காளிதாசனின் ரகுவம்சம் : 11 to 15
காளிதாசனின் ரகுவம்சம் : 11
தனக்கொரு மகன் பிறந்தான் எனும் அமிர்ததுக்கு ஈடான செய்தி கேட்டதும் சூரியனை மகனாய்ப் பெற்ற காசிப முனிவரைப்போல் மகிழ்ந்த திலீபன் அந்தச் செய்தியினைச் சொன்ன பணியாளனுக்குத் தன் செங்கோல், வெண்கொற்றக்குடை, மணிமுடி தவிர வேறு எல்லாமும் அள்ளி அள்ளி கொடுக்கும் அளவு எல்லையே இல்லா மகிழ்வினை கொண்டவனாய் மகனைக் காண விரைந்தான்.
அங்கே கலைமான் மடியில் கன்றினைப்போல் சுதக்ஷனை அருகே கிடந்த தன் மகனைக் காற்றில்லா இடத்தில் ஆடாத தாமரை மலர் போல கண் அசையாமல் கண்டான், பௌர்ணமி காலத்தில் பொங்கி வரும் கடல் போல அவனுக்குள் பெரும் மகிழ்ச்சி அலை ஆரவாரமாக எழுந்து கொண்டே இருந்தது, அடக்கமுடியா அளவு ஆர்ப்பரித்தது.
சுரங்கத்தில் கிடைப்பது வைரமாக இருந்தாலும் பட்டை தீட்டபட்டபின் ஜொலிப்பது போல இஷ்வாகு மன்னனின் வாரிசாக திலீபனின் மகனாக இருந்தாலும் வசிஷ்டர் வந்து குழந்தைக்கு ஜாதகாமம் முதலிய சடங்குகளைச் செய்தபின் அந்த குழந்தை இன்னும் பிரகாசித்தது.
திலீபனுக்கு மகன் பிறந்தான் என அந்நாட்டின் மக்களும், நடனப்பெண்களும் மட்டும் வாத்தியங்கள் இசைத்து குழல் இசைத்து ஆடிப்பாடவில்லை, வானலோகத்துத் தேவர்களும் அவர்களின் நடன மங்கையரும் மிகுந்த மகிழ்ச்சியில் தேவலோக இசையுடன் ஆடிப்பாடி அந்த நற்செய்தியினைக் கொண்டாடினார்கள்.
செய்தியில் மிகுந்த நல்ல செய்தி கேட்கும் போது அரசர்கள் சிறைக்கைதிகளை விடுதலை செய்வது வழமை, தனக்கோர் மகன் பிறந்தான் என்ற மாபெரும் நற்செய்தியினைக் கேட்டபின்னும் திலீபன் எந்தக் கைதியினையும் விடுவிக்கவில்லை. காரணம், அவன் நாட்டில் குற்றமில்லை என்பதால் சிறைகளில் எவருமில்லை, எல்லோருக்கும் எல்லாமே நிறைவாகக் கிடைத்தால் ஏது குற்றம்?
ஆனாலும் திலீபன் விடுதலைப் பெற்றான், மனிதனாகப் பிறப்பனுக்குத் தேவர்கள், மகரிஷிகள் மூதாதையர்கள் என மூவருக்கும் செய்யும் கடன் உண்டு, திலீபன் முதல் இரண்டை சரியாகச் செய்துவந்தான், பித்ருக்களுக்கு மட்டும் தனக்குப் பின் அவர்களுக்கான காரியத்தை செய்பவர் யார் எனும் துன்பச்சிறையில் அடைபட்டுக் கிடந்தான், இப்போது அதிலிருந்து விடுபட்டான்.
அவன் தன் மகன் ஞானத்தின் எல்லையினை அடைபவன், வீரத்தின் எல்லையினை அடைபவன், தர்மத்தின் எல்லையினை அடைபவன், வேதத்தின் எல்லையினை அடைபவன், எல்லா நல்ல விஷயத்தின் எல்லையினையும் அடைபவன் எனும் பொருளில் “ரகு” எனப் பெயரிட்டான், அந்த பெயருக்கு “எல்லையினைத் தொடுபவன்” என்பது பொருளாயிற்று.
செல்வங்களின் அரசனான திலீபனின் மகனான அந்த ரகு, சூரியனின் கதிர்களால் ஒளிர்ந்து வளரும் சந்திரன் போல் மிகுந்த தேஜசுடனும் அறிவுடனும் அங்க பலத்துடனும் வளர்ந்துவந்தான், சூரியனால் சந்திரன் ஒளிபெற்று ஒளிர்வது போல திலீபனால் கம்பீரமாக வளர்ந்துவந்தான் ரகு..
பரமேஸ்வரனும் பார்வதியும் எப்படி சுப்பிரமணியனை மகனாக பெற்று மகிழ்ந்தார்களோ,, இந்திரனும் இந்திராணியும் எப்படி ஜெயந்தனை பெற்று மகிழ்ந்தார்களோ, அப்படி ரகுவினால் திலீபனும் சுதக்ஷனையும் மிகுந்த மகிழ்ச்சியும் ஆனந்தமும் கொண்டிருந்தார்கள்.
சக்கரவாக பட்சிகள் போல ஒருவருக்கொருவர் உள்ளம் உருகும் அளவு பெரும் அன்பு கொண்டிருந்த திலீபனும் சுதக்ஷனையும் அந்த அன்பினைத் தங்களைத் தாண்டி மகன்மேல் வைக்கும் காலம் வந்தது, ஆனாலும் அவர்களுக்குள்ளான அன்பு குறையாமல் பந்தம் இன்னும் இன்னும் மகனால் அதிகமானது.
(தொடரும்)
காளிதாசனின் ரகுவம்சம் : 12
அந்தக் குழந்தை தவழ்ந்து நடைபயின்று வளர ஆரம்பித்தது. ஒவ்வொரு நொடியும் ஆனந்த ஊற்றினை அது அள்ளி திலீபனுக்கும் சுதக்ஷனைக்கும் கொடுத்துக் கொண்டே இருந்தது. உரியகாலத்தில் தாதியரின் கைபிடித்தபடி நடந்து கலைகளைக் கற்கத் தொடங்கிய அக்குழந்தை அவர்கள் கற்பித்தபடி பெரியோரை வணங்கும் முறைப்படி தாயினையும் தகப்பனையும் தன் இளந்தாமரை குவியல் போன்ற பிஞ்சுக் கரங்களால் கூப்பி வாழைக்கன்று காற்றில் சரிவது போல் சரிந்து வணங்கியபோது திலீபனும் சுதக்ஷனையும் பேரானந்த எல்லைக்கே சென்றார்கள்.
உலகில் உள்ள இன்பங்களில் முதன்மையானது மழலை தன் பெற்றோரை தீண்டும் இன்பமே. உடல் படைத்த பயன்களில் அது தலையானது, அக்குழந்தை திலீபன் மடியில் இருந்தபோது அதன் பிஞ்சுவிரல்கள் அவனைத் தழுவியபோது அமிர்தம் தன் மேல் பொழிந்ததுபோல் மகிழ்ந்தான், கண்களை மூடி ஆழமாக அந்த ஸ்பரிசம் கொடுத்த சுகத்தில் மூழ்கிப்போனான்.
பூலோக ஜனங்களின் தலைவனான திலீபன் பிரம்மன் எப்படி இந்த உலகை படைத்துவிட்டு இனி பகவான் விஷ்ணு காத்துக் கொள்வார் என நம்பிக்கை கொள்கின்றானோ அப்படி இனி தன் மகன் இந்நாட்டையும் மக்களையும் காத்துநிற்பான் எனப் பெரும் நிம்மதி அடைந்தான்.
தலையில் கொண்டை வைத்துக் கொண்டு சக மந்திரி குமாரர்கள் இன்னும் குருக்களின் குழந்தைகளுடன் அவன் எழுத்துக்களைக் கற்று அதனால் சொற்களைக் கற்று பாடத்தின் பொருளை ஆழமாக கிரஹிக்கத் தொடங்கினான். அது ஆற்றின் வழியாக மரக்கலம் ஆழமான கடலுக்குச் செல்வது போன்ற காட்சியாக இருந்தது.
உரியகாலம் வந்தபோது வேதத்தில் சிறந்த குருக்களைக் கொண்டு அவனுக்கு உபநயனம் செய்துவைத்தான் திலீபன். அரசனின் கடமையாகவும் தந்தையின் கடமையாகவும் அதைச் செய்தான். வித்தையினை ஆழக் கற்கும் மாணவன் கிடைப்பதை விட குருவுக்கு என்ன வேண்டும்? ரகு வித்தைகளை விரும்பி கற்பதைக் கண்டு குருவானவர்கள் மிகவும் ஆர்வமாய் அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள், அது பசியால் வாடும் குழந்தைக்குத் தாய் பால் அன்னம் ஊட்டுவது போல் அறிவினை ஆர்வமாகப் புகட்டினார்கள்.
எல்லாத் திசைக்கும் அதிபதியான சூரியன் தன் ஏழு குதிரைகளால் வேகமாக வானைக் கடப்பது போல தன் நுண்ணறிவால் நால்வகை பாடங்கள் எனும் வானத்தை எளிதில் கடந்தான் ரகு, சூரியனின் ஏழு குதிரைகளுக்கும் புதுவிஷயம் அறிதல், நிறைய கேட்டல், பல விஷயம் பெற்றுக்கொள்ளுதல் ,பெற்றதை நிறுத்திக் காத்தல், பொருட்களின் தன்மை அறிதல், அதிலுள்ள உண்மையினை உணர்தல், தத்துவ தீர்மானம் பெறுதல் என ஏழு குணங்கள் உண்டு.
அந்த ஏழு குதிரைகளைப் போலவே நுண்ணறிவினைப் பெற்ற ரகு, தர்க்க சாஸ்திரம், வேதங்கள், பயிர்த்தொழில் மற்றும் வரி, ராஜரீகம் எனும் நால்வகை பாடங்களிலும் எளிதாகக் கற்றுத் தேர்ந்தான்.
ரகு பாடங்களோடு வில் வித்தை உள்ளிட்டவைகளையும் கற்றான். வில்வித்தையில் சிறந்தவனான திலீபன், பிரம்மச்சாரியர் அணியும் மான் தோலால் ஆன ஆடை உடுத்தி விரதத்துடன் கலைகளைக் கற்கும் தன் மகனுக்குத் தானே குருவாக இருந்து வில் வித்தை கற்றுக் கொடுத்தான். மந்திரம் சொல்லி அஸ்திரம் ஏவும் கலையினைக் திலீபனிடம் இருந்தே பெற்றுக் கொண்டான் ரகு, சிங்கம் தன் குட்டியினைத் தானே பயிற்றுவிப்பது போல் அவன் பயிற்றுவித்தான்.
காலத்தின் கட்டளைக்கேற்பவே உலகம் இயங்கும், ரகுவுக்கும் குழந்தை பருவத்தை கைவிட காலம் உத்தரவிட்டது. சிறிய யானைக்குட்டி பெரிய யானையாக மாறுவது போல், கன்றுக்குட்டி காளையாவது போல் அவனும் வாலிபபருவம் அடைந்தான், சூரியன் எழும்போது விடிவெள்ளி மங்குவது போல் திலீபனுக்குள் முதுமை இறங்கிக் கொண்டிருந்தது.
எல்லாக் கலைகளையும் கற்றதனாலும், அரச குல வழி வந்ததாலும், பெரும் அறிவும் வீரமும் நற்குணமும் இருந்ததாலும் எதற்கும் பெரிதும் மகிழாததும் சிறிதும் கலங்காததுமான காம்பீர்யம் (கம்பீரம்) எனும் இயல்பு அவனிடம் வந்தது.
ஒரு அந்தணன் 16 ஆம் வயதில் கடமையினைத் தொடர்வான்; ஒரு ஷத்திரியன் 21 ஆம் வயதிலே தன் சொந்தபலத்தில் நிற்கத் துவங்குவான். இதனால் கோதனம் எனும் சடங்கு இந்த வயதில் அவர்களுக்கு நடைபெறும். ரகுவுக்கு 21 ஆம் வயது வந்தபோது அவனுக்குரிய கோதான சடங்குகளைப் பிரமாதமாகச் செய்தான் திலீபன். பசுக்களைத் தானம் செய்தல் உள்ளிட்ட சடங்குகளுடன் இனி என் மகன் எனக்குக் கட்டுப்பட்டவன் அன்று, அவன் சுதந்திரமானவன் எனப் பொருள்படும் படி அவன் தலைமுடியினைச் சிறிது வெட்டும் சம்பிரதாயத்தை முறைப்படி செய்து அவனுக்கு உரிய வயது வந்துவிட்டதை உலகுக்கு அறிவித்தான்.
அழகும் அறிவும் குடிபிறப்பும் கொண்ட ரகுவுக்குப் பெண் கொடுக்க அரசர்களெல்லாம் குவிந்தார்கள. தட்சனின் மகள்களான ரோஹிணி உள்பட பலர் சந்திரனை மணந்து மகிழ்ச்சியாய் இருந்ததுபோல் பல பெண்கள் அவனை மணந்து பெரும் இன்பவாழ்வைப் பெற்றனர்.
நுகத்தடி போன்ற பலமான கைகளும், அரண்மனை கதவு போன்ற மார்பும், அழகான திரண்ட கழுத்தை கொண்டவனுமான ரகு வனப்பிலும் அழகிலும் தந்தையினை வென்றவனாயிருந்தும் அவனுக்குத் தாழ்ச்சியாய்ப் பணிந்திருந்தான்.
குடிபிறப்பால் மட்டுமன்று திறமையும் அறிவும் குடிகாக்கும் ஆற்றலும் உள்ளவனே அரசனாக முடியும், அந்த எல்லாக் குணங்களும் நிரம்பியிருந்ததால் ரகுவினை இளவரசனாக நியமித்து தான் நீண்டகாலமாக சுமந்த ஆட்சி பாரத்தின் பங்கை அவனுக்கும் கொடுத்து தன் பாரம் குறைந்து கொஞ்சம் நிம்மதியானான் திலீபன். ஆலம் விழுது கிளையினைத் தாங்குவது போல் அந்தப் பொறுபபினைத் தாங்கிக் கொண்டான் ரகு.
வாடிய தாமரையில் இருந்து நீங்கிப் புத்தம் புதுதாமரைக்கு வசிக்க வரும் ராஜலட்சுமி, பழைய அரசனான திலீபனிடம் இருந்து புதிய அரசனான ரகுவினை நோக்கி மெல்ல வர ஆரம்பித்தாள். அதனால் ரகுவுக்கு ராஜ அம்சம் கூடிக் கொண்டே இருந்தது.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 13
காற்று இல்லாமல் நெருப்பு பிரகாசமாக எரியாது, சூரியன் இல்லாமல் மேகங்கள் உருவாகாது, மதம் பிடித்த யானைக்கே பலம் அதிகம். அப்படி ரகுவோடு கூடிய திலுபனும் மிகுந்த பலமுடையவாய் எதிரிகள் இன்றி இருந்தான்.
ரகு திலீபனோடு இருந்ததால் அவன் குதிரையினை அடக்குவார் எவருமிலர். இதனால் தொண்ணுற்று ஒன்பது அஸ்வமேத யாகங்களை எளிதாகச் செய்து முடித்தான் திலீபன்.
நூறாவது அஸ்வமேத யாகமும் நடந்து முடிந்தால் திலீபன் தனக்கு ஈடாக வந்து தன் பதவியினைக் கைபற்றுவான் என அஞ்சிய இந்திரன் அந்த யாகத்தில் இடையூறு செய்ய அந்தக் குதிரையினைக் கவர்ந்து சென்றான்.
கண் எதிரே நின்ற குதிரை மாயமாய் மறைந்தது போனதில் அக்குதிரையின் காவலர்களின் தலைவனான ரகு மிகவும் வருத்தமும் குழப்பமும் அடைந்தான். என்ன நடந்தது எனப் புரியாத அவன் என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பியபோது வசிஷ்டரின் ஹோமபசுவான நந்தினி அப்பக்கம் வந்தது.
நந்தினி அவன் நிலைகண்டு அவனுக்கு உதவிற்று. அதன் கோமியத்தால் ரகு தன் கண்களைக் கழுவ அந்நேரமுதல் அவன் மறைவாய் இருப்பதை காணும் சக்தியெல்லாம் தேவர்களைப் போல் பெற்றான். ஹோமபசுவான நந்தினியின் கோமியம் அவ்வளவு சக்தி கொண்டதாய் இருந்தது.
ரகு தன் யாகக் குதிரையினை இந்திரன் தன் தேரில் கட்டிக் கவர்ந்து சென்றதைக் கவனித்தான், அது இந்திரன் தேரில் அடங்க மறுத்தபோதும் அவன் தேரோட்டியான மாதலி மிகத் திறமையாக அதனை அடக்கிக் கொண்டிருந்தான். வல்லமையானவனும் மலைகளின் சிறகுகளையே முன்பு வெட்டிவீழ்த்தியவனுமான இந்திரன் இப்படிக் கிழக்குபக்கமாகச் செல்வதைக் கண்டான் ரகு.
ரகு அந்த தேரில் இருந்தவனை உற்றுப்பார்த்தான். அவனுக்கு ஆயிரம் கண்கள் இருந்தன, அவன் குதிரைகள் பச்சை நிறத்தில் இருந்தன, அதனால் அவன் இந்திரன் என்பதை அறிந்த ரகு உரக்க சத்தமிட்டான்.
“ஏ இந்திரா, தர்மத்தைச் செய்யும் தேவர்களின் அரசன் நீ, யாகத்தில் முதல் பாகத்தை வாங்கக் கடமைபட்டவனும் நீ, அப்படியான நீ இப்படி யாகக் குதிரையினைக் கொண்டு செல்லலாமா? உன்னால் யாகம் தடைபடலாமா? இது உன் தகுதிக்கு அடுக்குமா?
மூவுலகுக்கும் அரசனாவனும், எல்லாவற்றையும் காணும் சக்திபடைத்தவனுமான இந்திரனே, புனிதமான யாகத்துக்கு அசுரர்கள் அரக்கர்களால் இடையூறு வந்தால் அவர்களை விரட்டிவிட்டு யாகத்தைக் காக்க கடமைபட்டவன் நீ, ஆனால் நீயே இப்படி யாகத்தைக் குலைப்பது வேலியே பயிறை மேய்வதற்குச் சமம் அல்லவா?
யாகத்தைக் காக்க கடமைபட்டவன் என்பதால் நீ இந்தக் குதிரையினை விட்டுவிடுவதே முறை, வேதங்கள் உரைக்கும் தர்மத்தை உலகில் காத்து நிற்கவேண்டியவனும் அதை எடுத்து காட்டவேண்டியவனுமான நீ எல்லோருக்கும் நல்ல உதாரணமாய் இருத்தல் வேண்டுமே தவிர யாகத்தைக் குலைத்தவன் எனும் பழியினை ஏற்றல் கூடாது.
தன் விருப்பமின்றி மானுடரால் தன்னைக் காணமுடியாது, தான் குதிரையினை அபகரித்தது யாருக்கும் தெரியாது என நினைத்த இந்திரன் ரகுவின் இந்தக் கேள்விகளைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவனாய் தன் தேரை நிறுத்தினான்.
(தொடரும்)
காளிதாசனின் ரகுவம்சம் : 14
தன்னை நோக்கி கேள்விகளை எழுப்பிய ரகுவுக்கு இந்திரன் பதில் உரைத்தான்.
“இளவரசனே, நீ என்னைப்பற்றி சொன்னது எல்லாமே உண்மை, ஆனால் என்னிடமுள்ள பெரும் செல்வம், புகழ், இந்திரன் எனும் இந்தப் பெரும் புகழ், அதை உன் தந்தை பறிப்பதை நான் எப்படி அனுமதிப்பேன், யாகங்கள் மூலம் அவன் என் புகழை அபகரிக்க விரும்புகின்றான். அதை நான் தடுக்கவே இதைச் செய்தேன், என்புகழ் குறைய நான் எப்படி அனுமதிப்பேன்?
புருஷர்களில் சிறந்தவர் புருஷோத்தமானரான விஷ்னு, ஈஸ்வரனில் சிறந்தவர் மகேஸ்வரர் எனும் சிவன். அப்படித் தேவர்களில் சிறந்தவன் “சதக்ரது” என நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்த நான், தேவேந்திரன் நான், ஒரே ஒரு புருஷோத்தமன் ஒரே ஒரு மகேஸ்வரன்போல ஒரே ஒரு தேவேந்திரனே, இன்னொருவன் என் பெயரைப் பங்கிடுவதை நான் சகித்துக்கொள்ளமாட்டேன்.
அதனால் நான் உன் தந்தையின் இக்குதிரையினை அபகரிக்கின்றேன், நீ இதனை மீட்க நினைக்காதே. உன் முன்னோர்களான சகரபுத்திரர்கள் முன்பு இப்படி ஒரு அஸ்வமேத குதிரைக்காக கபில முனிவரிடம் மோதியதை நினைந்துபார்.
உன் முன்னோரான ஸகரன் காலத்தில் இதுதான் நடந்தது. அவன் நூறாம் அஸ்வமேதயாகம் செய்ய முனைந்தபோது நான் இப்படிக் குதிரையினைப் பிடித்து பாதாளலோகம் சென்று கபிலமுனி ஆசிரமத்தில் கட்டிவிட்டு சென்றேன். முனிவர் அதைத் தன் அடைக்கலமாக எண்ணினார், அதை மீட்க செய்த சகரனின் புத்திரர்கள் அறுபதினாயிரம் பேர் முனிவருடன் மோதி அவரின் சாபத்தால் நொடியில் அழிந்தார்கள், இப்போது நீயும் அப்படி ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதே. என் வலிமை பெரிது என்றான்.
ரகு அதைக்கேட்டு நகைத்துச் சொன்னான், “இந்திரா இதுதான் உன் தீர்மானம் என்றால் ஆயுதத்தோடு வா, என்னை வெல்லாமல் நீ திரும்பி செல்லமுடியாது, உன் எண்ணம் ஈடேறாது”
அப்படிச் சொன்ன திலீபன் வில்லை கையில் ஏந்தி அம்புதொடுத்து நின்ற கோலமானது திரிபுரத்தை எரிக்க சிவன் விலலேந்தி நின்ற கோலமாய் இருந்தது, அதுவும் வலதுகாலை முன்வைத்து இடதுகாலை பின் நகர்த்தி உடலை நேராக நிறுத்தி அவன் ஆலீடம் எனும் நிலையில் நின்றது கம்பீரமாக இருந்தது.
ரகு மோதலுக்குத் தயாரானான். ஆனால், அம்பினை விடவில்லை. அதே நேரம் ரகுவின் தைரியமும் அவன் தன்னைப் போருக்கு அழைத்த விதமும் இந்திரன் நெஞ்சை தாக்கின. அவன் ரகு தன் வார்த்தைகளால் நெஞ்சம் பிளந்ததைப் போல் துடித்தான், அதனால் தன் வில்லை பூட்டி ரகுவின் மார்பை நோக்கி அம்பை செலுத்தினான்.
இந்திரனின் பாணம் ரகுவினைத் தாக்கி முதன் முறையாக மானிட ரத்த சுவை அறிந்தது. அதுவரை அசுரர்களின் ரத்தம் ஒன்றையே அறிந்த இந்திரனின் அம்பு முதல் முதலாக மானுட குருதியினைத் தொட்டுச் சுவைத்தது.
சிம்மமென சிலிர்த்த ரகு சுப்பிரமணி சுவாமியின் பலம் கொண்டவனாய் இந்திரனின் தோளுக்குக் குறிவைத்தான். ஐராவதம் எனும் யானையினைத் தட்டி தட்டி மரத்தும் இறுகிப்போனதுமான விரல்களைக் கொண்ட அந்தத் தோள் இந்திரனின் மனைவி இந்திராணி அடிக்கடி முகம் புதைப்பதால் அவளின் முகத்தின் அலங்காரமெல்லாம் அத்தோளில் உண்டு, அப்படியான தோளில் தன் பாணத்தை இறக்கினான் ரகு.
அப்படியே மயிலிறகால் அலங்கரிக்கப்பட்ட அடுத்த அம்பினைக் கொண்டு இந்திரனின் வஜ்ராயுத கொடியினை அறுத்துப்போட்டான். ரகு, அதைக் கண்ட இந்திரன் தேவலட்சுமியின் கூந்தலை அறுத்துப் போட்டதைக் கண்டது போல கடும் ஆத்திரம் கொண்டான்.
இருவரும் வெற்றித்தேடி மாறி மாறி அம்புகளைப் பொழிந்த காட்சி இறக்கை கொண்ட நாகங்கள் பறப்பதைப் போல் கடுமையாய் இருந்தது, இந்திரன் வானிலும் ரகு தரையிலும் நின்று பானங்களைத் தொடுத்ததால் இருவரின் படைகளும் ஒதுங்கி நின்று இருவரின் மோதலையும் கவனித்துக் கொண்டிருந்தன.
பராக்கிரமுடைய ரகுவின் தாக்குதலில் இந்திரன் திணறிப்போனான். மேகத்தில் இருந்து வரும் நெருப்பினை மேகத்தின் நீர் அணைக்க முடியாமல் தடுமாறுவதைப் போல் இந்திரன் தன் அம்சமான ரகுவினை அம்புமழை பொழிந்தும் அடக்கமுடியாமல் தடுமாறித் திகைத்தான்.
சந்தனம் பூசிய இந்திரன் கையில் கடையப்படும் பாற்கடலின் ஒலியுடன் இருந்த வில்லின் நாணை பிறைசந்திர வடிவு கொண்ட அம்பின் நுனியால் அறுத்துபோட்டான் ரகு.
கொதிப்படைந்த இந்திரன் தன் வில்லை கீழே போட்டுவிட்டு இனி இவனை வேறு ஆயுதங்களால் வீழ்த்தமுடியாது என்பதை அறிந்து அதிக பலமுள்ளதும், தோல்வி அறியாததும் , மலைகளின் சிறகுகளையே வெட்டிபோட்டதுமான வஜ்ராயுதத்தை எடுத்தான்.
குறிதவறாத அந்த வஜ்ராயுதம் ரகுவின் மார்பை தாக்கிற்று, ரகு அந்த அடியில் வீழ்ந்தான். அதைக் கண்டு இந்திரன் புன்னகைக்க ரகுவின் சேனை சோர்ந்தது. ஆனால், மறுநொடி மின்னலென எழுந்து நின்றான் ரகு, அதைக் கண்ட சேனை ஆர்ப்பரித்தது.
இடிபோன்ற வஜிராயுத்ததால் தாக்கபட்டும் எழுந்து பெரும் யுத்தம் செய்தான் ரகு, அதனால் இந்திரனும் போரைத் தொடர்ந்தான், ரகு களைப்பில்லாமல் தொடர்ந்து நின்று அடிக்கும் பராக்கிரமத்தைக் கண்டு வியந்து உருகிப்போனான் இந்திரன், தன் வஜ்ராயுத்தத்தைத் தாங்கிய பின்னும் நின்று அடித்த ரகுவின் வீரம் அவனைக் கவர்ந்தது.
என் வஜ்ராயுதம் பலமானது, அது மலைகளைக் கூட தாக்கி வென்றது. அப்படியான ஆயுதத்தை உன் மார்பிலே தாங்கி நின்ற உன் வீரத்தைக் கண்டு மகிழ்கின்றேன். அதனால் நீ இந்தக் குதிரையினைத் தவிர என்ன வேண்டுமோ பெற்றுக்கொள் என்றான்.
இந்திரனின் சொல்லைக் கேட்ட ரகு அம்பாரதுணியில் இருந்து உருவிய வில்லை பாதியிலே திரும்பவைத்தான், அவனின் விரல்களின் ஜொலிப்பு அம்பினில் பட்டு அது மிளிர்ந்தது, ரகு இந்திரனிடம் சொன்னான்.
“இந்திரா, இந்தக் குதிரையினை நீ விடுவிவிக்கமாட்டாய் என்றால் எப்போதும் யாகம் செய்து தன்னைப் பரிசுத்தமாக வைத்து கொள்ளும் என் தந்தை இந்த யாகம் முடியாவிட்டாலும் இதனை முழுமையாகச் செய்தால் என்ன பலன் உண்டோ அந்தப் பலனை அடையும்படி அருள் செய்வாயாக.
அப்படியே இன்னொரு காரியமும் செய்வாய், யாகத்தின் பலனை அக்னி தூதனாக பரமசிவனிடம் சேர்ப்பது போல் இங்கு நடந்த எல்லாமும் என் தந்தைக்குத் தெரியும்படி நீயே தூதனை அனுப்புவாயாக, குதிரையினை மீட்க சென்ற ரகு வரம் பெற்றே திரும்பினான் என்பதை அவர் உன் மூலமாக அறிதல் வேண்டும்”
மாதலி எனும் தேர்பாகனை உடைய இந்திரன் அப்படியே ஆகட்டும் எனச் சொல்லி ஏற்பாடுகளைச் செய்தான். சுதக்ஷனையின் மகனான ரகுவோ குதிரையினை மீட்க முடியவில்லையே எனும் வருத்தத்தோடே யாகசாலைக்குச் சென்றான்.
இந்திரன் தூதன் மூலமாக நடந்ததையெல்லாம் அறிந்த திலீபன் மகனைப் பெருமையோடு எதிர்கொண்டான், மகா பலம் பொருந்திய இந்திரனின் வஜ்ராயுத்தை எதிர்கொண்டு பெற்ற காயத்தைத் தடவிப் பெருமிதத்தோடு அவனை அணைத்துக் கொண்டான்.
தொண்ணூற்று ஒன்பது யாகங்களைப் படிகளாக கட்டி சொர்க்கத்தை அடையும் படி ஏணி அமைத்த திலீபன் கடைசிபடியினை அடையும் முன்பே பலன்களை முழுக்க பெற்றதால் நிறைவுற்றான்.
மகனின் வீரத்திலும் அறிவிலும் நம்பிக்கையும் மகிழ்வும் கொண்ட அவன் தன் வெண்கொற்ற குடையும், முடியும் அவனுக்கு அளித்து அரியாசனத்தில் அமரவைத்துவிட்டு தன் மனைவி சுதக்ஷனையுடன் எஞ்சிய வாழ்வை அமைதியாய் கழிக்கும் படி தன் முன்னோர் வழியில் முனிவர்கள் வாழும் கானகம் புகுந்தான். இஷவாகு வம்சத்தின் மரபினை அங்கும் அவன் காத்துக்கொண்டான், பூமி முழுக்க ஆண்ட மன்னன் இப்போது கானகத்தின் ஒரு மரநிழலில் அடைக்கலமாகி அமர்ந்து கொண்டான்.
(தொடரும்)
காளிதாசனின் ரகுவம்சம் : 15
பகலெல்லாம் சூரியனில் இருந்து வரும் ஒளி மாலையானால் தீபத்தில் வந்து ஒளிகொடுக்கும் என வேதம் உரைப்பது போல ரகு தன் தகப்பனின் ஆட்சியினைப் பெற்று ஆளத்தொடங்கினான். அவன் ஆட்சி ஒளிவீசிற்று.
திலீபனுக்குப் பின் ரகு பிரசித்தியாக ஆளத்தொடங்குகின்றான் என்றதும் அவனுக்குகட்டுப்பட்ட மன்னர்கள் முன்பே மனதில் புதைந்திருந்த நெருப்பு இப்போது அக்னியாக கொழுந்துவிட்டு எரிந்தது, திலீபனுக்குப் பின் இந்த அரசு கலையும், தங்களுக்குப் பெரும் வாய்ப்புவரும் என எண்ணியவர்கள் இப்போது இன்னும் இன்னும் பொறாமையால் ஆற்றாமையால் எரிந்து கொண்டிருந்தார்கள், இனி ரகுவுக்கும் அடங்க வேண்டும் எனக் கவலை கொண்டார்கள்.
பாகன் காலத்தோடு தங்களுக்கு விடுதலை என நம்பும் யானைகள் புதிய பாகனிடம் சிக்கிக்கொள்வதைப் போல் சிக்கிக்கொண்டார்கள்.
சிற்றரசர்கள்தான் அப்படிக் கவலையடைந்தார்களே தவிர மக்கள் மிகுந்த மகிழ்ச்சிக் கொண்டார்கள், அவர்கள் இந்திர விழாவில் கம்பமிட்டு இந்திரனின் கொடியேற்றி எல்லோரும் மகிழ்வது போல் ரகுவினைக் குறித்து பெரும் மகிழ்ச்சிக் கொண்டார்கள்.
யானையுடன் போர்க்களம் புகுந்து பகைவர்களை அடக்கும் ரகு, அந்த யானை போல் கம்பீரமாக நடந்து சென்று திலீபனின் சிம்மாசனத்தில் அமர்ந்தான், அவன் நடந்த நடையிலே பகைவர்கள் ஒடுங்கினார்கள்.
ஒளியினால் விழும் நிழலைக் கொண்டே உருவத்தை ஊகிப்பதை போல அவன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த காட்சியின் சௌந்தர்ய அழகானது மறைமுகமாக நின்று லஷ்மி இவன் மேல் ஒளிவீசுகின்றாள் என்பதைக் காண்போருக்குச் சொன்னது.
அவன் அரண்மனை பாடகர்கள் அவனைப் புகழ்ந்து இனிமையாகப் பாடியது அவர்கள் நாவில் நின்று சரஸ்வதி தேவியே அவனைப் பணிந்து போற்றுகின்றாள் என்பதைச் சொல்லிற்று.
காலம் காலமாக ஒவ்வொரு அரசனின் கையில் இருக்கும் இந்தப் பூமி ரகுவிடம் இதுவரை யார் கையிலும் சிக்காத கன்னிப்பெண் போல புதிதாய் அவன் கையில் விழுந்து கிடந்தது, அந்த அன்பினால் அது அவனுக்கு அள்ளி அள்ளி கொடுத்தது. மக்களும் அவன்பால் மகிழ்ந்தார்கள்.
அதிக குளிரும் அதிக வெப்பமும் இல்லாமல் இரண்டும் மிதமாகக் கலந்து வீசும் தென்றல் போல அவன் மிகக் கடுமையாகவும் இல்லாமல் மிகத் தாராளமாகவும் இல்லாமல் இதமான கண்டிப்புடன் மக்களை நடத்தியதால் மக்கள் சுகமாய் வாழ்ந்தார்கள்.
வசந்த காலத்தில் மாமரம் பூத்ததும் மக்களெல்லாம் அந்தப் பூவின் அழகிலும் வாசனையிலும் மகிழ்ந்திருப்பார்கள், அதைக் கண்டு மகிழ்வார்கள், அதே பூ பிஞ்சாகி காயாகி கனியானவுடன் அந்தக் கனிச்சுவையிலே அந்தப் பூவினை மறந்தே விடுவார்கள். இது இயல்பு. அப்படியே கனிபோன்ற ரகுவினைக் கண்டு திலீபன் எனும் கனிக்குக் காரணமான மலரினை அவர்கள் மறந்தேபோனார்கள்.
ஒரு அரசன் தன் ஆட்சியினை நிறுத்த தர்மவழி அதர்ம வழி என இருவழிகளையும் பயன்படுத்தலாம் என்பது ராஜநீதி, இதனை அவையோர் எடுத்துச் சொல்லியும் அவனுக்கு இரண்டாம் வழி அவசியமே இல்லாததாய் இருந்தது.
அவன் மன்னனாக அமர்ந்ததும் பஞ்சபூதங்களும் புத்துயிர் பெற்றன, அதனால் அவை இருக்கும் எல்லாமும் புதியனவாகின, புதிய உலகம் உருவானதுபோல் எல்லாமே புதுப்பிக்கபட்டிருந்தது .
சந்திரன் குளிர்ச்சித் தந்து மக்களை மகிழ்விப்பதால் அவனுக்குச் சோமன் என்றொரு பெயர் உண்டு. வெய்யில் கொடுத்துக் காயவைப்பதால் சூரியனுக்கு வெய்யோன் என்றொரு பெயர் உண்டு, மக்களுக்கு பெருவாழ்வு கொடுத்ததால் ரகுவுக்கு ராஜா என்றொரு பெயரும் அர்த்தமாய்க் கிடைத்தது.
அவன் பெரியதும் காதுவரை நீண்டதுமான கண்களை அழகுற பெற்றிருந்தாலும் அவனுடைய உண்மையான கண் சாஸ்திர அறிவில் அவன் கொண்டிருந்த ஞானதர்ம கண்ணாக இருந்தது, அதைக் கொண்டே அவன் உலகைக் கண்டு ஆட்சி நடத்தினான்.
அமைதியும் வளமும் நிரம்பிய ஆட்சியினைக் கொடுக்கும் அவனை வரவேற்க ஐப்பசி கார்த்திகை மாதம் கொண்ட சரத்காலமும் வந்து தாமரை மலர்களுடன் அழகுற வரவேற்று மகிழ்ந்தது.
இருப்பதை எல்லாம் நீராகக் கொட்டி மேகங்கள் கரைந்தபின் நிர்மலமான ஆகாயத்தில் சூரியனின் கதிர்கள் எல்லாப் பக்கமும் பரவியபோது ரகுவின் புகழும் அதோடு போட்டியிட்டு எல்லா திக்கும் பரவிற்று, இதனால் எதிரிகளும் அஞ்சினார்கள்.
மழையால் கலங்கிக் கிடக்கும் நீர்நிலைகள் வானில் ஆயில்யம் எனும் சரத்கால அகத்திய நட்சத்திரம் வரும்போது தெளிவடைந்து பளிங்குபோல் மாறும், அப்படியே பல சஞ்சலங்களால் ஆசைகளால் கலங்கிக்கிடந்த எதிரிகள் மனமும் ரகுவின் எழுச்சியால் தெளிந்து அமைதி கொண்டது.
சரத் காலத்தில் புத்தம் புது பசும்புற்களை உண்ட மகிழ்வில் பெரிய திமிலும் மதமும் கொண்ட இளங்காளைகள் இனிமையான சூழலில் மகிழ்ந்து தன் கூரிய கொம்பால் மணல் மேட்டை முட்டி முட்டி விளையாடிய அழகானது எதிரிகளின் நிலைகளைக் கலங்கடிக்கும் ரகுவின் பராக்கிரம விளையாட்டு போல் அழகாய் இருந்தது.
வெண்கொற்ற குடையுடன் கம்பீரமாக இருந்த ரகுவின் பெருமையினைப் போல தானும் பெருமை அடைய வெண்தாமரை மலர்களை உருவாக்கி, நீண்ட நாணல் புல்லால் சாமரம் வீசிப் பார்த்தது சரத்காலம். ஆனாலும், ரகுவின் பெருமையினைப் பொலிவினை அடையமுடியாமல் தோற்றது.
சரத்காலத்தில் மேகம் விலகியதும் பொலிவான சந்திரனைக் கண்டதும் மக்கள் எவ்வளவு மகிழ்வார்களோ அப்படி ஒளிவீசும் முகத்தை உடைய ரகுவினைக் கண்டு மகிழ்ந்தார்கள், சந்திரனோ இரவல் ஒளிகொண்டது. ரகுவோ மனதின் அன்பின் ஒளிகொண்டவன் என்பதால் அவன் முகம் சரத்கால சந்திரனை விட பிரகாசமாய் இருந்தது.
அந்தச் சரத்காலத்தில் எங்கும் வெண்ணிற அன்னப்பறவைகள் தென்பட்டன, வெண்ணிற தாமரைகள் பூத்துக் கிடந்தன, வானில் வெண்ணிற நட்சத்திரங்கள் அழகாகப் பூத்துக் கிடந்தன, இப்படி எங்கு நோக்கினும் வெண்மை மயமாக இருந்தன, அவை ரகு கொண்டிருந்த புகழினால் பரவிய வெண்மை போலிருந்தது.
அடர்ந்த கரும்பு தோகையின் அடியில் இருந்து நெல்வயல்களைக் காவலிடும் பெண்கள் அவன் புகழைப் பாடினார்கள், எங்குத் திரும்பினாலும் அவனின் வீரபராக்கிரமும் நல்லாட்சியும் பாடபட்டுக் கொண்டே இருந்தன.
சரத்கால சூழலில் ஏழிலைப்பாலை வகை மரங்கள் பூத்துக் குலுங்கின, அவற்றின் மணம் யானைகளின் மதநீர் மணம் போலவே இருந்ததால் அதை முகர்ந்த யானைகள் தங்களுக்கும் மதநீர் உண்டு என்பதைக் காட்டிச் சுரந்து மதநிலையினை அடைந்தன.
மழைக்காலம் முடிந்தது என அறிவிக்க இந்திரன் வானில் வைத்த தன் வானவில்லை திரும்ப எடுத்தான், அதனால் மழைக்காலம் முடிந்ததை அறிந்த ரகு போர்களைச் செய்யவேண்டி ஓய்வில் இருந்த தன் வில்லை தன் கையில் எடுத்தான், இருவரும் ஒருசேர வில்லை எடுத்தார்கள்.
(தொடரும்..)