காளிதாசனின் சாகுந்தலம் : 30

காளிதாசனின் சாகுந்தலம் : 30

காசிப முனி தவமிருக்கும் கோலத்தைக் காண்கின்றான் துஷ்யந்தன், இந்த உலகமே பெறும் சக்தி இருந்தும், எல்லாம் வசப்படுத்தும் ஆற்றல் இருந்தும் அவர் அதையெல்லாம் தாண்டித் தவமிருக்கும் கோலம் கண்டு சொல்கின்றான்.

“கேட்டது எல்லாம் தரும் கற்பக மரத்தின் அடியில் எதுவும் கேட்காமல் தவமிருப்பதன்றோ ஞானம்? இவர் ஞானி.

தாமரையின் இதழ்கள் வீழ்ந்து அதனால் பழுப்புநிறமாகக் கிடக்கும் இந்தத் தடாகத்தின் அருகே எந்த மாயையும் தன் மனதினைப் பழுப்பாக்காதபடி தெள்ளிய மனதோடிருக்கும் இவர் எப்படிபட்ட மகான்?

மண்ணுலகில் ஒருவன் இருப்பதல்ல தவம், எல்லாமும் அழகாய் அற்புதமாய் நிரம்ப கிடைக்கும் இந்தச் சொர்க்கத்தில் அழகிய அரம்பையர் நடமாடும் இந்த அழகுலத்தில், சுகமே பிரதானமான சொர்க்கத்தில் தவமிருப்பதன்றோ வலிமை?

உணவில்லாத ஒருவன் இருப்பது விரதமல்ல, அது பட்டினி. எல்லாம் இருந்தும் புலனடக்கி இருப்பதன்றோ விரதம், இவர் இருப்பதே விரதம்” எனச் சொல்லி வியந்தான்.

மாதலி மெல்லச் சொன்னான், “பெரியோர்களின் தேடலும் பற்றும் மேல் நோக்கி அன்றோ அமைந்திருக்கும், இவர்கள் அரும்பொருளாம் மெய்ப்பொருளை உணரவே அவர்கள் வாழ்கின்றார்கள்.

அவரிடம் நாம் என்ன கேட்டுவிட முடியும்? எல்லாமும் கடந்து நிற்பவர்களிடம் எதையுமே கடக்கமுடியா நாம் எதைக் கேட்டாலும் நகைப்பாகிவிடுமே?

மன்னா! நாம் அதிதி எனும் பெரும் பத்தினியினை மனைவியாக கொண்ட மாமுனிவர், அந்த அதிதி அம்மையாரிடமாவது சில அறிவுரைகளைப் பெறலாமா? சூரியனையே நிறுத்திவைத்த அவருடைய வலிமைபற்றி அறியாதவர் எவர் உண்டு?

மன்னா! நான் குழம்புகின்றேன். இந்த முனி தவத்தால் பெரியவர்… அவர் மனைவி இல்லறத்தால் உயர்ந்தவர், இந்நிலையில் எது நல்வழி என நமக்கு விளக்குவார் யார்? இல்லறமா? துறவறமா? எது சிறந்தது என்பதை அறியேன்” என்றான் மாதலி.

துஷ்யந்தனும் அதே குழப்பம் கொண்டு புன்னகைக்க ஒரு குரல் மட்டும் கேட்டது.

“வாழ்விலே பெரிய வாழ்வு இல்லற வாழ்வு, இல்லறத்தில் சிறப்புற வாழ்வோரே பெரும் துறவிகளை விட மேலானவர்கள் என்றாவார்கள்.

இல்லறம் என்பது இருதலைக் கொண்ட பறவையின் நிலையில் வாழும் உடலின் நிலையினைக் கொண்டது, அங்கு ஆண் பெண் என இரு தலைகளும் சமமே தவிர எதுவும் ஒன்றைவிட ஒன்று குறைந்தது அல்ல‌.

இன்னும் ஆழமாக நோக்கினால் பெண்மை எனும் ஒரே ஒரு புள்ளியில்தான் இல்லறம் இயங்குகின்றது, பெண் இல்லையேல் இல்லறமில்லை என்பதால் எல்லா உயர்வுகளும் அவளைச் சார்ந்ததே.

கண்ணோடு இமை சேர்ந்ததே கண்ணாகும், கண்ணுக்குள் கண்ணின் மணி பெண்மையாகும், கண் இமை ஆண்மையாகும். கண்ணைக் காக்க இமை அமைந்ததை போல பெண்ணைக் காக்க ஆண் அமைந்ததே இல்லறமாகும், இதை உணர்ந்தால் இல்லறம் உயர்ந்ததாகும்.

பெண் என்பவள் பார்வை, ஆண் என்பவன் காவல், பெண் என்பவள் கோவில், ஆண் என்பவன் அர்ச்சகன்.

பெண்ணும் தெய்வமும் ஒன்று என்றே உண்மை முழுக்க உணர்ந்தோர் உரைப்பர், அது எக்காலமும் நித்திய உண்மையுமாகும்.

வயிற்றில் உயிரைப் படைப்பதால் அவள் பிரம்மா, குடும்பத்தைக் காத்து வளர்ப்பதால் அவள் விஷ்ணு, சிறுமையினை அழித்து, தன்னலம் அழித்துப்போட்டு நிற்பதில் அவள் சிவம்.

முப்பெரும் தெய்வங்களும் ஒரிடத்தில் மூலமாய்க் குடிகொண்ட இடமே பெண்மை.

இந்த உலகின் உயிர்களெல்லாம் இடும் எச்சமும், கழிவும் மண் மீதே விழுகின்றன, அம்மண்ணோ அவற்றையெல்லாம் பொறுமையாய் ஏற்று உயிர் சக்தியாய் வெளிதருகின்றது, இதனாலே பூமியினை மேலோர் பெண் எனச் சொன்னார்கள், பெருமையுடன் போற்றி வணங்கிட்டார்கள்.

வழிவழியாய்க் குலக்கொடியினை மடியினில் தாங்கிவரும் பெண்மையினைப் போற்றாதவர்கள் இழிபிறப்புக்கள் தாழ்ந்தவர்கள், அரக்கரிலும் அவர்களுக்கு இடமில்லை.

எத்தனையோ பெரும் பாவம் ஆண்செய்தாலும் மன்னிக்கும் பெருந்தன்மையும் அரும் கருணையும் கொண்டவரே பெண்குலமாம், இறைவன் உறையும் கயிலையும் வைகுந்தமும் இருக்குமிடம் பெண்ணின் மனமே அன்றி வேறெங்குமில்லை.

எப்போதும் பசுமையாய் என்றென்றும் மணிவிளக்காய் ஜொலிக்கும் மனம் கொண்ட பெண்ணைப் போற்றி வாழ்வோர்க்குத் துயர் ஏதுமில்லை, மாறாக ‘தூ’ என தூற்றிவாழ்வோர் எக்காலமும் பெருமை கொள்ளார்.

இந்த உலகின் பெரும் சூட்சுமம் பலருக்குப் புரிவதில்லை, ஆண்களின் பெரும் கவலைகள் தீரா நோய் போன்ற கடும் கவலையெல்லாம் பெண்மையினைப் போற்றிடும்போது தானே தீரும், அதிசயம் ஆனால் உண்மை.

ஆண்பாதி பெண்பாதி என்பதெல்லாம் அறியாதவர் உரைப்பது, சிவன்பாதி சக்திபாதி எனச் சொல்லி அதுபோல் இதுவும் என இல்லறத்தைக் காட்டுவது, அதெல்லாம் முழுத்தவறு, உண்மையில் பெண் முக்கால் பங்கு ஆண் கால் பங்கு.

சிவன்பாதி சக்திபாதி என்போர், திருமாலை கண்டு அங்கே அவன் கால்பங்கு தேவி முக்கால்பங்கு என்பதை உணர்தலில்லை, ஆனால் உண்மை அதுவே.

திருமாலின் உருவமதை உற்றுப் பாரீர், அங்கே அந்தக் கார் நிறமெல்லாம் ஆண்மையாகும் செந்நிறமெல்லாம் பெண்மையாகும்.

திருமாலின் திருவடிகள் பெண்மையாய்த் தாங்கி நிற்கும் , திருக்கைகள் பெண்மையாய் வாரி தரும், அக்கண்கள் பெண்மையாய்க் கருணை பேசும், அந்தச் செவ்வாய் பெண்மொழியாய் அன்பு பேசும்.

அந்தத் திருமாலுள் திருமகளே முதன்மை பெற்றாள், அவன் நெஞ்சினில் குடிகொண்டு சீரும் தந்தாள்.

இல்லறமும் அப்படியே அறிந்துகொள்வீர், அங்கு ஆணும் பெண்ணும் தனியாய் இருப்பதில்லை, அங்கே ஆண்பாதி பெண்பாதி என்பதில் அர்த்தமுமில்லை. இல்லறமே இரட்டைக்கிளவியன்றோ, இல்லறம் உடல் என்றால் பெண் அங்கே உயிராவாள், பெண் எனும் உயிரின்றி ஆண் எனும் உடல் ஏது?

பெண்மைக்கோர் தீங்கை ஆண் செய்தான் என்றால், பெரும்பாவம் உலகுக்கே வந்து சேரும், சீதை வாழ்வும் பாஞ்சாலி சபதமும் சொல்வதும் அதுவன்றோ?

அங்கே செய்த தவறுணர்ந்து பெண்மை காலில் ஆண்மை வீழ்ந்திடில் அதுதான் ஆண்மைக்கு அழகன்றோ? வீரத்தில் பெருவீரம் அதுதானன்றோ? பெண்ணின் பெருமை அதனால் உயருமன்றோ?”

முனிவரின் அக்குரலைக் கேட்ட துஷ்யந்தன் சொன்னான் “மாபெரும் தத்துவத்தை ஒப்பில்லாப் பெரும் உண்மை போதிக்கின்றார், உலகத்தார் அறியவேண்டிய உண்மை இது”

மாதலி சொன்னான், “எம் மன்னர் இந்திரனின் நெருங்கிய நண்பர். நீர், இந்த காசிபர் அவருக்குத் தந்தை போன்றவர், அதனால் நீர் இங்குத் தங்கியிருக்க உரிமை உண்டு, அதனால் இந்த அசோக மரத்தடியில் அமர்ந்திருப்பீர், அது உமக்கு நல்ல ஆறுதலைத் தரும்” என்றான்.

அப்படி அமர்ந்திருந்த துஷ்யந்தன் முனிவரின் மொழிகளை எண்ணிப் பார்த்தான், சாகுந்தலையினை அவன் இழந்த பெரும் சாபம் அவனை வாட்டிற்று.

ஆனால், நல்ல சகுனங்களைக கண்டான், அவன் வலதுதோள் துடித்தது, அது ஏதோ நல்லது நடக்கப்போகும் அறிகுறி.

இனி என்வாழ்வில் ஏது வசந்தம் என்பது போல் விரக்தியாய்ச் சொன்னான் துஷ்யந்தன். “என் வலது தோளே ஏன் துடிக்கின்றாய்? சென்றுவிட்ட ஆற்றின் வெள்ளத்தை அணை கட்டி மீட்கமுடியுமா? நடவாது அது எனத் தெரிந்தபின்னும் ஏன் துடிக்கின்றாய்?

கடைந்தெடுத்த வெண்ணையினை மீண்டும் மோரில் கலப்பாயோ? இழந்துவிட்ட ஒன்றை மீண்டும் அடைவாயோ? அன்புமாளிகையினை அடைத்துவிட்டு சாவியினைத் தொலைத்துவிட்டபின்பும் உனக்கேன் இந்த துடிப்பு சொல்?

அந்நேரம் சில பெண்கள் குரல் கேட்கின்றது, “சிறுவனே ஓடாதே, நீ துடுக்கானவன் ஆகிவிட்டாய் ஆனால் வலியதை தொடாதே, நல்வழியில் உன்னை வளர்க்க நாங்களெல்லாம் இருக்கும்போது இவ்வகையில் அடங்காமல் வளராதே” என்ற குரலும் சலசலப்பும் கேட்டது.

தவம் செய்யும் முனிவர் வனத்தில் ஏது இப்பெண்களின் குரல் எனக் குழம்பி. “இதென்ன மாலைநேரத்தில் பூபாளம், தவக்குடிலில் இதெல்லாம் சாத்தியமா?” என்றபடி குரல் வந்த திசை நோக்கினான்.

அங்கே ஒரு சிறுவன் தாயிடம் பால் அருந்தும், சிங்கக் குட்டி ஒன்றை பிடித்து இழுத்து அச்சமின்றி விளையாடுகின்றான், அதன் பிடறிமயிறை இழுத்துப்போட்டு சிரிக்கின்றான்.

அவனைக கண்டதும் தனக்குள் சிலிர்த்தான் துஷ்யந்தன், சிறுவர்களுக்கு அரசன் போல் கம்பீரமாய் நின்று சிங்கக்குட்டிகளோடு விளையாடும் இவன் யாரோ? இப்பெண்கள் யாரோ எனப பார்த்துக் கொண்டிருந்தான்.

அச்சிறுவன் சிங்க குட்டியிடம் சொன்னான், “ஏய் சிங்கககுருளையே, உன் வாயை திறந்து எனக்குக் காட்டு, உனக்கு எத்தனை பற்கள் என நான் எண்ணிப்பார்க்க வேண்டும், நீயாகக திறக்காவிட்டால் உன் வாயினை நான் திறப்பேன்” என அதன் வாயினைப் பிடிக்க முயன்றான்.

பெண்களில் ஒருத்தி சொன்னாள், “சிறுவனே அதை விட்டுவிடு, அதுவும் உன்னைப்போல் இங்கு அன்பாய் வளர்க்கப்படுகின்றது, அதற்குப் மடப்பள்ளி வரை வரவும் உரிமை உண்டு. தாயிடம் பால் அருந்தி விளையாடும் அதை ஏன் கஷ்டப்படுத்துகின்றாய் விட்டுவிடு, நீயும் அதுவும் வேறில்லை என்பதற்காய் அதனுடன் போட்டியிடாதே” என்றாள்.

அந்தச் சிறுவனைக் கண்டதும் துஷ்யந்தன் மனம் உருகிற்று, அவன் கண்களில் நீர் பனிக்கச் சொன்னான்.

“இவனை நான் என் மகன்போல் காண்கின்றேன் ஏன்? இவனைக் கண்டதும் என் மனம் ஏன் என்னிடமில்லாமல் அவனிடம் செல்கின்றது?

மலரை வண்டு சுற்றுவதுபோல் என் மனம் அவனிடம் சுற்றுகின்றது, இரும்பை ஈர்க்கும் காந்தம் போல் அவன் குட்டிக கண்கள் என்னை ஈர்க்கின்றன, எனக்கு ஏன் இவன்மேல் இத்தனை அன்பு பெருக்கெடுக்கின்றது, எனக்குக் குழந்தை இல்லாத பெரும்வலிக்கான ஆறுதலாய் அவனைக் காண்கின்றேனோ?”

அப்பெண் சொல்கின்றாள், “நீ அந்தச் சிங்கக்குட்டியினைக் கீழே விடு, அதன் தாய் எழுந்துவிட்டால் உன்னைக் குதறிப் போடும்”

அவன் கொஞ்சம் நடித்தபடி சொன்னான், “நான் குட்டியினை விடாவிட்டால் அது என்னைக் குதறுமா? எங்கே வரட்டும் பார்க்கலாம், நான் குட்டியினை விடமாட்டேன்”

அவனின் தைரியத்தை கண்டு புன்னகைத்துச் சொன்னான் துஷ்யந்தன், “என்ன தைரியம் இவனுக்கு, நெருப்பில் சிறு பொறிதான் காட்டையே எரிக்கும், பெரிய மரம் சிறிய வித்தில்தான் அடங்கியிருக்கும், இவன் பெரும் சக்தியாய் எழுவான்”

அப்பெண்கள் சொன்னார்கள், “நீ இந்தக் குட்டியினை விட்டுவிடு உனக்கு விளையாட வேறு பொருள் தருகின்றோம்”

அவன் பிஞ்சு மொழியில் சொன்னான், “இதைவிட சிறந்த பொருளைக கொடுங்கள். இதனை விட்டுவிடுகின்றேன்” எனச் சொல்லி கையினை நீட்டினான்.

அவன் அப்படி மழலையாய் அழகாய் சொன்ன மொழிகேட்டு தன்னை மறந்த துஷ்யந்தன் அவனருகே மெல்லச் சென்று அவனைக் கவனித்தான், அந்தப் பிஞ்சுக் கைகளைக் கண்டான்.

சூரியன் தலைகாட்டும் அதிகாலையில் வானில் சூரியன் சிவக்கத் தொடங்கும் அந்நேரத்தில் குளத்தில் தன் மலரை நீட்டியிருக்கும் தாமரையின் இதழ்கள் முழுக்க விரியாமல், மெல்ல விரிந்தும் விரியாமல் நிற்கும் அந்தத் தோற்றம் போல் சிவந்த பிஞ்சு கையினைக் கொண்டிருக்கும் கரங்களைக் கண்டான்.

சூரியனைக் கண்டால் உருகும் பனிபோல் துஷ்யந்தனின் மனம் அச்சிறுவனிடம் உருக ஆரம்பித்தது, மனம் உணர்ந்ததை கண்கள் துளிர்த்து காட்டின‌.

(தொடரும்..)