காளிதாசனின் சாகுந்தலம் : 11
காளிதாசனின் சாகுந்தலம் : 11
பிரியம்வதையும் அனுசுயையும் பூஜைக்கு மலர் பறித்துக் கொண்டே பேசுகின்றார்கள்.
“சாகுந்தலை ஒன்றும் பெரிய தவறை செய்யவில்லை. களவழி என முன்னோர் அனுமதித்த வழிதான் அவனோடு பழகினாள்.
அது உள்ளத்தாலும், உடலாலும் ஆழமான உறவாகிவிட்டது. அந்த சிந்தனையில் அவள் அச்சுமுறிந்த தேர், தான் போன போக்கில் செல்லுதல் போல் குழப்பிக் கிடக்கின்றாள்.
என்ன சொல்கின்றாய்?
அரசர் துஷ்யந்தன் இங்கு தன் கடமையெல்லாம் முடித்து, வேள்வி காத்துவிட்டு பொய்க்காதமொழி சொல்லும் தவசிகள் வாழ்த்த ஊருக்குள் சென்றுவிட்டார். அவர் அரண்மனையில் அழகான பெண்கள் ஆயிரம் உண்டு. செப்பு போன்ற அவர்கள் நடுவில் நாமும் இந்த காடும், சகுந்தலையும் அவர் நினைவுக்கு வருவார்களா என்ன?அரண்மனையின் பகட்டில் இந்த எளிமையான தவக்குடிலின் நினைவெல்லாம் அவருக்கு எங்கே இருக்கும்?
நம்பிக்கைக்கு மறுபெயர் நம் மன்னர் அல்லவா? அவரை போன்றவர்கள் இம்மியளவும் மாறமாட்டார்கள். அவர் சான்றோர்களில் ஒருவர்.
சாகரப்பறவை நிலாவின் ஒளியில் இன்பத்தை தேடுமே அன்றி மின்னலின் ஒளியினை நாடாது. ஆனால், கன்வ முனி இதை எப்படி எடுப்பார் என்பதுதான் அச்சமாக இருக்கின்றது.
அதெல்லாம் இல்லை அவர் ஏற்றுக்கொள்வார். அவளை வெறுத்து ஒதுக்கமாட்டார் என என் மனம் சொல்கின்றது.
எப்படி சொல்கின்றாய்?
தன்னிடம் இருக்கும் சிறந்த மாணவர்களில் சிறந்தவர்க்கு அவர் அவளை மணமுடிக்கத்தான் திட்டம் கொண்டிருக்கின்றார். பூ வைக்கும் இடத்தில் பொன்னே வைத்தது போல் மன்னர் வந்துவிட்டார். அதை கன்வர் மறுக்கமாட்டார். வருத்தமின்றி அவருக்கே மகிழ்வாய் கொடுப்பார்.
சரி. வேகமாக மலர்களை பறிப்போம், “சாகுந்தலையின் குலதெய்வ பூஜை இன்று செய்தல் வேண்டும்.
ஆமாம். அவள் குலதெய்வம் இன்று மகிழ்ந்து வரம்கொடுக்கும்படி நிறைய மலர்கள் கொட்ட வேண்டும்”
அவர்கள் மலர்பறிக்கும் போதே குடில் வாசலில் சத்தம் கேட்டது, “யார் இங்கே அமர்ந்திருப்பது?”
சத்தம் கேட்டு அனுசுயையும் பிரியம் வதையும் ஓடினார்கள். யாரோ விருந்தினர்கள் வந்திருக்கின்றார்கள் என பூக்கூடையோடு ஓடினார்கள்.
அங்கே ஆத்திரத்தில் நின்றார் துர்வாச முனி, எதிரே எங்கோ சிந்தை வைத்தபடி யார் வந்திருக்கின்றார்கள் என்பது கூட அறியாமல் அமர்ந்திருந்தாள் சகுந்தலை.
இதை அறிந்துதான் இருவரும் ஓடிவந்தனர். வரும்போது அனுசுயை சொன்னாள், அவள் பழைய சகுந்தலை என்றால் அச்சமில்லை இப்பொழுது அப்படியா என சொல்லியபடியே விரைந்தார்கள்.
“நீரில் விளையாடும் மீனை மீனவன் வலை வீசிப்பிடித்து தோளில் போட்டு கொண்டு செல்லுதல்போல் அவள் உள்ளத்தை ஒளிமார்பு கொண்ட மன்னன் எடுத்துச் சென்றான்.
உள்ளத்தை அவனிடம் கொடுத்துவிட்டு பட்டமரம்போல் அவள் இங்கே தனித்திருகின்றாள்” எனச் சொல்லியபடியே விரைந்தார்கள்.
அங்கே ஆத்திரமுற்ற துர்வாசர் கத்திச் சொன்னார்.
“வந்த விருந்தினரை அதுவும் இந்த துர்வாச முனிவரை கண்டுகொள்ளாமல் ஏளனமாய் திரும்பியிருக்கும் பெண்ணே. உன் மனதை நான் அறிவேன்.
இப்போது எவனை மனதால் நினைந்து நீ என்னை அவமரியாதை செய்தாயோ அவன் உன்னை மறப்பான், போதை ஊட்டும் கள் உண்டவனைப் போல அவன் நினைவு மங்கும், அவனிடம் நீ அழுதாலும் புரண்டாலும் கெஞ்சினாலும் அவன் உன்னை ஏறேடுத்தும் பாரான், உன்னை பற்றிய நினைவுகள் அவனிடம் இருந்து அகலும், அவன் பசுமை நீங்கிய பட்டபரம் போல் ஆகட்டும்”
அந்நேரம் குடிலை நெருங்கிவிட்ட அனுசுயையும் பிரியம்வதையும் அவர் வார்த்தை கண்டு கலங்கினர், சாகுந்தலை எதுவும் கவனியாது இருந்தாள்.
முனிவரைப் பற்றி தெரிந்ததால் பிரியம்வதை வாய்விட்டு சொன்னாள்.
“தன்னை அறியாமல் மான் புதைகுழியில் வீழ்தல் போல் சாகுந்தலை இப்படி அவளை அறியாமல் வீழ்ந்தாளே, சில விலங்குகள் பிரசவத்தின் போது தன் குட்டியினை தானே நோவில் உண்டுவிடும், இந்த காதலும் அப்படி ஆயிற்றே, பெரும்பிழை செய்துவிட்டாளே”
அனுசுயை இன்னும் அஞ்சி சொன்னாள், “ஆம், நீ சொன்னதெல்லாம் உண்மையாயிற்று, இவர் விதைகளுக்கெல்லாம் விதை போன்ற பெரும் முனிவர் துர்வாசர், ஒப்பிட்டு இன்னொருவரை சொல்லமுடியாத பெருமை கொண்டவர்.
ஆனால், கோபம் வந்தால் என்ன செய்கின்றோம், என்ன சொல்கின்றோம் எனத் தெரியாத அளவு ஒருவனை வலிப்பு நோய் வாட்டுவது போல வாட்டிவிடும் கொடியவரும் அவர் அன்றோ.
ஐயோ, நான் என்ன செய்வேன். நல்ல மண் எடுத்து குடம் செய்யும் குயவன் அதனை காயவைக்க வெயிலில் வைக்க, அங்கே கார்மேகம் கூடி பானையை உடைத்து வெள்ளம் அதை அடித்துச் செல்லல் போல சாகுந்தலை நிலை ஆகிவிட்டதே.
அப்படி வெள்ளமென சாபமழை பெய்துவிட்டு செல்கின்றாரே துர்வாசர்”
பிரியம் வதை சொன்னாள், ” கொடியது என்றாலும், காலம் காலமாக கடலுக்கடியில் அடங்கிக் கிடக்கும் அந்த வடவை நெருப்பானது பூமியினை தாக்காது. ஆனால், நடுங்க வைக்கும் பெயராக இருக்கும்.
இந்த தவக்கடலின் அடியில் இருந்த அந்த வடவை தீ எழுந்து சாகுந்தலையினை கொதிநிலையில் எரித்ததென்ன?
கொடுவாள் அறிந்திடுமா காயத்தின் வலியினை.
ஏவி விட்ட வேட்டைநாய் கடிக்காமல் விடாது, துர்வாசரின் சாபம் பலிக்காமல் போகாது. காட்டுவெள்ளம் போல் வேகமாய் செல்லும் அவரை அணைகட்டி நிறுத்து.
அவர் பாதத்தில் மலர் இட்டு நீர் ஊற்றி பணிந்து நில், மன்னிப்பு கேள், உக்கிரமாக நின்ற நரசிம்மம் கூட பிரகலாதனுக்கு கட்டுப்பட்டது போல் முனிவர் மனம் மாறுவார்”
அனுசுயை விரைந்து செல்ல முயன்றாள், கூடையில் அவள் கால்பட்டு பூக்கள் சிந்தின, அது அபசகுனம் போல் பதறியவள் தயங்கினாள், சிதறிய பூக்களை எடுத்து வைத்தபடி சொன்னாள்.
“முனிவரின் மனம் முதலையின் மேல்புறம் போல் கரடுமுரடானது, அதை எப்படிவழவழப்பாக ஆக்குவது? இயல்பிலே கோணலுள்ள சிந்தனையினை உடையவர்கள் யார் கோரிக்கையினையும் பொருட்படுத்தமாட்டார்கள்.
மூன்றாம்பிறை போல் கொஞ்சம் வெளிச்சமெனும் கருணையினை கேட்டுபார்ப்போம்” என்றவள் ஓடிச் சென்று அவர் பாதம் வீழ்ந்தாள்.
ஒரு நிமிடம் நின்றவர் ஏதோ சொல்லிவிட்டு வேகமாக நடந்தார் மெல்ல திரும்பி வந்தாள் அனுசுயை.
“கருங்கல்லில் நார் உரித்தாய் என கருதுகின்றேன், அவரை பொறுத்தவரை இதுவே பெரும் புண்ணியம்” என்றாள் பிரியம்வதை.
“பெரியவர்க்கெல்லாம் பெரியவரே, முனிவர்க்கெல்லாம் முனிவரே, அருள்கனிந்த தவத்தோரே, உங்கள் தவத்தின் வலிமையினை எண்ணிப்பாரா அந்த பேதையினை மன்னிப்பீராக.
அவளை பெற்றெடுக்கா உமது புதல்வியாக எண்ணிப்பாரும், உம் வீட்டு மகளென்றால் சபிப்பீரோ?
முடம்வந்த பிணியாளிபோல் இருக்கும் அவளை சபிப்பீரோ? இது தவறு, வந்திருப்பவர் முனிவர் என்பது கூட அறியாமல் மதிமயங்கி போனவளை மன்னிப்பீர், அது உமக்கு பெருமையன்றோ எனச் சொல்லி அவர் பாதம் வீழ்ந்தேன், எழவேஇல்லை” என்றாள்.
பரிதவித்து அனுசுயை கேட்டாள்.
“விடிவெள்ளியினை கண்டவள் போல் கேட்கின்றேன் , சொல் என்ன நடந்தது அதன்பின்? சொல், விடியும் வேளை வந்தது போல் உணர்ந்து கேட்கின்றேன்.
உன் உள்ளம் பூகம்பமாய் வெடிக்க கண்டு, “ஒரு வழி சொல்வேன், அவன் சம்பந்தமான பொருள் ஒன்று அவள் துயர் போக்கும்” இப்படிச் சொன்னவர் பெரிய யானை நீரில் இறங்கி மறைதல் போல மறைந்துவிட்டார் என்றாள் அனுசுயை.
இதுதான் நடந்ததா? நீரில் வீழ்ந்து தத்தளித்து எதைப் பற்றி மேலேறலாம் என தவிப்பவருக்கு, அமிழ்ந்துவிடுவோம் என அலறுபவனுக்கு கரையில் இருக்கும் ஒரு புல்லும் பலம் கொடுக்கும் அல்லவா? அவன் அதைப் பற்றி மீளுவானே.
மன்னர் அவளை அள்ளி எடுத்து தன் மனத்தேரில் வைத்து சென்றபோது அவர் நினைவாக ஒரு மோதிரம் ஒன்றை தந்தார். அது நமக்கு கைகொடுக்கும்.
காற்றில் தீபம் அணைந்தாலும் சிக்கிமுக்கி கற்களை கொண்டு ஏற்றுதல் போல, அவர் பெற்ற மறதி எனும் நோயினை இந்த கணையாழி நீக்கும், கவலை மாற்றும்.
அனுசுயை தொடர்ந்தாள். வா நாம் சாகுந்தலையின் குலதெய்வத்திடம் சென்று வேண்டிக்கொள்வோம், அவளை அழைக்கச் செல்வோம் என்றாள்.
இருவரும் வந்து தன்முன் நின்றும் சாகுந்தலை அவன் நினைவால் சிலைபோல் அமர்ந்திருந்தாள், ஒரு சலனமுமில்லை.
அதைக் கண்டு பிரியம்வதை சொன்னாள், ” பார் அனுசுயை, அவள் நினைவெல்லாம் மன்னர் புகுந்துகொண்டார், அதனால் அவள் நம்மை ஏறிட்டும் பார்க்கவில்லை.
ஒவியத்தில் வரைந்த தீபம் போல் அவள் அசையாமல் இருப்பதை பார், மிகச் சிறந்த கவிஞன் எழுதிய காவியத்துக்குள் படிப்பவர் மூழ்கியிருப்பதை போல் மூழ்கியிருக்கும் தொனியினை பார்.
அலைகடல் ஆடும் கட்டுமரம் கரைக்கு வந்தபின் மணல்மேட்டில் தனியாய் அசையாமல் துயில்வதைபோல் அவள் தோற்றத்தை பார்.
அவள் தனக்குள் தானே மரத்து போய்விட்டாள். இவள் எப்படி முனிவர் வந்ததை கவனித்திருப்பாள்?
அனுசுயை அவளை எச்சரித்து சொன்னாள், “பிரியம்வதை நாம் உள்ளத்தில் இருந்து அவள் மேல் கொண்ட அன்பால் பேசியவை நமக்குள்ளே இருக்கட்டும், அதனை உன் நெஞ்சிலும் என் நெஞ்சிலும் வைத்து
கோடி பூட்டு போட்டு பூட்டிவைப்போம்.
மூளை நோய் தாக்கியவன் தன்னை அறியாமல் உறங்கிவிடுவதை போல அந்த ரகசியம் நமக்குள்ளே உறங்கட்டும்.
நம் சகுந்தலை மிகமிக மென்மையானவள், மெல்லிய தாமரையின் இதழை காட்டுப்புலியின் சொரசொரப்பான நாவு தீண்டினால் அந்த இதழ் சிதைந்துவிடாதா?
அவளின் அழகான மனம் எனும் கண்ணாடி நொறுங்கும்படி பெரிய பாறை விழுந்துவிடக்கூடாது, தாய் கையால் தழுவப்பட வேண்டிய குழந்தையினை பேய் தொடலாமோ?
பிரியம்வதை சொன்னாள், “புதிதாக மலந்த அழகான மல்லிகை மொட்டு மேல் சுடுநீரை யார் கொட்டுவார்கள்?
புதுக்குழந்தை பிறக்கையிலே தொப்புள் கொடியினை மெல்ல அறுப்பார்களேயன்றி குழந்தைக்கு பால்தரும் தாயின் தனங்களை அறுப்பார் உண்டோ?”
இப்படி அவர்கள் பேசிக்கொண்டே வரும்போது எதிரில் ஒரு மாணவன் உற்சாகமாய் வந்தான், இவர்களை கண்டு சொன்னான்.
“தவத்தில் சிறந்தவரான கன்வர் சிலகாலம் தொலைபிரதேசம் சென்றவர் இப்போது திரும்பி வந்தார். இனி அவர் அருந்தவத்தை இங்கு தொடங்குவார். அதனால் நாங்கள் உற்சாகமானோம்.
இனி நான் இரவுவானம் கண்டு நல்ல நாளை தப்பாமல் கணிப்பேன்” என்றான்.
அந்த வானம் தண்டனை பெற்றோர் முகம் போல் இருண்டிருந்தது. தண்டனை பெற்றோருக்கு இடப்படும் கரும்புள்ளி செம்புள்ளி போல விண்மீன்கள் தென்பட்டன.
மாந்தர் உடல் நலம் கொடுக்கும் பச்சிலையும் மூலிகைகளும் தங்கள் தலைவன் சூரியன் மேற்கே சரிந்ததும் வருத்தமுற்று வாடின.
பெரிய கரிய யானையினை ஏவிவரும் பாகன் போல் மதி கிழக்கே இருளோடு எழும்பிற்று.
இன்பமும் துன்பமும் மாறிமாறி வருதல் போல சூரியனும் சந்திரனும் மாறி மாறி வந்தன.
நிலவுக்காய் ஏங்கும் ஆம்பல் மலர் தலைவன் வர கண்டு மெல்ல மலர்ந்தது. காதலரின் பிரிவும் தவிப்பும் மீள அவர்கள் கண்ட சந்திப்பின் மகிழ்வும் அங்கே அழகாய் தெரிந்தது.
கன்வர் யாகம் தொடங்கிவிட்டால் அது முடிய காலமாகும், அதற்குள் சாகுந்தலை நிலைமை சிக்கலாகும் என்பதை அறிந்து பதறிய தோழியர் கலங்கினர். அனுசுயை சொன்னாள்.
“இது கனியா? விளக்கின் சுடரா? எனத் தெரியாமல் வண்டு தத்தளிக்கும், அந்த வண்டை வருக எனத் தலையாட்டி அழைக்கும் தீபம் பொசுக்கிப் போடும்.
அப்படி தீபம் போன்ற அவரை கனியென நினைந்து வீழ்ந்துவிட்டாள் இந்த சாகுந்தலை எனும் வண்டு.
மிக மெல்லிய சிறுவாழை இலைமேல் அங்கு காவலாய் இருக்கும் முள்மரம் பெருங்காற்றால் வீழ்ந்து அந்த தளிர் இலையினை கிழித்தல் போலே கிழித்ததனை அறிவோம், அந்த முள் மன்னரென்றபின் என்ன சொல்வது?”
அந்நேரம் மாணாக்கன் சொல்லிச் சென்றான், “நல்ல நாள் அறிந்துகொண்டேன் விரைவில் வேள்வி தொடங்குவோம், அதை கன்வரிடம் அறிவிப்பேன்”
அவர்கள் கவலை இன்னும் கூடிற்று.
கலங்கிய அனுசுயை சொன்னாள், “கார்மேகம் சூழ்ந்த இருள்காலத்தில் சூரியன் வந்தால் மட்டும் பெரும்வெளிச்சம் வரவா செய்யும்? நாமும் இப்போது செய்ய கூடியது என்ன? ஒன்றும் இயலாதவரானோம்.
பனிகாலத்தில் கடும்குளிரில் உடலெல்லாம் விரைத்துவிடுவதை போன்ற இயலாமையில் நாம் சிக்கிவிட்டோம்.
ஒரே நிறத்தில் இருப்பதால் சுண்ணாம்பை, வெண்ணெய் என நினைந்து அந்த பேதைபெண் எடுத்து மீன் போன்ற தன் கண்ணுக்குள் இட்டுக்கொண்டாள்.
இந்த துரோகத்தை ஒரு மன்னன் செய்ய, அந்த இரக்கமற்ற மன்னனுக்கு மன்மதனும் ஏவல் வேலை செய்து அப்பெண்ணை கண்ணீரில் ஆழ்த்திவிட்டான். அந்த காமதேவன் இனி மகிழ்ச்சி கொள்ளட்டும். அவள் அழுகை கண்டு மகிழட்டும்.
துர்வாசரின் சாபம் எரிமலை வெடித்து ஓடும் கனல் ஆறாய், கற்குழம்பாய் ஓடிக் கொல்கின்றதோ?
சென்றதும் செய்தி அனுப்புவேன் எனச் சொன்ன மன்னன் இன்னும் ஏதும் தகவல் அனுப்பினான் அல்ல. துர்வாசரின் சக்தி அங்கு மலைபோல் தடுத்து நிற்கின்றதோ?
அதனால்தான் மன்னன் மறந்தே போனானோ?
கடும் கோடையில் புற்கள் தீய்ந்து உலர்ந்து போனாலும் ஒரு மழைத்துளி பட்டுவிட்டால் அந்த புல்லுயிர்கொள்ளாதோ?
அந்த கணையாழி கண்டுவிட்டால் அவனுக்கு எல்லாமும் நினைவுவர நான் என்ன செய்வேன்? யாரை அனுப்புவேன்? இங்குளோர்க்கு தவமன்றி வேறு என்ன தெரியும்?
இங்கே சாகுந்தலையிடம்தான் பெரும் தவறு, தீபம் எரிய காற்று வேண்டும். அதைச் சரியாக பயன்படுத்தாமல் இன்னும் இன்னுமென வேகமாக வர வருந்தியழைத்து அவளின் வாழ்க்கை எனும் சுடர் அணைய அவளே காரணமானாள். இதை எப்படி கன்வரிடம் சொல்ல முடியும்?
மாலைக்கண் நோயதனை கண்ணுக்குள் வைத்துக் கொண்டு நிலாவினை காணவில்லை எனறால் எப்படி?
மாலைக்கண் நோய்போல களவுவாழ்க்கை அவள் பெற்று பின் சூல்பெற்று தாயாக வளர்கின்றாள் சாகுந்தலை என்பதை என் நாவு எப்படி கன்வரிடம் சொல்லும்”
ப்ரியம்வதை யோசித்தாள் தான் சென்று அங்கே கன்வரிடம் சாகுந்தலை என்ன பேசுகின்றாள், அங்கே என்ன நடக்கின்றது என அறிந்துவருகின்றேன் எனச் சொல்லி சென்றாள்.
அவளுக்காய் காத்திருந்தாள் அனுசுயை. சில நாழி கழித்து வந்தாள் பிரியம்வதை, வந்தவள் உற்சாகமாய் சொன்னாள்.
“அனுசுயை, சூரியன் இங்கு வந்து அந்தத் தாமரையினை மலரவைக்க எவ்வளவு காலம் ஆகுமோ தெரியாது, நாம் இந்த தாமரையினை சூரியனிடம் அனுப்பி வைக்கும் காரியத்தை உடனே செய்யலாம்” எனச் சொல்லி புன்னகைத்தாள்.
அவள் புன்னகையின் அர்த்தம் கண்டு மிக்க மகிழ்ந்து சொன்னாள் அனுசுயை,”சொல் பிரியம்வதை, என்ன நடந்தது? என்ன கண்டாய்?”
கண்களில் அன்பும் எதிர்பார்ப்பும் மின்னக் கேட்டாள்.
பிரியம்வதை சொன்னாள்.
“அவள் நன்றாக உறங்குகின்றாளா, அதை மட்டுமாவது செய்கின்றாளா, எனக் காண பூனைபோல் சென்றேன், அங்கே நான் கண்ட காட்சியினை சொல்கின்றேன்.
அங்கே நம் சாகுந்தலை வெட்கத்துடன் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள். அவள் அருகில் அமர்ந்தபடி அவள் கையினை பிடித்தபடி கன்வர் வாழ்த்த கேட்டேன்.
வேள்வி செய்யும் அந்தணன் யாக புகையால் கண் இரண்டும் மூடிய நிலையிலும் அவிப்பொருளை சரியாக நெருப்பில் இடுவது போலே ஆகிவிட்டாய் என் மகளே என்றார்.
பெரியோர் மறைமொழிதானே பேசுவார்கள், அதனால் நான் உட்பொருள் அறிந்தேன்.
வேள்வி செய்பவள் சாகுந்தலை, வேள்வி அந்தக் காதல், கண்மூடிய நிலையில் வேள்வியில் அவிபொருளை சரியாக இடுதல் என்பது மன்னனை அவள் அடைதல் எனப் புரிந்து கொண்டேன்.
அவர் இன்னும் சொன்னார்.
மாணாக்கனுக்கு நல்ல கல்வி தரும் ஆசிரியனுக்கும், அவரிடம் கல்வி பெறும் மாணாக்கனுக்கும் ஒருசேர நல்ல பயன் விளைதல் போல நற்பயனாய் அவனை மணந்தாய் மகளே.
தென்மதுரையில் சிவனால் உண்டான வைகை ஆறு கடல்தன்னை சேராமல் முயலகன் தாகம் தீர்க்க பாதியில் தனியாக நின்றது போல் உன்னை தனித்து விடுவேனோ?
திருமால் காலடியில் கிளம்பும் கங்கை கடலை அடைதல் போல வேள்வி வளர்க்கும் தவசிகள் துணையோடு உன்னை அவரிடத்தில் சேர்ப்பிப்பேன் என்றார்”
அந்தச் செய்தி கேட்டு மனம் விட்டு நிம்மதி பெருமூச்சு விட்டு பேரானந்த உவகை கொண்ட அனுசுயை கேட்டாள்.
“என் காது மகிழும்படியான இந்த காரியம் எப்படி நடந்தது?”
பிரியம்வதை சொன்னாள், “அவர் முக்காலமும் அறிந்தவர் அல்லவா? அவர் குடிலுக்குள் அடியெடுத்து வைக்கும் போது, அவருக்கு மட்டும் கேட்கும்படி விண்ணில் இருந்து ஒரு குரல் அதனை சொல்லிற்றாம்”
வியந்த அனுசுயை கேட்டாள், என்ன சொல்லிற்றாம் அந்த விண்குரல்.
பிரியம்வதை சொன்னாள்.
“வன்னி மர குச்சிக்குள் வேள்வி நெருப்பு ஒளிந்திருப்பதை போல, பொன்போன்ற ஒரு மகவு உன் அன்புமகளின் ஈரவயிற்றில் இருக்கின்றது, மன்னன் துஷ்யந்தனே அந்த நெருப்பினை அவள் வயிற்றில் இட்டவன், அவனே அவளுக்குரியவன்”
(தொடரும்.)