விநாயகர் அனுபூதி : 16 to 20

விநாயகர் அனுபூதி : 16

“ஆற்றல் அறியேன் அடிசெய் பிழைதீர்
சீற்றம் தவிர்வாய் திகழ்சிற் பர! யான்
சாற்றும் தமிழ்மா லைதனைத் துதிக்கை
ஏற்றே அருள்வாய்! அருள்வாய் இனிதே”

பாடல் இப்படிப் பிரியும்.

“ஆற்றல் அறியேன் அடிசெய் பிழைதீர்
சீற்றம் தவிர்வாய் திகழ்சிற் பர!
யான்
சாற்றும் தமிழ் மாலை தனைத் துதிக்கை
ஏற்றே அருள்வாய்! அருள்வாய் இனிதே”

விநாயகப்பெருமானே, “உன் பெரும் சக்தி தெரியாமல், அறியாமல் அறியாமையால் நான் ஏதும் பிழை செய்திருந்தால் மன்னிப்பாயாக. கோபம் தவிர்ப்பாயாக‌.

நான் உன்னை துதித்துச் சாற்றும் தமிழ்மாலையினை உன் துதிக்கையால் ஏற்றுக்கொண்டு, உன் திருவாயால் எனக்கு நல்ல மொழிகளை நல்லாசிகளை அருள்வாய் எம்பெருமானே” என வேண்டுகின்றார் காசிப முனி.

ஒரு மனிதனுக்கு இருக்கும் ஆகப் பெரும் நோய் அறியாமை. தான் அழியக்கூடிய அற்ப மானுடன் எனத் தெரியாமல், மாய அறியாமையில் மும்மலம் கொண்டு, ஆணவம் கொண்டு அவன் செய்யும் அனைத்து கர்மவினைகளும் அறியாமையில் விளைவதே.

உண்மை பொருள் எது என உணரும் மானுடர் இந்த மாயையில் இருந்து விலகுகின்றார்கள்.

இந்துப் புராணங்களில் ஒரு போதனையினைக் காணலாம். எந்த அசுரன், அது மகாபலி என்றாலும், சூரபத்மன் என்றாலும் பெரும்பாலும் பரம்பொருள் அவர்களை அழிக்காது. அவர்களின் அறியாமை நீக்கித் தன்னோடு சேர்த்துக்கொள்ளும்.

எல்லாத் துன்பங்களுக்கும் , கவலைக்கும், அர்த்தமற்ற போராட்டத்துக்கும், கண்ணீருக்கும் அறியாமைதான் காரணம். அந்த அறியாமை நீங்கிடில் எல்லாம் சரியாகும்.

விநாயகப்பெருமான் அந்த அறியாமையினை நீக்கித் தருவார். அவர் ஞானத்தை தருவார். அதனால், எல்லாத் துன்பமும் போராட்டமும் தீரும் எனப் பாடுகின்றார் காசிப முனிவர்.

அசுரர்களின் அறியாமையினை, ஏன் தேவர்களின் அறியாமையினை, இன்னும் எத்தனையோ ஆணவகாரர்களின் அறியாமையினை அவர் எப்படி அகற்றினார் என்பதை எண்ணி இப்பாடலை பாடுகின்றார் காசிபர்.

விநாயகரின் புராணம் ஏகப்பட்ட காட்சிகளைச் சொல்கின்றது.

விநாயகப்பெருமான் குழந்தையாக இருந்த காலத்தில் கிருத்திகாசுரன் என்பவன் கழுகு வடிவோடு வந்து அவரைத் தூக்கிச் செல்கின்றான். விநாயகப்பெருமான் அவன் மேல் இருந்து தன் பெருமூச்சை விட்டு மிதித்து வீழ்த்தினார்.

அவரின் பெருமூச்சின் வேகம் தாளாமல் அவன் சிறகுகள் செயலிழந்து வீழ்ந்தான் அசுரன். அவன் தன் இறகை பலமாக எண்ணினான். அந்த அறியாமையினைப் போக்கி அவனை ஆட்கொண்டார் விநாயகர்.

காசிப முனிவரும் அவர் மனைவி அதிதியும் அசுரர் தொல்லை தீர சிவனிடம் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு காவலாக பால கணபதியினை அனுப்பினார் சிவன்.

காசிப முனிவர் ஆஸ்ரமத்தில் அவர் விளையாடும் போது புரசை எனும் அரக்கி பெரும் வடிவோடு வந்து அவரை விழுங்கினாள்.

தன் வயிற்றில் விழும் எல்லாமும் அழிந்துவிடும் என்பது அவள் அறியாமை. அவள் வயிற்றை கிழித்து வந்து அவள் அறியாமை நீக்கி ஆட்கொண்டார் பெருமான்.

அப்படியே இரு கிளிகளாக வந்து பால விநாயகரை கொல்ல முயன்றனர் இரு அசுரர்கள். அவர்களின் உள்நோக்கம் அறிந்து பருந்துவாக மாறி அவர்களை வீழ்த்தி ஆட்கொண்டார் விநாயகர்.

கிளி உருவெடுத்தால் போதும் சாதிக்கலாம் எனும் அசுர அறியாமை அங்கு அடிபட்டுப் போயிற்று.

அரக்கி ஒருத்தி இந்திராணி வேடமிட்டு வந்து மயூர கணபதியினைக் கொஞ்சி அப்படியே வீசி எறிந்து கொல்ல முயன்றபோது அவள் மூக்கை, காதை திருகி அவள் உருவம் காட்டி அழித்து ஆட்கொண்டார் விநாயகர்.

மாறுவேடம் எனும் அறியாமையினை அவர் அழித்தார்.

மலைப்பாம்பின் வடிவம் எடுத்த அசுரன் தன்னிடம் யாரும் தப்பமுடியாது என அவரை வளைத்து விழுங்கி இறுமாந்து இருந்தபோது அவன் வயிற்றைக் கிழித்து அவனை ஆட்கொண்டார்.

இன்னும் கபன், மண்டூகன் என இரு அசுரர்கள் ஒரு குளத்தில் தவளையாய் இருந்து விநாயகரை கொல்லக் காத்திருந்தனர்.

அவர் நீராட வந்தபோது அவரை அமிழ்த்தினார்கள், அவரும் நீருக்கடியிலே இருந்துகொண்டார்.

அவரை கொன்றுவிட்டதாக இரு அசுரரும் மகிழ்ந்தனர். பின் யார் கொன்றார்கள் என இருவருக்குள் சண்டையிட்டு அவர்களுக்குள்ளே அடித்துக் கொண்டு செத்தார்கள்.

அவர்களின் அறியாமை கொண்டே அவர்களை அழித்தார் பிள்ளையார் பெருமான்.

இன்னும் இராவணன் தன் நாடு அழியாமல் இருக்க ஆத்மலிங்கத்தை எடுத்துச் சென்றபோது அவன் அறியாமை அகற்றி எல்லாம் அழியக்கூடியது எனும் தத்துவத்தை உணர்த்தி அவனுக்கு பாடம் சொன்னவர் விநாயகரே.

இப்படி ஏராளமான காட்சிகளை அவர் வாழ்வில் பார்க்க முடியும். சூத முனிவர் சொன்ன விநாயகர் புராணமும், இன்னும் பல ரிஷிகள் சொன்ன விநாயகர் திருவிளையாடலும் அந்தக் காட்சிகளைத் திரும்ப திரும்ப சொல்கின்றன‌.

விநாயகப்பெருமான் ஆற்றல் மிக்கவர், அதே நேரம் ஞானமும் அறிவும் மிக்கவர். தன்னை அண்டிவருவோர் எல்லோரின் அறியாமையினை நீக்கி ஞானம் தருபவர்.

அவரைப் பணிந்து நாம் என்ன கேட்டாலும் அதன் அறியாமை நீக்கி நமக்கு எது சரியோ, எது தேவையோ, எது நலமானதோ அதை மட்டும் தருவார்.

நல்லதை மட்டும் நமக்கு அருள்வார். அதைதான் இப்பாடலில் போதிக்கின்றார் காசிப முனிவர்.

விநாயகர் அனுபூதி : 17

“எந்தப் பிறப்பை எடுத்தா லும் உனைச்
சொந்தத் தமிழால் துதிசெய் திடவே
கொந்தே அலர்தார்க் குழல்வல் லபையாள்!
சிந்தைக்(கு) உகந்தாய்! சிறப்பாய் அருளே!”

“மணமிக்க மலர்களை மாலையாய் சூடியவனே, வல்லபையின் மனதுக்கு உகந்தவனே, என் சிந்தையில் நிறைந்தவனே, சிறப்புகள் அனைத்தும் கொண்ட விநாயகப் பெருமானே, நான் எப்பிறப்பை எடுத்தாலும் உன்னை சொந்த தமிழால் துதித்துப் போற்றிட அருள் செய்வாயாக” என்பது பாடலின் பொருள்.

இந்தப் பாடல் எல்லா உயிரும் எல்லாப் படைப்பும் விநாயகர் புகழை பாடுகின்றது, தானும் எப்பிறப்பு எடுத்தாலும் அவர் புகழை பாடவேண்டும் என காசிப முனிவர் மன்றாடும் பாடலாக ஒலிக்கின்றது.

விநாயகப் பெருமானை தேவர்கள் துதித்தார்கள்.

சிவன் முப்புரம் எரித்த புராணத்தில் அதனைக் காணலாம். விநாயகரைத் தொழாமல் தேவர்கள் ஆணவத்தில் கூடி சிவனை முன்னிறுத்தி தேரை கிளப்பினார்கள்.

ஆனால், தேரின் அச்சு முறிந்தது. இதன் காரணத்தை தேவர்கள் ஆராய்ந்தபோது விநாயகரை அழைக்காமல் தொடங்கிய காரியம் தடைபட்டது என உணர்ந்து அவரைத் துதித்தார்கள்.

இன்னும் எத்தனையோ இடங்களில் தேவர்கள் கணபதியினைத் துதித்தார்கள்.

விநாயகரை விஷ்ணு துதிக்கின்றார். பல இடங்களில் விநாயகரை அவர் அழைத்து பலன் அடைகின்றார்.

விநாயகப் பெருமனை பல போர்களில் வந்து உதவுமாறு அன்னை சக்தி அழைக்கின்றாள்.
ஆம். முப்பெரும் தேவர்களும் தேவியரும் விநாயகப் பெருமானை போற்றுகின்றார்கள்.

அசுரர்கள் எவ்வடிவில் வந்தாலும் விநாயகர் அவர்களை ஆட்கொண்டார். செந்தூரன் எனும் அசுரன் பெரும் அட்டகாசம் செய்தபோது விநாயகப் பெருமான் அவனை வீழ்த்தினார். அப்போது அசுர குலமெல்லாம் அவரைப் போற்றி நின்று மன்னிப்பு கோரிற்று.

இன்னும் பல இடங்களில் அசுரர்கள் அவரைப் போற்றினார்கள்.

கஜமுக அசுரனை விநாயகர் அழித்துப் போட்ட போது அவன் பெருச்சாளியாக மாறினான் அவனை தன் இன்னொரு வாகனமாக அவர் வைத்துக் கொண்டார்.

அப்படியே சௌபரி முனிவரும் அவர் மனைவி மனோரமையும் இமயமலையில் குடில் அமைத்து தவம் இயற்றியபோது கிரவுஞ்சன் எனும் கந்தர்வன் மனோரமையிடம் தொல்லை செய்தான்.

அவனை மூஷிகமாக போகும்படி சபித்தார் முனிவர். அவன் பாவநிவிர்த்தி கேட்டபோது “விநாயகப் முனிவர் பராசுவர் முனி ஆசிரமத்தில் வளர்வார், அப்போது நீ அவருக்கு வாகனமாவாய்” எனச் சொன்னார் முனிவர்.

அந்த பாக்கியம் போதும் என ஏற்றுக்கொண்டது மூஷிகம். பின்னாளில் விநாயகர் காலரூபினி எனும் பூதத்தை அழிக்கும் பொருட்டு அந்த முனிவர் குடிலுக்கு வந்தபோது இந்த மூஷிகத்தை தன் வாகனமாக்கினார்.

அந்த மூஷிகம் அப்போது முதல் விநாயகர் பெருமை பாடிற்று.

அக்னி பகவானை விட உஷ்ணமான அனலாசரன் வெம்மையினை விநாயகப் பெருமானின் அருளால் தாங்கிய அருகம்புல் அவரைப் போற்றிற்று. இன்றும் அருகம்புல் விநாயகருக்கு உகந்ததாயிற்று.

சரஸ்வதியின் சாபத்தால் தடைபட்ட பிரம்மனின் யாகத்தை விநாயகர் மீட்டுக் கொடுத்தார். வன்னி இலைகளைக் கொண்டு விநாயகரை அவன் துதிக்க மந்தாரை மரத்தடியில் இருந்து கணபதி பிரம்மனுக்கு அருள் புரிந்தார்.

வன்னி இலையும் மந்தாரை மரமும் எப்போதும் விநாயகருக்கு உகந்தவை. அவை விநாயகப் பெருமானின் அருளைப் பாடிக் கொண்டிருக்கின்றன‌.

இந்தச் சிறப்பினைத்தான் சொல்லிப் பாடுகின்றார் காசிப முனிவர்.

விநாயகப் பெருமானை தேவர்கள் துதிக்கின்றார்கள், அசுரர்கள் துதிக்கின்றார்கள், முப்பெரும் தெய்வங்கள் துதிக்கின்றன‌.

காந்தர்வர்கள் துதிக்கின்றார்கள், யட்சர்கள் துதிக்கின்றார்கள், நாகலோகத்தவர் துதிக்கின்றார்கள்.

இன்னும் மூஷிகம் முதலான விலங்குகள் துதிக்கின்றன. பறவைகள் துதிக்கின்றன‌.

தாவரங்களில் அருகம்புல், மந்தாரை, வன்னி மரம் துதிக்கின்றது.

இதைத்தான் சொல்லிப் பாடுகின்றார் காசிப முனிவர். விநாயகப் பெருமானே என் கர்மவினை எனக்குத் தெரியாது. ஒருவேளை என் வினையால் நான் மறுபடி எந்தப் பிறப்பு எடுத்தாலும் அது தேவர் முதல் தாவரம் வரை எடுத்தாலும் உன் புகழ் பாடும் மனம், உன்னை பிரியாத வரம் வேண்டும் அதை எனக்குத் தந்தருள்வாய் என உருகி மனமார கேட்கின்றார்.

எப்பிறவியில் எந்த உருவில் பிறந்தாலும் நீர் எனக்கு அருள் செய்து என்னை உன்புகழ் பாடும் பிறப்பாக, உன்னோடு இருக்கும் பிறப்பாக ஏற்றுக்கொள்வாய் என உருகிப் பாடுகின்றார் காசிப முனிவர்.

விநாயகர் அனுபூதி : 18

“சிந்தா மணிதான் திகழ்மார் புடையாய்
முந்தை வினையை முழுதும் தொலைத்(து) ஆள்
எந்தாய்! எளியேன் எனை நீ எழிலாய்
வந்து ஆள்! உயர் ஓ வடிவப் பொருளே!”

அதாவது, “சிந்தாமணியினைத் தன் நெஞ்சில் வைத்த எம்பெருமானே, முந்தை கர்மவினை எல்லாம் அழித்து என்னை உன் அருளில் சேர்த்து இனிதே அழகுற ஆண்டு கொள்வாய், உயர் ஓ வடிவப் பொருளே உன்னை வணங்குகின்றேன்”

இப்பாடல் விநாயகப் பெருமானின் பெரும் சக்தியினைப் பாடுகின்றது. அவர் சிந்தாமணியினை மீட்ட புராணத்தையும், அப்படியே ஒருவனின் கர்மவினையினை அழித்து அவன் வாழ்வினை மாற்றும் சக்தி விநாயகப் பெருமானுக்கே உண்டு என்பதையும் சொல்கின்றது.

விநாயகர் புராணம் அந்த சிந்தாமணி வரலாற்றைச் சொல்கின்றது‌. இந்திரனால் கபில முனிவருக்குக் கொடுக்கப்பட்ட சிந்தாமணி எனும் அபூர்வமணி என்ன கேட்டாலும் கொடுக்கும் சக்தி கொண்டது, அதைக் கொண்டு தன் குடிலுக்கு வருவோர் குறை தீர்த்துக் கொண்டிருந்தார் கபில முனி.

அங்கே வந்த கனன் என்பவன் அதை அபகரித்துச் சென்றான். முனிவர் விநாயகப் பெருமானிடம் முறையிட பெருமானே அதை மீட்டுக் கொடுத்தார். பின், கபில முனி தன் அந்திமகாலத்தில் அதை விநாயகரிடமே கொடுக்க அந்த மணியினைத் தன் மார்பில் வைத்துக் கொண்டார் விநாயகப் பெருமான்.

அதன் அர்த்தம் விநாயகப் பெருமான் என்ன கேட்டாலும் தருவார் என்பது. அப்படியான பெருமான் நம் முன்வினை கர்மத்தை ஒழித்து பாவங்களை ஒழித்து நம்மை முக்தி அடைய வைப்பார்.

முன்வினையினை விநாயகப் பெருமான் அழித்து நம்மை மாற்றுவார் என்பதற்கு “புருகண்டி” முனிவரே சாட்சி.

அவர் இயற்பெயர் விப்ரதன். அவர் வேடன். அவர் தொழில் கொள்ளையிடுதல், கொலை செய்யத் தயங்காத கொடும் தொழிலாக இருந்தது. அவன் முற்கலர் எனும் முனிவரைக் கொள்ளை இட முயன்றபோது அம்முனிவர் அவனிடம் பிரணவ மந்திரத்தை ஓதச் சொன்னார்.

அவன் அதை ஓதி விநாயகப் பெருமானின் அருள் பெற்றான். பழைய பாவமெல்லாம் தீர்ந்து முழு யோகியாக மாறினார். அவருக்குத் துதிக்கை வளர்ந்தது. அவர் “புருகண்டி” முனிவர் என்றானார்.

ஒரு கொடும் கொள்ளையனின் பாவத்தை தீர்த்து “யோகி” எனும் நிலைக்கு மாற்றி முக்தி கொடுத்தார் விநாயகப் பெருமான்.

இதே காட்சி அவரின் வரலாறெங்கும் காணக் கிடக்கின்றது. ஒருவனின் பாவத்தை பழைய கர்மத்தை அழிக்கும் சக்தி அதாவது தலையெழுத்தை மாற்றி வைக்கும் சக்தி விநாயகருக்கு உண்டு.

அதனைச் சொல்லித் தன் பாவ கர்மத்தையும் அழித்து முன் ஜென்ம கர்மகணக்கை சரிசெய்ய வேண்டி நிற்கின்றார் காசிப முனிவர்.

விநாயகப் பெருமானின் அருளில் முன் ஜென்ம கர்மவினை இந்த பிறப்பின் கர்மவினை எல்லாம் அகலும் எனப் போதிக்கின்றார்.

அப்படியே “உயர் ஓ வடிவப் பொருளே” என விநாயகரை அழைக்கின்றார் காசிப முனிவர். இது ஆழ கவனிக்கத்தக்கது.

விநாயகப் பெருமானின் வடிவம் ‘ஓ’ என ‘ஓம்’ எனப் பிரணவ மந்திரத்தின் எழுத்துவடிவில் அமைந்திருப்பதையும், அப்படியே விநாயகரே பிரணவமாக இருப்பதையும் பாடுகின்றார் காசிபர்.

விநாயகரின் திருவுருவில் வலது காது முதல் தொடங்கி தலையை சுற்றி வளைத்து இடது காது வரை கொண்டு வந்து தொங்கும் தும்பிக்கை வரை நீட்டிக்கொண்டு சுழித்தால் ‘ஓம்’ என்ற பிரணவ வடிவம் இருப்பதை அவதானிக்கலாம்.

பார்வதியின் சந்தனத்தில் இருந்து விநாயகர் உருவானார் என்பது பெரிய ஆதாரமில்லாச் செய்தி. ஆனால், புராணம் சொல்லும் செய்தி சிவன் ‘ஓம்’ எனும் மந்திரத்தை சக்தியிடம் ஓத அதிலிருந்து உருவானவர் விநாயகர் என்பது.

ஆம். நாதம் ஆதியில் பிறந்தது, அதுவே பிரணவமுமானது.

இதனாலே விநாயகருக்கு ‘ஓம் பிரணவானன தேவாய நம’ என்னும் அவரது மந்திரமும் உருவாயிற்று.

‘ஓம்’ எனும் பிரணவத்தின் வரி வடிவமே விநாயகர் வடிவம்.

ஆழமாகக் கவனித்தால் இது புரியும். ‘ஓ’ எனும் எழுத்தின் மேல்சுழி இருக்குமிடம் விநாயகரது ஒடிந்த கொம்பு இருக்குமிடம். அது அங்கிருந்து வலது கை வழியாக மேலேறிக் கிரீடத்தைச் சுற்றி இடக்கைப் பாசம்வரை வந்து வளைந்து நெற்றிப் பொட்டு வரையிலும் சென்று துதிக்கை வழியாகக் கீழ் இடக்கை வரை வந்து கால்வரை இறங்குவதை கவனித்தால் அதன் தத்துவம் விளங்கும்.

இதுதான் ஓம் காரண கணபதி. அதுதான் ஓங்கார தத்துவம், ஓங்கார கணபதி என்பது இதுதான்.

மூலாதாரத்தில் அமர்ந்திருக்கும் குண்டலினி சக்தி ஓம் எனும் மந்திரத்தால் எழுகின்றது. அந்த வரத்தை அருள்பவர் விநாயகரே, மூலாதாரத்தின் தெய்வம் அவர்தான்.

இதனாலே ஒளவை தன் அகவலில் “மூலாதாரத்தின் மூண்டெழும் கனலை காலால் எழுப்பும் கலை அறிவித்தே” எனப் பாடினார்.

கால் என்றால் காற்று, இங்கே அவர் சொல்லும் காற்று ஓம் எனும் பிரணவ மந்திரம்.

விநாயகப் பெருமானை வழிபட்டால் கர்மவினைக் கழியும், புண்ணியம் பெருகும். அப்படியே பிரணவ நாதனான அவரைத் தொழுது நின்றால் புருகண்டி முனிவரைப் போல நாமும் பெரும் இடம் எய்யமுடியும் என்பதை இப்பாடலில் போதிக்கின்றார் காசிப முனிவர்.

“மலஞ்செய்த வல்வினை நோக்கி
உலகை வலம்வருமப்
புலஞ்செய்த காட்சிக் குமரற்கு
முன்னே புரிசடைமேற்
சலஞ்செய்த நாரைப் பதியரன்
தன்னைக் கனிதரவே
வலஞ்செய்து கொண்ட மதக்களி
றேஉன்னை வாழ்த்துவனே”

என்பது நம்பியாண்டார் நம்பி பாடிய வரி.

இதைத்தான் மகாகவி சுப்பிரமணிய பாரதி பாடினார்.

“நிழலினும் வெயிலினும் நேர்ந்தநற் றுணையாய்த்
தழலினும் புனலினும் அபாயந் தவிர்த்து
மண்ணினும் காற்றினும் பானினும் எனக்குப்
பகைமை யொன்றின்றிப் பயந்தவிர்த் தாள்வான்

மெளன வாயும் வரந்தரு கையும்,
உடையநம் பெருமான் உணர்விலே நிற்பான்,
ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்,
வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த
பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும்

தானே யாகிய தனிமுதற் கடவுள்,
யானென தற்றார் ஞானமே தானாய்
சக்தி நிலைக்க மலவித் தாவான்,
சத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர்
நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்

ஏழையர்க் கெல்லாம் இரங்கும் பிள்ளை
வாழும் பிள்ளை, மணக்குளப் பிள்ளை
வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழு தேத்திப் பணிவது முறையே”

விநாயகர் அனுபூதி : 19

“பகையார் அவர்முப் புரமே பொடியா
நகைசெய் தபிரான் நலமாம் கனியை
வகையாய் அருள வலம்வந் தவனே!
தகையாய்! திடம்நீ தருவாய் மணியே”

“முப்புரம் எனும் திரிபுரத்தை தன் புன்னகையாலே எரித்த சிவபெருமான் ஞானப்பழத்தை உனக்கே கொடுக்கும்படி அம்மை அப்பனை சுற்றிவந்தவனே, சிறந்த பண்புகளைக் கொண்டவனே எனக்கு எல்லா வலிமையும் நீயே தருவாய்” என மன்றாடுகின்றார் காசிப முனிவர்.

இது திரிபுரம் எரித்த சிவபெருமானின் ஆற்றலைச் சொல்லும் புராணம். ஆனால், சூத முனிவர் இந்தக் காட்சியில் விநாயகரின் முக்கியத்துவத்தை சொல்கின்றார். அது விநாயகப் புராணத்திலும் உண்டு.

அதாவது, தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் எனும் மூவரும் பிரம்மனிடம் வரம் வாங்கி ஆகாயத்தில் மூன்று கோட்டை கட்டி இந்தக் கோட்டைகள் மூன்றும் ஒன்றுசேரும் பொழுது ஒரே ஒரு கணையாலே அழிக்கமுடியும் எனும் வரம் வாங்கி பெரும் அழிச்சாட்டியம் செய்தனர்.

அவர்கள் தங்கம், இரும்பு, வெண்கலம் என மூன்று கோட்டைகளைக் கட்டி தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கினார்கள். தேவர்கள் சிவனிடம் தஞ்சமானார்கள்.

சிவன் அவர்களை வதைக்க திருவுளம் கொண்டார்.

மேருமலை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பு நாணாகவும் அமர்ந்தது, விஷ்ணு அம்பாக அமர்ந்தார்.

நான்கு வேதங்களை நான்கு குதிரைகளாக்கி, பிரம்மா சாரதியாக இயக்க திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான். அதே நேரம் பக்தர்களாகிய அந்த மூவரை அழிக்கவும் அவர் விரும்பவில்லை அவர்கள் அறியாமையினை மட்டும் அகற்ற விரும்பினார்.

அப்படிச் சிவன் திரிபுரம் எரிக்க கிளம்பியபோது தேரின் அச்சு முறிந்தது. எல்லோரும் திகைத்தனர். இதன் காரணம் என்ன எனத் தெரியாமல் குழம்பினர்.

அப்போது கணபதியினைத் தொழாமல் செய்த பிழை இது என உணர்ந்து மன்னிப்பு கேட்டனர். அதன்பின் விநாயகப் பெருமானே தேரின் அச்சாக நின்று போரை நடத்தினார்.

அப்போது சிவன் அந்தத் திரிபுரம் கோட்டைகளை நோக்கி வில்லை வளைக்காமல், நாணைப் பூட்டாமல் அண்ட சராசரங்கள் நடுங்கும் வண்ணம் ஒரு புன்னகை செய்தார். அந்தப் புன்னகையிலே வானத்து கோட்டைகள் அழிந்து அந்த மூவரும் சிவனைப் பணிந்தனர், சிவன் அவர்களைத் தன்னோடு ஏற்றுக் கொண்டார்.

பெரும் பராக்கிரமசாலிகளைத் தன் புன்னகை ஒன்றாலே சிதறடித்தவர் சிவபெருமான். அவ்வளவு சக்திவாய்ந்ததவரே விநாயகரை அழைத்து தொழுதுவிட்டு சென்றால் விநாயகரின் பெரும் இடம் என்ன என்பதை சொல்லி விளக்க அவசியமில்லை.

அதைத்தான் இந்தப் பாடலின் தொடக்கத்தில் சொல்கின்றார்.

சிவன் விநாயகரைப் பணிந்த காட்சியினைச் சொல்லும் காசிப முனிவர் மறைமுகமாக அன்னை தேவி விநாயகரிடம் உதவிப் பெற்ற காட்சியும் மறைமுகமாகச் சொல்கின்றார்.

அன்னை தாட்சாயினியாகப் பிறந்து தட்சன் செய்த யாகத்தில் குழப்பம் வந்து அங்கே அவள் சதியாக நெருப்பில் வீழ்ந்தபின் பர்வத ராஜன் மகளாகப் பார்வதியாகப் பிறந்து சிவனை நோக்கி தவமிருக்கத் தொடங்கினாள்.

அவள் தவம் வெற்றியடைய ஆவணி மாத பூர நட்சத்திரம் தொடங்கி, புரட்டாசி மாத சுக்லபட்ச‌ சதுர்த்தி வரை விரதம் இருந்து விநாயகரை வழிபடச் சொன்னார்.

அதன்படி அன்னை அந்த விரதம் இருந்தாள். விநாயகரை மனமார வணங்கி பெரும் விரதத்தை அனுஷ்டானத்தோடு இருந்தாள். அதனால் அவள் தவம் பலித்து சிவனை மணந்தாள்.

அப்படி அன்னைக்கும் வழிகாட்டினார் விநாயகர்.

இப்படிச் சிவனுக்கும், தேவிக்கும் தக்க நேரத்தில் அருளியதும் ஞானப்பழம் அவருக்கு கிடைக்க ஒரு காரணம் எனும் காசிப முனிவர் அங்கே விநாயகரின் பெரும் குணத்தையும் சொல்கின்றார்.

வல்லமை மிக்கவர் எனும் போதும் விநாயகர் சிவன் பார்வதியிடம் பணிவாகவே இருந்தார். ஞானப்பழத்தை அவர் அதட்டிக் கேட்கவில்லை மாறாக போட்டிக்கு ஒப்புக்கொண்டார்.

அப்படியே சிவனும் அன்னையுமே எனக்கு உலகம் என்பதைச் சொல்லி அவர்களைச் சுற்றிவந்து கனியும் பெற்றுக்கொண்டார்.

பெரும் ஆற்றலும் பராக்கிரமும் கொண்டிருந்தாலும் பணிவும் அன்பும் மிகக் கூர்மையான ஞானமும் கொண்டவர் என அவரை போற்றிப் பாடுகின்றார் காசிபர்.

சிவன் முப்புரத்தை எரிக்க வலிமை கொடுத்தவர் விநாயகர், அன்னை தன் தவத்தை முடிக்க தனிச் சக்தி கொடுத்தவர் விநாயகர்.

அப்படியே முருகப்பெருமானுடன் போட்டியிட்டு ஞானப்பழத்தையும் பெற்றுக்கொண்டார்.

இப்படிப் பெரும் தெய்வங்களுக்கே அருள் வழங்கி அவர்களுக்கே பல நன்மைகளைச் செய்த விநாயகப் பெருமான் தனக்கும் வல்லமை தரவேண்டும் எனக் கோருகின்றார் காசிபர்.

இங்கு நுணுக்கமான போதனையினைச் சொல்கின்றார் காசிபர்.

அதாவது திரிபுரம் என்பது முக்குணத்தை ஒழித்தல். இரஜோ குணம், சத்வ குணம், தமஸ் எனும் குணத்தை ஒழித்தல், ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்று குணத்தை ஒழித்தல் எனப் பொருள்படும்.

அவற்றை ஒழிக்க விநாயகப் பெருமான் அருள் செய்யவேண்டும் என வேண்டுகின்றார்.

அப்படியே இந்த வாழ்வு என்பது தவத்துக்குச் சமமானது, இந்த வாழ்க்கை தவத்தில் முழுமை அடைந்து முக்தி அடைய பார்வதிக்கு வழிகாட்டியது போல் தனக்கும் வழிகாட்ட வேண்டும் என்கின்றார்.

இதெல்லாம் சொன்னபின் ஞானப்பழம் கொண்ட விநாயகப் பெருமான் தனக்கும் பெரும் ஞானம் தரவேண்டும் என மன்றாடுகின்றார்.

விநாயகப் பெருமான் தீயவர்களை, தீயக் குணங்களை, அறியாமை மயக்கங்களை அழித்துத் தருவார். வாழ்க்கை எனும் தவம் வெற்றியடைந்து முக்தி அடைய வழி செய்வார். ஞானம் தருவார்.

இந்த வாழ்வினைச் சரியாக ஞானமாக முழுமையாக வாழ அவர் அருள்வார். பெரும் வல்லமை தருவார். அதனால் அவரைப் பணியுங்கள். அவர் பெரும் சக்தி கொண்டவராயினும் பணிவானவர். கேட்டதைத் தருபவர் எனப் போதிக்கின்றார் காசிப முனிவர்.

விநாயகர் அனுபூதி : 20

“சீரோங் கிடும் நல் திறமும் பெருகும்:
ஏரோங் கிடுமே இனிதாம் திடமே
பேரோங் கிடும் நல் பெரும்வே ழமுகன்
தாரோங் கடியைத் தொழுவார் தமக்கே”

பாடல் இப்படிப் பிரியும்

“சீர் ஓங்கிடும் நல்திறமும் பெருகும்
ஏர் ஓங்கிடுமே இனிதாம் திடமே
பேர் ஓங்கிடும் நல் பெரும் வேழமுகன்
தார் ஓங்கும் அடியைத் தொழுவார் தமக்கே”

பாடலின் பொருள் இதுதான்.

“யானை முகம் கொண்ட விநாயகப் பெருமானின் திருவடியினைப் பற்றி தொழுவாரின் புகழ் ஓங்கும்; அழகு மிகுந்து வரும்; அவர்களின் செல்வாக்கும் வலிமையும் மிகுதியாகும்.”

இப்பாடல் கல்வி, செல்வம், வீரம் என மூன்றும் விநாயகப் பெருமானால் வழங்கப்படும். அவரே எல்லா வகை ஐஸ்வர்யத்துக்கும் மூல அதிபதி என்பதைச் சொல்கின்றது.

இதனை விநாயகரின் வாழ்வில் பல இடங்களில் காணலாம். மிகப்பெரிய உதாரணம் வியாச முனிவர். வியாச முனிவர் இருக்குமிடம் சாதாரணம் அல்ல. அவர்தான் வேதங்களைத் தொகுத்தார், 18 புராணங்களை எழுதினார். மகாபாரதம் எனும் பெரும் இதிகாசம் அவரால் இயற்றப்பட்டது.

அந்த வியாசருக்கு வேதங்களைத் தொகுக்கும் ஆர்வம் இருந்தது. ஆனால், அதற்குரிய வழிகள் தெரியவில்லை.

சனத்குமாரர்களிடமிருந்து அவர் வேதங்களைக் கற்றறிந்தார். ஆனால், அதனை முறையாக எழுத முடியாமல் குழம்பினார்.

அவருக்குப் பிரம்மன் விநாயகரை வழிபடும்படி ஆலோசனைச் சொன்னார். அதன்படி வியாசர் விநாயகரை நினைந்து அவரின் ஏகாட்சர மந்திரம் சொல்லி 12 ஆண்டுகள் தவம் புரிந்தார். அந்தத் தவத்தின் பலனாக விநாயகப் பெருமானே தோன்றி அவருக்கு எல்லா வரமும் அருளினார்.

அதன்பின்பே வியாசபெருமான் இந்த மாபெரும் சாதனையினைச் செய்தார். இன்றுவரை அவர் புகழ் நிலைத்திருக்கின்றது.

அவர் விநாயகரை விக்ரஹமாக வைத்து வழிபட்டு தீராப் புகழ் அடைந்தார்.

அப்படியே விநாயகரை வழிபட்ட ஒளவையார் முதல் எல்லோரும் அழியாப் புகழ் அடைந்தார்கள். அழியாப் புகழை தீராப் புகழை கொடுப்பவர் விநாயகப் பெருமான்.

அப்படியே அவரை வணங்கினால் அழகும் இன்னபிற அம்சங்களும் கூடும்.

சந்திரன் கதையும், இந்திரன் கதையும் அதைத் தெளிவாகச் சொல்கின்றது.

இந்திரன் அகலிகையின் பொருட்டு கௌதம முனிவரிடம் சாபம் பெற்றான், அதன்படி அவன் உடல் முழுவதும் கண்ணாய்ப் போனது.

அவன் மிகுந்த அவலட்சணமும் அருவெறுப்பும் கொண்ட தேகத்தினைக் கொண்டு கடும் வேதனையிலும் வலியிலும் இருந்தான், அவனுக்கு விநாயகரை வழிபட்டால் விடுதலை என முனிவர்கள் சொன்னதை அடுத்து அவன் விநாயகரைப் பூஜித்தான்.

விநாயகர் அருளால் அவன் சாபம் நீங்கப்பெற்று தன் இயல்பான அழகை அடைந்தான்.

அப்படியே சந்திரனும் விநாயகரை அவமதித்து சாபம் பெற்றான். அதனால் தேய்ந்து போனான். அவனின் கலைகள் எல்லாம் அழிந்து தேய்ந்தபோது அவன் விநாயகரை நோக்கி மன்றாடினான்.

அவர் அவன் தவறை மன்னித்து அவன் அழகை திரும்பக் கொடுத்தார். இந்தச் சம்பவத்தினால் அவர் பிறை நிலாவினை அடையாளமாக தன் தலையில் சூடிக்கொண்டார்.

அதுதான் “பாலசந்திர கணபதி” என்ற கோலத்தில் காட்சி அளிக்கும் கணபதி.

மன்மதன் கதையும் அதையேதான் சொல்கின்றது.

மன்மதன் சிவனின் தவத்தை கலைக்கும் பொருட்டு தன் அம்புகளை வீசும் போது சிவனின் உக்கிரம் தாளாமல் சாம்பலானான். அவன் எரிந்து கிடப்பதைக் கண்ட அவன் மனைவி ரதி சிவனிடம் மன்றாடி அவனுக்கு உயிர்பிச்சைத் தரும்படி கண்ணீர்விட்டாள்.

சிவன் அவனை எழுப்பி அவன் ரதி தவிர யார் கண்ணுக்கும் தெரியமாட்டான் என்ற நிபந்தனையினைக் கொடுத்தார்.

அவனோ அந்த சாபத்தை நினைந்து அழுதான், கருணைமிக்க சிவபெருமான் விநாயகரைத் தொழுதுவரச் சொன்னார்.

அப்படி விநாயகப் பெருமானை தொழுது வந்த மன்மதன், பின் கிருஷ்ண அவதாரத்தில் கண்ணனின் பிரத்யும்னன் எனும் பெயரோடு பிறந்து ரதியினைக் கரம்பிடித்து சாபம் நீங்கினான்.

விநாயகப் பெருமானை வழிபட்டால் அழகு கூடும். அப்படி அவரின் அருள் உண்டு.

இன்னும் புராணம் முழுக்க அவரை வழிபட்டவர்கள் செல்வாக்கும் பெரும் இடமும் பெற்ற காட்சிகள் எல்லா இடத்திலும் உண்டு.

அவர் எவ்வளவோ இடங்களில் தேவர்களுக்கு வந்த சோதனையினை முறித்து அவர்களைக் காத்தார்.

விநாயகரை வழிபட்டே தான் இழந்த சக்தியெல்லாம் பிரம்மன் மீளப் பெற்றான். சோமகாந்த மன்னனின் பிரம்மஹத்தி தோஷம் விநாயகராலே தீர்ந்தது.

இப்படி ஒருவருக்கு ஞானம், கல்வி, அறிவு, செல்வம், அழகு, பெரும் காவல் என எல்லாம் கொடுப்பவர் விநாயகப் பெருமான்.

அந்த விநாயகரை வழிபட்டால் எல்லா வளமும் ஐஸ்வர்யமும் வரமும் காவலும் கிடைக்கும். அவர் எல்லாத் தேவர்களாலும் புகழப்படுபவர், மும்மூர்த்திகளும் அவரை வழிபட்டார்கள்.

அவரே எல்லாவற்றின் மூலம். அந்த விநாயகரை தேடி வணங்கினால் எல்லாமும் கிடைக்கும் எனப் பாடுகின்றார் காசிப முனிவர்.

கல்வி, செல்வம், வீரம் என எல்லாமும் ஒருவர்க்கு குறைந்து வருவதும் கர்ம வினையின் தொடர்ச்சியே. ஏதோ ஒரு கர்மவினையால் சாபத்தால் இந்தக் குறை வரும்.

விநாயகப் பெருமானை வணங்கும்போது அந்தச் சாபம் தீர்கின்றது. சாபம் தீரும் இடத்தில் எல்லா வளமும் ஐஸ்வர்யமும் கூடுகின்றது.

இதையே ஒளவையார் பாடினார்.

“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிகிடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு”

“அல்லல் போம் வல்வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்
போகாத் துயரம் போம் – நல்ல
குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைத்தொழுதக் கால்”

என விவேக சிந்தாமணி பாடுகின்றது.

“திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும் ஆதலால்
வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை”

என்பது இரட்டை மணிமாலை சொல்லும் பாடல்.

இதையே மகாகவி பாரதி பாடினான்

“வரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும்
கரவும் புலைமை விருப்பமும் ஐயமும காய்ந்தெறிந்து
சிரமீது எங்கள் கணபதி தாள்மலர் சேர்த்தெமக்குத்
தரமேகொல் வானவர் எனறுளத் தேகளி சார்ந்ததுவே”