முருகப்பெருமான் ஆலயங்கள் : வடபழனி முருகப்பெருமான் ஆலயம்.
முருகப்பெருமான் ஆலயங்கள் : வடபழனி முருகப்பெருமான் ஆலயம்.
தமிழக முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானதும் சென்னையின் மிக முக்கிய அடையாளத்தில் ஒன்றுமானது வடபழனி முருகப்பெருமான் ஆலயம், 18 ஆம் நூற்றாண்டில் ஒரு ஓலை கொட்டைகையில் துவங்கப்பட்ட இவ்வாலயம் இப்போது ராஜகோபுரத்துடன் பிரமாண்டமாக வளர்ந்திருப்பதெல்லாம் முருகனின் தனி அருள்.
இந்த ஆலயத்தின் தலவரலாறு அண்ணாசாமி நாயக்கர் என்பவரிடம் இருந்து துவங்குகின்றது, அது 18 ஆம் நூற்றாண்டின் காலங்கள். இப்போது இருக்கும் சென்னை அப்போது இல்லை, மெட்ராஸ் என்பது கடற்கரை கோட்டை இருக்கும் பகுதியாக இருந்தது, இந்த இடமெல்லாம் கோடம்பாக்கம் என்ற பெயரில் இருந்தது.
கோடா என்றால் உருது மொழியில் குதிரை, சுல்தான்கள் குதிரைகட்டிய இடமாகவும் அதை அண்டிய கிராமமாகவும் இருந்த இடங்கள் இவை, இதன் அருகில் இருந்த இடம் சாலிக்கிராமம்.
அங்கேதான் அண்ணாசாமி நாயக்கர் என்றொருவர் இருந்தார். மிகப் பெரிய முருகபக்தர், எப்படியான பக்தி என்றால் அடிக்கடி திருப்போரூர் மற்றும் திருத்தணி என மாறி மாறி சென்று முருகனைத் தரிசித்த பக்தர்.
அப்படியானவர் அருகே இருந்த வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்துக்கும் செல்வார், இந்த உன்னதமான பக்தரை ஆட்கொள்ள விரும்பிய முருகப்பெருமான் அவருக்கு வழக்கம்போல் தீரா வயிற்றுவலியினை அனுப்பினார்.
அந்த வலியிலும் அவர் ஆலய தரிசனங்களை விடவில்லை, அப்படி வியாக்ரபுரீஸ்வரர் ஆலயத்தில் அவர் வணங்கியபோது வயிற்றுவலி வந்து அவரைச் சுருட்டிப்போட்டது , அந்நேரம் பாதயாத்திரை வந்த சாது ஒருவர் அவரைப் பழனிக்குச் செல்லப் பணித்தார்.
நடக்கமுடியா நிலையில் கிடந்த அண்ணாசாமி அதைக் கேட்டு நகைத்தார், காரணம் அவ்வளவு தூரம் செல்லும் நிலையில் அவர் இல்லை.
கொஞ்சம் யோசித்த சாது அப்படியானால் நீ திருத்தணிக்குச் செல், அங்கே உன் நோய் குணமாகும் அதன்பின்னர் பெரிய காணிக்கை செலுத்து. இதெல்லாம் முடிந்தபின் நீ கட்டாயம் பழனிக்கும் செல்லவேண்டும் எனச் சொல்லி விபூதி பூசினார், வயிற்றுவலி கொஞ்சம் தணிந்தது.
அந்த ஆறுதலில் திருத்தணிக்குச் சென்றார் அண்ணாசாமி, மிகுந்த ஏக்கத்துடன் அவர் சென்றபோது அங்கு முருகப்பெருமான் சந்நதியில் சட்டென அவரின் வயிற்றுவலி அகன்றது, தான் குணமானதை அறிந்தவர் முருகப்பெருமானைச் சுற்றிவந்து கத்தி எடுத்து நாக்கை வெட்டி இலையில் இட்டு காணிக்கை வைத்தார், “பாவாடம்” என அதற்குப் பெயர்.
பெருகும் இரத்தத்தோடு நாவினை வைத்தார், அவரின் மிக உயர்ந்த காணிக்கை அது.
அதன் பின் நோயோடு பேச்சும் இல்லாமல் போனது, முழு மௌனமான அவர் தன் வீட்டிலே சந்நியாசி போல் வாழலானார், ஆனால் அவரின் பக்தி வளர வளர நாவும் வளர்ந்தது.
முழுக்க குணமான நிலையில் தென்பழனிக்குக் கிளம்பினார், முருகப்பெருமானை மனதார தரிசித்தார், அவன் சந்நதியிலே கிடையாய்க் கிடந்து நன்றி சொன்னார், பல நாட்கள் தங்கிவிட்டு திரும்பும்போது கடையில் ஒரு அழகான முருகன் படத்தைக் கண்டார், ஆனால் வாங்க காசில்லை கடைக்காரனும் கொடுக்க மறுத்தான்.
முருகனைத் தவிர அங்கு யாரும் அவருக்குத் தெரியாது என்பதால் சோகத்துடன் நடந்தவர் ஒரு மரத்தடியில் அந்த முருகன் படத்தை நினைத்தபடியே உறங்கிப்போனார் மனமெல்லாம் சோகம் நிறைந்து கண்ணீராய் வெளிவந்தது.
அவர் கண்விழித்தபோது அதே படத்துடன் கடைக்காரன் நின்றிருந்தான். அவர் புரியாமல் பார்த்தபோது இது முருகனின் உத்தரவு என அஞ்சியபடியே சொல்லி அந்தப் படத்தைக் கொடுத்த கடைக்காரன் அவரை வணங்கி விடைபெற்றான்.
முருகா என வீழ்ந்து வணங்கியவர் அந்தப் படத்தோடே சாலிக்கிராமம் திரும்பினார், ஒரு ஓலை கொட்டகை கட்டி முருகன் படத்தை அங்கே வைத்து வணங்க தொடங்கியவரில் இறை சக்தி அதிகரித்தது.
பொதுவாக நாக்கினை வெட்டி யோகம் செய்வது சில சித்தர்கள் பாணி, அதாவது வெட்டிய நாக்கு யோக சக்தியினை அதிகரிக்கும், இந்துக்கள் நாக்கை லேசாக அறுப்பதிலும் அலகு குத்துவதிலும் அப்படி ஒரு அர்த்தம் உண்டு.
அது இவர் விஷயத்திலும் முழுக்கப் பலித்தது, அவரில் இறைசக்தி அதிகமாகி பெரும் அற்புதங்களைச் செய்ய ஆரம்பித்தார், நோய்கள் குணமாயின, வார்த்தைகள் பலித்தன, பெரும் கூட்டம் வந்தது, அண்ணாசாமி நாயக்கர் அண்ணாசாமி தம்பிரான் என மாறிப்போனார்.
கூட்டம் இன்னும் பெருகிற்று. அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் இரத்தினசாமி செட்டியார். இவர் சிறிய கடை வைத்திருந்தார், எண்ணற்ற சிக்கலுடன் வந்த இரத்தினசாமியின் பிரச்சினைகளை அண்ணாசாமி தம்பிரான் தீர்த்துத் தந்ததால் இரத்தினசாமி அவருக்குச் சீடராகிப் போனார், ஆனால் கடையினையும் நடத்தி வந்தார்.
அந்தக் காலக்கட்டங்களில் அண்ணாசாமிக்கும் வயதாயிற்று. அவர் ஓலை கொட்டகையினைக் கோவிலாக்க விரும்பினார். அப்படியே ஒரு முருகன் சிலையும் செய்துவைக்க விரும்பி பொறுப்பை ரத்தினசாமியிடம் ஒப்படைத்தார்.
கோவில்வேலை நடக்கும்போதே ஒரு ஆவணி அமாவாசையில் அண்ணாசாமி தம்பிரான் முருகனுடன் கலந்துபோனார், அவரின் சமாதி கோவிலுக்குச் சற்று தள்ளி அமைக்கப்பட்டது எல்லா முகங்களிலும் வருத்தமே படர்ந்தது.
கோவில் கும்பாபிஷேகமும் நடக்கவில்லை, அடுத்து என்ன செய்வது எனும் குழப்பம் எல்லோரிடமும் பரவிற்று.
ரத்தினசாமியும் குழம்பினார் , தம்பிரானின் மரணம் அவரைப் பாதித்தது, மனம் வெறுத்த அவர் கடைக்குத் திரும்பினார், கடையினை அவர் காலையில் திறந்தபோது ஒரு சாது பூட்டிய கடைக்குள் இருந்துவெளிவந்தார், பூட்டிய கடைக்குள் இருந்து ஒருவர் வந்ததும் ரத்தினசாமி அதிர்ந்துபோனார், அவரை விரட்டினார். சாதுவோ ஓடினார். இவர் பின்னால் துரத்தினார்.
ஒரு கட்டத்தில் சாது கட்டபபட்டிருந்த கோவிலுக்குள் சென்று சிரித்தபடி கருவறையில் மறைந்தே போனார், வந்தது முருகன் என உணர்ந்த இரத்தினசாமி முழுக்க அங்குப் பணியேற்று இரத்தினசாமி தம்பிரானாக மாறினார், 1865ல் கோவில் கும்பாபிஷேகம் கண்டது.
அடுத்த 20 வருடம் இந்தத தம்பிரானே ஆலயத்தைத் தாங்கிக் கொண்டார், 1870ல் இவருக்கு சீடராக வந்தவர் சைதாப்பேட்டை பாக்யலிங்கம் எனும் செங்குந்தர், அவர் இவருடன் 15 ஆண்டுகாலம் சேவை செய்தார், 1885ல் இரத்தினசாமி தம்பிரானும் முக்தி அடைந்தார், அண்ணாசாமி தம்பிரான் அருகே அவர் சமாதி அமைந்தது.
இதன் பின் முழுப பொறுப்பும் பாக்யலிங்கத்திடம் வந்தது, அவர் விரதம் இருந்து திருத்தணி சென்று நாக்கை வெட்டி காணிக்கையாய்க் கொடுத்துப் பணிந்து வந்தபின் பொறுப்பேற்றார்.
இவர் காலத்தில்தான் இந்தக் கோவில் வடபழனி என மிகப் பிரசித்தமானது. இப்போது காணும் பெரிய கோபுரம் பிரகாரமெல்லாம் இவர் கட்டிவைத்தது, முருகன் அருள் பெருக பெருக கோவிலை மிகப் பிரசித்தியாக்கினார், சென்னையில் இது தவிர்க்கமுடியா அடையாளமாயிற்று, வடக்கே பழனியுமாயிற்று.
1931 ல் பாக்யலிங்க தம்பிரான் முக்தி அடையும்போது வடபழனி ஆலயம் மிகப் பிரசித்தியாய் எழுந்தது, அதன் ஒளி பிரகாசித்து பெரிதாய் ஒளிரத் தொடங்கியது.
ஒருவகையில் பிரிட்டிஷாரிடம் சிக்கிய அந்தப் பிரதேசத்தில் மதமாற்றத்தை நிறுத்தி இந்துக்களை நிலை நிறுத்தியதில் இந்த முருகன் கோவிலுக்குப் பெரும் பங்கு உண்டு, சரியான கால நேரத்தில் முருகப்பெருமான் தன் அடியார்களால் இந்த ஆலயத்தை அமைத்து குடியேறி தன் மக்களைப் பிடித்தும் கொண்டார்.
இன்று இந்த ஆலயம் மகா பிரசித்தி, அந்த மூன்று முன்னோர்களும் சமாதியாக அருகிலே குடிகொண்டார்கள்.
திருசெந்தூர் ஆலயத்தைக் கட்டிய மூன்று சாதுக்களின் சமாதி அங்குப் பிரசித்தி என்பதுபோல் இந்த மூன்று சித்தர்களின் சமாதி இங்குப பிரசித்தி, இந்த மூவருக்குமான தொடர்பு ஆச்சரியமானது. ஒரே சாதி அல்ல, இனம் அல்ல. குடும்பமும் அல்ல, தொழில் செய்தவர்களும் அல்ல ஆனால் பூர்வ ஜென்மபந்தத்தால் மூவரும் ஒன்றாய் முருகனருளில் பெரும் இடம் பெற்றார்கள்.
அவர்களால் அந்த ஆலயம் நிமிர்ந்து நிற்கின்றது.
இக்கோவிலின் தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளில் கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களில் சிவன் மற்றும் முருகனின் வடிவங்கள் சுதைச் சிற்பங்களாக காட்டப்பட்டுள்ளன.
கிழக்கில் இராஜகோபுரம் 112 அடி உயரமுடையது. இராஜகோபுரத்தினையடுத்து பலிபீடமும், கொடிமரமும் உண்டு.
இக்கோவிலில் கருவறை சதுரவடிவில் உள்ளது. அண்ணாசாமி தம்பிரான் ஸ்தாபித்த அந்தக் கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அர்த்தமண்டபத்தின் இருபுறமும் வாயிற்காவலர்களின் சிற்பங்கள் உண்டு.
நுழைவாயிலின் மேற்புறம் யானைத்திருமகள் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைத் திருச்சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்முகர், சண்டிகேசுவரர், துர்க்கை, வீரபாகு, வீரபத்திரர், பைரவர், காளி, வையாபுரி , தேவார மூவர், மாணிக்கவாசகர் ஆகிய திருவுருவங்கள் உண்டு.
இன்னும் நடராசர், முருகன், வள்ளி, தேவசேனை, சிவகாமி, விநாயகர் ஆகிய செப்புத்திருமேனிகள் விழாக்காலங்களில் ஊர்வலமாக வரும்படி அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சுற்றில் செவ்வாய் பகவான், சண்முகர், மீனாட்சி ஆகியோர் சந்நதி வடக்குப்பக்கத்திலும், அருணகிரிநாதர் மற்றும் அனுமனின் சந்நதிகள் கிழக்குப்பக்கத்திலும் அமைந்துள்ளன.
இராஜகோபுரத்தின் எதிரே திருக்குளம் உண்டு, ஆலயத்தின் தலமரமான அத்திமரம் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது.
வாகன மண்டபத்தில் மயில், பூதம் ஆகிய வாகனங்கள் இடம் பெற்றுள்ளன. திருச்சுற்றில் வடப்புறம் உள்ள திருமண மண்டபத்தில் மேடை போன்ற அமைப்பு கட்டப்பட்டுள்ளது.
இங்குத் திருமணங்கள் நிகழ்த்தப்படுகின்றன. திருச்சுற்று முழுவதும் முழுத்தூண்களால் அலங்கரிக்கப்பட்டு மண்டபங்களாக பிரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளன.
மகாமண்டபத்தின் முன்புறம் அடியவர்கள் நின்று வணங்கத்தக்க முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று பெரும் கூட்டமும் மாதமாதம் பெரும் திருவிழாவுமாக கொண்டாடப்படும் இந்த ஆலயத்தில் நடக்கும் திருமணங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் ஏழாயிரம் முதல் பத்தாயிரம் அவ்வளவுக்கு இது அருள் வழங்கும் தலம்.
இந்த முருகன் ஆலயம் பழனிபோலவே பெருவாழ்வு தரும், நல்வாழ்வு குலவாழ்வு தரும் என்பதால் இங்குத் திருமணம் செய்வது முதல் எல்லா ஆசிகளையும் வாங்க வரும் பக்தர்கள் ஏராளம்.
இன்று சென்னையின் மிக முக்கிய அடையாளம் இந்த ஆலயம், அங்குக் கிடைக்காத வரமில்லை, தீராத குறையில்லை விலகாத நோயில்லை.
சென்னைக்குச் செல்லும்பொது இந்த ஆலயத்தைக் காணத் தவறாதீர்கள், அங்குச் சென்று உங்கள் வேண்டுதலை விளக்கேற்றி மாலையிட்டு மன்றாடுங்கள். அது நடக்கும்.
அப்படியே அந்த அண்ணாசாமி தம்பிரான், இரத்தினசாமி தம்பிரான், பாக்யலிங்க தம்பிரான் ஆகிய மூவரின் சமாதிகள் அங்கே உண்டு, அவர்களிடம் மறக்காமல் வேண்டிப் பணிந்து வாருங்கள். எல்லா நலமும் அருளும் காவலும் உங்களைத் தேடி வரும். இது சத்தியம்.