முருகப்பெருமான் ஆலயங்கள் : குமரகோட்டம் முருகப்பெருமான் ஆலயம், காஞ்சிபுரம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : குமரகோட்டம் முருகப்பெருமான் ஆலயம், காஞ்சிபுரம்.

காஞ்சிபுரம் ஒரு புண்ணிய நகரம், காலம் காலமாக காசிபோல, மதுரை போல பெரும் புகழ்பெற்ற ஷேத்திரம். ஒரு காலத்தில் அங்கு ஆயிரம் இந்து தர்ம ஆலயங்கள் இருந்தது. பின்னாளில், சமண பௌத்த குழப்பம், இதர குழப்பங்களில் அவை காணாமல் போனாலும் வெகுசில தொன்மையான ஆலயங்கள் இன்றுவரை நிலைத்திருக்கின்றன, அதிலொன்று இந்தக் குமரகோட்டம்.

இந்த ஆலயத்தின் வரலாறு முருகப்பெருமான் பிரம்மனுக்குத் தண்டனை அளித்த கந்தபுராண நிகழ்வில் இருந்து தொடங்குகின்றது. பிரம்மன் தானே படைப்புத்தொழில் செய்வதால் அகந்தை கொண்டிருந்தான், அந்த அகந்தையில் அவன் பல விஷயங்களை மறந்தே போனான். அது பிரணவ மந்திரத்தின் பொருள்.

இந்த அகந்தையினை அடக்க விரும்பிய கந்தபிரான் சரியான வாய்ப்புக்குக் காத்திருந்தார். ஒருமுறை கயிலாயம் வந்த பிரம்மன் முருகப்பெருமானைப் பாலகன் என எண்ணி மிக அலட்சியமாகக் கடந்து சென்றார். முருகப்பெருமான் அவரை மறித்துக் கொண்டு சில கேள்விகளைக் கேட்டார்.

ஆனால், இந்தச் சிறுவனுக்கா எல்லாவற்றையும் சிருஷ்டிக்கும் தான் பதில் சொல்ல வேண்டும் எனக் கர்வத்தில் இருந்த பிரம்மன் கடக்க முயன்றான், அவரிடம் பிரணவ மந்திரத்துக்கு விளக்கம் சொல்லி விட்டுச் செல்லுங்கள் என மறித்துக் கொண்டார் முருகப்பெருமான்.

கர்வம் கொண்டிருந்த பிரம்மன் தன்னை முருகப்பெருமான் மறிப்பதைப் பலர் கண்டுகொண்டதை உணர்ந்தான். உடனே பிரணவத்தின் உட்பொருளைச் சொல்ல முனைந்தான். ஆனால், அது அவனுக்கே மறந்துவிட்டது. படைப்புத் தொழிலுக்கு மூலம் பிரணவ மந்திரம், அதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆதாரம், அது இல்லாமல் படைத்தல் தொழிலே இல்லை. ஆனால், அதன் பொருளை மறந்துவிட்டு பிரம்மன் படைக்கும்போது படைப்பு எப்படிப் பூரணமாகும்?

பிரம்மன் தன் கடமையில் இருந்து அகந்தையால் தவறினான் என்பதற்காக அவனைச் சிறையில் அடைத்தார் முருகப்பெருமான், அதைக் கண்டு தேவலோகம் பதறிற்று, பிரம்மன் இல்லையென்றால் படைத்தல் தொழிலை யார் செய்வார்கள்? படைத்தல் இல்லையென்றால் உலகம் எப்படி இயங்கும் என ஆளாளுக்கு பெரும் கவலை கொண்டார்கள்.

அந்நேரம் சிவனே நந்தி தேவரை அனுப்பி முருகனிடம் அதுபற்றி கேட்கச் சொன்னார். நந்தியம்பெருமானும் அப்படி வந்து நிற்கும் போது முருகப் பெருமானே படைப்புத் தொழிலை மேற்கொண்டு “பிரம்மசாஸ்தா” கோலத்தில் நின்றார், பின் சிவனே வந்து அவரைச் சந்தித்து, பிரம்மனை விடுவிக்கப் போராடினார். வாதம் வலுத்தது.

கடைசியில் சிவபிரானே ‘பாலகனான உனக்குப் பிரணவத்தின் பொருள் தெரியுமோ?” என வினவ, சிவன் காதிலே அந்தப் பொருளை முருகப்பெருமான் ஓதினார்.

நடந்ததை அறிந்த பார்வதி தேவி குமரனிடம் பிரம்மனை விடுவிக்கச் சொன்னார். பிரம்மனும் அகந்தை நீங்கி வெளிவந்தான். பின் தேவி, ஈசன் என்பவர் தகப்பன் மட்டுமல்ல முருகனுக்கே குரு, அவரிடம் விளையாடியது தவறு எனச் சொல்ல முருகப்பெருமான் அதற்குப் பிராயசித்தம் தேட முனைந்தார்.

ஈசனிடம் விளையாடிய குற்றத்துக்காக அதாவது ஈசனையே சீடனாக்கி விளையாடியதற்காக முருக பெருமானே ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வணங்கினார். மாமரத்தின் அடியில் லிங்கத்தை ஸ்தாபித்து வணங்கி வழிபட்டுத் தன் தவறுக்குப் பிராயசித்தம் தேடினார்.

அதுதான் இந்தத் தலம். தேவசேனாதிபதியான முருகப்பெருமான் வழிபட்டதால் இந்தச் சிவன் தேவசேனாதீஸ்வரர் என்றானார், மாமரத்தின் அடியில் சிவனை வழிபட்டதால் அவர் “மாவடி கந்தன்” என்றானார்.

பிரம்மசாஸ்தா வடிவில் முருகன் வந்த தலம் என்பதால் இங்கு அந்த வடிவிலே அவர் வணங்கப்பட்டார். யுகங்களைத் தாண்டி நிற்கும் இந்த ஆலயத்தில் அந்தப் பிரம்மசாஸ்தா வடிவிலே இன்றும் முருகப்பெருமான் அருள் பாலிக்கின்றார்.

இந்த ஆலயத்தின் சிறப்பு மற்ற எந்த முருகன் கோவிலிலும் இல்லாத ஒன்றைப் பெற்றது. எப்படி மதுரையில் தருமிக்காக சிவனே வந்து நக்கீரனுடன் வாதாடினாரோ அப்படித் தன் பக்தன் கச்சியப்பருக்காக முருகப் பெருமானே வந்து வாதாடி வென்று கொடுத்த தலம் இது.

இந்த அற்புத நிகழ்வு கந்தபுராணத்தைத் தந்த நிகழ்வில் வருகின்றது. ஆம், கந்தபுராணம் இந்த ஆலயத்தில்தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

வியாசபெருமான் வகுத்த கந்தபுராணம் முற்காலத்திலே தமிழில் இருந்தது. ஆனால், சமண பௌத்த குழப்பமான காலங்களில் அவை இல்லாது செய்யப்பட்டன. எப்போதுமே தமிழகத்தில் முருகப்பெருமான் மேல் மக்களுக்குப் பக்தி அதிகம் என்பதால் முருகப்பெருமானைப் பற்றிய எல்லாமும் இல்லாது போகும்படி இக்கும்பல் சதிசெய்தது.

கந்தபுராணம் இல்லாவிட்டால் முருகவழிபாடே இல்லாதபடி ஆகிவிடும், அடிப்படை ஆதாரமில்லாமல் போய்விடும் என்பதால் அதனைத் திட்டமிட்டு அழித்தொழித்தது.

பின்னாளில் இந்துமதம் ஆதிசங்கரர் காலத்தில் மீண்டபோதும் கந்தபுராணம் தமிழில் இல்லை.

தன் அவதாரப் புராணத்தை மீண்டும் தமிழில் தர விரும்பிய முருகப்பெருமான் ஒரு அடியாரை ஆட்கொண்டார், அவர் பெயர் வீரராகவன், அவர் பெற்றோர்க்குக் குழந்தையில்லை என்பதால் தவமிருந்து பெற்ற இக்குழந்தையினை வேதம் படிக்கவைத்து கோவிலுக்கே கொடுத்துவிட்டார்கள். அவர் இக்கோவிலில் அர்ச்சகராக இருந்தார். ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களில் அவர் பணியாற்றினாலும் இக்கோவில் அவருக்குப் பிடித்தத் தலமாயிற்று, அவருக்குச் கச்சியப்ப‌ர் என்றும் பெயர்.

முருகப்பெருமான் அவரை ஆட்கொண்ட தெய்வமானார், அவரிடம் முருகனே வந்து “கச்சியப்பா! இல்லாமல் போன கந்தபுராணத்தை மீண்டும் தமிழில் நீ படைப்பாயாக” எனச் சொல்லி உத்தரவிட்டார்.

கச்சியப்பருக்கோ கைகால் எல்லாம் நடுங்கின. “எம்பெருமானே! மந்திரங்களைக் கூட மிகுந்த பதற்றத்தில் சொல்பவன் நான், என்னை உமது அவதாரக் காவியத்தைப் பாடச் சொன்னால் நான் எப்படிப் பாடுவேன்?” எனத் தயங்கி நின்றார்.

முருகப்பெருமான் மொழிந்தார். “அன்பனே! உன் மனதில் இருந்து நாமே எழுதுவோம், இதோ உமக்கு அடியெடுத்துத் தருகின்றோம். அதைப் பின்பற்றி நீ எழுதுவாயாக” எனச் சொன்னவர், அற்புதமான முதல் வரியினையும் மொழிந்தார்.

“திகட சக்கரச் செம்முக மைந்துளான்” என அவரே அடியெடுத்தும் கொடுத்தார். அந்நொடியே கச்சியப்பருக்குள் கந்தபுராணம் ஊற்றெடுக்க ஆரம்பித்தது, அவர் கங்கையாய்க் கொட்டினார்.

“திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்”

எனத் தொடங்கிப் பாடியவர், அனுதினமும் பாடி எழுதினார். ஒவ்வொரு நாளும் காலையில் தொடங்கி மாலைவரை எழுதினார், மாலையில் எழுதப்பட்ட ஒலைகளை இந்த முருகப்பெருமான் காலடியில் வைத்துச் செல்வார், அந்த ஏட்டில் பிழை இருந்தால் முருக பெருமானே திருத்தி வைப்பார்.

காலையில் வந்து அதனை எடுத்து வாசிப்பார் கச்சியப்பர். பிழை திருத்தம் இருந்தால் முருகன் அருள் என நிம்மதி கொள்வார், பிழை இல்லையேல் முருகன் ஏற்றுக்கொண்டுவிட்டான் பாடலில் பிழை இல்லை என மகிழ்வார்.

இப்படியே கந்தபுராணம் முழுக்கப் பாடி எழுதினார் கச்சியப்பர், அவர் மூல சமஸ்கிருத நூலான சங்கர சம்ஹிதையிலிருந்து முதல் ஆறு காண்டங்களைச் சம்பவ காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் முதலிய ஆறு காண்டங்களைக் கொண்டு மொத்தம் 10,345 பாடல்களைப் பாடிக் கந்தபுராணத்தைத் தமிழில் தொகுத்தார்.

ஆடிமாதம் கிருத்திகை அன்று அது அரங்கேற்றம் காண இருந்தது. பொதுவாக. ஒரு மனிதன் பெரிய காரியங்களைக் கர்மமாய்ச் செய்யும்போது நிச்சயம் எதிரிகள் பெருகுவார்கள். அப்படிக் கந்தபுராணத்தைத் தமிழில் தந்த இந்தக் கச்சியப்பரையும் அவமானபடுத்த ஒரு கும்பல் திரண்டது.

அந்தக் கும்பல் இந்நாளில் ஆலயம் வந்தனர், அவையோரும் கற்றோரும் மன்னரும் இன்னும் அடியார் பலரும் தமிழறிஞர்களும் நிரம்பியிருந்த அந்தக் குமாரகோட்ட கல் மண்டபத்தில் கந்தபுராணத்தைக் கச்சியப்பர் ஆரம்பிக்க முதல் வரியினையே அவர்கள் பிடித்துக் கொண்டன‌ர்.

“திகட சக்கரச் செம்முக மைந்துளான்” என அவர் பாடவும் “திகட சக்கரமா? இது எப்படி வரும்? சொல்லும்” என அவர்கள் பிடித்துக் கொண்டன‌ர்.

கச்சியப்பரோ பொறுமையாக “திகட சக்கரம் என்றால் திகழ்கின்ற தச சக்கரம்” எனப் பொருள் என விளக்கினார், அங்கேதான் வாய்ப்பைப் பிடித்துக் கொண்டனர் எதிரிகள்.

“ஐயா, திகழ்+தசக்கரம் என்றால் ழவும் தவும் இணையுமிடத்தில் ட வரும் என்கின்றீர், இது தவறு அல்லவா? தொல்காப்பியர் உள்ளிட்ட யார் சொன்ன தமிழ் இலக்கணத்திலும் இது இல்லையே? விதி இல்லாத ஒன்றை எப்படி ஏற்க முடியும்?

முதல்வரியிலே தவறு செய்த நீர் எப்படி முழுக் காவியமும் பாடத் தகுதியுடையவராவீர்? என வாதிட்டன‌.

கச்சியப்பரோ திடுக்கிட்டு “இது முருகன் கொடுத்த வரி” என்றார்.

அக்கும்பல் வாய்விட்டு சத்தமாகச் சிரித்து “விடை தெரியாக் கேள்விக்கு முருகன் மேல் பழிபோடுகின்றீரோ? என நகைத்தனர், விஷயம் பெரிதாகி கந்தபுராண அரங்கேற்றமே நின்று போயிற்று.

கச்சியப்பர் அழுதார்; கலங்கினார். பல மாதங்களாக அவர் எழுதியதை எல்லோரும் தவறு எனச் சொன்னதில் அவர் குழம்பிப்போனார். எனினும், சபை ஒரு வாய்ப்பை அவருக்குக் கொடுத்தது.

“கச்சியப்பரே, ழவும் தவும் இணைந்தால் ட வரும் என்பதை எந்த இலக்கண நூல் சொல்கின்றது என்பதை நீர் நாளை சொல்லவேண்டும். இல்லை முருகப்பெருமானே வந்து சாட்சிச் சொல்ல வேண்டும். இரண்டில் ஒன்று நடக்காவிட்டால் உமது நூல் தூர வீசப்படும்” என்றார்கள்.

கச்சியப்பர் மனமுடைந்துபோனார், நேரே முருகப்பெருமானிடம் சென்றார். “எம்பெருமானே, நீர் சொல்லித்தான் நான் எழுதினேன். இப்போது பாடலில் பிழை என்கின்றார்கள், எப்போதும் பிழை திருத்தும் நீர் இப்போதும் திருத்தித் தர வேண்டும்” எனத் சொல்லி அவர் பாதத்தில் ஓலைக் கட்டுக்களை வைத்து அங்கேயே படுத்துக் கொண்டார்.

அவரின் சோகம் கண்ணீராய்க் கொட்ட அங்கு முருகப்பெருமான் வந்து அவரைத் தட்டி எழுப்பி “கச்சியப்பா அஞ்சாதே, நாளை ஒரு புலவன் வந்து உன் குறை தீர்ப்பான்” எனச் சொல்லி மறைந்தார், கச்சியப்பரும் நிம்மதிக் கொண்டார்.

மறுநாள் அவை கூடிற்று. கச்சியப்பர் வசமாகச் சிக்கிக்கொண்டார் என எதிரிகள் ஏளனம் செய்யத் தொடங்கியபோது ஒரு இளைஞன் வந்தான், அவன் இளமையான தோற்றமும், முகத்தில் தெரிந்த தெய்வீகமும், காதில் ஆடிய குண்டலங்களும், அவன் அணிந்திருந்த மாணிக்கங்களும் அவன் தெய்வீகக் கவிஞன் என்பதைச் சொன்னது, அவன் கையில் ஓலைச் சுவடிகள் இருந்தன‌.

வந்தவன் அமைதியாக எல்லோரையும் நோக்கினான், அவர்களோ கச்சியப்பரை முடக்குவதிலே குறியாக இருந்தார்கள், அந்தப் புலவன் “இங்கு என்ன சர்ச்சை” என விசாரித்தான்.

“யாரப்பா நீ?” என்றார்கள் கூட்டத்தார். “ஐயா, நான் சோழநாட்டு புலவன், பல இடங்களுக்கு பாடச் செல்வது வழக்கம், அப்படி இப்பக்கம் வரும்போது இந்தக் கூட்டத்தைக் கண்டேன், ஏதும் இலக்கிய விவாதமென வந்துவிட்டேன்” என்றான்.

“இலக்கியம் இல்லை அப்பனே, இது இலக்கணச் சிக்கல், ழவும் தவும் சேர்ந்தால் ட என மாறுமாம், இதோ இவர் சொல்கின்றார், நீயே சொல் தொல்காப்பியரோ இதர இலக்கணம் எழுதியவர்களோ அப்படிச் சொன்னார்களா?” என்றார்கள்.

அவன் யோசித்தான். பின் சொன்னான். “இவ்வளவுதானா சிக்கல்” என்றவன். தன் கையில் உள்ள ஏட்டைப் பிரித்துச் சொன்னான். “புலவர்களே, வீரசோழியம் என்பது சோழநாட்டில் பின்பற்றப்படும் தமிழ் இலக்கண நூல், அதன் 18ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளதைப் பாருங்கள். இதோ “திகடசக்கரம்“ என்று தொடரும் இலக்கண விதி இருக்கிறது, ‘ழவும்’, ‘தவும்’, ‘ட’ என மாறும், அது முரண் அன்று” என ஆதாரம் காட்டினான்.

புலவர்கள் அனைவரும் பதிலின்றி தலைக்குனிந்து நின்றனர், புலவன் தெளிந்த முகத்துடன் சொன்னான், “இன்னும் ஏதும் சந்தேகம் உண்டா? நான் கிளம்பவேண்டும்” என்றான்.

அவர்கள் மௌனமாக அவன் முகத்தினை ஏறெடுத்துப் பார்க்க அவன் புன்னகைத்தபடி நடந்து முருகன் சிலை அருகே சென்று அதனுள் மறைந்தே போனான். அனைவரும் வந்தது முருகன் என உணர்ந்து தண்டனிட்டு வணங்கினர், அதன் பின் கந்தபுராணம் அரங்கேறிற்று.

கந்தபுராணம் இப்படித்தான் தமிழுக்கு மீள வந்தது, அதனை இந்த ஆலயத்தின் முருகனே கொடுத்தார், அந்த மண்டபம் இன்றும் “கச்சியப்பர் மண்டபம்” என உண்டு.

இப்படிப் பெரும் அதிசயங்களைத் தந்தது இந்த ஆலயம். கச்சியப்பருக்குச் செய்த அற்புதங்களை அவரின் சீடருக்கும் முருகப்பெருமான் பல அற்புதங்களைத் தந்த ஆலயம் இது.

அற்புதமான இந்த ஆலயம் மேற்கு நோக்கிய ஐந்து நிலை இராஜ கோபுரத்துடன் அமைந்திருக்கின்றது. மிக நீண்ட அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் உள்ளது. தொடர்ந்து கொடிமரம், பலி பீடம் மற்றும் மயில் வாகனம் ஆகியவை கருவறையை நோக்கி அமைந்திருக்கும்.

இங்கு வெளிப் பிரகாரம் திறந்த வெளி, உள் பிரகாரத்தில் பல துணை சந்நிதிகள் மற்றும் சிலைகள் உண்டு. ஆலய‌ கொடிமரத்திலிருந்து முருகப்பெருமான் உள்ளே செல்லும் போது வலது புறம் பிரமாண்டமான திருமேனியோடு சக்தி விநாயகப் பெருமான் அருள் பாலிப்பார், ஆலய மூலக் கருவறையில் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி ‘பிரம்மசாஸ்தா’ எனும் திருவடிவில், நின்று அருள் பாலிக்கின்றார்.

ஆம், முருகபெருமான் பிரம்மசாஸ்தா வடிவில் அருள்பாலிக்கும் தலம் இது.

இங்கு முருகப்பெருமான் தவக்கோலத்தில் இருப்பதால் மூலக் கருவறையின் பின்புறம், வள்ளி, தெய்வானை தேவியர்கள் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர்.

தேவசேனாபதீஸ்வரர், சந்தான கணபதி, தண்டபாணி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் சந்நிதி, மார்க்கண்டேய முனிவர், சோமாஸ்கந்தர், நவவீரர்கள், முத்துக்குமாரசாமி, கஜவள்ளி, தெய்வானைதேவி, தட்சிணாமூர்த்தி, நாகதேவதை, நவ வீரர்கள், நவக்கிரகங்கள் இங்கு உண்டு.

நவக்கிரகங்கள் ஒன்றையொன்று பார்த்த வண்ணம் அமைந்திருக்கின்றது, அப்படியே சூரிய பகவான் தனது தேவியோடு காட்சித் தருவார்.

இங்குள்ள ‘அனந்த சுப்ரமண்யர்’ என்ற உற்சவ மூர்த்திமேல் ஐந்து தலை நாகம் ஒன்று குடை பிடித்தபடி இருக்கும். இந்த மூர்த்தியைத் தரிசித்து வழிபட்டால் நாக தோஷங்கள் விலகும்.

அவ்வாறே வள்ளி, தெய்வயானை உற்சவ திருமேனிகளிலும் மூன்று தலை நாகம் குடை பிடித்தபடி அமைந்துள்ளன. இவைகளும் நாக தோஷம், ராகு கேது
தோஷமெல்லாம் போக்கும் சக்தி கொண்டவை.

காஞ்சிபுரம் செல்லும் போது இந்தக் கோவிலைக் காண மறவாதீர்கள். ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கும், காமாட்சி அம்மன் ஆலயத்துக்கும் இடையில் அமைந்திருக்கும் ஆலயம். எல்லா வரமும் தரும்.

பிரம்மசாஸ்தா கோலத்தில் நிற்கும் இந்த ஆலயம் ஆழ்ந்த தத்துவத்தைச் சொல்கின்றது. பிரம்மன் வடிவில் நிற்கும் முருகன் இங்குத் தலைவிதியினை மாற்றி தருவார். ஆம், தலைவிதியினை மாற்றித்தரும் ஆலயம் இது.

முருகனே வந்து பிழைதிருத்தித் தந்த இந்த ஆலயம் விதியின் பிழை அனைத்தையும் மாற்றித்தரும்.

இந்தக் கோவிலுக்குச் சென்று நெய்விளக்கு ஏற்றி வணங்கி நில்லுங்கள். முருகப்பெருமான் வழிபட்ட ஈசனை வணங்கி, அப்படியே முருகனையும் வணங்கி, அந்தக் கச்சியப்பரை வணங்கி நில்லுங்கள், உங்கள் விதி அந்நிலையில் மாறும். உங்கள் வாழ்வின் பிழை எல்லாம் அந்நொடியில் மறையும். இது சத்தியம்.