காளிதாசனின் சாகுந்தலம் : 10
காளிதாசனின் சாகுந்தலம் : 10
சாகுந்தலை தன் காதல் வரிகளை தன் தோழியருக்கு பாடிக் காட்டினாள்.
“இரக்கமிலாதவரே, உம்முன் நான் இரக்கம் வேண்டி நிற்கின்றேன், உலக உயிர்களை உறங்கவிடாத காமதேவன் என்னை உள்ளும் புறமும் எரிக்கின்றான்; தன் ஐந்து அம்புகளால் என் ஐம்புலன்களையும் அவன் அனலாய் அம்புகளால் வதைக்கின்றான்.
உங்கள் உள்ளத்தையோ நான் அறியேன். ஆனால், அவனோ உடலும், உயிரும், உணர்வும், சிந்தையும் நீங்களாக இருப்பதால் உங்கள் பொருட்டு என்னை காய்ச்சுகின்றான்.
அவன் பகலில் சூரியனின் கதிர்களால் சுடுகின்றான்; இரவில் நிலாவின் குளிர்ந்த கீற்றுக்களை கூட வெம்மையாக்கிச் சுடுகின்றான்.
இந்தக் காதல் இளங்கொடி உங்கள் மனம் எனும் கொம்பை பற்றி பின்னி உயிர்துளிர்த்து வளர துடிக்கின்றது, இந்த இளங்கொடி காற்றில் அல்லாடுகின்றது; அதை தாங்கவேண்டிய உங்கள் மனம் எனும் கொழுக்கொம்பு எங்கே?”
அவள் சொல்லிமுடிக்கும் முன் புதரில் இருந்து வெளிவரும் புலிபோல் வெளிவந்தான் துஷ்யந்தன், அவர்கள் திகைத்து பார்க்க அவன் புன்னகைத்துச் சொன்னான்.
“உண்மை காதல் கொண்ட பெண்ணிடம் எந்த ஆண் மனமும் உண்மையினை மறைக்க முடியாது, நான் துஷ்யந்தன் இந்த நாட்டின் மன்னன், என்னை ஒப்போது அழைத்த இப்பெண்ணை தேடி வந்திருக்கின்றேன்.
அவள் பட தேடும் கொழுக்கொம்பு இந்த நெஞ்சத்தில்தான் இருக்கின்றது”
சொன்னவனை கண்டு மூவரும் அச்சமும், ஆச்சரியமும் கொண்டு நிற்க அவன் சொன்னான்.
“அழகான மயிலே, காமனவன் இட்ட தீயிலே உடல் நலிந்தாயோ? மெல்லியளே! அவன் உன் பொருட்டு என்னையும் மிக வதைத்தான்.
அந்தக் கதிர்வன் காலையிலே வட்ட நிலாவினை உருக்கி அழித்து, அந்த நிலாவின் மனைவி அல்லிமலரை துயரில் ஆழ்த்துவது போல் என்னை ஆழ்த்தினான்”
அவன் சொல்லி முடித்து அவளை நோக்கினான், அவள் நாணமும் அச்சமும் கலந்தவளாய் தோழியரைக் கண்டாள்.
அனுசுயை சொன்னாள், “நல்ல பசி இருக்கும் போது வரும் நல்லுணவாய் வந்தீர், சீர்பெற வாழ்த்துகின்றோம்”
அந்தக் கொடிபந்தலின் கீழ் மலர்படுக்கையில் படுத்திருந்த சாகுந்தலை மெல்ல எழமுயன்றாள். அவள் நோயுற்று ஓய்வில் இருப்பதாக உலகம் சொன்னாலும் அவள் காதல் நோயினாலே உடல் வெம்பி மலர்படுக்கையில் படுத்திருகின்றாள் என்பதை அறிந்த துஷ்யந்தன் வேகமாய் சொன்னான்.
“வேண்டாம், நீ எழுந்திருக்க வேண்டாம். சூரியனின் வெப்பத்தை ஏற்ற மண் துகள்கள் மேல் விரிக்கபட்ட பூக்கள் படுக்கையில் இருந்து நீ எழுதல் வேண்டாம், நீ எழுந்தால் அவை தாங்காது.
மானின் விழியினைக் கொண்டவளே, அழகிய தாமரை பூக்களின் வாசம் எழும் இந்த படுக்கையில் இருந்து நீ எழுந்தால் இந்த பூக்களெல்லாம் நசுங்குமே, அவை உன் மெல்லிய பாதங்களுக்கு வலி கொடுக்குமே, அதனால் நீ எழுதல் வேண்டாம்”
அவன் அவளை நோக்க அவளோ நிலம் நோக்கி கொண்டு முகத்தை மூடி நாணினாள்.
பிரியம்வதை தொடர்ந்தாள், “எங்கள் மேல் இரக்கம் கொண்டு இங்கு வந்த மன்னரே, இந்த கற்பலலையில் அமருங்கள்”
அவன் அமர்ந்தான். சாகுந்தலையோ பொங்கி வந்த வெட்கத்தை உள்ளே மூடிக்கொண்டு, உதட்டை கட்டி வார்த்தைகளை மறைத்து மெல்ல எழுந்து நாணி நின்றபடி தோழியரை கண்டாள்
பிரியம்வதை சொன்னாள், “பளிங்கு போல் தெளிந்த நீர் கொண்ட சுனையின் ஆழம் எளிதாகத் தெரிவது போல் கிளிமொழியாள் அவள் பெரும் காதல் கொண்ட மனமும், அந்த காதலை உள்வாங்கிய உங்கள் மனமும் ஆழமாக தெரிகின்றது.
மன்னரே, இவையெல்லாம் அவள் சொல்ல நாணுகின்றாள், அதனால் நான் சொல்கின்றேன், தவறாயின் மன்னிப்பீர்”
துஷ்யந்தன் சொன்னான், ” பேசவேண்டியவற்றை பேசவேண்டும் நங்கையே, நீ சரியாகத்தானே சொன்னாய்? நல்வார்த்தைகளை நெஞ்சத்தில் பூட்டிவைப்பது சரியல்ல.
மேகம் சூழும் மாலைப்பொழுதை மனமாக கொண்டால் அங்கே எண்ணம் எனும் மயிலை ஆடவிடுவதுதானே சரி, அதன் கால்களை கட்டிப்போட்டால் எப்படி?
பேச வேண்டியதை பலநேரம் பேசாமல் விட்டால்தானே ஆபத்து.”
பிரியம்வதை தொடர்ந்தாள், “மன்னா, செங்கோல் செலுத்தும் அரசனுக்கு தவறில்லா வழிகளிலே துன்பம் வந்தால் அதை தீர்ப்பது மன்னன் கடமையன்றோ? செங்கோலாட்சி என்பது அதுவல்லவோ?
மக்களின் கண்ணீரை துடைத்தல் மன்னவரின் கடமைகளில் ஒன்றல்லவா?”
துஷ்யந்தன் சொன்னான், “அது மன்னனின் பெரும் கடமை, மக்களின் கண்ணீரை துடைத்தலே உயிர் போன்ற காரியம்”
பிரியம்வதை சிரித்தபடி சொன்னாள், “மன்னா, உங்கள் நாட்டின் பெண்ணான இந்த சாகுந்தலையினை காமதேவன் பிடித்து சிறைவைத்துவிட்டான், பெரும் கப்பம் கேட்டு அவளை மிரட்டுகின்றான், பெண்மையின் பலவீனத்தால் அவளால் போராடமுடியவில்லை, தயவுசெய்து அவனிடமிருந்து அவளை விடுவித்துக் காப்பாற்றுங்கள்”
துஷ்யந்தன் சொன்னான், “பெண்ணே வேண்டுதலை ஏற்றேன், இதனை நீ உன் தோழிக்காக சொல்லவில்லை, எனக்காக என் பக்கம் இருந்து சொன்னது போலிருக்கின்றது , காண்பதற்கரிய உங்கள் தோழியினை நான் காப்பாற்றுகின்றேன்”
சாகுந்தலை மெல்லச் சொன்னாள் , அவன் அரசன் அவனுக்கு ஆயிரம் பெண்கள் உண்டு, அதில் ஒன்றாக தன்னை கருதுவானோ என பொருள்பட சொன்னாள்
“பிரியம்வதி அவர் அரசரல்லவா? அரண்மனையில் அவரை தழுவ இருப்போர்க்கும், உபசரிக்க இருப்போர்க்கும் ஏங்குவார். அவரிடம் ஏதும் சொல்லாதே, விட்டுவிடு
பட்டத்து யானையினை நன்றாக அலங்கரித்து பெருநெருஞ்சிக்காட்டினுள் விரட்டுவார் உண்டோ, நீ அப்படியான காரியத்தை செய்கின்றாய். அவரை விட்டுவிடு. வருத்தப்படவைக்காதே”
அவள் சொன்னதன் அர்த்தத்தையும் அதனுள் இருந்த உள்குத்தையும் உணர்ந்த துஷ்யந்தன் சொன்னான்.
“அரண்மனைக்கு சென்றால் நான் எல்லாம் மறந்துவிடுவேன் என எண்ணுபவளே கேள்.
இமைக்கும் ஒரு நொடியில் உலகின் அழகையெல்லாம் எடுத்து உன் கண்ணில் வைப்பவளே, நான் இமைக்கும் நொடியிலும் நீங்காமல் என் கண்ணில் இருப்பவளே!
மருட்சியான பார்வையினால் உன்னை வியந்து பார்ப்போர் மனம் மயக்கி பெருகி நிற்கும் அழகால் நிலை குலைக்கும் பேரழகே
இந்த உலகில் உள்ள பொருள்களிலெல்லாம் உயிர்க்கும் உயிரான உயிர்பொருள் நீ, நிலவே உன்னை நான் மறவேன்.
மன்மதனின் அம்புகள் என்னை சல்லடையால் துளைத்த நிலையிலும் , அதனால் காயமுற்று சரிந்த நிலையிலும் அமுதத்தின் அரசியே உன்னை மறவேன்”
சற்று அமைதிக்கு பின் அனுசுயை கேட்டாள்.
“மன்னரே, அரண்மனையில் அரசனுக்கு பட்டத்து ராணிகள், அழகு பெட்டகப் பெண்கள் , அந்தபுர அழகிகள் என எப்போதும் நிலவினை சுற்றி விண்மீகள் போல பலர் குவிந்திருப்பார்கள், அங்கே இந்த சாகுந்தலையின் நெஞ்சில் இடிவிழாதபடி காத்துக்கொள்ளுங்கள்”
துஷ்யந்தன் சொன்னான், ” பெண்ணே, என் அரண்மனையில் அழகு கிழத்தியர் ஆயிரம் உண்டுதான். ஆனால், நான் கழுத்தில் சூடியிருக்கும் மாலையில் இரு மலர்கள்தான் உண்டு.
என் மிதியடியின் கீழ் கிடக்கும் சருகெல்லாம் என் மார்புக்கு மலராக முடியாது, நான் ஆளும் ராஜ்ஜியம் உங்கள் தோழி”
அவன் சொன்னதும் அனுசுயையும், பிரியம்வதையும் இணைந்து சொன்னார்கள், “இதெல்லாம் நாங்கள் செய்த நல்ல தவத்தின் பலன்”
பிரியம்வதை சொன்னாள், “துணை தேடி காட்டில் அலைந்த மான் ஒன்று இணைகண்ட நேரம், அவை இன்பமாயிருக்க நாம் அதற்கு உதவி செய்தல் நன்று, வா கிளம்பலாம்”
சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பினார்கள். சாகுந்தலை சொன்னாள்,
“என்னை தனியே விட்டு எங்கே செல்கின்றீர்கள், இங்கே எனக்கு துணை யார்? இருவரில் ஒருவராவது என்னோடு இருங்கள்”
அவர்கள் சொன்னார்கள், “நாங்கள் இருவர் ஏன்? எல்லோரையும் ஆளும் அரசனே உன் முன் இருக்கின்றார், அவரே உன் முன் இருக்கும் போது நாடே உன்னுடன் இருக்கின்றதாகுமே.
பெரும் ஒளி உன் முன் இருக்கும் போதும் ஏன் அச்சம்?”
சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பிப் போக, சாகுந்தலை சொன்னாள், “இவர்கள் இல்லாவிட்டால் நான் எப்படி அச்சமின்றி தனித்திருப்பேன்?”
தனித்திருந்த அவளிடம் துஷ்யந்தன் சொன்னான், “கண்மணியே, கண்ணின் மணியே , நெஞ்சில் உண்மையுடன் தூய அன்புடன் நான் உனக்காக இங்கிருப்பேன்.
செந்தாமரையின் பசும் இலையாலான இந்த விசிறி கொண்டு, அந்தி நிலாவே எழிற்கொடியே அருகிருந்து உனக்கு விசிறட்டுமா?
வளமான பெண்மையின் ஒளிகொண்ட வாழை தண்டு தொடைகளை எளியேன் வருடி ஏழு ஸ்வரமும் எழுப்பி என்னுள் கலந்திடவா?
செந்தாமரை போன்ற பாதங்களை, சிறிய இடையினை அதன் மேலிருக்கும் இரு மலையினை என் சொந்தமாக்கி சுடரே உன்னில் சுடர்விடவா?”
சொன்னவன் அவளை நெருங்கினான், அவள் நாணமுற்றாளே தவிர நகரவில்லை, மெல்லச் சொன்னாள், “தாய் தாலாட்டினை பாடும் போது சுகமாக உணரும் குழந்தை அந்த தாலாட்டை தாய்க்கு பாடமுடியுமா?
அது குழந்தையின் குற்றமல்ல.
அவ்வாறே உங்களுக்கு சேவை செய்யவேண்டிய என்கைகள் முடங்கி கிடக்க உங்கள் கரங்கள் எனக்கு பணிவிடை செய்வது இங்கே குற்றமாகாது”
அவன் நெருங்கிவர அவள் மெல்ல விலக, அவள் கரம்பற்றி சொன்னான்.
“அழகுமிகும் பேரழகே! பள்ளம் தேடும் நீரைப் போல் எங்கே நகர்கின்றாய்?
தன் கதிர் எனும் உளிகொண்டே வெப்பச் சிலைகளை செதுக்குகின்றான் கதிரவன், அவன் இன்னும் மும்முரமாய் செதுக்க விழையும் வெயிலில் எங்கே செல்ல விழைகின்றாய்.
கொங்கையின் மேல் தாமரை இலைகளை கொண்டு கட்டியிருக்கும் போர்வை வெயிலில் காய்ந்து சருகானால் என்ன செய்வாய்?
அவன் நெருக்கம் தாளாமல் சாகுந்தலை தவித்துச் சொன்னாள், “புருவின் வம்சத்தில் வந்தவரே, நீரோ மழைக்காலத்தில் ஆற்றுவெள்ளம் மதகை மீறி பாய்தல் போல வேகமாய் நிற்கின்றீர்.
நானோ பெரும் காமம் என்னில் உள்ளே ஊறினாலும் கிணற்று நீராய் உள்ளேன்…”
அவள் சொல்லி மெல்ல நடுங்கினாள், அவனோ அவள் கரம்பற்றி அவளைத் தொட்டு சொன்னான்.
“மடமயிலே இங்கு அச்சமென்ன? தயக்கமென்ன?
இதெல்லாம் அறமல்ல. கண்ம முனி அறிந்துவிட்டால் என்னாகும் என அஞ்சுகின்றாயோ? இதெல்லாம் அறமே என அறியாதவரா அந்த முனி?
முனிவர் பெற்ற பிள்ளைகள் அரசனை மணந்த கதை புதிதா என்ன? அதையெல்லாம் அவர் எண்ணாமல் இருப்பாரா.
களவுநெறி என்றாலும் காதல்நெறியன்றோ. இதை குற்றமென சொல்வார் எவருண்டு? அதனால் அஞ்சாதே”
அப்போதும் குழம்பிய சாகுந்தலை சொன்னாள், “அன்பரே எனக்கு தெரியவில்லை, கொஞ்சம் என்னை விடுங்கள். நான் சென்று தோழியரிடம் சென்று இந்நெறி சரியா? களவுவழி உகந்ததா என கேட்டு வந்துவிடுகின்றேன்?”
துஷ்யந்தன் சொன்னான், “நெறி அறிந்துவிட்டு நீ வரவேண்டும் அவ்வளவுதானே, நெறியறிந்து திரும்புவாய் என்றால் விட்டுவிடுகின்றேன்”
சொன்னானே தவிர விட்டுவிடவில்லை.
அவள் மெல்லச் சொன்னாள், “நீர் எப்போது விடுவீரோ? விரைவாக செய்யுங்கள்”
துஷ்யந்தன் சொன்னான், “விடுவேன் இந்த விழாவினை கொண்டாட்டமாக முடித்துவிட்டு உன்னை விடுவேன்.
தொடுக்கபடாத அருமலரே, தொடுதற்கறிய அழகு மலரே, புதிது புதிதாய் சுகமும் நலமும் கொழிக்க குலம் செழிக்க என் முன்னால் மலர்ந்த புது மலரே, அழகான அமுதமே, தேன்நிறைந்த நிலவே.
உன் அமுதம் பொதிந்த இதழ்களிலே, அழகு அவையிருக்கும் அவையங்களிலே நம் இருவருக்குமான சொர்க்கம் இருப்பதை நாம் சுவைத்து அறிவோம்.
பாலில் தேன் கலந்து, கன்னல் கனிப்பாகை கலந்த சிறிய நிலாவே, இதோ துய்க்கின்றேன்”
காட்டின் நிசப்தம் இருவருமே உணர்ந்தார்கள், மூச்சுக்காற்றினை பரிமாறிக் கொண்டார்கள், தேகங்கள் துடித்து அடங்கின.
சக்கரவாகப் பறவைகள் இணையாய் பறந்தன.
பூமியின் மொத்த மகிழ்வும் கொண்டவனாய் அவன் எழுந்தான், அவளோ உலகின் மொத்த நாணமும் கொண்டவளாய் குனிந்த முகத்தோடிருந்தாள்.
இருள் எனும் அரக்கி நாளை விழுங்கி முடிக்க போகும் மாலை அது என்பதை அறிந்தவர்கள், இப்போது பிரியவேண்டுமோ என கலங்கி நின்றார்கள்.
அங்கே யாரோ வரும் ஓசை கேட்டது.
“மன்னரே நான் உடல் நலிவில் இருப்பதாக கருதும் எம் குடில் பெண்கள் கௌதமி எனும் பெண் துறவியுடன் வருகின்றார்கள் போலிருக்கின்றது..
அவள் சொன்னதும் மறுபடியும் மரத்தின் பின் ஒளிந்து கொண்டான் துஷ்யந்தன், களவு நிலை காதலென்றால் கள்வன்போல் பதுங்குதத்தானே வேண்டும் என தனக்குள் சொல்லிகொண்டான்
சாகுந்தலையோ ஒன்றுமறியாதவள் நோயில் கிடப்பது போல் மலர்படுக்கையில் படுத்துகொண்டாள், அவளை நெருங்கினாள் கௌதமி
“வேருக்கு நோய்வந்தால் செடியின் கொழுந்துவாடுதல் போல நீ உள்ளத்தில் கொண்ட துயரேனும் உண்டா ? பெருவருத்தம் இருந்தால் அது தீரும்படி சொல்லம்மா” என அவளை ஆறுதலாக கேட்டாள் கவுதமி
சாகுந்தலை இயல்பாய் சொன்னாள் ” வேரில் வெப்பம் இருந்தால் வெளியே இலைகள் வாடும்தான், அந்த வெப்பம் தீர ம்ழைதுளிகள் பெயதுவிட்டால் அந்த இலைகள் மறுபடி துளிர்க்குமன்றோ?”
கவுதமி சொன்னார் “சாகுந்தலை, இந்த தர்ப்பை புல்லாலே குளிர்ந்த நீரை தெளிக்கின்றேன், இதனால் சித்திரம் போன்ற நீ புத்துணர்ச்சி பெறுவாய்.
களைப்புற்றோர் நன்கு உறங்கி களைப்பு நீங்கி எழவேண்டும், கண்மணியே கொஞ்சம் உறங்கினால் உனக்கும் நல்லது, இருள் சூழும் நேரமிது அதற்கு சரியாகும், வா குடிலுக்கு செல்வோம்”
சகுந்தலை அரைமனதுடன் அவன் மறைந்திருந்த மரத்தை பார்த்தபடி சொன்னாள்
“மடநெஞ்சமே, கனி ஒன்று பாலில் வீழ்ந்து பின் அரியதான தேனில் வீழ்ந்து நீ சுவைகும்படி ஊட்டிவிட உன் வாயருகே வந்தபோது நாணத்தால் தடுத்துவிட்டு இப்போது அந்த அரும் இனிப்புசுவை எப்படி இருக்குமோ என ஏங்கி தவிப்பதென்ன?”
சொன்னவள் அவர்களோடு செல்ல தயாரானாள் ஒரு அடி எடுத்துவைத்தபின் தனக்கு கூரையாய் இருந்த கொடிபந்தலை பார்த்து சத்தமாய் சொன்னாள்
“அழகான பூக்களையும் சீரான கொடிகளையும் கொண்டு எனக்கு நிழலிட்ட பந்தலே நான் செல்கின்றேன்
உன் இலைகளால் என்னை தடவி உன் மலர்கள் மேல் படுக்கவைத்து குளிர்வித்து புது பெரும் இன்பம் தந்தாய், நான் செல்கின்றேன், பின் வந்து உன்னில் மகிழ்வேன்”
அந்த வார்த்தைகள் தனக்கானவை, தனக்கு மட்டுமானவை என்பதை அறிந்து மரத்தை கட்டிகொண்டு ஆனந்தமடைந்தான் துஷ்யந்தன்
அவள் சென்றபின் வெளிவந்தவன் யாரும் அறியாதவாறு அவளை பார்த்துகொண்டிருந்தான் பின் தனக்குள் சொல்லிகொண்டான்
“எத்தனை தடைகள்? அவளை தழுவ இவ்வளவு இடர்கள்? அடையமுடியா அரும்பொருளை நான் அடைந்தும் அதை நுகர இத்தனை தடைகள்?
ஆறுபோன்ற கூந்தல் கொண்டவள் கண்கள் மீன்போல் துள்ளும் பெரும் பேறாய் பெற்றவள் முகத்தை கையில் எடுத்தேன் , விரலால் தடுத்துவிட்டாள்..
நிலவின் ஒளிகொண்ட முகத்தை ஒரு கையாலே நிமிர்த்திட்டேன், அவளோ தன் மலர்விரலால் தடுத்து நிலம் நோக்கி நின்றாள்
பவள இதழில் வெள்ளிமலர் பூத்தது போல் சிரித்தவள் அதில் ஊறும் இன்பத்தை பருகுமுன் தடுத்தவள்
அந்த குடங்களின் அமிர்தம் சுவைக்க தடுத்துவிட்டாள், இந்த பந்தல் குளிரினிலே என்னை அவளோடு ஒன்ற வைப்ப்பாளோ?
அந்த மலர்மேல் மகிழும் வண்டாய் அமர்வேனோ? என் காதல் அமுதை சுவைப்பேனோ? அந்த வசீகர புயலில் தள்ளாடுவேனோ?
இந்த கல்லில் படுக்கை போல் கிடக்கின்றேன், ஒளியற்ற மலர்போல் சருகிவிட்டேன்
கிளியின் மூக்கு போன்ற நகத்தால் அவள் தாமரை இதழில் என்னை வடித்தாள், தளிர்ஒன்று தனியே வாடிடல் போல் இங்கே கிடந்து தவிக்கின்றேன்
அவள் அணிந்திருந்த தாமரையின் தண்டிலான வளையல்கள் நான் அவளை அணைக்கையிலே இங்கேதான் உடைந்தது, அவள் தலையின் பூக்கள் இங்கேதான் சிதறின, அந்த இடத்தைவிட்டு அகல முடியாமல் தவித்து கிடக்கின்றேன், எனக்கு இது தணியா தாகம் தரும் இடமாயிற்றே…..”