிருந்தான்.

இதனால் ஜோதிடரீதியாக மிக நல்ல நாள் ஒன்றில் பட்டாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தான். எட்டு திக்கிலும் இருந்து மன்னர்கள் குவிந்தனர். பெரும் பெரும் பரிசுகளும் பொன்னும் மணியும் சிறந்த குதிரைகளும் யானைகளும் பரிசாய்க் கொட்டப்பட்டன‌.

மதுரை நகரமே பெரும் விழாவில் புகுந்தது. எங்கும் விருந்தும் இனிப்பும் கொண்டாட்டமுமாக திரும்பும் இடமெல்லாம் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.

பெரிய யாக சாலை அமைக்கப்பட்டு ஆயிரகணக்கான ஞானபண்டிதர்கள் வேதம் ஓதினார்கள். எல்லாப் புண்ணிய நதிகளிலும் இருந்து புனிதநீர் தங்கக்குடத்தில் எடுத்துவரப்பட்டது.

வேத கர்மாக்கள் முடிந்து சம்பிரதாய சடங்குகளெல்லாம் முடிந்த நிலையில் அவள் மேல் புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு நீராட்டப்பட்டது. பின் யாக சாலை புனிதநீர் தெளிக்கப்பட்டது, அவள் ஐந்து தலை நாகம் குடைபிடிக்கும் பொன்னாலான சிம்மாசனத்தில் அமரவைக்கப்பட்டு தூப வர்க்கம் சாற்றப்பட்டது.

அவளிடம் வெண்கொற்றகுடை ராஜகுருவாலும் செங்கோல் மன்னனாலும் கொடுக்கப்பட்டது. அவள் அதை பற்றிக்கொண்டபோது பெரும் நிறைவடைந்தான் மலையத்துவஜன்.

காஞ்சனமாலை மனமெல்லாம் நிறைந்திருந்தது.

அவளுக்கு வேதங்களில் சிறந்த முனிவர் மகுடத்தை சூட்டினார். ஊர் அதிர வேத மந்திரம் முழங்க, வாத்தியங்கள் முழங்க மக்கள் பேரொலி முழங்க அவள் ராணியாக முடிசூடினாள்.

பின் அவள் தங்கள் குலப்பெருமையான வெள்ளை நிற‌ பட்டத்து யானை மேல் பாண்டிய குலத்துகுரிய வேப்பமாலை அணிந்து, அமர்ந்து சோமசுந்தரர் கோவிலுக்குச் சென்று வணங்கினாள்.

ஒவ்வொரு தாய்மாரும் வந்து அவளை வாழ்த்தினர், அவள் எல்லோரின் வாழ்த்துக்களையும் பெற்றவளாய் நிறைவடைந்தாள்.

அவளுக்கு முடிசூடிய நிறைவில் மலையத்துவஜன் சிவனுடன் கலந்தான், முழு ஆட்சிபொறுப்பும் தடாதகையிடம் வந்தது.

அவள் மிகச் சிறந்த வகையில் சிறு பிசிறுமின்றி ஆட்சிபாரத்தை அழகுறத் தாங்கினாள். எல்லா வகையிலும் அவள் நாடு இந்திரலோகம்போல் இருந்தது.

அவள் கோழி கூவ எழுந்து நீராடி சிவபூஜை முடித்து தன் பரிவாரம் புடைசூழ சோமந்தர் சந்நிதியினை அடைந்து வணங்குவாள். பின், தன் அரசமண்டபத்தை அடைந்து அன்றைய காரியங்களைக் கவனிப்பாள்

நாட்டில் நடக்கும் தர்மகாரியம், அறகாரியம், சிவகாரியம், ராஜகாரியம் என எல்லாமும் கவனமாய்க் கேட்டுக்கொள்ள்வாள், நாட்டின் பாதுகாப்பு நிதி நிலவரம் எல்லாம் சரிபார்ப்பாள்.

மக்களின் குறைகளை எல்லாம் தீர்த்துவைத்து அவர்கள் வேண்டுவன அத்தனையும் தருவாள். குற்றம் செய்தவர்களுக்குத் தகுந்த தண்டனையினைத் தாட்சண்யமின்றி அறிவிப்பாள்.

சிவகாரியங்கள்,கோவில்களின் வருமான‌ நிலைகள், கோவில் யாத்திரை வழிகள், சாவடிகள், பக்தர் நலன்கள் என எல்லாமும் விசாரிப்பாள். எல்லாவகை யாகமும் வேதநெறிப்படி நடத்தபட்டதா எனச் சரிபார்ப்பாள்.

பின், அந்நிய நாட்டு உறவுகளை ஆராய்வாள். பரிசுகளைப் பெற்றும் அனுப்பியும் வைப்பாள். பல தேசங்களிலிருந்தும் கலைகளில் சிறந்தவர்கள் தர்க்கங்களில் சிறந்தவர்களுடன் உரையாடுவாள்.

மதியம் விருந்தாளிகளுடனும், துறவிகளுடன் அமர்ந்து உண்ணுவாள். பிற்பகலில் புராணங்களிலும், இதிகாசங்களினும் சொல்லப் பட்டுள்ள உத்தமமான கதைகளைப் பற்றி எல்லாம் அறிந்த விற்பன்னர்கள் சொல்ல சொல்ல கேட்டு மகிழ்வாள்.

மாலையில் நடனம், சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு மீண்டும் ஆலயம் சென்று இறைவனைத் தரிசித்துத் திரும்பி இரவிலும் ஒற்றர்களுடன் கலந்தாலோசித்துவிட்டு சிவநாமம் சொல்லி ஓய்வுக்குச் செல்வாள்.

அவள் ஆட்சியில் இல்லை என்பதே இல்லாதபடி எல்லாமே சிறந்திருந்தன. குடிகள் பெரும் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். அவர்கள் நலமும் காவலும் உறுதி செய்யப்பட்டிருந்தன. வியாபாரிகளுக்கு எல்லா வகை காவலும் கொடுக்கப்பட்டது.

அவள் பெயரைக் கேட்டாலே அந்நியர் அஞ்சியதால் எல்லா வகையிலும் எதிரிகள் இல்லா தேசமாக அது நிமிர்ந்து நின்றது.

எல்லா வகையிலும் ஆலயங்கள் குறைவின்றி ஒளிர்ந்தன. அறவழி ஆட்சி அந்தணர்வழி வேதங்களுடன் தழைத்திருந்தது. எங்கும் வேதசாலைகளும் யாக சாலைகளும் சிவவழிபாடுமாக தேசம் பொற்காலத்தின் உச்சியில் இருந்தது.

ஒரு கன்னியால் நடத்தப்படும் ஆளப்படும் நாடு என்பதால் அது கன்னிவளநாடு என்றே அன்று அழைக்கப்பட்டது.

இதுதான் மலையஜத்துவனுக்கு மகள் வந்து அவள் ஆட்சியேற்று ஆண்ட திருவிளையாடல். தேவியே மன்னன் மகளாய் வந்து நின்ற அதிசய திருவிளையாடல்.

இந்தத் திருவிளையாடல் பல நுணுக்கமான தத்துவ ஞானங்களைப் போதிக்கின்றன‌.

முதலில் இந்துமதம் பெண்களுக்குக் கொடுத்த முழுச் சுதந்திரம் பற்றிப் பேசுகின்றது. அந்த விச்சாபதி எல்லா ஞானநூல்களும் மந்திரங்களும் இன்னும் பலவும் அறிந்தவளாய் இருந்திருக்கின்றாள், அவள் விருப்பப்படி செல்ல அவள் தந்தையும் அனுமதித்திருக்கின்றான்.

இங்கே தடாதகை எனும் பெண்ணை அரசியாக்க எல்லோரும் ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள். திறமை மிகுந்த பெண் என்றால் அவளுக்கு வரவேற்பு இருந்ததே தவிர பெண் அடிமைத்தனமில்லை.

இந்துமதம் பெண் அடிமைத்தனம் கொண்டது என்பதையெல்லாம் உடைத்து எப்போதோ பெண்களை அரசாள வைக்கும் அளவு இந்துமதம் பெண்களைக் கொண்டாடியிருக்கின்றது என்பதை இது போதிக்கின்றது.

அப்படியே மலையத்துவஜன் ஒரு நாளைக்கு மூன்றுவேளை சிவனை தரிசித்த பலன் அவரில் பாதியான சக்தியினையே மகளாக பெறும் அளவு அவனுக்கு வரமாக திரும்பி வந்தது. சோமசுந்தர பெருமானை வணங்குவோர்க்கு ஒன்றும் குறைவுபடாது எல்லாமே பன்மடங்கு ஆசீர்வாதமாகத் திரும்பி வரும் என்பதையும் இக்காட்சி போதிக்கின்றது.

காஞ்சனமாலையின் கதை இன்னும் அற்புதமானது. ஒரு பிறப்பில் செய்யும் தவமும் வழிபாடும் பல பிறப்பில் தொடர்ந்து வரும் என்பதற்கும் ஒரு பிறப்பில் வேண்டுவதை மானிட ஆத்மா மறந்தாலும் அந்தத் தெய்வம் மறக்காமல் திருப்பி நமக்கு தரும் என்பதும் இங்கு ஆழமாகப் போதிக்கப்படும் உண்மை.

இங்கு ஒரு ஜென்மத்தில் செய்யப்படும் வேண்டுதல் இந்த ஜென்மத்தில் இல்லாவிட்டாலும் பிரிதொரு ஜென்மத்தில் கிடைக்கும் என்பது இந்தத் திருவிளையாடலில் காட்டப்படும் ஞான தத்துவம்.

துவாதசந்தம் என்றால் என்ன என்பதையும் இந்த திருவிளையாடலே சொல்கின்றது. உச்சந்தலை மேலுள்ள சக்கரத்தை துலக்கும் தலம் இது. அதாவது, இறைவனுடன் கலக்கும் மிகப்பெரிய உன்னத நிலையினைத் தரும் ஆலயம் இது.

இதனாலே எல்லாச் சித்தர்களும் அகத்தியர் முதல் குமரகுருபரர் கண்கண்ட ரமணர் என எல்லோருக்கும் ஞான சக்தியினைக் கொடுத்து அவர்கள் ஆத்மாவினை இறைவனோடு கலக்கச் செய்த தலமும் இது.

தமிழ்ச்சங்கம் என ஞானியர் கூடி அழியாப் பெரும் ஞானநூல்களைத் தந்ததன் ரகசியமும் இதுதான்.

இந்த ஆலயத்தில் வணங்கினால் குழந்தை செல்வம் கிட்டும். அதுவும் பெயர் சொல்லும் ஞானக்குழந்தையாக, இறைவனின் ஆசிபெற்ற அரும் குழந்தையாக, சிறந்த குழந்தையாக, பெற்றோர் பெயர் சொல்லும் குழந்தையாக அமையும்.

மதுரை ஆலயத்தில் வணங்கும் போது மலையத்துவஜன் காஞ்சனமாலை நினைவோடு அந்தச் சோமசுந்தரரை வணங்குங்கள். பணிந்து நில்லுங்கள். உங்கள் குலம் காலத்துக்கும் நிலைக்கும்படி உங்கள் பெயரும் நிலைக்கும்படி ஞானமான அறிவான வாரிசுகளை அந்த ஆலயம் தரும். நீங்கள் நம்பி பணிந்தால் தரும். இது சத்தியம்.