காளிதாசனின் ரகுவம்சம் : 03

காளிதாசனின் ரகுவம்சம் : 03

அந்தத் திலீபனுக்கு மகதநாட்டின் இளவரசியான சுதக்சனா மனைவியாய் இருந்தாள். அவளே பட்டத்துராணி எனும் பெரும் இடத்திலுமிருந்தாள். தாட்சண்யம் நிரம்பியவள் என்பதாலே சுதாக்சனா என்றும் அறியபட்டாள். எல்லாச் சிறப்புமிக்க‌ அவளை மனைவியாகக் கொண்டு யாகத்தில் அமர்வது திலீபனுக்குப் பெரும் கௌரவமாய் இருந்தது.

திலீபனுக்குப் பல மனைவியர் இருந்தாலும் தன் நாட்டை எந்த அளவுக்கு நேசித்தானோ அதே அளவு சுதக்சனையினை மட்டும் நேசித்தான், அந்தச் சுதக்சனை மூலமே தனக்கொரு மகன் வரவேண்டும் என்றும் அவனே இந்நாட்டை தனக்குப்பின் ஆளவேண்டும் என்றும் பெருவிருப்பம் கொண்டிருந்தான்.

அவன் ஆசை அப்படியே இருந்தது. ஆனால், காலம் ஓடிக்கொண்டே இருந்தது. அதனால் அவன் மனம் வாடத் தொடங்கிற்று, அதனால் ஒரு முடிவெடுத்தான்.

தன் நாட்டை நம்பிக்கைக்குரிய மந்திரிகளுடன் ஒப்படைத்தவன் தன் மனைவியுடன் தன் குறை தீரப் பிரம்மனை துதித்தான், பின்னர் தனக்கோர் மகவு வேண்டி செய்யவேண்டிய யாகங்களையும் பரிகாரங்களையும் பற்றித் தெரிய வேண்டி வசிஷ்ட முனிவரின் ஆசிரமம் நோக்கி மனைவியோடு சென்றான்.

அவன் அவளோடு இரதத்தில் சென்ற காட்சியானது பாற்கடலைக் கடைந்தபோது ஐராவதம் எனும் யானைத்தோன்றி அதன் மனைவியாக மின்னலும் தோன்றி இருவரும் ஒன்றாக மேகத்தில் ஏறிச் சென்ற காட்சி போல் இருந்தது. ஐராவதம் எனும் அழகிய யானைப்போல் அவன் கம்பீரமாக அமர்ந்திருக்க மின்னல் போன்ற உருவுடனும் ஒளியுடனும் அவள் அவன் அருகிருந்தாள். மழைக்கால மேகம் சத்தமுடைய ஓசை எழுப்புவதுபோல் அவர்கள் இரதம் ஓசை எழுப்பியபடிச் சென்றது.

முனிவரின் ஆசிரமத்துக்கு அவன் சிறிய அளவு தன் சேவகர்களோடு சென்றாலும் கூட அவனுக்குரிய கம்பீரத்தால் அவன் சேனைகளோடு சென்றுகொண்டிருந்தது போல காட்சி இருந்தது.

அந்தக் கானகம் அவர்கள் மேல் இளங்காற்றை நறுமணத்தோடு வீசிற்று, சால மரத்தில் இருந்து வழிந்த நறுமண பசையின் இனியமனம் இன்னும் இன்னும் அப்பக்கம் அவர்களைச் சூழ்ந்தது, மெல்லியக் காற்று காட்டு மரங்களின் கிளைகளை அசைத்து அதிலிருந்த மலர்களின் மகரந்தப்பொடியினை அவர்கள்மேல் தூவிற்று.

திலீபன் தன் மனைவியோடு வரும் தேரின் ஓசை கேட்ட மயில்கள் நிமிர்ந்து பார்த்தன. அவை அகவலை எழுப்பின, ஆண்மயிலின் அகவல் பெண்மயிலின் அகவலில் இருந்து வேறாயிருந்தாலும் அவை இரண்டும் கலந்த ஓசை சங்கீத ஷ்ட்ஜம் போல் இனிமையாய் மாறி மாறி ஸ்வரமாய் ஒலித்தது.

திலீபனின் கருணை மிக்க முகத்தைக் கண்ட மான்கள் அச்சம் நீங்கி ஓடாமல் நின்றன, அந்த மான்களில் பெண்மான்களின் கண்கள் சுதக்ஷனாவின் கண்களைப் போலிருப்பதைக கண்ட திலீபன் புன்னகைத்தான், ஆண் மானின் கம்பீரப் பார்வை கொண்ட கண்கள் திலிபனின் கண்கள் போலிருந்ததை சுதக்சனாவும் கவனித்தும் கவனிக்காது போலிருந்தாள்.

வானில் சாரச பறவைகள் இனிமையான குரல் எழுப்பியபடி வானில் அணிவகுத்து வரிசையாய்ப் பறந்தன, அது திலீபனையும் அவன் மனைவியினையும் வரவேற்கும் தோரணமாலை போல் காணப்பட்டது, அந்தரத்தில் மிதந்த அந்த இசைபாடும் தோரண மாலைகளைத் திலீபனும் அவன் மனைவியும் நிமிர்ந்து பார்த்து ஏற்றுக்கொண்டார்கள்.

நல்ல சகுனமாக காற்று அவர்கள் செல்லும் திசை நோக்கி வீசி அவர்களுக்கு நம்பிக்கைக் கொடுத்தது, இதனால் குதிரைகள் எழுப்பும் புழுதியினைக் காற்று முன்னோக்கி இழுத்துச் சென்றதால் மன்னன் தலையிலும் அவன் மனைவி தலையிலும் புழுதிபடியாமல் அவர்கள் அழகான சுகமான பயணம் மேற்கொண்டார்கள்.

அவர்கள் செல்லும் வழியில் குளிர்ந்த தடாகத்தில் மலர்ந்திருந்த தாமரைகளின் மணம் அவர்களைச் சூழ்ந்தது. அது அவர்களின் மூச்சுக் காற்றுபோல் மணமாய் இருந்தது.

திலீபனால் தானம் செய்யப்பட்ட பல கிராமங்களைத் தாண்டி அவர்கள் சென்றார்கள், அந்தக் கிராமங்களில் அந்தணர்கள் முறைப்படி எல்லா யாகங்களையும் செய்வார்கள், அதற்கு அடையாளமான ஸ்தம்பகள் இது யாகம் நடக்குமிடம் என்பதற்கான ஸ்தம்பங்கள் (முகூர்த்த கால்கள்) அங்கு இருந்தன, அந்த அந்தணர்கள் வந்து யாகத்தில் இருந்து வந்த அர்க்கியத்தை அவர்களுக்குக் கொடுத்து ஆசி செய்து அனுப்பி வைத்தார்கள்.

அரசன் தங்கள் குடியிருப்பு வழிவருவதை அறிந்த இடையர்கள் பசுவின் புது வெண்ணெயும் நெய்யும் குடங்களில் கொடுத்து அவனைப் பணிந்தார்கள். அவனும் அவர்களிடம் உரிமையாய் சம்பாஷனை செய்து அவர்கள் மாடுகள் மேயும் வனங்களின் மரங்களின் நிலவரமெல்லாம் கேட்டு அறிந்து அவர்கள் நம்பிக்கையினை இன்னும் பெற்றான்.

அவர்கள் இருவரும் தூய ஆடையினை அணிந்து ஜொலித்தார்கள், அவர்கள் சேர்ந்து சென்ற தனி அழகு சித்திரை மாத முழு நிலவு சித்திரை நட்சத்திரத்துடன் சேர்ந்து ஜொலிக்கும் காட்சிபோல் அவ்வளவு அழகாக இருந்தது.

திலீபன் புதன் கிரஹம் போல் அறிவு மிக்கவன் என்பதால் பிரயாணத்துக்குத் தேவையான எல்லாப பொருட்களையும் முன்பே தயார் செய்திருந்தான். இதனால் அவனுக்கு எந்தச சிக்கலுமிலல்லை, பயணம் செய்த தொலைவே தெரியாதபடி சிரமமின்றி தொடர்ந்து அவளோடு சென்றுகொண்டே இருந்தான்.

யாரும் அடையமுடியாப் புகழை உடையவனும், களைப்பே அடையாத குதிரைகளை உடையவனுமான அந்தத் திலீபன் அளவிடமுடியாத பெரும் குணங்களைக கொண்டவளான தன் மனைவியுடன் யாரும் அடக்கமுடியா அளவு மனம் அடக்கம் உடைய தவசியான வசிஷ்ட முனிவர் ஆசிரமத்தை அடைந்தான்.

(தொடரும்)