காளிதாசனின் சாகுந்தலம் : 33
காளிதாசனின் சாகுந்தலம் : 33
சொன்னவன் சாகுந்தலை முன் வெட்டிய மரம்போல் வீழ்ந்து கிடந்தான். அவன் கைகள் அவள் பாதம் பற்றின, தெய்வ விக்ரகமொன்று தன் முன் சாய்ந்து கிடப்பதைப் போல் பதறிய சாகுந்தலை மண்டியிட்டு தன் முகத்தை மூடிக்கொண்டே அழுதுச் சொன்னாள்.
“என் தெய்வமே என்ன செய்கின்றீர், என்னுடைய வல்வினையோ இக்கொடுமையெல்லாம் நான் காண்பது? என் வாழ்வே என் அன்பே இது தகுமோ, நான் மன்னிப்புக் கேட்க வேண்டிய இடத்தில் என்னைத் தேடிவந்து நீர் கேட்பதென்ன?
இப்பிறப்பில் நான் செய்த தீங்கென எதுவுமில்லை என்றாலும் இந்தக் கொடுங்காலம் என்னில் வர முற்பிறப்பில் செய்த கர்மவினை காரணமாக இருக்கலாம், நான் பெற்ற அச்சாபத்துக்கு நீவீர் ஏன் வருத்தி கொள்ள வேண்டும்?
இவ்வளவு அருமையான உம்மைக் கணவனாக அடைந்தும் இந்தக் கொடுமைகளை அடைந்தேன் என்றால் அது என் பழைய வினைகளின் விதையால் எழுந்த முள்மரத்தின் சாபமன்றோ. அங்கு நீவீர் செய்ததென்ன? ஏன் வருந்துகின்றீர்?
இரக்கத்துக்கும், அன்புக்கும் உருவம் கொண்டு இயங்க வைத்தால் அதன் இதயமென இருப்பவர் நீரே, அப்படியான நீர் என்னை வருத்தமடைய செய்தால் அது என் வினைப்பயன் அன்றி வேறென்ன? கார்கால கங்கை பொங்கிவந்து கரைகடந்து நர்த்தனம் செய்வது காலத்தின் குற்றமன்றி அவள் குற்றம் அல்லவே?”
இப்படிச் சொன்னவளை நோக்கி எழுந்து அவள் கரம்பற்றி அழுதான் துஷ்யந்தன். அவனிடம் வார்த்தைகளில்லை, அவன் தொட்ட ஸ்பரிசத்தில் வெடித்துக் கொட்டும் மேகமாய் அழுதவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
இரு நெஞ்சங்களின் நிறைந்த அமைதியின் அடையாளமாய்க் கண்ணீர் கொட்டிற்று. பெருமூச்சுடன் அவளை முத்தமிட்டான் துஷ்யந்தன்.
தன் உதட்டின் மேல் இதழில் தேங்கிய கண்ணீர் துளி சிதறச் சொன்னாள் சாகுந்தலை, “உங்கள் நெஞ்சில் இன்னும் நான் இருக்கின்றேனா?, எனக்காகத்தான் இங்கு வந்தீரா?”
அவள் தலையினை வருடி அவள் முகம் பார்த்துச் சொன்னான் துஷ்யந்தன், “என் நெஞ்சில் தைத்த பெரும் துயரமெனும் அம்பினை காலத்தாயின் துணையால் பிடுங்கிவிட்டேன், என் கண்ணை மறைத்திருந்த கட்டு ஒன்றினை காலம் நீக்க உன்னைக் கண்டு கொண்டேன்.
என் இதயமே! என் பேதமையினால் நான் செய்த பெரும் பிழையினைச் சொல்லிக்காட்டி என்னை இப்படி வதைக்கலாமா? என்னிடம் இதனை நீ கேட்கலமா? என் அன்பே என் தேடலும் வாழ்வும் நீயன்றோ, நான் தேடும் என் நிம்மதி உன்னையன்றி எது?
கண்ணில் நீர் வந்தால் இமை தடுக்கும் போது அதன் இமை மயிர்களும் அந்த கண்ணீரை தடுக்க முற்படுமன்றோ, அப்படி என் துயர் துடைக்க விரிந்த கரங்களுடன் உன்னைத் தேடிக்கொண்டே ஓடிவந்தேன் என்னுயிரே”
அவன் கரங்களைப பற்றியவள் அந்த மோதிரத்தைக் கண்டாள், காதலின் சாட்சியாக அன்று அவன் கொடுத்த மோதிரம், எதனை அவள் ஆற்றில் தொலையவிட்டாளோ அந்த மோதிரம்.
அதனைத் தொட்டுப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி அவன் முகத்தைப் பார்த்தபடி சொன்னாள் சாகுந்தலை, “என்னைக் கலங்க வைத்ததும் இதே மோதிரம், இப்போது இணைய வைத்ததும் அதே மோதிரம்” சொன்னவள் அந்தக் கையினைத் தன் முகம்மேல் வைத்து அழுதாள்.
அவன் அந்தச் சோகத்திலும் மெல்லிய புன்னகை சிந்தியபடி சொன்னான், “அப்படியானால் இந்த மோதிரம் இல்லை என்றால் இப்போதும் என்னை நம்பியிருக்கமாட்டாயா?”
அவள் அந்தத் துயரிலும் மெல்ல சிரித்து அப்படி இல்லை எனத் தலையாட்டிக் கொண்டாள்.
“நான் காரிருளில் அடைபட்டு கிடந்தபோது இந்த மோதிரமே என்னை வெளிச்சம்காட்டி அழைத்து வந்தது, என்னைத் தெளியவைத்து என் பெரும் தவறை உணரவைத்தது, அரிய பொக்கிஷத்தை அமுதத்தினும் சிறந்ததை நான் தொலைத்த வலியினைச் சொன்னதும் இதுதான்” என்றான் துஷ்யந்தன்.
“என்னை தூயவள் என்றும், உங்களுக்கே உரியவள் என்றும் நிரூபிக்கும் ஒரே அடையாளமான இந்த மோதிரம் இக்கட்டான நிலையில் என்னைவிட்டு நீங்கிற்று, கொடும் வினையின் தூதனுமாயிற்று, துன்ப நெருப்பில் தள்ளியும்விட்டது.
என்னைப் பிரிந்து பெரும் துன்பம் தந்த இம்மோதிரம் உம்மை அடைந்தும் அதே துன்பத்தினை உமக்கும் கொடுத்ததிருக்கின்றதே”
துஷ்யந்தன் புன்னகைத்துச் சொன்னான், “வசந்த காலமும், கொடியும் கூடி மகிழ்ந்ததன் சான்றான இந்த மோதிரத்தை இனி நீயே அணிந்துகொள்”
“நாம் இருவரும் ஒருவரான பின் இம்மோதிரம் யாரிடம் இருந்தால் என்ன? இனி ஒரு பிரிவு எக்காலமும் வாரா, அதனை நீரே அணிந்து கொள்ளும்” என்றவள் தன் பெரும் தாய்மையின் உச்சத்தின் சொன்னாள்.
“ஆனாலும் நம் மகன் முன்னால் நீர் என் காலில் விழுந்திருக்க கூடாது, அவன் இருப்பதை நீரும் மறந்துவிட்டீர், நானும் மறந்தே விட்டேன், அதைக் குறித்து நாணுகின்றேன்”
அவன் பெருமூச்சுடன் சொன்னான், “பெருதவறை நான் செய்தேன், உனக்கு உயிரோடே கொள்ளி வைத்தேன், அந்தப் பெருகுற்றம் போக உன் காலடியில் அல்ல, நெருப்பிலே நான் வீழ்ந்திருத்தல் வேண்டும்”
அந்த இரு அன்பான இதயங்கள் மீண்டும் இணைந்து ஒரே இதயமான தருணத்தினை உணர்ந்தபடி மாதலி வந்தான், வந்தவன் மகிழ்ந்து சொன்னான்.
“தெளிந்திருக்கும் நீரோடை போலாகிவிட்ட மன்னரே. நீர் வாழ்க! மங்கையரின் திலகத்தை அடைந்துவிட்டீர், பார்போற்றும் மகனுடன் கலந்துவிட்டீர், சீறோடும் சிறப்போடும் பெரிது வாழ்வீர்” என்றான்.
‘தவறவிட்ட கனி ஒன்றை தேடியலைந்த நான் கார்மேகம் தருவது போல் அக்கனியினை மழையாய்ப் பெற்றுவிட்டேன் என்பதை இந்திரனிடம் சொல்” என்றான் துஷ்யந்தன்.
மாதலி புன்னகைத்தான், “தேவர்கள் அறியாச் செய்தி உண்டா மன்னா? அவர் எல்லாம் இந்நேரம் அறிந்திருப்பார், அதனால் நாம் மெதுவாகச் செல்லலாம், இங்கு நீர் காசிபரை சந்திக்காமல் செல்வது சரியல்ல அல்லவா?” என்றான்.
“ஆம், கிளிக்குள் காக்கப்பட்ட அந்த அசுரனின் உயிர்போல் என் உயிரை இந்த வனத்தில் காத்து வைத்தவர் அந்த காசிபர் அல்லவா? அவரைச் சந்தித்து நன்றி சொல்லித் தீரவேண்டும்.
சாகுந்தலையே மகனை எடு, நாம் அவரிடம் சென்று ஆசிவாங்க வேண்டும்”
அவள் மெல்ல நாணிச் சொன்னாள், ” மன்னா, அவர் முன் உங்களுடன் வர என்னை நாணம் தடுக்கின்றது, என்னைப் பற்றி எல்லாம் தெரிந்த அவர் முன்னால் உம்முடன் வர என் கால்களை நாணம் பின்னல் இழுகின்றது” என்றாள்.
துஷ்யந்தன் சொன்னான், “நாணம் என்பது பெண்ணின் அணிகலன், அதை எப்போது அணியவேண்டும் என்பதை அறியாதவளா நீ, சில நேரத்தில் அதனைத் தவிர்க்க வேண்டும் என்ற விதி உனக்குத் தெரியுமல்லவா?
நாணத்தை விடவேண்டிய நேரம் சில உண்டு, அப்படி விடாவிட்டால் தூற்றலும் வசவுமே வரும் என்பதால் என்னோடு நடந்து வா” என்றான்.
காசிபர் மனைவி அதிதியும் அமர்ந்திருந்தார், துஷ்யந்தன் குடும்பமாகத் தன் முன் வந்து பணிவதைக் கண்டு அவளிடம் சொன்னார்.
“அதிதி, நாம் பெற்ற நல்மகனாம் இந்திரனின் நண்பர் இவர், இவரின் உதவியாலே நம்மகன் பெரும் பெரும் வெற்றிகளை ஈட்டுகின்றான், அந்தத் துஷ்யந்தன் இவர்தான், வீரத்துக்கும் அன்புக்கும் இரக்கத்துக்கும் நீதிக்கும் நேர்மைக்கும் ஒரு உருவம் உண்டென்றால் அது இவர்தான்.
ததிசீ முனிவரின் எலும்பினால் கிடைத்த வஜ்ரமும் இவரின் வில்லுமே தேவலோகத்தின் தூண்களும் காவலுமாகும்” என்றார்.
அந்தப் பெருமைமிகு அதிதி சொன்னாள், “அவரின் உருவத்தைக் கண்டாலே அது நன்றாகத் தெரிகின்றது , உண்மையினைத தெளிவாய்ச் சொன்னீர்”
அவர்கள் அருகே சென்று தன் மகனை முன்னிறுத்திப் பணிந்தான் துஷ்யந்தன். அவனோடு சேர்ந்து பணிந்தாள் சாகுந்தலை, இரு வாழை நடுவினிலே வாழைக்கன்றுபோல் மகன் நிற்கும் அழகான காட்சி கண்டு புன்னகைதனர் காசிப தம்பதி.
துஷ்யந்தன் முதலில் அவர்களுக்கு வாழ்த்து சொன்னான்.
“தட்சனுக்கு மகளாய் வந்த தவபெரியோராம் அதிதி தாய்க்கு வணக்கம், பெரும் புகழ் கொண்ட மரீசி முனியினை தந்தையாக கொண்ட காசிபருக்கு பெரும் வணக்கம்.
நான்முகனான பிரம்மனுக்கு பெருமை சேர்ப்பவரும் மூவுலகை ஆளும் இந்திரனை மகனாக பெற்றவரே உமக்கு வணக்கம்.
நிறைந்து நிற்போரும் எல்லா இயக்கத்துக்கும் அடிப்படையுமானவர்களான தசாதித்தரும், பன்னிரு வல்லவர்களுக்கும் மூலமானவரே, ஒளியின் இருப்பிடமே உமக்கு வணக்கம்.
இந்திரனுக்கு கொடுக்கப்படும் அபிர்பாக முதல் எல்லாப் பலியினையும் முதலில் பெற்றுக் கொள்ளும் உரிமை கொண்டவரே உமக்கு வணக்கம்.
பெரும் உயர்வும் நலன்களும் பெற்றவரும், வாமனனை வளர்த்தவருமான உமக்குப் பெரும் வணக்கம், உலகளந்த பெருமானை மூவுலகை அளந்தவனை வளர்த்த உம்மைத் தொழுதெல்லாம் தீருமன்றோ, உமக்கே புகழ்வணக்கம், எம்மை அருள் கூர்ந்து வாழ்த்துவீராக”
எனச் சொல்லி அவன் குடும்பத்துடன் வணங்கி நின்றான், அவர் தன் வாய்திறந்து சொன்னார்.
“நன்றிக்கும் அன்புக்கும் நட்புக்கும் கடமைக்கும் உருவமான பெரும் அரசனே உன் வீரம் ஓங்குக, உன் வளமும் ஆற்றலும் பல நூறு முறை பெருகிட வாழ்க, மென்மேலும் மென்மேலும் வாழ்க, பார்புகழ ஒளிர்ந்து வாழ்க, பெரு வாழ்வு வாழ்க வாழ்க”
அவர் வாழ்த்துக்களைப் பெற்றதும் சாகுந்தலை பணிந்து சொன்னாள்.
“மகா முனிவரை நான் என் மகனோடும் கணவனோடும் வணங்குவதில் மகிழ்ச்சிக் கொள்கின்றேன்”
காசிபர் அவளை நோக்கிச் சொன்னார். ‘உன் கணவன் இந்திரன் போல் உயர்ந்து வாழ்வான், உன் மகன் அவன் மகன் ஜெயேந்திரன் போல் பிறந்திட்டாலும் அவன் கதிரவன் போல் ஜொலித்து வாழ்வான், உலகை ஆள்வான்.
என் மகளே, உன்னை நான் என்றென்றும் வாழ்த்துகின்றேன், உன் வாழ்வு அந்தத் திருமகளின் வாழ்வுபோல பெருகிப் பொலிந்திட வாழ்க வாழ்க.
மூவரையும் தன் பக்கம் அழைத்தார் காசிபர். அவர் மகனைத் தன் மடியில் அவர் வைத்து கொள்ள இருவரும் அவர்களின் இருபுறமும் பணிந்து அமர்ந்தார்கள்.
அவர் இன்னும் மனம் நிறைந்து இன்னும் சொல்லத் தொடங்கினார்
(தொடரும்..)