முருகப்பெருமான் ஆலயங்கள் : தென்பழனி முருகன் மற்றும் வவ்வால் குகை முருகன் ஆலயம் ஆரல்வாய் மொழி.
முருகப்பெருமான் ஆலயங்கள் : தென்பழனி முருகன் மற்றும் வவ்வால் குகை முருகன் ஆலயம் ஆரல்வாய் மொழி.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பொதிகை மலை மட்டும் அகத்திய தலைமையில் சித்தர்கள் குவிந்த இடம் அல்ல, அவர்கள் அந்த நீண்ட மலை முழுக்க பயணித்தார்கள், அபூர்வ மூலிகைகள் தேடி, பிரபஞ்சத்தின் நல்ல அதிர்வுகளைத் தரும் இடம் தேடி தேடி அலைந்தார்கள், தாங்கள் இருக்குமிடமெல்லாம் முருகப்பெருமனையும் வணங்கினார்கள். பின்னாளில் அவர்கள் சமாதியானாலும் அவர்கள் உருவாக்கிய முருகப்பெருமான் ஆலயங்கள் அந்த மலைமுழுக்க நிலைபெற்றன.
அவை மகா சக்தியுடன் நிலைபெற்றன. இடையில் காலவோட்டத்தில் அவை சிதிலமடைந்தாலும் காலம் தோறும் அவற்றை முருக பெருமானே மீட்டு வந்தார். அவரின் அற்புதங்களில் மீட்கப்பட்ட ஆலயங்கள் இன்றும் அதிசயம் நிரம்பிய தலங்களாக உண்டு, சித்தர்கள் வந்து வணங்கி சக்தியினை நிரப்பிச் செல்லும் மகா நுணுக்கமான ஆச்சரியமான தலங்களாக, வற்றாத அருள் நிறைந்த தலங்களாக இன்றும் உண்டு.
அப்படி அந்த மலைத் தொடரில் அமைந்த ஆலயங்கள்தான் ஆரல்வாய் மொழியின் வவ்வால் குகை பாலசுப்பிரமணியன் ஆலயமும், தென்பழனி ஆலயமும்.
அந்த ஆரல்வாய்மொழி என்பது முன்பு சேரநாட்டின் எல்லையாக பாண்டிய நாட்டின் நுழைவாயிலாக இருந்தது. ஆரல்வாய்மொழி கணவாய்தான் பாண்டிய நாட்டுக்கான வழி, அந்த எல்லையில் சேர நாட்டு மன்னர்களாலும், பாண்டிய நாட்டு மன்னர்களாலும் வணங்கப்பட்ட ஆலயங்கள் இவை.
இதனை உருவாக்கியவர் அகத்தியரும் அவரின் சீடர்களுமாவர். பெரும் காலத்துக்கு முன்பு இப்பக்கம் வந்து மூலிகைகளைக் கொண்டு ஆய்வு செய்தும் முருகப்பெருமானை நோக்கி தவமிருந்தும் வழிபட்ட அவர்களே இதனை ஸ்தாபித்தார்கள், பின் வழிவழியாக சித்தர்களால் இவை இன்னும் இன்னும் சக்தியாக்கபட்டன.
தென்பழனி ஆலயம் என்பது ஆரல்வாய்மொழிக்கு மேற்கே ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது, அக்காலத்தில் அகத்தியரும் போகரும் முருகனை ஸ்தாபித்து வணங்கிய இடம் அது, அப்போதே கோவிலும் உருவானது.
அகத்தியரின் பூஜைக்காக முருகப்பெருமானே வந்து தன் வேலால் உருவாக்கிக் கொடுத்த சுனைகள் இன்றும் உண்டு. அதிலிருந்துதான் பூஜைக்கு இன்றும் நீர் எடுக்கப்படும்.
பழனிக்கு நிகரானதாக கருதப்பட்டு சித்தர்களால் வழிபடபட்ட இந்த ஆலயம் தென் பழனி என்றே அழைக்கப்பட்டது. சேர மன்னர்கள் பாண்டிய மன்னர்கள் வந்து வணங்கிய தலம் இது, அவர்கள் இந்த ஆலயத்தை “தென்பழனி” எனக் கொண்டாடி கல்வெட்டு வைத்தது இன்றும் அங்கு உண்டு.
மலைக்கு மேல் அமைந்திருக்கும் ஆலயமான இந்த முருகப்பெருமான் ஆலயம் பின்னாளில் சிதலமடைந்தாலும் முருகப்பெருமான் காலம் பார்த்து மீட்டுக் கொண்டார். ஆடுமேய்க்கும் சிறுவர்களுடன் சிறுவர் போல் விளையாட வரும் முருகப்பெருமான் விளையாட்டின் முடிவில் ஜோதி வடிவாய் இங்குச் சென்று மறைவதும், காட்டில் தவிப்போர்க்கு நீர் வழங்க வரும் பெண்ணாக வந்து இங்கு மறைவதுமாக தன் இருப்பை காட்டிக் கொண்டே இருந்தார்.
மலை உச்சியில் இருப்பதாலும் இந்த எல்லைகள் அடிக்கடி அரசுகளிடை மாறுவதாலும் இன்னும் பல காரணங்களாலும், இன்றும் பாதைகள் சரியில்லாததாலும் அடிக்கடி இந்த ஆலயம் வரலாற்றில் மறைந்த நிலைக்குச் செல்லும், பின் தானே எழும். முருகப்பெருமான் அப்படி எழுப்பிக் கொண்டே இருந்தார். சித்தர்களும் அதற்கு அடையாளம் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.
பௌர்ணமிக்கு இங்குச் சித்தர்கள் வருவது வாடிக்கை, இன்றும் அவர்கள் சாமானிய வடிவிலோ இல்லை அரூப வடிவிலோ சித்தர் வடிவிலோ வந்து செல்வார்கள், சித்தர்களின் தண்டம் வழிபடப்படும் இடமும் இதுதான்.
இந்த மலைக்கே சித்தர்கிரி என இன்னொரு பெயரும் உண்டு.
மகா சூட்சுமமான இந்த ஆலயத்தில் சித்தர்களின் ஜீவசமாதி இரண்டு உண்டு. எப்போதும் முருகப்பெருமானின் அருளும் சித்தர்களின் அனுக்கிரஹமும் நிரம்பிய இந்த ஆலயம் ஒருமுறை சிதிலமடைந்த நேரம் தன்னை மீண்டும் மீட்டுக் கொண்ட காட்சி சிறப்பானது.
சில நூற்றாண்டுக்கு முன் மதுரையில் இருந்த செட்டியார் தம்பதிகளுக்கு குழந்தை பேறு இல்லை. முருகபக்தர்களான அவர்கள் குழந்தைக்காக முருகனிடம் வேண்டிக் கொண்டிருந்த நேரத்தில் செட்டியார் காலமானார்.
அதனால் மிகுந்த விரக்திக்குள்ளான மனைவி மிகுந்த வேதனையில் கோவில் கோவிலாக சுற்றத் தொடங்கினார். ஒருமுறை நாகர்கோவில் சுசீந்திரம் பக்கமுள்ள ஆலயம் நோக்கி அவர் சென்றபோது முப்பந்தல் அருகே கள்வர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.
வழிபயணத்துக்கான பணமும் இன்னும் நகைகளும் கொண்டிருந்த அவர் உரிய காவலோடு வந்திருந்தாலும் கொடிய ஆயுதம் தாங்கிய பெரிய கொள்ளைக் கூட்டம் முன் அவர்கள் செயலற்றுப் போயினர், இனித் தன் பொருளெல்லாம் கொள்ளையிடப்படும், தன் நிலையும் அவ்வளவுதான் என அஞ்சிய அப்பெண் “முருகா” எனச் சொல்லி மூர்ச்சையானாள்.
விழித்த போது அவளும் அவளின் பொருட்களும் அப்படியே இருந்தன, அவளின் மாட்டுவண்டிக்கோ ஆட்களுக்கோ எந்தச் சேதமுமில்லாததைக் கண்டு மனமுவந்து “முருகா” என அவள் சொன்னபோது இந்த மலை உச்சியில் பெரிய சோதி அவளுக்குத் தெரிந்தது, அந்தச் சோதி இன்னும் பிரம்மாண்டமாகி பாலசுப்பிரமணியரின் கோலமும் தெரிந்தது.
தன்னைக் காப்பாற்றியது முருகனே என உணர்ந்தவள் அந்த மலைக்கு ஓடிச் சென்றாள். அங்கே பாழ்பட்ட ஆலயத்தைக் கண்டவள் தன் சொத்துக்களை எல்லாம் விற்று பெரிய திருப்பணிக்ளைச் செய்து ஆலயத்தை புதுப்பித்தாள்.
அதன்பின் பக்தர்களெல்லாம் கூடி இன்றிருக்கும் ஆலயத்தினை சித்தர்கால பழமை மாறாமல் புதுபித்து வழிபட்டு வருகின்றார்கள், சித்தர் சமாதிகளுடன் பௌர்ணமி வழிபாட்டுடன் அந்த மலை உச்சி ஆலயம் தென்பழனியாக அருள் பாலிக்கின்றது.
பழனியில் என்னென்ன அருள் உண்டௌ என்னென்ன அதிசயம் உண்டோ அனைத்தும் இங்கும் உண்டு.
இந்த ஆலயச் சிலையும் வேலும் சித்தர்களால் ஸ்தாபிக்கபட்டது என்பதால் சக்தி அதிகம், இங்குத் தீராத நோயெல்லாம் தீரும். வேண்டிய வரம் அனைத்தும் கிடைக்கும், மனக்கவலை முதல் எல்லாக் கவலையும் தீரும் இடம் இது.
மருத்துவ மூலிகைகள் நிரம்பிய மலை என்பதால் இந்த மலையின் காற்றும் நீருமே நோய்களைத் தீர்க்கும் சக்தி கொண்டது, அந்த ஆலயத்தில் ஒருநாள் தங்கி வந்தாலே உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும்.
பௌர்ணமி, அமாவாசை காலங்களில் இங்குச் சித்தர்கள் வருகை இன்றும் என்றும் உண்டு. பௌர்ணமிக்கு இங்கு சதுரகிரி போல சித்தர்கள் வந்து அமர்வார்கள். வழிபாடுகளைச் செய்வார்கள். ஆனால், பார்ப்பதற்குச் சாமானிய கூலிகளாகவோ மிக மிக இயல்பானவர்களாகவோ இருப்பதால் அடையாளம் காண்பது கடினம், சில நேரம் மகா சித்தர்களும் வருவார்கள்.
தென்முனை என்பது சித்தர்களின் பூமி. பொதிகை மலை அகத்தியர், விஜயாபதி விசுவாமித்திரர் என மகா ரிஷிகள் இன்றும் அமர்ந்திருக்கும் பூமி, இதனால் இந்த மலையும் அப்படியான சித்தர்கள் அருள்பாலிக்கும் அற்புதமான இடம்.
முருகபெருமானுக்கு ஆரகன் என்றொரு பெயரும் உண்டு, ஆரகன் என்றால் தீமைகளை அழிப்பவன் எனப் பொருள், ஆரல்வாய்மொழி எனும் பெயர் ஆரகன்வாய்மொழி என்பதில் இருந்தே வந்திருக்கலாம். காரணம், அங்குத் தொன்றுதொட்டு வரும் அடையாளம் முருகப்பெருமானின் இந்தத் தலங்கள் அன்றி வேறேதும் அல்ல.
விசுவாமித்திரர் விஜயாபதியில் இருந்தது போல், அகத்தியர் பொதிகை மலையில் இருந்தது போல், கௌதவமுனிவரும் இந்த மலையில்தான் ஆசிரமம் கொண்டிருந்தார், அகலிகை கல்லாய் போனதும் பின் ராமன் பாதம்பட்டு அவள் மீண்டதும் இங்குதான்.
இதனாலேதான் இன்றும் அங்கு அவள்பெயரில் அகலிகை ஊற்று என்றொரு அடையாளம் உண்டு. அங்கிருந்துதான் அப்பக்கம் எல்லா கோவில்களுக்கும் புனிதநீர் எடுத்து செல்லப்படும்.
இந்த மலை உச்சிக்குச் செல்ல சுமார் இரண்டாயிரம் படிகளைக் கடக்க வேண்டும், பெரிய ஆபத்தெல்லாம் இல்லாத இயல்பான மலைப்பாதை படிகளுடன் உண்டு, அந்த மதுரை மகராசி படிகளையும் செதுக்கி வைத்திருக்கின்றாள்.
ஆனால், மழைகாலங்களில் இந்தப் பாதை சிக்கலானது என்பதால் மழை அல்லாத காலங்களில் யாரும் செல்லலாம். சுமார் 40 நிமிடத்தில் மலைக்கோவிலை அடைந்துவிடலாம், சித்தர்கள் அருளுடன் முருகப்பெருமான் அருளையும் முழுக்க வாங்கியும் விடலாம். தீராத எல்லாச் சிக்கலும் இந்தச் சன்னதியில் தீரும், எதிரிகளை முடக்கித் தரும் இந்த ஆலயம் நல்ல உடல்நலம் மனநலம் இன்னும் பொருள்பலம் என எல்லாமும் தந்து பெரும் ஞானமும் தரும்.
இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதுதான் வவ்வால் குகை, இது அடிப்படையில் நீண்ட பெரும் குகை. ஆனால், முகப்பில் மட்டும் ஆலயம் கட்டப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன, அடிப்படையில் உள்ளே குகை மிக நீண்டு செல்லும். அங்குச் சித்தர்களின் தவமும் இன்னும் பல சூட்சும சசதி வடிவங்களும் உண்டு. பொற்றாமரைக் குளமும் உண்டு என்பதால் யாரும் தொந்தரவு செய்வதில்லை.
வவ்வால்கள் நிறைந்த குகை என்பதால் வவ்வால் குகையாயிற்று. பின்னாளில் அப்பெயரே நிலைத்தும் விட்டது, சித்தர்கள் இங்கு வேல் ஊன்றி வழிபட்ட அடையாளம் உண்டு, பின்னாளில் அது கோவிலாயிற்று.
இங்குச் சித்தர்களும் மனிதர்களும் மட்டும் வழிபடவில்லை, பல நேரம் நாகங்கள், காட்டு விலங்குகள் எனப் பலவும் வந்து முருகப்பெருமான் முன் படுத்திருக்கும். பின் தானே அகன்றும் செல்லும். யாருக்கும் எந்தத் தீங்கும் அவை விளைவிப்பதில்லை.
சித்தர்கள் உள்ள இடம் குளிர்ச்சியும் நறுமணமும் நிரம்பியதாக இருக்கும். அவ்வகையில் இங்குச் சித்தர்களை அரூபமாக உணரமுடியும், தவத்தில் அமர்ந்து மனதை ஒடுக்கினால் சித்தர்களை இங்கு மனமார உணரலாம். எண்ணங்களால் அவர்களுடன் உரையாடலாம், பெரும் வழிகாட்டுவார்கள்.
எங்குமில்லாத வகையில் இங்கு முருகப்பெருமான் இடது கையினை இடுப்பில் அல்லாமல் தொடையில் வைத்திருக்கின்றார். அப்படியே அவரின் வலக்கரத்தின் விரல்கள் கீழ்நோக்கி திரும்பி அபய முத்திரை தந்து அருள்பாலிக்கின்றது, இது வேறு எந்த முருகன் கோவிலிலும் காணமுடியாத தோற்றம்.
இதனால் இந்த முருகனுக்கு ‘அபய முருகன்” எனும் பெயரும் உண்டு.
இந்த வவ்வால் குகை ஆலயம் அற்புதங்களுக்குப் பெயர் பெற்றது. ஏதோ ஒருவகையில் முருகப்பெருமான் இங்கு அற்புதங்களை நடத்துவது இயல்பு, மானாக மயிலாக இல்லை மனிதர்களாக ஏதோ ஒரு உருவில் வந்து அவர் அடியார்களுக்குத் தன்னை வெளிப்படுத்துவார்.
அப்படி ஒருமுறை பெரும் அற்புதம் நடந்தது. ஒருமுறை அக்னி பூஜையினைப் பக்தர்கள் பெரிதாகச் செய்தபோது ஒரு பக்தரைச் சுற்றி எதிர்பாரா விதமாக பெரும் நெருப்பு வளையம் போல் சுற்றிக் கொண்டது, அவரால் வெளிவரமுடியவில்லை, வெளியில் இருப்பவர்களாலும் அவருக்கு உதவமுடியவில்லை.
பகாசுரனைப் போல் எழுந்த நெருப்பில் அவர் சிக்கிக் கொள்ள எல்லோரும் அஞ்சி “முருகா” என அழைக்கும் போது அந்த அதிசயம் நிகழ்ந்தது, பெரிய மரக்கிளை ஒன்று யாருக்கும் பாதிப்பில்லா வகையில் முறிந்து அந்த நெருப்பில் விழுந்தது, ஒரு கரம் அந்தப் பக்தரை பிடித்து மரத்தின் கிளை வழியாக வேகமாக அழைத்து வந்தது.
அந்தப் பக்தர் முருகனின் அருளால் முருகனின் அபயக் கரத்தால் உயிர்ப்பெற்று வந்தார், பெரும் சாட்சியாக அங்கேதான் வாழ்ந்தார்.
இப்படிச் சாட்சிகள் நேரடியாக மறைமுகமாக நிறைய உண்டு. உலகறிய நடந்த அற்புதங்களும், பக்தர்கள் தாங்களே உணர்ந்த அற்புதங்களுமாக அந்தத் தலம் மெய்சிலிர்க்க வைக்கக் கூடியது.
2002 இல் வெகு சமீபத்தில் நடந்த அற்புதமே அங்கு முருகப்பெருமான் வாழ்கின்றார் என்பதை இத்தலைமுறைக்குக் காட்டிற்று.
அப்போது அங்குத் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. பணியாளர்களும் பக்தர்களும் கோவில் அருகில் மலை அடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது நள்ளிரவில் ஒரு முதியவர் அவர்களை எழுப்பி கோவிலுக்குள் சென்று படுக்கச் சொல்கின்றார், அவர் அங்குப் பணி செய்யும் பெரியவர்.
அவர்கள் ஏன் என கேட்க “சொன்னா கேட்கணும்” எனக் கடும் தொணியில் அவர் எச்சரிக்க அடியார்களும் பக்தர்களும் அப்படியே அந்த இடம் விட்டு நகர்கின்றார்கள், எல்லோரும் நகர்ந்த மறுநொடி அந்த சம்பவம் நிகழ்கின்றது.
பெரிய பாறை அப்படியே சரிந்து அவர்கள் முன்பு தூங்கிய இடத்தில் வீழ்கின்றது, தாங்கள் எப்படி உயிர் தப்பினோம் என்பதை உணர்ந்த பக்தர்கள் அந்த முதியவரைத் தேடினார்கள். அவரைக் காணவில்லை. அதனால் அவர் இல்லம் தேடிச் சென்றார்கள்.
அங்கோ அவர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார், அவரை எழுப்பி கேட்டபோது தான் அங்கு வரவே இல்லை என்றார். வீட்டுக்காரர்களும் அவர் அப்போதே உறங்கிவிட்டார் எங்கும் செல்லவில்லை என்றார்கள்.
அப்படியானால் வந்தது முருகப்பெருமான் எனப் பக்தர்களெல்லாம் பணிந்தார்கள். இன்றும் அந்தச் சாட்சிகள் அங்கு உண்டு. வவ்வால்குகை முருகனின் சாட்சியாக உண்டு.
இந்த வவ்வால் குகை மூருகன் கோவிலில் சூரசம்ஹாரம் விசேஷம். அன்று மட்டும்தான் அவர் வெளியில் வந்து சூரனை வதம் செய்வார். பின், சாந்த சொருபியாகக் கோவிலுக்குள் அமர்ந்து கொள்வார்.
இந்த ஆலயம் சூட்சுமமான சக்திகளால் நிரம்பியது, யுகம் யுகமாக சித்தர்கள் செய்த தவத்தின் பெரும் சக்தி நிறைந்திருப்பது, மாபெரும் புண்ணிய தலமுமானது.
தெற்கே கன்னியாகுமரிக்குச் செல்லும் போது , நாகர்கோவில் செல்லும் போது இந்த முருகன் கோவில்களைக் காணத் தவறாதீர்கள், காலை மலையேறி தென்பழனி ஆண்டவரை தரிசித்துவிட்டு பின் வந்து வவ்வால் குகை முருகனை தரிசியுங்கள்.
தேனும் திணை மாவும் வைத்து வணங்கி நில்லுங்கள். அந்நேரம் சித்தர்களின் பெரும் அருளோடு முருகப்பெருமானின் தனி அருளும் உங்களுக்குக் கைக்கூடும். வேண்டிய காரியம் வெற்றியாகும்.
முக்கியமாக திருச்செந்தூர் செல்லும் முருக பக்தர்கள் வள்ளியூர் முருகனோடு இந்த ஆரல்வாய்மொழி சித்தர்கள் முருகனை வணங்கினால் முழுப் பலன் உண்டு.
ஆன்மீகத் தேடல் கொண்டவர்கள் பௌர்ணமியில் மலை உச்சியிலிருக்கும் தென்பழனி ஆலயத்தில் இரவில் தங்கினால் மாபெரும் சூட்சும சக்திகளின் அருகாமையினை, வழிகாட்டலை பெறலாம். முருகப்பெருமான் அருள் இருந்தால் சித்தர்களுடன் உங்கள் எண்ணங்களால் பேசலாம். பெரும் அற்புதங்களையும் காணலாம். முடிந்தவர்கள் சென்று அமருங்கள். அதன்பின் வார்த்தையால் சொல்லமுடியாப் பெரும் ஞான அனுபவம் உங்களுக்குள் நிறையும். இது சத்தியம்.