காளிதாசனின் சாகுந்தலம் : 14
காளிதாசனின் சாகுந்தலம் : 14
“நான் வளர்த்த சாகுந்தலையே, நீ என்னவெல்லாம் பெரும் சிறப்பும் புகழும் அடையவேண்டும் என நான் விரும்புகின்றேனோ அதைவிட மிகுதியாகப் பெற்று வாழ்வாயாக”
கன்வமுனி வாழ்த்தி விடை கொடுக்க, தாளாத சாகுந்தலை மறுபடியும் தன் தோழியரை நோக்கிச் சொன்னாள்.
தனித்தனி உருவம் என்றாலும், கங்கை யமுனா சரஸ்வதி நதிகள் ஒன்றாய்க் கலந்திடுவதை போல கலந்தே இருந்தோம், சூரியனார் கோவிலில் மூன்று தீபங்கள் ஒரே தண்டின் மேல் இருப்பது போல் சேர்ந்தே இருந்தோம்.
கலங்கிய சாகுந்லையினைக் கண்டு அனுசூயை சொன்னாள்.
சாகுந்தலை மூடுபனிக்குள் நடப்பவர்கள் முன்னால் செல்வோர் யார், பாதை எது எனத் தெரியாமல் கண்களால் பார்க்கமுடியாமல் முன் செல்வோர் குரலைக் கொண்டே அடையாளம் கண்டு செல்லல் போல, இந்த மோதிரம் உனக்கு உதவும்.
தவக்குடிலில் நல்லோரிடை வாழ்ந்தாலும் பாம்பின் விஷம் மாறுமோ? அது கடித்தால் தப்ப இயலுமோ? அந்தத் துர்வாசர் முனிவர் என்றாலும் அவர் கொடுத்த கொடுஞ்சாபம் பலித்துவிட்டால் என்ன செய்வாய்? அந்நேரம் துஷ்யந்தன் உன்னை மறந்திருந்தால் உன் உறவறிய இது உதவும், காரிருளில் வெளிச்சமாகும்.
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் கலங்கிய சாகுந்தலை சொன்னாள்.
எனக்கு இதயம் அந்த அனுசூயை, மூளை இந்தப் பிரியம்வதை. நீங்கள் இருவரும் கலங்கினால் வெறும் உடலான நான் என்ன செய்வேன்? நோயுற்ற ஒருவனைச் சோதிக்கும் மருத்துவன் இனி இவன் பிழைக்கமாட்டான் எனக் கைவிட்டால் நோயாளி எப்படிப் பதைபதைப்பான்.
அப்படிப் பதறுகின்றேன் நான் என்றாள்.
அனுசூயை பதறிச் சொன்னாள். ஆற்றுவெள்ளம் மிகுந்துவிட்டால் அது நாணலை ஆட்டுமன்றோ அப்படி அன்பின் வெள்ளத்தால் சொல்லிவிட்டோம், பிள்ளைமேல் கொண்ட அன்பால் அதற்கு உணவூட்டும் தாய் அன்பினால் மிகுந்து அதனை வருத்துதல் போல சொல்லிவிட்டோம்.
சாரங்கன் சொன்னான், பிரிவின் துயரால் எரியும் உங்கள் நெஞ்சம் போல் கதிர்வனும் கொதிக்கின்றான், அதனால் பாதையும் வெப்பமாகும், நெடுந்தொலைவு செல்லல் வேண்டிருப்பதால் கிளம்பினால் நன்று.
சாகுந்தலை மான்குட்டி போல் நடக்கத் தொடங்கினாள், பின் திரும்பி அந்தக் குடிலைக கண்டாள், தன் தகப்பனைக் கண்டு கேட்டாள்.
“அப்பா, இந்தக் தவக்குடிலை தவிர வேறேதும் அறியாதவள் நான், இனி எப்போது இதை மீளக் காண்பேன், எப்பொது வந்து வாழ்வேன்? மறுபடியும் மகிழ்வுடன் நான் இங்கு வாழும்காலம் வந்திடுமோ?
கன்வ முனி சொன்னார், “மகளே , எழில் கொண்ட திருமால் சொகுசாக சயனிக்கும் அந்த அனந்தனின் படுக்கை போல் விரிந்து பரந்துள்ள இவ்வுலகில் நீயும் துஷ்யந்தனும் வாழ்வாங்கு வாழ்ந்ததை காலமெல்லாம் சொல்லும்படி ஒரு மகனைப் பெற்று, அவனை ராமனை அன்னையர் வளர்த்ததை போல் வளர்த்து அவன் தலையில் முடிசூடியபின்னர், கார்மேகம் தன் கடமை எல்லாம் நீராகப் பொழிந்து வெளிர்தல் போல உன் கடமையெல்லாம் முடிந்து வெண்நரைத்த காலம்,
உயிர்சிற்பம் செதுக்கும் காலதேவன் உன்னையும் துஷ்யந்தனையும் முதுமை எனும் உளியால் செதுக்கும் காலம் இந்தக் குடிலுக்கு வந்து அமைதிகொள்வாய். அதுவரை காலமில்லை என் மகளே எனக் கலங்கிச் சொன்னார்.
கௌதமியார் நேர்மாவதைக் கண்டு பயணத்தை துரிதப்படுத்த எண்ணிச் சொன்னார்.
“சாகுந்தலை புறப்படும் காலம் வந்துவிட்டது விரைந்து போ என்கின்றது மனம், ஆனால் திக்குவாயன் வாயில் சிக்கி திணறி வெளிவரப் போராடும் சொல் போல வார்த்தைகள் தடுமாறி கால் குளறி நிற்கின்றாயம்மா.
உன் கண்ணால் உன் தந்தைக்குப் போட்டிருக்கும் விலங்கை நீக்கி அவரைப் போகவிடு…”
மனம் விசும்பிய கன்வர் சொன்னார், ‘மகளே, பற்றற்ற துறவி நான் என்றாலும் என் தவத்தை உன் மேல் நான் எனையறியாமல் வைத்த அன்பு பற்றிக்கொள்கின்றதே, ஒளிமிக்க என் தவம் இந்தப் பாசத்தால் குருடானதே.
என் கால்கள் உன்னைப் பிரிந்து செல்லமனமின்றி மரத்து நிற்கின்றதே, என் கண்ணே கண்ணீரது கரும்பாவையினை விட்டு நீங்குதல் போலே நானும் செல்கின்றேன்”
சாகுந்தலை அவரை அணைத்து தழுவிச் சொன்னாள், “அப்பா, கடும் தவத்தைச் சுமந்து அந்த நெருப்பால் வாடுபவர் நீர் கூடவே என்னையும் சுமந்தீர்.
மயிலிறகு என்றாலும் அதைப் பெரிய கட்டாக கட்டிச் சுமந்தால் வலி வரத்தானே செய்யும், என்னையும் தவத்தோடு சுமந்து சுமந்து களைத்து இளைத்துவிட்டீர், இனி நான் சுமையாக இருக்கமாட்டேன், இதோ கிளம்புகின்றேன்.
உறவுகளை ஒதுக்கி தவவழி செல்லும் வாழ்வல்லவா உங்களுடையது, நானே விலகிச்செல்கின்றேன்” என்றாள்.
கன்வர் கதறிச் சொன்னார், “மகளே, உன்னை உறவுப்பலியாய்த் தருகின்றேன், நீ செல்லலாம்.
நம் குடிலைச் சுற்றி நீ விதைத்த திணை வளர்வது போல் உன் வாழ்வு வளரட்டும், அந்தத் திணைகள் உன் நினைவினைச் சொல்லட்டும்.
கவிபாடி கவிஞன் சென்றாலும் அவன் சொன்ன சொல்லும் உருக்கும் காட்சியும் நெஞ்சிலே தங்கிவிடுதல் போல நீ சென்றாலும் உன் நினைவுகள் என் நெஞ்சில் தங்கட்டும்.
இனி என் மனம் நினைவுக் குப்பைகளின் கூடையாகட்டும்”
சாகுந்தலை துயரம் தாளாமல் தடுமாறிச் சென்றாள், அவள் குழந்தையாய்த் தவழ்ந்து நடைபயின்ற காட்சி நினைவுக்கு வர கண்களைத் துடைத்துக் கொண்டார் கன்வ முனி.
நாடகத்தின் திரை இடப்பட்டு காட்சி மறைதல் போலே கானக மரங்களிடை நடந்து சென்று மறைந்தாள் சாகுந்தலை.
கன்வ முனிவர் அழுதபடி நின்றிருந்த அனுசூயையினையும் பிரியம் வதையினையும் பார்த்துச்சொன்னார்.
“உங்கள் தோழி பிரிந்துவிட்டாள், உங்கள் இருவர் மனமும் கொதிப்பதை நானறிவேன், என்ன சொல்வேன் எளியவன் நான்?
பெண்களே, கொதிக்கும் பால் இரு குவளையில் இருந்தால் அதை ஒன்றோடு ஒன்று ஆற்றிக் கலந்து வெப்பம் நீக்குவித்து குளிர்விப்பது போல் நீங்கள்தான் ஒருவருக்கொருவர் இந்தக் கொதிக்கும் கவலையினை உங்களுக்குள் பரிமாறித் தீர்த்தல் வேண்டும்”
அவர்கள் சொன்னார்கள்.
“உயிரை போகவிட்டு வெறும் உடலாய் குடிலுக்குச் செல்கின்றோம், நெஞ்சத்து விளக்கு இல்லாமல் காரிருளில் சிக்கி வழிதெரியாமல் குழம்பி எண்ணமெல்லாம் இருட்டாகிச் செல்கின்றோம்”
கன்வர் பெருமூச்சுடன் சொன்னார், “இதெல்லாம் உங்கள் அன்பின் மிகுதியால் வரும் சொற்கள்.
குழந்தை இறந்தாலும் தாய் பிழைத்தாள் எனத் துன்பத்திலும் மகிழும் சொந்தம் போல இந்தத் தவவாழ்வில் தாயாக இருந்தவள் எனக்குச் சகுந்தலை.
இன்று அவளும் போகின்றாள், அதுதான் விதி என்றால் யார் தடுக்க முடியும்?
ஒரு தாய் தன் மகவைப் பெறும்போது அழுது தீர்ப்பாள், ஆனாலும் மகவின் முகம் கண்டால் அவள் துயரெல்லாம் மறையும் அன்றோ, அப்படி என் மகளின் வாழ்விலே இனி நான் துயர்கடப்பேன்.
பெண்கள் இன்னொரு வீட்டில் வாழ ஒரு வீட்டில் பிறப்பவர்கள், புகுந்த வீட்டிற்கு கண்ணாக, காலாக, கையாக, ஒளியாக, ஒலியாக, பொன்னாக, சாமியாக உரு மாறி நிற்கும் செல்வங்கள்.
புகுந்தவீட்டிற்காக பிறக்கும் பெண்களைக் கொஞ்சகாலம் வளர்க்கும் பொறுப்பு மட்டும்தானே தகப்பனுக்கு உண்டு, அதைத் தாண்டி பெற்றவனோ வளர்த்தவனோ என்ன செய்திடல் முடியும்.
இந்த உண்மை உணர்ந்தால் வலி குறையும், இனி எனக்கும் குறையும்.
என்னிடம் அடைக்கலமான குழந்தையினை வளர்த்து இன்னொருவனிடம் அடைக்கலமாகக் கொடுத்துவிட்டேன். இனி நான் அமைதி கொள்ளத்தான் வேண்டும், ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்”
சொல்லிவிட்டு குடிலுக்கு அனைவரும் திரும்பினார்கள், யார் மனதில் என்ன வலி என எல்லோரும் அறிந்திருந்ததால் யாரும் எதுவும் பேசவில்லை.
(தொடரும்..)