காளிதாசனின் சாகுந்தலம் : 22

காளிதாசனின் சாகுந்தலம் : 22

(சகுந்தலை பெற்ற சாபத்தால் துஷ்யந்தன் அவளை மறந்து, தன்முன்னால் நின்ற அவளை அடையாளம் தெரியாமல் விரட்டிவிட ஒரு வெளிச்சம் வானில் இருந்து வந்து அவளை அள்ளிச் சென்றது, மீண்டும் சுயநினைவுக்கு அவன் வந்து அவளைத் தேடியபோது அவள் இல்லை.

எங்கெல்லாமோ தேடியும் அவளை அவனால் காணமுடியவில்லை, இப்போது அவள் பெற்ற அத்தனை துயரையும் அவன் பெற்று உடைந்த மனதோடு அவளை நினைந்து முடங்கி கிடந்தான்.

அவன் அணங்கன் எனும் காமதேவன் விழாவினையே நிறுத்திவைத்து தன் துயரினை உலகறிய சொல்லிக் கொண்டிருந்தான். அந்நேரம் அங்கு வந்த மேனகையின் தோழியும் சொர்க்கத்தின் தேவதைகளில் ஒருத்தியுமான சானுமதி எல்லாவற்றையும் யாரும் அறியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.)

நந்தவனத்தில் மலர்பறித்து காமன் வழிபாட்டை செய்ய முயன்ற இரு பெண்களைத் தலைமை காவலன் சஞ்சுகி எச்சரித்துப் பேசிகொண்டிருக்கும் போதே அங்கு மன்னன் துஷ்யந்தன் வரும் அறிகுறி தென்பட்டது.

சஞ்சுகி சொன்னான், “பெண்களே மன்னர் வருகின்றார், உடனே அகன்றுவிடுங்கள்” எனச் சொல்ல அவர்கள் அகன்றனர், தள்ளாடி தள்ளாடி வந்த அவரை நோக்கி சொன்னான் சஞ்சுகி.

“மின்னும் மணி குப்பையிலே வீழ்ந்தாலும் ஜொலிக்கத்தான் செய்யும், தீராத் துயரில் வீழ்ந்தாலும் மன்னர் தன் பொலிவில் குறையவில்லை.

சிறந்த சிகப்பு நிறமுடைய‌ இரத்தினங்களும் தங்களையே வெறுக்கும் அளவு சிவந்த இதழ்களுடையவர் நம் மன்னர், அவரின் இதழ்கள் சோக மூச்சுப் பற்றி வெளுக்கும் அளவு துயரில் மூழ்கிவிட்டார்.

அவள் நினைவால் உறங்காத கண்கள் இரண்டும் ஒடுங்கிவிட்டன, உடலே மெலிந்துவிட்டது, அவரின் கையின் கட்கம் கழன்றுவிழும் அளவு அவர் துயரில் மூழ்கினாலும் அவரின் தேஜஸில் குறைவில்லை.

சாகுந்தலையின் பிரிவால் உடைந்து குலைந்துபோன துஷ்யந்தனைக் கண்ட சானுமதி சொன்னாள்.

“ஓ.. இவனேதான் துஷ்யந்தனனா? வாழ்க்கை எனும் கடலிலே மாயமாக வந்த வலை சாகுந்தலையினை இவனிடம் இருந்து பிரித்துச் சென்றாலும், அதனால் தீராப் பெருந்துயரில் அவளும் வீழ்ந்தாலும் அவள் கொண்ட அதே துயரை இவரும் கொண்டிருக்கின்றார், அவள் நினைவால் வாடுகின்றார்.

அவள் கொண்ட அதே துயரை இவரும் கொண்டிருப்பது நல்லது, சரியானது.

ஜாடிக்கு ஏற்ற சரியான மூடியாக இருவரும் ஒன்றுப்பட்ட மனத்தோடு இருப்பதால் அல்லவா இந்த துயர் வந்தது, இந்தக காதலை ஏற்கலாம்”

தனக்குள் சொல்லிக்கொண்டவள் அவன் என்ன செய்கின்றான் என்பதைக் கவனிக்கத் தொடங்கினாள்.

துஷ்யந்தன் மெதுவாக தயங்கிய நடை நடந்தவன், மேலே போர்த்திய சால்வையினைச் சரி செய்தபடி மரத்தடியில் அமர்ந்து வானம் நோக்கிப் பார்த்தபடி பேசத் தொடங்கினான்.

அவன் கண்கள் சாகுந்தலையினை ஒரு வெளிச்சம் வானுக்கு இழுத்து சென்றது என்பதை எண்ணியபடி வானம் நோக்கி இருந்தது.

சலனமில்லா முகத்தில் வாய்மட்டும் அசைந்தபடி சொன்னான்.

“மனமே எங்கே என் ஆரணங்கு? எங்கே என் மான்விழியாள், அன்பாலும் அழகாலும் ஒரு காதல் சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதற்கு என்னை அரசனாக முடிசூட்டியும் வைத்து என்னை வாழ்த்தியவள் எங்கே?

மனமே, சிறகொடிந்த பறவையாய் அவள் உன்முன் வாதிட்டபோதெல்லாம் நீ கும்பகர்ணனைத் தோற்கடிக்கும்படி பெரும் உறக்கம் கொண்டாய். அதனால் அவளை நான் இழந்தேன்.

இப்போது விழித்து அவளுக்காய் அழும் மனமே, அன்றி நீ இலட்சுமணன் போல் உறங்காமல் இருந்திருந்தால் இப்பெரும் துயர் வந்திருக்குமோ?

சுவரின் ஓவியத்தின் எழில்மிகு உருவம் கண்மூடாமல் இருப்பது போல் நீ இருந்திருந்தால் இந்தப்பிரிவு நடந்திருக்குமோ?

நுட்பமான சித்திரம் தன்னைப் பார்ப்பவர்கள் எப்படி பார்ப்பாரோ அப்படி அவர்களைப் பார்க்கவேண்டும் என்பது ஓவியவிதி, ஆனால் நீயோ ஏன் கண்ணை மூடி பார்ப்பவர்க்கு ஓவியம் தெரியாது என்பது போல் மனக்கண்ணை மூடிக்கொண்டாய்.

இந்த உலகில் காதலரில் பெண் கண்போன்றவள், ஆண் அவளை காக்கும் கண் இமை போன்றவன் அவனே அவளைக் கண்மணியாய் பாக்கவேண்டும் என்பதை இன்றுதானே உணர்ந்துகொண்டாய் ஆனால் பலன் என்ன?”

சொன்னவன் விரக்தியாய் அமர்ந்திருந்தான்.

சானுமதி அவன் நிலை கண்டு பரிதாபமாய்ச் சொன்னாள், “சாகுந்தலையின் விதிபடுத்தும் பாடுதான் என்ன? இவர்கள் வாழ்வில் வீசப்பட்ட வலையின் முடிசுக்களெல்லாம் ஆயிரம் சிக்கல்களைக் கொண்டிருக்கின்றது.

அங்கே அவ்விடத்தில் அந்த மலர் இவனை நினைந்து வாடி வாடி அழுகின்றது, இங்கோ இந்த வண்டு நிலைகுலைந்து அதன் சிறகெல்லாம் இழந்து தவித்துக் கிடக்கின்றது, எப்படி பறந்து சென்று அந்த மலரை இது அடையமுடியும்?

இந்த விதியின் வன்மம்தான் என்ன?”

மன்னருடன் எப்போதும் இருக்கும் அரண்மனை விகடன் அவர் நிலை கண்டு சஞ்சுகியிடம் சொன்னான்.

“கொஞ்சகாலம் அவள் நினைவு அறவே அற்றவராய் நம் மன்னர் இருந்தார், இப்போது அவள் நினைவு ஒன்றை மட்டும் கொண்டு வாடிக் கிடக்கின்றார்.

மனதுக்குள் கதறுகின்றார், அணைகட்டினாலும் வெள்ளம் கசிவது போல் வாயினால் சிலமுறை புலம்புகின்றார்.

அவள் நினைவால் உருகுகின்றார். மனம் மரத்து சிந்தை மரத்துப் போகின்றார், ஆறு உறைவது போல் உறைந்து போகின்றார், அவள் நினைவால் அவளை எண்ணி எண்ணி களைத்திட்டார், களைப்பிலே அலுத்திட்டார், அவள் நினைவால் முழுக்க உலுத்துப்போன மரம் போல் ஆகிவிட்டார்.

என்ன மருந்து இவருக்கு என்றே தெரியவில்லை, இந்த நோயினை நீக்கும் வழியும் யாருக்கும் புரியவில்லை”

சஞ்சுகி சொன்னான் “விகடா, இந்த நந்தவனத்தில் நம்மன்னரை தனித்துவிட்டு கண்காணிப்போம், அவர் மனம் கொஞ்சமாவது தேறட்டும்.

காற்றே தயங்கிவரும் இங்கே யாரும் வந்துவிடமுடியாது என்பது அரண்மனையின் காவலர்கள் சொன்ன சான்று என்பதால் அவரைத் தனித்துவிடுவதில் நமக்கு அச்சமில்லை”

சஞ்சுகியினை அழைத்து சொன்னான் துஷ்யந்தன்.

“இரவெல்லாம் உறக்கமின்றி தவித்துவிட்டேன் அதனால் சபைக்கு செல்லும் நிலையில் நான் இல்லை, குடிமக்களின் வழக்குகளை பிசுனரிடம் விசாரிக்க சொல்லி மிக முக்கிய விவகாரம் என்றால் மட்டும் எனக்குக் குறிப்பு அனுப்பச்சொல்.

நீயும் வேறு வேலை இருந்தால் செல்லலாம்”

சஞ்சுகி அகன்றுவிட விகடன் சொன்னான்.

“ஓரு ஈ கூட இல்லாத தனிமையினை மன்னர் விரும்புகின்றார், ஒரு குழந்தைக்கு கண்கள் இரண்டிலும் நாவிலும் பெரும் காரத்தை கொட்டிவிட்டால் எப்படி எரியும்? அப்படி இந்தச் சூரியன் காயும் பொழுது இது.

அப்படித் தவிக்கும் குழந்தைக்கு நெய்யினை இனிப்போடு கலந்து கொடுப்பது போல் இந்த மரங்களும் அவற்றின் நிழலும் காற்றும் உம்மை தழுவி நிற்கட்டும்

கொட்டும் மழைபொங்கும் கார்காலத்தில் அனுபவிக்கமுடியா இனிய சூழலை இந்த மரங்கள் அனுபவிக்கும் நேரமிது, கலைகள் மனம்பொங்கும் காலமிது.

இங்கே நீர் இருந்தால் உமக்கும் உம்மனதுக்கும் புத்துணர்ச்சி பொங்கிவரும்”

துஷ்யந்தன் விரக்தியாய்ச் சொன்னான்.

“பட்ட காலிலே படும் என்பதையா சூரியனைக் காட்டிச் சொன்னாய்?

இந்தச் சூரியனேதான் சாகுந்தலைமேல் கொண்ட அன்பால் அந்த முனிவர் மகளை நோக்கி தன் தீக்கரங்களை நீட்டினான், முனிவரின் யாகத்தின் பலனாய் எழுந்த மேகம் அவளுக்கு நிழல் கொடுத்தது.

அந்த நிழலிலே அவள் என்னை சந்தித்தாள், மனம் கலந்து அவளில் நான் கலந்தேன். ஆனால், அவளைத் தேடி
மேகத்தையும் கிழித்து என்னைக் கண்டவன் என்னிடம் அவன் தோற்றுப்போனதை எண்ணி பெரும் கோபம் கொண்டான்.

இன்று அவன் என்னைப் பழிவாங்குகின்றன், இதோ இந்த மாமரத்தின் பூக்களை மின்ன செய்து அவள் நினைவினைப் பொங்கச் செய்து அந்த கதிரவன் என்னைப் பழிவாங்கி சிரிக்கின்றான்”

(தொடரும்..)