காளிதாசனின் சாகுந்தலம் : 27
காளிதாசனின் சாகுந்தலம் : 27
துஷ்யந்தன் மிக உருக்கமாக முகத்தில் ஒரு பரவசம் வர தன் கனவில் மூழ்கிச் சொல்லிக் கொண்டே இருந்தான். அவள் முகத்தை நோக்கி வந்து அமர்ந்த வண்டை என்ன செய்யபோகின்றேன் பார் எனக் கோபமாக சொல்லிக் கொண்டிருந்தான்.
அதை உடைக்கும் விதமாக சொன்னான் தோழன்.
“மன்னா, இது ஒரு ஓவியம்தான், அதற்கு ஏன் இவ்வளவு உணர்ச்சிகளைக் கொட்டுகின்றீர்கள்?”
துஷ்யந்தன் சொன்னான் “ஓ, இதெல்லாம் கனவா, நண்பா நீ அந்தக் கனவைக கெடுத்துவிட்டாய்..
கனவெனும் படுக்கையில் என் அருகில் அமர்ந்திருந்த அவளில் நான் ஆழ்ந்து செல்லும் போது நீ அதனைக் கெடுத்துவிட்டாய்.
உணர்வால் நான் செய்த அழகான சிலையினை நனவு எனும் தடி கொண்டு உடைத்திட்டாய்.
திரண்டு வெண்ணைத் திரளும் நேரம் கலயத்தை உடைத்தது போல் உடைத்துவிட்டாய். கனிகொண்ட மரத்தின் வேரில் வெந்நீரை ஊற்றுவது போல் ஊற்றிவிட்டாய் இது சரியா?
முத்திரை கொண்ட செப்புக்காசை உருக்கி வெறும் செம்பாய் ஆக்கியதுபோல் ஆக்கிவிட்டாய். இனி அதனால் பலன் என்ன?”
தோழன் செய்வதறியாது நின்றான். ஓவியத்தைக் கண்டு தன்னை மறந்த நிலையில் அவளைக் கண்டு மகிழ்ந்து பின் நினைவுக்கு வந்து அவள் இல்லை என்பதை அறிந்து கலங்கிய துஷ்யந்தனைக் கண்டு சானுமதி சொன்னாள்.
“இவர் விசித்திரமானவர் முன்பின் முரணாகவே இருக்கின்றார். முற்பகல் கடும் வெயிலால் எரிக்கும் வானம் பிற்பகலில் மழையாய்க் கொட்டுதல் போல முன்பு சாகுந்தலையினை நெருப்பாய்ச் சுட்டவர், இப்போது அவளை நினைந்து கண்ணீரைக் கொட்டுகின்றார், விந்தையாகத்தான் இருக்கின்றது”
துஷ்யந்தன் சொன்னான், “நான் துயரக்கடலின் ஆழத்துக்குத் தனியாகச் சென்றுள்ளேன்.
விழி இரண்டு இமை எனும் கதவை வெறுத்து அவற்றை நீக்கியதால் விழித்தே வாழ்கின்றேன். அதனால் அவளை நான் கனவில் கூட காணமுடியவில்லை.
இப்போது அவளை ஓவியத்தில் காண முயன்றாலும் பெருகும் கண்ணீர் மறைக்கின்றது. எங்கேதான் நான் அவளைக் காண்பேனோ?”
சானுமதி சொன்னாள், “சாகுந்தலையினைத் தள்ளிவிட்டாலும் அவள்மேல் கொண்ட அன்பை இவர் தள்ளவில்லை. அவள் வாழ்வை இவர் கொன்றபோதும் மனசாட்சியினைக் கொல்லாமல் வைத்திருக்கின்றார்.
வற்றிப்போன குளத்தின் அடியில் கொஞ்சம் ஈரம் இருப்பது போல இவர் மனதின் அடியிலும் கொஞ்சம் ஈரம் இருக்கத்தான் செய்கின்றது”
அப்போது வந்தாள் தூரிகையாள் சதுரிகை.
“மன்னா, இந்த அழகான ஓவியத்தைத் தாயின் தொப்புள் கொடி அறுத்து எடுத்து வரும் பச்சிளம் குழந்தையினைக் கவனமாக கொண்டுவருவது போல் கொண்டுவந்தேன், தாமதத்துக்குக் காரணம் அதுவே, அப்படி வரும் வழியில்தான்..” என இழுத்தாள்.
“என்ன?” எனக் கேட்டான் துஷ்யந்தன்.
“அரசே வரும் வழியில் அரசியார் வசுமதி தன் தோழி தளிகையுடன் வந்துவிட்டார், எங்கே மன்னர்? அவனுக்கு என்ன கொண்டு செல்கின்றாய்? என்றபடி இந்த ஓவிய பேழையினைப் பிடுங்கிக் கொள்ள முனைந்தார்.
நான் என்ன செய்வது எனத் திகைக்கும் போதே மரத்தின் கிளை நுனியில் அவரின் மேலாடை சிக்கிக் கொள்ள, தளிகையாள் அதை எடுக்க முயல அந்த நேரம் நான் பவ்யமாய் மறைந்து வந்துவிட்டேன். இதோ ஓவியம்” எனப் பேழையினை நீட்டினாள்.
“அரசியார் மிகுந்த கோபத்தில் வருவார் போலிருக்கின்றது, புயல்காற்று அழகான தளிர்களை அழித்துப்போடும். அவரோ இதனை அழித்துவிடுவார், நீ மறைவாய் கொண்டு சென்று காவல் செய்” என அதனை அவளிடமே கொடுத்தான்.
சானுமதி அதைக் கண்டு சொன்னாள், “ஓ இவள்தானா மன்னரின் முதல் மனைவி வசுமதி, என்ன ஆங்காரம் அவளுக்கு?
கல்லாத ஒருவனுக்கு கற்றோர் அவையின் தலைவனான பெருமை கிடைத்தால் அவன் மனம் என்ன செருக்குறுமோ அப்படியல்லவா தன்னை அறியமால் செருகுற்றிருக்கின்றாள்?
அந்நேரம் ஒரு வேலைக்காரன் கடிதம் ஒன்றைக் கொண்டு வருகின்றான், அதை எழுதியது அமைச்சன்.
அந்தக் கடிதம் ஒரு வழக்கைப் பற்றியது. தனமித்ரன் எனும் இளம் வணிகன் இறந்துவிட அவனின் வாரிசு இல்லாப் பெரும் செல்வம் அரசுக்கே சொந்தம் என அமைச்சர் அறிவித்து மன்னனின் ஒப்புதல் வேண்டி அனுப்பிய கடிதம் அது.
அதை வாசித்தபடியே துஷ்யந்தன் சொன்னான், “வணிகத்தையே தொழிலாகக் கொண்ட தனமித்ரன் கடலின் புயலில் சிக்கி மடிந்தான் என்பது துயரமே.
அவனுக்கு வாரிசு இல்லை என்பதை எப்படி இப்போதே சொல்லமுடியும்? அவன் வயதில் சிறியவன் அதுவும் தனவான்.
தனம் படைத்தவனுக்குத் தாரம் ஒன்றே என்பது நகைப்புகுரியதல்லவா? இராமன் போல ஒருத்தியோடு வாழ்பவர் இங்கே எவர் உண்டு? இராமனைத் தவிர அப்படி ஒரு வரலாறு எவனுக்குமில்லை. அந்த வணிகனுக்கு மனைவியர் பல இருந்து அவர்கள் கருவுற்றிருந்தால் இந்தச் செயல் கொடுமை அல்லவா?
அதனால் இது விரைந்து செல்லும் விஷயம் அல்ல, வணிகனின் தொடர்பெல்லாம் அறிந்து செய்யவேண்டிய நிதானமான பணி” எனச் சொன்னான்.
பணியாள் சொன்னான், “மன்னா, அந்த வணிகனுக்கு சங்கேத நாட்டில் ஒருத்தியுடன் தொடர்புண்டு என்பதும், அவளுக்குச சமீபத்தில் சீமந்தம் நடந்தது என்பதும் செய்தி”
“அப்படியானால் அந்தச் சொத்து அவளையே சாரும். அதுவே நீதி. இன்னொரு நாட்டின் குடிமகள் என்றாலும் இந்நாட்டவன் சொத்து அடுத்த நாட்டுகாரிக்கு என்றாலும் அதுவே நீதி”
என்றவன் பெருமூச்சு விட்டு மீண்டும் சொன்னான்.
“அங்கே குழந்தை உண்டா இல்லையா என்பது அல்ல சிக்கல், மன்னன் சரியானதை செய்வதே எதிர்பார்ப்பு.
மன்னன் என்பவன் நீரைப் போன்றவன், உருவமில்லா நீர் பாத்திரத்தில் ஊற்றபடும் வடிவத்தை பெறுதல் போல் மன்னன் மக்கள் இயல்புக்கு ஏற்றவாறு அமைதல் வேண்டும் அதுவே நல்லாட்சி
நான் சொன்ன தீர்ப்பை முரசறிந்து எல்லோருக்கும் சொல்லுங்கள்” என்றவன் சிந்தனையில் ஆழ்ந்தான்
சென்றவன் முரசறைந்து விஷயத்தை சொல்லிவிட்டு திரும்பி வந்து “சரியான நேரம் வந்த மழைபோல் மன்னரின் தீர்ப்பை மக்கள் ஏற்றுகொண்டனர்” என்றான்
சொன்னவன் வானம் பார்த்தான், மாலையின் இருள் வானில் தெரிந்தது, உறங்கி கொண்டிருந்த விண்மீனெல்லாம் விழித்து அவனை நோக்கி ஒரு கேள்வி கேட்டதை போல் திடுக்கிட்டான்
“அரசே பிள்ளை இல்லாதவன் சொத்தெல்லாம் அரசனுக்கு என்பது சட்டமாம், அந்த அரசனுக்கு பிள்ளை இல்லை என்றால் அவன் சொத்து யாருக்கு செல்லும் சொல்?”
மனதுக்குள் இந்த பெரும்குரல் கேட்க தலைகவிழ்ந்து சொன்னான் துஷ்யந்தன்
“தர்மத்தை காக்க சட்டமொன்றை இட்டேன், நாட்டுக்கொரு அறிவிப்பும் தந்தேன். ஆனால் பத்மாசூரனுக்கு வரம் தந்த சிவன் போல் ஆகிவிட்டேன், என் சட்டமே எனக்கு சோதனையாகின்றது
பெற்ற வரத்தை சோதிக்க சிவனை தேடிவந்த பதுமாசுரனை போல் என் சட்டமே எனக்கு சோதனையாயிற்றே?”
அதை கேட்ட பணியாள் சொன்னான் “எல்லோரையும் காக்கும் திருமால் உங்களையும் காப்பார் , கலங்க வேண்டா”
துஷ்யந்தன் சொன்னன “என்னை அடைய வந்த பெரும் சீரை தூக்கி எறிந்தேன், இன்று தூக்கி எறியபட்ட கனியின் மேல் அமரும் ஈக்கள் போல பிரச்சினைகள் என்னை மொய்க்கின்றதே என்ன செய்வேன்?
அதை கேட்ட சானுமதி சொன்னாள் “சாகுந்தலையினை இவர் எவ்வளவு நேசிக்கின்றார்?, ஆவி நைய அவளை
தேடி நிற்கின்றாரே என்ன அன்பு?”
துஷ்யந்தன் சொன்னான் “களர்நிலம் ஒன்றை, பாலை நிலமொன்றை காலமெல்லாம் உழுது வித்துமிட்டேன், ஒளியான வித்தெல்லாம் இருளாய் மாறி போனதன்றி வேறேதும் நடக்கவில்லை
செழுமையான நன்செய் நிலத்தை போன்றவளை ஒளிமணியினை இழந்துவிட்டேன், பெருமை மிகு புருவம்ச சுடர் ஒன்றை வயிற்றில் சுமந்தவளை விலக்கிவிட்டேனே எவ்வளவு கொடியது என் தவறு?”
அதை கேட்டு சானுமதி சொன்னாள் “அரசவம்ச காவியத்தின் அரும்கவிதை முடிந்ததென்று கலங்குதல் ஏனோ?
ஒரு சிறிய இடைவெளியினை முற்றுதல் என உணராததுமேனோ?, மன்னா உன் மரபின் வழிதான் பெரும் ஆறாய் பெருகி வளர்கின்றது பிழையின்றி எல்லாம் உனக்காகத்தானே”
மன்னன் நிலை கண்டு சதுரிகை சொன்னாள் “மன்னா ஒரு குவளையின் நீர் கொதித்தால் இன்னொரு குவளையில் இட்டு மாற்றி மாற்றி ஊற்றி சூடு போக்கலாம்
ஆனால் ஒரு கடலே கொதித்தால் அதன் சூட்டை எப்படி ஆற்றி போக்குவது? அதை போக்க ஊழி மழைதானே வேண்டும்?, பணியாளனே நீ சென்று ராஜமாதாவினை அழைத்துவா, அவரின் மொழிகள்தான் மன்னரை குளிவிக்கும்”
(தொடரும்..)