காளிதாசனின் ரகுவம்சம் : 04

காளிதாசனின் ரகுவம்சம் : 04

கானகத்தில் வசிஷ்டரின் ஆசிரமத்தை திலீபன் தன் மனைவியோடும், சேவர்களோடும் அடைந்தபோது அங்குத் துறவியர் யாகத்துக்குரிய சமித்துகளைச் சேகரிக்கபதற்காகக் காட்டுக்குள் சென்றிருந்தார்கள், புறா கூடுகட்ட ஒவ்வொரு துரும்பாய் சேகரிப்பது போல் சேகரித்துக் கொண்டிருந்தார்கள்.

இதனால் திலீபனையும் அவன் மனைவியினையும் அந்த ஆசிரமத்தில் யாகக் குண்டத்தில் அணையாமல் எரிந்து கொண்டிருந்த நெருப்பு மட்டும் வரவேற்றது, அந்த அக்னியாய் நின்ற அக்னிதேவன் அரூபமாய் வரவேற்றான் .

அந்த ஆஸ்ரமம் அன்பின் மயமானது. எல்லா உயிர்க்கும் அடைக்கலமானது. அங்கே அந்திப்பொழுதில் மான்களுக்கு காட்டு நெல் வைக்கப்படும், அப்போது ஒவ்வொரு மானும் தனக்குரிய பங்கை பெறும்படி மொத்தமாக வந்து நிற்பது ரிஷிபத்தினிகளின் குழந்தைகள் கூடிய காட்சிபோல் அழகானது.

அந்த ஆஸ்ரமத்தின் மரங்களுக்கும் செடிகளுக்கும் ரிஷி பத்தினிகள் பாத்தி அமைத்து நீர் ஊற்றுவர், அப்படி ஊற்றிய மறுகணமே அந்த இடத்தை விட்டு அகன்றும்விடுவார்கள். காரணம், அங்கிருக்கும் பறவைகள் அச்சமின்றி நீர் அருந்த அவர்கள் விரும்பினார்கள்.

திலீபன் அந்த ஆசிரமத்தைக் கண்களால் சுற்றி பார்த்தான். மான்கள் அச்சமின்றி படுத்தபடி அசையிட்டு கொண்டிருந்தன. அங்கே காயவைக்கப்பட்ட தானியங்கள் துறவியர் அருள் போல் குவிக்கப்பட்டிருந்தது.

ஹோமகுண்டத்தில் இருந்து எழுந்த புகை காற்றில் பரவி அவனை நோக்கி வந்தது. நெய் முதலான பொருட்களின் வாசனை கமழும்படி வந்த அந்தப் புகை ஆசிரமத்தில் நுழைவோரை எல்லாம் தழுவிப் புனிதமாக்கும். அவ்வாறே அது திலீபனையும் அவன் மனைவியினையும் புனிதமாக்கிற்று, அந்தப் புகையின் நறுமணத்தில் மகிழ்ந்தபடியே திலீபன் தேரில் இருந்து இறங்கி தன் மனைவியினையும் இறக்கிவிட்டான்.

சிங்கத்தின் பால் தங்கத் தட்டில் இருப்பதை போல வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருக்கும் துறவியரெல்லாம் உயர்ந்தவர்கள்; உலகநீதி மரியாதை விருந்தோம்பல் எல்லாம் அறிந்தவர்கள்; ஆசையினை அடக்கிய யோகிகள்; அவர்கள் திலீபனை அவன் மனைவியோடு பெரும் மரியாதை செய்து வரவேற்றார்கள், அவன் தங்களின் காவலும் அரணும் இரட்சகனுமானவன் என்பதால் மிகுந்த அன்போடு பணிந்தார்கள்.

அவன் எல்லாவற்றையும் சாஸ்திரம் கொடுத்த அறிவின் கண்ணால் காண்பவன் என்பதை அறிந்து வணங்கினார்கள்.

திலீபன் அந்த மாலைவேளையில் சந்தியா காலத்து ஜெபமும் ஹோமமும் செய்த வசிஷ்டரையும் அவர் மனைவியினையும் கண்டான், அவர்கள் இருவரும் அக்னியும் ஸ்வாகாதேவியும் போல ஒன்றித்து அமர்ந்திருந்தார்கள்.

குருதம்பதியினரை இராஜ தம்பதியர் வணங்க, குரு தம்பதிகள் அவர்களை வாழ்வாங்கு வாழ்த்தி வரவேற்றார்கள்.

வசிஷ்டரின் அருள்மொழியில் அன்பான பார்வையில் திலீபனுக்கு பயணக்களைப்பெல்லாம் பறந்தோடிற்று, மிகுந்த மன அடக்கம் கொண்ட அந்த மஹரிஷி திலீபனின் இராஜபரிபாலனம் பற்றி அக்கறையோடு விசாரித்தார், காட்டில் இருந்து ஓடும் நதி ஊரை வாழவைப்பது போல அந்தக் கானகத்தில் இருந்த அவரின் அன்பும் அக்கறையும் நாட்டு மக்களைப் பற்றி மிகுந்திருந்தது.

திலீபன் பெரும் வீரன். வெற்றி ஒன்றையே எல்லா எதிரிகளுடனுமான போரில் அறிந்தவன், அதே நேரம் பேசுவதில் மிக மிக வல்லவன், அவன் அதர்வண வேதத்தை நன்கு அறிந்த வசிஷ்டரிடம் நெருப்பினை அணுகுவது போல் கவனமான வார்த்தைகளிலும் மிகையில்லா சொற்களிலும் உரையாடியபடி சொன்னான்.

“முனிவ, எனக்குத் தேவர்களாலும் மனிதர்களாலும் வரும் துன்பத்தை எல்லாம் நீக்க நீங்கள் இருக்கும்போது என் நலம் நிரந்தரமல்லவா? அதில் என்ன குறை இருக்கமுடியும்?” என்றான்.

அவர் மறுமொழியாக சொன்னார், “நாட்டுக்கு அரசன், மந்திரி, அரசனின் நண்பர்கள், கருவூலம், நிலம், காவல், சேனை என ஏழும் முக்கியமானது. அது உன்நாட்டுக்குச் சரியாக வாய்த்திருக்கின்றது.

பெரும் நெருப்பு போன்ற வறட்சி, பெரும் வெள்ளம், நோய், பஞ்சம், கொடும் சாவு என ஐந்தும் தெய்வத்தின் தண்டனைகள். அது உன்நாட்டுக்கு வராது.

கள்வர்கள், பகைவர்கள், பொறுப்பற்ற அரச ஊழியர்கள், அரசகுடும்பத்தார், பேராசை என நான்கும் மக்களை வாட்டுபவை, அதுவும் உன் நாட்டில் இராது” என்றார்.

திலீபன் தொடர்ந்தான், “மகா முனிவ, வேதத்தின் ஒரு பகுதியான மந்திரங்களை அறிந்த முன்னோர்களில் நீரும் ஒருவர். அதனைப் பிரயோகிக்கும் முறையும் அறிவீர்.

நானோ என் கண்முன் நிற்கும் எதிரியினைத்தான் அழிப்பேன், நீவிரோ உங்கள் மந்திரத்தால் இங்கு இருந்து கொண்டே எங்கோ கண்ணுக்குத் தெரியாத தொலைவில் இருக்கும் என் சத்ருக்களை எல்லாம் அதர்வண வேதத்தால் ஒழித்துப் போடுகின்றீர், உமது மந்திரங்களின் முன்னால் என் அம்புமுனைகள் தோற்றுவிடுகின்றன‌.

மனிதர்களால் இந்நாட்டுக்கு வரும் எல்லா ஆபத்தையும் நீரே களைகின்றீர்.

அவ்வாறே உரிய ஹோமங்களைச் செய்து வானலோக தேவர்களை மகிழ்விக்கின்றீர், அவர்களுக்குரிய அவிர்பாகம் முறையாக கிடைப்பதால் இந்நாட்டில் மழைக்கும் குறைவில்லை, நீர் தெய்வ கோபத்தில் இருந்தும் எம்மைக் காக்கின்றீர்.

உமது பெரும் அருளால் இந்நாட்டு மக்கள் தங்கள் முழு ஆயுளான 120 வருடம் முழுமையாக வாழ்கின்றார்கள், எந்த ஆபத்தைக் கண்டும் அவர்கள் அச்சப்படுவதில்லை, அதற்கு உங்களின் தனி அருளே காரணம்.

அதிக மழையும் துன்பம், மழையின்மையும் துன்பம். எலியும் வெட்டுக்கிளியும் தரும் சேதம் இன்னும் அதிகம், எலியும் கிளியும் விளைந்ததை விட்டுவைக்காது, வெட்டுகிளியோ பயிரையே விட்டுவைக்காது, இந்த ஆபத்தெல்லாம் எங்களுக்கு உங்கள் அருளால் இல்லை.

பிரம்மதேவனின் மகனான உங்களால் நான் மிகுந்து காவல் செய்யப்படுகின்றேன். அதனால் என் செல்வங்களும் காவல் செய்யப்பட்டு பெருகிக்கொண்டே செல்கின்றன, எவ்வித குறையும் எனக்கு இல்லை என்றாலும் ஒரே ஒரு விஷயம் எனக்கு நிரம்ப நீர் இருந்தும் குடிக்க முடியாக் கடலின் உப்புச்சுவை போல் துன்பம் தருகின்றது” என்றான்.

(தொடரும்)