முருகப்பெருமான் ஆலயங்கள் : அலவாய் முருகப்பெருமான் ஆலயம் மற்றும் செண்பக மலை ஆலயம்
முருகப்பெருமான் ஆலயங்கள் : அலவாய் முருகப்பெருமான் ஆலயம் மற்றும் செண்பக மலை ஆலயம்
அலவாய் ஆலயம் கொங்குப் பகுதியில் நாமக்கல் பக்கம் அமைந்திருக்கின்றது. இந்த ஆலயம், ராசிபுரத்துக்கும் வெண்ணந்தூருக்கும் இடையில் இருக்கும் மலையின் தலமிது, இதனைச் சுற்றியே சென்னிமலை முதல் பல முருகப்பெருமான் தலங்கள் உண்டு.
அதில் ஒன்று இந்த அலவாய் தலம். இதன் வரலாறு கொங்கண முனிவர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது, பொதிகை மலை பக்கம் அகத்தியர் போல் கொங்கு நாட்டு பக்கம் பிரசித்தியானவர் கொங்கண முனி, இவர் அப்பக்கம் உள்ள மலைகளிலெல்லாம் தவமிருந்தவர், மூலிகைகள் தேடி மருந்து செய்தவர், ரசவாதம் என இரும்பை தங்கமாக்கிய பல காரியங்களையும் செய்து மக்களின் துயர் தீர்க்க முனைந்த மகா சித்தர், முருகப்பெருமானின் சீடர்.
அவர் தங்கி இருந்து முருகப்பெருமானை வழிபட்ட மலை இது, இன்னும் பல ஆச்சரியமான வகையில் முருகப்பெருமான் அருளை ஆட்சியினைக் கொண்டிருப்பது.
அலையா மலை என இதற்குப் பெயர், காரணம் இங்கு வந்துவழிபட்டால் வேறு எங்கேயும் செல்ல வேண்டிய, அலைய வேண்டிய அவசியம் இல்லாததால் இது பக்தர்களை அலையவிடாத மலை, துன்பக்கடலில் அலையவிடாத மலை எனப் பெயர் பெற்று அதுவே அலயா மலை என மருவி அலவாய் மலை என்றாயிற்று.
கொங்கண முனிவர் இங்கு வழிபட்டார் என்றாலும் இங்கு முருகன் எழுந்தருளியது பொன்னி எனும் அக்கால வனவாசகுல பெண்ணுக்காக. பொதுவாக முருகப்பெருமான் ஆலயங்கள் மலை உச்சியில்தான் இருக்கும். ஆனால், இங்கே இந்தப் பக்தைக்காக முருகப்பெருமான் பாதி இறங்கி காட்சி கொடுத்துத் தன் இருப்பிடத்தைச் சொன்னார், அதிலிருந்து இங்கு வழிபாடுகள் தொடங்கின.
இந்தத் தலத்துக்கு 1800க்கும் மேலான படிகட்டுகளை அமைத்துக் கொடுத்தவன் அக்கால பாண்டிய மன்னன், அவனுக்கு அன்று வாரிசு இல்லாததால் பழனி முருகனிடம் வேண்டுதல் வைத்திருந்தான், முருகப்பெருமான் அவன் கனவில் தோன்றி அலவாய் மலைக்குப் படிகட்டு அமைத்து திருப்பணி செய்தால் வேண்டுதல் நிறைவேறும் எனச் சொல்ல அதன்படி பாண்டியன் தன் மனைவியோடு இந்த ஆலயத்தை பணிந்து படிகட்டுகளைச செய்தான்.
அவனுக்கு சில மாதங்களிலே வாரிசு உருவான மகிழ்ச்சியில் அவன் இதனை ஒட்டி கொங்கண கிரி சித்தருக்கும் சிறிய ஆலயம் அமைத்து மீன் முத்திரையும் பதித்தான்.
அதிலிருந்து இந்த ஆலயம் வெகு பிரசித்தியானது, மக்கள் அலை அலையாக வந்தார்கள், இங்கு அருணகிரி நாதரும் வந்து முருகனைப் பணிந்து பாடினார்.
இந்த ஆலயத்தில் பல அதிசயங்களும் உண்டு, மிக ஆழ்ந்த தத்துவமும் உண்டு.
பொதுவாக முருகப்பெருமான் ஆலயங்களில் மயில் அவர் வாகனமாக அமர்ந்திருக்கும், இங்கு மயிலோடு நந்தியம்பெருமானும் மூஞ்சுறுவும் அமர்ந்திருக்கும்.
இது முருகப்பெருமான் சிவனும் கணபதியுமானவர் எல்லோரும் அம்சமும் கொண்டவர். முருகப்பெருமான் அவர் ஞானத்தின் கடவுள் வீரத்தின் கடவுள் காக்கும் கடவுள் என மூன்றையும் சொல்வது.
அதாவது இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி எனும் மூன்றும் கொண்ட உருவம் முருகப்பெருமான் என்பதைச் சூசகமாக சொல்லும் காட்சி இது , வேறு எந்த முருகப்பெருமான் ஆலயத்திலும் இதனை நீங்கள் காண முடியாது.
இந்த ஆலயத்திற்குச் செல்லும்போது மலை அடிவாரத்தில் இருக்கும் விநாயகப்பெருமானைத் தொழுது செல்ல வேண்டும், 1800 படிகளைக் கடந்தால் முருகப்பெருமான் ஆலயத்தை ஒருமணி நேரத்துக்குள் அடையலாம், இடையில் தங்கும் மண்டபங்களும் உண்டு.
பழனி போலவே பால தண்டாயுதபாணியாக முருகப்பெருமான் இங்குக் காட்சியளிக்கின்றார், அவருக்கு எதிரே நந்தியும், மயிலும், மூஞ்சூறும் பெரும் தத்துவம் தாங்கியபடி ஐயனை நோக்கிக கொண்டிருக்கின்றன.
சற்றுத் தள்ளி தெற்கு நோக்கிய பார்வையில் ஆஞ்சநேயர் இருக்கின்றார், சூரபத்மன் திசை, ராவணன் திசை என எல்லாமே தெற்கு என்பதால் அவர் அங்கு நின்று நோக்குகின்றார்.
இந்தக் கோவில் எல்லா நாளும் திறந்திருப்பதில்லை. வெள்ளி, செவ்வாய் நாட்களில் திறந்திருக்கும், விசேஷ நாட்களில் திறந்திருக்கும். கார்த்திகை மாதம் இந்த கோவிலில் பெரும் வழிபாடு உண்டு.
எல்லா வரங்களையும் தரும் இந்த ஆலயம் குழந்தை வரத்தை சிறந்து தரும், இந்த ஆலயத்தின் முன் இருக்கும் சுனை எப்போதும் வற்றாதது. இன்னும் மூலிகை அனைத்தும் கொண்ட நீர் இங்கு சுரப்பதால், மூலிகைகள் கொண்ட நீர் கலப்பதால் இது மருத்துவகுணம் அதிகம், இந்த நீரை அருந்தும் பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் வாய்க்கும்.
இதுவரை இந்த ஆலயத்தில் வழிபட்டு முருகப்பெருமானை நம்பி வந்து கைவிடப்பட்டோர் ஏமாற்றம் அடைந்தோர் யாருமில்லை என்பதால் இந்தக் கோவிலுக்குப் பக்தர்கள் அதிகம், கிருத்திகை போன்ற நாட்களில் இதனை உணரலாம்.
இந்தக் கோவிலுக்கு வரும்போது அடிவாரத்தில் இருக்கும் விநாயகரை வணங்கி மேல் வந்து இந்த முருகனையும் வணங்கி, மலர்களும் நெய்தீபமுமிட்டு வணங்கி நில்லுங்கள். எல்லா வரமும் உங்களுக்கு வாய்க்கும்.
அப்படியே அந்த அனுமனை வணங்குங்கள், அவரின் அருளும் பிரதானம்.
மலைக்கு மேல் இன்னும் செல்ல ஒரு சிவாலயம் உண்டு என்கின்றார்கள், ஆனால் வனதுறையினர் அனுமதி இல்லை என்பதால் அதனைத் தரிசிப்பது சிரமம்.
அப்படியே மறக்காமல் அருகில் இருக்கும் கொங்கண சித்தரின் கோவிலைத் தரிசியுங்கள். அப்போதுதான் வழிபாட்டின் முழுப் பலனும் உங்களுக்கு கிடைக்கும், கொங்கணரின் அருள் இங்குப் பூரணமாக உண்டு. அவர் தவம் செய்த சிறிய குகையும் இப்பக்கம் உண்டு.
அலவாய்மலை வழிபாட்டில் இந்தக் கொங்கண சித்தர் ஆலயம் மிக மிக முக்கியமானது. அதனைத் தவறவிடாமல் நிச்சயம் வழிபடுங்கள். எல்லாமே நலமாகும்.
இங்கே வந்து அருணகிரி நாதர் பாடிய அந்தப் பாடலையும் சொல்லி வணங்குங்கள். எல்லா நலமும் வளமும் உங்களைச் சூழும், முருகப்பெருமானின் பெரும் அருளும் காவலும் பெருகும்.
“கருவாகியெ தாயுத ரத்தினி
லுருவாகவெ கால்கையு றுப்பொடு
கனிவாய்விழி நாசியு டற்செவி …… நரைமாதர்
கையிலேவிழ வேகிய ணைத்துயி
லெனவேமிக மீதுது யிற்றிய
கருதாய்முலை யாரமு தத்தினி …… லினிதாகித்
தருதாரமு மாகிய சுற்றமு
நலவாழ்வுநி லாதபொ ருட்பதி
சதமாமிது தானென வுற்றுனை …… நினையாத
சதுராயுன தாளிணை யைத்தொழ
அறியாதநிர் மூடனை நிற்புகழ்
தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ …… தொருநாளே
செருவாயெதி ராமசு ரத்திரள்
தலைமூளைக ளோடுநி ணத்தசை
திமிர்தாதுள பூதக ணத்தொடு …… வருபேய்கள்
திகுதாவுண வாயுதி ரத்தினை
பலவாய்நரி யோடுகு டித்திட
சிலகூகைகள் தாமுந டித்திட …… அடுதீரா
அருமாமறை யோர்கள்து தித்திடு
புகர்வாரண மாதுத னைத்திகழ்
அளிசேர்குழல் மேவுகு றத்தியை …… அணைவோனே
அழகானபொன் மேடையு யர்த்திடு
முகில்தாவிய சோலைவி யப்புறு
அலையாமலை மேவிய பத்தர்கள் …… பெருமாளே.”
அலையா மலை எனும் இந்த முருகனை வழிபடுவர்கள் துன்பத்தால் அலைகழிக்கபடமாட்டார்கள். அவர்கள் வாழ்வும் மனமும் அலைபாயாது, அலையா வாழ்வு எனும் நிம்மதியான வாழ்வும் வரமும் முருகப்பெருமான் தருவார் இது சத்தியம்.
அடுத்த ஆலயம் ஊட்டி அருகே எல்க் மலையில் அமைந்திருக்கும் எல்க் மலை முருகன், செண்பக மரங்கள் நிறைந்த இம்மலை முன்பு செண்பகமலை என்றே அழைக்கப்பட்டது, மான்கள் நிரம்பிய இடம் என்பதால் மான்குன்றம் என்றுமானது.
அம்மான்கள் எல்க் வகை மான்களாக இருந்ததால் பிரிட்டிஷார் காலத்தில் எல்க் மலை என அழைக்கப்பட்டு அதுவே நிலைத்தும்விட்டது.
இந்தப் பெயர்தான் பிற்காலங்களில் வந்ததே தவிர இந்த ஆலயம் குறிஞ்சிநிலத்தில் அமைந்த இந்த ஆலயம் மகா தொன்மையான காலத்திலே குறிஞ்சி நில தெய்வமான முருகனுக்கு அர்பணிக்கப்பட்டது, மலைவாழ் மக்களின் சிறிய ஆலயமாக இது இருந்தது.
இதனை வெளிக்கொண்டு வந்தவர்கள் இரு பக்தர்கள், அவர்கள் பழனி முருகனின் பக்தர்கள். ஆண்டுக்கு ஒருமுறையாவது முருகப்பெருமானை பழனியில் வணங்கி நிற்கும் பக்தர்கள் விரதமிருந்து வந்து பணிவார்கள். ஆனால், ஒருமுறை அந்தப் பயணம் செய்யமுடியவில்லை. பல தடங்கல்கள் காரணமாக மனமுடைந்து போனார்கள்.
அந்நேரம் முருகப்பெருமான் இருவர் கனவிலும் ஒருசேர தோன்றி பழனிக்குச் செல்லாவிட்டால் என்ன செண்பக மலையான மான்குன்றத்திலே என்னைத் தரிசியுங்கள், பழனிக்கு சென்ற பலன் கிடைக்கும் எனச் சொல்லி மறைந்தார். அவர்கள் இருவரும் அந்த முருகனை மலையில் தேடிப் பணிந்து பின் அங்கே வழிபாட்டை தொடங்கினார்கள்.
அப்பக்கம் இருந்த நிலம்பூர் மகாராஜா இந்த அற்புதத்தை அறிந்து பக்தியுடன் வந்து முருகனைப் பணிந்தார், அவருக்கும் வாரிசு செல்வம் உள்பட பல வகையான அருள் கிடைத்ததும் மிக உற்சாகமாக அவர் திருப்பணி செய்தார். அதிலிருந்து இந்த முருகன் ஆலயம் வெகு பிரசித்தியானது.
இங்கு மிகப்பெரிய அற்புதம் முருகப்பெருமானோடு விஷ்ணு பகவானும் நாராயணனாக சயன கோலத்தில் காட்சித் தருகின்றார், அருகிருக்கும் தீர்த்தம் நாராயண தீர்த்தம், அங்கிருந்தே முருகனுக்கு நீர் எடுத்து அபிஷேகம் செய்யப்படுகின்றது.
நீலகிரி மலையில் அழகான அடர்த்தியான வனப்பகுதியில் மிகவும் அமைதியான அழகிய சூழலில் அமைந்துள்ள எல்க்ஹில் மலை அடிவாரத்தில் முதலில் பால விநாயகர் காட்சி தருகிறார்.
முருகப்பெருமானின் 108 திருநாமங்களை நினைவு கூரும் வகையில் 108 படிகளும், முருகப் பெருமானின் 6 படைவீடுகளைக் குறிக்கும் வகையில் 6 மண்டபங்களும் இடையில் அமைந்துள்ளன.
இங்குத் தார்சாலை வசதியும் உண்டு, இக்கோயில் மூன்று நிலை கோபுரத்துடன் வடமேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மலையேறியதும், மகாமண்டபம், கருவறை காட்சியளிக்கின்றன. மகாமண்டபத்தில் சுவாமிக்கு எதிர்புறம் கொடிமரம், பலிபீடம் மற்றும் மயில் வாகனம் அமைந்துள்ளது.
கருவறைக்கு வலப்பக்கத்தில் விநாயகரும், இடபக்கத்தில் உற்சவ மூர்த்தி சந்நிதிகளும் உள்ளன. கருவறையில் சுமார் மூன்றடி உயர பாலதண்டாயுதபாணி, தலையில் அக்க மாலையும், ஒரு கரத்தில் தண்டமும், மறுகரம் இடுப்பில் வைத்த கோலத்தில் பழனி முருகப்பெருமான் போலவே காட்சி அளிக்கிறார்.
முருகனைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தவுடன் வலது புறத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சந்நிதியும், நவகிரக சந்நிதியும் உள்ளது. இடது புறத்தில் விநாயகர், நாற்பது அடி முருகர், சப்த கன்னிகள், பத்தரகாளியம்மன் சந்நிதிகள் அமைந்துள்ளன.
இதனை அடுத்து, சில படிகள் ஏறிச் சென்றால் ஜலகண்டேஸ்வரி அம்மன் தாமரை மலரில் நான்கு கரங்களுடன் அருள் பாலித்து வருகிறார். அருகில் ஜலகண்டேஸ்வரர் லிங்கவடிவமாக காட்சி அளிக்கிறார். முன்புறம் அஷ்ட புஜ துர்க்கை அம்மன் சந்நிதியும் உள்ளன. அதனையடுத்து சரவணபவ மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்திற்கு வெளியே சிவபெருமான் அழகிய உருவசிலையில் காட்சியளிக்கின்றார்.
இந்த ஆலயத்தின் அற்புதமான சிறப்பு இங்கே மலேஷிய பத்துமலை அடிவாரத்தில் இருக்கும் முருகப்பெருமான் சிலையினை போல 40 அடி உயர அதே உருவ சிலை உண்டு, இந்திய தமிழகத்தில் இப்படி எழுதப்பட்ட முதல் பிரமாண்ட சிலை இதுதான், 40 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு 2011ல் அமைக்கப்பட்ட சிலை இது.
இந்த 40 அடி உயர முருகன் சிலை, மலையுச்சியில் தங்க நிற வண்ணத்தில் கம்பீரமாகக் காட்சி அளிப்பது காண்போரைப் பரவசபடுத்தும் காட்சி.
மறைந்த நடிகர் எம்.என் நம்பியார் சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போல் இந்தக் கோவில் மேலும் பெரும் பக்தி கொண்டிருந்தார், முருகனும் விஷ்ணுவும் எழுந்தளிய தலம் சாஸ்தா அம்சம் என அவர் வந்து நம்பி வழிபட்டார்.
அவர் 1986ஆம் ஆண்டு இக் கோயிலில் இருந்து 500 அடி உயரத்தில் உள்ள மலை உச்சியில் 60 அடி உயரம் கொண்ட ஞானவேலை நிறுவினார். பின் அது காங்கரீட் வேலாக இன்று அழகுற நிற்கின்றது, வெகுதொலைவில் இருந்து பார்த்தாலும் முருகப்பெருமான் ஆலயத்தை அடையாளம் காட்டும்படி கடல் மட்டத்திலிருந்து 7 ஆயிரம் அடி உயரத்தில் ஜொலிக்கின்றது.
இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் வைகாசி விசாகத்தையொட்டி திருவிழாக்கள் விமரிசையாக நடைபெற்று வருகிறது. தைப்பூசம் 13 நாள்கள் திருவிழாவாக மிகவும் பிரம்மாண்டமாக நடக்கும்.
விழாவில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். அதேபோல் கார்த்திகை தீபத் திருநாளன்று மலை உச்சியில் திருவிளக்கு பிரமாண்டமான முறையில் ஏற்றப்படும். பங்குனி உத்திரத்தில் முருகனுக்குப் பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
ஊட்டி பக்கம் செல்லும் போது இந்த செண்பக மலை முருகனை தரிசிக்க மறவாதீர்கள், அங்குள்ள 108 படியிலும் முருகப்பெருமானின் இந்த 108 நாமங்களை ஒவ்வொன்றாக சொல்லி சொல்லி படியேறுங்கள். நீங்கள் கேட்ட வரத்தை அந்தப் பாலசுப்பிரமணிய சுவாமி மிக ஞானமாக முழுமையாக உங்கள் தேவை அறிந்து தீர்த்துவைத்து மலைபோல் உயர்த்துவார் இது சத்தியம்.
இதோ முருகபெருமானுக்குரிய 108 நாமங்கள்
- ஓம் ஆறுமுகனே போற்றி
- ஓம் ஆண்டியே போற்றி
- ஓம் அரன்மகனே போற்றி
- ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி
- ஓம் அழகா போற்றி
- ஓம் அபயா போற்றி
- ஓம் ஆதிமூலமே போற்றி
- ஓம் ஆவினன் குடியோய் போற்றி
- ஓம் இறைவனே போற்றி
- ஓம் இளையவனே போற்றி
- ஓம் இடும்பனை வென்றவா போற்றி
- ஓம் இடர் களைவோனே போற்றி
- ஓம் ஈசன் மைந்தா போற்றி
- ஓம் ஈராறு கண்ணனே போற்றி
- ஓம் உமையவள் மகனே போற்றி
- ஓம் உலக நாயகனே போற்றி
- ஓம் ஐயனே போற்றி
- ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
- ஓம் ஐயப்பன் தம்பியே போற்றி
- ஓம் ஒப்பிலாதவனே போற்றி
- ஓம் ஒங்காரனே போற்றி
- ஓம் ஓதுவார்க்கினியவனே போற்றி
- ஓம் அவ்வைக்கு அருளியவனே போற்றி
- ஓம் கருணாகரரே போற்றி
- ஓம் கதிர்வேலவனே போற்றி
- ஓம் கந்தனே போற்றி
- ஓம் கடம்பனே போற்றி
- ஓம் கவசப்பிரியனே போற்றி
- ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
- ஓம் கிரிராஜனே போற்றி
- ஓம் கிருபாநிதியே போற்றி
- ஓம் குகனே போற்றி
- ஓம் குமரனே போற்றி
- ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
- ஓம் குறத்தி நாதனே போற்றி
- ஓம் குணக்கடலே போற்றி
- ஓம் குருபரனே போற்றி
- ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
- ஓம் சஷ்டி நாயகனே போற்றி
- ஓம் சரவணபவனே போற்றி
- ஓம் சரணாகதியே போற்றி
- ஓம் சத்ரு சங்காரனே போற்றி
- ஓம் சர்வேஸ்வரனே போற்றி
- ஓம் சிக்கல்பதியே போற்றி
- ஓம் சிங்காரனே போற்றி
- ஓம் சுப்பிரமணியனே போற்றி
- ஓம் சரபூபதியே போற்றி
- ஓம் சுந்தரனே போற்றி
- ஓம் சுகுமாரனே போற்றி
- ஓம் சுவாமிநாதனே போற்றி
- ஓம் சுகம் தருபவனே போற்றி
- ஓம் சூழ் ஒளியே போற்றி
- ஓம் சூரசம்ஹாரனே போற்றி
- ஓம் செல்வனே போற்றி
- ஓம் செந்தூர் காவலனே போற்றி
- ஓம் சேவல் கொடியோனே போற்றி
- ஓம் சேவகனே போற்றி
- ஓம் சேனாபதியே போற்றி
- ஓம் சேனைத்தலைவனே போற்றி
- ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி
- ஓம் சோலையப்பனே போற்றி
- ஓம் ஞானியே போற்றி
- ஓம் ஞாயிறே போற்றி
- ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
- ஓம் ஞான உபதேசியே போற்றி
- ஓம் தணிகாசலனே போற்றி
- ஓம் தயாபரனே போற்றி
- ஓம் தண்டாயுதாபாணியே போற்றி
- ஓம் தகப்பன் சுவாமியே போற்றி
- ஓம் திருவே போற்றி
- ஓம் திங்களே போற்றி
- ஓம் திருவருளே போற்றி
- ஓம் திருமலை நாதனே போற்றி
- ஓம் தினைப்புனம் புகுந்தோய் போற்றி
- ஓம் துணைவா போற்றி
- ஓம் துரந்தரா போற்றி
- ஓம் தென்பரங்குன்றனே போற்றி
- ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
- ஓம் தேவாதி தேவனே போற்றி
- ஓம் தேவை அருள்வாய் போற்றி
- ஓம் தேரேறி வருவோய் போற்றி
- ஓம் தேசத் தெய்வமே போற்றி
- ஓம் நாதனே போற்றி
- ஓம் நிலமனே போற்றி
- ஓம் நீறணிந்தவனே போற்றி
- ஓம் பரபிரம்மமே போற்றி
- ஓம் பழனியாண்டவனே போற்றி
- ஓம் பாலகுமரனே போற்றி
- ஓம் பன்னிரு கையனே போற்றி
- ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
- ஓம் பிரணவமே போற்றி
- ஓம் போகர் நாதனே போற்றி
- ஓம் போற்றப்படுவோனே போற்றி
- ஓம் மறைநாயகனே போற்றி
- ஓம் மயில் வாகனனே போற்றி
- ஓம் மகா சேனனே போற்றி
- ஓம் மருத மலையானே போற்றி
- ஓம் மால் மருகனே போற்றி
- ஓம் மாவித்தையே போற்றி
- ஓம் முருகனே போற்றி
- ஓம் யோக சித்தியே போற்றி
- ஓம் வயலூரானே போற்றி
- ஓம் வள்ளி நாயகனே போற்றி
- ஓம் விராலிமலையானே போற்றி
- ஓம் விநாயகன் சோதரனே போற்றி
- ஓம் வினைகளைக் களைவாய் போற்றி
- வேலவனே போற்றி
- ஓம் வேத முதல்வனே போற்றி போற்றி