காளிதாசனின் சாகுந்தலம் : 12

காளிதாசனின் சாகுந்தலம் : 12

சாகுந்தலையினை அவள் நிலையறிந்து அவளை துஷ்யந்தனிடம் அனுப்ப கன்வர் ஒப்புக்கொண்டார். பெரும் மகிழ்வுடன் சம்மதித்தார். அசரீரி சொன்னதைக் கேட்டு அவர் சாகுந்தலைமேல் கோபம் கொள்ளாமல் அவளை அவன் இல்லம் அனுப்ப போகின்றார் என கேள்விப்பட்டவுடன் அனுசுயையும், பிரியம்வதையும் பெரும் மகிழ்ச்சி கொண்டார்கள்.

“அவள் கணவன் இல்லம் செல்கின்றாள் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. ஆனால், நம்மைவிட்டு பிரிகின்றாள் என்பதும் கடினம் அல்லவா? ஆனால், கலங்கவேண்டாம். சிலை இல்லாவிட்டாலும் கோவில் இருக்கும். அவள் இல்லாவிட்டாலும் அவள் நினைவுகள் இங்கே தங்கியிருக்கும்” என்றாள் அனுசுயை.

“பசியால் வாடும் அன்னை கொஞ்சம் சோறு பெற்றால் கூட தன் பசிபொறுத்து தன் பிள்ளைக்கு ஊட்டி அதன் முகம் கண்டே பசிமறப்பது போல, அவள் வாழும் செய்திகேட்டு நாம் மகிழ்ந்திருப்போம், அவள் வாழட்டும்”
என்றாள் பிரியம்வதை.

“நன்று சொன்னாய் தோழி, மகிழம்பூ நறுமலர்களை மாலையாக்கி தொடுத்து தென்னை ஓலைக்கூடையில வைத்து மாமரக் கிளையில் தொங்கவிட்டுள்ளேன், நீ அதனை எடுத்து வா, அதோடு தீர்த்த மணலும், கொரோசனை எல்லாம் சேர்த்து மங்களமாய் கொடுத்து அனுப்புவோம்” என்றாள் அனுசுயை.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு அசரீரி ஒலி கேட்டது, “கௌதமியாரே, குடிலில் வாழும் உத்தமசீடன் சாரங்கன் என்பவனை சகுந்தலைக்கு காவலாக துஷ்யந்தன் மாளிகை நோக்கி அனுப்புக‌”

அந்தக் ஒலிகேட்ட பிரியவம்வதை சொன்னாள், “அனுசுயை துறவியரை அஸ்தினாபுரம் நோக்கி கிளம்பச் சொல்கின்றார்கள், நீ விரைந்து எல்லாம் எடுத்து வா”

அப்படியே அனுசுயை விரைந்து வர இருவரும் சாகுந்தலை இருக்குமிடம் நோக்கிச் சென்றார்கள்.

“அதோ பார் அனுசுயா, மங்கிய நிலவின் மேல் வைத்த முழுமஞ்சள் பாறைபோல் சாகுந்தலை அமர்ந்திருக்கின்றாள்.

அழகாய் பூத்த வேங்கை மலர்கள் சிதறிக்கிடப்பது போல் முனிவர் மனைவியர் தூவும் மஞ்சள்லிட்ட அரிசிகள் சிதறி கிடக்க நடுவில் அமர்ந்திருக்கின்றாள் பார்.

அவள் மார்பும், வீங்கும் வயிறும் நாண் ஏற்றிய வில்போல் முன்புறம் புடைத்து வளைந்து ஆடைக்குள் நிற்க அமர்ந்திருக்கும்கோலத்தை பார், வா செல்வோம்” எனச் சொன்னாள்.

அங்கே பெரியோர்கள் அவளை வாழ்த்தி அட்சதையிட்டுக் கொண்டிருந்தனர்.

“முறைதவறா மன்னனால் மதிக்கப்படுபவளுமாய், பெண்களில் தனித்தவளுமாய் நிலைத்து வாழ்வாயம்மா” என முனிவர் மனைவி வாழ்த்தினார்.

“மகளே, இந்த குவலயத்தையே கட்டி ஆளும் ஆண்மை மிக்க மகனை நீ பெற்று வாழ்வாய்’ என வாழ்த்தினார் இன்னொருவர்.

“குழந்தாய், நீ செல்வம் வாழும் அவன் அரண்மனையில் பெருவாழ்வு வாழ்வாய்” என வாழ்த்தினார் மற்றொருவர்.

இப்படி அவளை எல்லோரும் வாழ்த்திக்கொண்டிருக்க அவள் அருகே கௌதமியார் நின்றிருக்க அங்கே சென்றனர் இருவரும்.

“சாகுந்தலையே மங்களம் உன்னை நீராட்டிவிட்டதம்மா, ஒருமரம் கிளைபரப்பி நிற்பதல்ல பெருமை. அது பூத்துக் காய்த்து இனிமையான கனிகொடுத்தல் ஒன்றே பெருமை, நீ பெரும் பேற்றை பெற்றுவிட்டாய்” என்றார்கள்.

சாகுந்தலை கண்களில் ஆனந்தம் பொங்க அவர்களை வரவேற்றாள். “உங்கள் வரவு எப்போதும் நல்வரவே, வாருங்கள் வந்து அமருங்கள்”

அவர்கள் அங்கிருந்த நறுமணம் வீசும் அரைத்த சந்தன நீரை மலரில் தொட்டு அவள்மேல் தெளித்தபடி சொன்னார்கள், “நல்வரவு சொல்லும் அன்பின் ஊற்றே, நீராடும் யானை மலர் கொத்தை பிடுங்கி நீரில் தொட்டு பெண்யானை மேல் பூசிவிளையாடுதல் போலே நாங்களும் இந்த நீரை தெளிக்கின்றோம்”

சாகுந்தலை பிரிவின் துயரில் சொன்னாள், “தோழியரே உங்கள் அன்பில் எப்போதுமே நான் மகிழ்வும் நிறைவும் கொள்கின்றேன். ஆனால், உங்களை பிரியும் நேரமும் வந்துவிட்டது.

பருவத்தால் பூத்து காய்த்து அரிதான கனியொன்றை கொடுக்கும் நேரம் அந்த மரம் புயல்காற்றில் சாய்தல் போல ஆகிவிட்டது என நிலை. ஈன்ற பொழுதில் குழந்தைக்கு பாலூட்ட ஆசையாய் முயலும் தாய்க்கு அக்குழந்தை குடிக்குமுன் பால்வற்றிவிட்டால் எப்படி இருக்கும்?

முகூர்த்த பொழுதினிலே தாலி காணாமல் போனால் மணப்பந்தல் எப்படி இருக்கும்?

அந்நிலையில் இருக்கின்றேன் நான், உங்களை பிரியும் நேரம் அப்படி வலிக்கின்றது, உங்கள் கையால் ஒப்பனையும் அலங்காரமும் செய்யும் வாய்ப்பு எப்போது வரும்? அது இனி வேண்டினாலும் கிடைக்குமோ?” எனக் கலங்கினாள்.

அவளை தோழியர் ஆறுதல்படுத்தி சொன்னார்கள்.

“மங்கள நேரத்தில் அழுதல் நன்றோ? பொன் கிண்ணமொன்றில் நச்சு பாம்பு வரலாமா? மணபந்தலிலே இரங்கல் பண் ஒலிக்கலாமா? மெல்லிய செவியில் இடிவிழுவது போல் இந்த அழுகையினை நாங்கள் கேட்கலாமா? கலங்காதே” என அவளை ஆறுதல்படுத்தினார்கள்.

பிரிவின் துயரில் இருக்கும் அவளுக்கு சந்தனக்குழம்பும் மலரும் சூட்டி அலங்காரம் செய்தபடியே பிரியம்வதை சொன்னாள்.

“குளிக்கலாம் எனச் சென்று கலங்கலான சேற்று நீரில்குளித்து அழுக்குடன் எழுந்து அது முந்தைய நிலையினை விட மோசமாக்கியது போல நாங்கள் உன்னை அலங்காரம் செய்யவந்து உன் நிலையினை ஆக்கிவிட்டோம் போலிருக்கின்றது. உள்ளே அழும் உனக்கு நாங்கள் வெளியிலே நறுமணம் பூசுகின்றோம்”

அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இருவர் வந்து சீர்தட்டினை நீட்டிச் சொன்னார்கள், “பெருமாட்டி அணியும் படி இந்தப் புடவை, இந்த அணிகள் இந்த சீர்வரிசை கொடுக்கப்பட்டிருக்கின்றது”

அதனைக் கண்ட அனைவரும் வாயடைத்துப் போயினர். அந்த தவக்குடில் அதனையெல்லாம் பெற வாய்ப்பே இல்லாதது.

சற்றுதள்ளி இருந்த கௌதமி ஆச்சரியமாக‌ கேட்டார் “தவசிகள் குடிலில் இதெல்லாம் எப்படி வந்தது? யார் கொடுத்தார்கள்?”

“கன்வமுனி” என்றார்கள் சீடர்கள், “அவரே தன் தவவலிமையால் படைத்தாரோ?” என்றார் கௌதமி.

“இல்லை அம்மா, அவர் எங்களை சாகுந்தலைக்கு மலர் பறிக்கத்தான் அனுப்பினார், அப்படி நாங்கள் மரங்களிடை சென்றபோது ஒரு மரத்தில் செம்பஞ்சு குழம்பு ஒழுகிக்கொண்டிருந்தது, அதை காணும்போதே ஒரு கரம் வந்து இந்த பட்டாடையினை கொடுத்தது.

அப்படியே மரங்களில் இருந்து கரங்கள் வந்து இந்த நகைகளைத் தந்தன, நாங்கள் கரங்களை மட்டும் கண்டோமே அன்றி வேறுயாரையும் காணவில்லை” என்றார்கள்.

பிரியம்வதை சொன்னாள், “திடீரென உதிக்கும் நல்ல சிந்தனை போல் உனக்கு வாய்த்த இந்த சீர்களால் என்ன தெரிகின்றது சாகுந்தலை? நீ அருள்பெற்றவள் என்பதும், மானுடர் உன்னை மறந்தாலும் இந்த பிரபஞ்சம் உன்னை நடத்துகின்றது என்பதும் தெரிகின்றதல்லவா?”

அந்த சீர்பற்றி விசாரிக்க கன்வரை நோக்கி சீடர்களுடன் சென்றார் கௌதமியார், செல்லுமுன் அந்த நகைகளையும் பட்டையும் சாகுந்தலைக்கு சூட்டிவிட தோழியர்க்கு சொல்லிச் சென்றாள்.

“நாம் எப்போது இப்படியான நகைகளை கண்டோம் சொல்? இவை எல்லாம் தேவமங்கைகள் அணியும் நகைபோல் அல்லவா இருக்கின்றது?

ஒன்றுமே இல்லாதவனாய் அடிமுட்டாளாய் இருந்தவனை காளி ஒரே நொடியில் பெரும் கவிஞனாக்கினாள் என்பதை கேள்விபட்டோமே தவிர கண்டதில்லை. ஆனால், அப்படி ஒரு நிலையில் இன்று மலைப்புற்று நிற்கின்றோம்.

எந்த அணிகலனை எங்கு பூட்டவேண்டும் என்பதை கூட அறியாமல் குழம்புகின்றோம்” என்றாள் அனுசுயை.

பிரியம்வதை சொன்னாள், “ஆசையாய் ஒரு குழந்தையினை கொஞ்ச ஒரு தாய் புத்தகமா படித்துவிட்டு வரவேண்டும்? அன்பும் ஆசையும் இருந்தால் எல்லாம் தானாக வரும்”

அப்போது கன்வர் தானாய் மாயக் கரங்கள் கொடுத்த சீர்பற்றி தெரிந்து சாகுந்தலையினை காண வந்தார், அவளை நெருங்கும்போதே சொல்லிக்கொண்டார்.

“இன்று நான் வளர்த்தமகள் என்னைவிட்டு பிரிகின்றாள் என நினைக்கையில் வைரம் போன்ற என்மனம் மெல்லிய பஞ்சுபோல் மாறி வதைக்கின்றதே, அது நைந்து அழுகின்றதே.

பெரும்புயலில் சிக்கிய மலர்க்கொடியின் மலர் ஆடுவது போல் என் மனம் தவித்து ஆடுகின்றதே, நான் என்ன செய்வேன்?

வறண்ட பாலையிலே மழைவந்து கொட்டும்போது அந்த நீர் பெருக்கெடுத்து ஓடாமல் மண் உள்ளே செல்லுதல் போல் என் பிரிவு கண்ணீர் என் முகத்தில் வழிந்தோடாமல் என் தொண்டைக்குள் இறங்குகின்றது, அங்கே பேச்சு கூட அந்த கண்ணீரில் அமுங்குகின்றது.

என்மனம் உயிர்பிரிந்த உடல்போல் ஏதுமற்று கிடக்கின்றது, அதுபட்டுப்போன மரம்போல் ஆகிவிட்டது, தனித்த இந்த காட்டில் துறவு கோட்டைக்குள் ஆசையற்று தவம் செய்யும் என் நிலையே இப்படியென்றால் சாமான்ய மாந்தரின் நிலை என்ன? பாசம் இவ்வளவு பொல்லாததா?

பாலை நிலமான இந்த துறவுமனதிலே பாச போராட்டம் இப்படி என்றால், நன்செய் நிலத்தில் வளர்ந்த விளைச்சல் போன்ற சாமானிய குடும்பப்பெண் பிரியும் பாசப்போராட்டம் எப்படி இருக்கும்? இந்த பாசத்தின் வலியினை இப்போதுதான் உணரமுடிகின்றது, அது எவ்வளவு வலிமிக்கது? எப்படி அந்த பிரிவினை தாங்குவார்கள்?

அங்கே தோழியர் சொன்னார்கள், “அன்புகொண்ட சகுந்தலையே அழகான ஓவியம் போல் ஒப்பனை செய்துவிட்டோம், இந்தக் காவிய பட்டாடை அணிந்து இன்னும் அழகு சேர்ப்பாய்”

சாகுந்தலை மகிழ்வுடன் அந்தப் பட்டாடை அணிந்து வந்தாள், வந்தவளை கௌதமி அழைத்து கன்வரிடம் ஆசிவாங்க சொல்கின்றார்.

“சாகுந்தலை, தன் பேரின்பத்தை உன் உருவில் காணும் தந்தையினை பணிந்து நல்லாசிகள் வாங்கிடுவாய்” என்றாள்.

நன்றாக முதிர்ந்த வாழைப்பூ வளைதல் போல குனிந்த சாகுந்தலை சொன்னாள், “அன்னைக்கும் அன்னையான தந்தையாரே, உங்கள் இணையடிகளை வணங்குகின்றேன்”

கன்வர் கைகளை உயர்த்திச் சொன்னார், “அன்று விருஷபர்வா மகளாய் வந்தவளும் தேவயானையினை விட அழகானவள் என பெயர்பெற்றவளான சர்மிஷ்டை இமயமலை போல நின்ற யயாதி மன்னனை மணந்து புருவரஸ் எனும் மகத்தானவனை மகனாய் பெற்றதுபோல் நீ உலகெல்லாம் செங்கோல் செலுத்தும் மகனை பெறுவாய்”

“இது வாழ்த்துமட்டுமல்ல வரம், பெரும் வரம் அருளினார் முனிவர்” என்றார் கௌதமியார்.

கன்வர் அங்கே யாகநெருப்பை மூட்டினார், அதன்பின் சொன்னார், “மகளே, இந்தப் புதுவேள்வி நெருப்பினை வலமாய் சுற்றிவா”

அப்படியே அடிநடந்தாள் சாகுந்தலை. சில மந்திரங்களை சொல்லிவிட்டு சொன்னார் கன்வர், “தர்ப்பை புல்லை சுற்றிவைத்து இந்த யாகக்குழியில் தூய்மையான விறகுகளும் மணமான பண்டங்களும் கொண்டு வளர்க்கப்பட்டு இந்த யாக நெருப்பின் பலன் உன் தீவினை போக்கி உன்னை தூய்மைப்படுத்தி காவலிருக்கட்டும்.

இனி நீ புறப்படலாம், சாரங்கன் எங்கே? அவனும் இன்னும் சிலருடன் நீ கிளம்பலாம்”

“இதோ நாங்கள் இங்கிருக்கின்றோம் “என்றான் சாரங்கன்.

“சாரங்கா, உன் தங்கை படியேறி படியேறி மேலே செல்லப் பார்க்கின்றாள், நீ அவளுக்கு நல்ல பாதை காட்டி செல், இருளான பாதைவிட்டு ஒளியான வழியில் அழைத்துச் செல். அவள் உன்னை பின் தொடர்ந்து வரட்டும்”

“அப்படியே ஆகட்டும் முனிவ” என்றபடி சாகுந்தலையினை அழைத்துக் கொண்டு சென்றான் சாரங்கன்.

பசும்கன்று ஒன்று தன் வீட்டை விட்டுச் செல்வது போல் சாகுந்தலை செல்ல தோழியர் இருவரும் மரத்தில் சாய்ந்து கலங்கினர்.

தவமுனிவரும் பந்தபாசங்களை கடந்தவர் எனக் கருதப்பட்ட கன்வரும் கலங்கினார், அந்த வலி தாளாமல் சொன்னார்.

“தேவதைகள் தங்கியிருக்கும் மரங்களே, இந்த கானக தருக்களே, உங்கள் சிலையழகி சாகுந்தலை செல்கின்றாள், இரவும் பகலுமாய் உங்களுடன் இருந்தாளே அந்தச் சாகுந்தலை பிரிந்து செல்கின்றாள்.

உங்களுக்கு நீரில்லா நாளில் தானும் நீர் அருந்தாமல், உங்களுக்கு நீருற்றுமுன் தான் அருந்தாமல் உங்களோடு தவித்தபடி உறவாடி வளர்ந்தாளே அந்தச் சாகுந்தலை போகின்றாள்.

கிள்ளி எடுக்க விருப்பமிருந்தும் உங்கள் இளந்தளிரை தொட்டால் உங்களுக்கு வலிக்குமென தடவிச் சென்றாளே அந்த சாகுந்தலை போகின்றாள், அவளுக்கு விடை கொடுங்கள்.

மலர்ச்செடிகளே கொடிகளே, நீங்கள் பூ பூக்கும் நாளிலெல்லாம் பெண்மை அடைந்தீர்கள் என உங்களுக்கு விழா கொண்டாடி உங்களில் ஒருத்தியாக இருந்தாளே அந்த சாகுந்தலை செல்கின்றாள் விடை கொடுங்கள்.

தன் கணவன் வீட்டுக்கு செல்லும் அவளுக்கு விடைகொடுங்கள்.

ஓ நதியே, அவளை தாலாட்டி சீராட்டி வளர்த்தாயே. அவளுக்கு தாயாய் விடைகொடுப்பாய். தாவி வந்த மான்களே, ஆடிவந்த மயில்களே, உங்களில் ஒருத்தியான சாகுந்தலை பிரிகின்றாள் தெரியுமா? கலங்காதீர்கள்.

அவளுடன் போட்டியிட்டு பாடி நின்ற குயில்களே அவளுக்கு விடைகொடுங்கள்.

எல்லோரும் அவளுக்கு விடை கொடுங்கள், நானும் கொடுக்கின்றேன் வாருங்கள். எல்லோரும் சேர்ந்து விடையளிப்போம்.

அந்தப் பரம்பொருள் சொர்க்கம் தன்னை வானில் வைத்தான். நரகம் தன்னை மண்ணுக்கு கீழே வைத்தான். ஆனால், இன்று இரண்டையும் என் நெஞ்சில் ஒருசேர வைத்துவிட்டான்.

நான் வளர்த்தகிளி அடியொன்று எடுத்துவைத்தபோது என் மனதிலே இரண்டையும் வைத்துவிட்டான், மகிழ்ந்து கொண்டே அழுவேனா? அழுதுகொண்டே மகிழ்வேனே? நான் என்ன செய்வேன்?

மரங்களே, நதியலையே, மலர்களே செடிகொடியே, மான்களே மயில்களே என்னைப்போல் கலங்கிநிற்கும் எல்லாமுமே வாருங்கள். அவளுக்கு விடைகொடுப்போம்”

அவர் சொல்லி முடிக்கவும் ஒரு குயில் சோகமாய் கூவிற்று.

“இந்தப் பெரும்காட்டின் சார்பாய் அதன் வாயாய் பாடி வழியனுப்புகின்றாய் குயிலே” எனச் சொல்லி முனிவர் கலங்கும் போது அசரீரி மீண்டும் சொன்னது.

“அவளை வரவேற்க செல்லும் வழியோரம் தடாகங்களில் தாமரை பூக்கட்டும், சூரியன் அவளை வருத்தாதபடி நிழல்மரங்கள் குடையாகட்டும்.

அவள் பாதம் வருந்தாமல் வழியெல்லாம் பூந்தாது பாதையில் குவியட்டும், திருமகளாய் செல்பவளை இயற்கைத்தாய் வரவேற்கட்டும்”

(தொடரும்..)