காளிதாசனின் ரகுவம்சம் : 26 to 30
காளிதாசனின் ரகுவம்சம் : 26
அஜனைக் கண்டதும் இந்துமதி முகத்தில் ஏற்பட்ட மெல்லிய நாணத்தைக் கண்ட ஸூனந்தை மெல்ல புன்னகைத்தாள். இதனால் நாணத்தில் சிவந்த அவளைப அஜன் முன் நிறுத்திச் சொல்லத் தொடங்கினாள், அவளின் இயல்பான பேச்சுவன்மை இப்போது இன்னும் அழகாக கூர்மையாய் இருந்தது.
“பெருமை மிகு இஷ்வாகு குலத்திலே அரசர்களுள் சிறந்தவரும் உயர்ந்த நற்குணங்களைக் கொண்டவருமான ஒரு மன்னர் இருந்தார். அவர் பெயர் காகுத்ஸர், குலப பெருமையான அவரின் பெயரை அவர் சந்ததியில் வரும் உத்ரகோசல மன்னர்களெல்லாம் தரித்து நிற்கின்றார்கள்.
அவர் எப்படியான பெரும் வீரர்? முன்பு அசுரரை எதிர்த்து தேவர்களுக்காக அவர் போரிட்டபோது இந்திரனே எருது வாகனமாக அவரைத் தாங்கினான், பெரும் திமில் கொண்ட எருதின் மேல் இருந்து பரமசிவன் போல் போரிட்டு அசுரரை வீழ்த்தியவர் அவர், அதனாலே “ககுத்ஸர்” என்றானார்.
அவரின் பாணங்களால் அசுரனின் மனைவியரின் கன்னங்கள் அழகை அலங்காரத்தை இழந்தனர். அவரின் பாணம் அசுரர்களை அழித்ததால் அவர் மனைவியரின் துயர்மிகு கோலம் அப்படி இருந்தது.
இந்திரனின் தோள் ஆபரணம் அவன் தன் ஐராவதம் எனும் யானையினைத தட்டும்போது நழுவது உண்டு, அப்படியான இந்திரனின் தோள்வளை தன்னை உரசும்படி அவனுடன் நெருக்கமாக அவர் அமர்ந்திருப்பார், எருது உரு கொண்ட இந்திரன் மீது அமர்ந்த அவர் இந்திரனுடன் அவன் ஆசனத்திலும் அமர்வார், இதனால் இந்திரனின் ஆசனத்தில் பாதியிடம் பிடித்த ஒருவர் எக்காலமும் அவரே.
பெருமை பல மிக்கவரும், நற்குணங்களில் நிறைந்தவருமான திலீபன் இந்தக் ககுத்ஸரின் வழிவந்தவர், அவர் இந்திரனுடைய பொறாமையினைப் போக்க பெருந்தன்மையாய் நூற்றுக்கு ஒன்று குறைவு எனுமளவு அசுவமேத யாகம் செய்தவராய் இருந்தார்.
அவர் ஆட்சியில் திருட்டு என்பதே இல்லை. காரணம், குறைகள் யாருக்கும் இல்லை, அவர் ஆட்சியில் நாட்டியப் பெண்கள் முதல் பல பெண்கள் மது அருந்தி நினைவிழந்து மயங்கிக கிடந்தாலும் காற்று கூட அவர்கள் உடையினைத தொட்டுப்பார்த்ததில்லை. அப்படி ஒரு பாதுகாப்பான ஆட்சியினை அவர் நடத்தினார்.
அந்தத் திலீபனின் மகனான ரகு இப்போது அந்நாட்டை ஆள்கின்றார், அவர் திக்விஜயமெல்லாம் செய்து எல்லாத் திசையில் இருந்தும் பெரும் செல்வம் சேர்த்து அதனைக் கொண்டு விஸ்வஜித் எனும் யாகத்தை செய்து தானமெல்லாம் வழங்கியபின் தனக்கென மண் ஓடு ஒன்றை மட்டும் வைத்திருக்கின்றார்.
அவரின் புகழ் இவ்வளவு என அளக்க முடியாதபடி அது வானலோகத்தில் பரவி நிற்கின்றது, பாதாளத்தின் இடுக்குகளிலும் இறங்கி நிற்கின்றது, மலைகளைக் கடந்து நிற்கின்றது, காலத்தால் கூட அளக்கமுடியா அவர் புகழை அளப்பது பெரும் சிரமம்.
இவர் அந்த ரகுவின் மகன் அஜன், இந்திரனுக்கு ஜெயந்தன் பிறந்ததுபோல் ரகு மன்னருக்கு இவர் பிறந்தார். சிறு பிராயம் என்றாலும் பெரிய ராஜ்ஜிய பாரத்தை தந்தையுடன் மிக அழகாக நிர்வாகம் செய்கின்றார், அது அவருக்கு பிறப்பிலே வந்திருக்கின்றது
உனது நற்குடி பிறப்பு, இளமை, சாந்தம் , கூரிய அறிவு, அழகு என எல்லாவற்றுக்கும் அவரே பொருத்தமானவர், அவரை நீ மணந்தால் தங்கத்தோடு ரத்தினம் பொருந்தியது போல் மிக பொருத்தமானதாக இருக்கும்.
ஸீனந்தையின் வார்த்தயால் தன் நாணத்தை மீறிய இந்துமதி அஜனைத் தன் கண்களால் நோக்கினாள், அந்தப் பார்வையின் அழகே அவன் கழுத்தில் சுயம்வர மாலை விழுந்ததைப் போல் இருந்தது.
அவன் மேல் தனக்குள்ள விருப்பத்தை அவள் சொல்ல நாணி நின்றாலும் சுருண்ட கூந்தல் கொண்ட அவளின் மயி(ர்)கூச்சத்தின் அடையாளம் உடலை மீறி வெளிப்பட்டது.
அவள் மனம் அஜனிடம் சிக்கிக் கொண்டது என்பதை அறிந்த இந்துமதி தன் கைபிரம்பை இன்னும் இறுக்கப் பிடித்தபடி அவளைப் பரிகாசிக்கும்படி, “இளவரசியே நாம் அடுத்த மன்னரிடம் செல்வோம்” எனச் சொல்லி நகைத்தாள், அவளைச் சற்றுக் கோபத்துடன் கண்ட இந்துமதி அஜனை விட்டு அகலமாட்டேன் என்பதைக் குறிப்பால் சொன்னாள்.
யானையின் துதிக்கை போன்ற தொடைகளை உடைய இந்துமதி, மணமிக்க சிவந்த பொடிகள் பூசப்பட்ட மலர் மாலையினைக் காதலின் உருவாய்க் கொண்டு அஜன் கழுத்திலிட்டாள், மாலையினை அவனுக்கு இட்டாலும் நாணத்தால் நிலம் பார்த்து நின்றாள்.
தன் பரந்த மார்பில் மணமிக்க அவள் சூட்டிய மாலையினைக் கண்டவன் அது மாலை அல்ல அவளின் மெல்லிய கரங்கள் தன் மார்பில் இருப்பதாக மயங்கினான்.
தரை நோக்கிச் நின்றாலும் மெல்ல அவனை நோக்கிச் சென்று அவன் அருகே நின்று ஓரக்கண்ணால் அவனை மெல்ல கண்ட இந்துமதி பின் மக்களை நோக்கினாள்.
அவர்களின் ஜோடி பொருத்தம் கண்ட மக்கள் மேகமில்லாப் பௌர்ணமியில் நிலவோடு கூடிய ஒளி போலவும், கடல் சேர்ந்த கங்கை போலவும் அவர்களின் அதி பொருத்தமான தோற்றம் இருப்பதைச் சொல்லி வாழ்த்தினார்கள், விதர்ப்ப நாட்டு மக்களின் மகிழ்ச்சியான வாழ்த்தொலியில் மண்டபமும் கலந்து கொண்டது.
இந்துமதி அஜனுக்கு மாலையிட்டதால் அவனைச் சார்ந்தவரெல்லாம் மகிழ்ந்திருந்தனர், ஆனால் அவள் மாலை கிடைக்காத இதர மன்னர்களும் அவர்கள் தரப்பினரும் முகம் வாடிப் போனார்கள், காலையில் சூரியனைக் கண்டு மலரும் தாமரையும், அதே சூரியனைக் கண்டு கூம்பிக்கொள்ளும் அல்லியும் கொண்ட தடாகம் போல ஒரு பக்கம் மலர்ச்சியும், மறுபக்கம் முகவாட்டமும் கொண்ட முகம்களுமாய் மண்டபம் இருந்தது.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 27
தன் தங்கை இந்துமதி அஜன் கழுத்தில் மாலையிட்டதை அறிந்து பெரும் மகிழ்வும் நிம்மதியும் கொண்டான் விதர்ப்பநாட்டு அரசன் போஜன். எல்லா வகையிலும் பொருத்தமான வரன் இது என்பதை உணர்ந்தவன் தம்பதியரோடு நகர்வலம் செல்லத் தயாரானான், சுப்பிரமணிய சுவாமியும் தேவசேனாவுமாக நின்ற அந்த ஜோடி பொருத்தம் பற்றி விதர்ப்ப நாடே பெருமை அடைந்தது.
இந்துமதி தங்களுக்கு மாலையிடவில்லை என்பதை அறிந்த அரசர்கள் தங்கள் மேலும் தங்கள் பராக்கிரமம் மேலும் தங்கள் அணிகலன் உள்ளிட்ட தோற்றத்தின் மேலும் வெறுப்பைக் கொண்டு விரக்தியாயினர், அதிகாலையில் சந்திரன் உள்ளிட்ட கிரங்ககள் ஓளிமங்கி மெல்ல காணாமல் போவது போல் முகம் மங்கிய அவர்கள் தங்கள் கூடாரங்களுக்குத் திரும்பி பின்னர் காணாமலே போனார்கள்.
சுயம்வரம் நடக்குமிடத்தில் திருமணப் பந்தலில் இந்திராணி வாசம் செய்கின்றாள்; மணப்பெண்ணை வாழ்த்த அவள் அங்கே வருகின்றாள்; அந்த இடத்தில் குழப்பம் விளைவிப்போரை அவள் சபிக்கின்றாள்; அவள் சாபம் பொல்லாதது என்பதால் அஜன் மேல் பெரிய கோபம் இருந்தும் அந்தச் சுயம்வர மண்டபத்தில் கலகம் செய்ய எந்த மன்னரும் துணியவில்லை.
அந்த நகரின் ராஜவீதி முழுக்க புதிய அலங்காரங்களைப் பெற்றது, அலங்கார வளைவுகள் உருவத்திலும் அழகிலும் நிறத்திலும் வானவில்லை போன்றிருந்தன, வீதி எங்கும் பறந்த போஜனின் கொடிகளால் தரையில் வெயில் அதிகம் படாமல் குளிர்ச்சி நிலவிற்று, அப்படியான வீதியினை இந்துமதியுடன் அடைந்தான் அஜன்.
அரச தம்பதியரைக் காண அந்த நகரின் பெண்களெல்லாம் வீட்டின் வேலைகளை அப்படியே விட்டுவிட்டு பொன்மயமான சாரளரத்தின் ஓரமாகவும், அழகிய வேலைபாடுகளைக் கொண்டதும் லஷ்மியின் கை படுவதுமான கதவருகேயும் வந்தார்கள், அவர்களின் ஆர்வம் சுவாரஸ்யமாயிருந்தது.
அரச தம்பதியினைக் காணவேண்டும் என அவசரமாக சாளரம் நோக்கி வந்த பெண்களில் ஒருத்தியின் கூந்தல் அவிழ்ந்து மலர்கள் உதிர்ந்தன, அவளோ அவிழ்ந்த நீண்ட கூந்தலை கையால் தாங்கிக் கொண்டே சென்றாளே தவிர நின்று முடிக்க அவளுக்கு எண்ணமுமில்லை. நேரமுமில்லை.
இன்னொரு வீட்டில் வேலைக்கார பெண் தன் எஜமானியின் பாதத்துக்குச சிவந்த சாயத்தை பஞ்சை வைத்து பூசிக்கொண்டிருந்தாள், அஜன் இந்துமதியோடு வருகின்றான் என்றதும் அந்த எஜமானி அவசரமாக எழுந்து தன் இயல்புக்கு மாறாக வேகமாகச் சாளரம் நோக்கி நடந்தாள். இதனால் அவள் காலின் சிவப்பு சாயம் வீடெல்லாம் வண்ணமிட்டிருந்தது.
வலது கண்ணுக்கு மைதீட்டிக் கொண்டிருந்த பெண் ஒருத்தி இடது கண்ணை மறந்துவிட்டு மைதீட்டும் கோலை பிடித்தபடியே ஜன்னலுக்கு விரைந்தாள்.
வேகமாக சாளரத்துக்கு வந்த பெண் ஒருத்தியின் இடையில் இருந்த ஆடை நழுவிற்று, அவள் அதைக் கட்ட நேரமில்லாமல் கைகளால் பிடித்தபடி வந்தாள். இதனால் அவள் கைகளில் இருந்த மின்னும் ஆபரணங்களின் ஒளியால் அவளின் இடை பிரகாசித்தது.
கால் பெருவிரலில் நூலை கட்டி அதில் மணிகளைக் கோர்த்து மேகலை எனும் ஆபரணம் செய்து கொண்டிருந்த பெண் அஜனின் வரும் செய்திக் கேட்டு அப்படியே எழுந்து விரைந்தாள். இதனால் நூலின் மணிகளெல்லாம் வீடெங்கும் சிதறிக் கிடந்தன. அவள் காலில் கட்டப்பட்ட நூல் மட்டும் அப்படியே இருந்தது.
நகர்வலம் வரும் தம்பதியரைக் காண சாளரத்தின் ஓரம் நின்றனர் பெண்கள். தாமரை போன்ற முகமும் அதில் ஆடும் வண்டுகள் போல் கண்களும் கொண்ட அந்தப் பெண்களிடம் இருந்து அவர்கள் அருந்திய மதுவின் இனிய மணம் வெளிப்பட்டது, இதனால் அந்தச் சாளரங்கள் புதிய தேன் சிந்தும் தாமரைகலால் அலங்கரிக்கப்பட்டது போன்ற அழகைப் பெற்றன.
அப்படியான பெண்கள் தம்பதியரை ஆவலுடன் நோக்கியபோது தங்கள் செயல்கள் எல்லாம் மறந்தனர், அவர்கள் காதில் கூட எதுவுமே விழாத அக்காட்சி அவர்கள் காதுகள் உள்பட எல்லா உறுப்பும் கண்ணுக்குள் ஒடுங்கி வந்துவிட்டனவோ எனுமளவு பார்வையினை அழுத்தமாக வீதியில் பதித்து மெய்மறந்திருந்தார்கள்.
இந்துமதியினை மணம் செய்ய மன்னர் பலர் விரும்பினர், ஆனால் நேரில் எல்லோரையும் கண்டு அவர்களில் ஒருவர்க்கு மாலையிட அவள் விரும்பி சுயவரத்தை நடத்தினாள், அதனால் லஷ்மி தேவி தேவர் பலர் இருக்க நாராயணனுக்கு மாலையிட்டு அடைந்ததுபோல் அஜனை அடைந்தாள்.
அஜனைக் கண்ட பென்களும் , இந்துமதியினைக் கண்ட ஆண்களும் யாராக இருந்தாலும் அவர்களை அடைய விரும்புவார்கள். ஆனால், பிரம்மன் இவனுக்கு இவள் எனப் பொருத்தமான அழகுடன் படைத்த காரணம் இந்தச் சுயம்வரத்தால் நிறைவுற்றது என்பதால் அவனின் அழகான படைப்பும் அதன் நோக்கமும் வீணாகவில்லை.
இருவரும் மானிட பிறப்பெடுத்த ரதியும் மன்மதன் போலவே தோன்றினார்கள், காதலும் மனப்பொருத்தமும் முன் ஜென்ம தொடர்ச்சியினால் வரும் என்பதால் அந்தச் சம்பந்தபடி இருவரும் ஒன்றானார்கள்.
விதர்ப்ப தேச மக்களின் வியப்பும் பெருமையும் கொண்ட மொழிகளைக் கேட்டபடியே, கடலில் கப்பல் காற்றால் செலுத்தப்படுவது போல் அம்மக்களின் பார்வையால் செலுத்தப்பட்ட அஜன் போஜனின் மங்கலப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனையினை அடைந்தான்.
யானையில் இருந்து இறங்கிய அவனுக்குக் காமரூப தேசத்தின் மன்னன் கைகொடுத்து உதவி இறங்க செய்து அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான், அங்கே அவனைக் கண்ட எல்லாப் பெண்களின் கண்கள் வழியாக அவன் அரண்மனைக்குள் மட்டுமன்றி அவர்கள் இதயத்திலும் நுழைந்தான்.
அவனைச் சிறந்த அலங்கரிக்கப்பட்ட பொன் சிம்மாசனத்தில் அமர்ந்த அஜனுக்கு, இரத்தினம் பதித்த கோப்பையில் தேனும் பாலும் நெய்யும் கற்கண்டும் கலந்த பானமும் இன்னும் அழகிய பட்டாடைகளும் பெண்களின் கரங்களால் வழங்கப்பட்டன, அவற்றை அப்பெண்களின் கடைக்கண் பார்வையால் பெற்றுக்கொண்டான் அஜன்.
சந்திர கிரகண காலங்களில் வெண்ணிற நுரைபொங்கும் அலைகளோடு கரைக்கு மிக நெருக்கமாய் வரும் கடல் அலைபோல, வெண்ணிற ஆடை அணிந்த அஜன் அந்தப் பணியார்களால் இந்துமதியின் அருகில் சேர்ப்பிக்கப்பட்டான்.
அங்கே தயாராக இருந்த புரோகிதர் அக்னி பகவான் மனதை குளிவிக்க செய்தபின் தேவர்கள் மனதை குளிவிக்க செய்தபின் அங்கிருக்கும் எல்லோர் மனமும் குளிரும்படி அக்னி சாட்சியாக அவர்கள் இருவரையும் கணவன் மனைவியாக்கினார்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 28
(காளிதாசன் அஜன் இந்துமதி திருமணத்தை கொஞ்சம் ஆழமாக நீட்டிச் சொல்கின்றார் அதற்கு காரணமும் உண்டு. பொதுவாக தாத்தாவின் குணமும் வாழ்வும் அம்சமும் பேரனுக்கு வரும் என்பது மரபு.
இந்த அஜனின் பேரனே பகவான் ராமபிரான், அவர் வாழ்வில் அஜனின் அனைத்து சம்பவங்களும் ஏறக்குறைய உண்டு, இந்துமதியின் சுயம்வரம் முதல் அவளின் கடைசிக் காலம் வரை சீதையோடும், அஜனின் வெற்றிகளெல்லாம் வலிகளெல்லாம் ராமனின் வாழ்வோடு அப்படியே ஒப்புமை கொண்டிருக்கும்.
அதனைச் சூசகமாக அஜன் வாழ்விலே சொல்கின்றார் காளிதாசன், அவனின் கவித்துவத்தின் உச்சம் இது.)
அஜன் இந்துமதி திருமணத்தை புரோஹிதர் போஜனின் மண்டபத்தில் நடத்தினார். அப்போது அஜன் இந்துமதியின் கரத்தினைப் பற்றிக்கொண்டான், மாந்தளிர் ஒன்று அசோக மரத்தின் இளம்தளிரினைப் பற்றியது போல இணைந்த அக்கரங்கள் இருந்தன.
அவள் கரம் தொட்டதும் அஜனுக்குச் சிலிர்ப்பினால் மயிர்க்கூச்சம் வந்தது. இந்துமதிக்கோ வியர்வை அரும்பிற்று. மனதில் இருந்த அன்பானது கரங்கள் தொட்டபோது இருவருக்குள் இடம்மாறி இப்படி மன்மதனின் சாட்சியாய் காதலில் சிலிர்த்தெழுந்தது.
அஜனும் இந்துமதியும் மனதில் உள்ள காதலைக் கண்களில் சொல்லும்படி நோக்கினார்கள், கங்கை நதி பிரவாகிக்கும் போது பல கிளைகளாய் விரிதல் போல் கரம் தொட்ட வேகத்தில் பெருகிய காதல் அந்த நான்கு கண்களிலும் அன்பினால் மடை திறந்த வெள்ளமென பாய்ந்தது.
இருவரும் நேருக்கு நேர் பார்க்கும் போது வெட்கத்தால் சட்டென முகம் திருப்பிக் கொண்டாலும் அந்தப் பார்வையும் நாணமும் இருவருக்குமே பிடித்திருந்தது.
அக்னிச் சுவாலைகள் எழுகின்ற அந்த யோக குண்டத்தை அவர்கள் சுற்றிவந்தனர், அப்போது அவர்கள் மேருமலையினைச் சுற்றிவரும் சூரியனும் சந்திரனும் போல் காணப்பட்டார்கள், அஜன் கரம் பிடித்தபடி இந்துமதி சுற்றிவரும் அழகு அப்படி இருந்தது.
பெரிய மேட்டினை அடுத்தப் பள்ளம் போல் அழகான இடையினைக் கொண்டவளான இந்துமதி, மதம் கொண்ட சாகரபறவை போல் கண்கள் சிவந்திருந்தாள். (யாகப் புகையால் அவள் கண்கள் அப்படிச் சிவந்திருந்தன) பிரம்மதேவனைப் போல் அமர்ந்திருந்த புரோகிதர் கட்டளை இட அவள் பொரியினை யாகத்தில் தன் கையால் இட்டாள்.
நெய், வன்னிமரக்குச்சி, பொரி எனக் கலந்து எழுந்த யாகப்புகையானது அவளின் கன்னத்தைத் தொட்டு மேல் எழும்போது காதோரம் வைக்கப்படும் நீலோத்பலம் மலர் போல் காணப்பட்டது.
அந்தப் பரிசுத்தமான புகையினை அவள் முகம் ஏற்றபோது அவள் கண்களின் நீரால் கண்ணின் மை சிறிது கரைந்தது, கன்னம் சிவந்துபோனது, காதோரம் வைத்திருந்த தானியத்தின் முளை மெல்ல வாடிற்று.
பொன்மயமான இருக்கையில் இருந்த அந்த ஜோடி மேல் அரசனோடு கூடி சொந்த பந்தமும் சுமங்கலி கூட்டமும் அட்சதையினைப் பொழிந்ன, சுற்றமும் பந்தமும் அவர்களை வாழ்த்தியது, மணமக்கள் அந்த இனிய அன்பின் ஆசியினை மனமுவந்து ஏற்றுக் கொண்டனர்.
பெரும் செல்வமுடையவனும் போஜ குலத்தின் தீபம் போன்றவனுமான அந்தப் போஜமன்னன் சுயம்வரத்துக்கு வந்த மன்னர்களுக்குப் பெரும் பரிசும் இன்னும் பலவும் கொடுக்கும்படி தன் அதிகாரிகளுக்குக் கண்களால் உத்தரவிட்டான்.
தெளிந்த நீரில் அடியில் பதுங்கும் முதலைகள் கொண்ட குளம்போன்ற அம் மன்னர்கள், சிரிப்பு மகிழ்ச்சி எனும் வெளி அடையாளங்களால் மனதின் கோபத்தை மறைத்தபடி போஜனிடம் பரிசைப் பெற்ற மன்னர்கள் செல்லும்போது அன்பளிப்பாய் அதை அவனிடமே கொடுத்துவிட்டு திரும்பினார்கள்.
அப்படித் திரும்பும்போது மனதில் தீரா வன்மம் கொண்ட அவர்கள் அஜனிடம் இருந்து இந்துமதியினைக் களவாடும் எண்ணத்துடன் அஜன் செல்லும் வழியில் பதுங்கியிருக்க முடிவு செய்தார்கள்.
விதர்ப்பநாட்டின் மன்னனான போஜன் பெரும் செல்வத்தை தங்கைக்கு சீதனமாக கொடுத்து அவர்களை வழியனுப்பும்படி அவர்களோடு கிளம்பிச் சென்றான்.
குண்டன நகரில் இருந்து நீங்கிய அவர்களுடன் போஜனும் மூன்று நாட்கள் அவர்களோடு பயணித்தான். பின், அமாவாசை முடிவில் சூரியனிடம் இருந்து விலகும் சந்திரன் போல் அஜனிடம் இருந்து திரும்பித் தன் அரண்மனைக்கு வந்தான்.
ஏற்கனவே ரகுவின் திக்வியஜயத்தால் தங்கள் செல்வத்தை எல்லாம் இழந்திருந்த மன்னர்கள் இப்போது அழகில் சிறந்த இந்துமதியினையும் அவன் மகன் அஜன் பெற்றுச் செல்லும்போது பெரும் பொறாமை கொண்டனர், அந்தப் பொறாமை கோபமாயிற்று, கோபம் போராக மாற இருந்தது.
மகாபலியின் செல்வத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு அவன் தலையில் வாமனன் கால் வைக்கும்போது மஹாபலியின் தாத்தாவான பிரஹலாதன் ஓடிவந்து, மஹாபலியின் தலையினை மறைத்தபடி நின்று பகவான் பாதத்தைத் தடுத்தான், அப்படி அஜனை இந்த அரசர்கள் வழியில் மறைத்துக் கொண்டார்கள்.
அவர்கள் பெரிய அளவில் கங்கை போல் நின்றார்கள், அஜனோ தன் காவலுக்காக ரகு அனுப்பிய சிறிய சேனையுடன் நின்றான். இருவரும் மோதிய காட்சி கங்காநதியுடன் சோனா நதி பொருந்துவது போலிருந்தது.
அந்த மோதல் யுத்த விதிப்படி யானை யானையுடனும், குதிரைப்படை குதிரைப்படையுடனும் வீரர்கள் வீரர்களுடனும் மோதுவதாக இருந்தது.
பொதுவாக யுத்தத்தில் ஒவ்வொரு அரசனும் தன் குலப்பெருமை, தன் வம்ச பெயர் சொல்லிச் சண்டையிடுவார்கள். இங்கோ பல மன்னர்கள் கூடியதாலும் முரசும் பேரிகைகளும் பெரும் ஒலி எழுப்புவதாலும் அம்புகளில் தங்கள் பெயர்களைப் பொறித்து ஏவினார்கள், மன்னர்கள் கூடிச் சண்டையிட்டாலும் அஜனை வீழ்த்தியது நானே எனும் பெயரைப் பெறவிரும்பி அப்படிச் செய்தார்கள்.
அந்த யுத்தக் களத்தில் குதிரையின் காலடியால் எழுந்த தூசுக்கள் ரத சக்கரங்களால் அதிகமாகி யானையின் காதுகளால் விசிறப்பட்டு இன்னும் வேகமாகப் படர்ந்து எழுந்து சூரியனை மறைத்தன.
அங்கே உயரப் பறந்த மன்னர்களின் கொடிகள் மீன் வடிவத்தில் இருந்தன, அவை இந்தப் புழுதிக் கூட்டம் நடுவே அங்குமிங்குமாக அசைந்தபோது கலங்கிய மழைவெள்ளம் நிறைந்த குளங்களில் நீந்தும் மீன்களைப் போலவே இருந்தன.
எங்கும் பெரிய புகை பரவியிருப்பதால் எதிரில் நிற்பவரை அடையாளம் காணமுடியா நிலை இருந்தது. இதனால் தேரினை அதன் சக்கர ஓசையாலும், யானையினை அதன் மணி ஓசையாலும், வீரர்களை அவர்கள் தலைவர் பெயராலுமே அறிந்துகொள்ளும்படி போர் நடந்தது.
அந்தப் பெரிய புழுதி கூட்டத்தை யானை குதிரையில் இருந்து மட்டுமல்ல வீரர்களிடம் இருந்து வழிந்து பொங்கிய உதிரமே நனைத்துக் கட்டுப்படுத்தியது, அதனால் தரையில் புழுதி மறைந்தே போனது. இதனால் வானில் உள்ள புழுதி தனித்து விடப்பட்டு அந்தரத்தில் மேகம் போல் நின்றது.
தேரில் நின்று சண்டையிட்ட வீரர்கள் அடிபட்டு மயங்கி வீழ்ந்ததும், தேர்பாகன்கள் தேரைக் களத்துக்கு அப்புறமாக கொண்டு அவர்களைக் காத்து மீட்டனர், நினைவு திரும்பிய வீரர்கள் தேர்பாகனைக் கடிந்து கொண்டு எங்கே சண்டையினை நிறுத்தினார்களோ அங்கே எதிரியின் கொடியினை அடையாளமாக கொண்டு மீளப் போரைத் தொடங்கினார்கள்.
தேர்ந்த வித்தை உடைய வில்லாளிகளின் கூரான அம்புகள் எதிரியின் அம்புகளால் இடைமறித்து ஒடிக்கப்பட்டாலும் அவற்றின் வேகம் காரணமாக உடைந்த முன் முனை பாய்ந்து சென்று இலக்கை அடித்தது. துண்டிக்கப்பட்டாலும் வேகம் குறையா அம்புகளாய் அவை இருந்தன.
யானைகள் மேல் இருந்து யுத்தம் செய்த வீரர்களின் தலைகளை சக்கர ஆயுதங்களால் எதிரிகள் வெட்டியபோது உடல் உடனே தரையில் வீழ்ந்தது. ஆனால், அவர்கள் தலைகள் வானில் வீசப்பட்டதால் கழுகுகளின் கால்களில் மோதி கீழே விழ நேரம் எடுத்தது.
அடிபட்ட குதிரை வீரன் மயங்கி குதிரையிலே சரிந்து கிடந்தான், அவன் மீள நினைவடைந்து வரும்வரை எதிரில் நின்றவன் தாக்காமல் அமைதி காத்தான். யுத்தத்தில் நினைவற்றவனைத் தாக்கக் கூடாது எனும் விதி அங்கே பின்பற்றப்பட்டது.
உயிருக்குத் துணிந்த வீரர்கள் யானையினைத் தங்கள் உருவிய வாளால் வெட்ட முயன்றனர். அப்போது யானையின் தந்தத்தில் அந்த வாள்கள் உரசி நெருப்பு உண்டானது, யானைகள் தங்கள் துதிக்கை நீரினால் அந்த நெருப்பை அணைத்தன.
தலைகள் பழம்போலவும், அவர்களின் இரும்பு கிரீடங்கள் பாத்திரம் போலவும், இரத்தம் செந்நிற மதுபோலவும் கிடந்த அந்தப் பூமி மிருத்யு தேவதை மது அருந்தும் அரங்கம் போல் காட்சியளித்தது.
அங்கு வீழ்ந்த மானிட அங்கங்களைப் பறவைகள் கொத்தி தின்ன முயன்றபோது அங்கு வந்த நரி அவைகளை விரட்டிவிட்டு உண்ணத் தொடங்கிற்று. ஆனாலும் எலும்புகள் அதன் தாடையில் குத்தியதால் தோற்று ஓடிற்று.
அந்த யுத்த களத்தில் தலைவெட்டப்பட்ட வீரர்கள் வீரசுவர்க்கம் அடைந்தார்கள், இதனால் அவர்கள் தலைவெட்டப்பட்டு உயிர் பிரியும்போது தாங்கள் அப்ரஸின் அரவணைப்பில் அவளின் இடதுபுறம் இருந்தபடி தங்கள் உடல் வீழ்வதைக கண்டபடியே சொர்க்கம் நோக்கிச் சென்றார்கள்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 29
அந்தப் போர் தீவிரமடைந்தது. தேரில் நின்று விற்போர் செய்த வீரர்கள் எதிராளிகள் தேரோட்டியினைக் கொன்றுபோட்டதால் அவர்களே தேரோட்டிகளாக ஆனார்கள். தேர் முறிந்துபோனபோது கதாயுதம் ஏந்திப் போர் செய்தார்கள். நீண்ட யுத்தத்தால் கதாயுதம் உடைந்தபோது கைகளால் போர்செய்தார்கள், இப்படி எல்லா வகை போர்களையும் வீரர்கள் செய்தார்கள்.
இரு வீரர்கள் சண்டையிட்டு ஒரு சேர உயிர்நீத்து வீரசொர்க்கம் அடைந்த பின் அங்கும் போரினைத் தொடர்ந்தார்கள், அந்த வீரர்களால் சொர்க்கத்துக்கும் சண்டை பரவிற்று.
காற்றினால் சமுத்திரத்தின் அலைகள் மாறி மாறி எழுவதைப் போல அந்தப் போரில் சேனைகளுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன.
எதிரிகள் அஜனின் சேனையினைக் காற்றுபோல் தாக்கினார்கள். இதனால் புகை காற்றினால் அடித்துச் செல்லப்படுவதைப் போல அவன் சேனை விரட்ட பட்டது. ஆனால், அஜன் நெருப்பு காட்டில் காய்ந்த புற்களை எரிப்பது போல் எதிரிகள் சேனையினை நின்று அழித்து முன்னேறிக் கொண்டிருந்தான். காற்றில் புகை செல்வது போல் அவன் சேனை கலைந்தாலும் காற்றால் நெருப்பை எடுத்துச் செல்லமுடியாது. மாறாக, காற்றினால் நெருப்பு தொடர்ந்து பலத்தோடு எரியும் என்பதுபோல் அவன் தனித்து நின்று எதிரிகளை அழித்துக் கொண்டே முன்னேறினான்.
வலிமையான தேரையும், பெரிய அம்பாறத்துணியில் அம்புகள் கொண்டிருப்பவனும், பலமான வில்லை உடையவனும், கவசம் அணிந்தபடி தன் வீரத்தில் பெரும் திறமை கொண்ட அந்த அசஹசாய சூரனான ரகு அக்காலத்தில் வராக அவதாரம் எடுத்த பகவான் கடலை தடுத்து நின்றது போல் எதிரிகளைக் கலங்கவைத்து தடுத்து நிறுத்தி அடித்துக் கொண்டிருந்தான்.
அவன் பாணங்களைச் செலுத்திய காட்சி யாருக்கும் தெரியவில்லை, அவன் அம்புகளை எடுப்பதும் வில்லில் வைப்பதும் மின்னலுக்கும் அப்பாற்பட்ட வேகத்தில் நடந்ததால் காணும் கண்களுக்கு அவன் அம்பினை வில்லில் சொருகி நாணை காதுவரை இழுத்து நிற்கும் நிலையான கோலம் ஒன்றை மட்டும் கொண்டவன் போல் நின்றிருந்தான்.
அவனின் பிறை சந்திர முனை கொண்ட அம்புகள் எதிரிகளின் தலைகளை அறுத்துப் போட்டன, அத்தலைகளின் முகங்கள் ஆத்திரத்தைக் கொண்டபடி சிவந்த விழிகளுடன் கடித்த உதடுகளுடன் ‘ஹம்’ எனும் ஓசையுடன் புருவத்தை நெரித்தபடி நெற்றியில் வரிகள் தென்பட தரையில் கிடந்து உறுமிக்கொண்டு அடங்கின, அந்தத் தலைகளால் பூமியின் பள்ளங்களெல்லாம் நிரம்பின.
அஜனை எப்படியேனும் வெல்வது அல்லது கொல்வது என முடிவு செய்த எதிரிகள் வலிமையான யானைகள் கொண்ட படையினையும், கவசத்தை பிளக்கும் ஆயுதங்களையும் அவன் மேல் ஏவினார்கள், யுத்த தர்மத்தை மீறித் தனியாக நின்ற அவனை ஒன்று சேர்த்துத் தாக்கினார்கள்.
எதிரிகள் அவன் தேரை சூழ்ந்து நின்றதால் அஜன் வீரர்களுக்கு அவன் தென்படவில்லை. ஆனாலும், பனிமூடிய காலைபொழுதில் சிறிய பிரகாசத்துடன் தெரியும் சூரியனைப் போல் மின்னிய அவன் தேரின் கொடி கம்பத்தின் நுனியினைக் கொண்டு அவன் இருக்குமிடத்தை வீரர்கள் அடையாளம் கண்டார்கள்.
தர்ம சக்கரத்தைக் காக்கும் சக்ரவர்த்தியின் திருமகனும், மலர் அம்புகளை ஏந்தி நிற்கும் மன்மதன் போல் அழகானவனும் , சோர்ந்து போவதில் கொஞ்சமும் ஆசையற்றவனான அஜன் பிரியம்தன் எனும் அந்தக் கந்தர்வன் கொடுத்த சக்தி மிக்க ஆயுதமான சம்ஹோகத்தை எடுத்தான், எதிரிகளுக்குப் பெரும் தூக்கம் வரவைப்பதும் கந்தர்வனைத் தேவதையாக கொண்டதுமான அந்த அஸ்திரத்தை எதிரிகள் மேல் பிரயோஹித்தான்.
மன்மதன் உயிர்களை மயக்க மலர்க்கணைகள் வீசுவதைப் போல அவன் அந்த அஸ்திரத்தை ஏவிய காட்சி இருந்தது.
அந்த அஸ்திரத்தின் பலனாய் ஆழ்ந்த தூக்கம் அவர்களுக்கு வர அவர்களின் கைகள் வில்லில் இருந்து விடுபட்டு சோர்ந்து வீழ்ந்தன, தலை இடப்பக்கம் சரிந்து தலைப்பாகை அவிழ்ந்து கூந்தலும் இடப்பக்கம் சரிய அவர்கள் தேரின் கொடிகம்பத்தில் சாய்ந்தபடி தூங்கத் துவங்கினார்கள்.
எதிரிகளின் தலை இப்படி தொங்கிப் போனதால் போரில் தான் வெற்றிப்பெற்றதை அறிவிக்கும் படி வெண்மையான பெரிய சங்கினை எடுத்து தன் சிவந்த வாயில் வைத்து உயர்த்தி ஊதினான், அது இந்தப் பிரபஞ்சத்தின் குழந்தை புகழ் எனும் பாலை அருந்துவது போல் இருந்தது.
அஜனின் வெற்றி சங்க நாதம் கேட்டு அவன் வீரர்கள் அவன் பக்கம் திரும்பினார்கள், அவன் தூங்கும் எதிரிகள் நடுவில் நின்று கொண்டிருந்தான், தடாகத்தில் கூம்பிய தாமரைகள் நடுவில் வெண்ணிலாவின் பிம்பம் ஒளியுடன் காணப்படுவது போல் எதிர்கள் நடுவில் நின்று கொண்டிருந்த அவனைக் கண்ட வீரர்கள் மகிழ்ந்தார்கள்.
அந்த வீரர்கள் அம்பினால் எதிரிகளின் இரத்தத்தினைந் தொட்டு தங்கள் கொடிகளில் ரகு மன்னரும் அவரைத் தொடர்ந்து அஜனும் உங்கள் பெருமையினைக் காத்தார்கள் என எழுதிக் கொண்டிருந்தார்கள்.
வில்லின் முனையினைப் பற்றியவனும், அவிழ்ந்த கேசம் கொண்டவனும் நெற்றியில் துளிர்த்த வியர்வினையும் கொண்ட அஜன் அச்சம் நிறைந்து நின்ற இந்துமதியினை அணுகிச் சொன்னான்.
“இந்துமதி, ஆயுதங்களுடன் தூங்கும் இந்த எதிரிகளைப் பார், இப்போது ஒரு குழந்தை கூட இவர்கள் ஆயுதங்களைப் பறித்துக்கொள்ள முடியும், இவர்கள்தான் என்னை வென்று உன்னை அபகரிக்க போரைத் துவக்கியவர்கள், தூக்கத்திலே எதிரிகளை வெல்லலாம் என இவர்களுக்குச் சொன்னவன் யார்?” என்றான்.
எதிரிகளின் தூக்கத்தால் நிம்மதி கொண்டாள் இந்துமதி, மூச்சின் வெப்பத்தால் நீராவி படியும் கண்ணாடி பின் மெல்ல துலங்குவது போல் அவளின் முகம் இடர் நீங்கி பிரகாசமானது.
அவள் அவனின் பெரிய பராக்கிரமத்தில் சிலிர்த்து அவனை நேரடியாக புகழ நாணம் கொண்டு தோழியர் மூலம் அவன் புகழை சொல்லவைத்தாள், மழையால் குளிரிந்து மகிழும் பூமி தன் மகிழ்ச்சியினை நேரடியாக சொல்லாமல் மயில்கள் மூலம் குயில்கள் மூலமும் மேகத்துக்கு நன்றி தெரிவிப்பது போல் தன் தோழியர் மூலம் அவனுக்குரிய புகழைப் பாடினாள்.
எதிர்கள் தூங்கிய நிலையில் அவர்களின் தலைமேல் தன் இடதுகாலை வைத்து சோதித்த அஜன் இனி அவர்கள் எழமாட்டார்கள் என்பதை உறுதி செய்ய பின் யுத்த புழுதிபடிந்த கூந்தலையுடைய இந்துமதியுடன் தேர் எறி தன் நாட்டை நோக்கிச் சென்றான் அஜன், அது போரில் வென்றவனுடன் விஜயலட்சுமி வரும் தோற்றமாக இருந்தது.
தன் மகன் அழகிலும் அறிவிலும் சிறந்த பெண்ணை மனைவியாக கொண்டான், பெரும் எதிரிகள் கூட்டமாக எதிர்த்தபோதும் அவர்களை வென்று அவளோடு மீண்டு வருகின்றான் என்பதைக் கேள்விபட்ட ரகு இனி தன் நாட்டையும் குடிகளையும் காக்க அவன் தகுதியுடையவனாகிவிட்டான் என்பதை உணர்ந்து நாட்டையும் அரசையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டு வனபிரஸ்தம் செல்ல முடிவெடுத்தான்.
(தொடரும்)
காளிதாசனின் ரகுவம்சம் : 30
தன் மகன் அஜன் மணம் புரிந்த அடையாளமாக வலது கையில் மங்கள நூலை அணிந்திருந்ததை கண்டபடி ரகு அவனுக்கு முடிசூட்டினான், அஜனைத் தேடி அடைந்த இந்துமதி போல் அந்த ராஜ்ஜியமும் அவனைத் தேடி வந்து சேர்ந்ததால் இன்னொரு இந்துமதி போலிருந்தது.
இந்த உலகில் எல்லோரும் விரும்பும் பதவி அரசபதவி, அதற்காக பெற்ற மகன்களே தந்தைக்கு விஷம் வைப்பதும் உண்டு, அப்படியான உலகில் தகப்பன் தனக்குக் கடமையாக தந்தான் என்பதால் அரசபதவியினை அஜன் ஏற்றுக்கொண்டானேயன்றி அதன் மேல் உள்ள ஆசையாலோ அது தரும் இன்பங்களுக்கோ அல்ல.
அவனுக்கு வசிஷ்டரே பட்டாபிஷேகம் செய்து வைத்தார், பல புண்ணிய தீர்த்தங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை அவர் அவன் மேல் ஊற்றி அபிஷேகம் செய்தபோது அந்த நீர் பட்டதால் தரையில் இருந்து ஆவி எழுந்தது, அது தனக்கு நல்ல அரசன் கிடைத்தான் எனப் பூமி இடும் நிம்மதி பெருமூச்சாக இருந்தது .
வேதங்களில் சிறந்தவரான வசிஷ்டர் அவனுக்கு அதர்வண வேதத்தால் மந்திரங்களை ஓதி அபிஷேகம் செய்தார், அந்த வேதம் அவரால் இன்னும் சக்திபெற்று அஜனை வலுப்படுத்தியது, அவன் மிகுந்த வலுப்பெற்று பிரம்மபலம் கொண்டிருந்தான், அஸ்திர வித்தை உள்பட எல்லா வித்தையும் கற்ற அவனிடம் இப்போது தேஜஸ் கூடியிருந்தது.
காற்றுடன் கூடிய நெருப்பு பலம்பெற்று எழுவதுபோல் அதர்வண மந்திரத்துடன் கூடிய அஜன் பிரகாசமாய் நின்றான், எந்தப் பகைவரும் நெருங்கமுடியாதபடி வலிமைபெற்றிருந்தான்.
அந்தக் கோசலை நாட்டு மக்கள் அஜனை இளமை காலத்துக்குத் திரும்பிய ரகுவாகவே கண்டார்கள், உருவம் மட்டுமன்றி குணத்திலும் ஆட்சியிலும் அவன் தகப்பன் போலவே இருந்ததால் அயோத்தி மக்களுக்கு ரகுவே ஆட்சி செய்வது போலிருந்தது, இதனால் ரகுமேல் கொண்ட அதே அன்பினை மக்கள் அஜன் மேலும் குறையாமல் கொண்டிருந்தனர்.
உலகில் சில விஷயங்களோ பொருட்களோ தனித்து இருக்கும் போது சரியானதாக அழகுடையதாக இருக்கும். ஆனால் அவற்றைச் சேர்த்து வைத்தால் அழகும் உருவும் கெட்டுப்போகும், இளமை கோலமும் பொறுப்பு மிக்க அரச பதவியும் சேர்வது அப்படியானது, இளமையின் வேகமும் துள்ளலும் சக்திமிக்க அரசப்பதவியோடு சேரும் போது கர்வத்தாலும் அனுபவமின்மையாலும் பெரிய குழப்பம் வரும்.
ஆனால் அஜனின் இளம்பிராயத்தோடு சேர்ந்த கோசல ராஜ்ஜியம் அவனின் நிதானமான அமைதியான குணத்தால் அழகும் பெருமையும் பெற்றது.
புது மனைவியான இந்துமதியினை எப்படி அன்புடனும் நிதானத்துடனும் கவனமாக அணுகினானோ அப்படியே புதிதாக தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ராஜ்ஜியத்தையும் மக்களையும் அவன் அன்போடு அணுகினான்.
கடலில் பெரிய நதிகளும் சங்கமிக்கும் சிறிய ஓடைகளும் சங்கமிக்கும். ஆனால், கடல் எல்லாவற்றையும் ஒரேமாதிரியாகவே கருதும். பாகுபாடு காட்டுவதில்லை. அஜனும் அப்படியே பெரியவர் சிறியவர் எனும் பாகுபாடு இல்லாமல் எல்லா மக்களையும் ஒரே போல் நடத்தினான். இதனால் ஒவ்வொரு குடியும் தானே அரசனுக்கு நெருக்கமானவன் என மகிழ்ந்து கொண்டிருந்தான்.
காற்று மிகுந்து வீசி மரத்தை சாய்க்காமல் அல்லது அதனை விட்டு விலகிச் செல்லாமலும் மிதமாக வீசி மரத்தை வளைத்து மலர்களை கொட்டவைக்கும், அப்படி அஜன் தனக்குக் கட்டுப்பட்டவர்கள் மேல் மிகுந்த அதிகாரம் செலுத்தாமல் அதே நேரம் மிக மிக மென்மையாகவும் நடந்துகொள்ளாமல் இரண்டுக்கும் இடையில் நின்றபடி பக்குவமாய் ஆட்சி செலுத்தி வந்தான் .
ஒரு அரசன் சொர்க்கத்தை காட்டிலும் தன் குடிகள் நலமுடன் வாழ்வதையே விரும்ப வேண்டும், அதற்காகவே ஆட்சி செய்ய வேண்டும். இபபடியான ஆட்சியினை அஜன் செய்து மக்கள் மனதில் அன்பினால் இடம்பிடித்துவிட்டான் என்பதை அறிந்த ரகு நிம்மதி அடைந்தான்.
திலீபன் வந்த வம்சத்தில் உள்ள முன்னோரெல்லாம் மகன்களிடம் ஆட்சியினை ஒப்படைத்தபின் மரவுரி தரித்து தவகோலம் கொண்டு கானகம் செல்வர், அந்த மரபில் ரகுவும் மரவுரி அணிந்து கானகம் ஏக முடிவெடுத்தான்.
ரகு தன்னைவிட்டு கானகம் செல்கின்றான் எனக் கேள்விபட்ட அஜன் மிகப்பெரும் கலக்கம் கொண்டான், தன் தலைமுடி தகப்பன் காலில்பட்டால் அவனுக்கு அவமரியாதை என்பதால் தலையினை துணியால் கட்டியபடி ரகுவின் காலில் விழுந்து தலையால் காலை தொட்டு செல்ல வேண்டாம் எனத் தடுத்தான்.
அஜன் தன்மேல் கொண்டிருக்கும் அன்பினை எண்ணி உருகிய ரகு மகனின் வேண்டுதலினால் கானகம் செல்லும் முடிவினைத் தள்ளிவைத்தான். ஆனால், பாம்பு ஒருமுறை உரித்த சட்டையினை மறுமுறை அணியாது என்பதுபோல் அஜனிடம் விட்டுவிட்ட ஆட்சியினை அவன் மீளப் பெறவில்லை, அதற்குச் சம்மதிக்கவுமில்லை.
சட்டையினை உரித்துப்போட்ட பாம்பு புதிய பளபளப்பும் அமைதியும் பெறுவதுபோல் அரசு பாரத்தை இறக்கிய ரகு மிக உற்சாகமானவனாக மகிழ்ச்சியாக இருந்தான்.
எனினும், மெல்ல மெல்ல மகனை சம்மதிக்க வைத்து ராஜ்ஜியத்தின் எல்லையில் இருந்த வனத்தின் ஆசிரமத்தில் குடியேறினான் ரகு. ஒருவன் தன் மனைவியோடு அதிகாரம் செலுத்தும்வரை நல்ல முறையில் அவன் வீட்டில் கொண்டாடப்படுவான். மருமகள் காலம் வந்தால் அவனுக்கான இடம் மூலைக்குச் செல்லும், அவன் மரியாதை உணவில் கூட குறையும் என்பது உலக இயல்பு, அப்படித் தன் ராஜ்ஜியத்தில் மருமகள் காலம் தொடங்கியபோது ரகு நாட்டின் ஓரமான ஆசிரமத்தில் காய், கனி, கிழங்குகளுடன் எளிய வாழ்க்கைக்கு மாறியிருந்தான்.
அவன் தன் காரியங்களை எல்லாம் விரைந்து செய்துவிட்டு மோட்சம் செல்வதில் விருப்பம் கொண்டு அதை நோக்கியே செயல்பட்டான். நிலவு மேற்கே அஸ்தமித்து கிழக்கே சூரியன் ஒரே நேரத்தில் எழுவது போல் ரகு உலகை விட்டு செல்ல ஆயத்தமானபொது அஜன் பெரும் அரசனாக ஆளத் தொடங்கினான்.
நிவிருதி எனும் சந்நியாச தர்மம் கொண்ட ரகு காஷாயம் தண்டம் முதலியன கொண்டவனாய் இருந்தான், பிரவ்ருதி எனும் லௌகீக வாழ்வின் உச்சத்தில் இருந்த அஜன் செங்கோலும் மணிமுடியும் கொண்டவனாக இருந்தான், இது தர்மம் சந்நியாச வடிவிலும் அரசவடிவிலும் இரு உரு கொண்டது போலிருந்தது.
அஜன் வலிமைமிக்க நல்லாட்சியினை வழங்கும்படி மந்திரிகளையும் அறிவில் சிறந்தோரையும் தேடிச் சேர்த்துக் கொண்டான், ரகுவோ மோட்சம் அடையும்படி யோகியரையும் தவசீலர்களையும் தன் அருகே அமரும்படி வைத்துக் கொண்டான்.
அஜன் ராஜபரிபாலனம் செய்யும் பொருட்டு சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான், ரகுவோ மனதை ஒருமைப்படுத்தி இறைவனை அடையும் பொருட்டு தர்ப்பையால் செய்யப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.
அஜன் ராஜபரிபாலனமாக அக்கம் பக்கம் இருந்த அரசுகளை எல்லாம் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான், ரகுவோ ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி ஐந்துவகை மூச்சுகாற்றுகளையும் தன் விருப்பத்துக்குள் யோகத்தால் கொண்டுவந்தான்.
அஜன் எதிரிகளின் பலமான இடங்களை எல்லாம் எரித்துப் போட்டு அவர்களை அடக்கினான், ரகுவோ பிறப்புக்குக் காரணமான தன் வினைகளை ஆத்ம ஞானத்தால் எரித்துப்போட்டு யோகசித்தியினைப் பெற்றுக் கொண்டிருந்தான்.
அஜன் ஆறுவகை உபாயங்களை (பலமுள்ள அரசனிடம் சரியான பலம் இல்லாமல் மோத கூடாது, காலம் தாழ்த்த வேண்டும், உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது, படையெடுக்க வேண்டிய காலத்தில் நிச்சயம் படை நடத்தவேண்டுன், பகைவன் தனக்குச் சரியான பலம் கொண்டவனாய் இருந்தால் போருக்குப் பின்னும் முன்னும் அமைதியாக இருத்தல் வேண்டும்.
இரு பலமான அரசர்கள் அவர்களுக்குள் மோதும்போது இருவருக்கும் உதவுவதாக சொல்லி இருவருக்கும் உதவாமல் நகர வேண்டும், தன்னைவிட பலமான ஒருவன் தன்னுடன் மோதும்போது அவனைவிட பலமானவனிடம் அடைக்கலமாக வேண்டும்)
பிரயோகித்து ஆட்சியினை சமநிலைப்படி சரியாக நடத்திச் சென்றான். ரகுவோ முக்குணங்களையும் கட்டுப்படுத்தி கடந்து சென்று கல்லையும் பொன்னையும் ஒன்றாய் பார்க்குமளவு, சுகம் துக்கம் உணர்வு என எல்லாமும் கடந்த யோக நிலைக்குள் சென்றான்.
இவ்வாறு அஜன் இம்மையில் அடையவேண்டிய எல்லா இன்பங்களையும் செல்வங்களையும் அதிகாரங்களையும் பெற்றான், ரகுவோ மறுமையில் முக்தி பெறவேண்டி இப்பிறப்பில் நீக்க வேண்டிய எல்லாமும் நீக்கினான்.
தன் மகனுக்காக தன் வாழ்வினை சில காலம் நீட்டித்த ரகு பின்பு தொடக்கமும் முடிவும் இல்லாததும், எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டதுமான நித்திய பரம்பொருளை அடைந்து கலந்தான்.
ரகு காலமானான் எனும் செய்தி கேட்டுப் பெருகும் கண்ணீருடன் சென்ற அஜன் அக்னி இல்லாமல் அவனுக்குரிய கிரியை அனைத்தும் செய்தான். அதாவது முக்தி அடைந்த யோகியர் உடல் அக்னிக்கு இல்லை, நிலத்துக்கு என்பதால் அவன் உடலை உரிய முறைபடி அடக்கம் செய்தான்.
சந்நியாசியாக வாழ்ந்து யோக மார்க்கத்தில் உயிர் நீப்பவருக்கு எவ்வகை தர்ப்பணமும் பிண்டமும் வைக்க அவசியமில்லை, பித்ருகடன் முக்கியமில்லை, அவர்களுக்கான கிரியை என ஏதுமில்லை எனினும் ஒரு மகனாக தான் செய்யவேண்டிய காரியம் எல்லாமும் அஜன் குறைவின்றிச் செய்தான்.
அவன் மிகுந்த துக்கம் கொண்டிருந்தை அறிந்த வசிஷ்டர் அவனைத் தேற்றினார், யோகிகளின் இறப்பு என்பது பிரிவல்ல, மரணமல்ல, அவர்கள் பரம்பொருளின் ஞானத்துடன் கலந்துவிட்ட உயர்நிலைக்குச் சென்றுவிட்டார்கள், அப்படியான முக்தி அடைந்தவர்களைப் பற்றி வருந்தக் கூடாது , மோட்சம்பாக்கியம் பெற்றோரை எண்ணி புலம்பக் கூடாது. அது அவர்களுக்கான அவமரியாதை என அவர் சொன்னதால் மனம் தெளிந்த அஜன் தொடர்ந்து ஆட்சியினை நல்லமுறையில் செலுத்தி வந்தான்.
(தொடரும்..)