காளிதாசனின் ரகுவம்சம் : 08
காளிதாசனின் ரகுவம்சம் : 08
சிம்மம் திலீபனிடம் பேசத் தொடங்கிற்று.
“மன்னனே, காற்று இம்மலையினை அசைக்குமோ சொல்? அப்படி உன் அஸ்திரங்களெல்லாம் என்னை வென்றுவிடமுடியாது. நீ வலிமையுடவன் என்றாலும் என்னிடம் உன் வலிமை நில்லாது.
நான் யார் என்பதை முதலில் அறிந்துகொள் மன்னா. நானே கும்போதரன், வெண்மையான விடையின் மேல் அந்தப் பரமசிவன் ஏறும் போது என் முதுகின் மேல் தன் பாதம் பதித்தே ஏறுவார். ஆம், பரமனின் பாதங்களைத் தினமும் தாங்கும் பேறுபெற்றவன் நான் அதனால் மகா புனிதமானவன்.
அன்னை பார்வதியின் சிம்மமான நிகும்பன் என் நண்பன் என்றால் என் வலிமையினைப் புரிந்துகொள்.
இதோ இந்தத் தேவதாரு மரத்தைப் பார். இது பார்வதியால் வளர்க்கப்படும் மரம், அவள் தன் பொற்குடத்தில் தூய்மையான நீர் ஊற்றி பிள்ளை போல் வளர்க்கும் மரம், சுப்பிரமணியன் மேல் அன்னைக்கு எவ்வளவு அன்பு உண்டோ அது இம்மரத்தின் மேலும் அவளுக்கு உண்டு, அதனால் சிவபெருமானும் இம்மரத்தை மகன்போல் கொண்டாடுவார்.
ஒருமுறை இந்த மரத்தினை காட்டுயானைகள் உரசி அதன் பட்டைகள் உதிர்ந்து மரம் காயப்பட்டதை கண்ட பார்வதி அசுரனின் அஸ்திரத்தால் சுப்பிரமணியன் காயம்பட்டதை கண்டு துடித்ததைப் போல் துடித்தாள், அவ்வளவு அன்பு அவளுக்கு இம்மரத்தின் மேல் உண்டு.
அது முதல் என்னைச் சிம்மவடிவமாக்கி காட்டுயானையோ இதர விலங்குகளோ இம்மரத்தின் அருகில் வந்தால் அவற்றைத் தாக்கி உண்ணும்படி சிவன் என்னை இங்கே நியமித்துள்ளார், நான் பரமசிவனின் சேவகன்.
விதி முடிந்த இந்தப் பசு இப்பக்கம் வந்தது. எனக்குப் பரமசிவனே அளக்கும் படி, ராகுவுக்கு முழுநிலவு போல எனக்கு இந்தப் பசு மிகுந்த மகிழ்ச்சியான உணவாகும். இந்த இரத்தபோஜனம் எனக்கு நிறைவானது.
மன்னா, இதை அவமானமாகக் கருதாமல் வெட்கம் கொள்ளமால் திரும்பிப் போ, குருவின் கட்டளைக்காக இப்பசுவினை நீ காக்க முயல்வது அவர்மேல் உள்ள அன்பை நிரூபிக்கும் செயலாகலாம், ஆனால் அதனால் பலனேதும் வாரா.
பலமான ஆயுதம் தோற்கலாம், ஆனால் வீரர்களின் வீரமுமும் முயற்சியும் அழியாமல் நிலைபெறும், இங்கே உன் ஆயுதம் தோற்றாலும் உன் வீரம் நிற்கும். பரமசிவனின் சேவகனான என்னை எந்த ஆயுதம் கொண்டு உன்னால் வெல்லமுடியும்? அது உனக்கு இழுக்காகாது என்பதில் நிம்மதி கொள்.
சிம்மத்தின் கம்பீரமான மொழிகள் கேட்ட திலீபன் தன் வல்லமை பரசிவனிடமே தடுமாறியிருக்கின்றது, அது தனக்குப் பெருமையே என்பதில் கொஞ்சம் நிம்மதி கொண்டான், தன் மேலான வருத்தம் அவனுக்குச் சற்று தணிந்தது.
சிவனுக்கு எதிராக வீச தன் வஜ்ராயுதத்தை எடுத்த இந்திரன் ஸ்தம்பித்து நின்றதுபோல் நின்றான் திலீபன், மெல்ல இயல்பாகி சிம்மத்துக்குப் பதில் மொழிந்தான்.
“சிம்மமே, இயலாமையில் பேசுவோரின் வார்த்தைகள் பரிகசிக்கப்படும், பொய் என இழகப்படும், ஆனால் நீயோ எல்லோரின் மனதில் இருப்பதையும் அறியக்கூடிய சக்தி கொண்டவன், அதனால் என் வார்த்தைகளை நீ நம்புவாய் என்பதால் நான் பேசுவதை கொஞ்சம் செவிமடுத்துக் கேட்பாயாக.
அசையும் அசையாப் பொருட்களில்லாம் இருப்பவரும், முத்தொழில் செய்பவருமான பரமசிவனின் ஆணையினை நீ மதிப்பது போல் நானும் பெரிதாக மதித்து வணங்குகின்றேன், ஆனால் என்குரு வசிஷ்டர் அக்னிஹோத்ரி, அக்னியால் தேவதைகளை வழிபட்டு வருபவர் உலக நலன்களுக்காய் யாகம் செய்பவர், அவரின் ஹோமத்துக்கான எல்லாமும் தருவது இப்பசு. அதனை என் கண்முன் கொல்வது என்னால் எப்படி ஏற்புடையதாகும்? எல்லாம் துறந்த அந்த மாமுனிவர் உலக நலனுக்காய் வைத்திருக்கும் ஒரே ஒரு சொத்து இந்தப் பசுவல்லவா?
சிம்மமே, பசுவினைச் சரியான இடத்துக்குக் கொண்டு செல்லாத நானே இங்குக் குற்றவாளி. அதனால் நீ என்னை உண்டு உன் பசியினைப் போக்கிக் கொள், இதனால் பரமசிவனின் கட்டளையினைச் செய்தவனாகின்றாய். நானும் என் குற்றத்துகுரிய தண்டனையினைப் பெற்றவனுமாகின்றேன். இப்பசுவினை விட்டுவிடு இதன் கன்று அதன் வருகையினை எதிர்பார்த்து ஆவலுடன் தபோவனத்தில் காத்திருக்கின்றது. அதுவும் பிழைக்கட்டும்.
குகையின் வாசலில் நின்ற சிங்கம் சிரித்தபடி பேசிற்று. அந்தக் குகையின் இருள் அதன் பற்களால் துண்டு துண்டானது எனக் காட்டியபடி பேசிற்று.
“மன்னா, நீ உண்மையிலே அரசபாடம் கற்றவனா? சிறிது கொடுத்து பெரியன பெறல் வேண்டும் என்பது பாடம், நீயோ உன் வெண்கொற்றகுடை, இளமை பருவம், இந்த உடல் என எல்லாமும் இழக்கத் தயார் என்கின்றாய், சித்தம் கலங்கியவனைப் போல் அல்லவா பேசுகின்றாய்?
நான் உன்னிடம் கேட்கின்றேன், இப்பசு ஒன்று காட்டில் இறப்பதால் யாருக்கு என்ன நஷ்டம்? ஆனால் நீயோ அரசன், நீ இல்லாவிட்டால் உன் அரண்மனை ஆடும்; உன் மனைவியர் கதறுவர்; உன் சேனை கலங்கும்; உன்நாட்டு மக்கள் திகைப்பர்; நீ வாழ்ந்தால் நாடே வாழும். தகப்பனைப் போலிருந்து உன்நாட்டு மக்கள் எல்லோரையும் காப்பாய். அந்நிலையில் நீ பிராணிகள் மேல் கொண்ட இரக்கத்தால் இப்படிப் பேசுவது எப்படிச சரியாகும்?
நீ உன் குரு வசிஷ்டருக்கு அஞ்சுகின்றாய், அவரின் கோபம் உன்னை நெருப்பு மழையாய் சுட்டெரிக்கும் எனத் தயங்குகின்றாய். இப்பசு இல்லாமல் போனால் அவரின் உக்கிரபார்வைக்குப் பதில் சொல்லமுடியாது எனக் குழம்புகின்றாய். திலீபா, நீ நினைத்தால் கோடான கோடி பசுக்களை, பெரிய குடம் போன்ற மடியுடன் அவருக்குக் கொடுக்கலாமே, அதனால் அவர் கோபம் குறையக்கூடும், அப்படி வாய்ப்பிருந்தும் ஏன் சாகத் துணிகின்றாய்?
அதனால் சொல்கின்றேன், இளமையான உன் உடலை மீட்டுக்கொள், அதைக் கொண்டு பூலோக சொர்க்கமான உன் நாட்டை ஆட்சி செய், இளமையின் எல்லாத சந்தோஷங்களையும் கொண்டாடு, அதனையெல்லாம் இழந்துவிடாதே”
சிம்மம் உரக்கச சொன்ன இவ்வார்த்தைகள் குகையில் எதிரொலித்து திரும்ப திரும்ப திலீபனின் காதுகளில் அலைமோதி எதிரொலித்தன, அது சிங்கம் திரும்ப திரும்ப அவனுக்கு ஆலோசனை சொல்வது போலவே இருந்தது.
திலீபன் அப்பசுவினை நோக்கினான். பசு அது அரசன் தன்னைக் கைவிட்டுவிடுவானோ, சிம்மத்தின் சொல்கேட்டு சென்றுவிடுவானோ என்பது போல் அவனைப் பரிதாபமாகப் பார்த்தது. சிங்கத்தின் வலிமையான பிடியில் இருந்து எப்படி நான் தப்புவேன் என்பது போல் வேதனையும் கொண்டிருந்தது, அதன் கண்கள் பெரும் அச்சத்தின் மொழியினை அவனோடு பேசின.
அவன் சிம்மத்துக்குப் பதில்மொழி சொன்னான், “சிம்மமே, நான் ஷத்ரியன், மன்னன் என்றாலும் நான் பூரண ஷத்ரியன். என் தொழில் எல்லா உயிர்களையும் காப்பது, அப்படிக் காக்காமல் பின்வாங்கினால் அது என் குலதர்மத்துக்கே இழுக்கானது. ஷத்ரிய தர்மத்தை கைவிட்டு நான் வாழ்வது வாழ்வா? அது இறப்புக்குச் சமம், என் தர்மத்துகாக நான் இறந்தால் அதுதான் என் வாழ்வு.
நான் கோடி பசுக்களைக் கொடுத்தாலும் இந்தப் பசுவுக்கு ஈடாகுமா? இது மகாபெருமை கொண்ட காமதேனுவின் மகள், நீ சிவனருள் பெற்றதாலே இதனைப் பற்றும் சக்திபெற்றாய். உன் சொந்த பலத்தால் அன்று, மற்ற விலங்குகளால் இதன் அருகில் கூட வரமுடியாது, அவ்வளவு புனிதமான பசு இது.
என்னை நீ உண்பதால் உன் பசியும் தீரும், என் குருவின் யாகமும் தடையின்றி நடக்கும், உங்கள் இருவரின் கடமையும் ஒருசேர நடக்க என் உடலைத் தரத் நான் தயாராகின்றேன்.
சிம்மமே, நீ சிவசேவகன், நானோ குருசேவகன். உனக்கு இம்மரத்தைக் காப்பது கடமை, எனக்கு எம்முனிவரின் பசுவினைக் காப்பது கடமை. கடமையின் நோக்கத்தை இருவருமே உணர்ந்திருக்கின்றோம். அதனால் என்னை நீ புரிந்து கொண்டு, என்னை எடுத்து கொண்டு அப்பசுவினை விடுவிப்பாயாக. இப்பசு இல்லாமல் எம்முனிவர் முன்னால் என்னால் செல்லமுடியாது என்பதால் நான் இங்கே சரிவது சரியானது.
நீ என்னைக் கொல்வதால் இவ்வுடல் அழியுமே தவிர என் புகழுடல் அழியாது. அது இன்னும் வலுப்பெறும். அவ்வகையில் நீ எனக்கு நன்மை செய்தவனுமாகின்றாய்.
சிவசேவகனாகிய சிம்மமே, நட்பு என்பது இருவர் பேசுவதால் வலுவடையும், நாம் இவ்வளவு நேரம் பேசியதால் நீயும் நானும் நண்பர்களாகிவிட்டோம் அல்லவா? என் நண்பனாக எனக்கு இந்த உதவியினை நீ செய்”
அவன் சொன்னதும். “சரி அப்படியே ஆகட்டும்” எனச சொல்லி பசுவினை விட்டது, திலிபனும் தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு யானை வாய்க்குள் செல்லும் உருண்டை போல தன் தலையினை சிம்மத்தை நோக்கிக கொடுத்தான். சிங்கம் நொடியில் பாயும் சக்தி கொண்டது என்பதால் எல்லாம் முடிந்தது தன்னால் நந்தினி பிழைத்தது எனும் திருப்தியில் மனம் ஆத்மா உடல் என எல்லாமும் ஒன்றாக்கித் தயாராகிக் கண்மூடி யாக நெருப்பில் விழும் பொருளாய் நின்றான் திலீபன்.
(தொடரும்..)