முருகப்பெருமான் ஆலயங்கள் : திருப்போரூர்.
முருகப்பெருமான் ஆலயங்கள் : திருப்போரூர்.
செங்கல்பட்டு அருகே அமைந்துள்ளது அந்தத் திருப்போரூர். அங்கேதான் குடிகொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார் முருகப்பெருமான். பொதுவாக முருகப்பெருமான் ஆலயமெல்லாம் மலைமேல் காணப்படும், இவ்வாலயம் அதற்கு விதிவிலக்காக தரையில் அமைந்துள்ளது.
இதன் இப்போதைய வரலாறு 400 முதல் 500 வருடங்கள் இருக்கலாம் என்றாலும் அதன் தொன்மை யுகங்களைத் தாண்டியது, அதாவது முருகப்பெருமான் அவதாரக் காலத்தில் இருந்து வருவது.
ஆம், முருகப்பெருமான் அசுரரை வதம் செய்ய வந்தபோது தரை, கடல், வான் என மூன்று வழிகளிலும் அவர்களோடு பெரும் போர் புரிந்தார். அப்படி அவர் வான் வழி வந்த அசுரர்களைக் குறிப்பாக தாரகாசுரன் போன்றோரை எதிர்த்து வதம் செய்து வாகை சூடிய இடமே இந்தத் திருப்போரூர்.
முருகப்பெருமான் யுத்தம் செய்த இடம் என்பதால் போர் ஊர் என அழைக்கப்பட்ட இந்த ஊர் போரூர் என்றாயிற்று. யுத்தபுரி என்றும், சமரபுரி என்றும் இதர பெயர்கள் உண்டு. கந்த சஷ்டி கவசத்தில் வரும் “சமராபுரிவாழ் சண்முகத்தரசே” எனும் வரி இந்த ஆலயத்தைக் குறிப்பதே.
அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலம் குறித்துப் பாடும் போது, சகல வேதங்களின் வடிவம் என முருகனைப் போற்றுகிறார். இராமலிங்க வள்ளலார் மற்றும் பாம்பன் சுவாமிகளும் இக்கோயில் முருகனைப் பற்றிப் பாடல்கள் பாடியுள்ளார்.
இந்த ஆலயம் முருகப்பெருமான் காலத்தில் ஸ்தாபனமாகி வழி வழியாக வழிபடப்பட்டு எல்லா மன்னர்களாலும் வணங்கப்பட்ட பெருமை கொண்டது. சோழ மன்னர்கள் பல்லவ மன்னர்களெல்லாம் இதனைக் கொண்டாடி வழிபட்டிருக்கின்றார்கள்.
விக்ரம சோழன் முதலான மன்னர்கள் முற்காலத்தில் வழிபட்ட ஆலயம் இது. பின்னாளில் பல்லவர்களும் பிற்கால சோழர்களும் வழிபட்டிருக்கின்றார்கள்.
ஆனால் மாலிக்காபூர் காலத்துப் படையெடுப்புக்களும் பின் செஞ்சி நாயக்கர் பலமிழந்த பின் கோல்கொண்டா சுல்தான் காலம், பிஜப்பூர் சுல்தான் காலத்தில் இந்த ஆலயம் கைவிடப்பட்டது. செஞ்சிக் கோட்டையினை பிஜப்பூர் சுல்தான் கைப்பற்றிய காலங்களில் அப்பக்கம் பல ஆலயங்கள் பாழ்பட்டன.
திருவண்ணாமலை, விருத்தாச்சலம் எனப் பிரசித்தியான ஆலயங்களெல்லாம் கடுமையாகப் பாதிக்கபட்ட அக்காலங்களில் இந்த ஆலயமும் சிதலமடைந்து ஒரு கட்டத்தில் பனைமர காடாகவே மாறிப் போனது.
இப்படி ஒரு ஆலயம் இருந்த அடையாளமே இல்லாதபடி எல்லாமே மறைந்து போனது.
இந்துமதம் அதன் அடியார்களால் காக்கப்படும் மதம். காலம் காலமாக அதனை யாரோ ஒரு வரம்பெற்ற பிறப்பு வந்து தாங்கிக் கொள்ளும், அதுவும் முருகப்பெருமான் தனக்குரிய பணிகளைத் தன் அடியார்களைக் கொண்டே கவனித்துக் கொள்வார்.
இந்த அடியார்கள் யார்? எங்கிருந்து வருவார்கள்? எப்படி இந்தப் பெரும் பணியினைச் செய்வார்கள் என்பது அதிசயம். யாரும் அறியாதது. ஆனால், எங்கிருந்தோ முருகப்பெருமான் அவர்களை அழைத்து வந்து திருப்பணி செய்யும் பெரும் பாக்கியம் தருவார்.
முருகப்பெருமானும் சித்தர்களும் பிரிக்கமுடியாதவர்கள். பெரும்பாலான முருகன் ஆலயங்கள் சித்தர்களால் மீள கட்டப்பட்டதாகவே இருக்கும். பிரசித்தியான திருச்செந்தூர் ஆலயமே அப்படித்தான் மீண்டது.
அப்படியான சித்தர் ஒருவர் இங்கும் உருவாகி வந்தார், அவர் பெயர் சிதம்பர சுவாமிகள். அவருக்கும் இந்தப் போரூர் பகுதிக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் முருகப்பெருமான் அவரைத் தேர்ந்தெடுத்து இப்பக்கம் அழைத்து வந்த வரலாறு சிலிர்ப்பானது, அதிசயமானது.
அது 16 ஆம் நூற்றாண்டு காலம் 1640 ஆம் ஆண்டுகால கட்டம், அந்நேரம் கோவை பக்கம் ஒரு சித்தர் இருந்தார், அவர் பெயர் குமாரதேவர். இந்தக் குமாரதேவர் அப்பக்கம் மிகப்பெரிய முருக பக்தர். விருத்தாச்சலத்தில் மடமெல்லாம் அமைத்திருந்தார், அவரிடம் வரம்பெற்ற மக்களும் அவரால் ஈர்த்துக கொள்ளபட்டவர்களும் நிறையபேர் இருந்தார்கள். அப்படி அவரிடம் ஒட்டிக் கொண்டவர் சிதம்பர சுவாமிகள்.
சிதம்பர சுவாமிகளையும் அவரிடம் இருக்கும் தெய்வ சக்தியினையும் அறிந்த குமாரதேவர் அவரைத் தன் குரு சாந்தலிங்க சுவாமிகளிடம் அனுப்பினார். சாந்தலிங்க சுவாமிகள் அவரைச் சில காலம் தன் உதவியாளராக வைத்துக் கொண்டார். பின், பல இடங்களுக்குச் சென்று தியானம் யோகம் என தெய்வத்தைத் தேடி மதுரைக்கு வந்த போது ஒரு காட்சி வந்தது.
அவர் தியானத்தில் இருக்கும் போதெல்லாம் அடிக்கடி ஒரு மயில் வருவதையும், அது தோகை விரித்து ஆடுவதையும் காட்சியாகக் கண்டார். இதன் பொருளை உணர தன் குரு சாந்தலிங்க சுவாமிகளைத் தேடிச் சென்றார்.
அவர் சொன்னதைக் கேட்ட சாந்தலிங்க சுவாமிகள் இது முருகப்பெருமானின் செயல் என உணரபெற்றார். மனமார முருகனைத் தியானித்த அவர் சிதம்பர சுவாமிகளிடம் மதுரைக்குச் சென்று மீனாட்சியினை வழிபடு, அவள் உனக்கு வழிகாட்டுவாள் என அவரை மதுரைக்கே அனுப்பி வைத்தார்.
காலம் காலமாக பெரும் பெரும் அடியார்களை உருவாக்கும் மதுரை ஆலயம் குமரகுருபரர், ரமணர் எனப் பல மகான்களை உருவாக்கிய அந்த மதுரை ஆலயத்தின் அன்னை மீனாட்சியிடம் சரணடைந்தார் சிதம்பரம் சுவாமிகள்.
சுவாமிகள் பெரும் தவத்தை மேற் கொண்டார். 40 நாட்கள் அவர் கொண்ட தீராத் தவம் காரணமாக அந்த தவத்துக்கு இறங்கி வந்த மீனாட்சி அம்மன் அவருக்குத் தரிசனமாகிச் சொன்னாள்.
“அடியாரே, நீர் எம்மகன் முருகனின் ஆசிபெற்றவர். அவனின் ஆலயத்தினை மீள உருவாக்க தேர்ந்து கொள்ளபட்டவர், வடக்கே யுத்தபுரி எனும் ஊரில் பாழ்பட்டு கிடக்கும் முருகன் ஆலயத்தை நீர் மீளகட்டும்படி அங்கே செல்வீராக, எமது அருளும் குமரன் அருளும் உமக்கு எக்காலமும் உண்டு” என வாழ்த்தி அனுப்பினாள்.
அதன்படி சிதம்பரம் சுவாமிகள் இந்த யுத்தபுரி எனும் போரூருக்கு வந்தார். ஆனால், அங்கு முருகப்பெருமான் ஆலயம் என எதுவுமில்லை. வேப்பமரத்தடியில் பிள்ளையார் கோவில் ஒன்றே இருந்தது.
குழம்பிப்போனார் சிதம்பர சுவாமிகள். ஆனாலும், அன்னை மீனாட்சி வாக்கு பொய்க்காது என்பதால் அங்கே குடிசை போட்டு தங்கினார். அந்தப் பகுதி பனைமரமும் செடிகொடிகளும் நிரம்பிய இடமாக இருந்தது, அங்கே முருகன் கோவிலைத் தேடி பார்த்தார், கிடைக்கவில்லை.
ஆனால், அவரின் மனம் அங்கு ஏதோ இருப்பதைச் சொன்னது. ஆனால், எங்கே என்பதை அவரால் காணமுடியவில்லை. இதனால் முருகப் பெருமானை நோக்கித் தவமிருந்தார். அந்நேரம் ஒரு சிறுவன் வந்து அவரை அழைத்துச் சென்று பனைமரத்தின் அடியில் இருந்த மண்மூடிய புற்றின் முன்னால் நிறுத்தினான், அப்படியே அவருக்கு திருநீறு அணிவித்துவிட்டு மறைந்தான்.
சிதம்பர சுவாமிகள் வந்தது முருகனே என்பதை உணர்ந்து சிலிர்த்துப் போனார். அந்த பனைமரத்தடியில் மண்மூடிய புற்றினை தோண்டியபோது உள்ளே இருந்து சுயம்பு கோலமாக முருகப்பெருமான் சிலை வெளிப்பட்டது, கூடவே ஒரு பாத்திரமும் இருந்தது.
அந்த முருகப்பெருமான் பெருமான் சிலையினை வேப்பமரத்தடி பிள்ளையார் சிலை அருகே வைத்து வணங்கத் தொடங்கினார் சிதம்பர சுவாமிகள். யாராலும் அடையாளம் காணப்படாமல் இருந்த, காலத்தால் மறைந்திருந்த முருகப்பெருமான் சிலையினை அவர் மீட்டு வந்ததில் அவருக்குப் பெரும் பெயர் உருவானது.
அவர் அந்த பாத்திரம் நிறைய விபூதியுடன் அமர்ந்திருப்பார், அந்த விபூதி அப்பாத்திரத்தில் அள்ள அள்ள வந்து கொண்டே இருந்தது, அட்சயப் பாத்திரமுமானது.
அதனைக் கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்குக் குறை தீர்க்கத் தொடங்கினார், அவரின் கையால் வாங்கப்படும் விபூதியால் நோய்கள் தீர்ந்தன, பிள்ளை பாக்கியம் வந்தது, இன்னும் எல்லாக் குறைகளும் தீர்ந்தன. அது பெரும் அருமருந்தாயிற்று.
இதனால் அவருக்கு மக்கள் காணிக்கைகளைக் குவித்தார்கள், முருகபெருமானுக்காக வாழும் அவர் அந்த காணிக்கைகளைக் கொண்டு கோவில் கட்ட திட்டமிட்டார்.
அவரின் கனவு மிக மிக பிரமாண்டமாக இருந்தது. மிகப்பெரிய இடத்தில் கோபுரம் தெப்பகுளம் என எல்லாமும் கொண்ட பெரும் ஆலயம் கட்டும் கனவு இருந்தது, ஆனால் அதற்கான நிதி அவரிடமில்லை முதலில் ஒரு சென்ட் நிலம் கூட அவரிடம் இல்லை.
ஆனாலும், முருகப்பெருமான் வழிகாட்டுவான் என நம்பினார். அந்நேரம் இவரிடம் இருந்த காணிக்கை பணம் தங்கத்தை அள்ளிச் செல்ல கொள்ளையர் கும்பல் ஒன்று திட்டமிட்டது.
அவரோ சாது, அவரிடம் குவிந்த காணிக்கையினை அவர் தன் குடிசையில் வைத்திருப்பார். அங்குப் பெரிய காவலோ ஆட்களோ இல்லை என்பதைக் கணித்த கும்பல் அந்தப் பொருட்களை கொள்ளையிட வந்தது.
அவர்கள் திட்டப்படி முகமூடி அணிந்து வந்து அள்ளிச் செல்லவும் சுவாமிகள் தடுத்தால் அவரை எளிதில் சமாளித்துக் கொள்ளையிடவும் திட்டமிட்டு வந்தார்கள். மிக எளிதாகக் கொள்ளையிடலாம் என வந்தவர்கள் அந்தப் பொருட்களை அள்ளி எடுத்துச் செல்ல முயன்றபோது அவர்கள் கைகால்கள் இயங்க மறுத்தன, கண் பார்வையும் மறைந்து போனது.
மிகுந்த அச்சம் கொண்டவர்கள் அலறினார்கள், அழுதார்கள். அப்போது அங்கு வந்த சுவாமிகள் நடந்ததை அறிந்து அவர்களைக் கருணையுடன் நோக்கிச் சொன்னார், “அன்பர்களே, இது முருகப்பெருமானின் ஆலயத்திற்கான பணம் அல்லவா? அதைத் தொட்டால் அவன் விடுவானா?
நான் உங்களுக்காக முருகனிடம் வேண்டுகின்றேன், நீங்களும் மன்னிப்புக் கேளுங்கள்” எனச் சொன்னபடி அவர்களுக்கு விபூதி பூசிவிட்டார். அக்கணமே அவர்கள் நலமானார்கள்.
அந்நொடி அவர்கள் பெரும் மனமாற்றம் அடைந்து அந்தப் பொருட்களைச் சுவாமியிடமே கொடுத்து இன்னும் தாங்கள் முன்பு கொள்ளை அடித்த பெரும் பொருட்களை எல்லாம் அவரிடமே கொடுத்துவிட்டு பணிந்து சென்றார்கள்.
யுத்தபுரி முருகன் கொள்ளையர்களுடன் சுவாமிகாக யுத்தம் செய்து பெரும் அதிசயமாக கோவில் கட்டும் பணிக்கான அடித்தளமிட்டார்.
சுவாமிகளைத் தேடி கூட்டம் கூட்டமாக மக்கள் வந்தார்கள். அவர் புகழ் சுற்றுபுறமெங்கும் பரவிற்று. அவரிடம் சென்று விபூதி பூசினால் எல்லா நோயும் குணமடையும் என்பதால் மக்கள் தேடி தேடி வந்தார்கள்.
அப்படி வந்தவர்களில் அப்போது செஞ்சியில் இருந்த பிஜப்பூர் சுல்தானின் ஆளுநரும் ஒருவன். இவன் ஆப்ரிக்க சித்தி இனம் அடிப்படையில் இஸ்லாமியர்.
ஆப்ரிக்கர்களும் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தினர். இவர்கள் பாமினி சுல்தான் காலத்தில் ஆப்ரிக்காவில் இருந்து கடலோடிகளாக, அடிமைகளாக இன்னும் கூலிக்கு ஆட்களாக வந்தவர்கள். பிஜப்பூர் சுல்தானியம் செஞ்சி வரை நீண்டபோது இங்கு ஆட்சியில் இருந்தவர்கள்.
அப்படியான சித்தி ஒருவன் மனைவிக்கு, செஞ்சிக் கோட்டையில் இருந்த அவளுக்கு தீரா வயிற்றுவலி இருந்தது. அவன் சுவாமிகளின் சக்தி பற்றி கேள்விபட்டு மனைவியோடு வந்தான், அந்தப் பிரதேசம் முழுக்க அவன் ஆளுகைக்கு உட்பட்ட இடமாக இருந்தது.
அவன் மனைவிக்கு சுவாமி திருநீறு கொடுக்க அவள் நோய் உடனே அகன்றது, அந்த ஆளுநர் மிக மகிழ்ந்து போனான். காரணம், எந்த வைத்தியத்துக்கும் அடங்காத அந்நோய் சுவாமிகளின் கருணையால் நொடியில் சரியானது.
அவன் மகிழ்ந்து சுவாமியிடம் என்ன வேண்டும் எனப் பணிந்து கேட்டான். உடன் இருந்தவர்கள் சுவாமி கோவில் கட்ட நிலம் வாங்கும் திட்டத்தில் இருப்பதைச் சொல்லி அதனை அதிகாரம் கொண்ட அவன் ஒழுங்கு செய்யும்படி இடையூறு வராதபடி காக்க வேண்டும் என்றார்கள்.
அவனோ அந்த நிலத்தை தானே தர முன் வந்தான், அவன் ஆளுகைக்கு உட்பட்டது அந்த பகுதி என்பதால் சுமார் 650 ஏக்கர் நிலத்தைக் கோவில் கட்ட ஒதுக்கினான், அப்போதே பட்டா போட்டு கொடுத்தும் விட்டான்.
சுவாமிகள் மனம் நெகிழ்ந்து போனார், 650 ஏக்கர் என்பது அவர் கனவிலும் நினையாத விஷயம்.
கை நிறைய பொருளும், கண் நிறைய நிலமும், இன்னும் விபூதியினை அள்ள அள்ள தர அட்சய பாத்திரமும் இருக்க இனி என்ன கவலை என அக்கோவிலை பிரமாண்டமாகக் கட்டத் தொட்ங்கினார்.
அபபடி உருவானதுதான் இந்தத் திருப்போரூர் ஆலயம்.
ஒரு மாபெரும் மன்னன் மட்டுமே கட்டக் கூடிய பிரமாண்ட கோவிலை ஒரு சித்தனாக அவர் நின்று கட்டினார். இந்த அசாத்திய சாதனை சென்னிமலை, திருச்செந்தூர் எனச் சாதுக்கள் கட்டிய அந்த வகை. முருகப்பெருமான் கருணைக்குப் பெரும் சான்று.
யாரலும் சாதிக்க முடியாத பெரும் விஷயத்தை முருகப்பெருமான் அருளால் சாதித்து அதி அற்புதமான அந்த ஆலயத்தினை மீட்டெடுத்து தந்தார் சிதம்பரம் சுவாமிகள்.
அந்த ஆலயத்தை மீள கட்டும்போதுதான் சோழர்கால கல்வெட்டுகள் பல்லவர் கால கல்வெட்டெல்லாம் கிடைத்தன.
கோவிலை கட்டிவிட்டு மட்டும் செல்லவில்லை அந்தச் சித்தர், அவர் முருகனுக்கு பல பாடல்களை, மந்திரங்களைக் கொடுத்தார், சிதம்பர சுவாமி .
அவர் எழுதிப் பாடிய நூல்கள் கணக்கற்றவை. மதுரையில் மீனாட்சி கலி வெண்பா பாடித் தொடங்கிய அவர், இங்கு உபதேச உண்மை, உபதேசக் கட்டளை, திருப்போரூர் சந்நிதி முறை, தோத்திர மாலை, திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம், கிளிப்பாட்டு, குயில்பாட்டு, தாலாட்டு, திருப்பள்ளி எழுச்சி, ஊசல், தூது எனப் பல எழுதினார்.
அவரின் மிகப் பெரிய முத்திரை ஒரு யந்திரம் உருவாக்கி அக்கோவிலில் பதித்து எல்லாக் காலமும் அதைச் சக்தியுள்ளதாக நிறுத்தி வைத்தது. அதனை கடும் விரதமிருந்து சக்தி பெற்று 726 பாடல்களைப் பலமுறை பாடி உருவேற்றிம் பதித்தார்.
அச்சக்கரம் கோவிலில் உண்டு. தனியாக உண்டு. இதனாலே அங்குப் பெரும் சக்தி முருகப்பெருமான் அருளோடு பிரவாகமாக வருகின்றது.
அந்தச் சிதம்பர சுவாமி இந்த ஆலயம் மட்டுமல்ல அருகிருக்கும் மலையில் பிரணவ ஆலயம் என்றொரு ஆலயமும் ஸ்தாபித்தார்.
ஒரு வைகாசி விசாகம் அன்று அந்த மகாபுண்ணியமான முருகபக்தர் முருகப்பெருமான் போடு கலந்தே போனார். அவர் அங்கு ஜீவசமாதி கொண்டிருக்கவில்லை. மாறாக, ஆண்டாள் போல மாணிக்கவாசகர் போல பத்ருஹரியார் போல கருவறையில் கரைந்தே போனார்.
அவர் பயன்படுத்திய அந்த அட்சய பாத்திரம் அவருக்கு அள்ள அள்ள விபூதி கொடுத்த அந்தப் பாத்திரம் இன்றும் உண்டு, அவர் இக்கோவிலை கட்ட பெரும் உதவியாக இருந்தது அந்தப் பாத்திரமே, அதைக் கண்டாலே பெரும் புணணியம்.
இங்குள்ள மிகப் பெரும் சிறப்பு சிவனுக்கு பாலகுருவாக முருகன் பிரணவம் உரைக்கும் காட்சி இங்குச் செம்பு சிலையாக அமைக்கபட்டுள்ளது, இது வேறெங்கும் இல்லாச் சிறப்பு.
இந்த முருகப்பெருமான் சுயம்பு என்பதால் அவருக்கு அபிஷேகமெல்லாம் இல்லை. மாறாக, புனுகு சாற்றி வழிபாடு செய்யப்படும்.
இங்கு முருகர் கையில் ஜெயமாலையும் ஏடும் ஏந்தி சிவனை வழிபடும் காட்சியில் இருக்கும் தனித்துவமான கோவில் இது. அதாவது, கல்வி செல்வம் உள்பட எல்லாச் செல்வமும் அவர் தரும் அபூர்வமான தோற்றம் இது.
இங்கு வள்ளி தெய்வானைக்குத் தனிச் சிறப்பு உண்டு. நவராத்திரி காலங்களில் இங்கு அவர்களுக்கு பெரும் பூஜையும் வழிபாடும் நடக்கும்.
இங்குள்ள குக்குகநாதர் சந்நிதி விசேஷமானது. வேலையில் வரும் சிக்கல், வெளிநாடு செல்லும் விசா சிக்கல் போன்றவை இங்குத் தீரும்.
இந்த ஆலயத்தின் சிறப்புகளைச் சொல்லி முடியாது, அந்த அளவு மகா பிரசித்தியானது. இந்த ஆலயத்தில் வழிபட்ட பக்தர்கள்தான் பின்னர் வடபழனியில் ஒரு முருகன் கோவிலைக் கட்டினார்கள், அது மகா பிரசித்தியாயிற்று.
இது எதிரிகளை முழுக்க ஒழித்துத் தரும் ஆலயம். ஆகாயத்தில் நின்று யுத்தம் செய்த அசுரர்களை முருகப்பெருமான் அழித்துப் போட்ட இடம் என்பதால் கண்ணுக்குத் தெரிந்தததும் தெரியாதுமான எல்லா வகை எதிரிகளும் இங்கு ஒழிந்துபோவார்கள்.
இது யுத்தபுரி, சமராபுரி என்பது வெறும் புராணக் கதை அல்ல, வெறும் வார்த்தைகளில் சொன்னதுமல்ல. போர் ஊர் எனப் பெயர் பெற்ற இந்தத் தலம், எதிரிகளை அடக்கி வெற்றித் தரும்.
தன்னை அடக்கி ஞானம் பெறுதல் முதல் எதிரிகளை அடக்கி பெருவாழ்வு தருவது வரை இந்தத் தலம் தரும்.
அன்னை மீனாட்சி எப்போதும் எங்கெல்லாம் அதர்மம் ஆடுமோ எங்கெல்லாம் சனாதனம் சரியுமோ அங்கெல்லாம் ஒவ்வொருவரை அனுப்பி மீட்பாள், மதுரை ஆலயத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை இது.
அவள் தடாதகை என வந்து போர் பல செய்தாள் என்பது எக்காலமும் உண்டு, தன் அடியார்களை எப்படி பயன்படுத்தி தர்மத்தை மீட்க வேண்டுமோ அப்படி மீட்டுக் கொள்வாள்.
அவளே பாண்டிய மன்னர்களை நடத்தினாள், அவளே சமணர் காலத்தில் இவ்வாலயம் பாழானபோது சம்பந்த பெருமானை அழைத்து வந்தாள், அவளே துக்ளக் காலத்தில் மதுரை ஆலயம் அடைபட்டு கிடந்த போது கம்பண்ண உடையார்க்கு வாள் கொடுத்து அழைத்து வந்தாள்.
அவளே காசி ஆலயத்தை மீட்க குமரகுருபரரை அனுப்பி வைத்தாள். அவர்தான் மொகலாய சுல்தான் தாரா ஷிக்கோவிடம் இருந்து காசி கோவிலை மீட்டெடுத்தார்.
அதே சாயலில் அழிந்து கிடந்த மகா முக்கிய கோவிலை தன் அடியாரான சிதம்பர சுவாமிகள் மூலம் மீட்டாள் அன்னை. இந்த ஆலயம் துலங்கிய பின்புதான் சென்னை பக்கம் பல மாற்றம் வந்தது.
இந்த யுத்தபுரி ஆலயம் துலங்கிய பின்புதான் தஞ்சாவூர் கோவிலுக்குக் காவலாக வந்தான் சிவாஜியின் தகப்பன் ஷாஹாஜி, அதை அடுத்தே வீரசிவாஜி தமிழகம் வந்து திருவண்ணாமலை, விருத்தாச்சலம், சிதம்பரம், பூவராகர் ஆலயம் என அந்நியபபிடியில் நாசமான ஆலயம் அத்தனையும் மீட்டுத் தந்தான்.
அவன் மகன் சாம்பாஜி காலத்தில் சிதம்பரம் கோவிலில் மீண்டும் பொற்கூரை வேயப்பட்டது.
இந்த ஆலயம் எழும்பிய பின்புதான் அதுவரை இல்லா அளவு பெரும் போராட்டமெல்லாம் வந்து அந்நிய கொடிய ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது.
இங்கு வணங்கினால் அதர்மத்தை அழிக்கும் சக்தி கிடைக்கும், எதிரிகளை ஒடுக்கி வைக்கும் பெரும் வல்லமை வரும், அது முழுக்க உண்மை.
பெரிய உதாரணம் இலங்கையின் பிரபாகரன் அவனைப் போல ஒரு முருகபக்தனை தொடக்க காலத்தில் கண்டிருக்க முடியாது, அவனே சொன்னபடி பல இடர்பாடுகளில் அவனைக் காத்தது முருகப்பெருமானே.
அவன் தமிழகத்தில் தங்கியிருந்தபோது தவறாமல் வழிபட்ட ஆலயம் இது, அவன் திருமணம் இங்குதான் நடந்தது. இங்கு வணங்கியபின் அவன் கொடிஉயரப் பறந்தது. ஆனால், பின்னாளில் சேரிடம் அறியாமல் திராவிட தமிழ்தேசிய கும்பல்களிடம் வீழ்ந்து திசைமாறிப் போனான்.
ஆனால், அவன் இந்த ஆலயத்தில் வணங்கிய காலங்களில் பெரும் உச்சத்தில் இருந்தான். இந்த ஆலயத்தை மறந்தபின்பே வீழ்ந்தான் என்பது வரலாறு.
இந்த ஆலயம் முருகப்பெருமான் ஆலயங்களில் தனித்துவமானது. இந்த கோவில் ஓம்கார வடிவில் அமைந்துள்ளது. இங்குள்ள
கொடிமரம் 24 தூண்கள் கொண்ட வட்ட மண்டபத்தில் உண்டு.
கோயிலின் பிரதான வாயில் தெற்கு நோக்கியே இருக்கிறது. கருவறையில் முருகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேதராக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இந்த சுயம்பு மூர்த்தியின் எதிரே சிதம்பர சுவாமிகளால் யந்திரம் பிரதிஷ்டை தனியாக ஆதார பீடத்துடன் செய்யப்பட்டுள்ளது.
இந்த யந்திரத்தில் முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்குப் பூஜை நடந்தபின் இந்த யந்திரத்திற்கு அபிஷேகங்கள் பூஜைகள் நடக்கும்.
இங்குப் பிரம்மாவைப் போல் அவருக்குரிய அட்சர மாலை மற்றும் கண்டிகையும் சிவனைப் போல் வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த முத்திரையும், பெருமாளைப் போல் இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த முத்திரையும் என மும்மூர்த்திகளின் அம்சமாகக் கந்தசாமி முருகன் அருள்பாலிக்கிறார்.
இங்குச் சுவாமிக்கு எதிரே மயில் அல்ல மாறாக ஐராவதம் எனும் இந்திரனின் யானை உள்ளது, இது தெய்வானை அருள் பெற்ற தலம் என்பதைச் சொல்கின்றது.
இங்கு இருபத்து நான்கு தூண்களோடு கூடிய ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. ஒவ்வொரு தூணிலும் ஒரு கையில் கேடயமும், ஒரு கையில் வாளும் உடைய நவவீரர் முதலியோரது உருவங்கள் உண்டு.
கோயில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர் சந்நதி உண்டு. அசுரனை அழிக்கும் போது இங்கு முருகனுக்கு பைரவரும் துணைக்கு வந்தார் என்பதைச் சொல்ல நாய் இல்லாத பைரவ கோலம் உண்டு.
முருகப்பெருமானே பிரம்மனாக வீற்றிருப்பதால் இங்கு நவக்கிரக சந்நிதி கிடையாது. கையில் சேவலுடன் முருகன் காட்சியளிக்கும் குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது.
யுத்தத்தில் வெற்றி தரும் வகையில் கையில் வில்லேந்தி மயில்மேல் காலை வைத்தபடி சம்ஹார முத்துக்குமார சுவாமி தனியாக நிற்கின்றார்.
இன்னும் விநாயகர், சோமாஸ்கந்தா, சந்திரசேகரர், பிரம்மா, விஷ்ணு, தேவேந்திரர், நந்தி எனப் பல தெய்வங்களின் பஞ்சலோகச் சிலைகளும், முக்கியமாகத் தந்தையின் மடியில் அமர்ந்தபடி செவிகளில் பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை முருகன் வெளிப்படுத்தும் செப்புச் சிலையும், உபசந்நிதியும் உள்ளது.
இந்தக் கோவிலை கட்டித் தந்த அந்த மகான் சிதம்பர சுவாமி சிலையாக அருள்பாலிக்கின்றார். அப்படியே கோவில் நிலம் தந்த அந்த பிஜப்பூர் சுல்தானின் ஆளுநரான ஆப்ரிக்கனுக்கும் இங்குச் சிலை உண்டு.
சென்னை பக்கம், செங்கபட்டு பக்கம் செல்லும் போது இந்த மகா சிறப்பான ஆலயத்தைக கண்டுவழிபட தவறாதீர்கள். திருப்போரூர் முருகன் உங்களுக்குத் திருப்பம் தருவார், எல்லா வகை தொல்லையும் அங்கு மறையும். கண்காணும் காணாத எல்லா எதிரிகளும் அங்கு ஒழிந்து போவார்கள். அந்த மகா சக்திவாய்ந்த முருகன் உங்கள் உடல்நலம். மனநலம், தொழில் என எல்லாப் பக்கமும் இருந்துவரும் எதிரிகளை ஒடுக்கி உங்களுக்கு முழு வெற்றி எக்காலமும் தருவார்.
அங்குச் சென்று சிதம்பர சுவாமிகளை நினைத்தபடி முருகப்பெருமான் சந்நிதியில் திருநீறு பூசும்போது எல்லாக் குறையும். துன்பமும் மறைந்து எல்லா எதிரிகளும் எதிர்ப்பும் முருகப்பெருமான் அருளில் மறைந்து எல்லாமும் நலமாகும். எல்லாமும் மகிழ்வும் நிறைவுமாகும். இது சத்தியம்.