காளிதாசனின் சாகுந்தலம் : 16
காளிதாசனின் சாகுந்தலம் : 16
சாகுந்தலை உள்ளிட்ட அனைவரையும் வரவேற்று சொன்னார் சோமநாத புரோகிதர், “அதோ எங்கள் மன்னர் எழுந்து நிற்கின்றார் பாருங்கள்.
நீங்கள் யார்? எக்குலம்? எந்த இனம்? எனத் தெரியாமலே உங்களை எதிர்பார்த்து எழுந்து நிற்பது அவரின் சிறப்பான குணம் என்பதைக் கவனியுங்கள். முன்பின் தெரியாத புதியவரையும் எழுந்து நின்று வரவேற்பதுதான் அவரின் போற்ற வேண்டிய பண்பு”
சாரங்கன் சொன்னான், “புரோகிதரே, மண்ணில் இருந்துதான் நாம் மரமாக உருவானோம் எனும் நன்றி மரத்துக்கு உண்டு.
அதனால்தான் அது தன் கிளைகள் முழுக்க கனிகளில் பழம் நிறைந்து மண்நோக்கி தருகின்றது , கிளையினை மண்நோக்கி கீழ் தாழ்த்தி தருகின்றது. நல்லோரின் இயல்பும் அத்தகையதே.
நிலமகள் வைத்திருக்கும் கடல்நீர் எனும் கற்பை கதிரவன் எனும் அவள் கணவன் தன் காதல் வெப்பத்தால் அள்ளிக்கொண்டு வானத்தில் உலவுகின்றான்.
முறையிட்டு நிலமகள் நீதிகேட்க மனமிரங்கும் கதிரவன் கார்முகில் கரத்தை தாழ அனுப்பி உதவுகின்றான்.
நன்றியுடை நல்லோரெல்லாம். பொறுப்புடைய பெரியோரெல்லாம் பணிந்து தாழ்தல் இயல்பன்றோ?
மண் நோக்கி கனி தரும் மரம், தாழ வந்து நீர் தரும் மேகம் எல்லாம் நல்லோர் சிறப்பு என்றாலும், குன்றிமணி போல கருமையும் செம்மையும் கலந்த இந்த மன்னர் குலத்தில் வந்த மன்னன் தன் மரபுப்படி இப்படிப் பணிதல் இயல்புதானே ஆச்சரியம் இதில் என்ன?”
அவனின் பதிலைக் கேட்டதும் முதலில் நெற்றி சுருக்கினாலும் பின் மெல்ல புன்னகைத்துச் சொன்னான் சோமநாதன்.
“நாட்டியத்தில் சிறந்தோர் தங்களின் மனதை வார்த்தையால் சொல்லமாட்டார்கள், அவர்களின் நாட்டிய அபிநயத்திலே குறிப்பால் சொல்வார்கள். அப்படி நீங்களும் சொல்ல வருவது எதையோ நல்லமொழிகளாக மெல்ல மெல்ல உறுதியான மொழிகளாக சொல்கின்றீர்கள்” எனச் சொல்லி மன்னரிடம் அழைத்து வந்தான்.
சாகுந்தலை தலையினைக் குனிந்தபடி வந்தாள், நாணம் அச்சம் என்பதைத் தாண்டி மன்னன் தன்னை ஏற்பானா? இகழ்ந்து விரட்டுவானா எனும் அச்சமே அவளை நடுங்க வைத்தது.
அவளை உற்றுப் பார்த்தான் துஷ்யந்தன், அவனுக்குத் துர்வாசரின் சாபத்தால் எல்லாமே மறந்திருந்தது, சகுந்தலை அவன் நினைவிலே இல்லை அதனால் யாரோ என எண்ணியபடி சொன்னான்.
“வதங்கிபோன சருகுகள் நடுவில் அரும்பிய பசுந்தளிர் போல் நிற்கும் இப்பெண் யார்? யாரென்று சரியாகத் தெரியவில்லை.
இவளை நான் முன்பு மகிழ்ச்சியுடன் எங்காவது சந்தித்தேனா?
வானமெனும் சிற்பி மேகத்தால் சிற்பம் செய்து பின் தண்ணீரில் இடும் கோலம் போல் அந்த மேக சிற்பத்தை மெல்ல மெல்ல கலைத்தல் போல மறந்திருப்பெனோ? இல்லை இல்லை.
ஆனால் யார் இவள்? நினைத்து நினைத்து பார்த்தாலும் நினைவில் ஏதுமில்லை.
அழகான இவளைப் பார்த்து சிந்தித்தால் கரும்பின் அடிப்பாகம் இனிப்பாக தொடங்கி நுனிக்குச் செல்ல செல்ல சுவையற்று செல்லுதல் போல நினைவு மங்கிச் செல்கின்றது.
எவ்வளவுதான் அவள் முகம்பார்த்து முயன்றாலும் புகைகாட்டும் கோலம் போல நினைவுகள் தெளிவின்றி தேய்ந்து மங்கி மறைகின்றன.
அப்படியே மறையட்டும், அறம் அறிந்தவர்க்கு அந்நிய பெண் தாய் அல்லவா? அவளை இப்படி உற்றுப் பார்ப்பதே தவறு” எனச் சொல்லிக்கொண்டான்.
நடுங்கிக் கொண்டிருந்த சாகுந்தலை தனக்குள் சொன்னாள் “நெஞ்சமே, ஏன் பேயினைக் கண்ட குழந்தை போல் இப்படி நடுங்குகின்றாய்.
தாய் இடுப்பில் இருக்கும் குழந்தை அவளைப் பற்றுதல் போல் துணிவு எனும் தாயினைப் பற்றி அச்சத்தை விடு, அவரைப் பார்”
சோமநாதன் சொன்னான், “மன்னா, தவக்குடியில் இருந்து வந்தவர்கள் இவர்கள்தான், கன்வர் அனுப்பிய செய்தி இவர்களிடம்தான் உண்டு”
துஷ்யந்தன் பணிந்து சொன்னான், “துறவிகளே, நீங்கள் தவக்குடிலில் இருந்து கொண்டுவந்த செய்தி என்ன என்பதை அறிய ஆவலாக இருக்கின்றேன், சொல்லுங்கள்” என்றான்.
துறவியர் அவனை கைஉயர்த்தி வாழ்த்தினர், “வெல்க மன்னர், வெல்க மன்னர்” என வாழ்த்தினார்கள், துஷ்யந்தன் அவர்கள் வாழ்த்தை ஏற்றுக்கொண்டான்.
“மன்னா, ஒரு பொருளை. உங்களால் உருவான உயர்வான ஒப்பற்ற திருப்பொருளை, நீங்கள் முன்பு விரும்பிய அரும்பொருளை. நாங்கள் பெரும்பாடுபட்டு காத்த நற்பொருளை, வாழ்வின் அறம்பதிந்த நல்லொழுக்கம் நிரம்பிய தனிப்பொருளை கொண்டுவந்தோம் ஏற்பீராக”
துஷ்யந்தன் புன்னைத்துக் கேட்டான், “தவக்குடியில் முனிவர்களின் தவம் தடைகள் ஏதுமின்றி நடக்கின்றதல்லவா?”
அவர்கள் மறுமொழி சொன்னார்கள், “மன்னா, நல்லோரைக் காக்கவும், நல்லன அல்லாதது செய்வோரை அடக்கவும் நீர் இருக்கையில் என்ன துயர் வந்துவிடும்?
நீங்கள் எங்களுடன் இருக்கையில் ஒரு துயர் எங்கள் மனதை வாட்டுமென்றால் அதுவும் உம் துணை இன்றி எப்படி முடிந்து போகும்?
காட்டில் மேயும் கருத்த யானைகள் போல் வானத்தில் உலாவும் கரிய மேகங்கள் இல்லா நிலையில் எரிக்கும் சூரியன் வலம் வரும் போது இருள் எப்படி வரும்?
துஷ்யந்தன் சொன்னான், “ஒரு அரசனாக என் கடமையினை நன்மைகளாக ஆக்கினேன், இந்தப் பூவுலகை வான் உலகம் போல் மாற்றவும், இந்த மக்கள் சொர்க்கவாசிகள் போல் வாழவும் பெரும்பாடுபட்டு தவமியற்றும் கன்வர் எப்படி உள்ளார்?”
துறவியர் சொன்னார்கள், “மந்திரத்தினைக் கண்ணுக்குத் தெரியா நூலாக கொண்டு பொம்மலாட்டம் செய்யும் அந்த முனிவர் தன் அருள்ஞானத்தில் நிறைந்தே உள்ளார், அவருக்கும் அவர் இருப்பதால் எங்களுக்கும் எந்தக் குறையுமில்லை.
முடிவில்லாப் புகழ்கொண்ட மன்னன் நலத்தை வாழ்த்துங்கள், வாழ்த்துபல கூறிவிட்டே செய்தியினைச் சொல்லுங்கள்” எனச் சொன்னார் கன்வர் என்றனர்.
துஷ்யந்தன் கேட்டான், “அவர் இட்ட கட்டளை என்ன? அதனைச் சொல்லுங்கள்?”
அவர்கள் சொன்னார்கள், “அரண்மனையின் மாமரமும் எங்கள் தவக்குடிலின் மலர்க்கொடியும் தானாக பிணைந்து கொண்டதை விதி என்றுதான் சொல்லவேண்டும்.
அவை தங்களுக்குள்ளே கவர்ந்து ஒன்றாகிக் காய்விட்டு கனியாகியதையும் முறையே என ஏற்றுக்கொண்டேன்.
தவக்குடிலில் ஒரு கண்ணும் அரண்மனையில் உள்ள மறுகண்ணும் இணையப்பெற்றால் இல்லறம் எனும் அழகுமுகம் கிடைக்கும், முகம் இல்லாமல் எழில் உடலா? முகம் பெறுங்கள் மன்னா.
தன் சக்தியெல்லாம் திரட்டி ஒரு பெண்ணைப் படைத்து அவளை மிக மிக நல்லவளாய் படைத்த பிரம்மன் அவளை யாரிடம் ஒப்படைக்க எனத் தவித்தே பல காலம் தவமிருந்தான், அந்தத் தவத்துக்கு விடையாக கிடைத்தவர் நீங்கள்.
பலவண்ண பூக்கள் பூக்கும் காலம் வந்த மன்மதன், இரு பூக்களை ஒன்றாக்குவேன் என்றே மலர்க்கரத்தால் இரண்டையும் இணைத்தான்.
அந்த மென்மையான மலர்தான் தேன் கொடுத்து மாணிக்கத்தை தனக்குள் மேவிற்று, கனிந்த கனி ஈகின்ற அருமலரை அந்த அன்பருக்கே உரித்தான தனிமலரை அருமணியோடு அனுப்பி வைத்தேன் வாழ்க மன்னர்” என்றார் கன்வர் என்றனர் துறவியர்.
கௌதமியார் தொடர்ந்தார், “மன்னா, எந்தப் பெரும் கவிஞன் என்றாலும் தான் எழுதிய கவிதையினைத் திரும்பப் படிப்பான்.
அது சரியென ஏற்றுக்கொள்ளவும் தவறென்றால் திருத்திக்கொள்ளவும் படிப்பான். அப்படி நானும் இன்னும் சொல்லவேண்டும் எனத் துணிகின்றேன், ஆனால் என்ன தகுதி உண்டெனத் தயங்குகின்றேன்.
களவியலின் கருப்பொருளால் பெற்றோரை மறந்தவள் இவள், அவளின் இளமையினால் நீர் ஈர்க்கப்பட்டீர், தவக்குடிலின் மாண்பினை அவள் மறந்தாள், மன்னனின் மாண்பை நீர் மறந்தீர்.
இதோ வளர்ந்த அந்ஞத காதலுக்கு சாட்சியாக அவள் வயிற்றில் புகழ்விளக்கினை வளர்க்கின்றாள்.
பக்தன் கடவுளிடம் வேண்டும் போது, இறைவா எனக்கு என்ன வேண்டுமோ அதை நீயே தா, நானோ ஒன்றுமறியா மடையன் என வேண்டி நின்றால் அவனுக்கு வேண்டியதை தெய்வம் ஆராய்ந்து தரும்.
அதைவிடுத்து எனக்கு இதுதான் வேண்டும் எனக் கடவுளிடம் வேண்டி நிற்பவன் அதையே வேண்டி களவழியில் பெறமுயன்று சிக்கி வீழ்வான்.
கடவுளிடம் பெற்றோரிடமும் கேட்டும் பெறவேண்டியதை நீங்களாகவே முடிவெடுத்துப் பெற்றுக் கொள்ள முனைந்தீர்கள். கடவுளிடம் பாரத்தைப் போடாமல் நீங்களே சுமந்தீர்கள், அங்கே இடறினாலும் சரியென்றே வீழ்ந்தீர்கள், இதில் நான் சொல்ல என்ன உண்டு?
என் கடமை இதைச சொல்வது என்பதால் சொல்கின்றேன், அவள் கையினைப் பிடித்துவிட்டீர், அதைத் தளர்த்தி விட்டுவிடாதீர், அது பெரும்பாவம்.
அரும்பாடுபட்டு உருவாக்கிய வயலுக்குள் புகுந்த காட்டுயானை கொஞ்ச நெல்லைத்தான் தின்னும், மீதியெல்லாம் அதன் காலில் மிதிபட்டு நாசமாகும், பெற்றோர் அறியாமல் நடக்கும் காதலெல்லாம் இவ்வகையே.
விளைந்த நெல்லை மக்களெல்லாம் சேர்ந்து அறுத்து எடுத்துவந்து சோற்றுக் கவளமாக்கி யானைக்கு நெடுநாள் கொடுத்து வாட்டமின்றி வளர்ப்பார்கள், பெற்றோர் முடித்துவைக்கும் மணம் இதுவே”
சாகுந்தலை தனக்குள் சொல்லிக்கொண்டாள், “என்னவர் என்ன சொல்வார்? என் தெய்வம் என்ன சொல்லும் எனத் தெரியாமல் அஞ்சி நிற்கின்றேனே, என்ன செய்வது எனத் தெரியாமல் திகைக்கின்றேனே”
தன் முன் என்ன நடக்கின்றது என்பதை எல்லாம் மறந்த நிலையில் இருந்த துஷ்யந்தன் உணர முடியாமல் குழம்பிச் சொன்னான்.
“என் முன் வந்திருக்கும் இந்தச் சிக்கல் என்ன? ஒன்றும் புரியவில்லை?”
அவன் சொல்கேட்டு தீ மிதித்தவள் போல் அதிர்ந்து துடித்த சகுந்தலை சொன்னாள்.
“என்னது? இது என்ன சிக்கலா? இந்தச் சொற்கள் எழுப்பும் நெருப்பை போல் இன்னொரு நெருப்பு எனக்கு உண்டா?
என் கண்களிலே துயரப்பறவை கூடுகட்டுகின்றதே நான் என்ன செய்வேன்?”
சாரங்கன் கொதித்துச் சொன்னான், “மன்னவா. என்ன சொன்னீர், இது என்ன சிக்கலா?
நீர் எல்லாம் மனதாலும் வாக்காலும் அறிந்தவர், ஒரு விஷயத்தை நீர் கண்டபின்பும் ஒற்றரைக் கொண்டு உறுதி செய்து கொள்பவர், எத்தனையோ வழக்குகளை அலசி ஆராய்ந்து கருணைமிக்க தீர்ப்பினை வழங்கியவர்.
கனவுகளைச் சிறைபிடித்து நனவு எனும் கைவிலங்கினால் பூட்டி இதோ நிறுத்தியுள்ளோம்.
மணமான பெண் ஒருத்தி தன்னைக் கொண்டவனோடு மகிழ்வாக வாழாமல் பிறந்த வீட்டில் அணிகலன் பல பூண்ட பிணம் போல் வாழ்ந்தால் வாய்க்கு வந்த பிணிமொழிகளை உலகம் சொல்லாதா?
அதனால் அவள் கணவனுக்கும் பெருமையில்லை, பெற்றோர்க்கும் பெருமையில்லை. மன்னா காய் கனிந்து நின்றால் சிறப்பு, காய் பழுக்காமல் வெம்பிபோனால் பலன் என்ன?
மணம் செய்தும் பிரிந்திருக்கும் பெண்ணை யார் மதிப்பர்? சந்தேகப் பார்வையினை யார் பொறுப்பர்?
வாழாமல் இருந்தாலும் கணவன் வீட்டில் அவள் வசித்தலே நன்று, பெண்ணை ஈன்றெடுத்தோம் உங்களிடம் பறிகொடுத்தோம், இனி அவளை உங்கள் வீட்டில் இல்லறம் செய்ய கொண்டு சேர்க்க வந்துவிட்டோம், இதோ கொடுத்துவிட்டோம், இவளே உங்கள் சாகுந்தலை”
துஷ்யந்தன் துடிதுடித்துக் கேட்டான், அவையின் முன் பழிக்கு அஞ்சிக் கேட்டான்.
“என்னது? இப்பெண் என்னால் முன்பே மணம் செய்யபட்டார் என்பதா? உண்மையில் அது நடந்ததா? இல்லை நடக்கவே இல்லை”
இமயத்து பனி நொடியில் உருகிக் கொட்டுவது போல் கண்ணீர் உகுத்து சாகுந்தலை சொன்னாள்.
“நெஞ்சமே நீ அஞ்சியபடியே ஆயிற்றே.
பழத்தை சுவைத்து சாப்பிடும் வௌவாவால் அதே வாயால் மலம் கழிப்பது போல் இன்று பார்த்துவிட்டாயே”
(தொடரும்..)