காளிதாசனின் சாகுந்தலம் : 20

காளிதாசனின் சாகுந்தலம் : 20

புரோகிதருடன் அவர் சொன்ன தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு வேறு வழியின்றி இனி அழவும் கண்ணீர் இன்றி, எரிமலை வெடித்து இறுகியது போன்ற நெஞ்சத்துடனும் சென்றாள் சாகுந்தலை.

துஷ்யந்தனோ அவன் போக்கில் அமர்ந்திருந்தான், அவனைப் பொறுத்தவரை அவன் தவறேதும் செய்யவில்லை.

அவளைத் தன் வீட்டிற்கு அழைத்து சென்ற புரோகிதர் திடீரென “மன்னா பெரும் ஆச்சரியம், பெரும் ஆச்சரியம், அதிசயம்” என உரக்கச் சொன்னபடி ஓடிவந்தார்.

“அப்படி என்ன நடந்தது? என அலட்டிக்கொள்ளாமல் கேட்டான் துஷ்யந்தன்.

“மன்னா, எதிர்பாராத வியக்கத்த நம்மமுடியா ஆச்சரியமொன்று நடந்துவிட்டது” என்றார் புரோகிதர்.

“என்ன நடந்தது? அப்படி என்ன ஆச்சரியம் என்ன விதத்தில் நடந்தது?” என மீண்டும் இயல்பாய்க் கேட்டான்.

புரோகிதர் சொன்னார், “மன்னா, கண்வ முனிவரின் மாணாக்கர் அப்பெண்ணை என்னிடம் விட்டுவிட்டு சென்றபின் அவளோடு என் இல்லம் சென்றேன்.

அவள் மிகுந்த சோகத்தில் இருந்தாள், மெல்ல தயங்கி தயங்கி வந்தவள் திடீரென மண்ணை நோக்கி, “என் துயரமெல்லாம் அறிந்த மண்ணே என்னைப் பிளந்து ஏற்றுக்கொள்” எனத் தரையிலே மண்டியிட்டு அழுதாள்.

பின் ஓங்கி ஓங்கி தரையினைத் தன் கையால் அடித்து அழுதாள், நிலம் பிளக்கும் எனச் சீதை போல் நம்பினாளா என்பது தெரியவில்லை.

“உனக்குமா என்னைப் பிடிக்கவில்லை, நீயுமா மறந்தாய் பூமித்தாயே” என்றவள் பெரும் ஓலமிட்டு அழுதாள்.

“பூமாதேவியே உன் துன்பத்தின் மடியில் உழல்வதோ உன் விருப்பம், அதனால் என்னை ஏற்க மறுத்தாயோ” என்றவள் வானம் நோக்கிக் கதறினாள்.

“ஓ வான்மாதா இந்த பூமாதேவி என்னை ஏற்கவில்லை, நீயாவது ஏற்றுக்கொள். இதோ வருகின்றேன் உன்னிடமே வருகின்றேன் எனப் பெருக்கெடுத்தோடும் நதியினை நோக்கி ஓடினாள்.

அவள் அப்படி ஆற்றினை நெருங்கும்போது அங்கே பெரும் ஒளி ஒன்று வானில் இருந்து இறங்கியது, தீ பந்தம் ஒன்று தீபத்தை நெருங்குவது போல் அது சாகுந்தலையினை நெருங்கிற்று.

பின் அந்தரத்தில் அந்த ஜோதி எழும்பி மறைந்தது, அப்பெண் அந்த ஜோதியில் மறைந்தே போனாள்” எனப் பதற்றமும் படபடப்பும் நிறைந்த தொணியில் சொன்னார்.

அவர் சொன்னதைக் கேட்ட அவையோரெல்லாம் அவள் தேவலோகப் பெண்ணோ, அவளால் ஏதும் பெரும் சாபமும் விபரீதமும் நடக்குமோ என அஞ்சி நின்றார்கள்.

துஷ்யந்தன் வெகு இயல்பாய்ச் சொன்னான்.

“நாம் அப்பொருளை வேண்டாம் என விட்டுவிட்டோம், நாம் விட்டுவிட்ட பொருளைப் பற்றி கவலைபட என்ன உண்டு?

அது வான் பொருளோ, வல் பொருளோ யார் பொருளோ? நமக்கு வேண்டாம் என விட்டுவிட்ட ஒன்றை எண்ணி என்ன நினைக்க வேண்டியிருக்கின்றது?

வேண்டாம் எனக் கழற்றிப்போட்ட சட்டையினை நாகம் திரும்ப தேடுமா என்ன?”

சொன்னவன் அவையினைக் கலைத்துவிட்டு தன் அறை நோக்கிச் சென்றான். ஆனால், அவனுக்குள் இனம்புரியா கலக்கம் இருந்து கொண்டே இருந்தது.

அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

“எனது மகிழ்ச்சிவெள்ளம் முழுக்க வடிந்து வற்றி எருமை இறங்கி கலக்கிய குட்டை போல் என் மனம் குழம்பியுள்ளது.

யாரோ ஒருத்தியினை என் மனைவி என என்முன் நிறுத்தினார்கள், ஏற்றுக்கொள் என்றார்கள். நானோ விலக்கிவிட்டுவிட்டேன்.

ஆனாலும், காற்றின் வழி அலையும் புகைப்போல என் மனதில் அவள் உருவம் மெல்லத் தெரிகின்றது. ஆனாலும், எனக்கு ஏதும் நினைவுக்குக் கொண்டுவரவும் முடியவில்லை.

என் மனதின் நினைவுகள் எனும் மரத்தை வெட்டிவிட்டு வேரினை விட்டுவைத்தது யார்? ஒன்றும் புரியவில்லை.

உண்மை ஒளி அறைக்குள் ஓளிரட்டும் என்றார்கள். ஆனால், என் உள் அறையோ இருள் சூழ்ந்திருக்கின்றது, கவிந்திருக்கும் இருள் குடத்தின் உள்ளே எங்கே விளக்கு உண்டு என எப்படித் தேடுவேன்?

வாடிவிட்ட மலர்களை வீசியபின்னும் படுக்கை அறையில் நிற்கும் வாசம் போல் என் மனதில் அவளின் நினைவு ஏதோ மெல்லியதாய் நிற்கின்றது.

அவையில் எல்லோர் முன்னும் எங்கே சாட்சி? எது சாட்சி எனக் கேட்டுவிட்டேன், அரசனாய் அது என் கடமை.

ஆனால், அவளின் கால்சுவடு என் நெஞ்சினுள் உண்டு என்பதை எப்படிச் சொல்வேன்? அவள் கண்ணீர் எனும் உளி மலையான என் உள்ளத்தைத் தகர்த்ததை நான் உணர்ந்தபின்பும் என்ன சாட்சி எனக்கு வேண்டும்?

இன்னும் இன்னும் அவள் நினைவு என்னை அழுத்திக்கொல்ல இதைவிட என்ன சாட்சி வேண்டும்?”

சொன்னவன் படுக்கையில் வீழ்ந்தான். ஒரு அரசனாக சில சாட்சிகளை அவன் அவளிடம் தேடினான், துர்வாசரின் சாபம் பலித்தாலும், அங்கே அவளின் நினைவு முழுக்க அவனிடம் இருந்து அகலவில்லை.

அது அறுவடை முடிந்த வயலிலும் நெல்மணிகள் ஆங்காங்கே கிடப்பது போல் அவன் மனதில் அவள் நினைவாய்க் கிடந்தது.

சில நாட்கள் கழிந்தன. துஷ்யந்தன் இனம்புரியாக் குழப்பத்துடனே சுற்றித் திரிந்தான், தன் மனவருத்தத்தை அவன் யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை.

அந்நேரம் வாசலில் ஒரு செம்படவன் விரலில் மன்னனின் முத்திரை மோதிரம் இருந்ததை கண்ட காவலர்கள் அவன் அதனைத் திருடிச் சென்றான் என நினைந்து அவன் கைகளைக் கட்டி மோதிரத்துடன் அரண்மனை விசாரணை அதிகாரியிடம் இழுத்து வந்தார்கள்.

அதிகாரி கேட்டான், “எப்படி இது உனக்குக் கிடைத்தது?, நன்றாய்ப் பார். இது அரசனின் முத்திரை மோதிரம், சொல் எப்படி திருடிச் சென்றாய்? இதை வைத்து என்னவெல்லாம் சாதித்தாய்?

செம்படவன் கதறினான் .

“ஐயா நான் திருடவில்லை, என்னை நம்புங்கள்” என்றான்.

திருடவில்லை என்றால் அரசரே உனக்குக் கொடுத்தாரா?

இல்லை ஐயா. நான் மீனவன், பொய் சொல்லும் அவசியமில்லை.

உயிர்களை இரக்கமின்றி கொன்றுவாழும் உன்னிடம் எப்படி அறம் எதிர்பார்க்கமுடியும் சொல்?

ஐயா, இது வம்சம் வம்சமாக எனக்குத் தெரிந்த தொழில், தலைமுறைத் தலைமுறையாய் இதையன்றி வேறு அறியேன், ஏதோ ஒருவகையில் மக்களுக்கு உணவளிக்கின்றேன், உயிர்கொலை செய்கின்றேன் என என்னைச் சொன்னால் சில யாகங்களில் விலங்கு பலியிடுவதும் உண்டே, அதெல்லாம் என்ன வகை?

மூடனே, அது உலக நன்மைக்காக உனக்கு அதெல்லாம் புரியாது.

எனக்கு அது புரியவேண்டாம், புரியாமல் போகட்டும். ஆனால், உயிர்பலி அங்கும் உண்டல்லவா?

அதிகம் பேசாதே, மோதிரம் வந்த வழியினைச் சொல், நீ திருடினாயா இல்லை வேறு யாரும் கொடுத்தார்களா?

ஐயா, நான் பிடித்த மீன் ஒன்றின் வயிற்றில் இருந்து இதை எடுத்தேன், அதை அரியும் போது இது விழுந்தது. அதை அணிந்து கொண்டேன் மற்றபடி இதை நான் திருடவில்லை” என்றான்.

“இவனிடம் என்ன பேச்சு, இவன் தலையினை வெட்டிவிட்டு மோதிரத்தை மன்னரிடம் சேர்ப்போம்” என்றனர் காவலர்.

“வேண்டாம், இங்கு தீர்பளிக்கும் உரிமை மன்னருக்கே உண்டு” என்ற அதிகாரி அவனை நோட்டம் விட்டான். அவன் தோற்றமும் உடல்வாகும் அவன் மீதிருந்து வந்த வாசனையும் அவனை செம்படவன் என்பதைக் காட்டிற்று.

அவனிடம் இருந்து பறித்த மோதிரத்தை முகர்ந்து பார்த்தான் அதிகாரி, அதிலும் மீன் வாடை வீசிற்று.

இவனைக் கட்டி வையுங்கள், நான் மன்னனிடம் விசாரித்து வருகின்றேன், மன்னர் முடிவே இவன் தலைவிதி” எனச் சொன்னவன் அவசரமாக மன்னரை சந்திக்க விரைந்தான்.

இவன் கழுகுக்கு இரையாவானோ, இல்லை நரிக்கு விருந்தாவானோ என அந்த செம்படவனை நோக்கி சிரித்துக் கொண்டிருந்தனர் காவலர்கள்.

அந்நேரம் அந்த அதிகாரி திரும்பி வந்தான், கையில் ஒரு பையுடன் வந்தான், வந்தவன் சொன்னான்.

“காவலர்களே இவன் கைகட்டை அவிழ்த்துவிடுங்கள், மன்னருக்கு இவன் பெரும் உதவி செய்திருகின்றான், மிக மகிழ்ந்த மன்னர் இவனுக்கு பெரும் பரிசை கொடுத்திருக்கின்றார்.

ஏ செம்படவனே, இதோ மகிழ்வாய் உன் பரிசை பெற்றுக்கொள்” எனக் கொடுத்தான்.

செம்படவன் மகிழ்ந்து பெற்றுக்கொண்டான். அதிகாரி புன்னகைத்து சொன்னான், “எமனின் பட்டினத்தில் புகுந்து மீண்டிருக்கின்றாய்”

“என்னைக் கழுமரத்தில் இருந்து இறக்கிவிட்டதற்கு நன்றி” என்றான் செம்படவன்.

“இவனுக்கு மன்னர் கொடுத்திருக்கும் பரிசு இந்த மோதிரத்துக்கு என்றால் அது அவ்வளவு முக்கியமா இல்லை அதன் மணிகள் அவ்வளவு விலையானதா?” என்றான் காவலன்.

அந்த அதிகாரி சொன்னான்.

“குடிகளை காக்கும் அரசனுக்கு மணிவகைகள் முக்கியமல்ல, மன்னர் அந்த மோதிரம் மணிகளால் அழகுபெற்றது என்பதற்காய் மகிழவில்லை.

அதைக் கண்டதும் அவர் மனதில் ஏதோ ஒரு மகிழ்ச்சி ஊற்றாய் பொங்க அவர் கண்களில் அது நீராய் வழிய கண்டேன், அவர் இவன் தனக்கு பெரும் உதவி செய்தான் எனப் பெரும் உவகைக் கொண்டார்.

ஜோடிமான்கள் நீராடும் நீர்துறையில் பிடிபட்ட மீன் வயிற்றில் இருந்து வந்தது எனச் சொன்னதைக் கேட்டு அவர் பெருமூச்சுடன் அதனைத் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருந்தார்.

முன்பு பார்த்த ஒன்றை மீளப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டே இருந்தார்.

சத்தியவான் உயிரை மீட்ட சாவித்திரி போல் தானும் தன் உயிரை மீட்டது போல் நிறைவு கொண்டு மகிழ்ந்து அழுதார்.

சந்திரமதியின் தாலியால் அவளை அடையாளம் கண்ட அரிசந்திரன் அழுதது போல் வெடித்து அழுதார்.

தன் மடிமுட்டி பால் குடிக்கும் கன்றினைத் தாய்பசு வாஞ்சையாய்ப் பார்த்துக் கொண்டே இருப்பது போல் அந்த மோதிரத்தைக் கண்முன் வைத்து பார்த்துக் கொண்டே இருந்தார்.

எப்போதுமே காணாத அவர் கண்ணீரை நான் இன்று கண்டேன், கண்ணீர் எனும் முத்துக்களால் அவர் தன் நினைவுகளுக்கு மாலை சூட்டிக்கொண்டிருந்தார்.

எப்போதும் அமைதியாய்க் காணப்படும் கடலைச் சூறாவளி ஒன்று கலக்குவது போல் மன்னர் கலங்கி நிற்கக் கண்டேன். காணக் கூடாக் துயர்காட்சி ஒன்றை அங்குக் கண்டேன்”

சொன்ன அதிகாரி அவ்விடம் விட்டு அகன்றான்.

காவலர் குழம்பினார்கள், செம்படவன் தனக்கே உரிய எளிமையில் சொன்னான்.

“ஐயா, நீங்கள் என்னை இங்கு பிடித்துவராவிட்டால் இந்தப் பரிசு எனக்குக் கிடைத்திருக்குமா? அதனால் நீங்களும் கொஞ்சம் பொருள் பெற்றுக்கொள்ளுங்கள்” எனக் கொடுத்தான்.

காவலர்கள் சொன்னார்கள்.

“செம்படவனே, இனி நாம் நண்பர்கள், நம் நட்பினைப் பதிவு செய்யும் வழியினை அறிவாயா?

எல்லா நட்பும் மது எனும் நீரால் புனிதமாகும் உறுதியாகும், வா, நாம் கள் அருந்தி நம் நட்பை அழுத்தமாய்ப் பதிவு செய்வோம் வா.

மதுவிலே தொடங்கும் பந்தம் வாழ்நாளெல்லாம் நீடிக்குமன்றோ?, மதுவின் சக்தியினை நம் நட்பு சோதித்து நிரூபிக்கட்டும் வா மது கடைக்குச் செல்வோம்”

(தொடரும்..)