திருவிளையாடல் புராணம் 53 : தடாதகையினை ஈசன் மணந்த படலம்.
திருவிளையாடல் புராணம் 53 :
தடாதகையினை ஈசன் மணந்த படலம்.
தடாதகைக்குத் திருமண வயது வந்ததும் காஞ்சனமாலை பெரும் பொறுப்புடன் கவலையினையும் சேர்த்துச் சுமக்கத் தொடங்கினாள். மகளுக்கு மணம் செய்துவைப்பது பெற்றோரின் மிக முக்கிய கடமை. அவ்வகையில் மகளின் திருமண பொறுப்பு என்பது பெரும் மனச்சுமை.
கணவனுமில்லாக் காஞ்சனமாலை அந்தக் கவலையினைத் தனியே சுமந்தாள்.
அவள் தன் கவலையினை அந்த ஆலவாயனிடமே முறையிட்டு வணங்கினாள். தன் மகள் தேவியின் அம்சம் என்பதால் அவளுக்கேற்ற கணவனைக் கண்டறிவது கடினம் என உணர்ந்து அவரிடமே வணங்கி நின்றாள்.
அதே நேரம் தனக்கான கணவனைத் தானே அடைவது என முடிவு செய்தாள் தடாதகை. வீரத்திலும் அறிவிலும் யார் தன்னைவிடச் சிறந்தவனோ, எந்த அரசனால் தன்னை வெற்றிக்கொண்டு நாண வைக்க முடியுமோ அவனையே மணப்பது என முடிவு செய்த தடாதகை தன் பரிவாரங்களுடன் திக் விஜயம் தொடங்கினாள்.
ஆலவாய் நாதனிடம் சென்று மனமார வேண்டியவள் இது தன் வீரத்தால் நாட்டை பிடிக்கும் ஆசை அல்ல. மாறாக, தனக்கான வாழ்வை தனக்கானவனைத் தேடும் பெரும் முயற்சி என வணங்கி நின்று பிரார்த்தித்தாள், மனமுருகப் பிரார்த்தித்தாள்.
தாயிடம் ஆசிவாங்கி, பெரியோரிடமும் ஆசிகள் பல பெற்றுத் தன் விஜயத்தை வடக்கு நோக்கிச் செலுத்தினாள், தன் தோழியருடன் ரதத்தில் ஏறிப் பெரும் படையோடு சென்றாள்.
அவளின் சேனைகள் பெரும் கடல் போல் ஆர்ப்பரித்தன. நால்வகை படையும் மிகப் பெரியதாய் அதி சிறந்ததாய் இருந்தது. அதனைக் கண்டாலே எல்லா மன்னரும் மிரளும்படி அது அச்சத்தைக் கொடுத்தது, அதைவிட அது நகரும் வேகம் அசாத்தியமாக இருந்தது. பெரும் புயலைப் போல புழுதிக் கிளம்ப அது முன்னேறியது.
அந்தச் சேனைகள் நடுவே கையில் வஜ்ராயுதம் தாங்கியபடி நின்று வழிநடத்தினாள் தடாதகை.
அவள் வருகின்றாள் என்றதுமே எல்லா நாட்டு மன்னர்களும் அடிபணிந்தார்கள், ஓடிவந்து கப்பம் கட்டி வணங்கினார்கள். தன்னை அடிபணிந்த மன்னர்களை எளிதாகக் கடந்து சென்றாள் தடாதகை. எதுவும் அவளைப் பாதிக்கவில்லை, தன்னிடம் தோற்பவர்களை நோக்கி ஒரு மெல்லிய புன்னகையுடன் தன் அடிமைகளில் ஒருவராக அவர்களை சேர்த்துக் கொண்டு வடக்கு நோக்கி முன்னேறினாள்.
அவளின் பெரும் சேனையும் மூன்று மார்பகத்துடன் இருக்கும் அவளைப் பற்றிய அச்சமூட்டும் செய்திகளும், இன்னும் அவளின் அசாத்திய வீரமும் போர்கலையும் எல்லோர்க்கும் அச்சத்தைக் கொடுத்தது, அவளை எதிர்ப்பார் எவருமிலர்.
அப்படியான தடாதகை தன் சேனைகளுடன் இமயமலையினைக் கடந்து செல்ல வந்து நின்றாள், பெரும் நதிக்கு அணைகட்டியது போல இமாலய பர்வதம் முன் அவள் சேனை தேங்கி நின்றது, அவளின் இலக்கு கயிலாயம், குபேரபுரி என அடுத்தடுத்து இருந்தது.
அந்நேரம் இமயத்தில் வாழும் சிவனின் பூதகணங்கள் இதனைத் கண்டன, அவைகளுக்கும் தடாதகையின் தூதர்களுக்கும் பேச்சுவார்த்தை நடந்தது, இங்குப் பாண்டிய படை நுழைய தடை என்றன பூத கணங்கள்.
எங்களைத் தடுப்பது யார்? எனப் போரை துவக்கினாள் தடாதகை. பெரும் போர் மூண்டது. ஈசனின் பூத கணங்களைத் தானே களமிறங்கி அடிக்கத் துவங்கினாள் அவள், அந்தக் கையில் இருந்த வஜ்ராயுதம் பெரும் ஜாலம் காட்டிற்று.
அவளின் தாக்குதல் முன்னால் நிற்கமுடியாத பூதகணங்கள் சிவனிடம் ஓடின, “ஒரு பெண் காளி போல் நின்று ஆடுகின்றாள், எங்களால் அவளிடம் தாக்குப் பிடிக்கமுடியவில்லை” என அவை மண்டியிட்டன.
நந்திதேவரும் இன்னும் சிலரும் ஓரளவு தாக்குப்பிடித்தாலும் தடாதகையின் ஆட்டம் முன் நிற்கமுடியவில்லை, இதனைக் கண்ட சிவன் தானே வில்லேந்தி விடைமேல் ஏறி வந்தார்.
சிவனே களத்துக்கு வருவதை மிக மிக ஆரவாரமாக சிவகணங்கள் வரவேற்று முரசு கொட்டி மகிழ்ந்தன, கவனத்தை அங்கே திருப்பிய தடாதகை வருவது யார் எனக் காண ஆவல் கொண்டு அங்கே விரைந்தவள் வழக்கம் போல் முந்திக் கொண்டு தாக்க விழைந்து அருகே சென்றபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது.
ஈசனைக் கண்டதும் அவள் மனதில் பெரும் மாற்றம் வந்தது; அவளுக்குள் நாணமும் வெட்கமும் குடி கொண்டது; தன்னுள் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்தவள் நாணத் தொடங்கி தலைக்குனிந்தாள்; அவள் கையில் இருந்த ஆயுதம் தானே நழுவியது. ஒரு மொட்டு மலர்வது போல் அவளுக்குள் பெண்மை மலர்ந்தது, தன்னை அறியாமல் தன் மனம் அவரிடம் கரைவதை உணர்ந்தாள்.
அந்தக் கணம் அந்த மூன்றாம் மார்பு மறைந்தே போனது, அவள் எல்லாப் பெண்களையும் போல் இயல்பான பெண் தோற்றம் பெற்றாள்.
கோபமும் ஆவேசமும் கொண்டிருந்த கண்கள் காதலைக் காட்டின. அதுவரை எச்சரித்தே பழக்கப்பட்ட வாய் ஈசன் முன்னால் பேசத் திணறியது, பெரும் படபடப்பும் பயிர்ப்பும் அவளைத் தொற்றிக்கொள்ள தன்னை அறியாமலே அவரிடம் அடிபணிந்தாள்.
அவளைப் பற்றி அறிந்திருந்த தோழியர் “இவரே உன் மணவாளன்” என மகிழ்ச்சியாய்ச் சொல்ல, தன் மனதினை அவர்கள் சொன்னதில் மகிழ்ந்தாள். அதே நேரம் ஈசன் என்ன சொல்வாரோ எனும் அச்சமும் எழுந்தது.
அந்நேரம் ஈசன் புன்னகை பூக்கச் சொன்னார், “ஏ தடாதகையே, உன்னைவிட்டு நான் எப்போதும் பிரிந்ததே இல்லை, உன்னுடன் இருந்தே உன்னை நடத்துகின்றேன், மதுரையில் இருந்து உன்னை இங்கு அழைத்து வந்தது நாமே, இனி நீ என்னோடு கலக்க வேணடிய தருணம் வந்துவிட்டது, அதனால் நீ திரும்பி மதுரைக்குச் செல். வரும் சோமவாரத்தில் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்”
ஈசனின் வார்த்தைகளில் மகிழ்ந்தவள் மிக்க மகிழ்வுடனும் அவர் நினைவுடனும் காற்றிலும் வேகமாக மதுரையினை அடைந்தாள். மகளுக்கான மணவாளன் கிடைத்துவிட்ட மகிழ்வில் அதுவும் ஈசனே தனக்கு மருமகனான மகிழ்வில் காஞ்சனமாலை எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தாள்.
பாண்டிய நாடே விழாக்கோலம் பூண்டது, எங்கும் பெரும் மகிழ்ச்சி தாண்டவமாடிற்று, இரவெல்லாம் விளக்குகள் எரிய வேலைகள் நடந்தன, எல்லா நாட்டு மன்னர்களையும் அவள் வென்றிருந்ததால் அவர்களெல்லாம் பெரும் திரையுடன் வந்து திருமண வேலைகளைச் செய்தார்கள்.
அவளுக்கு எதிரிகளே இல்லை என்பதாலும், எல்லா மன்னரையும் வென்றவள் என்பதாலும், மணமகன் ஈசன் என்பதாலும் விண்ணவரும் மன்னவரும் ஒன்று கூடி அந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள்.
பெரும் உணவும் பந்தியும் ஏற்பாடு செய்யும் படி தானியமும் பழங்களும் காய்கறிகளும் பெரும் பந்தலில் மலை மலையாக குவிக்கப்பட்டன, ஆட்கள் ஓடி ஓடி தயாரானார்கள்.
இன்னொரு பக்கம் பெரும் பெரும் அலங்காரங்கள் தயாராயின. மக்கள் வீடுகளையும் தெருக்களையும் அலங்காரப்படுத்தினார்கள். எங்கும் மகிழ்ச்சி கரைபுரண்டோடிற்று.
இந்திரன் தன் கற்பக மரம், சிந்தாமணி, காமதேனு என எல்லாவற்றையும் திருமண வேலைக்கு அனுப்பினான். அவை என்ன கேட்டாலும் கொடுத்துக் கொண்டே இருந்தன. தேவலோகச் சிற்பிகள் வந்து மிக மிக அழகான மண்டபத்தைக் கட்டி அதனை நவமணிகளும் ஜொலிக்கும் கற்களுமாக கொண்டு இழைத்து அழகுப்படுத்தினர்.
அந்த மகா மண்டபத்தின் நடுவே ஒரு அற்புதமான அதுவரை உலகம் காணாத வகையில் சிம்மாசனம் இருந்தது, அதன் அருகே சற்றுத் தள்ளி பெரிய யாகக் குண்டம் நிறுவப்பட்டது.
மக்களும் தேவரும் அணி அணியாகப் பிரிந்தனர். தேவர்களை வரவேற்க, ரிஷிகளை வரவேற்க இன்னும் பல நாட்டு மன்னர்களை வரவேற்று தங்கவைக்க பலவகையான வரவேற்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.
எங்கும் மேளதாளமும் பெரும் நடனக் கொண்டாட்டமும் ஆராவாரமும் மகிழ்ச்சியுமாக மணநாளுக்கான பெரும் தயாரிப்பு நடந்தது. பூலோகம், வானலோகம், பாதாள லோகம் என ஈரேழு உலகமும் அதற்குத் தயாராயின.
தடாதகையின் திருமணம் காண எல்லா நாட்டு அரசர்களும் வந்தார்கள். கொங்கர், சிங்களர், பல்லவர், சேரர், கோசலர். பாஞ்சாலர், அங்கர், சோனகர், சீனர், சாளுவர், மாளவர், காம்போஜர், மகதர், விதர்ப்பர், கங்கர், கொங்கணர்.
விராடர், மராடர், கர்நாடர், ஆரியர், சோழர்,அவந்தியர், குருநாடர், கலிங்கர், சாவகர், கூவிளர், ஒட்டியர், கடாரர், காந்தாரர், குலிங்கர், கேகயர், விவேகர், பௌரவர், கலியாணர், தெலுங்கர், கூர்ச்சார், மிலேச்சர், செஞ்சயர் என்று பல நாட்டு மன்னர்களும் குவிந்தார்கள்.
அப்படியே சிவகணங்களும் பெரும் பெரும் சக்திவாய்ந்த தெய்வங்களும் தேவலோக வாசிகளும், பெரும் ரிஷிகளும் வந்தார்கள்.
காலாக்னிருத்திரர், அஷ்டவித்யேஸ்வரர், கூர்மாண்டேசர், சதருத்திரர், நூறுகோடிருத்திரர், அஷ்டமூர்த்திகள், ஏகாதசருத்திரர், வீரபத்திரர், ஐயனார், அஷ்டபைரவர், விஷ்ணு, பிரம்மன், இந்திரன் முதலான அஷ்டதிக்குபாலர்கள், அஷ்டவசுக்கள், நாற்பத்தொன்பது மருத்துக்கள், அஸ்வினி தேவர்கள், துவாதச ஆதித்தர்கள் சந்திரன் முதலான தேவர்கள்.
இன்னும் வியாக்கிரபாதர், வாமதேவர், வியாசர், நாரதர், சப்தரிஷிகள், சப்தமாதர்கள், வித்தியாதரர், யஷர், கின்னரர், நாகர், உரகர், முனிவர்கள், யோகியர் ஆகியோர் இறைவன் மணக்கோலத்தைக் கண்டு மகிழ கைலாயத்தில் வந்து கூடினர்.
சித்தர்களும் ரிஷிகளும் வந்தார்கள். சுகர் முதலான சித்தர்களும் வந்தார்கள். இன்னும் சப்தஸாகரங்களும், சப்த நதிகளும், சப்த மேகங்களும், அஷ்டதிக்குகளும், அஷ்டதிக்குகஜங்களும், ஐம்பெரும்பூதங்களும், நான்கு மறைகளும், இருபத்தெட்டு ஆகமங்களும், அஷ்டமா சித்திகளும், சப்தகோடி மந்திரங்களும் திருவுருக் கொண்டு கயிலையை அடைந்தன.
எங்கும் “ஹர ஹர” என்ற முழக்கம் ஓங்கியது. பரமனின் திருமணம் பார்க்கும் பாக்கியம் அறிந்து அனைவரும் ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.
உரிய நாளும் வந்தது. அது பங்குனி உத்திர நாளாக சோமமாரமாக இருந்தது.
பிரம்மனும் விஷ்ணுவும் இருபக்கமும் வர சிவன் மணமகனாக எழுந்து வந்தார். அவர் பெரிய ரத்தினமாலைகள், மலர் மாலை என அணிந்திருந்தார். பாண்டிய தேசத்தார் எதிர்கொண்டு ஒளிரும் முத்துமாலையினை அணிவித்தார்கள்.
ஊர்வலம் மதுரைக்குள் வந்தது, குண்டோதரனுடைய முதுகிலே திருவடியை வைத்து ஏறி, ரிஷபத்தின் மீது எழுந்தருளி பவனி வந்தார்.
தேவர்கள் மலர் மாரி பொழிய, இன்னும் யக்ஷர்களும், பூதர்களும், அரக்கர்களும், வாத்தியங்களை இசைத்தனர். வித்தியாதரர் தாளம் போட அரம்பையர்கள் அசைந்தாடி முன்னால் வந்தனர்.
பானுகம்பன் ஆயிரம் தலைகளைக் கொண்ட பூதகணம், அவன் ஆயிரம் சங்குகளைத் தன் முகங்களில் வைத்து ஊதி ஆடினான், வாணாசுரன் ஆயிரம் கரங்களால் முரசு கொட்டினான்.
இதர பூதகணங்களும் ரிஷிகளும் சிவநாமம் சொல்லி சிவமந்திரம் சொல்லிப் பக்தியாய் வந்துகொண்டிருந்தன.
இந்திரன் வைரம் பதித்த காளஞ்சி சுமந்து வந்தான்; ஈசானன் வெற்றிலை தட்டை சுமந்து வந்தான்; வாயுபகவான் சிவனுக்கு ஆலவட்டம் கொண்டு காற்று வீசினார்; அக்னிபகவான் தூபமிட்டார்; வருணன் பூந்தட்டு ஏந்தி வந்தான்.
யமன் அங்கு நெருக்கடி ஏற்படாவாறு எல்லோரையும் தன் ஆட்கள் மூலம் ஒழுங்குப்படுத்தினான். ஆதிசேஷன் பாதாள உலகின் நீல ரத்தினங்களைச் சுமந்து வந்தான்.
குபேரன் சிவன் வரும் வழி எங்கும் நவமணிகளைத் தூவி வந்தான். வேத புருஷன் சிவபாதத்தில் காலணியாய் இருந்தான். கங்கை முதலான நதிகள் சிவனுக்குச் சாமரம் வீசின.
குண்டோதரன் பகவானுக்குக் குடைபிடித்தபடி வந்தான்.
“தேவர்களின் தேவன் வந்தான்
செங்கண்மால் விடையான் வந்தான்.
மூவர்கள் முதல்வன் வந்தான்.
முக்கண் எம்பெருமான் வந்தான்.
பூவலர் அயன்மால் காணா பூரணபுராணன் வந்தான்.
யாவையும் படைப்போன் வந்தான்”
என்றபடி பூதகணங்கள் பாடி ஆடி வந்தன, மதுரை மக்கள் எல்லா உலகிலும் கொடுத்துவைத்தவள் தடாதகை என்றும், அவளை அடுத்து கொடுத்து வைத்தவர்கள் இதனைக் காணும் தாங்கள் என்றும் மகிழ்ந்து ஆடிப்பாடினர். கன்னியரில் சிறந்தவள், தடாதகை, தாயாரில் சிறந்தவள் காஞ்சனமாலை எனச் சொல்லி சொல்லி ஆடினர், எல்லாத் தலைமுறையும் இவர்களை வாழ்த்தும் என்றபடி ஆடினர்.
பவனி மாளிகையினை அடைந்ததும் காஞ்சனமாலை பூரணக் கும்பத்துடன் எதிர்வந்தாள், பிரம்மனும் விஷ்ணுவும் சிவபிரானைக் காளையில் இருந்து இறக்கிவிட்டார்கள்.
காஞ்சனமாலை சிவனின் பாதங்களைப் புனிதநீரால் கழுவிக் கொஞ்சம் நீரை குடித்து விட்டு மீதியினைத் தலையில் தெளித்தாள். தன் உறவினர் மேலும் தெளித்தாள். எல்லோரும் உருகிப்போனார்கள்.
பட்டாடைக் கொண்டு சிவனின் பாதங்களைத் துடைத்தவள் மலர் இட்டு அர்ச்சனை செய்து பணிந்தாள். மண்டியிட்டு இருகரம் கூப்பித் தொழுதுச் சொன்னாள், “எம்பிரானே! தவமிருந்து நான்பெற்ற தடாதகையினை மணந்து இந்த நாட்டின் ராஜ்ஜியத்தை நீங்கள் ஏற்க வேண்டும்”
சிவன் அவள் கோரிக்கையினை ஏற்றுக் கொண்டார். துந்துபிகள் முழக்க பெரும் சங்கொலியும் முரசொலியும் மேளதாளமும் முழங்க சிவன் அரண்மனைக்குள் சென்று பொன் ஆசனத்தில் அமர்ந்தார்.
அங்கே தடாதகைக்கு அலங்காரம் நடந்தது. பெண்கள் அவளை வாசனை மிகுந்த நீரில் நீராட வைத்தனர். சரஸ்வதியும், லட்சுமியும் வந்து அவளுக்குச் செம்பஞ்சு குழம்பிட்டு அலங்காரம் செய்தனர்; அப்படியே பட்டாடை உடுத்தி நகைகள் இட்டனர்; அவளின் நீண்ட கூந்தலை அழகாகப் பின்னி மலரிட்டு இன்னும் நகைகளிட்டு அலங்காரம் செய்தனர்; அவள் கண்ணுக்கு மை இட்டு, நெற்றியில் திலகமிட்டு கால்களில் அற்புத சலங்கையுமிட்டு லட்சுமியும் சரஸ்வதியும் இருபுறமும் நடந்து அவளோடு மண்டபத்துக்கு வந்தனர்.
வேதங்கள் ஒலிக்க, சங்குகள் முழங்க தேவர்கள் மலர்களை வாரி இறைக்க காட்சிகள் நடந்தன. இந்திராணி வெற்றிலை தட்டை சுமந்து வந்தாள்; ரம்பை காளாஞ்சியும்; மேனகை பூந்தட்டையும் எடுத்து வந்தனர். ஊர்வசி ஆலவட்டம் அசைத்தாள், மற்ற தேவலோகப் பெண்கள் திலோத்தமையுடன் பன்னீரும் தீபமும் சந்தனமும் தாங்கி வந்தனர்.
கூட்டம் அதிகமானபோது துர்க்கை பொற்பிரம்பை கொண்டு எல்லோரையும் ஒழுங்குப்படுத்தினாள்.
விஷ்ணு, பகவானை அமரவைத்து சம்பிரதாய சாங்கியங்களைச் செய்தார். அவரே சிவனின் பாதம் கழுவி தன் தலைமேல் தெளித்து இதர தேவர்கள் மேலும் தெளித்தார். தேவர்கள் மகிழ்ந்தார்கள்.
விஷ்ணு சிவனின் பாதங்களில் சந்தனம் பூசி மலர்கள் இட்டு தீபத்தால் அர்ச்சனை செய்தார். எங்கும் “ஹரஹர” எனும் கோஷம் எங்கும் எழ விஷ்ணு அவருக்கு வேதமந்திரங்கள் ஓதி தத்தம் செய்தார்.
காமதேனு தன் பாலை சிவனுக்கு வழங்கி அவரை அருந்த வைத்து மகிழ்ந்தது. தேவ மாந்தர்கள், ரிஷி பத்தினிகளெல்லாம் மங்கலம் பாடினார்கள்.
நான்முகன் நெருப்பு வளர்த்து மந்திரம் சொல்லி யாகம் செய்தான், அக்னி சாட்சியாக விஷ்ணுவும் லட்சுமியும் மாங்கல்ய நாண் எடுத்துக் கொடுக்க, ஈசன் தடாதகை கழுத்தில் மங்கள நாணை பூட்டினார். நந்தி முதலியோர் பெரும் மங்கள இசை எழுப்ப எல்லோரும் பூமாரி பொழிய யாக மந்திரம் முழங்க, சரஸ்வதி தன் வாயால் வாழ்த்தினார்.
எல்லோரும் வந்து அவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்கள். சமுத்திர ராஜன் தன்னில் சிறந்த சங்கும் முத்தும் கொடுத்தான். பூமித்தாய் தன்னில் சிறந்ததைக் கொடுத்தாள். எல்லாத் தெய்வங்களும் வந்து காணிக்கை செலுத்தி மகிழ்ந்தன.
சங்குகண்ணன் முதலான பூத கணங்கள் தாம்பூலம் வழங்க திருமணம் இனிதே நடந்தது.
சிவனும், தடாதகையும் தம்பதிகளாக எழுந்தார்கள். சிவன் அங்கே நடுவூர் என்றொரு நகரை உருவாக்கி அங்குச் சிவாகம் ஒரு லிங்கம் ஸ்தாபித்தார். அதனைத் தம்பதியரும் இன்னும் எல்லோரும் வழிபட்டார்கள். சிவன் அந்த ஆலயத்துக்கு “இம்மையே நன்மை தரும் இறை” எனப் பெயரிட்டார்.
அந்த ஆலயமே இன்றும் “இம்மையில் மறுமை தருவார் ஆலயம்” என வழங்கப்படுகின்றது. இதுதான் மீனாட்சி திருக்கல்யாணம் எனும் தடாதகையினை ஈசன் மணந்த திருவிளையாடல்.
இது ஈசனே இறங்கி வந்து தனக்கான அவதாரத்தை மதுரையில் வந்து மணந்து அப்படியே அங்குக் குடிகொண்டு இன்றுவரை ஆட்சி செலுத்தும் வரலாறு.
இந்தத் திருவிளையாடல் ஆழ்ந்த தத்துவ மறைபொருளையும் போதிக்கின்றது.
தடாதகை சிவனிடம் இருந்து சிவனாலே ஆட்கொள்ளப்பட்டது இந்தத் திருவிளையாடலின் சுருக்கம். ஒவ்வொரு ஆன்மாவும் சிவனிடம் இருந்து வந்து சிவனிடம் திரும்பும் என்பதையும், சிவனைத் தேடும் ஆன்மாவினை சிவனே நேரில் வந்து ஆட்கொள்வார் என்பதை இது சொல்கின்றது.
தடாதகைக்கு மூன்று மார்பகம் என்பது ஆன்மா இறைவனை தேடாமல் அகந்தையில் உலக நலன்களைத் தேடும் அந்தக் குணத்தைச் சொல்வது.
தடாதகை உலகை வெல்ல கிளம்பியபோது வென்று கொண்டிருக்கும் போது அந்தத் தனம் மறையவில்லை. எப்போது சிவனைக் கண்டாளோ அப்போதுதான் அது மறைந்தது.
ஆகச் சிவன் சந்நதியில் அகந்தை மறையும், அகந்தை மறைந்தால் ஞானம் வரும், ஞானம் வந்தால் ஈசன் நம் உள்ளத்தில் குடிகொள்வார் என்பதை நுணுக்கமாகச் சொல்லும் தத்துவம் இங்கு உண்டு.
அகந்தை நீங்கினால் இறைவன் தரிசனமாவார் என்பதை அழுத்தமாகச் சொல்லும் இந்தத் திருவிளையாடல், தன்னைத் தேடும் ஆத்மாவினைச் சிவன் தேவர்களோடும், ரிஷிகளோடும் தங்களில் ஒருவராகச் சேர்த்துக் கொள்வார்.
இந்தத் திருவிளையாடல் தெய்வம் மானுடரைத் தேடி வந்து தன்னோடு சேர்க்கும் மறைபொருளைப் போதிக்கின்றது. அகந்தை நீங்கி சிவனைத் தேடினால் மானிடரும் தெய்வநிலைக்கு உயரலாம், தெய்வத்தில் ஒருவராகலாம், ஈசனுடன் கலந்துவிடலாம் என்பதைத் தெளிவாகச் சொல்கின்றது.
மதுரை ஆலயம் மானுடரைத் தெய்வ நிலைக்கு உயர்த்தும் என்பதை இந்தக் காட்சி போதிகின்றது.
மதுரைக்குச் செல்லும் போது சோம சுந்தர ஆலயத்துடன், அந்த இம்மையில் நன்மை தரும் ஆலயத்தையும் தவறாமல் வணங்குங்கள், சிவனே தான் பூலோகத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு மகா பிரபஞ்ச சக்தியினை வணங்கிய தலம் அது என்பதால் தவறாத வரம் தரும்.
அந்தக் கோவிலை மறக்காமல் தவறாமல் வணங்கி வாருங்கள். அது உங்களின் எல்லாக் குறைகளையும் மனதாலும் உடலாலும் நீக்கி, முழுமை தந்து உங்களைச் சிவநிலைக்கு உயர்த்தும். முழு ஞானமும் தெய்வ சம்பத்தும் தரும். இது சத்தியம்.