திருவிளையாடல் புராணம் 54 : வெள்ளி அம்பல திருக்கூத்து.
திருவிளையாடல் புராணம் 54 : வெள்ளி அம்பல திருக்கூத்து.
சோம சுந்தரருக்கும், தடாதகைக்குமான திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது ஆட்டம் பாட்டம் திரும்பும் இடமெல்லாம் நடந்தது, விருந்துக்கும் எல்லோரும் தயாரானார்கள்.
அப்போது வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் விருந்துக்குத் தயாரானாகள். ஆனால், அவர்கள் இருவரும் சாமானியம் அல்ல. அவர்கள் தில்லையில் ஈசனிடம் வரம்பெற்றவர்கள், அன்றாடம் அவர்கள் ஒருவேளைதான் உண்பார்கள், அந்த ஒருவேளை போஜனமும் ஈசனின் திருநடனத்தைக் கண்டபின்பே நடக்கும்.
அந்த இருவரும் ஈசனின் திருமணத்தில் கலந்து கொள்ள வந்தாலும் தங்களுக்கான நியமத்தை மாற்ற விரும்பவில்லை. அதனை விட்டே கொடுக்கவில்லை. ஈசனின் திருநடனம் கண்டபின்பே உணவு என்பதில் குறியாய் இருந்தார்கள்.
ஆனால், மணக்கோலத்தில் இருக்கும் ஈசனை எப்படி அணுகுவது, இந்நாளிலும் அவரின் நடனத்தை எப்படி எதிர்பார்ப்பது என்பதில் தயக்கமிருந்தது. அதனால் வாட்டமும் ஏக்கமும் கொண்ட முகத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். மற்ற எல்லோரும் விருந்துக்குச் செல்ல தயாரான போதும் அவர்கள் இருவரும் செல்லவில்லை.
அவர்கள் இருவரின் மனவோட்டத்தையும் அறிந்த எம்பிரான் அவர்களை அருகில் அழைத்தார், இருவரும் மகிழ்ந்து சென்றார்கள்.
இருவருக்கும் சிதம்பரம் வரை இந்நேரம் சென்று திரும்ப முடியாது எனும் தயக்கமும், சென்றாலும் ஈசனை அழைக்க முடியாது எனும் வருத்தமும் இருந்ததை அவதானித்து உணர்ந்த ஈசன் சொன்னார்.
“அடியார்களே, உங்கள் மனதை நாம் அறிவோம். அதனால் நீங்கள் கவலையேதும் கொள்ள வேண்டா, உங்கள் நியமப்படி இங்கேயே அக்காட்சியினைத் தருகின்றேன்.
விராடபுருஷனின் பிரமாண்ட சரீரம் இந்தப் பூமி, அப்படியானவனுக்குத் தில்லைப்பதி அவனுக்கு இதயமாகும், திருவாரூர் மூலாதாரஸ்தானம்; திருவானைக் காவல் ஸ்வாதிஷ்டா ஸ்தானம், திருவண்ணாமலை மணிபூரகஸ்தானம், காளத்தி விசுத்திஸ்தானம், காசி ஆக்ஞாஸ்தானம், கைலாயம் பிரமரஞ்திரஸ்தானமாகும்.
இவை எல்லாம் தாண்டித் தலைக்கு மேல் உள்ள துவாத சாந்த ஸ்தானம் எனும் சக்கரமாகத் துலங்குவது இந்தத் தலம், அப்படியான மதுரையில் உங்களுக்கு அக்காட்சியினை அருளுவோம் எனச் சொன்னவர் புன்னகைத்தபடியே உருமாறினார்.
உடனே மிகுந்த ஒளிவீசும் வெள்ளியம்பலம் ஒன்று தோன்றிற்று. அதன் நடுவே ஓர் மாணிக்க பீடமும் தோன்றியது. அப்பீடத்தின் மீது கோடி சூரியப்பிரகாசமுடையவராக ஈசன் தோன்றினார்.
சிவகணங்கள் வாத்தியங்களை முழங்கின. நந்திதேவர் மத்தளம் வாசித்தார்; விஷ்ணு இடக்கை என்ற இசைக் கருவியை இசைத்தார்.
நாரதர் தும்புரா இசைத்து இசைபாடினர்; கலைமகள் ஸ்ருதி கூட்டினாள். நான்முகன் யாழினை மீட்டினார். தேவர்கள் பூமழை பொழிந்தனர்.
அவர் காலடியில் விழுந்து கிடந்தான் அந்த முயலகன். கடல் போன்ற நிறமுடைய உடலும் செம்பொன் போன்ற மயிரும் உடைய முயலகன் மீது அவன் கண்கள் பிதுங்கவும், முதுகு முறியவும், ஈசன் வலது திருவடியை ஊன்றி இடத்திருவடியைத் தூக்கித் திருநடனம் புரிந்தார்.
பத்துக் கரங்களுடன் உடுக்கை முதலியன ஏந்தி அழகுடன் அசைந்து ஆடினர். உமாதேவியார் ஒதுங்கி நின்று அத்திரு நடனத்தைக் கண்டு களித்தார். முனிவர்களுடைய ஆனந்தத்தைச் சொல்லி முடியா. இருகைகளையும் கூப்பி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்கள்.
அவர்களுடைய கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. பரமனின் அருட்பெரும் கருணையினை நினைந்து உருகியபடி அவர் திருநடனம் கண்டு மகிழ்ந்து பின் விருந்துக்குச் சென்றார்கள்.
இந்தத் திருவிளையாடல் சிவன் நடனமாடினார் எனச் சொல்லி நகர்வது அல்ல, அவர் தன் பக்தர்களுக்கு ஆடி மகிழ்வித்தார் எனச் சொல்லும் தவறான தாத்பரியமும் அல்ல.
இது கொஞ்சம் நுணுக்கமானது, முதலில் கூத்து என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளல் அவசியம்.
கூத்து எனும் சொல்லுக்கு ஒருமுகப்படுதல், கவனத்தைக் குவித்தல் எனவும் பொருள் உண்டு. கூத்தாடி எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பான், அவன் கூத்தாடும்போது அவனையன்றி வேறு யாரும் எங்கும் பார்ப்பதில்லை.
சிவனுக்கு ஏன் கூத்தாடி எனப் பெயர் வந்ததென்றால் அதே தாத்பரியமே. சிவனில் முழுக் கவனம் வைக்கவேண்டும், தியானிக்க வேண்டும் என்பது. தன்னையன்றி வேறு எதனையும் சிந்திக்காத மனதில், தன்னை மட்டுமே சிந்தித்துத் தியானித்து தன் நினைவாகவே இருக்கும் மனதில் சிவம் எழுந்தருள்வார் என்பது.
இன்னும் இந்த நடனத்தில் விஞ்ஞானம் உண்டு, பிரபஞ்ச இயக்கம் உண்டு, மிக மிக நுணுக்கமான தத்துவமெல்லாம் உண்டு.
இந்துப் புராணக்கதைகள் பன்னெடுங்காலத்துக்கு முந்தியவை, அப்பொழுது மானிட உருவங்களும் உலக உயிர்கள் வடிவும் ஏன் இன்னும் பூமியின் அமைப்புமே மாறி இருந்தன.
பன்னெடுங்காலத்துக்கு முன் இப்பொழுது சிறியதாக உள்ள எல்லாமே பிரமாண்டமாக இருந்தது என்பது விஞ்ஞானம் ஒப்புக்கொள்ளும் உண்மை.
அப்போது இருந்து மாறாதது இந்த மதுரையம்பதி, அதன் பெரும் சிறப்பு அதுதான்.
அக்காலகட்டத்தில் மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் பெருவடிவம் கொண்டவையாக இருந்தன, அப்படித்தான் ராமாயண அனுமனும், முருகனைச் சுமந்த மயிலும் தெய்வங்களாயின. இங்கு எதுவும் பொய் இல்லை.
அப்படிப்பட்ட இந்து ஞானம் இன்று உலகம் சொல்லும் பல விஞ்ஞானங்களை அன்றே சொன்னது, ஆனால் அக்கால மானிடருக்குப் புரியும் வடிவில் லௌகீகவடிவாகச் சொன்னது.
பெரும் சக்தியில் இருந்து ஒரு சக்தி தோன்றுவது வானமண்டலத்தில் இயல்பு. அங்கு ஒவ்வொரு நாளும் புது விண்மீன்கள் தோன்றுகின்றன, பல விண்மீன்கள் அழிகின்றன, புது புது மண்டலங்கள் தோன்றுகின்றன. இவை எல்லாமே ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
இதனைத்தான் அன்று சிவனில் இருந்து முருகன் வந்தார், பார்வதியில் இருந்து பிள்ளையார் வந்தார் என இந்துமதம் சொன்னது. அதை மக்களுக்குப் புரியும் வடிவில் லௌகீகக் கதையோடு சொன்னது.
இந்த நடராஜ தத்துவம் என்ன?
இந்தப் பிரபஞ்சம் முழுக்கச் சிவன் எனச் சொன்னது இந்துமதம், சிவனைப் பிரபஞ்சமாகவும், அந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியினை அன்னை தேவியாகவும் சொன்னது இந்துமதம்.
இன்று வானில் எத்தனையோ கோள்கள், லட்சக்கணக்கான விண்மீன்கள், இன்னும் மானிடன் எண்ணிமுடியாத அல்லது அவனால் கணக்கிடமுடியாத கோடான கோடி கோள்களும் மண்டலமும் உண்டு, அவற்றை எல்லாம் இயக்குவது ஒரு சக்தி, அந்தப் பெரும் சக்தியினைத்தான் உலகமாதா என்றார்கள் இந்துக்கள்.
விண்வெளி இயக்கத்தை அணுவோடு ஒப்பிடுவார்கள், ஒரு அணுவினை இன்னொரு சக்தி கொண்டு துளைத்தால் அது பல அணுவாக மாறும், அவற்றைத் துளைத்தால் அல்லது இணைத்தால் சக்தி வெளிப்படும் அல்லது புதிய விஷயம் உருவாகும்.
அந்த அணு அல்லது அசையாப் பொருளை சிவம் என்றார்கள், அதை இயக்கும் சக்தியினைத் தேவி என்றார்கள்.
அணுக்குண்டில் யுரேனியத்தைச் சிவம் எனக் கொண்டால் அதை இயக்கும் நியூட்ரான் துகளை சக்தி எனச் சொல்லலாம், இரண்டும் சேர்ந்தால் பெரும் சக்தி வெளிப்படும்.
இந்த அணுத் தத்துவத்தையும் அப்படியே பிரபஞ்சத் தத்துவத்தையும் கொண்டதுதான் சிவநடனம்.
விஞ்ஞானம் சொல்கின்றது இங்கு எதுவும் இயங்காமல் இல்லை, பூமி சுழல்கின்றது, சந்திரனும் சூரியனும் சுற்றுகின்றது, இன்னும் இந்தச் சூரிய மண்டலமும் பால்வெளியும் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. ஒரு நிமிடம் கூட அவை ஓயவில்லை, ஓய்ந்தால் இந்தப் பிரபஞ்சம் அழிந்துவிடும்.
இந்துக்கள் பிரபஞ்சத்தைச் சிவவடிவில் சொன்னவர்கள், ஐம்பெரும் பூதமும் சிவன் வடிவில் உள்ளதைச் சொன்னவர்கள். இதனால் இன்று விஞ்ஞானம் சொல்லும் ஓய்வில்லாச் சுழற்சியினைத்தான் சிவநடனம் எனச் சொன்னார்கள்.
அதனால்தான் சிதம்பரத்தில் நடராஜ கோலத்தில் சிவனை நிறுத்தி இந்த ஆட்டம் அணுச்சக்தி முதல் பிரபஞ்சம் வரை உள்ள ஆட்டத்தின் குறியீடு என்றார்கள், அணுவுக்குள்ளும் ஓயா ஆட்டம் உண்டு, பிரபஞ்சத்திலும் அந்த ஆட்டம் உண்டு.
இதனை அன்று விளக்கிச் சொல்லமுடியாத இந்துமதம் சிவன் வடிவில் சொல்லிற்று.
அப்படியே சக்தி எனும் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி அந்த ஆட்டத்தை நிறுத்த முயன்றால் பிரபஞ்சம் அழியும் என்பதைச் சிவன் காளியினை ஆட்டத்தில் வென்றார் எனச் சொல்லி அதாவது பிரபஞ்ச இயக்கத்துக்காக தில்லையில் காளியினை வென்று தன் ஆட்டத்தைத் தொடர்ந்தார் என்றது.
இதெல்லாம் மாபெரும் ஞானத்தின் அடையாளங்கள். இன்றும் விஞ்ஞானம் 5% கூட கண்டறியாத உண்மையினை அன்றே மிக முழுமையாக இந்துக்கள் அறிந்ததிருந்ததின் பெருமை மிகு அடையாளங்கள்.
எல்லா இடங்களிலும் இரு சக்திகள் ஒரு அசையா சக்தியில் அசையும் சக்தி புகுந்தால்தான் ஒரு இயக்கம் நடக்கும்.
மானிட உடலுக்கு உயிர் போல, நிலத்துக்கு நீர் போல, காருக்குப் பெட்ரோல் போல, ஏன் அணுக்குண்டுக்கு நியூட்ரான் கதிர் போல ஒரு இணைவு அவசியம்.
அந்த இணைவைத்தான் சிவசக்தி தத்துவம் என்றார்கள். இந்துக்களின் ஞானமும் பெருமையும் மிக மிக பழமையானது, சிலாகிக்கக் கூடியது, கொண்டாட வேண்டியது.
இந்த நடராஜர் தத்துவம் சாதாரணம் அல்ல.
இதுதான் அணுத்தத்துவம், இதுதான் பிரபஞ்ச இயக்கத் தத்துவம் என உலக அணு ஆய்வுக் கழகமான “சென்” அமைப்பு நடராஜர் சிலையினைத் தங்கள் அலுவலக வாசலில் நிறுவியுள்ளார்கள்.
அந்தச் சிலைக்கு அடியில், “பிரபஞ்சத் தத்துவ ஆய்வில் பெரும் ஒளியினை சிவன் காட்டுகின்றார்” என்ற ரீதியில் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
அணுத் தொடர்பான அனைத்து ஆய்வுகளையும் நடராஜர் சிலை இருக்கும் அந்த வளாகத்தில்தான் செய்கின்றார்கள்.
அணுக்குண்டை வடிவமைத்த ஓபன் ஹைமரும், ஐன்ஸ்டீனும் பகவத் கீதையின் வரிகளை அணுக்குண்டு வெடித்தபொழுது சொன்னார்கள். அணுவிஞ்ஞானிகளும் பிரபஞ்சத்தின் ஓய்வில்லா இயக்கத்தை ஆராயும் விஞ்ஞானிகளும் நடராஜ தத்துவம் மாபெரும் விஞ்ஞான பிரபஞ்ச தத்துவத்தைச் சொல்வதை நம்பி அதனில் இருந்து ஆய்வுகளைத் தேடுகின்றார்கள்.
அவர்களுக்கு மூல அணுவினை நோக்கி “கடவுளின் துகள்” எனும் துகளை நோக்கிச் செல்லும் ஆய்வுக்குச் சிவநடனமும், காளி நடனமுமே அந்த ஆய்வே முக்கியமாகின்றது.
அசையாப் பொருளில் பெரும் சக்தி ஒன்று மோதிதான் இங்கு உலக இயக்கம் தொடங்கிற்று. அதுதான் பிரபஞ்சம் முதல் அணுவரை. இங்கு எல்லாமே இயங்கிக் கொண்டிருக்க காரணம் என்பது விஞ்ஞானிகள் கூற்று.
ஆனால், தொடக்கப் பொருள் என்ன, தொடக்கச் சக்தி என்ன, இதனை இயக்கிய சக்தி எது என்பதில்தான் ஆய்வு நடக்கின்றது.
அந்த ஆய்விற்கு நடராஜரும் அன்னை சக்தியும் அவர்களுக்குப் பெரும் வெளிச்சம்காட்டி நிற்கின்றார்கள்.
இன்று அணு, பிரபஞ்ச தத்துவத்தின் தொடக்க ஆய்வில் இருக்கும் விஞ்ஞானம். இன்னும் சில நூறு ஆண்டுகளில் இந்துக்கள் சொன்ன தெய்வமெல்லாம் உண்மை என முடிவுக்கு வந்து சரண் அடையும், இந்தச் சரணடைதலை என்றோ சொன்ன மதம் இந்துமதம்.
சிவன் சொன்ன அந்த வரிகளைப் பாருங்கள்.
தில்லை என்பது வெளி தத்துவம் கொண்டது, அதனாலே அங்கு அம்பலம் வெளியாக இறைவன் காட்சியளிக்கின்றார், மனவெளியில் இறைவன் எழும் ஆலயம் அது, திருவாரூர் என்பது எல்லாக் கர்மங்களையும் சிவன் மேலான பக்தியினையும் தூண்டிவிடும். அங்கிருந்தே எல்லாம் தொடங்கும். அதனாலேதான் நாயன்மார்களில் பலர் அங்கிருந்து வந்தார்கள்.
திருவாணைக்கா சுவாதிஷ்டான சக்கரம். இது நல்ல உணர்வுகளைக் கர்மத்தை கழிக்கும்படி தூண்டிவிடும். எல்லா உணரவும் இங்கேதான் எழும், சிவன் நல்ல உணர்வினைத் தரும் ஆலயமிது.
திருவண்ணாமலை முக்தி நோக்கிய எண்ணம் தரும். எது அவசியமோ, அதை மட்டும் தேர்ந்தெடுக்கச் சொல்லும், அவசியமற்றதை புறந்தள்ளி அவசியமான உண்மையான ஒன்றைத் தரும் ஆலயம் இது.
காளத்தி என்பது காற்றுத்தலம். அப்படியே சிவனுக்கும் ஆத்மாவுக்குமான இணைப்பைத் தரும், அந்தப் பக்தியினை வெளிப்படுத்தும் ஆற்றலைத் தரும்.
காசி எல்லாவற்றையும் புனிதப்படுத்தும். அது இரு கண்களிடையே அமைந்துள்ள ஆக்ஞா சக்கர தத்துவம். ஆக்ஞா சக்கரம் எனும் மூன்றாம் கண் துலங்கும்போது கர்மவினை எல்லாம் தீரும்.
கயிலாயம் என்பது சிவனோடு கலக்கும் கபாலபுழை சக்கரம், அந்நிலையில் ஆத்மா ஈசனுடன் கலந்துவிடும் பிறப்பற்ற நிலை அடையும்.
இந்தத் துவாதசாந்தம் என்பது தலைக்கு மேல் மானிட உடலையும் ஸ்தூல உடலையும் இணைக்கும் இடம். அதாவது, தலைக்கு மேல் 12 அங்குலம் தாண்டி நிற்கும் சக்கரமான சக்கரத்துகுரியது. இந்தச் சக்கரம் துலங்கினால் எல்லாமும் துலங்கும், இந்தப் பிரபஞ்ச பெரும் ரகசியமே புரியும்.
அந்தக் கடைசிக்கட்ட பெரும் ஞான நிலையினைத்தான் சொல்வது ஈசனின் நடனம், இது மதுரையம்பதி ஆலயம் பிரபஞ்சப் பெரு ரகசியத்தையெல்லாம் புரியவைக்கும், ஞானம் தரும். உச்சந்தலைக்கு மேலான சக்கரத்தைத் துலங்க வைத்து தேவர்களில் ரிஷிகளில் ஒருவராக அவர்களை உருவாக்கும் என்பது.
இந்தத் திருவிளையாடல் இன்னும் போதிக்கின்றது.
அதன்படி அம்முனிவர்கள் இருவரும் தங்களுக்கென ஒரு பக்தி வடிவம் கொண்டிருந்தனர், சிவனின் நடனத்தைத் தரிசிக்காமல் உணவு உட்கொள்வதில்லை என்பதைச் சமரசம் செய்யாமல் இருந்தனர்.
அங்கே அறுசுவை உணவு ஆயிரம் இருக்க, பெரும் கொண்டாட்டம் இருக்க, இன்னும் என்னவெல்லாமோ மகிழ்ந்திருக்க அவர்களோ சிவநடனத்தைக் காண, சிவனை வேண்டினார்கள்.
இதுதான் கவனிக்கத்தக்கது, இந்த மாய உலகில் எவ்வளவோ விஷயம் மனதை இழுக்கும் வளைக்கும் ஈர்க்கப்பார்க்கும். நம் நியமத்தில் இருந்து பக்தியில் இருந்து சறுக்கிட வைக்கும், எந்நிலையிலும் எந்த மயக்கத்திலும் வீழாமல் சிவனைத் தேடுவோருக்கு எல்லாமும் நிறைவாகும். கயிலாய பாக்கியம்தாண்டி ஈசனை முழுமையாக அறிந்து கலக்கும் மகா யோகமும் கிடைக்கும்.
மதுரையில் முன்பு இந்த வெள்ளியம்பல ஆலயம் தனியாக இருந்தது, பின் மதுரை ஆலயத்துக்குள் அந்தப் பீடம் அமைக்கப்பட்டு இன்றும் அந்த நடராஜ கோலம் உண்டு. பின் ராஜசேகர பாண்டியனுக்காக சிவன் கால் மாற்றி ஆடிய கோலத்தில் இன்றும் உண்டு.
மதுரை ஆலயத்தில் அந்த வெள்ளியம்பல நாதனை மறக்காமல் தரிசியுங்கள்.
வெள்ளி என்பது சுத்தமான ஒன்றைக் குறிப்பது. எது நல்லது எது தள்ளவேண்டியது என்பதன் அறிகுறியாக வெள்ளியினைத்தான் சொல்வார்கள்.
வெள்ளி என்றால் பவித்திரம் என்பார்கள், மகா தூய்மையானதைக் குறிப்பது வெள்ளி.
தூய்மையானது எல்லாமே வெள்ளை நிறம் அல்லது வெண்ணிறம். பனிச்சிகரம், மேகம், வெள்ளொளி என எல்லாமும் வெண்ணிறம் கொண்டது.
படைக்கும் பொருள் எல்லாமும் தொடக்கத்தில் தூய்மையானது. இயற்கையின் தத்துவம் அது. மழை முதல் மனிதன் வரை எல்லாமே தொடக்கத்தில் பரிசுத்தமானது.
இந்த ஆலயம் படைப்பின் தத்துவத்தைச் சொல்கின்றது. வாழ்வில் என்ன மாசுபட்டாலும் கர்மவினையால் சரிந்துபோனாலும் இந்தச் சபையில் வணங்கினால் மீண்டும் புதுப்படைப்பாக மாறுவான் என்பதைச் சொல்கின்றது.
ஆன்மீக நிலையில் மறுபடி பிறப்பதை, அதாவது சித்திரம், தாமிரம் தாண்டி உறுதியாகி மறுபிறப்பு மறுவாழ்வு பெறுவதைச் சொல்லும் கோலம் இது.
சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான சத்யோஜாதா முகத்தைக் காட்டும் தத்துவம் இது. இதுதான் படைப்புக்குச் சொல்லப்படும் முகம்.
இங்கே சிவபெருமான் சந்தியா தாண்டவம் ஆடுகின்றார். சந்தியா என்றால் சந்திப்பொழுது எனப் பொருள். இரு பொழுதுகள் இணையும் தருணத்தை சந்திப் பொழுது என்பார்கள்.
இரு தெருக்கள் இணைந்தால் சந்தி, இருவர் ஒருவரை ஒருவர் பார்த்தால் சந்திப்பு.
அப்படிச் சந்தியா நடனம் என்பது இரு சக்தி இணையும் நடனம், இரு சக்திகள் இணையும் போது அங்கே புதுப் படைப்பொன்று நிகழும். சாந்தி முகூர்த்தம் எனும் பெயரின் மூலம் சந்தி முகூர்த்தம் என்பதே.
சந்தியா நடனத்தின் தத்துவம் இதுதான். படைப்புக்கான இயக்கம் அது. அதைத்தான் வெள்ளி அம்பலத்தில் சொல்கின்றார் சிவன்.
துவாத சாந்தம் என்றால் இரண்டற கலத்தல் எனப் பொருள். இறைவனோடு இரண்டறக் கலக்க வைக்கும் நிலையில் அந்தச் சக்கரத்தைத் துலக்கித் தரும் ஆலயம் இது.
ஒரு மார்கழி திருவாதிரையில் தொடங்கி அடுத்த மார்கழி திருவாதிரை வரை ஒவ்வொரு திருவாதிரையிலும் மதுரை ஆலவாயனின் நடராஜ கோலத்தைத் தொழுதால் கேட்ட வரமெல்லாம் கிடைக்கும் என்பது சூத முனிவர் சொன்ன வாக்கு.
அந்த ஆலவாய் நாதன் ஆலயம் சென்று அந்த வெள்ளி அம்பலத்தானை வணங்கும் போது புதுப் படைப்பாக நீங்கள் மாறுவீர்கள். அதன் பின் நீங்கள் தொட்டதெல்லாம் பன்மடங்கு துலங்கும். இது சத்தியம்.
“ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி”