காளிதாசனின் சாகுந்தலம் : 32

காளிதாசனின் சாகுந்தலம் : 32

சாகுந்தலை தன் மகனையும் அந்தத் தாயத்தையும் தேடி வந்தாள், அவள் வரும்போதே அந்தத் தாயத்து இன்னொருவன் எடுக்க முயன்றும் உருமாறவில்லை என்பது சொல்லப்பட்டது, அவள் குழம்பினாள்.

“என் மகன் கையிலிருந்து விழுந்த தாயத்து அந்நியர் முன் நாகமாய் மாறியிருக்க வேண்டுமே? முனிவர் சொன்னபடி அது ஏன் மாறவில்லை. பசியடங்கிய புலிமுன் இட்ட உணவுபோல் அப்படியே கிடக்கும் மர்மம் என்ன?

எப்போதுமே நான் வைக்கும் நம்பிக்கைகளாலே ஏமாற்றப்படுபவள் நான், இதுவும் அப்படித்தானோ. என் மகனின் காவலில் என்ன நிகழ்ந்தது?” எனக் குழம்பியபடி வந்தாள் சாகுந்தலை.

தொலைவில் இருந்து அவளைக் கண்ட துஷ்யந்தன் சிலையாய் நின்றான். பொங்கி வந்த அழுகையினைக் கட்டுப்படுத்தியபடி விசும்பலை மறைத்தபடி பெருமூச்சினை அடக்கிக் கொண்டான்.

அவன் நெஞ்சம் படபடத்தது. நா வறண்டது. குருடன் கண்பெற்றது போல் அவனால் நம்பமுடியா அதிசயமாய் அவளைக் கண்டான். கைகளைப் பாதி நீட்டி பின் ஆமை தன் கழுத்தை ஒட்டுக்குள் இழுப்பதைப் போல் இழுத்துக் கொண்டான்.

வானமும் பூமியும் அவனுக்குள் சுழன்றது.

“நங்கூரமிட்ட கப்பல் போல் முகத்தில் அசைவற்று நிற்கின்றாள் அவள், பிரிவுத்தீ சுட்டதில் அவள் அழகெல்லாம் பட்டுப்போயிற்று. முகமெல்லாம் வற்றிப்போயிற்று.

பட்டுவிட்ட மரம்போல் நிற்கின்றாளே, தோல் உரிக்கப்பட்ட பட்டுப்பூச்சியாய் உருமாறி கிடக்கின்றாளே, ஐய்யகோ, என் பேரழகே! கங்கையே! வற்றியதுபோல் நின்றிருக்கும் கோலமென்ன?

இரக்கமே இல்லாத என் அவையில் நான் கண்டபோது தலையினைப் பின்னி எப்படிச் சடையிட்டிருந்தாளோ அதே சடையுடன் இப்பொழுதும் இருக்கின்றாள், நான் கொடுத்த பிரிவென்னும் தண்டனையினைத் தன் தவத்தால் வென்றவளாய் நிற்கின்றாள் மாதரசி.

சாகுந்தலை மகன் அருகே நிற்கும் மனிதனைப் பார்த்துவிட்டுத் தெளிவில்லா நிலையில் சொல்கின்றாள்.

“இவரைப் பார்த்தால் யாரென தெரியவில்லை, ஆனால் மிகுந்த உரிமையுடன் பாசத்துடன் என் மகனைத் தழுவி நிற்கின்றார், எங்கிருந்து வந்தார் இவர்? யாரைக் காண வந்தார்?”

பரதன் சாகுந்தலையினை நோக்கிச் சொன்னான்.

“அம்மா, இவர் யாரெனத் தெரியவில்லை, மகனே என்கின்றார். என்னைக் கட்டி அணைக்கின்றார், இவர் யாரென உனக்காவது தெரியுமா சொல்”

துஷ்யந்தன் உடைந்த குரலில் சாகுந்தலை நோக்கி மரம்போல் நின்று கைநீட்டி விசும்பியபடி சொன்னான்.

“பனிமூட்டம் மிகுந்திருந்தால் அருகில் நிற்போர் தெரியமாட்டார்கள், என் அன்பே உனக்கு என்னைத் தெரியவில்லையா? என் குரல் உன்னைத் தொடவில்லையா?

என் வாழ்வே, நான் இழைத்த கொடுமை கூட உன்னை நலமாய்க் காப்பாற்றிவிட்டதில் மகிழ்கின்றேன்”

சாகுந்தலைக்கு அக்குரல் ஏதோ செய்தது, அவனை உற்றுப் பார்த்தாள். அவள் மனம் வேகமாகத் துடித்தது. இனம்புரியா ஆனந்தமும் குழப்பமும் அவளைச் சூழ்ந்தது.

பரபரக்கும் சிந்தனையுடன் போராடியபடி மனதுக்குச் சொன்னாள்.

“மனமே, ஆறுதல் கொள். அவர் செய்த பகையினை அவரே அழித்தார். இனந்தெரியா மகிழ்வில் இருக்கும் மனமே, அது உன் தலைவனின் குரல் என்பதில் ஏன் இன்னும் ஐயம் கொள்கின்றாய்? அது அவரேதான்”

துஷ்யந்தன் தரையில் மண்டியிட்டு வீழ்ந்தான். வில்லிலிருந்து தவறி வீழ்ந்த அம்புபோல் விழுந்தான். அவன் உடல் செயலற்றவனாய், உயிர்பாதி பிரிந்தவனாய் மருகிச் சொன்னான்.

“என் சாகுந்தலையே! என் வாழ்வே! என் எழில்சுடரே! உன்னை மீளக் கண்டுவிட்டேன். நான் பாக்கியசாலி.

கிரகணம் நீங்கியச் சந்திரனை ரோகிணி நட்சத்திரம் அடைதல் போல, ஓய்வெடுத்து முடித்தவன் ஆர்வமுடன் கடமை செய்ய முனைதல் போல, கல்வியாலே அரும்பயனை அடைந்தவன் போல நீ என்முன் வந்தாய்.

நான் கொண்ட மறதி எனும் வெறிநாயின் பற்களால் சிதைக்கப்பட்ட பொன்மானே, என் சாகுந்தலையே, நீ மீண்டும் என் முன் வந்துவிட்டாய், என் வாழ்வின் எல்லாமும் நான் பெற்றேன், நலமெல்லாம் என்முன் கண்டேன்”

சொன்னவன் வார்த்தை வராமல் கேவத் தொடங்கினான்.

“என் புகழே” எனத் தொடங்கிய சாகுந்தலை வார்த்தை அதற்கு மேல் வராதபடி அழத் தொடங்கினாள்.

துஷ்யந்தன் அந்தக் காடு அதிர சொன்னான், “இங்குலிகம் எனும் செங்கட்டி பூசாமலே சிவந்த உதட்டைக் கொண்டவளே, அது எங்கே?

அரம்பரையும் தோற்றுவிடும் அற்புத பொலிவெங்கே, கண்டவரும் சுருண்டுவிழும் தனித்தப் பெரும் பொலிவெங்கே? என் அன்பே! என் தேடலே! கடைசியாய் நான் வென்றுவிட்டேன்.

என் அரண்மனையின் பெருமையே! என் ஆத்மாவின் முழுமையே! என்னையே நான் மீளக் கண்டுவிட்டேன், இனி நம்மைப் பிரிப்பார் எவருமில்லை, இந்த உலகிலே இனி மகிழ்ச்சியானவன் என்னைப்போல் எவருமில்லை”

சொன்னவன் அவளை நோக்கி கைகளை நீட்டினான், அவள் தன் மகனை அணைத்துக் கொண்டு கதறி அழத் தொடங்கினாள், அது ஆனந்த அழுகையாய் இருந்தது.

சிறுவன் பரதன் கேட்டான் “அம்மா, இவர் யார்?”

அவள் ஆனந்த அழுகையில் வெயிலில் மழை பெய்வது போல், அழுகையிலும் சிரித்தபடி சொன்னாள்.

“அவர் யாரா? உனக்குள் உயிர்விளக்கு ஏற்றியவரை நம்முடைய தவப்பயனை நம்முடைய நல்வினையினை நீயே கேள் மகனே”

அர்ஜூனன் அம்பினால் வீழ்ந்த கர்ணன் தட்டுத் தடுமாறி செல்வது போல் அவளை நோக்கித் தடுமாறி சென்ற துஷ்யந்தன், “என் பெருமையே! என் தவமே! என்னை மன்னித்துவிடு. எல்லாம் என் சாபத்தால் வந்தது. நானாக செய்ததில்லை, கங்கை பொங்கிவந்தால் வற்றிவிட்டால் அதன் தவறா? அது விதியன்றோ?” என்றவன் அவள் பாதத்திலே வீழ்ந்துவிட்டான்.

அவள் குனிந்து அவன் தலையினைத் தொட்டாள். அவளுக்கு முன் அவள் கண்ணீர் அவனைத் தொட்டது.

அந்நேரம் மரங்களெல்லாம் ஆடி மலர்களைப் பொழிந்தன, கருணைமிக்க அந்த முனிவன் வனத்தில் வாழும் எல்லா விலங்குகளும் குதித்தாடின. பறவை கூட்டமெல்லாம் அகமகிழ்ந்து கத்திற்று.

மலையமானின் பெரும் யானை மக்கள் முன் நிற்கும்போது மக்கள் அஞ்சுதல் போல், அந்தச் சிறுவன் பரதன் மருவிப் பார்த்துகொண்டிருந்தான், சாகுந்தலை மனதுக்குள் சொன்னாள்.

“பாரத போரில் கண்ணன் சக்கரத்தால் நிலைகுலைந்து போன சூரியனைப் போல் என் நிலைமை ஆகிவிட்டது”

துஷ்யந்தன் கேவித் திணறியபடிச் சொன்னான், “என் அழகே! நான் உன்னை விரட்டிவிட்டேன். பெரும் கொடுமை செய்துவிட்டேன், பெரும்கொடுமை பல செய்துவிட்டேன். ஈட்டி பல எறிந்து உன் நெஞ்சை பிளந்து விட்டேன்.

என் கண்ணே, என் மேல் கொண்ட வெறுப்புகளெல்லாம் உன் மனதில் குப்பையாய்க் குவிந்திருக்கும். அதில் ஒரு குப்பையாய் என்னை தள்ளிவிடாதே.

என் அமுதமே! பழைய தீங்கினை எண்ணாதே. அது என் விதியின் கொடுங்காலம். என் வெண்மனம் கறுத்துக் கடும்கசப்பாய் மாறிப்போன இருள்காலம். அது அகன்றதம்மா, என் கண்ணே.

அன்று நான் பேய்பிடித்தவன் போலானேன்; அமுதை நஞ்சென்றேன்; பெரும் புகழை இகழ் என்றேன்; மெய்யதனை பொய் என்றேன்; எல்லாத் தீமையும் நான் புரிந்தேன். என் செல்வமே.

பெரும் அறிஞன் ஞானப் பித்தேறிக் கழுத்திலிட்ட மலர்மாலையினை சீ என எறியும் நிலைபோல் பெரும் பித்தம் ஏறி நின்றேன். என் அன்பே, இன்று மன்னிப்புக் கோரி உன் பொன்னடிகளைப் பற்றி நிற்கின்றேன்.

கொடிய ராவணனையே மன்னிக்கத் துணிந்த மண்டோதரிபோல் என்னை மன்னிக்க மாட்டாயா என் அரும்பே”

(தொடரும்..)