காளிதாசனின் சாகுந்தலம் : 13
காளிதாசனின் சாகுந்தலம் : 13
( சாகுந்தலை அந்தத் தவக்குடிலை விட்டு துஷ்யந்தன் அரண்மனை நோக்கிச் செல்லும் அந்தப் பிரிவு காட்சி சொல்லப்படும் இடம் இது. )
கௌதமி சொல்கின்றார், “இல்லறத்தின் எதிர்பதமாய் இருக்கும் இந்த துறவியர் குடிலின் கூட்டத்தில் இருந்துச் செல்கின்றாய்.
இந்தக் குடிலின் துறவியரும் இந்த மரம், செடி கொடி என எல்லாமும் உனக்கு விடைதருகின்றன சாகுந்தலையே, அவைகளுக்கெல்லாம் விடை சொல், உன் பிரிவால் நாங்கள் மட்டும் வாடவில்லை”
சாகுந்தலை கலங்கிய மனத்தோடு விம்மிய நெஞ்சத்தோடு தன் தோழியரை சற்று தள்ளி அழைத்துச் சென்று சொன்னாள்.
“இந்த அன்பு உறவினை பிரிந்து என் அன்பருடன் கூடிவாழ செல்கின்றேன். ஒரு பக்கம் அவருடன் கூடிவாழும் ஆவல், இன்னொரு பக்கம் உங்களைப்பிரியும் வலி.
அடியெடுத்து வைக்க முயல்கின்றேன், என் கால்விரல்கள் கணுக்காலை முறித்தது போல் தடுமாறுகின்றேன்.
என் கால்கள் கூட மனம் போல் குழம்புகின்றது, வலது காலை முன்னால் வைத்தால் இடது கால் பின்னால் இழுக்கின்றது, அவர் முகம் நோக்கி வலது காலை வைத்தால் என் முதுகு நோக்கி இடது கால் செல்கின்றது நான் என்ன செய்வேன்?”
சொன்னவள் கலங்கி ப்ரியம்வதை தோளில் சரிந்தாள். விம்மல் கேட்டது.
அவள் தலைதடவிச் சொன்னாள் பிரியம்வதை.
“துறவியர் குடிலை துறந்து செல்லும் தூயவளே, நீ மட்டுமா அழுகின்றாய்? உன்னை பிரியும் வேதனையில் இந்தக் குடில் முழுக்க கண் கொண்டு அழுகின்றது.
இந்தக் குடிலின் மான் கூட்டங்கள் கூட கடித்த துளிர்புல்லை முழுக்க உண்ணாமல் பாதி கீழே சரிய கலங்கி நிற்கின்றன.
உன்னைக் கண்டால் ஆர்ப்பரித்து ஆடும் மயிலெல்லாம் நீலம் நிறைந்த தங்கள் கண்களில் சோகம் பொங்க தோகையினை ஒடுக்கி சோர்ந்திருக்கின்றன.
நீ வளர்த்த செடிகொடிகளெல்லாம் உன் பிரிவினை கண்டு கலங்கி இலை பழுத்து உதிர்ந்து வருந்தி நிற்கின்றன”
சொன்னவளும் வார்த்தை முடியும் முன் கலங்கினாள்.
“சாகுந்தலை” என உடைந்த குரலில் சொன்னார் கன்வ முனிவர், நேரமாகின்றது என அதற்கு பொருள்.
“அப்பா,என்னுடைய தங்கை போல் அழகுற வளர்ந்ததும், நான் பாசமாய் வளர்த்ததுமான மல்லி கொடியிடம் சொல்லிவிட்டு வரட்டுமா?” என்றாள்.
உதட்டினை கடித்து தலையாட்டி சொன்னார், “அன்பான என் பிள்ளாய், உன் பாசத்துக்குரிய கொடி அது என்பது எனக்குத் தெரியாதம்மா, தெற்கு பக்கம் உனக்காக எதிர்பார்த்து தலையாட்டும் அந்தக் கொடியிடம் சொல்லிவிட்டு வா”
சாகுந்தலை அந்தக் கொடிநோக்கி சென்றாள், அந்த கொடி மாமரத்தை தழுவி சுற்றி வளரத் தொடங்கியிருந்தது.
அதன் அருகில் சென்றவள் அதன் தளிரைத் தொட்டு தன் முகத்தோடு அணைத்தபடி சொன்னாள்.
“எழில்மிகுந்த இந்த மாமரத்தை தழுவி கொள்ளும் பக்குவம் பெற்றுவிட்ட என் தங்கையே, உனக்கோர் இடம் கிடைத்துவிட்ட மகிழ்வில் நான் கிளம்புகின்றேன், கொஞ்சம் இந்த மரத்தைவிட்டு என்னை தழுவிக்கொள், நான் சென்றபின் இதனோடுதானே வாழப்போகின்றாய்” என்றவள் அதனை தன் கழுத்தோடு கட்டிக் கொண்டு, அந்த மரத்தை ஒரு கையால் தடவிக் கொண்டு அழுதாள்.
பின் மெல்ல மூச்சை உறிந்தபடி தன் முகம் இன்னும் சிவந்தபடி அந்த அருமல்லி கொடியினை மரத்தில்சுற்றிவிட்டு மரத்தை ஒருமுறை மெல்ல தட்டிவிட்டு வந்தாள்.
கன்வ முனி சொன்னார், “அழாதேம்மா, நல்ல வினையின் பயனாகத்தான் துஷ்யந்தன் உன்னை தேடிவந்தான் கணவனுமானான், அந்த நல்விதி பெற்றவளே முகத்தில் புன்னகையோடு இரு.
நீ வளர்த்த முல்லைக் கொடி கூட நல்ல துணையினை பெற்றிருக்கின்றது, அப்படியே உனக்கும் வாய்த்திருக்கின்றது எனும் செய்தி என் துயரத்தை ஒழித்துவிட்டதம்மா”
வளர்த்த தந்தையின் நிறைவினை விட மகளுக்கு என்ன வேன்டும். கன்வமுனி அவளின் பிரிவுத்துயரை மாற்றும்படி பேசியதை அவள் புரிந்து மெல்ல சிரித்தாள்.
பின் தோழியர் இருவரையும் அழைத்துச் சொன்னாள்.
“என் இருவடிவமாக என்னையே நான் பார்க்கும் தோழியரே, இந்த மல்லிச்செடியினை உங்களுக்கு கொடுக்கின்றேன், பெற்றவள் தன் குழந்தையினை இன்னொரு பெண்ணுக்கு தத்துகொடுப்பது போல நான் உங்களுக்கு இதனை கொடுக்கின்றேன், நன்கு வளருங்கள்”
அனுசுயை சொன்னாள், “சாகுந்தலை நீ அன்பு வைத்த மல்லிக் கொடியினை எங்களிடம் கொடுத்துவிட்டாய், உன்மேல் அன்புவைத்த எங்களை யாரிடம் உன்னால் கொடுக்க முடியும்?”
சொன்னவள் அடக்கமுடியாமல் அழ அந்த இருவரையும் அணைத்து மீண்டும் அழுதாள் சாகுந்தலை. மழைக்காலம் போல அவள் கண்கள் அடிக்கடி கசிந்தன.
கன்வர் அவர்கள் அழுகையினை கண்டு சொன்னார், “அனுசுயை அழாதே, அழுகையினை நிறுத்து. நீதானம்மா அவளுக்கு ஆறுதல் சொல்லவேண்டும், நீயே கல்பட்ட மண்குடம் நீரை சிந்துதல் போல் உடைந்து அழுதால் எப்படி?”
தங்கள் முகத்தினை ஆடையால் துடைத்து சாகுந்தலை முகத்தையும் துடைத்து அவள் தலைமுடியினை சரிசெய்து மெல்ல புன்னகைத்தனர் இருவரும், மேகத்தின் பின்னால் மங்கிய நிலா போல் சாகுந்தலையும் புன்னகைத்தாள்.
பின் கன்வமுனி நோக்கி சொன்னாள், “அப்பா, கருசுமந்து மெதுவாய் செல்லும் அந்த கலைமான் கன்று ஈன்றவுடன் செய்தி அனுப்புவீர்களா, தாயும் கன்றும் நலம் எனும் செய்தி கேட்டால் நிம்மதி அடைவேன்” என்றாள்.
தாயில்லா தன்னை தான் வளர்த்த கதையினை அவள் சொல்லிக்காட்டும் விதம்பற்றி புன்னகைத்த கன்வர் சொன்னார், “கண்டிப்பாக மறக்காமல் சொல்வேனம்மா”
சாகுந்தலை புன்னகைத்து கிளம்ப தயாரானாள், எல்லோரும் தயாரானார்கள். கௌதமியும் பலரும் மூட்டை முடிச்சுகளுடன் தயாரானார்கள், சாகுந்தலை ஒரு அடி எடுத்து வைத்த போது யாரோ தன் சேலையின் அடிபாகம் பற்றி இழுத்து நிறுத்துவதை உணர்ந்து திரும்பிப்பார்த்தாள்.
கன்வர் சொன்னார், “சாகுந்தலை, மான்போன்ற நீ மேலான அன்போடு கொஞ்சி வளர்த்த மான்குட்டி செய்கையம்மா அது, உன்னை தடுக்கின்றது.
செந்நிறத்தில் அந்த வானம் விரிந்துகிடக்கும் நேரம் விண்மீன்கள் பூத்து கிடக்கும் கோலத்தை தன் தோலாக கொண்ட அந்த புதிய மான்குட்டி உன் சேலை பற்றி இழுக்கின்றது.
தாயை பிரிந்து கிடந்த அந்த பச்சிளமான் குட்டியினை தாயினை போல வளர்த்தாய் அல்லவா?
அது பால்குடிக்கும் பருவம் என்பதால் கிண்ணத்தில் பால்வைத்து, பஞ்சிட்டு நனைத்து அதன் வாயில் பிழிந்து பசியாற்றி வளர்த்தாய் அல்லவா?
அது வளர்ந்து வெட்டுக்கிளி போல் துள்ளும் பருவம் அடைந்து துள்ளிய போது, விளைச்சலுக்கு முந்திய மென்மையான பிஞ்சி நெல்லை அதன் வாயின் அருகே வைத்து உண்ண பழக்கினாய் அல்லவா?
அதன் ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு முத்தமிட்டு வளர்த்தாய் அல்லவா?
மென்மனம் படைத்தோர்க்கு, பொல்லாரின் வன்சொல்லால் மனக்காயம் வருதல் போல், தர்ப்பைபுல் அந்த மானின் வாயினில் காயம்பட்ட காலத்தில், நல்லோரின் மனக்காயத்தை இன்சொல்லால் ஆற்றுதல் போல் அந்த மான் வாயின் காயத்திற்கு மருந்திட்டு நெய்தடவி புண்ணை ஆற்றினாய் அல்லவா?
அந்த மான் உன்னை போகவிடாமல் பிடித்து இழுக்கின்றது, தாயினை எந்த மான்குட்டி தானே பிரிந்துவிடும்?”
அதுவரை கார்மேகம் போல் இறுக்கமாயிருந்த சாகுந்தலை அதற்குமேல் முடியாமல் வெடித்து அழுதாள், அதை பிடித்து முத்தி முத்தி அழுதாள்.
“என் மகளே, என் செல்லமே ஏன் என் சேலை பற்றி இழுக்கின்றாய்? ஏன் பின்னால் வருகின்றாய்? நானே உன்னைவிட்டு செல்கின்றேன், நான் போகின்றேன், கல்மனதோடு செல்லும்போது நீ ஏன் என்னை தடுக்கின்றாயடி.
அன்று உன் அன்னை உன்னை ஈன்றதும் இறந்துவிட்டாள், நான் உன்னை அன்னையாய் வளர்த்தேன் என்பதற்கா விடாமல் இழுக்கின்றாய்?
என் செல்லமே, என் கண்ணே நான் உன்னோடு இருக்கவேண்டுமா, நான் உனக்கு வேண்டுமா, சொல்லடி என் பிள்ளாய்..
நான் இல்லாவிட்டால் என்னடி இந்த அப்பா உண்டு.. நான் இல்லாவிட்டால் என்னடி இந்த அன்னையர் உண்டு..” என சொல்லும் போது அந்த மானின் முகத்தை கண்டவள் அதற்கு மேல் சொல்லமுடியாமல் ‘ஓ’ என அழுதாள்.
அழுதபடியே சொன்னாள் “போ, சென்றுவிடடி என் மகளே, நான் இல்லாவிட்டாலும் உன்னை இந்த குடில் காக்கும்” என்றவள் கொஞ்ச நேரம் மூச்சும் பேச்சுமின்றி சிலையாய் நின்றாள்.
கன்வமுனி தொடர்ந்தார், “நான் இல்லாவிட்டாலும் அதனை இங்கு எல்லோரும் காப்பார்களம்மா, நீ நட.
கண்களில் நிறைந்த நீர் , கண்களில் கொட்டும் நீர் பாதையினை எப்படி காட்டும் மகளே, கண்களை துடைத்துக் கொள். கண்ணீல் நீர் வருவது நிற்க கவலையினை விடு, மேடுபள்ளம் பார்த்து செல்லும் நேரம் சரியாக பார்க்கவேண்டும் மகளே…
சார்ங்கரவன் சொன்னான், “இந்த குடில் விதிப்படி இங்கு வந்து செல்வோரை வழியனுப்ப எல்லோரும் நீர் உறங்கும் படுக்கையான அந்த ஏரிவரை வரலாம், அதனால் நீங்களும் ஏரிவரை வந்து எங்களை வழியனுப்புங்கள், நல்ல நேரம் வந்துவிட்டது அது கடப்பதற்குள் கிளம்பவேண்டும், சொல்லவேண்டியது இருந்தால் சொல்லுங்கள்”
அதோ அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து பேசலாம் எனச் சொன்ன கன்வர் தொடர்ந்தார்.
“இந்த ஆலமரம் எப்படியான இல்லறத்தை உணர்த்துகின்றது, இளமையில் வேரூன்றி பருவமெய்தி, கிளைபரப்பி , கனிகொடுத்து பறவைக்கும் பல உயிர்க்கும் அடைக்கலமாய் நின்றுகொண்டு, விழுதுகளால் தாங்கப்படும் அந்தமரம். மானுடர் குடும்பமாய் வேரூன்றி பந்தமாய் கிளைபரப்பி சந்ததி பெருக்கி பந்தங்களுக்கும் மக்களுக்கும் அடைக்கலமும் ஆதரவும் கொண்ட வாழ்வு வாழ்ந்து, பல்லுயிர்க்கும் அடைக்கலமாகி, பாச விழுதுகளால் தாங்கப்படவேண்டும் எனும் பெரும் தத்துவம் சொல்வதன்றோ”
அப்படி சொன்னவர் சாகுந்தலையினை கண்டு தனக்குள் சொல்லிக்கொண்டார்.
“இவளை நான் என்ன சொல்லி அனுப்புவேன், இவள் மனக்குகையில் இருக்கும் காதல் கண்டு தன்மேல் மணமாலை சூட்ட சொல்வானா?
இல்லை இறந்தவர்க்கு இடப்படும் மலர்போல் இவள் கொட்டும் அன்பு மலர்பற்றி அறியாமல் இருப்பானா? அவன் மன்னன், அவன் எடுப்பதே முடிவு என்பதால் யோசிக்கின்றேன்”
சொன்னவர் வானம் பார்த்து வேண்டிக்கொண்டார்.
சாகுந்தலை அந்தத் தடாகத்தை கண்டாள். அங்கே ஒரு அன்றில்றபறவை தாமரையின் அருகில் சோசமாக அமர்ந்திருந்தது, மாலையாகி இரவான நேரம் என்பதால் தாமரை மொட்டு மூடியிருந்தது.
அந்தக் காட்சியினை கண்டு அப்படியே நின்றிருந்த சாகுந்தலையிடம் சொன்னாள் அனுசுயை.
“சாகுந்தலை அதோ அந்த ஆண்பறவை தன் துணைக்காக காத்திருக்கின்றது, இந்த தாமரை மொட்டு சூரியனுக்காய் காத்திருக்கின்றது.
அன்பரே எங்கே, அன்பரே எங்கே என இவை பாடும் சோக கீதம் உனக்கு கேட்கவில்லையா?
இந்த இரண்டுமே காலை வரும், அப்போது தன் துணைவரும் என இந்தக் காரிருள் பிரிவினை தாங்கி நிற்கின்றன.
இதே துயர்தான் அந்தப் பறவையின் பெண் துணைக்கும், தாமரையின் காதலனான சூரியனுக்கும் இருக்கும், துயர் எல்லோருக்கும் பொதுவானது.
என் அன்பே அந்த அன்றில் பறவை போல் துயர் கொள்ளாதே, உன் கணவர் உன்னைக் காட்டிலும் பெரும் துயரில் உன்னைத் தேடிகொண்டிருப்பார். தனித்து கொடும்பாலையில் இடப்பட்ட வன் கால் வெந்து குமுறி கொதிப்பது போல அவரும் உன்னைத் தேடி மனநெருப்பால் உடல் மெலிந்திருப்பார்.
பிரிவென்னும் துயர் இடிபோல வீழ்ந்து பெரும் துன்பம் தரும், அந்த இடி எனும் துன்பத்தை கோபுரத்தில் வைக்கப்பட்ட இடிதாங்கி போல் நம்பிக்கை எனும் ஆயுதத்தால் தாங்கிக் கடக்க வேண்டும்.
துயரமும் பிரிவும் சாகடிக்கும் இடி, நம்பிக்கை அந்த இடியினை தாங்கி வாழவைக்கும் மருந்து, நம்பிக்கை கொள்”
சாகுந்தலை கொஞ்சம் ஆறுதல் கொண்டாள்.
கன்வர் சொன்னார், “சார்ங்கரவா சாகுந்தலையினை மன்னனிடம் தகவாக சேர்த்தபின் நான் சொன்ன சீர்மிகு மொழிகளையெல்லாம் சொல்வாய்.
சாரங்கன் சொன்னான், “சொல்லுங்கள்,நான் அதை அப்படியே அங்கு சொல்வேன்”
நாம் மற்றவர்களை போல புலனடக்கிய துறவியர் அல்ல, ஞானயோக நெருப்பால் புலன்களை அவித்து போட்ட சிறந்த தவசிகள் என்பதை சொல்.
நாம் ஐம்புலனை வென்றடக்கி ஆசையெனும் அரும்பகையினை விரட்டிவிட்டு ஞான செங்கோல் கொண்டு கருணை எனும் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு உலகோர்க்கெல்லாம் இம்மை மறுமைக்காக அந்த வரம் அருள்வதற்காக அருளாட்சி செய்பவர்கள் என்பதை தெளிவாக சொல்.
தேவர்களுக்குள் சிறப்பானவராக திருமால் இருப்பது போல் மன்னர்களுக்குள் சிறந்த மன்னராக நீர் இருக்கின்றீர் என நாம் சொன்னதையும், எத்தனையோ மன்னர் குலமிருக்க மேன்மையிலே சிறந்த குலம் உமது குலமென எல்லோரும் சொல்வதையே நானும் சொன்னேன் எனச் சொல்.
இந்த சாகுந்தலை உறவினர் வழியாக பேசி மணமுடித்து மனைவியாகாமல் மிகுந்த அன்பால் காதலால் களவுவழி மனைவியானாள் என எண்ணாமல் மனைவிக்குரிய பெரிய இடத்தை மனதிலும் அவையிலும் போற்றிவைக்க வேண்டும். மிகுந்த புகழில் அவளை வைத்து அறத்தில் சிறந்தவள் என அவளை வைக்க வேண்டும் எனச் சொல்.
சகுந்தலை தனக்குள் சொன்னாள், “அற்ம்வாய்ந்த தந்தை தகமையாய் சொன்னார். மிகுந்த பாசமான சொல் எவ்வளவு பெரியது. சாதாரண பெண்ணான என்னை எவ்வளவு பெரிய இடத்தில் வைத்து சொல்கின்றார்? அந்த அரண்மனையில் ராணியாக வாழச் சொல்கின்றார். புகழோடும் பெருமையோடும் வாழச் சொல்கின்றார், எவ்வளவு பேறுபெற்றவள் நான்?, வளர்ப்பு மகள் என்றாலும் அவர் என்மேல் காட்டும் அன்பு பெற்ற மகளை விட மேலானதன்றோ?”
கன்வர் தொடர்ந்தார், “நான் சொன்னதை எல்லாம் சொல்லி அவளை தன் உயிர் போல் போற்றிவரச் சொல்.
பிருகுமுனிவர்க்கு மகளாய் பிறந்தவள் அந்தத் திருமாலுக்கு துணையுமானாள். பெரும் மேன்மை, தவப்பேறு, தனிதலைமையெல்லாம் அவளாலேதான் திருமால் பெற்றார் என்பதை அரசன் மனம் பதியும்படி கூறு.
மன்னர் சொல் என்றால் சகுந்தலை பொருளாகட்டும், மன்னர் மரமென்றால் அவள் கொடியாகட்டும்.
மன்னர் தன் உருவை பெண்ணுருவாக மாற்றினால் எந்த பெண் உருவமோ அதுதான் சகுந்தலையாக இருக்கவேண்டும் என அழுத்தி கூறு.
நல்வினையும் தீவினையும் அமைந்த வாழ்வில் நாள்தோறும் விதி பகடைக்காய் உருட்டும், அதன் வழிதான் வாழ்வும் நடக்கும், விதி பகடையும் நல்வினையும் சரியாக விழுந்தால் எல்லாம் நலமாகும், இல்லை துயர் மிஞ்சும்.
விதிப்படி வாழ்வு வெல்லட்டும்”
என்றவர் பெருமூச்சுவிட்டு சொன்னார், “பெண்ணை வளர்த்தவன் வேறு என்ன சொல்ல முடியும்? இதற்கு மேல் என்ன சொன்னாலும் தவறாகிவிடுமே”
கன்வமுனி தொடர்ந்தார், ” என் அறிவுள்ள நன்மகளே, காட்டினிலே வாழ்ந்தாலும் நாட்டின் எல்லா அசைவுகளும் அறிந்தவள் நீ, அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கின்றாய்.
இதெல்லாம் பெண் வாழ்வில் விதிக்கப்பட்டது என்பதை அறிந்து மைதீட்டிய உன் கண்கள் மனத்துயரின் வலியில் வியர்த்துவிடாமல் பார்த்துக்கொள்”
சாரங்கன் சொன்னான், “அறிவுடையார் எல்லாம் அறிவர் முனிவ, சாகுந்தலையும் அனைத்தும் அறிந்த அறிவுடையள்”
கன்வர் இன்னும் தொடர்ந்தார், “ஆழகான அகல்விளக்கு என்றாலும் முறையான தூண்டுகோலின் துணையும் அவசியம், சகுந்தலை அந்த மாளிகைக்குள் நீ முப்பெரும் தேவியரின் குணத்தோடு நடந்துவருவாய், மூவர் அருள் உன்னை காக்கட்டும்.
மூத்தோரை மதித்து போற்று, தெய்வம் போல் தொழுது போற்று.
முழுமதியான சந்திரனுக்கு பல நட்சத்திரங்கள் உண்டெனினும் அவன் மனதுக்கு உகந்த ரோகிணி போல் மனதோடு இணைந்து வாழ்வாய்.
(சந்திரன் ரோகிணியில்தான் உச்சமடையும்)
மன்னனின் தொழில் பெரிது, அந்த மன்னனின் மாளிகையில் பெண்கள் பலர் இருப்பர், எல்லோருக்கும் குளிர்முகமாய் உன்னின் வடிவமலர்கள் என்பதை , பல உருவாய் இருப்பவர்கள் நீயே என்பதை எண்ணிக்கொள்.
ஆயுதம் செய்பவர்கள் இரும்பினை கொதிக்கும் தீயில் இடுவார்கள். பின் குளிர்ந்த பனிநீரில் குளிர்விப்பார்கள், சுடும் நெருப்பும் குளிர்நீரும் மாறி மாறி படுவதனால் ஆயுதம் வலிமையாகும்.
அப்படியே இன்பம் துன்பம் மாறி மாறி வருவதனால் வாழ்வு வலிமையாகும் மனம் இரும்பாகும் என்பதை மறக்காதே.
கணவன் கோபப்பட்டால் பதிலுக்கு கோபபடாதே, அந்த கோபத்தை அன்பால் மாற்று. ஏவலர்களும் சொந்தமும் கலங்கி நின்றால் மனம் இறங்கி வள்ளலாய் மாறிவிடு.
மகளே, அரண்மனையின் திரண்ட செல்வத்தால் அகந்தை வந்தால் உன் தகப்பன் ஒன்றுமில்லாதவன் என்பதை உணர்ந்து அதை அகற்று.
நற்குணம் கொண்டவளே இல்லத்தின் எழில் அரசி, அப்படி அல்லாதவள் குலத்துக்கு நோயாவாள்.
இன்னும் சில மொழிகள் சொல்வேன் என்மகளே கேளாய்.
சொர்க்கத்தின் நரகத்தின் சாவி எல்லாம் மனதில்தான் உள்ளதம்மா, நல்ல மனம் சொர்க்கத்தின் சாவி கொண்டிருக்கும், பொல்லா மனம் நரகசாவி கொண்டிருக்கும்.
என் மகளே, என் வளர்ப்பே, என் பெருமையே, என் கண்ணே நீ நல்மனதின் சாவிமட்டும் வைத்திரு, பொல்லா மனச் சாவியினை தூர எறிந்திடு.
தாயில்லா பிள்ளையென நீ வளர்ந்த குறை உண்டு, தாயாக நான் நின்ற காரணத்தால் இந்தமொழிகளை சொல்லிதந்தேன் என் தவமே, நான் சொல்லமறந்த வார்த்தைகளை இனி கௌதமியாள் சொல்வாள்”
சொன்னவர் தான் ஒரு துறவி என்பதையும் தாண்டி கண்கள் பனித்தன, அவரின் கண்ணீர் மரம் நிறைந்த வனத்துக்குள் ஓடும் மழைநீர் போல தாடிக்குள் ஓடியது.
கௌதமியார் தொடர்ந்தாள், “எங்கள் பெருமையான சகுந்தலையே நீ அறியாதது அல்ல, உலகில் நடவாததுமல்ல.
குடும்பத்தில் ஆண்குழந்தைதான் பிறந்த வீட்டில் வாழ பிறந்தவர்கள், பெண்கள் கணவன் வீடு செல்லும்வரை தற்காலிகமாக அங்கு வாழ்பவர்கள், அவர்கள் பயணிகள், அந்தப் பயணிகள் செல்லவேண்டிய இடம்பற்றியும் , அங்கே நடக்கும் முறைபற்றியும், வழி பயணம் பற்றியும் சொல்லவேண்டியதெல்லாம் முனிவர் சொன்னபின் நானும் சொல்ல என்ன இருக்கின்றதம்மா”
கௌதமியாள் சொல்லிவிட்டு பொங்கிவந்த சோகத்துடன் முகத்தை வேறிடம் திருப்பிக்கொண்டார்.
அந்நேரம் அனுசுயையினையும் பிரியம் வதையினையும் ஓடிவந்து கட்டிக்கொண்டாள் சகுந்தலை, அருகே நின்ற கன்வரை பார்த்து சொன்னாள்.
“அப்பா.. நான் இவர்களை பிரிந்து செல்லத்தான் வேண்டுமா? காட்டில் வேடர்கள் வேட்டையிலே வீழ்ந்த மானை உயிரோடு தோல்தனியே சதை தனியே பிரிப்பார் எனக் கேள்விபட்டிருந்தேன்.
இன்று நான் அந்த மானாகிவிட்டேன்”
கன்வமுனி சொன்னார், “கண்ணே கலங்காதே, உனக்கு மணவாழ்வு கூடிவந்த காலகட்டம் நீ பிரிந்து சென்றுதான் ஆகவேண்டும், கணவனோடு மகிழ்ந்திருக்கும் நிலையினை அடைந்துவிட்டாய், இவர்களும் அதே நிலை அடைந்துவிட்டார்களம்மா.
இவர்களும் கணவன் வீடுசெல்லும் காலம் வந்துட்டதல்லவா? அதை மறந்தாயோ?
பொங்கிவரும் நதி ஒரு இடத்தில் பல கிளையாய் பிரிதல் உண்டு, நிலம் செழித்து பயிர்செழித்து உயிர்கள் வாழ அப்படி பிரியும் அல்லவா? அது நன்மைக்கான பிரிவு, அப்படி உங்கள் பிரிவும் பலர் வாழ என்பதை புரிந்துகொள்ளம்மா.
இவர்கள் உன்னோடு வருதல் இயலாதம்மா, அதை ஏற்றுக்கொள்ள முடியாதம்மா. தாய்போன்ற இந்த கௌதமி உன்னோடு சிலகாலம் தங்கியிருப்பாள்”
சகுந்தலை தாளமுடியா துயரில் ஓடி சென்று கன்வ முனிவரை குழந்தைபோல் கட்டிக்கொண்டு சொன்னாள்.
“அப்பா, அரைக்க அரைக்க மணம் தரும் சந்தனமரக்கன்று இன்னொரு சந்தனமரக் கன்றின் துணையால் வேராலும் நீராலும் உரத்தாலும் வளரும்.
சந்தனகன்று ஒருகாலமும் தனித்து சரியாக வளராது.
என்னை உங்களோடு சந்தனமரமாக வளர்த்தீர்களப்பா, இப்போது என்னைப் பிடுங்கி வேறு இடம் அனுப்புகின்றீர்கள், அந்த மண்ணுக்கு இந்தமரம் பொருந்தி வாழுமா? இல்லை உலர்ந்து போகுமா? நான் அறியேனே….”
சொன்னவள் பெரிதாய் கலங்கி ஓலமிட்டாள், பதறி சொன்னார் கன்வமுனி.
“பயந்துவிட்டாயே என் சிறுமானே, கலங்காதே அஞ்சாதே.
ஆழகடலை தேடித்தான் நதி இந்த மலையில் இருந்து செல்லும், அது செல்வதற்கு கரைகள் உண்டு, வழிகள் உண்டு. கடைசியில் நதி கடலை அடையும்.
நீண்டதூரம் செல்லும் ஆறு கடலை அடைந்து கலந்தபின் தான் கடந்த கரைகளை நினைப்பதில்லை, தான் ஓடிவந்த வயல்களை நினைப்பதில்லை, தன்னில் குளித்த மீன்கள் விளையாடிய பறவைகள் நீராடிய விலங்குகள், தன்னால் வளர்ந்த செடிகொடிகள் பற்றி நினைப்பதே இல்லை.
மாறாக தன் சுவை இழந்து கடலின் உப்புசுவைபெற்று கடல்நீராகவே மாறிவிடும், அக்கடலின் சிப்பிக்குள் முத்தைபெற்று பெரும் புகழ் பெற்றுவிடும்.
பெண்ணும் நதியும் ஒன்றல்லவா என் கண்ணே, அதனால் இந்த துயரெல்லாம் உனக்கு பின்னாளில் மறைந்தேவிடும், கணவன் குடும்பமென நீ மகிழும் நாளில் இதெல்லாம் ஒன்றுமில்லமால் ஆகிவிடும் , இந்த நாளையே நீ மறந்துவிடுவாயம்மா, அஞ்சாதே.
என் தவப்பலனே, பொன்மானே உயர்ந்த குலத்தில் பிறந்த மன்னனின் பெருமைமிகு மனைவியாவாய், மனையாட்டியென வாழ்ந்திருப்பாய்.
உன் பக்தியால், அறிவால், பண்பால், முதிர்ந்த பெரும் குணத்தால் கணவன் மனதிற்கு இனிதாய் பொருந்தி வாழ்வாய், நீ இட்ட கோட்டில் அவன் நடக்கும்படி செய்வாய்.
என் குலமகளே உனக்கோர் வாழ்த்து சொல்வேன்.
ஆழ்ந்த மாயை மனதை அறிவை காரிருளில் ஆழ்த்துதல் போல, பெரும் இருளில் மூழ்கி அஞ்சி கிடக்கும் மக்களை அதிகாலையில் பெரும் ஒளியுடன் வந்து எழுப்பி வாழ்வைக்கும் சூரியனாக, எல்லோர்க்கும் ஒளிகொடுத்து பகைஇருள் அகற்றி பிரகாசித்து ஜொலித்து அரசாளும் ஒரு ஆண்மகவு ஒன்றை ஈன்றெடுப்பாய்.
அந்நாளில் உனக்கு நாங்களெல்லாம் மறந்தே போய்விடுவோம், உன் குழந்தைமேல் கொண்ட கவனத்தில் எங்களையெல்லாம் சற்று கூட நினைந்துபார்க்கமாட்டாய்”
(தொடரும்..)