காளிதாசனின் சாகுந்தலம் : 26

காளிதாசனின் சாகுந்தலம் : 26

துஷ்யந்தன் அந்தப் படத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே மூன்று பெண்கள் இருந்தார்கள், அதைக் கண்டு தோழன் கேட்டான்.

“மன்னா, இந்த ஓவியத்தில் மூன்று பெண்களுமே அழகு அல்லவா? இதில் தங்கள் உள்ளம் கவர்ந்த சாகுந்தலை யார்?”

அதைக் கேட்ட சானுமதி சொன்னாள், “இவனுக்கு கண்ணில் என்ன குறைபாடோ தெரியவில்லை, அங்குத் தனி அழகு யார் என்பதைக் கவனிக்க முடியாமல் தவிக்கின்றான்.

வைரத்தின் இடையே கண்ணாடி கல்லை வைத்தால் விவரம் அறிந்தவனின்றி வேறு யார் சரியாக வைரம் இது எனச் சொல்லமுடியும்?”

துஷ்யந்தன் கேட்டான். “தோழனே, இதில் யாரை நீ சாகுந்தலை எனக் கருதுகின்றாய்?”

தோழன் சொன்னான், “மன்னா, இவ்வோவியத்தில் நீர்செழுமையினால் உயர்ந்து படர்ந்திருக்கும் மாமரத்தின் அருகே, கூந்தல் எனும் பெரும் ஆற்றில் மலர்கள் எனும் மீன்கள் நீந்தி கிடக்க, வியர்வை படர்ந்த முகமும், அழகான தோள்களில் தளர்ச்சி தெரிய இருக்கும் இவளாகத்தான் இருத்தல் வேண்டும்.

துஷ்யந்தன் சொன்னான், “சரியாகச் சொன்னாய். இந்தப் படத்தை நானே வரைந்தேன், அவளை வரையும்போது கைகள் வியர்த்துப் பட்ட அடையாளம் விளிம்பில் உண்டு. இதோ அவளின் மார்பில் தெரியும் கரை என் கண்ணீர்பட்டு கலைந்த வண்ணம்.

சாதுரிகையே, நான் மாதிரியாக கொடுத்த படத்தில் இருந்து சாகுந்தலையினை இன்னும் சரியாக வரைய முயற்சி செய், நீ மற்ற ஓவியங்களைக் கொண்டு வைத்துவிட்டு சரியான தூரிகையினை எடுத்துவா, இதனை இன்னும் அழகுப்படுத்த வேண்டும்” என்றான்.

அவள் அந்த ஓவியத்தை கீழே வைக்க முயன்றாள் துஷ்யந்தன் தானே பிடித்துக் கொண்டான், அந்த ஓவியத்தை உற்றுநோக்கி சொன்னான்.

“என்னைத் தேடி என்மேல் கொண்ட பூரண அன்பால் வந்தவளை விரட்டிவிட்டு இன்று அவள் உருவினைக் கண்டு அழுதுக் கொண்டிருக்கின்றேன், நல்ல ஆற்றுநீரை தாண்டிச் சென்ற மான் கானல் நீரை கண்டு அலைவது போல் என் நிலைமை ஆகிவிட்டது”

அதைக்கேட்ட தோழன் சொன்னான், ” மன்னா.. மான் ஆற்றுநீரை விட்டு கானல் நீரை தேடி அலைவதைத்தான் இப்படத்தில் குறிப்பாய் சொன்னீரோ? இன்னும் சொல்லதற்கும் வரைவதற்கும் ஏதும் உண்டா?”

சானுமதி சொன்னாள், “மன்னர் தன் இனிமையான நினைவுகள் பலவும் வரைய மறந்திருப்பார் போலிருக்கின்றது, இன்னும் வரையாமல் விட்டதை சொல்வாரா எனப பார்க்கலாம்”

துஷ்யந்தன் அலட்சியப் புன்னகையோடு சொன்னான், “தன் துணையோடு செல்லும் அன்னம் நீந்தும் மாலினி ஆற்றின் கரைகள், கங்கையினைத் தந்த அழகிய மலைச்சரிவுகள், அந்தச் சரிவுகளின் மரங்களில் தொங்கும் துறவியரின் ஆடைகள், பனிகற்கள் அடுக்கிய மலையடியே தன் துணையினை ஆசையுடன் நோக்கும் கலைமான் எனக் கொஞ்சம் உண்டு” என்றான்.

சொன்னவன் தொடர்ந்தான்.

“நண்பா, இன்னும் சாகுந்தலையின் அழகினை நான் முழுவதும் வரையவில்லை தெரியுமா?” என்றவன் சொன்னான்.

“காதில் வாகை மலரினை சொருகியபடி, அந்த விரிந்த வாகை மலரைக் காதோரம் சூடியபடி அவள் நிற்கும் பெரும் அழகை சொல்லவில்லை, மழைக்காலத்தில் மின்னும் நிலவினைப் போல மின்னும் இழைகளால் பின்னப்பட்ட மார்கச்சையினை அவள் அணிந்த அந்த அழகை நான் வரையவில்லை”

படத்தை உற்றுப்பார்த்த தோழன் சொன்னான், “மன்னா, இந்தப் படத்தில் ஏன் அந்தப் பெண் கைகளால் முகத்தை மறைக்க முயல்கின்றார், முகத்தில் அச்சம் தெரிகின்றது? பரத்தையரை தேடிச் செல்லும் ஆண்மகன் போல் பல மலர்களைத் தேடி அலையும் வண்டு இந்தத் தாமரை முகத்தில் விழும் எனக் கண்டு அஞ்சுகின்றாரோ?”

துஷ்யந்தன் சொன்னான், “அப்படியானால் நீயே அதை விரட்டிவிடு”

தோழன் சொன்னான், ” மன்னா, செங்கோல் ஏந்தும் மன்னர்தான் எல்லாவற்றையும் காக்கும் அதிகாரம் கொண்டவர் , அவரே அந்த வண்டை விரட்டட்டும்”

“விரட்டி விடலாமே” எனச் சிரித்த துஷ்யந்தன் சொன்னான், “மலர் அருகே பெண் வண்டானது, முன்பு தன்னோடு சேர்ந்து மகிழ்ந்த அந்த ஆண்வண்டின் நினைவில் அங்கே ஆண்வண்டு மீண்டும் தேனருந்த வரும் எனக் காத்து கிடக்கின்றது, அந்த இடத்தில் தேனீயே உனக்கு என்னவேலை?”

விகடன் முகத்தை திருப்பிச சொன்னான், “வண்டுகள் எல்லா இடத்திலும் முரடாகத்தான் இருக்கின்றன”

துஷ்யந்தன் அந்த ஓவியத்தில் கண்ட வண்டை நோக்கி, சாகுந்தலை முகத்தை நோக்கி வந்த வண்டை நோக்கி சொன்னான்.

“ஏ வண்டே, அவளின் மெல்லிய இளந்தளிர் உதடுகள் கனிந்த கனிபோன்றது, மிக இனிமையான அந்த உதடுகள் கொவ்வை கனிபோன்றது,.அப்படியான அவளின் உதட்டில், என் உயிருக்கு உயிரானவளின் உதட்டில் நீ அமர்ந்தால், தனித்த தாமரைக்குள் உன்னைத் தள்ளிப் பூட்டிவைப்பேன்”

(தொடரும்..)