காளிதாசனின் ரகுவம்சம் : 06

காளிதாசனின் ரகுவம்சம் : 06

திலீபனிடம் வசிஷ்டர் அவன் மனவருத்தம் தீர வழிசொல்லி பேசிக்கொண்டிருக்கும் போதே நந்தினி உள்ளே நுழைந்தது. அதன் கன்றும் அதனைத் தேடி ஓடிற்று, பசுவும் கன்றும் சேர்ந்து காண்பது நல்ல சகுனம் என்பதால், மிக முக்கியமான பிரச்சினை பற்றி அவர்கள் பேசும்போது நல்ல சகுனமாக அவை வந்ததால் திலீபனும் வசிஷ்டரும் மகிழ்ந்தார்கள்..

வசிஷ்டர் சொன்னார், “மன்னவா, இந்தப் புனிதமான பசுவினைப் பற்றி பேசும்போதே அது வந்துவிட்டதை பார், இது உன் விருப்பமெல்லாம் நிறைவேறும் மிக மிக நல்ல சகுனமாகும், உன் விருப்பம் நிறைவேறும் தருணம் சமீபத்திற்கு வந்துவிட்டது.

உனக்கொரு விஷயம் உரைப்பேன், சதாகாலமும் இறைவனைத் தேடுபவன் அவனை அடைவான், தொடர்ந்து கல்வி பயின்றுகொண்டே இருப்பவன் நல்ல தெளிவினை அடைவான், அப்படி இந்தப் பசுவினை விடாமல் பிடித்துக் கொண்டால், அதை நன்றாக கவனித்துக் கொண்டால் நீ உன் துன்பமெல்லாம் நீங்கக் கடவாய், அதோடு பிரியாமல் இரு. காட்டில் அதைக் கண்போல் காத்துவா, நீயும் காய் கனி கிழங்கு எனக் காட்டில் கிடைப்பதை உண்டு அதனோடே இரு.

நீ அது நடக்கும்போது நீயும் நட, அது நின்றால் நீயும் நின்றுகொள், அது படுத்தால் நீயும் படுத்துக்கொள், அது நீர் குடித்தால் நீயும் நீர் அருந்து, சுருக்கமாக அதன் நிழல் என்னவெல்லாம் செய்யுமோ அதை நீயும் நிழலாக இருந்து செய்துவா.

உன் மனைவி சாஸ்திர விதிப்படி காலையில் இப்பசுவினைப் பூஜித்து நமஸ்கரித்து மலர்கள் இட்டு வணங்கி அது மேய செல்லும் கானகத்துக்குச் செல்லும்படி இந்தத் தபோவன எல்லை வரை வந்து வழியனுப்பட்டும், மாலை அதே எல்லையில் ஆரத்தியுடன் காத்திருக்கட்டும்.

இதை நீயும் உன் மனைவியும் முறையாகச் செய்துவர உன் மனவருத்தம் தீரும். உன் தந்தை நல்ல மகனை அடைந்து எல்லாத் தந்தையர்களிலும் முதல்வனாக இருந்தது போல, நீயும் நல்ல மகனை அடைந்து அவனால் பெரும் புகழை அடைவாய் என உன்னை ஆசீர்வதிக்கின்றேன்.

அது ஹோமகுண்டத்தின் அருகில் இருந்து குருவாகிய வசிஷ்டர் மிகச் சரியான புண்ணிய காலத்தில் சொன்ன மொழிகள் என்பதால் திலீபன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான், அவனின் மகிழ்ச்சியில் அவன் மனைவியும் பங்கெடுத்து முனிவர் சொற்களை ஏற்றுக் கொண்டாள்.

உண்மையும் அன்பும் கருணையும் இனியமொழியும் கொண்டவரான வசிஷ்டர் அவர்களைக் கருணையுடன் நோக்கினார், அவர்களுக்கு அடுத்தக் காலையில் இருந்து நந்தினியினை வணங்கி உடனிருந்து பணிசெய்யும் காரியம் இருப்பதால் அவன் பயணக் களைப்பறிந்து ஓய்வெடுக்கச் சொன்னார்.

திலீபன் விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதால் அவனுக்குத் தவலிமையும் தான் கொடுக்கும் அருள் வலிமையும் கூடுதல் வேண்டி தர்ப்பையிலான பாயினை அவனுக்குக் கொடுத்தார்.

பர்ணசாலையில் ஓய்வெடுத்த திலீபன் விடியல் வரப்போவதை வசிஷ்டரின் சீடர்கள் அதிகாலையில் எழுப்பிய வேத ஒலியில் இருந்து உணர்ந்து எழுந்தான், மனதால் பரம்பொருளை தொழுதவன் அந்த ஆசிரமத்தின் தரையினைத் தொட்டு வணங்கி எழுந்தான்.

அவனுக்கு முன்பே எழுந்த சுதக்ஷனைப் பசுவினை நீராட்டி சந்தனமிட்டு மலர் மாலை இட்டு தீப தூபமிட்டு வணங்கினாள், காலையில் காட்டுக்கு மேய செல்லும் நந்தினி மாலையில்தான் வரும் என்பதால் அதன் கன்று வேண்டும் மட்டும் பாலை குடிக்கும்படி அனுமதித்தாள், அது நிறைவாக குடித்தபின் கட்டிவைத்து தடவிக் கொடுத்தாள்.

அவள் மிகச்சிறந்த பதிவிரதை, கணவனைக் கண்ணென போற்றும் குலமகள், தலைசிறந்த பண்புகள் யாவும் நிரம்பியவள். அவள் அந்தப் பசுவோடு செல்லும் கணவனைப் பின் தொடர்ந்தாள், மிகுந்த பக்தியுடனும் சிரத்தையுடனும் அவள் கணவனைப பின் தொடர்ந்தது ஸ்ம்ருதி நூல்கள் வேதத்தினைத் தொடர்ந்து வருவது போலிருந்தது, ஸ்ம்ருதிகள் வேதத்தின் வழியினைச் சரியாக பின்பற்றுவது போல் அவனை மிக பவ்யமாகப் பின் தொடர்ந்தாள்.

அவளின் சிரமம் அறிந்த திலீபன் முனிவர் சொன்னபடி அவளைத் தபோவன எல்லையில் நிறுத்தி ஆசிரமத்துக்கு அனுப்பிவிட்டு நந்தினியுடன் கானகம் புகுந்தான், அங்கே ப்ருது மஜாராஜா பூமியினைக் காத்தது போல் பசுவினைக் காத்து நின்றான்.

(ப்ருது மஹாராஜா கதை புராணத்தில் சொல்லப்பட்டது, அவன் பூமி நல்ல விளைச்சல் தராததால் அதன் மேல் கோபம் கொண்டு தண்டிக்க முயன்றான், அப்போது பூமித்தாயோ அக்கிரமம் மிகுந்துவிட்டால் தன்னால் உலகுக்கு நல்ல விளைச்சல் கொடுக்கமுடியாது எனச் சொல்லி தயங்கி நின்றாள், ஆனாலும் அவனுக்கும் அவன் நாட்டுக்குமானதை தன்னால் கொடுக்கமுடியும், அவன் பொருட்டு கொடுக்கமுடியுமென ஒரு பசுவாகி நின்றாள்.

அந்தப் பசுவிடமுருந்து தானியமும்செல்வமும் எல்லாமும் அவன் பெற்றான். நான்கு சமுத்திரங்களும் அதன் மடியாகின, அவன் மிகுந்த கவனத்துடன் அந்தப் பசுவினைப் பராமரித்தான்.)

திலீபன் இதனைத் தான் செய்யவேண்டிய கர்ம விரதமாக ஏற்றதனால் தன்னோடு எந்தச் சேவர்களையும் பணியாட்களையும் அழைத்துவரவில்லை, நந்தினியின் எல்லாச் சேவைகளையும் அவன் ஒருவனே தவமாகச் செய்தான், அவனுக்குக் கானகத்தில் தன்னை காக்கவும் தெரியும் என்பதால் அவனுக்கு யார் உதவியும் அவசியமில்லை, மனுவம்ச மன்னர்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும் பயிற்சியில் எப்போதும் தேர்ந்திருந்தார்கள்.

அவன் நந்தியினை மிக மிக நன்றாகக் கவனித்தான், இளம்புல்லை தேடிச் சென்று பறித்துக் கொடுத்தான், அதன் உடலில் திணவெடுக்கும் இடங்களை உணர்ந்து அதை லேசாக சொரிந்து கொடுத்தான், காட்டு ஈக்கள் அதன் மேல் அமரமுடியாதபடி யானையின் காதுகள் ஆடுவதை போல காட்டுபுற்களால் விசிறி செய்து நந்தினி மேல் வீசிக் கொண்டிருந்தான், அதனை அவன் எங்கும் இழுத்துச் செல்லவில்லை அதன் முன் செல்லவுமில்லை, அது செல்ல விரும்பும் இடமெல்லாம் பின் தொடர்ந்து சென்று காவலாய்ப் பின் தொடர்ந்தான்.

அவன் அப்போது அரசனாய் மக்களோடு ஒன்றித்ததுபோல் இப்போது இந்தப் பசுவோடு ஒன்றித்துப்போனான். அது நடந்தால் நடப்பான், அது நின்றால் நிற்பான், அது ஓய்வெடுத்தால் ஓய்வெடுப்பான், அது அசையிட்டால் தானும் பழைய நினைவுகளை அசையிடுவான், அந்தப் பசுவின் நிழலாகவே மாறிப்போனான்.

அவனிடம் அப்போது வெண்கொற்ற கொடை இல்லை, மணிமுடி இல்லை, செங்கோல் இல்லை, முத்திரை மோதிரமில்லை. அவன் சாமானியரில் ஒருவனாகக் காட்டில் பசுவினை மேய்த்துக் கொண்டிருந்தான், காட்டில் யானைக்கு மதம் பிடித்திருப்பதை அதன் காதோரம் இருந்து ஒழுகும் மஸ்து எனும் திரவம் கொண்டுதான் அறியவேண்டியதல்ல, சில யானைகளுக்கு அது ஒழுகாமலே மதம் பிடித்திருப்பது அறியப்படும். அப்படி இவனிடம் எந்த அரச அடையாளமும் இல்லாவிட்டாலும் அவனின் முக வசீகரமும் தேஜஸும் அவன் செய்யும் செயல்களின் அழகும் அவன் ஒரு அரசன் என்பதை அறியவைத்தது.

அவன் தன் நீண்ட முடியினைக் கொண்டையிட்டு காட்டுக் கொடியால் கட்டியிருந்தான்; பசுவினை எப்போதும் காக்கும்படி நாணேற்றிய வில்லினைக் கொண்டிருந்தான்; முதுகில் அம்புகள் கூடை இருந்தது; அவன் அப்படிக் காட்டில் நின்ற காட்சி நாட்டில் மட்டுமல்ல காட்டிலும் தீயவர்களை அவன் விடுவதில்லை என்பது போல இருந்தது.

அரண்மனையில் தன் புகழ்பாடும் இனிய பாடகர்களின் பாடலைக் கேட்டவன் அவன், அங்கே அந்தக் கானகத்தில் இனிய பறவைகளின் ஒலி மரங்களின் இடையில் இருந்து ஒலித்தது அவனைப் புகழும் துதிப்பாடல் போலவே இருந்தது.

தீயவர்களைத் தண்டிப்பதில் வருணபகவான் சரியானவர், அப்படி அவனும் வருணனின் சாயல் என்பதை கானகத்தின் மேல் நின்ற மேகங்கள் சாட்சியாய்ச் சொன்னது.

காற்றின் தோழனான அக்னி போல் ஒளிகொண்டவனும் பூஜிக்கதக்கவனுமான அவன் நகரவீதிகளில் நடந்தால் இளம்பெண்களெல்லாம் திரண்டு மாடத்தில் இருந்து அவன்மேல் அட்சதையும் பொரியும் தூவி வரவேற்பார்கள், அப்படி காற்றில் ஆடிய மரங்களின் இளம் கிளைகள் நல்ல மலர்களை மணமிக்க மகரந்தப் பொடியுடன் தூவி அவனை வரவேற்று மகிழ்ந்தன‌.

அவன் வில்லேந்தி நின்றாலும் பொன்வண்ணமுடைய அழகிய மான்கள் அஞ்சாது அவன் அருகே வந்து நின்று தங்கள் கண்களின் பயனை அடைந்தன, காட்டில் வில்லேந்திய வேடர்களையே கண்டு அஞ்சி ஓடிய மான்கள் முதன் முதலில் வில்லேந்தி காப்பவரும் உண்டு என வந்து அடைக்கலமாகி நின்றன‌.

கண்களின் பயன் நல்லவடிவத்தை காண்பது எனும் புண்ணியத்தை அம்மான்கள் பெற்றன, நகரின் வீதியில் இருபக்கமும் பெண்கள் நின்று அவனை அன்புடனும் பெருமையுடனும் நோக்குவதை போல் அம்மான்கள் அவனை நோக்கின‌.

கானகத்தில் காற்றில் இனிய ஓசைகள் பல உண்டு, மூங்கிலில் வண்டுகள் இட்ட துளைவழியே செல்லும் காற்று எழுப்பும் ஓசைகளும் அப்படியானது, அவை வனதேவதைகள் திலீபனை வரவேற்று வாழ்த்திப்பாடிய கானங்கள் போலவே இருந்தது.

மலையருவிகளின் ஈரமிகுந்த காற்று அவன் வெயிலால் களைப்படையாமல் இருக்க அவனைத் தழுவி குளிர்வித்து உற்சாகம் கொடுத்தது. இதனால் அவனுக்கு வெண்கொடை இல்லாவிட்டாலும் வெயிலின் தாக்கமில்லை, விரதத்தித்தினால் பரிசுத்தமானவனை அந்தக் குளிர்ந்த காற்று அப்படி உபசரித்தது.

நல்ல காற்றுக்குத் தேவையான மூன்று பண்புகளும் அங்கே இருந்தது, குளிர்ந்த தன்மையுடன் மெல்லியதாக நறுமணத்துடன் வந்த காற்று அவனுக்குச் சேவகம் புரிந்தது.

அவனின் புண்ணியமான காலடி பட்டவுடன் காடு ஆசிபெற்றது. நெருப்பால் காடு அழியும் போது மழை ஒன்றுதான் அதனை அணைத்து மீண்டும் எழுப்பமுடியும், அப்படி அவன் காலடி பட்டதும் அந்தக் காடு இன்னும் இன்னும் பசுமையானது. மலர்கள் கனிவகைகள் எனப் பசுமையின் பலனை அது கொடுத்தது, அங்குப் பலமான விலங்குகள் கூட பலமற்ற விலங்குகளை அச்சுறுத்தாமல் சேர்ந்து வாழ ஆரம்பித்தது.

கானகமே அவனுக்குப் பணிந்து செழுமையும் அன்பும் கொடுக்க ஆரம்பித்தது. அப்படியான கானகத்தில் நந்தினியினை அவன் நல்வகையில் காத்து வந்தான்.

பகலெல்லாம் ஒளிவீசி உலகை காக்கும் சூரியன் அந்தியில் சிவந்து அஸ்த‌மனம் நோக்கிச் செல்லம் போது, பகலெல்லாம் தன் திருபாதங்களால் கானகத்தைப் பரிசுத்தமாக்கிய நந்தினி அந்திவான சூரியன் போல துளிர் செந்நிறம் உடைய நந்தினியும் ஆஸ்ரமம் நோக்கித் திரும்பும், திலீபனும் அந்திமாலையில் சூரியனைத் தொடரும் நட்சத்திரம் போல் நந்தியினைத் தொடர்வான்.

பாதாளத்துக்கும் சொர்க்கத்துக்கும் இடைப்பட்ட பூமியின் பாலகனான திலீபன் அந்தப் பசுவினை பின் தொடர்ந்தான், அது தேவர்களுக்கான காரியம், பித்ருக்களுக்கான காரியம் இன்னும் இந்த உலகத்தின் காரியங்களுக்காக வந்த பசு , வசிஷ்டர் உலக நலனுக்காக வைத்திருக்கும் பசு என்பதால் பவ்யமாக அதைப் பின் தொடர்ந்தான் திலீபன், தன்னலமற்ற தாயின் பின் அவளைப் போன்ற மனமுடைய குழந்தை செல்வது போல் சென்றான்.

இரவு பொழுது நெருங்கியதும் அதுவரை குட்டைகளிலும் புதர்களிலும் மறைந்திருந்த கரிய காட்டுப்பன்றிகள் மெல்ல மேல் எழுந்து வந்தன, மயில்கள் மரக்கிளை நோக்கிச் சென்றன, மான்கள் புல்வெளியில் அப்படியே படுத்துக் கொண்டன. அந்தக் காடு கருமையினைப் போர்த்தி கொள்ள துவங்கிற்று.

நந்தினி மெல்ல நடக்க திலீபனும் மெல்ல நடந்தான். அது நிலவினைத் தொடரும் மேகத்தின் காட்சிபோல் இருந்தது, நந்தினியின் மடி நிரம்பி பால் கனத்துப்போனதால் அதன் நடை மெதுவானது, அதைக் கண்டு மனதின் பாரம் அதிகரித்ததால் திலீபனின் நடையும் மெதுவாகிப் போனது.

(தொடரும்)