காளிதாசனின் ரகுவம்சம் : 07

காளிதாசனின் ரகுவம்சம் : 07

திலீபனும் நந்தினியும் மெல்ல நடந்து சென்ற காட்சி வானில் இரு மேகங்கள் ஊர்ந்து செல்லுதல் போல் அந்தத் தபோவனத்தையே அழகு செய்தது.

வசிஷ்டருடைய சிறந்த பசுவோடு கானகத்திலிருந்து வரும் திலீபனை தன் இமையா விழிகளோடு கண்டாள் சுதக்ஷனை. அது நாள் முழுக்க விரதம் இருந்தவன் மாலையில் ஏக்கத்துடன் உணவிடும் இலையினை நோக்கும் பார்வைபோல் இருந்தது.

தபோவன எல்லையில் அப்பசு முன்னே செல்ல திலீபன் பின்னே வந்துகொண்டிருந்தான், சுதக்ஷனை அந்தப் பசுவினை எதிர்கொண்டு சென்று ஆரத்தி எடுத்து மலர் சூட்டி எதிர்கொண்டாள், அவனுக்கும் அவளுக்குமிடையில் அப்பசு சந்தியாகால பொழுதுபோல் நின்று கொண்டிருந்தது.

(பகலுக்குரிய சூரியன் போல் அவனும் இரவுக்குரிய நிலவு போல் அவளும் இருக்க இடையில் சந்திப்பொழுதாக நந்தி நின்றது என அழகுற உவமையாக உருகுகின்றான் காளிதாசன்.)

கோவில் சந்நதியினை வலம் வரும் பக்தை போல் நந்தினியினை வலம் வந்த சுதக்ஷனை அதன் கொம்புகள் இடையில் அட்சதை இட்டு மலர்களுமிட்டு வணங்கி பூஜித்தாள், அது பசுவின் மிகப் புனிதமான இடம் என்பதால் மனமாரத் தொழுதாள்.

காலையில் பிரிந்த கன்றை மாலையில் அணைக்கும் ஆசை இருந்தும், மடி கனத்த நிலை இருந்தும் நந்தினி அவர்களின் பூஜையினை அசையாமல் நின்று ஏற்றுக்கொண்டது, இது தங்களின் பக்தியான பூஜையினை நந்தினி ஏற்றுக்கொண்டதன் அடையாளம் என்பதை உணர்ந்த இருவரும் மனமார மகிழ்ந்தார்கள், நந்தினியினை இன்னும் இன்னும் நன்றியோடு வணங்கினார்கள்.

தன் பகைவர்களை எல்லாம் தோள் வலிமையினால் அடக்கிய திலீபன் அங்கே வசிஷ்டரின் சொல் கேட்டு நந்தினிக்குச் சேவகனாய் மாறிப்போனான், சந்தியா காலத்தில் உள்ள கடமையெல்லாம் முடித்தபின் தன் கன்றுக்கும் தபோவனத்துக்கும் பால் கொடுத்த பின் படுத்திருந்த நந்தினியின் அருகில் அமர்ந்து கொண்டான்.

சுதக்ஷனை அவன் அருகிலே வந்து மறுநாளைகுரிய பூஜை திரவியங்களுடன் அமர்ந்து கொண்டாள், தெய்வத்தின் சந்நிதி விளக்கின்றி இருத்தல் கூடாது என்பதுபோல் விளக்கு ஒன்றையும் ஏற்றி வைத்தாள், அப்பசுவினையே தொழுது கொண்டிருந்தவள் அப்படியே உறங்கிப்போனாள், நந்தினியும் சுதக்ஷனையும் ஓய்வெடுக்கும் அந்நேரம் திலீபனும் சற்று கண் அயர்ந்தான்.

தனக்கொரு சந்ததி வேண்டி இப்படி அவன் தூய விரத்ததை மனைவியோடு மேற்கொண்டான், பெரும் புகழை உடையவனும் மக்களின் வாழ்வினை செல்வத்தை உயர்த்தியவனுமான அவனின் விரத காலமும் மூன்று வாரமாக உயர்ந்து 21 ஆம் நாளை எட்டிற்று.

மறுநாள் அவன் நந்தினியுடன் தபோவனம் தாண்டிக் கானகத்திற்குள் சென்றபோது அறிவில் சிறந்த நந்தினி அவனின் பக்தியினைச் சோதிக்க விருப்பம் கொண்டது, சோதனையின்றி வரமில்லை என்பது தெய்வநியதி என்பதால் அது தன் வழமைப்படி அவனைப் பரிசோதிக்க முனைந்தது.

அதனால் கங்கை ஹிமாலயத்திலிருந்து பூமியில் விழும் இடம் அருகே உள்ள வளமான புற்களைத் தேடி செல்வது போல் சென்று அங்கிருக்கும் குகை அருகே சென்றது.

அந்த மிகப் பிரமாண்ட ஹிமாலயம் கொடுத்த அழகின் தரிசனத்தில் மெய்மறந்து நின்றான் தீலிபன், அந்நேரம் ஒரு சிங்கம் அப்பசுவினை இழுத்துச் சென்றது, மகா முனிவரான வசிஷ்டரின் பசு, தேவர்களில் ஒருவரான பசு அது என்பதால் அதற்கு துஷ்ட மிருகங்கள் அதனை நெருங்காது என்பதை நம்பிய திலீபன் மலையினை இரசித்துக் கொண்டிருந்தான், சிங்கம் பசுவினைப் பற்றியதை அவன் அறியவில்லை, சனி யாருக்கும் தெரியாமல் வந்து ஒருவனை பற்றுவதை போல் சிங்கம் நந்தினியினைப் பற்றிக் கொண்டது.

சிங்கத்தால் இழுக்கப்பட்ட நந்தினி இட்ட பெரும் ஓலம் மலைகளில் எதிரொலித்தது, மலையழகில் தன் கண்ணும் எண்ணமும் கொண்டிருந்த திலீபன் அந்த அலறல் ஒலி கேட்டு குதிரையின் கடிவாளத்தை இழுத்துத் திருப்புவது போல் தன் தலையினைத் திருப்பி பசுவினை நோக்கினான்.

கையில் வில்லுடன் நின்றிருந்த அவன் நந்தினிமேல் அச்சிங்கம் பாய்ந்து நிற்பதைக் கண்டான், அது தாதுக்களால் சிவந்த மலைமேல் பழுப்பு நிறமுடைய பூக்களைக் கொண்டு நிற்கும் லொத்ர மரம் போல் நின்றது, சிவந்த நந்தினி மேல் பழுப்பு நிறமுடைய சிங்கம் அப்படியான காட்சிபோல் தோன்றிற்று.

சிங்கத்தைப் போல கம்பீரமானவனும் இவனுக்கு எதிரி இவன் எனச் சொல்வதற்கு யாருமே இல்லாதபடி எல்லோரையும் அடக்கியவனுமான அந்த்த திலீபன் புதிதாக எழுந்த எதிரியுடன் மோதுவது போல் தன் வில்லை வளைத்து அம்பை சொருகினான்.

அவன் வில்லின் நாணை அம்போடு இழுத்து நின்று குறிபார்த்தபோது சித்திரத்தில் இருக்கும் காட்சிபோல் அசையாது நின்றான், அவன் கைநகங்கள் பட்டு அம்பின் பின்னால் கட்டபட்டிருந்த கழுகின் இறகுகள் ஒளிர்ந்த காட்சி ரம்மியமாய் இருந்தது.

(அம்பு சரியாக காற்றில் வேகமாக சரியாக‌ செல்லும் பொருட்டு கழுகின் இறகுகளை அதன் பின்பக்கம் கட்டிவைப்பது வழமை.)

அவன் மனம் அவமானத்தில் கொதித்தது, முன்னமே சிம்மத்தை கண்டு கொல்லவில்லையே என நொந்து கொண்டான், இப்போது அம்பை செலுத்தினால் நந்தினிக்கு பாதகமாகலாம் என்பதால் மிகுந்த கவனத்தோடு சிம்மத்தை இலக்கு வைத்தான். அது தாமதமானது.

அதனால் மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட சர்ப்பம் போல் அவன் நின்றிருந்தான், தன் பராக்கிரமெல்லாம் இந்தச் சிம்மத்தை கவனியாது விட்டதில் வீணானது என்பது போல் மனப்பாரம் கொண்டான்.

பசுவினைத் தன் வலிமையான கரங்களால் பற்றிக்கொண்ட சிம்மம் பேச தொடங்கிற்று, மிக உயர்ந்தவனும் மனு வம்சத்தின் மலை போன்றவனும், இனி பெறுவதற்கு வெற்றி இல்லை எனுமளவு வெற்றிகளைப் பெற்றவனும், எதற்குமே பெரிய ஆச்சரியப்படாதவனுமான அந்தத் திலீபன் மனிதர்கள் மொழியில் சிங்கம் பேச கேட்டு அதிசயித்து தன் அம்பினைச் செலுத்தாமல் நோக்கினான்.

சிங்கம் தொடர்ந்தது. அது பேச பேச அதிர்ந்து போனான் திலீபன். தெற்கே கடலில் கிடைக்கும் முத்துக்கள் போல பெரிய வியர்வை துளிகள் அவனில் அரும்ப ஆரம்பித்தன‌.

(தொடரும்..)