விநாயகர் அனுபூதி : 36 to 40
விநாயகர் அனுபூதி : 36
“கத்தும் தரங்கக் கடல்சூழ் புவியில்
தித்தித் திடும்செந் தமிழ்மா லைசெயும்
வித்தர் களின்தீ வினையை விலக்கும்
அத்தித் தலையன் அருட்பார் வையதே”
பாடல் இப்படிப் பிரிந்து வரும்.
“கத்தும் தரங்கக் கடல் சூழ் புவியில்
தித்தித்திடும் செந்தமிழ் மாலை செயும்
வித்தர்களின் தீ வினையை விலக்கும்
அத்தித் தலையன் அருட்பார் வையதே”
“கத்தும் கடல் சூழ்ந்த இந்தப் பூமியில் இனித்திடும் தித்திப்பான கவிதைகளை மாலையாய்ச் விநாயகப் பெருமானுக்குச் சூடும் கவிஞர்களின் தீ வினை எல்லாம் விலகும், அத்தி மலர்களைச் சூடிய விநாயகப் பெருமான் அருட்பார்வையிலே அவர்கள் வினை எல்லாம் நீங்கிவிடும்” என்பது பாடலின் பொருள்.
விநாயகப் பெருமான் மூல முதல் தெய்வம். இதனால் எல்லாக் காரியம் தொடங்கும் போதும் அவரைத் தொழுதல் மரபு. அப்படியே கவிஞர்களும் செய்யுள் முதலானவையும், பெரும் காவியம் படைக்கும் போதும் அவரைத் தொழுதே ஆரம்பிக்கின்றார்கள்.
இந்து மரபில் எல்லாக் கலைகளும் விநாயகரைத் தொழுது ஆரம்பிப்பதைப் போல, எழுத்தும் பாடலும் அவரைத் தொழுதே ஆரம்பமாயின.
இங்கு ஒரு நுணுக்கமானப் போதனையினைச் சொல்கின்றார் காசிப முனிவர்.
அதாவது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கர்மம் முடிக்க வரும் பூமி இது, அவ்வகையில் புலவர்கள் கவிஞர்களின் கர்மா பாடிப் பிழைப்பது, செய்யுளும் காவியமும் இன்னும் பலவும் பாடுவது.
இது எல்லோருக்கும் வழங்கப்படுவதில்லை. முன் ஜென்ம புண்ணியத்தால் மொழியறிவும் இதர அறிவும் சேர்ந்து கிடைக்கும் பிறப்பு என்பது தேர்ந்து எடுத்து வழங்கப்படுவது, ஒரு காரணக் காரியத்துக்காக அப்பிறப்பு அமையும்.
அப்படிப்பட்ட புலவர்கள் தங்கள் கவிதையால் மொழியால் விநாயகப் பெருமனை வணங்கும்போது அவர் அக மகிழ்ந்து தன் அருள் பார்வையால் அவர்களின் தீவினை எல்லாம் போக்கிவிடுவார். அவர்கள் தொட்டதெல்லாம் நிலைக்கும், அவர்களும் கர்மா முடிந்து முக்தி அடைவர்.
இந்த உலகில் ஒரு அரசன் எழுப்பும் அரசு அழியும், பெரிய பெரிய செல்வம் அழியும், இன்னும் பெரும் வீரரின் வீரம் அழியும். காலம் மாற மாற எல்லாமும் மாறும்.
அரசுகள் வீழும், மாட மாளிகைகள் வீழும், கலைகள் மாறும், படைகள் மாறும், எல்லாமே மாறிக்கொண்டே இருக்கும். எதுவும் நிலையானது அல்ல. இன்று கொண்டாடப்படும் விஷயம் இன்னொருநாள் சிறப்பிழந்து போகும்.
ஆனால், எக்காலமும் மாறாமல் போதிப்பது உன்னதப் புலவர்களின் படைப்பு, இதை உணர்ந்த புலவர்கள் தெய்வத்தைச் சரணடைவார்கள்.
அப்படியான புலவர்கள் விநாயகப் பெருமானைக் கண்டாலே அவர்கள் முன் ஜென்ம வினை எல்லாம் அகன்று நற்கதி அடைவார்கள்.
புலவர்கள் வாழ்வு வறுமை மிக்கது அந்த வறுமை அவர்களின் பிறவிக் கர்மா. அந்த வறுமையினால் புலவர்கள் அடையும் துன்பம் கொஞ்சமல்ல, யாரையாவதுப் பாடி பிழைக்கும் தொழில் அவர்களுடையது.
அப்படிப்பட்ட புலவர்களின் வறுமையினைப் பிறவிச் சாபத்தை தீர்த்து அவர்கள் அழியாக் காவியம் படைக்க முழுப்பலம் அருள்பவர் விநாயகப் பெருமான் எனப் போற்றுகின்றார் காசிப முனிவர்.
அதாவது, புலவர்கள் தொழில் கர்மச் சாபம் மிக்கது. அந்தச் சாபத்தை நீக்கி அவர்களுக்குப் பெரும் இடத்தை, அழியா இடத்தை விநாயகர் தருவார். அதனைப் புராணம் தோறும் வரலாறு மெய்ப்பிக்கின்றது.
வியாசர், பிருகு முனிவர் என அந்த வரிசை மிகப் பெரிது. அதுதான் காசிப முனிவர், கபிலர், நக்கீரர், பரணதேவர், அதிராவடிகள், நம்பியாண்டார் நம்பி எனத் தொடர்ந்தது.
இந்த வரிசையில் அழியா இடம் பெற்றவர் ஒளவையார்.
ஒளவையார், காசிபமுனிவர், நக்கீர தேவர், கபிலர் போன்றோரெல்லாம் விநாயகரைத் தொழுது அவரைப் பாடி அவராலே முக்தி அடைந்தார்கள். அந்த வரத்தைத்தான் பாடுகின்றார் காசிப முனிவர்.
விருத்தாசல புராணம், பாதாள விநாயகரின் பெருமைகளைப் பாடுகிறது. உலகத் தொல்லைகள், பிறவித் தொல்லைகள் போகவும், செல்வமும் கல்வியும் கருணையும் வந்து சேரவும் கணபதியைக் கைத்தொழ வேண்டும் என்கிறது இந்தப் புராணம்.
கடல் சூழ்ந்த உலகு என்பது இங்குப் புலவர் வாழ்வில் அலை அலையாய் வரும் இன்னல்கள் பற்றியது. அந்த இன்னல் மிகு வாழ்வில் தங்கள் மனதால் விநாயகரை நினைந்து அதைச் சிந்தனையில் வார்த்தைகளாக்கிப் பாடினால் அதாவது மனம் வாக்கு உடல் சிந்தனை என எல்லாம் ஒரே புள்ளியில் கொண்டு விநாயகரைப் பாடினால் அவர்கள் தீவினை அழிந்து நல்வினைப் பெருகும், அவர்கள் தொட்டதெல்லாம் நிலைக்கும்.
இதனாலே ஒவ்வொரு புலவரும் முதல்பாடலாக விநாயகரைப் பாடினார்கள். திருமந்திரம் தந்த திருமூலர் வரை அதனைப் பாடினார்.
எந்தப் புலவனாயினும் விநாயகரைத் தொழுதுப் பாடத் தொடங்கினால் அவன் படைப்புக் காலத்தை வென்று நிற்கும். அப்படியான படைப்பைத் தந்தவனும் தீவினைத் தீர்த்து நற்கதி அடைவான் என்பதைப் பாடுகின்றார் காசிபர்.
இது கவிஞர்களுக்குப் புலவர்களுக்கு என்றல்ல, யாரெல்லாம் மனதால் விநாயகரைத் தொழுது மனம் சிந்தை என அவரை முழுக்க நினைந்து வழிபடுவார்களோ அவர்களுக்கெல்லாம் அந்த நாயகனை வணங்கும் வரம் கிடைக்கும்.
அவனின் அருட்பார்வையிலே எல்லாத் தீவினையும் தீரும், பெரும் நன்மையும் நிம்மதியும் நல்விதியும் சூழும்.
விநாயகரைப் பாடினால்,
“ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைப்
போரானைக் கற்பகத்தைப் பேணினால்
வாராத புத்தி வரும் வித்தை வரும்
புத்திர சம்பத்து வரும்
சக்தி தரும் சித்தி தரும் தான்”
என்பது காளமேகப் புலவரின் வரி.
“அல்லல் போம் வல்வினை போம்
அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்
போகாத் துயரம் போம் – நல்ல
குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைத்தொழுதக் கால்”
என்பது விவேக சிந்தாமணி பாடல்.
“திருவும் கல்வியும் சீரும்சி றப்பும்உன்
திருவ டிப்புகழ் பாடுந்தி றமும்நல்
உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா
உணர்வும் தந்தென துள்ளத்த மர்ந்தவா
குருவும் தெய்வமும் ஆகிஅன் பாளர்தம்
குறைத விர்க்கும்கு ணப்பெருங் குன்றமே
வெருவும் சிந்தைவி லகக்க ஜானனம்
விளங்கும் சித்தி விநாயக வள்ளலே.”
என்பது சித்திவிநாயகர் திருவருள் மாலை சொல்லும் பாடல்.
“பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன் தமிழில் கூறுவேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே”
என்பது விநாயகர் துதி.
“திருவாக்கும்; செய்கருமம் கைகூட்டும்; செஞ்சொல்
பெருவாக்கும், பீடும்பெருக்கும்; – உருவாக்கும்;
ஆதலால், வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.”
என்பது இரட்டை மணிமாலை வரி.
“அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து
அகர உகர மகரங்கள் தம்மால் பகருமொரு முதலாகி
வேறும் ஆகிப் பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப்
போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு நிகரில்
மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக்
கணபதியை நினைத்து வாழ்வாம்”
என்பது விநாயகப்புராணத்தின் வரிகள்.
“வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே”
என்பது அடியார்கள் ஒருவரின் பாடல்.
இதனைத்தான் இங்குப் பாடி விநாயகரின் பெரும் அருளைப் போதிக்கின்றார் காசிப முனிவர்.
விநாயகர் அனுபூதி : 37
“ஆரா அமுதம் எனஆ சுகவி
சீராப் புகலும் திறமே அருள்வாய்
தீராக் கலைகள் திகழ்வா ரிதியே
வாராய்! வளமே வளர்வா ரணனே”
பாடல் இப்படிப் பிரிந்து வரும்.
“ஆரா அமுதம் என ஆசு கவி
சீராப் பகலும் திறமே அருள்வாய்
தீராக் கலைகள் திகழ்வார் இதியே
வாராய் வளமே வளர் வாரணனே”
” தெவிட்டாத அமுதம் போல் ஆசுகவி எனும் அற்புதக் கவியினை இயற்றும் வல்லமை தருபவனே, எல்லா வளமான கலைகளின் மூலமாக இருக்கும் கடல் போன்றவனே, யானை முகத்தவனே, எம்பெருமானே” என்பது பாடலின் பொருள்.
தமிழில் ஆசுகவி, மதுரகவி, சித்திரக் கவி, வித்தார கவி என நான்கு உண்டு. இதில் மதுரகவி என்பது மயக்கும் வகையில் பாடவேண்டியது, சித்திர கவி என்பது சித்திர வடிவில் எழுதினாலும் பொருள் தருவது, வித்தார கவி என்பது வேடிக்கையும் கிண்டலும் நிறைந்தது.
ஆசுகவி என்றால் தலைப்பைக் கொடுத்ததும் அந்த நொடியில் பாட வேண்டியது.
எந்தப் புலவனுக்கும் இது சவால். தலைப்புக் கொடுத்துக் கால அவகாசம் கொடுத்தால்தான் ஒரு கவிஞன் குறிப்புகள் இன்னபிற தயாரிப்பு செய்து பாடமுடியும், உடனே பாடுவது என்பது எந்தச் சிறந்த கவிஞனாலும் முடியாத ஒன்று.
இந்த வரத்தை தருபவர் விநாயகப் பெருமான், அவர் தன் பக்தர்களுக்கு எல்லாத் கவித்திறமையினைத் தருவார், ஆசுகவி எனும் அற்புத வித்தையும் தருவார்.
இதனாலே ஒளவையார் பாடினார்.
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா”
விநாயகரை வழிபட்டால் கவிபாடும் புலமை முத்தமிழிலும் பாடும் புலமை வரும் என்றவர் ஒளவையார், அவர் ஆசுகவிக்குப் பெரும் உதாரணம்.
முருகப்பெருமான் வந்து அரிது, இனிது, கொடிது, பெரிது எனத் தலைப்பினைக் கொடுத்தவுடன் ஒளவை சிறிதும் யோசிக்காமல் தயங்காமல் பாடினாள், ஆசுகவிக்கு அவளே பெரும் உதாரணம்.
விநாயகப் பெருமான் இந்த வரத்தை பலருக்கு வழங்கினார், சுந்தரர் வாழ்விலும் இந்த அற்புதத்தைச் செய்தார்.
“திருக்குருகாவூர் வெள்ளடை'” என்ற சிவதலத்தை நோக்கி தன் ஆட்களுடன் சென்ற சுந்தரர் மிகுந்த களைப்புற்றார், அவர் வருவதை அறிந்த விநாயகர் எடமணல் எனும் ஊர் அருகே தன் சந்நிதி முன்னால் தானே அந்தண வடிவம் எடுத்துப் பந்தலிட்டு அன்னதானம் செய்வது போல் காத்திருந்தார்.
சுந்தரரும் அவருடன் வந்தவர்களும் கடும் வெயிலும் பயணக் களைப்பும் நீங்க நன்றாக உண்டு கொஞ்சம் உறங்கினார்கள். அவர்கள் கண்விழிக்கும் போது பந்தலுமில்லை, அந்தணனுமில்லை, சமைத்தப் பாத்திரமுமில்லை.
அதைத் தந்தது விநாயகர் என்பதை உணர்ந்த சுந்தரர் அவரை வணங்கினார். அவருக்குக் “கட்டமுது விநாயகர்” எனப் பெயர், அந்த விநாயகர் சந்நிதியிலே ஈசனை நினைந்து “பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணிக் களைவாய்” எனும் பாடலைப் பாடினார்.
சுந்தரர் அற்புதமாகப் பாடுபவர் அவருக்குத் தானும் வந்து வரமருளினார் விநாயகப் பெருமான்.
ஆசுகவிகளில் அருணகிரி நாதரும் உண்டு. காதில் ஒரு விஷயம் விழுந்தவுடன் அதைப்பாடும் அற்புதமான ஆற்றலை அவர் கொண்டிருந்தார், அவருக்கு அந்த வரத்தை கொடுத்ததில் விநாயகருக்கும் பங்கு உண்டு.
திருவண்ணாமலையில் அருணகிரிநாதரை முருகப்பெருமான் ஆட்கொண்டார். அதன் பின்னும் அருணகிரியார்க்கு முருகப்பெருமானை காணும் ஆவல் வந்தது, அவருக்கு வேலூர் பக்கம் உள்ள சோளிங்கர் அருகிலுள்ள ஞானமலையில் தன் திருவடி காட்டித் தரிசனம் தந்தார் முருகப்பெருமான்.
அந்த ஞானமலையில் முருகனைத் தரிசிக்கச் செல்லுமுன் அந்த மலையின் அடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வணங்கினார் அருணகிரியார். அந்த விநாயகர் “‘ஞானஸித்தி கணபதி” என அழைக்கப்படுபவர், அவர்தான் அருணகிரி நாதருக்கு சித்தி அளித்தார்.
சித்தி என்றால் குறைவுபடாத ஞானம் எனப் பொருள்.
நம்பியாண்டார் நம்பி எனும் அற்புதமான அடியார் புலவரை, திருத்தொண்டர் வகையினைத் தொகுத்த அந்த நம்பிக்கு அருள் புரிந்தவர் விநாயகர், நம்பியாண்டார் நம்பியும் ஆசுகவி என்றே அழைக்கப்பட்டார்.
விநாயகப் பெருமான் ஆசுகவி வரத்தை அருள்வார் என்பதற்கு மாபெரும் உதாரணம் அந்த நெற்குன்றவாணார் எனும் விநாயக பக்தர். அவரின் வரலாற்றில் விநாயகப் பெருமான் பெரும் சாட்சி.
அக்காலத்தில் தொண்டை நாட்டில் நெற்குன்றம் என்ற ஊரில் ஒரு புலவர் இருந்தார். அவர் பெயர் நெற்குன்ற வாணர். நல்ல புலவர் ஆனால் வறுமையில் வாடினார், புலவர்கள் வாழ்வின் கர்மம் இது.
வறுமையில் விழுந்ததால் கடன் எனும் கல்லை கட்டிக் கொண்டார். அது அவரை இன்னும் மூழ்கடித்தது.
புலவன் வாழ்வே பாடி பிழைப்பது, பிழைப்புக்கே வழியில்லை எனும் நிலையில் அவரால் கடனைத் திரும்ப செலுத்தவோ வட்டியைக் கட்டவோ இயலவில்லை. கடன் கொடுத்தவர்கள் இவரை மிரட்டினர், விவகாரம் அரசன் வரை சென்றதால் அரச தண்டனைக்குப் பயந்து தலைமறைவாகி சுற்றித் திரிந்தார்.
அப்படித் திரிந்தவர் திருப்புகலூர் வந்து சேர்ந்தார். ஆனால், அரச சேவகர்களுக்குச் செய்திக் கிடைத்து அவர்கள் இவரைக் கைது செய்ய விரைந்தார்கள்.
அந்நேரம் இவர் திருப்புகலூர் அக்னி தீர்த்தக் கரையிலுள்ள விநாயகப் பெருமானைத் தரிசித்துக் கொண்டிருந்தார். அவரைச் சூழ்ந்த சேவகர்கள் இவரைச் சிறைப்பிடிக்க முற்பட்டனர். நெற்குன்றனார் அவர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார், “இந்த விநாயகரை நான் வழிபாடு செய்துவிட்டு வருகிறேன், அதன் பின் என்னை கைது செய்யுங்கள் என்றார்”
அதற்குச் சேவகர்களும் உடன்பட்டனர்.
புலவர் தன் அவலநிலைசொல்லி பாடினார். கடைசி வரியாக “திருப்புகலூர் அரசனிடத்து மகிழ்வஞ்சி ஈன்றவோர் அத்திநின்றே” எனப் பாடி முடித்தார். இனி அவர் கைதாகும் நேரம் என்பதால் கலங்கி நின்று விநாயகரையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வூரில் வாழ்ந்து வந்த சிந்தாமணி என்ற தாசி அங்கு வந்தாள். அவள் திருப்புகலூர் இறைவனிடம் அளவற்ற பக்திக் கொண்டவள், அவள் தானே இப்பாடலை பாடியது போல் மகிழ்ந்தாள், நேரே புலவரிடம் வந்த அவள் விநாயகர் துதியினைக காப்பாகக் கொண்டு ஒரு அந்தாதி பாடுவீரோ” என்றாள்.
புலவர் கைதாகும் சூழலில் இருந்ததால் உருகிச் சொன்னார் “நான் பாடும் காப்பு என் விலங்கை நீக்குமா?”
அவள் புரியாமல் என்ன எனக் கேட்டாள்.
“பெண்ணே, நான் கடன் பல வாங்கி தலைமறைவானவன், இவர்கள் என்னைக் கைது செய்து அரசனிடம் இழுத்துச் செல்ல வந்திருக்கின்றார்கள், நான் இங்கு விநாயகரை பாடினால் என் கடன் தீர வழி செய்வாயா?” என்றார்.
அவள் கட்டாயம் செய்வேன் எனச் சொன்னவள் அந்த இடத்திலே அவரின் கடனை வட்டியோடு செலுத்தினாள், புலவர் விடுதலையானார்.
அந்த உற்சாகத்தில் அவர் பாடியதுதான், “திருப்புகலூர் அந்தாதி”
அதன்பின் ஆசுகவிக்கு ஒரு புலவராக அவர் பெரும் புகழும் கீர்த்தியும் பெற்று வாழ்ந்தார். அவருக்கு அந்த வரத்தை அருளியவர் விநாயகர், இன்றும் திருப்புகலூரில் இந்தச் சாட்சி உண்டு.
இப்படி எத்தனையோ புலவர்கள் தன்னை வேண்டும்போது ஓடிவந்து அவர்களைக் காத்து யாருக்கும் கிடைக்காத ஆசுகவி எனும் வரத்தையும் அவர்களுக்கு அருளியவர் விநாயகப் பெருமான், என்றும் இன்றும் தன்னை அண்டும் புலவர்களுக்கு அந்த வரத்தை அவர் கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்.
ஆசுகவியினை விநாயகர் புலவர்களுக்குத் தருவார் என்பது வெறும் கவிமட்டுமல்ல தன்னை நம்புவோரின் ஆபத்து வேளையில் அவர் ஓடிவந்து உதவுவார், மீட்பார் என்பதைச் சொல்லும் போதனையும் உண்டு.
விநாயகப் பெருமானை நம்புவோர் யாரும் கைவிடப்படமாட்டார்கள், எந்த ஆபத்தில் இருந்தும் அவர்களை விநாயகப் பெருமான் காத்து அவர்களுக்குப் பெரும் வரம் தந்து வாழவைப்பார் என்பதே இப்பாடலில் காசிப முனிவர் சொல்லும் போதனை.
விநாயகர் அனுபூதி : 38
“வேதா கமமே மிகவும் புகழும்
பாதாம் புயனே பணிசெய் அடியேற்(கு)
ஆதா ரநின அருட்காட் சிதர
வாதா எழில் ஓ வடிவா னவனே”
பாடல் இப்படிப் பிரிந்து வரும்.
“வேத ஆகமமே மிகவும் புகழும்
பாதாம் புயனே பணிசெய் அடியேற்கு
ஆதார நின் அருட்காட்சி தர
வாதா எழில் ஓ வடிவானவனே”
அதாவது, “வேத ஆகமங்களால் போற்றப்படும் விநாயகப் பெருமானே, உனக்குத் தொண்டு செய்யும் அடியார்க்கு ஆதாரமாக நின்று தாங்குபவனே, ஓங்கார வடிவானவனே. எனக்கு உன் திருக்கோல காட்சி தருவாயோ” என்பது பாடலின் பொருள்.
வேதங்களால் துதிக்கப்படுபவர் விநாயகர், அவர் முழுமுதல் கடவுள் என்பதால் அவரை எப்போதும் வேதங்கள் துதித்துக் கொண்டே இருக்கின்றன.
யஜூர் வேதம் சொல்கின்றது, “தத்கராடாய வித்மஹே ஹஸ்திமுகாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத்”
அதாவது, மிகப் பெரும் ஆற்றல் கொண்ட விநாயகப் பெருமான் யானைமுகம் கொண்டவர் ஒரு தந்தத்தை என்றும்,அவருக்கு மட்டுமே உரித்தான தனித்துவம் வாய்ந்த குணாதிசயங்களால் போற்றப்படுகிறார் என்பது இந்த வேதவரியின் பொருள்.
அதே யஜூர் வேதம் அவரை வளைந்த துதிக்கையுடையவன் அதாவது வக்ரதுண்டாய என்றும் போற்றுகின்றது.
“பீஜாபூரகதெக்ஷுகார்முக இதி ஆகம ப்ரஸித்தமூர்த்திதரம் விநாயகம்” என்பதும் அவருக்கான வேதவரி, இதுதான் கணபதியின் மூல தியான ஸ்லோகமுமாகின்றது.
“ஜகத்துல்யமுகத்வென தீர்கதுண்டஸ்ய வக்ரதா யோ ரத்னகலசஸ்தஸ்ய தாரணாயேதி மான்யதாம்” என்பதும் வேதத்தின் வரி.
சாம வேதத்தின் “சாமவிதான ப்ராஹ்மணம்” விநாயகருக்கான பாடல்களைச் சொல்கின்றது. அது “விநாயக சம்ஹிதை” என்றழைக்கப்படுகிறது..
அதர்வணவேதம் அவரை “யோ வை ருத்ரஸ் ச பகவான் யஸ்ச விநாயகஸ் தஸ்மை வை நமோ நம” என்கின்றது, இது ருத்ரகோலத்தில் அவரை அழைக்கும் மந்திரம்.
ரிக் வேதத்தில் “கணனாம் த்வா கணபதிம் ஹவாமஹே..” என்பதும் அவர் மந்திரமே.
இன்னும் உபநிஷங்களும் அவர் பெருமையினைப் போற்றுகின்றன, போதாயன க்ருஹ்ய சேஷ சூத்திரம் “விநாயககல்பம்” என்ற அத்யாயத்தில் விநாயகரைப் பூஜிக்கும் முறை சொல்லப்பட்டுள்ளது.
கோபில ஸ்ம்ருதி சொல்கின்றது, ஒவ்வொரு வைதீக கர்மத்தை ஆரம்பிப்பதற்கு முன்பும் கணாதிபதியான விநாயகரும் மாத்ருகைகளும் பூஜிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறது.
காத்யாயன ஸ்ம்ருதியும் கணேசர் பூஜையை வலியுறுத்துகிறது.
லௌகக்ஷி ஸ்ம்ருதி சொல்கின்றது, வெவ்வேறு தெய்வங்களை வழிபட்டால் வெவ்வேறு பலன்கள் கிடைக்கும்; ஆனால் கணபதியை பூஜித்தால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன்களும் ஒருசேர கிடைக்கும்.
யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி எல்லா வழிபாட்டிலும் சடங்குகளிலும் தொடக்கத்தில் விநாயகரை வழிபடச் சொல்கின்றது.
“விநாயக கர்மவிக்நசித்யர்த்தம் விநியோஜித கனானாம் ஆதிபத்யே ச ருத்ரேன ப்ரஹ்மணே ததா”
அதாவது, விநாயகர் ருத்ரனாலும் ப்ரம்மனாலும் கணங்களுக்கு அதிபதியாக இருந்து விக்னங்களைத் தோற்றுவிப்பதற்கும் போக்குவதற்கும் நியமிக்கப்பட்டார் என்கிறது.
இப்படி வேதங்களாலும் உபநிஷங்கள் ஸ்ம்ருதிகளால் வணங்கப்படுபவர் என்கின்றது, விநாயகப் பெருமானின் கால் சிலம்பாக வேதங்களே ஒலிக்கின்றன என்பதும் ரிஷிகள் சொன்னது.
இப்படியான தத்துவத்தை அதாவது விநாயகப்பெருமான் வேதங்களால் துதிக்கப்படுகின்றார் என்பதை திருவேதி குடியில் இருக்கும் வேதவிநாயகர் கோலம் சொல்கின்றது.
அந்த ஆலயத்தில் வேதங்கள் வந்து வணங்கியதால் அந்த விநாயகர் வேதவிநாயகர் என்றானார், வேதங்களுக்கு அவர் தன் தலை சாய்த்துச் செவிடுத்தார், அதனால் இப்போதும் அவர் தலை ஒரு பக்கம் சரிந்து வேதங்களைக் கேட்பது போலே காட்சியளிக்கின்றார்.
இந்த தத்துவத்தைத்தான் இந்த பாடலில் பாடுகின்றார் காசிப முனிவர், வேதங்களால் துதிக்கப்படும் விநாயகர் தன்னைத் துதித்துப்பாடும் பக்தர்களையும் காக்கின்றார் என்பது அடுத்து முனிவர் சொல்லவரும் தத்துவம்.
விப்ரதன் எனும் விறகுவெட்டி இருந்தான், அவன் பஞ்சகாலத்தில் கொள்ளைகாரனுமானான், ஒரு நாள் ஒரு முனிவரை அவன் கொள்ளையிட முயலும் போது அவரின் கருணைமிகு கண்களால் ஈர்க்கப்பட்டான்.
அங்கே அவன் மனமாற்றம் அடைந்து தன் பாவங்களுக்கான மன்னிப்பைக் கோரினான்.
அவர் அவனுக்கு ஒரு மந்திரமும் சொல்லி ஒரு பட்டுப்போன மரகுச்சியினைக் கொடுத்து இது தளிர்த்து மரமாகும் வரை இம்மந்திரத்தை சொல் எனச் சொல்லிச் சென்றார்.
அதுதான் கணபதி காயத்ரி, “”ஓம் ஏகதந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்”
அந்த மந்திரத்தை சொல்ல சொல்ல விப்ரதன் விநாயக உருவிற்கு மாறினார், அவரின் மூக்கு வளர்ந்து துதிக்கையானது அவர் புருகணடி முனிவரானார்.
அந்நேரம் அந்தப் பட்ட மரகுச்சித் துளிர்த்து வளர்ந்தது, அது யார் என்ன கேட்டாலும் கொடுக்கும் மரமுமாயிற்று, அதனை கற்பகம் என அழைத்தார்கள், விநாயகரின் அருளால் அது உருவானது, யார் என்ன கேட்டாலும் கொடுத்தது.
விநாயகர் அருளால் அந்தப் பெரும் அதிசயம் நடந்தது, தன்னலமின்றி எல்லா ம்மகளுக்கும் அந்தக் கரிமுகன் போல அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருந்தார் புருகண்டி முனிவர்.
அதை அறிந்த இந்திரன் அம்முனிவரிடம் வந்து அதனைக் கேட்டான். முனிவரும் கற்பக மரத்தை அவனிடம் கொடுத்தார். அது சொர்க்கலோகம் சென்றது.
அவரை உரிய நாளில் விநாயகப் பெருமானே அணைத்து தன் அருகில் சேர்த்து பிறப்பில்லா வரத்தை வழங்கினார், அந்தப் புருகண்டி முனிவர் எக்காலமும் விநாயகப் பெருமானுக்குப் பெரிய சாட்சி.
இப்படி விநாயகப் பெருமானின் பெரும் அரும் குணங்களைச் சொல்லும் முனிவர் அவர் ஓங்கார வடிவம் என்பதையும் சொல்கின்றார்.
ஓங்காரம் என்பது ஓம் எனும் பிரணவ மந்திரம், இந்த உலகமும் பிரபஞ்சமும் அதில்தான் உருவாகி இயங்குகின்றது, அந்த நுட்பமான அலைதான் இந்தப் பிரபஞ்சத்தை அதன் உயிர்களைப் படைப்புக்களை இயக்குகின்றது.
அ=உ+ம் எனும் அந்த ஓம் எனும் பிரணவமே இங்கு அடிப்படை, ஓங்கார நாதம் என்பது அதுதான்.
விநாயகப் பெருமான் அந்த ஓங்கார தத்துவத்தின் வடிவம் அல்லது மூலம், அவரின் உருவம் கூட அந்த யானை தலை கூட ‘ஓ’ எனும் வடிவில் அமைந்திருப்பதைக் காணலாம்.
அ உ எனும் எழுத்துத்தான் இந்தப் பிரபஞ்சத்தின் தொடக்கம். அதைத்தான் “அகர உகர எழுத்தெல்லாம்” எனச் சொன்னான் வள்ளுவன்.
அந்த வள்ளுவன் “ஆதிபகவன்” எனச் சொன்னது விநாயகப் பெருமானே என்பதும் ஒரு ஆய்வு, ஆதி என்றால் தொடக்கம், மூலம் எனப் பொருள், “பக” என்றால் எல்லாமுமானவன் கலந்தவன் எனப் பொருள்.
எங்கும் வீற்றிருக்கும் ஆதிமூலம் என்பது அதன் பொருள், அது முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானைக் குறிக்கும் வரி, எல்லாக் காரியமும் விநாயகப் பெருமானை வழிபட்டு தொடங்கும் இந்துமரபில் வள்ளுவனும் அந்த விநாயகனை வழிபட்டே தன் குறளைத் தொடங்கினான்.
இப்படியான விநாயகப் பெருமானின் சிறப்பை நுணுக்கமாக இப்பாடலில் சொல்கின்றார் காசிப முனி.
அவர் வேதங்களால் வணங்கப்படும் வேத விநாயகர், தன் காயத்ரி மந்திரத்தை சொல்லி வணங்கும் அடியார்மேல் இறங்குபவர், விப்ரதன் எனும் பக்தனைத் தன் வடிவமாகவே மாற்றி அவனுக்கு துதிக்கை வர செய்து தன் வரம்போல் கற்பக மரத்தை உருவாக்கச் செய்து தன்னில் ஒருவனாக மாற்றிக்கொள்பவர்.
அவர் ஓங்கார வடிவமானவர், இந்தப் பிரபஞ்சத்தின் தொடக்க்கமும் இயக்கமும் அவர்தான், அப்படிப்பட்டவர் புருகண்டி முனிவரை தன் வடிவில் மாற்றினார். அந்த வடிவில் தன்னைக் காட்டினார், அவரின் வள்ளன்மையில் தன் பெரும் வல்லமையினை கொடைத்திறத்தை காட்டினார், அந்த ஓங்கார நாதன் அவனை நம்பி வேண்டும்போது நம்மிலும் குடிகொள்வான். அந்நேரம் நாம் அவராகக் காட்சியளிப்போம் எனச் சொல்லி அந்த வரத்தை கேட்டுப் பாடுகின்றார் காசிப முனிவர்.
விநாயகர் அனுபூதி : 39
“உம்பர் புகழும் உறுதிப் பொருளே!
தும்பிச் சிரனே! தொழுதேன்: தொழுதேன்:
நம்பும் எனைநீ நழுவ விடாமல்
அம்பொன் கரத்தாய் எனைஆண்(டு) அருளே”
பாடல் இப்படிப் பிரிந்து வரும்.
“உம்பர் புகழும் உறுதிப் பொருளே
தும்பிச் சிரனே தொழுதேன் தொழுதேன்
நம்பும் என்னை நீ நழுவ விடாமல்
அம்பொன் கரத்தாய்
எனை ஆண்டு அருளே”
“தேவர்கள் புகழும் விநாயகப் பெருமானே, எந்நிலையிலும் உறுதியான தெய்வமே, தும்பிகையோடு கூடிய தலையினை உடையவனே, உன்னை வணங்குகின்றேன், உன் கரத்தால் என்னை நீ விடாமல் பிடித்துக் கொள்வாயாக, அந்தத் தங்கக் கரத்தால் என்னைத் தாங்கி வழிநடத்துவாயாக” என்பது பொருள்.
விநாயகப் பெருமான் தேவர்களின் பலம், தேவர்களின் கடைசிப் புகலிடம் அவர்தான். சிவன் முதலான பெரும் தேவர்கள் கூடக் கடைசியில் அவரிடமே அடைக்கலமாவார்கள், அவர்தான் எல்லாப் பெரிய ஆபத்திலிருந்தும் அவர்களைக் காப்பார்.
அவர் யானை முகமுடையவர், யானையின் பலம் அதன் துதிக்கை. அந்தத் துதிக்கையினால் தன்னை நம்பும் எல்லோரையும் அது காக்கும், அப்படித் தன்னிடம் அடைக்கலமாகும் எல்லா அடியார்களையும் காப்பவர் விநாயகப் பெருமான்.
அப்படிப்பட்டவர் தன் பொற்கரத்தால் தன்னைக் காக்க வேண்டும் என மன்றாடுகின்றார் காசிப முனி.
இங்கு அவர் பொற்கரம் எனச் சொல்வதில்தான் பாடலின் பொருள் அடங்கியுள்ளது. அதாவது, பொற்கரம் கொண்ட விநாயகர் எனச் சொல்லப்படுபவர் விக்ன விநாயகர்.
விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் விக்ன விநாயகர் வடிவமும் ஒன்று. அங்கே அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.
பொன்நிற மேனியராக சங்கு, கரும்புவில், புஷ்பபாணம், கோடரி, பாசம், சக்கரம், கொம்பு, மாலை, பூங்கொத்து, பாணம் முதலியவற்றைத் திருக்கரங்களில் கொண்டு விளங்குவார்.
அந்த விக்ன விநாயகக் கோலத்தை இங்குப் பாடி வணங்கி, அந்த விக்ன விநாயகர் தரும் வரங்களை எல்லாம் மறைமுகமாகப் போதிக்கின்றார்.
விக்ன விநாயகரை நவமியில் வழிபடுவார்கள். சதுர்த்தி வழிபாடு பெரும் பலன் தருவது போல இந்த நவமியில் விக்ன விநாயகரை வழிபட்டால் பெரும் பலன் கிடைக்கும்.
அவரை ஏன் நவமியில் வணங்க வேண்டும் என்பதற்குச் சில காரணங்கள் உண்டு.
நவமி என்பது வெற்றியினைத் தரும் வழிபாட்டைக் கொண்ட நாள், இராமநவமி அப்படியானது. இன்னும் ஆழமான தாத்பரியமெல்லாம் உண்டு.
நவமி திதியில் வழிபட்டால் காவல் தெய்வம், எல்லை தெய்வ அருள் கிடைக்கும். இன்னும் சரஸ்வதி அருள் கூடும். அதாவது, காவலும் அறிவும் தெளிவும் கிடைக்கும்.
இதை இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் விக்ன விநாயகரை நவமி திதியில் வழிபட்டால் இராகு கேது வில்லங்கம் இன்னும் சனி சந்திரன் சேர்க்கை போன்ற தடைகள் விலகும்.
சனி எந்த கிரகத்துடன் சேர்ந்திருந்தாலும் தடை தரும். சந்திரனோடு சேர்ந்திருந்தால் மனக்குழப்பம் தரும், அங்கே தெளிவு இராது.
அப்படியே இராகு கேது எனும் கிரகங்கள் பல இடங்களில் முட்டுக்கட்டை இடுபவை, இவை இருக்குமிடம் பொறுத்து விக்னம் எனும் தடைகள் பெரும் சிக்கல்கள் வரும்.
விநாயகர் வழிபாடு இதனையெல்லாம் அகற்றும், விநாயகரைப் பணிவோர்க்கு சனி தொல்லை இராது. அப்படியே அவர் இராகு கேதுவினை தன் இடுப்பில் கட்டியிருப்பதால் அவர்களாலும் தொல்லை வாரா.
நவமியில் விக்ன விநாயகரை வழிபடுவோர்க்கு இச்சிக்கல் தீர்வதால் இராகு கேது சனி என எந்தக் கிரகத்தின் பாதிப்பும் தடையும் வராது. எல்லா விக்னமும் இந்த விநாயகரால் தீரும்.
அப்படித் தடைகள் நீங்கி சிந்திக்கும் திறனும் அறிவும் அதிகரிக்கும், அப்போது ஒருவன் வாழ்வே உச்சம் பெறும், அவன் தொட்டதெல்லாம் தங்கமாகும்.
இதைத்தான் அப்படி “பொற்கரம்” எனச் சொல்லி பாடுகின்றார் காசிப முனிவர்.
விநாயகரைப் பணிவோர்க்கு அறிவும் தெளிவும் வரும். தடைகள் அகலும். எல்லாச் செல்வமும் ஐஸ்வர்யமும் கைக்கூடும் என்பதைச் சொல்கின்றார்.
ஆழ கவனித்தால் அதிலுள்ள உண்மையும் உணரலாம். பிள்ளையார்பட்டி முதல் பல இடங்களில் விநாயகரின் பக்தர்களைப் பாருங்கள், அவர்கள் பெரும் செல்வம் பெற்றவர்களாகவே இருப்பார்கள்.
அதிலும் நவமியில் வழிபட்டால் எல்லா வளமும் கொழிக்கும்.
அந்த விக்ன விநாயகரைப் பாடித் தொழுகின்றார் காசிபர், நம்மையும் நவமியில் தொழுது பலனடையச் சொல்கின்றார்.
நவமியில் “ஓம் விக்னராஜாய நம” எனப் பலமுறை சொல்லி அவரை வணங்கினால் எல்லா நலமும் கைக்கூடும்.
விக்ன விநாயகருக்கான ஸ்லோகம் இதோ.
“ௐ விக்னேஷூ பூர்வத꞉ பாது கணநாதஸ்து தக்ஷிணே .
பஷிசிமே கஜவக்த்ரஸ்து உத்தரே விக்ன நாசன꞉”
“யஷ்வருணோதி படதி த்விஜோத்தமோ விக்னராஜகவசம் தினே தினே .
புத்ரபௌத்ரஸுகலத்ரஸம்பத꞉ காமபோகமகிலாம்ஶ்ச விந்ததி”
“யோ ப்ரஹ்மசாரிணமசிந்த்யமனேகரூபம்
த்யாயேஜ்ஜகத்ரயஹிதேரதமாபதக்னம் .
ஸர்வார்தஸித்திம் லபதே மனுஷ்யோ
விக்னேஶஸாயுஜ்யமுபேன்ன ஸம்ஶய”
இதனை விநாயகர் சப்தகம் எனும் பாடலும் சொல்கின்றது, இதையும் பாடித் துதிக்கலாம். அனுதினமும் பாடலாம் என்றாலும் சதுர்த்தியிலும் நவமியிலும் இது விசேஷம்.
“குருவே பரமன் கொழுந்தே பணிந்தேன்
குவலயம் போற்றும் கண நாதா!
வருவாய் நினைவில் வந்தெனை ஆள்வாய்
வடிவேலனின் சோதரனே!
அருள்வாய்! உனையே அனுதினம் பணிவேன்
அன்னை பராசக்தி அருள்மகனே!
திருமால் மருகா! திருவடி சரணம்!
தீன ரக்ஷகனே கணநாதா.
ஆனையின் அன்பன் அழகு முருகனின்
அண்ணனாய் உலகில் அவதரித்தாய்
ஆனாமுகத்தோடு ஐங்கரங்கொண்டதோர்
அற்புதவடிவே! கணநாதா!
யானென தென்னும் எண்ணங்கள் நீங்கி
இகபரசுகமதை எனக்களிப்பாய்!
யானுனை என்றும் இராப்பகல் தொழுதேன்!
என்துயர் களைவாய்! கணநாதா!
குஞ்சரனே எழிற் குஞ்சரிநாதனாம்
குகசரவணபவ சோதரனே!
வெஞ்சமரெதிலும் வெற்றியே தருவாய்!
வேழமுகத்தோய் கணநாதா!
அஞ்சிடும் அன்பருக் கபயம் அளிப்பாய்!
அரவணைத் தெனையும் ஆண்டருள்வாய்!
பஞ்சமி!பைரவி!பார்வத புத்திரி!
பார்வதி மைந்தா! கணநாதா!
வல்லபை நாதா! விக்ன வினாயகா
வாழ்த்திப் பணிந்தேன் உன்பதமே:
வல்வினை எல்லாம் வலிமை இழந்தே
வாடிடச் செய்வாய் கணநாதா!
தொல்வினை யாலிவன் துயருறும் அடியேன்
துன்பமெலாம் நீ துடைத்திடுவாய்!
அல்லொடு பகலும் அனவரதமும் உன்
அடியினை தொழுவேன் கணநாதா!
வானொடு நீரும் வளியும் தீயும்
வையகம் யாவும் உன் வடிவே!
மானிட வாழ்வை மகிழ்வுறச் செய்வாய்
மங்கலப் பொருளே கணநாதா
தேனோடு பாலும் தெங்கோடு பழமும்
தெவிட்டா அமுதம் தினம் படைப்பேன்
ஊனொடு உயிரும் உணர்வும் புரப்பாய்!
உன்னடி தொழுதேன் கணநாதா!
ஓமெனும் வடிவே உன் வடிவாமென
உலகிற்கெல்லாம் நீ உணர்த்திடுவாய்!
ஆம் எனச் சொல்வாய்!அன்னை குமாரா
ஆதரித்தருள் வாய்! கணநாதா!
ஓமெனும் ஒலியில் உன்குரல் கேட்டே
உளமகிழ்ந்துள்ள புகழ் பாடிடுவேன்
ஓமெனும் பொருளே உமையவள் பாலா!
ஒரு பரம் பொருளே! கணநாதா
சங்கரன் மகனே! சஞ்சலம் தீர்ப்பாய்
சக்தி குமாரா! கணநாதா!
ஐங்கரனே! உன் அடியினை தொழுதேன்
அடைக்கலம் நீயே கணநாதா!
சங்கரித்திடுவாய் சங்கடமெல்லாம்
சம்புகுமாரா! கணநாதா!
சங்கரி மைந்தா! சந்ததம் பணிவேன்
சரணம்! சரணம்! கணநாதா!”
விநாயகரின் அருளில் எல்லாம் நலமாகும். அவரை அண்டி நிற்போர்க்கு அவரே காவலாக, ஞானமாக, பலமாக அறிவாக, செல்வமாக வருவார், பொன்னில் மிதக்கும் வாழ்வைத் தருவார். பொன் போல மின்ன வைப்பார் அதைத்தான் பாடுகின்றார் காசிப முனிவர்.
விநாயகர் அனுபூதி : 40
“கவிஞன் புகலும் கவின்ஆர் தமிழ்உன்
செவிஏ றியும்நீ திருகல் சரியோ?
புவிதான் புகழும் புழைக்கைய! கரம்
குவிவேன்: மகிழ்வேன்: குறைதீர்த்தருளே”
பாடல் இப்படிப் பிரிந்து வரும்.
“கவிஞன் புகலும் கவின்ஆர் தமிழ் உன்
செவி ஏறியும் நீ திருகல் சரியோ?
புவிதான் புகழும் புழைக்கைய கரம்
குவிவேன்: மகிழ்வேன்: குறைதீர்த்தருளே”
” எம்பெருமானே! அழகான தமிழ்ச்சொற்கள் கொண்ட எழிலான பாடல்களால் உன்னைப் பாடியும் நீ இன்னும் பாராமுகமாய் இருப்பது தகுமோ. புவியெல்லாம் போற்றும் தும்பிக்கையினை உடையவனே, கரம்குவித்து உன்னை வணங்கி மகிழும் என் குறையினைத் தீர்த்தருளே” என்பது பாடலின் பொருள்.
விநாயகப் பெருமான் முழுமுதல் கடவுள்; அவர் ஞானத்தின் தெய்வம்; அவரின் ஐந்து கரங்களில் ஒன்று எழுத்தாணி கொண்டிருக்கும்; அதாவது எழுதுபவர்க்கும் கவிஞர்களுக்கும் அவர் பெரும் ஞானம் தருபவர் எனப் பொருள்.
அவரிடமிருந்தே எல்லாப் பாடலும் கவிதையும் செய்யுளும் காவியமும் தோன்றும். இதனாலே எல்லாக் காவியங்களும் அவரைத் தொழுது பாடப்பட்ட பின்பே துவங்கும்.
அவரே மகாபாரதம் எனும் காவியத்தை வியாசர் சொல்ல சொல்ல எழுதினார்; அவரே எல்லா ஞானத்தையும் வியாசருக்குப் போதித்தார்.
விநாயகப் பெருமானை வணங்கினால் கவிதைகள் அர்த்தமுள்ளதாய், அழகுள்ளதாய் அருவிபோல் கொட்டும். அதனாலே அவருக்குக் “கவி ராட்சரர்” எனும் பெயரும் உண்டு.
விநாயகரை வணங்கியே கபிலர், ஒளவையார் என எல்லாக் கவிஞர்களும் அழியாப் புகழ் அடைந்தார்கள். எல்லாப் பண்டைய ரிஷிகளும் கவிஞர்களும் அவரைத் தொழுதே பாடினார்கள்.
அவரே தமிழ்வார்த்தைகளை அழகுறத் தருபவர், அவரின் வரமே அழகான தமிழைத் தரும். முருகப்பெருமான் தமிழைத் தருபவர், அவரின் அண்ணனான கணபதிக்கும் அதே வரம் உண்டு.
கச்சியப்பர் பாடிய கந்த புராணத்தில் வரும் பாடல்கள் விநாயகப் பெருமானின் அருளைச் சொல்கின்றன.
“திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்
உச்சியின் மகுடம் மின்ன ஒளிர்தர நுதலின் ஓடை
வச்சிர மருப்பின் ஒற்றை மணிகொள்கிம் புரிவ யங்க
மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகங்கொண் டுற்ற
கச்சியின் விகட சக்ரக் கணபதிக் கன்பு செய்வாம்
மண்ணுள கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுற
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்”
பரஞ்சோதி முனிவர் தன் திருவிளையாடல் புராணத்தின் தொடக்கத்தில் விநாயகரைப் போற்றுகின்றார்
“சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர
முத்தியான முதலைத் துதிசெயச்
சுத்தியாகிய சொற்பொருள் நல்குவ
சித்தி யானைதன் செய்ய பொற்பாதமே
உள்ளமெனுங் கூடத்தில் லூக்கமெனுந்
தறிநிறுவி யுறுதி யாகத்
தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி
யிடைபடுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்
களித்துண்டு கருணை யென்னும்
வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை
நினைதுவரு வினைகள் தீர்ப்பாம்”
விருத்தாசல புராணம் சொல்கின்றது.
“திருவுங் கல்வியுஞ் சீருந் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவ மாய்நம துள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்
ஒருமலையாற் புரமலையு மொருமைந்தன் றிருமைந்தன்
இருமலையுந் தும்மலையு மெதிர்மலையும் வினைமலையும்
பொருமலையும் விம்மலையும் பொம்மலையும் புடைத்தருவிக்
கருமலையும் பெருமலையிற் கைம்மலையைக் கைதொழுவாம்”
காஞ்சி புராணம் சொல்கின்றது.
“பண்ணியமும் வெண்கோடும் பாசாங் குசப்படையும்
நண்ணிய செங் கைத்தலத்து நாதா! ஒரு கோட்டுத்
தண்ணிய வெண்பிறைத் தாழ்சடையாய்! மெய்யடியார்
எண்ணிய எண்ணியாங் கீந்தருளும் வள்ளலே!
விழிமலர்ப் பூ சனையுஞற்றித் திருநெடுமால்
பெறுமாழி மீள வாங்கி
வழியொழுகாச் சலந்தரன் மெய்க் குருதிபடி
முடைநாற் றமாறு மாற்றால்
பொழிமத நீர் விரையேற்றி விகடநடப்
பூசைகொண்டு புதிதா நல்கிப்
பழிதபுதன் றாதையினும் புகழ்படைத்த
மதமாவைப் பணிதல் செய்வாம்”
கோவில் புராணம் இன்னும் சொல்கின்றது.
“தன்னோங்கு மலரடியும் தளிரோங்கு சாகைகளும்
மின்னோங்கு முகக்கொம்பும் விரவியகண் மலர்களுமாய்
மன்னோங்க நடமாடு மன்றோங்கு மதிற்குடபாற்
பொன்னோங்கன் முன்னோங்கும் பொற்பமர் கற்பகம் போற்றி”
ஒளவையார் விநாயகரிடம் உரிமையாய் கேட்கின்றார்.
“பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் – கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூ மணியே – நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா”
அதிவீரராம பாண்டியன் வேண்டுகின்றார்.
“பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே”
உலகநாத பண்டிதர் பாடுகின்றார்.
“கலைகளாய் வருவான் கரிமுகன்!
உலக நீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு”
சிவபிரகாச சாமிகள் பாடுகின்றார்.
“நன்னெறி காட்டுபவன்
மின் எறி சடாமுடி விநாயகன் அடி தொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே”
“காரண காரியங்களின் கூட்டு அறுப்போர் யோகக்
கருத்து என்னும் தனித் தறியில் கட்ட, கட்டுண்டு
ஆரணம் ஆம் நால் கூடத்து அணைந்து நிற்கும்
ஐங் கரத்து ஒரு களிற்றுக்கு அன்பு செய்வாம் –
தனித்தனியே திசை யானை தறிகள் ஆக,
ஈயத் தம்பம் பல நாட்டி, ஒரு கூடத்தே
அனைத்து உலகும் கவித்ததெனக் கவித்துநிற்கும்
அருட் கவிகைக் கலிப் பகைஞன் வாழ்க என்றே”
என்பது ஜெயங்கொண்டார் பாடல், அவர் தன் பிரசித்தியான கலிங்கத்து பரணியினை இப்படி வேண்டி தொடங்குகின்றார்.
குற்றால குறவஞ்சி தந்த திரிகூட ராசப்ப கவிராயர் தன் குறவஞ்சி காவியத்தின் தொடக்கமாக வேண்டுகின்றார்.
“ஐந்து கை வலான் காவலானே!
பூ மலி இதழி மாலை புனைந்த குற்றாலத்து ஈசர்
கோ மலர்ப் பாதம் போற்றி, குறவஞ்சித் தமிழைப் பாட,
மா மதத்து அருவி பாயும் மலை என வளர்ந்த மேனிக்,
கா மலி தருப்போல் ஐந்து கை வலான் காவலானே”
“கருமால் அறுக்கும் கணபதி சரணம்!
திருமா லறியாச் சேவடி யாலென்
கருமா லறுக்கும் கணபதி சரணம்
முக்தி நலம் சொன்னவன், தூய் மெய்ச் சுகத்தவன்!
முன்னவனே யானை முகத்தவனே முத்தி நலம்
சொன்னவனே தூய் மெய்ச் சுகத்தவனே மன்னவனே
சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின் தாள் சரண்”
என்பது வள்ளலாரின் தொடக்கப் பாடல்.
“கலை நிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக கணபதி சரணம் சரணம்
தலைவ நின் இணையடி சரணம் சரணம்
சரவண பவ குக சரணம் சரணம்
சிலைமலை யுடையவர் சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவரு மொருபரை சரணம் சரணம்
உமைசிவை யம்பிகை சரணம் சரணம்”
என்பதும் வள்ளலாரின் உருக்கமான வரிகளே.
இவை எல்லாம் வெகு சில உதாணங்களே. முழுவதும் எழுதினால் ஏடுதாங்காது. விநாயகப் பெருமான் தமிழைத் தருவார். பெரும் காவியம் அவர் தந்த தமிழால் நிலைக்கும் என்பதற்கு இவையெல்லாம் இந்தக் கவிஞர்களின் வரி எல்லாம் சாட்சிகள்.
இதற்கு ஜோதிட ரீதியாகவும் விளக்கம் உண்டு.
ஒருவன் தமிழ் மொழியில் சிறந்து விளங்க சந்திரனின் அருள் பரிபூரணமாக இருக்கவேண்டும். சந்திரனின் ஆட்சி வீடான கடகமும், உச்ச வீடான ரிஷபத்தையும் லக்னமாகவோ ராசியாகவோ கொண்டிருந்தால் தமிழ் அவர்களுக்கு அருவிபோல் கொட்டும்.
எல்லாப் பிரசித்தியான தமிழ் அறிஞர்கள் கவிஞர்களின் ஜாதகத்தில் இது உண்டு.
கடகம்-விருச்சிகம்-மீனம் ஆகிய திரிகோண ராசிகளில் பிறந்தவர்கள் தமிழில் சிறந்து விளங்குவார்கள்.
ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தமிழ் வசமாகும்.
ஜாதகத்தில் சந்திரன், புதன் இன்னும் சந்திரன் சுக்கிரன் சேர்க்கை உடையவர்கள் தமிழ் புலவர்களாகவும், கவிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும் புகழ்பெறுவர்.
அனல் தெறிக்கும் தமிழ் பேச்சாளர்கள் மற்றும் வசன கர்த்தாகளின் ஜாதகத்தில் சந்திர மங்கள யோகம் போன்ற சந்திர செவ்வாய் சேர்க்கைகள் இருக்கும்.
இதெல்லாம் ஏன் சொல்லப்படுகின்றது என்றால் ஏன் அவசியம் என்றால் காரணம் உண்டு. சந்திரன் தன் கர்வத்தால் விநாயகரிடம் சாபம்பெற்று பின் தவற்றை உணர்ந்து விமோசனமும் பெற்றான்.
சந்திரன் விநாயகருக்குக் கட்டுபட்டவன், அவர் சொன்னதைச் செய்பவன். விநாயகப் பெருமானின் அருள் யார்மேல் உண்டோ அவர்களுக்குச் சந்திரனின் பரிபூரண அருளும் உண்டு.
சந்திரன் அருள் கொட்டும் நேரம் தமிழும் தமிழ் காவிய அறிவும் இன்னும் பல செல்வங்களும் ஒருவனுக்கு கடாட்சமாகக் கிடைக்கும்.
இதைத்தான் இப்பாடலில் சொல்லி, சந்திரனின் அருளைப் பெற்றுத்தருபவர் விநாயகர், அவரைத் தொழுதால் சந்திரனின் பெரிய கொடையில் தமிழும் இன்னும் பலவும் கிடைக்கும். அது மிகப்பெரிய நிறைவினை, அனுபூதி எனும் மாபெரும் முழு நிறைவினைத் தரும். விநாயகப் பெருமான் அதை அருள்வார் எனப் பாடுகின்றார் காசிப முனி.