காளிதாசனின் சாகுந்தலம் : 29

காளிதாசனின் சாகுந்தலம் : 29

தேவலோகம் சென்ற அந்தத் துஷ்யந்தனுக்குப் பெரும் வரவேற்பைக் கொடுத்தான் இந்திரன். மேள தாளங்கள், நடனங்கள் என அமர்க்களப்படுத்தி நெருங்கிய நண்பன் வந்ததைக் கொண்டாடினான்.

அதில் மிக நெகிழ்ந்த துஷ்யந்தன் மாதலியிடம் சொன்னான், “நான் சிறியதாக உதவினேன். இவரோ பெரிதாக எனக்குத் திருப்பிச் செய்கின்றார், நான் ஒன்றைச் செய்தால் அவர் நூறாகச் செய்கின்றார்.

தென்றல் போல நான் அவருக்குக் கொஞ்சம் உதவினேன், அவரோ புயலாக எனக்குத் திருப்பிச் செய்கின்றார், என்ன அவரின் பெருந்தன்மை? என்மேல் கொண்ட அன்பு?” என உருகினான்.

மாதலி சொன்னான், “இந்திரனோ உமக்குத் தான் ஏதும் பெரிதாகச் செய்யவில்லை, அவனுக்கு இது போதாது எனச் சொல்லிக் கொண்டிருக்கின்றார், அன்பினால் செய்யும் காரியங்களுக்கு நிறைவு ஏது?

அடிவானம் முடிந்ததாகத் தோன்றினாலும் அதை நோக்கிச் செல்ல செல்ல நீண்டு சென்றுகொண்டே இருப்பது போல், அன்பினால் செய்யப்படும் காரியங்களுக்கு முடிவு ஏது?”

துஷ்யந்தன் நன்றி உணர்ச்சியில் மிகுந்து சொன்னான், “மாதலி, அவர் என்னை இந்த அமராவதிப் பட்டணம் அறிய தன் ஐராவத யானைமேல் அமரவைத்து அழைத்துவந்து அவர் அரியணையில் அமரவைத்து அவர் கையாலே மணமிக்க மந்தார மாலையினை அணிவிக்கும் பாக்கியமெல்லாம் யாருக்குக் கிடைக்கும்.

அவர் மகன் ஜெயந்தன் கூட அமராத சிம்மாசனத்தில் என்னை அமர வைத்தார் என்றால் அவரின் அன்புக்கு நான் என்ன செய்வேன்?

மாதலி புன்னகைத்துச் சொன்னான், “மன்னரே, தேவர் குலம் இருவரால் வாழும், முதலானவர் நரசிம்மமாக வந்து கூரிய நகங்களால் அசுரனை அழித்துத் தேவர்களைக் காத்தவர், இரண்டாவது, அவரின் நகம்போல் கூரிய அம்பு கொண்ட உங்களால்.
அப்படிபட்ட உம்மைக் கொண்டாடாமல் எப்படி?

துஷ்யந்தன் சொன்னான், “தேவலோகத்தைக் காக்க அந்தத் திருமாலே நரசிம்மமாய் வந்தார் என்றால் இந்திரன் மேல் அவர் கொண்ட அன்பு அப்படி, அவ்வளவு பாக்கியம் செய்தவன் இந்திரன், நான் அவருக்கு ஒரு நண்பனாய்க் கடமை செய்தேன், அதற்கு இவ்வளவு உபசரிப்பு மிகையானது.

திருமாலே வந்து நின்று காத்த இந்திரனுக்கு நான் எம்மாத்திரம்?”

மாதலி அவனை அழைத்துச் சொன்னான், “மன்னா! வாருங்கள் இந்த மாளிகையில் உமது கீர்த்திப் பரவியவிதம் பார்க்கலாம் வாருங்கள்.

உமது புகழ் நிலாவெளிச்சம் போல் பரவியிருக்கும் மாளிகையினைப் பாருங்கள், அழகான முறையான பண்களில் உம்மைப் புகழ்ந்து தேவலோகப் பெண்கள் பாடுவதைக் கேளுங்கள்.

பௌர்ணமி நிலவு போன்ற தேவமங்கையர் தங்கள் நெற்றியில் இட்டு மீதியான குங்குமத்தால் உங்கள் கோலத்தை வரைந்திருக்கும் அழகைப் பாருங்கள்.

கேட்டதெல்லாம் தரும் இந்தக் கற்பக மரமே கை அசைத்து உங்களை வரவேற்பதை அதன் இலைகள் அசைவில் பாருங்கள்”

துஷ்யந்தன் சொன்னான், “நான் இந்திரனுக்கு எதிரானவர்களை அழித்துப் போடவேண்டும் எனும் ஒரே ஒரு சிந்தனையில் மட்டும் இங்கு வந்தவன், இவைகளை இரசிப்பதற்காக அல்ல, இப்போது அந்த இலக்கை அடைந்துவிட்டதால் வெற்றிடமாக என் மனம் உணர்கின்றது”

மாதலி அதை கடந்தும் சொன்னான் .

“மன்னா! பூலோகத்தில் கங்கைப் போல இங்கு மந்தாகினி நதி ஓடும்.
பெற்றோரைக் கனிவுடன் காக்கும் பெண்கள் போல் இங்கு மந்தாகினியாய் ஒரு நதி உண்டு, கணவனைப் போற்றும் பெண்கள் போல இங்குப் பாகீரதி நதி உண்டு.
தான்பெற்ற பிள்ளைகளைக் காக்கும் பெண்கள் போல் இங்குப் போகவதி உண்டு.

திருமாலின் தனிப்பெரும் அருள்கொண்டோர் மட்டுமே இங்கு வரமுடியும், இந்தப் புனிதமான உலகில் தீமை என்பது ஒருகாலமுமில்லை, சூரியனின் கதிர்களைப் பிரித்தெடுத்து ஒளிரும் விண்மீன்கள் கூட்டத்தின் நடுவில் இருக்கும் இந்த உலகில் நீங்கள் சஞ்சரிக்கின்றீர்கள்”

துஷ்யந்தனுக்கு வானலோகத்தை இந்திரனின் தேரில் அவன் சுற்றிக்காட்டியபடிச் சொன்னான், அதற்குப் பதிலுக்குச் சொன்னான் துஷ்யந்தன்.

“என் மனமும் சிந்தையும் பெரும் நிறைவினைக் கொள்கின்றன, நான் உடலாலும் உள்ளத்தாலும் நிறைவினை உணர்கின்றேன், இது ஒளி உலகம் மட்டுமல்ல. புயல் உலகம் கூட‌?”

அது புரியாமல் அவனைப் பார்த்தான் மாதலி.

“மழைத்துளிகள் பட்ட சிறகுகுகளில் சூரிய ஒளி மாணிக்கம் போல் மின்ன பறக்கும் வானம்பாடி பறவைகள் போல, நம் குதிரைகள் வெளிச்சத்தில் மின்ன இந்த மேக கூட்டங்களைத் தாண்டி வந்திருக்கின்றோம் அல்லவா? மேகத்தைத் தாண்டிப் புயல்போல் செல்கின்றோம்”

“மன்னா! உங்கள் ஆட்சியில் இனி உங்கள் மண்ணுலகம் இதைவிட பெருமையாய் அழகாய் ஜொலிக்குமன்றோ, இந்தத் தேவர் உலகமே உங்களால் வாழும்போது, உங்கள் சொந்த மண்ணுலகம் இனி எப்படி வாழும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?”

அங்கிருந்தபடியே பூலோகத்தைப் பார்த்துச் சொன்னான் துஷ்யந்தன்.

“உயர்ந்து கிடக்கும் மலைகள் என் காலடியில் கிடப்பது போல் கிடக்கின்றது, கிளைபரப்பிய பெருமரங்கள் அகன்ற தலையுடன் தெரிகின்றன, வளைந்து நெளிந்து ஓடும் ஆறுகள் என் கண்முன் முழுக்கத் தெரிகின்றன‌.

பூமியின் முழு அழகை நான் இங்கிருந்துதான் காண்கின்றேன், மானிடலோகத்தில் தெரியாத அழகான மண்ணுலகம் இங்கிருந்து பார்க்கத் தெரிகின்றது.

பகவான் தன் ஒரு காலினால் அழித்த மண்ணுலகம் இதுவன்றோ?”

மாதலி திரும்பச் சொன்னான், “மன்னா! எல்லாவற்றையும் ரசித்துக் காணும் உங்கள் சிந்தனை யாருக்கு வரும்?

இந்த மண்ணுலகம் மட்டும் இல்லையென்றால் மாந்தர்கள் இல்லையென்றால் தேவர்களுக்கு ஏது அவிர்பாகம், அது இல்லையென்றால் ஏது இந்தத் தேவலோகம்? இந்த மண்ணுலகமே எங்கள் தாய்..” என வணங்கினான்.

துஷ்யந்தன் வானிலிருந்து பூமியின் அழகைக் கண்டு மயங்கிச் சொன்னான், “பொன்மாலை பொழுது அங்கு எவ்வளவு அழகானது? பொன்னை உருக்கினால் வழிந்தோடுவது போல் அந்த மலைகள் மின்னும் அழகுதான் என்ன?

கடலில் அடிகொண்டு வானில் முடிகொண்டு நிற்கும் இந்தப் பெருமலை இந்த மலையின் அழகைப் பார்? இது யாரின் மலையாக இருக்கும்?”

வானில் இந்திரனின் தேரில் இருந்து தனக்கு எல்லா இடமும் சுற்றிக்காட்டும் மாதலியிடம் இதைச் சொன்னான் துஷ்யந்தன்.

மாதலி சொன்னான்.

“மன்னா! இது தவசிகள் நிறைந்த இடம், குபேரனின் நண்பர்களான சிவனடியார்கள் தவம் செய்யும் ஏம கூட மலை, அங்கே பிரம்மனின் பேரனும் மாரீச முனியின் மகனுமான காசிபர் வாழ்கின்றார்.

நல்லோர், பொல்லோர், அசுரர், தேவர், அரக்கர் என எல்லோரும் ஒருசேர பணிந்து வணங்கும் அந்த மாமுனி இங்குதான் தவம் செய்கின்றார்”

துஷ்யந்தன் சொன்னான், “காலத்தை வென்றவர் காலில் விழுந்து பணிந்துவிட்டு வரலாம்”

சொன்னதும் தேரை இறக்கினான் மாதலி, அது பஞ்சு ஒன்று தரையினைத் தொடுதல் போல அழகாகக் கீழிறங்கி நின்றது.

புழுதி கிளப்பாமல் ஒரு சத்தமிடாமல், குலுங்காமல் அலுங்காமல் தாய் தன் குழந்தையினைக் கிடத்துவதைப் போல் அந்தத் தேர் பூமியினைத் தொட்டதை அறிந்து புன்னகைத்தான் துஷ்யந்தன்.

தேரில் இருந்து இருவரும் இறங்கினார்கள், ஒருமாதியான நிசப்தமும் தெய்வீக அமைதியும் அங்கே குடிகொண்டிருந்தது, துஷ்யந்ஹன் கண்களை மூடியபடி சொன்னான்

“ஏதோ ஒரு சக்தி இங்கு என்னை தெய்வீக ஆனந்தத்தில் மூழ்கடிக்கின்றது..”

மாதலி சொன்னான் “அதோ பாருங்கள் பாதி புற்றுக்குள் உடலின் மேல்பாதி தெரிந்தபடி, உடலெல்லாம் பாம்பின் தோல்கள் ஒட்டியபடி, உடலெல்லாம் செடிகொடிகள் சுற்றியபடி, புரிந்தும் புரியாத நுணுக்கமான தத்துவம் சொல்லும் நூல்களின் மூலநூல் போன்றது போல், சடாமுடியில் பறவைகள் கட்டிய கூடுகளுடன் எழில் மிகு சூரியனின் ஒளியினைக் கொண்ட முகமாய், அசையாத அடிமரம் போல் தவம் செய்யும் மாரிச முனியினைப் பாருங்கள்.

அதோ அங்கிருக்கின்றார்.

கங்கைக்குத் தொலைவிலே குளிர்க்காற்று அந்த நதியினைக் காட்டிக் கொடுப்பது போல இந்த எல்லைக்குள் வரும் ஆனந்த அமைதி முனிவர் தவமிருப்பதை சொல்லிவிடும்” என்றான்.

துஷ்யந்தன் சொன்னான், “சொர்க்கத்தின் அமிர்தமெல்லாம் குளமாய்ப் பெருகி அதன் மத்தியில் நான் இருப்பது போல் உணர்கின்றேன், இனி முனிவன் முன் சென்று அமர்ந்த்ருக்கலாம்”

(தொடரும்..)