திருவிளையாடல் புராணம் 56 : மலையத்துவஜனை அழைத்த படலம் மற்றும் உக்கிர பாண்டியன் திரு அவதாரப் படலம்.
திருவிளையாடல் புராணம் 56 :
மலையத்துவஜனை அழைத்த படலம் மற்றும் உக்கிர பாண்டியன் திரு அவதாரப் படலம்.
ஈசனுடனான தடாதகையின் திருமணம் பெரும் விமரிசையாக நடந்து முடிந்தபின் காஞ்சனமாலை மிகுந்த நிறைவு கொண்டாள். அவள் சமுத்திரங்களிலெல்லாம் நீராட விரும்பினாள், கௌதம முனிவர் அந்த ஆலோசனையினைக் கொடுத்திருந்தார்.
தடாதகை அதனைச் சிவனிடம் சொல்ல சிவபெருமானோ ஏழு கடல்களையும் மதுரைக்கே அழைத்து வந்தார். இது தனித் திருவிளையாடலாக சொல்லபட்டிருக்கின்றது. நாமும் முன்பே கண்டோம்.
அந்தக் கடல்கள் மதுரைக்கு வந்து குளம்போல் நின்றபோது அதில் நீராடச் சில நியமங்களும் இருந்தன. அதன்படி ஒரு பெண் தன் கணவனின் கரம், மகனின் கரம் அல்லது பசுவின் வால் இவற்றில் ஒன்றைப் பிடித்துக் கொண்டே கடலில் புனித நீராட வேண்டும் என்பது விதி.
இதில் பாதுகாப்பு காரணங்களும் இருந்தன என்றாலும் கர்மம் தொடர்பான கணக்கு என்பதால் கணவன் உள்ளிட்ட உறவின் கரம் முக்கியம்.
தன் கணவன் இல்லை என்பதால் மிகவும் மனமொடிந்து போனாள் காஞ்சனமாலை, அவளுக்கு எல்லாமும் வாய்த்தது. அவள் சிவனை வழிபட்டு ஒரு மகளைப் பெற்று சிவனையே மருமகனாகவும் ஆக்கிக் கொண்டாள், இப்போது அவள் விரும்பியபடி ஏழு புனிதமான கடல்களும் அவள் காலடியில் நிற்கின்றன.
ஆனால், கணவன் இல்லாமல் எப்படி நீராடுவது என அவள் தயங்கி மகளைக் கண்டாள், தடாதகை சிவனைக் கண்டாள்.
தன் பக்தைக்காக மனமிரங்கிய சிவன் சொர்க்கத்தில் இருந்த மலையத்துவஜனை இந்திரனின் தேர்மூலம் பூமிக்கு அழைத்து வந்தார், அவன் இறங்கும்போது சிவனே எதிர்கொண்டு சென்று “மாமனாரே, வருக” என அவனைத் தழுவி காஞ்சனமாலையோடு நீராடச் சொன்னார்.
காஞ்சனமாலை கனவிலும் நினையாத சம்பவம் நடப்பதை அறிந்து உளம் சிலிர்க்க நின்றாள். அவளுக்கு மறுபடி கணவனைக் கண்முன் காட்டிய ஈசனை வணங்குவதா? மீண்டும் வந்த கணவனைக் கட்டிபிடித்துக் கதறி அழுவதா என நிலைகுலைந்தவள் ஈசனின் பாதங்களில் வீழ்ந்தாள்.
ஈசன் இருவரையும் நீராட அனுப்பினார், அவர்கள் கடலில் கால்வைத்த நேரம் இருவரும் பூலோக மாயை நீங்கி பாசபந்தம் நீங்கி ஒளிவடிவில் மின்னினார்கள், அப்படியே இருவரும் தேரில் ஏறினார்கள், ஈசனும் தடாதகையும் விடைகொடுக்க அவர்கள் இருவரும் சொர்க்கம் சென்றார்கள்.
தாயினை வழியனுப்பி வைத்த தடாதகைக்குச் சில சிந்தனைகள் வந்தன, ஒரு பெண்ணுக்கு கணவன் போலவே மகனும் முக்கியம், தன் கர்மத்தைச் செய்துமுடிக்க வாரிசும் முக்கியம் எனும் சிந்தனை வந்தது.
தாயின் தவிப்பினைக் கண்டவள் அதே யோசனையில் இருந்தாள்.
அதனை ஈசனிடம் சொல்லவும் அவள் தயங்கினாள், அதே நேரம் அன்னையின் கலக்கமும் அவள் கண்முன் நின்றுகொண்டே இருந்தது. ஒரு வாரிசு அவசியம் என்பதும் மறுபடி மறுபடி வந்து போனது.
அவளின் தவிப்பினை அறிந்த எம்பெருமான் புன்னகைத்தார், அத்தோடு தடாதகையின் உடலில் மாற்றங்கள் வர ஆரம்பித்தன, வளர்ந்து செழித்த வாழை உரிய காலத்தில் தன்னில் தானே குலை தள்ளும் காலத்தில் மாற்றமடைவது போல் அவளின் உடலில் மாறுபாடு வந்தது.
அவள் கர்ப்பவதியானாள், பாண்டிய நாட்டுக்கு வாரிசு உருவாகும் செய்தி உலகெல்லாம் பரவிற்று, பெரும் வாழ்த்தும் சீதனமும் அவளுக்குக் குவியத் தொடங்கின.
மதுரை இரண்டாம் விழாவுக்குத் தயாராயிற்று. தேவலோகப் பெண்களெல்லாம் சீர் கொண்டுவந்து அவளைச் சந்தித்தனர், எல்லா வகை உணவும் ஆடைகளும் இன்னும் பலவும் அவளுக்குக் குவிந்தன.
தேவாதி தேவர்களெல்லாம் வந்து பல விஷயங்களைப் போதித்தனர். அண்டசாராசரமும் அவளை வணங்கிற்று, நீண்ட வரிசையில் அவளைச் சந்திக்க எல்லா உலகத்தாரும் சீர் வரிசையுடன் நின்றார்கள்.
அவளின் வளைகாப்பினை எல்லா உலகத்தாரும் கூடி மாபெரும் விழாவாகக் கொண்டாடினார்கள். மஹாலஷ்மியும் கலைமகளும் இருபுறமும் நின்று பாடினார்கள், எல்லா ரிஷிகளும் அவளை வாழ்த்தினார்கள்.
திருவாதிரை நட்சத்திரம் திங்கள்கிழமையில் வந்த நாள் ஒன்றில், குருபகவான் உன்னதமான இடத்தில் இருந்த தருணமொன்றில் அந்தப் பிறப்பு நிகழ்ந்தது.
அந்நேரம் உலகெல்லாம் ஒருவித ஆனந்த லயம் சூழ்ந்தது; எல்லா உயிருக்குள்ளும் மகிழ்வும் நிறைவும் வந்தது, எல்லோரும் ஒரு மகிழ்வை உணர்ந்தார்கள்; ஹோம குண்டலத்திலே நெருப்பு வலம் சுழித்து ஜொலித்தது; மறை ஓதுவோர் அனைவரும் மகிழ்ந்தார்கள்.
தேவர்கள் வானில் இருந்து பூமாரி பொழிய, ரிஷிகள் மந்திரம் ஓத அந்தக் குழந்தை ஜடாமுடியுடன் பிறந்து தடாதகை கைகளில் கிடந்தது.
தடாதகை தன்னில் உருவான அக்குழந்தையினை மிகுந்த வாஞ்சையோடு முத்தமிட்டாள், அணைத்துக் கொண்டு மகிழ்ந்தாள், அதனைக் கையில் ஏந்தி ஈசனின் கரங்களில் தந்து பணிந்தாள்.
அந்நேரம் இந்திரன், வருணன், மேரு என மூவருக்கும் இடது தோள் துடித்தது, இது அபசகுனம் என்பதை அறிந்து அவர்கள் பதறினார்கள்.
ஈசன் அக்குழந்தைக்கு உக்கிர வர்மன் எனப் பெயரிட்டார், அவன் பாண்டிய நாட்டு வாரிசு என்பதால் உக்கிர பாண்டியன் என்றானான்.
அவனைத் தன் உயிர்போல் வளர்க்கத் தொடங்கினாள் தடாதகை. அவனுக்கு நான்கு மாதமானபோது சோமசுந்தர பெருமான் கோவிலுக்குக் கொண்டு சென்று கிடத்தி வேண்டினாள். ஆறாம் மாதம் அவனுக்குப் பாலமுது ஊட்டினாள். ஒரு வயதை அவன் எட்டியபோது அவனுக்கு ஜடாமுடி பின்னி அழகு பார்த்தாள் தடாதகை.
அவனுக்கு ஐந்து வயது எட்டியபோது அவன் குருவாக தேவகுரு பிரகஸ்பதியே வந்து பூணூல் அணிவித்து வித்தியாபியாசம் செய்து வேதமும் சாஸ்திரமும் ஏடுகளும் ஞானமும் போதித்தார்.
அந்த உக்கிர வர்மன் யானை குதிரை என ஏறி பயணிக்கவும், வில் வாள் என எல்லா ஆயுதங்களைப் பாவிக்கவும் தேர்ச்சிப்பெற்றான். சிவபெருமானே சக்திமிக்க பாசுபதக் கணையினை அவனுக்கு வழங்கினார்.
அவனுக்குச் சமமான வீரன், அரசன், இராஜதந்திரி, சகலகலாஞானி என யாரும் எந்த உலகிலுமில்லை எனுமளவு அவன் பெயர் பெற்றிருந்தான்.
அவன் அங்க லட்சணம் அனைத்தும் சரியாகப் பொருந்திய அழகான ஆண்மகனாக இருந்தான்.
தாமரை போன்ற அழகான திருவடிகளைக் கொண்டிருந்தான், நீண்ட சங்கைப் போன்று அழகான கணைக் காலும், எலும்பு தெரியாத அளவு முழங்காலும், யானையின் துதிக்கை போன்ற திரண்ட தொடையும் சிறுத்த வயிறும், ஆழ்ந்த உந்தியும், உயர்ந்த தோள்களுமாய் அழகுற்றான்.
அவன் கழுத்து வலம்புரி சங்காய் இருந்தது; முகம் செந்தாமரை போல் ஜொலித்தன; கைகள் முழந்தாள் அளவு நீண்டன.
அங்க லட்சணத்துகுரிய முப்பத்திரண்டு லக்ஷணங்களும் அவனிடம் குடி கொண்டிருந்தன.
அங்க லட்சண சாஸ்திரப்படி
வயிறு, தோள், நெற்றி, மூக்கின் அடிப்பாகம், மார்பு, கையில் வளைந்த அடிப்பாகம் என ஆறு பாகங்களும் உயர்ந்திருந்தால் ஒருவனுக்குச் செல்வம் பெருகும்.
கண், கபாலம், கை, மூக்கின் நுனி, மார்பு என ஐந்தும் நீண்டிருந்தால் நன்மைகள் உண்டாகும்.
குடுமி, தோள், விரல் கணு, நகம், பல் ஆகிய ஐந்தும் சிறுத்திருந்தால் நீண்ட ஆயுள் ஏற்படும்.
ஆண்குறி, கணைக்கால், நாக்கு, முதுகு ஆகிய நான்கும் குறுகியிருந்தால் செல்வங்கள் பெருகும். தலை, நெற்றி இரண்டும் அகன்றிருந்தால் சுகம் ஏற்படும்.
உள்ளங்கால், உள்ளங்கை, உதடு, மேல் வாய், நாக்கு, நகம் மற்றும் கடைக்கண் ஆகிய ஏழும் சிவந்திருந்தால் இன்பம் பெருகும்.
மார்பு வலிமையாகவும் நாபி ஆழமாகவும் அமைந்திருந்தால் புகழ்பெருகும்.
ஆண்களின் அங்க லட்சண சாஸ்திரம் இப்படி ஒரு ஆணின் உருவ அமைப்பினைச் சொல்லி அவன் பெறும் நன்மைகளை விளக்குகின்றது. அந்தச் சாஸ்திரம் சொன்ன அனைத்துக்கும் பொருத்தமான உருவமாக உக்கிரபாண்டியன் இருந்தான்.
இதுதான் மாமனான மலையஜத்துவனை ஈசன் அழைத்த திருவிளையாடல் படலம், அது உக்கிரபாண்டியன் பிறப்பு பற்றிச் சொல்கின்றது.
தடாதகை சிவனின் அன்பான கருணையால் மானிட இயல்புக்கு அப்பாற்பட்டு கருவாகி ஒரு மகனை ஈன்றாள் என்பது வெறுமனே பிள்ளை வரம் எனக் கடக்கும் விஷயம் அல்ல.
இங்கு நடந்தது முருகப்பெருமான் அவதாரம். எப்படிச் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து முருகப்பெருமான் தோன்றினாரோ அதேதான் இங்கும் நடந்தது, உக்கிரபாண்டியனாக முருகனே அவதரித்தார்.
அதாவது, சிவனைத் தேடினால் போதும், சிவனோடு அன்னை வருவாள். அன்னையோடு முருகப்பெருமான் வருவார், அந்தச் சோமஸ்கந்த வடிவில் அவர்கள் நமக்கு அருள் வழங்குவார்கள் என்பதைச் சொல்லும் ஆலயம் இது.
மதுரை ஆலயம் எக்காலமும் முருகப்பெருமானோடும் தொடர்புபட்டது, அதனாலேதான் அங்குத் தமிழ்ச்சங்கத்தின் தலைவனாய் முருகப்பெருமான் இருந்தார்.
அகத்தியர், நக்கீரர், ஒளவை, கபிலர் என அக்கால ஞானமிகு தமிழ்புலவர்களெல்லாம் முருகப்பெருமானை அங்குப் பாடித் தொழுதது அப்படியே.
அது அகத்தியர் காலமுதல் குமரகுருபரர் காலம் வரை தொடர்ந்தது , ரமணர் காலமுதல் இக்காலம் வரை தொடர்கின்றது இன்னும் தொடரும்.
ஆம், மதுரை ஆலயத்தில் வணங்கினால் முருகப்பெருமானின் அருளும் கைக்கூடும் என்பதை இந்தத் திருவிளையாடல் சொல்கின்றது.
இன்னும் ஆழமாகச் சொல்லவேண்டும் என்றால் யோக தத்துவமும் இங்கு உண்டு.
அ+உ+ம் என்பது ஓம் எனும் பிரணவ மந்திர தத்துவம். ‘அ’ என்றால் சிவன், ‘உ’ என்றால் அன்னை, ‘ம்’ எனும் மகரமே முருகப்பெருமான்.
அந்த ஆலயத்தின் தாத்பரியம் இதுதான். பிரணவ மந்திரத்தின் பொருள் சொல்லும் ஆலயம் அது. யோக நிலையில் முத்தியும் தரும்.
முருகப்பெருமானே சிவனின் அடையாளம் என்பதையும் மதுரை ஆலயத்தில் முருகப்பெருமானுக்கும் பெரும் இடம் உண்டு, ஈசன் தடாதகை மகனாக முருகனே உக்கிரபாண்டியன் என வந்தார் என்பதையும் சொல்கின்றது இந்தத் திருவிளையாடல்.
மதுரை சோமசுந்தர பெருமான் சந்நதிக்கும், மீனாட்சி அம்மன் சந்நதிக்கும் செல்லும்போது முருகப்பெருமான் நினைவோடு வணங்கினால் முழுப்பலன் உண்டு. அந்தச் சோமசுந்தர சந்நதி முருகப்பெருமானின் அருள் வழங்கும் சந்நதி என்பதையும் நினைந்து வணங்குங்கள். இந்த மண்ணை காக்கும் அரசனாக வந்த அந்த முருகப்பெருமானின் அருள் அங்கு வழிபட்டு வரும் ஒவ்வொருவர் மேலும் நிரம்ப நிரம்ப பொழியும். இது சத்தியம்.