திருவிளையாடல் புராணம் 55 :குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் மற்றும் அன்னக்குழியும் வைகையையும் அழைத்த படலம்.
திருவிளையாடல் புராணம் 55 :
குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் மற்றும் அன்னக்குழியும் வைகையையும் அழைத்த படலம்.
தடாதகையுடனான திருமணம் தேவலோகத் திருமணமாக முடிந்து பின் சிவனே தன் அடியார்களுக்காக நடனமாடி, வெள்ளியம்பல நடனமாடி திருக்காட்சி வழங்கியபின்பு எல்லோரும் பந்தி அமர்ந்தார்கள்.
சிவபெருமானைத் தரிசித்த மகிழ்விலே தேவர்களுக்குப் பசி அடங்கிற்று. முனிவர்களும் அடியார்களும் அதே நிலையில் இருந்தார்கள். பிடி உணவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது, இதனால் ஏகப்பட்ட உணவுகள் எஞ்சியிருந்தது.
இது மணமகள் வீட்டாருக்கு ஒரு கர்வத்தைக் கொடுத்தது. குவித்து வைத்த உணவு எஞ்சியிருப்பது வந்தவர்கள் தங்கள் விருந்து வகைகளைச் சமாளிக்க திணறிவிட்டார்கள். தோற்றுவிட்டார்கள் எனும் கர்வம் வந்தது, இது இயல்பு.
“இதனைக் கூட உண்ண உங்கள் ஆட்களுக்கு முடியவில்லையா?” என்பது பெண் வீட்டார் கொள்ளும் கர்வம், இது அவர்களுக்கு வந்தது. அந்தக் கர்வம் தடாதகையினையும் தொற்றிக் கொண்டது.
சிவனிடம் சென்றவள், “என்ன ஐயனே, சமைத்த உணவுகளில் பத்தில் ஒரு பங்குக் கூட காலியாகவில்லை, இதை உண்ணக் கூட உங்கள் ஆட்களால் முடியவில்லையா?” எனச் சிரித்தபடியே கேட்டாள்.
அவளின் உள்நோக்கம் அவளைச் சார்ந்தோரின் உள்நோக்கமெல்லாம் அறிந்த பெருமான், “மூவேந்தருள் சிறந்த பாண்டிய குலத்தின் விருந்து என்றால் சும்மாவா? அதை நீயும் செய்திருக்கின்றாய்” என்றபடி தன் கணங்களை உற்றுப் பார்த்தார்.
அவர்களில் யாரும் பசியாகவோ களைப்பாகவோ இல்லை என்பதை உணர்ந்தவர், அருகில் தனக்குக் குடை பிடித்திருந்த குண்டோதரனைக் கண்டார், அவரின் புன்னகை அவன் மேல் பட்டதும் அவன் வயிற்றில் வடவாக்கினி போன்ற நெருப்பு எரிய ஆரம்பித்தது.
அவன் திடீரென பெரும் பசியெடுத்து சிவனிடம் “பெருமானே! எனக்குப் பசிக்கின்றது, நான் கொஞ்சம் உணவு உண்ணட்டுமா? தருவார்களா?” எனக் கேட்டான்.
குட்டையான உருவம் அதில் சிறிய வயிறு எனச் சிவன் அருகே நின்றிருந்த அவனைக் கொஞ்சம் ஏளனமாக பார்த்து அழைத்துச் சென்றாள் தடாதகை, உணவு மண்டபத்தில் அவனை அமரவைத்து பரிமாறச் சொல்லும்படி தன் ஆட்களிடம் சொன்னாள்.
அவனுக்கு உணவு வழக்கம்போல் பரிமாறப்பட்டது, அவனும் முதலில் வழக்கம் போல் உண்ண ஆரம்பித்தான். ஆனால், அவனுக்குப் பசி அடங்குவதற்கு பதில் அதிகரித்தது.
நெருப்பிலிட்ட நெய் போல் அவன் உண்ண உண்ண உள்ளே பசி நெருப்பாக எரிந்து எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருந்தது.
அவனுக்கு ஆட்கள் பரிமாறினார்கள். சாதம் குழம்பு என எல்லாம் கலந்து ஒரே வாயில் இட்டான், இன்னும் அவர்கள் இட்டதை அப்படியே மொத்தமாக அள்ளி வாயிலிட்டான்.
மறுநொடியே இன்னும் இன்னும் என்றான், அவனுக்குப் பரிமாறியவர்கள் களைப்பானார்கள். ஆனால், அவனோ இன்னும் இன்னும் பசி எனக் கத்திக் கொண்டிருந்தான்.
அவர்கள் பரிமாறும் வகையில் காத்திராமல் அப்படியே பாத்திரத்தில் இருந்த உணவினை இலையில் கூட இடாமல் தன் வாயில் அப்படியே கொட்டிக் கொண்டான், அவன் பசி அப்போதும் அடங்கவில்லை.
அனைவரும் திகைத்துப் போயினர், பந்தியில் வைத்த உணவெல்லாம் முடிந்தது, அவனோ இன்னும் பசிக்கின்றது எனச் சலையலறை நோக்கி ஓடினான்.
அங்கே சமைத்து வைக்கப்பட்ட அனைத்தையும் தன் வாயில் உருண்டைகளாக வைத்து சில நொடியில் முடித்தவன் அடுத்து அடுத்து என அலறினான்.
அப்படி அலறியவன் சமைக்க வைக்கப்பட்ட அரிசி முதல் காய்கறி வரை பச்சையாக உண்ணத் தொடங்கினான். நெய்யினை குடமாக குடித்தான், காய்கறிகளை ஆயிரம் யானைகள் சூறையாடும் வாழைத்தோப்பைப் போல் அள்ளி விழுங்கினான்.
அங்கு இருந்த தானியமெல்லாம் ஒரே வாயில் முடித்தான். இனித் உண்ண எதுவுமில்லை எனும் நிலையில் எல்லாமே காலியாயிற்று.
சமைத்ததும் இல்லை, சமைத்துக் கொண்டிருந்ததுமில்லை, சமைக்க இருந்ததும் இனி இல்லை. ஆனால், அவன் பசி அடங்கவில்லை எனும் நிலையில் எல்லோரும் அலறி அடித்துத் தடாதகையிடம் சென்றார்கள்.
குண்டோதரனோ கல்யாண பந்தலின் உணவை காலி செய்துவிட்டு பின் அவசரமாக ஊருக்குள் வீடு வீடாக செல்லும் அவசரத்தில் இருந்தான். மக்களும் அரண்டே போயினர்.
தடாதகை சிவனிடம் வந்தாள். சிவனோ ஏதும் அறியாதது போல “குண்டோதரன் உண்டானா? இன்னும் சில பூதங்களை அனுப்பட்டுமா” எனக் கேட்டார்.
அஞ்சிய அவள் சொன்னாள், “அவனால் இந்தப் பந்தலின் உணவு, அரண்மனை உணவெல்லாம் முடிந்துபோனது, ஆனால் இன்னும் அவன்பசி அடங்கவில்லை. எங்களால் அவன் பசியினைத் தீர்க்கமுடியாது, பாண்டியநாடு அல்ல நான் வென்ற நாடெல்லாம் சேர்ந்தாலும் அவனுக்கு அளக்க முடியாது.
நீங்கள்தான் அவன் பசியினைப் போக்க வேண்டும்” என மன்றாடினாள்.
அதே நேரம் குண்டோதரனும் ஓடிவந்து, சுவாமி மலையளவு குவிந்த உணவை உண்டும் என் பசி தீரவில்லை, எவ்வளவு தின்றாலும் இது அடங்கவில்லை, வயிறு இன்னும் எரிகின்றது, என்னைக் காப்பாற்றுங்கள்” என்றான்.
சிவன் அந்நேரம் அன்னபூரணியினை நினைந்தார், அவளின் அருளில் நான்கு குழிகள் உருவாயின. அவற்றில் இருந்து தயிர்சாதம் நிரம்பி வந்தது, குண்டோதரனை நோக்கி அதை உண்ணச் சொன்னார்.
அவன் நான்கு குழிகளிலும் இருந்து வந்த தயிர்சாதத்தைப் புசித்ததும் நிறைவுக் கொண்டு அப்படியே வீழ்ந்தான். அகோரப் பசி கொண்ட அவனின் ஆட்டம் அடங்கியதில் அப்படியே வீழ்ந்து கிடந்தான்.
தடாதகையும் மதுரைமக்களும் அதைக் கண்டு நிம்மதி அடைந்தனர், ஆனால், அந்தக் குண்டோதரனுக்கு இன்னொரு சிக்கல் வந்தது. அது கடுமையான தாகம்.
கடும் தாகத்தில் எழுந்தவன் மண்டபத்தில் இருந்த கொப்பரை, அண்டா, குண்டா, குடம், தொட்டி என எல்லா நீரையும் அருந்தினான். பின் ஓடிச் சென்று கிணற்றில் இருந்த நீரை குடித்தான். அப்போதும் அவன் தாகம் அடங்காமல் குளத்து நீர், ஏரி நீரை எல்லாம் குடித்தான். அப்போதும் அவன் தாகம் அடங்கவில்லை.
இனி நாட்டில் சொட்டு நீர் இல்லை எனும் நிலை அவனால் வந்தது. மறுபடியும் தடாதகை சோமசுந்தர பகவான் பாதம் பணிந்தாள், குண்டோதரன் தாகம் தாகம் என அலறிக் கொண்டிருந்தான்.
சிவபெருமான் அவன் துன்பம் தீர்க்க கங்கையினை அழைத்தார். கங்கா தேவி அவர் முன்னால் வந்து நின்றாள், சோமசுந்தரர் அவளிடம் ” கங்கையே! இங்கு நீ பிரவாகமெடுத்து குண்டோதரன் பசியினைப் போக்கும் நதியாக வருவாயாக” என உத்தரவிட்டார்.
கங்கை பகவானிடம் ஒரு வரம் கேட்டாள், “பெருமானே, நான் இங்கு நதியாக வரும்போது என்னில் நீராடுவோர், என்னைத் தரிசிப்போர், என எல்லோரும் பிறவிச் சுழலில் இருந்து கரையேறும் வரத்தை அவர்களின் கர்மமெல்லாம் கழியும் வரத்தை எனக்குத் தரவேண்டும், மகா புனிதமான நதியாக நான் இங்குத் திகழவேண்டும்” என்றாள்.
அப்படியே வரம் தந்தார் சிவபெருமான்.
மறுநிமிடம் மேற்கே மலையிலிருந்து பிரவாகமெடுத்தாள் கங்கை. அந்த வேகம் மிக மிக கடுமையாய்ப் பிரளய வெள்ளம் போல் மரம் செடிகளை மலையில் இருந்து அள்ளி வந்தது, பெரிய பாறைகளை எல்லாம் வராக அவதாரமாகப் பூமியினைத் துளைத்த பெருமாள் போல் துளைத்து வந்தது போல் துளைத்துப் புரட்டிபோட்டு வந்தது.
பெரிய மேடுகளெல்லாம் கரைந்தன, பள்ளமெல்லாம் சமமாயின. அப்படியே விரைந்து ஆர்ப்பரித்து வந்த நதி மதுரையினை நெருங்கியதும் வேகத்தை குறைத்துக் கொண்டது, பெருமான் இருக்கும் மதுரையினைப் பவ்யமாக கடந்து சென்றது.
குண்டோதரனின் கடும் தாகம் அங்கே தீர்ந்தது, அவன் சிவபெருமானுக்கு நன்றி சொல்லிப் பணிந்தான். கங்கையே மதுரையினைச் சுற்றி ஓடுவதால் தடாதகையும் மதுரை மக்களும் பெருமகிழ்ச்சிக் கொண்டார்கள்.
அந்த நதி சிவனின் தலைமுடியில் இருந்து வரும் கங்கை என்பதால் சிவகங்கை என்றாயிற்று; ஞானம் தரும் நதி என்பதால் சிவஞானதீர்த்தம் என்றுமாயிற்று; மதுரையினைச் சுற்றி வந்ததால் கிருதாமலை.
அது விரைந்து வேகமாக வந்ததால் வேகநதி என்றாயிற்று; வையகத்தை வாழவைத்ததால் வையை வைகை என்றாயிற்று.
இதுதான் குண்டோதரனின் பசியும் அடங்கி வைகையும் உருவான திருவிளையாடல். இது ஆழ்ந்த தத்துவங்களையும் போதிக்கின்றது.
குண்டோதரனின் கோரப்பசி என்பது மானுட ஆத்மா நிறைவு என்பதே அடையாமல் ஆசைமேல் ஆசை கொண்டு மாயையின் பின்னால் கானல் நீராகச் செல்லும் அவலத்தைச் சொல்வது.
மானிட ஆத்மாவின் பலவீனம் ஆசை, ஏதோ ஒரு மாய ஆசை அதனுள் எரிகின்றது. அது குடும்பம், பந்தபாசம், செல்வம், அதிகாரம், பொன், பெண் என எதுவாகவும் இருக்கலாம். இந்தப் பூமியில் அந்த ஆசையால் எரியும் ஆத்மா நிறைவின்றி இன்னும் இன்னும் இன்னும் என அலைந்து பிறப்புச் சுழலில் சிக்குகின்றது.
ஆசைகள் ஒவ்வொன்றாகப் பெருகி உலகத்தையே கொடுத்தாலும் நிறைவடையா ஆசையாகப் பெருகி இன்னும் இன்னும் என வளர்ந்து அந்த ஆசையிலே ஆத்மா சிக்கிக் கிடக்கின்றது. அதனால் ஈடேற முடியவில்லை.
ஆசையுள்ள ஆத்மா ஒருகாலமும் கரையேற முடியாது.
சிவனை அடையும் ஆத்மா அமிர்தத்தில் நிறைவடைகின்றது என்பதைச் தயிர்சாதம் சொல்கின்றது, இங்குத் தயிர்சாதம் என்பது தேவர்களுக்கு நிறைவு தரும் அமிர்தத்தைக் குறிப்பது, அமிர்ந்த நிலையினை உணர்த்துவது.
குண்டோதரனின் பசி தயிர்சாதத்தில் சிவனருளில் அடங்கிற்று என்பது சிவனை அண்டிய ஆன்மா ஆசையின் மயக்கத்தில் இருந்து விடுபட்டு, இன்னும் இன்னும் என ஆசையில் எரியும் ஆத்மா சிவனில் நிறைவடைந்து முக்தி அடைகின்றது என்பதைச் சொல்லும் தத்துவம்.
சிவனை அண்டும் ஆத்மா முழு நிறைவினை எட்டும், வேறு எதுவும் தேவையில்லா நிலையில் சிவனில் நிறைந்து கரைந்துவிடும் என்பதே குண்டோதரனின் பசி அடங்கிய திருவிளையாடல் சொன்ன தத்துவம்.
வைகை நதி உருவான வகையினைச் சொல்லும் இந்தத் திருவிளையாடல் வைகை கங்கைக்கு நிகரான பெருமை உடையது என்பதையும், அது எல்லாப் பாவங்களையும் போக்கும் என்பதையும் தெளிவாகச் சொல்கின்றது.
அதே வைகைதான் மண்டூக முனிவரின் பாவம் போக்கிற்று, இன்னும் பலரின் பாவத்தை போக்கிற்று. அழகர் ஆற்றில் இறங்கும் அந்த வைபவம் வெறும் காட்சியோ கொண்டாட்டமோ அல்ல, மக்களின் பாவமெல்லாம் சுமந்து பெருமான் வைகையில் அவற்றைக் கரைக்கின்றார் என்பது.
மதுரை ஆலயத்துக்குச் சென்று குண்டோதரனை நினைந்து இந்தத் திருவிளையாடலை நினைந்து வணங்குங்கள். உங்கள் மனதின் மாய ஆசை அகன்று முழு நிறைவு வரும், நிறைவு வந்த இடத்தில் இறைவனே எழுந்து வருவார்.
ஆசையற்ற மனம் முழு நிறைவினை எட்டும், அங்கே பாவங்கள் கரையும், சாபங்கள் கர்மங்கள் தீரும். அதனால் பிறப்பற்ற பெரும் ஞானநிலை வாய்க்கும்.
இதைத்தான் இந்தத் திருவிளையாடல் போதிக்கின்றது. மதுரை சோமசுந்தர பெருமான் ஆலயமும் அந்த வரத்தை தருகின்றது, தவறாமல் தருகின்றது.
மதுரையில் வைகை போலவே குண்டோதரனுக்குப் பல அடையாளம் உண்டு, அவன் தங்கிய இடமே பூதக்குடி. இது மதுரை அருகே காவண நல்லூரில் அமைந்துள்ளது, இந்தக் காவண நல்லூர் குளமே குண்டோதரன் உருவாக்கிய குளம்.
அப்படியே திருப்பரங்குன்றம் பக்கமும் அவன் உருவாக்கிய தென்கால் கண்மாய் உண்டு. இன்னும் வைகை செல்லுமிடமெல்லாம் பல ஏரிகள் அவன் அமைத்தது உண்டு.
காவேரி, கங்கை, தாமிர பரணி போல செல்லுமிடமெல்லாம் தன் கரையில் பெரிய சிவாலயங்களைக் கொண்டிருக்கும் நதி வைகை. சிவகங்கை, இராமநாதபுரம் என அந்த வைகையால் உருவான ஆலயங்கள் எப்போதும் பிரசித்தியானவை.
குண்டோதரனுக்குத் தயிர் கொடுத்த குழி இன்றும் அன்னக்குழி மண்டபம் என மேலசித்திரை வீதியில் உண்டு. மதுரை ஆலயத்தை தரிசிக்கும்போது இதனையும் தரிசித்தால் கூடுதல் பலன் உண்டு.
எந்த ஆத்மா சிவனிடம் தஞ்சமாகின்றதோ அதற்கு எந்த ஆசையும் தேவையுமில்லை. அது ஆசைகளற்ற விருப்பு வெறுப்பற்ற நிறைவான நிலையில் ஈசனுடன் கலந்து கங்கைபோல் புனிதமாகிவிடுகின்றது என்பதைச் சொல்லும் இந்தத் திருவிளையாடலை நினைந்தபடி மதுரை சோமசுந்தர பெருமானை வணங்கும் ஆத்மா தன் ஆசை அகன்று முழு நிறைவுடன் இறைபதம் அடையும். இது சத்தியம்.