காளிதாசனின் சாகுந்தலம் : 31
காளிதாசனின் சாகுந்தலம் : 31
சிங்கக்குட்டியினைக் கீழே விடாமல் விளையாடும் அச்சிறுவனைக் கட்டுப்படுத்தமுடியாமல் அந்தப் பெண்கள் பேசிக்கொண்டார்கள்.
“இவனை நம் வெற்றுச் சொற்களால் அடக்கமுடியுமா, கதிரவனைப் போர்வையால் போர்த்தமுடியுமா? மார்கண்டன் கொடுத்த அந்த அழகான மயில்பொம்மையினைக் கொண்டு வந்து கொடுப்போம், அப்போதுதான் இவன் இந்தச் சிங்ககுட்டிகளை கீழே விடுவான்”
ஒரு பெண் அந்தப் பொம்மையினை எடுக்கச் செல்ல, அச்சிறுவன் சிரித்துக் கொண்டே சொல்கின்றான், ” போ.. போ நீ வரும்ரை இந்தச் சிங்ககுட்டியினை நான் விடமாட்டேன்”
துஷ்யந்தன் அந்தச் சிறுவனை நெருங்கி சென்று பார்த்து உருகிச் சொன்னான், “என் இளவயது வீரத்தை இவனில் காண்கின்றேன், பயமற்ற அவனின் தோற்றம் என் பால்யத்தை எனக்கே காட்டுகின்றது, இவனை நான் காணும்போது எனக்குள் ஏன் எல்லையற்ற பாசம் ஊறுகின்றது.
தன் மக்கள் மழலையினைக் கேட்போர்கள், அரும்பான அக்குழந்தையின் சிறுபற்கள் சிரிப்பினைக் காண்போர்கள், அக்குழந்தையினை மடியினில் அமர்த்துவோரும், ஒரு கலத்தில் தானும் உண்டு, குழந்தைக்கு ஊட்டி மகிழ்ந்து அவர்கள் வாயில் சிந்தும் உணவினை ரசிப்போரும் பேறுபெற்றவர்கள்”
அவன் தனக்குள்ளே சொல்லிக்கொண்டு சிறுவனை நோக்கியபோது அப்பெண் அவனைக் கண்டு சொன்னாள், “அடேய் சொன்னால் கேட்கமாட்டாயா? அந்தச் சிங்ககுட்டி பாவம் விட்டுவிடு, ஐயா நீங்களாவது இவன் கையிலிருந்து அதனைவிடுவிக்கக் கூடாதா, பாவம் அவற்றை அழுத்தி வதைக்கின்றான்” என்றாள்.
துஷ்யந்தன் சிறுவன் அருகே வந்து சொன்னான் .
“முனிவரின் மகனே, கடும் வெயிலில் வதைபடும் விலங்குகள் வந்து தஞ்சமடையும் இந்த அடைக்கல வனத்தில் இப்படிச் சிங்ககுட்டியினை வதைக்கலாமா? சந்தனமரம் நிறைந்த சோலையில் இப்படி மலைபாம்பு போல் கொடுமை செய்யலாமா? இது உனக்குத் தகுமா?”
அருகில் நின்ற பெண் சொன்னாள். “ஐயா இவன் முனிவரின் மகன் அன்று, அப்படிச் சொல்லாதீர்கள்?”
துஷ்யந்தன் சொன்னான், “அதுதான் இவன் செயலிலே தெரிகின்றதே, முனிவர் மகனுக்கு இந்த முரட்டுத்தனம் எப்படி வரும்? காட்டில் முனிவர் வனத்தில் வளர்பவனை வேறு எப்படி கருதமுடியும் பெண்ணே? நான் என்றல்ல எல்லோரும் அப்படித்தானே நினைப்பார்கள்?”
சொன்னவன் அந்தச் சிறுவனின் கரங்களில் இருந்து சிங்கக்குட்டியினை விடுவிக்க முயன்றபொது அவன் கரங்களைத் தொட்டபோது இனம்புரியாச் சுகமொன்றில் பரவசத்தில் திளைக்கச் சொன்னான்.
“இவன் பிஞ்சு விரல்கள் கையில்படும்போது நான் இன்பத்தின் எல்லைக்கே செல்வதென்ன? எனக்கே இவ்வளவு மகிழ்ச்சி என்றால் இவன் தகப்பன் இவனைத் தீண்டும்போது அடையும் மகிழ்ச்சி என்ன?”
சொன்னவன் சிங்கக்குட்டியினைச் சிறுவன் கையிலிருந்து விடுவித்தான், அச்சிறுவனும் அவனிடம் அடங்கி நின்றான் கட்டுப்பட்டு நின்றான்.
“இது வியப்பான புதுமை” என்றாள் அப்பெண்.
“எது பெண்ணே?” என்றான் துஷ்யந்தன்.
“ஐயா நீரும் அவனும் ஒரே தோற்றத்தில் இருக்கின்றீர்கள், நீர் அன்னியன் என்றாலும் உங்களுக்கு அவன் மிக இயல்பாக நீண்டகாலம் அறிமுகமானவர் போல் கட்டுப்படுகின்றான், ஒருவித பந்தம் உங்களுக்குள் இருப்பது போல் தெரிகின்றது, இதுதான் எனக்குப் புதுமையாய், விசித்திரமாய் உள்ளது” என்றாள்.
துஷ்யந்தன் அச்சிறுவனின் தலையினை வாஞ்சையாய் தடவியபடி கேட்டான், “பெண்ணே, முனிவர் மகன் இவன் இல்லையென்றால் இவன் எந்தக் குலம்?”
அவள் சொன்னாள், “அவன் பழிகள் சொல்லமுடியா புரு குலம்”
துஷ்யந்தன் தனக்குள் சொல்லிக்கொண்டான், “என்னைப் போலவே இவனும் புருகுல வாரிசு, இதைப் பழசுளைகள் அனைத்தும் கலந்த மொழியால் அப்பெண் சொன்னாள்.
புருகுல மன்னரெல்லாம் கடமை தவறாமல் ஆள்வர். பின் சிலகாலம் துறவியரோடு வனத்தில் தங்கியிருப்பர், மாறி மாறி இப்படி வாழ்வோர் ஒரு கட்டத்தில் மகனிடம் ஆட்சியினைக் கொடுத்துவிட்டு வனம் புகுந்துவிடுவர்.
எனக்குத்தான் அப்படி ஒரு மகவு இல்லையே என் செய்வேன், இது பெரும் புருகுலத்தின் ஏதோ கிளையில் வந்த வாரிசு” என இன்னும் பாசமாக அவன் தலையினை வருடினான்.
அப்பெண் தொடர்ந்தாள், “ஐயா, அவன் தகப்பன் புருகுலம். ஆனால், அவனை நாங்கள் அறியோம், கர்ப்பிணியாய் நின்ற இவன் அன்னை இந்திரனின் அரம்பையரின் உதவியால் இங்கு வந்து காசிபரிடம் அடைக்கலமானாள், அங்கு இவனைப் பெற்றெடுத்தாள்” என்றாள்.
துஷ்யந்தன் திடுக்கிட்டான் “என்னது, இவள் அன்னை கர்ப்பிணியாய் அதுவும் அரம்பையர் வழி இங்கு வந்தாளா?” என்றவன் துடித்தெழுந்த மனதிடம் சொன்னான்.
“மனமே நீ நம்பிக்கை கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது, விதியின் வாசல் மீண்டும் திறக்க வாய்ப்பும் உண்டு” என உற்சாகமானவன் கேட்டான்.
“பெண்ணே. அழகான முகம் கொண்ட இச்சிறுவன் யாருடைய மகன்? இவன் தாய்தகப்பன் பெயர் என்ன? முடிந்தால் எனக்குச் சொல்லமுடியுமா? அச்சப்படாமல் சொன்னால் மகிழ்வேன்” என்றான்.
அப்பெண் சொன்னாள், “ஐயா அவள் காதலில் வீழ்ந்தாள், கணவனை அடைந்தாள், கர்ப்பமாய் இவனையும் வயிற்றில் ஏற்றாள். ஆனால், அந்தக் கயவனோ பெரும்பாவி, இவளைப் பிழை சொல்லி நீக்கிவிட்டான்.
மாங்கனியினை உண்டு விதையினை வீசுவது போல் வீசிவிட்டான் கொடியபாவி, அவன் அசுத்தமானவன், தீமையானவன் என்பதால் அவன் பெயரும் விஷயமன்றோ, அவன் பெயரை என் வாயால் சொன்னாலே எனக்குத் தீமை வரும், என் நாவு பெரும் புண்ணைப் பெற்றது போல் துயர் கொள்ளும்.
மானிடரில் அறமறியா மரம்போன்ற கொடியவன் யாரென பெயரைக் கூட என்னால் சொல்லமுடியாது. மன்னிப்பீர்”
துஷ்யந்தன் விரக்தியான வேதனை அதிர்ச்சியில் சொன்னான், “என் கதையினை நானே கேட்கும் துர்பாக்கிய நிலை எனக்கு, நுனிக்கிளையில் இருந்து அடியினை வெட்டுபவன் நிலைபோலானேன்.
என்னையே இவள் மொழிகள் சுடுவதால் இனியும் இவன் பெற்றோர் யாரென எப்படிக் கேட்கமுடியும்? ஒருவேளை அவள் இன்னொருவன் மனைவியாக இருந்தால் கேட்பதும் சரியல்ல அன்றோ” எனச் சொல்லிக்கொண்டான்.
அந்நேரம் இன்னொருபெண் அழகான மயில் பொம்மையினைக் கொண்டுவந்து கொடுத்துச் சொன்னாள், “அழகான இந்தப் பறவை பொம்மையினைச் சாகுந்தலையினை வைத்துக் கொள்”
துஷ்யந்தன் மனதில் ஆயிரம் மின்னல்கள் வெட்டின, என்னது சாகுந்தலையா? என அதிர்ந்தான். அச்சிறுவனோ “அம்மா எங்கே” என மழலையாய்க் கேட்டான்.
அதைக் கேட்டதும் இன்னொரு பெண் சொன்னாள், “அழகான பறவையின் பெயர் சாகுந்தலை, அதைச் சொன்னால் இவன் தன் தாயினைத் தேடுகின்றான் பார்?”
துஷ்யந்தன் முகம் மெல்ல வாடிற்று, “ஓ! சாகுந்தலை என்றால் அழகான பறவை என்றொரு பொருளும் உண்டல்லவா? என்னிடம் வந்த அந்தப் பறவையினைத்தான் காயப்படுத்திவிட்டுவிட்டேனே.
இவன் அன்னை பெயரும் சாகுந்தலையா? நான் தேடும் சாகுந்தலை இவளா? நெஞ்சமே இவளா, அலையோசையிட்டு பொங்கும் கடல்போல எழும் நெஞ்சமே அது அவளா.
ஆடிமாத கங்கைபோல் எழும் என் நெஞ்சமே அது அவளா?
பொறு, அது அவளாக இல்லாவிட்டால் கானல் நீரைப்போல் ஏமாறுவாய், பெயரை மட்டும் வைத்து என்ன முடிவு செய்துவிடமுடியும், என் விதியே ஏமாறுவது என்றால் இன்னொருமுறை ஏமாறத்தான் வேண்டும் அதனால் அமைதிகொள்”
அவன் குழம்பி நிற்க, அப்பெண் எதையோ தேடினாள், துஷ்யந்தன் என்ன எனக கேட்டான்.
“ஐயா இவன் கையில் கட்டியிருந்த காப்பு கயிற்றைக் காணவில்லை, அது முக்கியமானது” எனச சொல்லித்தேடினாள்.
அருகில் அது தரையில் கிடப்பதைக் கண்டு “இதுதானே” என எடுக்கப் போனான் துஷ்யந்தன்.
அப்பெண் ஓடிவந்து தடுத்துச் சொன்னாள், “ஐயா இது மாமுனி காசிபர் கொடுத்த மந்திரக் கயிறு, இதனை இவனின் பெற்றோர் தவிர யாரும் தொட்டால் அது பாம்பாய் மாறி அவர்களைக் கொன்றுவிடும், இவனைக் காக்க அவர் செய்த ஏற்பாடு.
அதனால் நீங்கள் தொட்டு ஆபத்தில் சிக்கக் கூடாது, இவன் அன்னை சாகுந்தலையினை அழைத்துவருவோம்” என்றார்கள்.
சாகுந்தலை வருகின்றாளா, பெயர்கள் ஆயிரம் மாறலாம் உருவம் ஒன்றல்லவா? நான் தேடும் அம்முகம் இவளாக இருந்தால் என அவன் நினைக்கும்போதே பெரும் மயக்கமும் கலக்கமும் சிலிர்ப்பும் அவனுக்குள் வந்தது. மெல்லிய அழுகையும் ஏக்கமும் இனம்புரியா இன்பமும் ஒருசேர அவன் அவளை எதிர்பார்த்து நின்றான், அவன் பெருமூச்சில் அந்த வனமே அதிர்ந்தது.
(தொடரும்..)