பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலய ஆஷாட ஏகாதசி.

பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலய ஆஷாட ஏகாதசி : 01

பாரதம் என்பது கோவில்களின் நாடு, இந்த நாட்டின் ஒரே அடையாளம் அந்த ஆன்மீக ஆலயங்கள், அவை வெறும் கற்பனை அல்ல, காரணமில்லாமல் உருவானவை அல்ல, அவை ஒவ்வொன்றும் இந்த பிரபஞ்ச சக்தியே அந்த மகா பரம்பொருளே தேர்ந்து கொண்ட ஆலயங்கள்

மக்களுக்கும் நாட்டுக்கும் காலம் காலமாய் அருள் வழங்க அவை தாங்களே இவற்றை தேர்நதெடுத்து கொண்டன, அவைகள் இந்த மக்களுக்கும் நாட்டுக்கும் காலம் காலமாய் அருள்பாலித்து சூட்சுமமாய் காவல் இருக்கின்றன, அவற்றின் தாத்பரியமும் அருளும் மிக மிக சிலிர்ப்பானவை, ஆச்சரியமானவை, ஆழமாக சிந்திக்க சிந்திக்க ஆச்சரியமும் சிலிர்ப்பும் தருபவை

அவற்றில் இன்று பாண்டுரங்கன் என கண்ணன் குடியிருக்கும் பண்டரிபுரம், இன்று “ஆஷாட ஏகாதசி” என பெரும் கொண்டாட்டமும் ஊர்வலமும் நடக்கும் , தேசமே கூடி கொண்டாடும் அந்த பாண்டுரங்கன் ஆலயம்

அதன் வரலாறு பகவானால் தொடங்கபட்டது, அது எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று

புராண காலத்தில் அந்த இடம் பீமா ஆற்றின் சமீபமாக லோக த‌ண்டம் என அழைக்கபட்ட இடத்தில் ஜன்னு எனும் முனிவர் இருந்தார் அவர் மனைவி சாத்தகி. நீண்ட காலம் குழந்தை இல்லா முனிவர் பகவானை வேண்டி ஒரு மகனை பெற்றார், அவன் பகவான் அருளில் பிறந்ததால் அவனுக்கு “புண்டரீகன்” என பெயரிட்டார்

புண்டரீகம் என்றால் தாமரை என பொருள், பத்மன் எனும் பெயரில் அவனுக்கு அந்த பெயரை இட்டார்கள்

அவன் தெய்வத்தின் அருளில் பிறந்தான் என நம்பிய அவர்களுக்கு அவன் வளர வளர அதிர்ச்சி காத்திருந்தது, அவன் இயல்பிலே முரடனும் துஷ்டனுமாயிருந்தான், அகம்பாவமும் இன்னும் பல துர்குணங்களும் அவனுக்குள் குடிகொண்டு ஆட்டமிட்டன‌

சிறுகுழந்தை கோபமோ இதர காரியமோ செய்தால் ரசிக்கலாம் அதையே வளர்ந்தபின்னும் அவன் செய்தால் அது விபரீதமாகும், துள்ளி குதிக்கும் கன்றை ரசிக்கலாம் ஆனால் கொம்போடு தெருவில் சீறிபாய்ந்து வரும் காளை ஆபத்து

இவனின் துர்நடத்தை ஊரில் விவகாரமாயிற்று, நல்ல மகனை பெறாத பெற்றோர்க்கு பெருமை இல்லை என்பதால் முனிவரும் மனைவியும் பெருமை இழந்தனர் ஒரு கட்டத்தில் இவர்கள் செய்த பாவமே இப்படி குழந்தையாய் பிறந்தது என ஊர் சபிக்கவும் தொடங்கிற்று

அவனுக்கு திருமணம் செய்துவைத்தும் அவன் திருந்தவில்லை, எல்லா பாதகங்களையும் பாவங்களையும் தன் விருப்பபடி செய்து தன் மனம்போன போக்கில் வாழ்ந்து கொண்டிருந்தவன், ஒரு நாள் அவமானம் தாங்காமல் பெற்றோர் சொன்ன அறிவுரையில் ஆத்திரபட்டு மனைவியோடு வெளியேறி வேறு ஊருக்கு சென்றுவிட்டான்

மகனால் தீரா வேதனை அடைந்த அவர்கள் இது தங்கள் பூர்வ கர்ம பலன் என எண்ணி இனி காசியில் சென்று வாழ்ந்து அங்கே மறைந்துவிடுவது என காசிக்கு கிளம்பினார்கள்

சில மாதம் கழித்து ஊருக்கு வந்த புணடரீகம் தாய் தந்தை இருவரும் காசிக்கு சென்றிருப்பதை அறிந்து கொதித்தான், எப்போதுமே அகங்காரிகள் பொல்லாதவர்க்கு தங்களை யாரும் குறை சொன்னாலோ இல்லை வேறு எதுவும் சொன்னாலோ பொறுக்காது

அப்படி தகப்பன் தாயினை தவிக்கவிட்டவன் எனும் அவப்பெயரை களைய அவன் அவர்களை ஆத்திரமாய் தேடினான், காசிக்கே அவர்களை தேடி செல்ல விளைந்தான்

செல்லும் வழியில் ஒரு சத்திரத்த்தில் தங்கினான், அப்படியே அப்க்கம் சுற்றி பார்த்தவனுக்கு குக்கூட முனி என்பவரின் ஆஸ்ரமம் இருந்தது தெரிந்தது, அவரின் குடில் பக்கம் சென்றவன் அங்கு மானுடன் அளவளாவி கொண்டிருந்த முனிவரிடம் “காசிக்கு வழி எப்படி?” என கேட்டான்

முற்றும் உணர்ந்த முனிவரோ அவனை உற்றுநோக்கிவிட்டு “எனக்கு அது தெரியாது” என்றார்

“காசிக்கு வழி தெரியாத நீரெல்லாம் முனிவரா?” என எகதாளம் செய்தான் அவன்

அவரோ “காசி நல்லவர் செல்லுமிடம், தன் பாவம் உணர்ந்து மன்னிப்பு கோரி செல்வோருக்கான இடம், உனக்கு அங்கென்ன வேலை? , உனக்கு அந்த வழியினை சொன்னால் பாவம் எனக்கல்லவா?” என்றார்

“என்ன சொன்னீர்?” என கொதித்தான் புண்டரீகன், சுவாமியின் சீடர்கள் அப்பக்கம் வந்ததால் அவனால் ஒன்றும் சொல்லமுடியவில்லை முனிவரும் தன் வழியில் சென்றுவிட்டார்

இதை அவமானமாக கருதியவன் இரவில் அவருக்கு தீங்கு செய்ய முனைந்தான், அதன்படி இரவில் அவர் ஆஸ்ரமம் சென்று எப்படி தீங்கிழைக்கலாம் தீவைத்து எரித்துவிடலாமா எனும் அளவு யோசித்து கொண்டிருந்தான்

அந்நேரம் அங்கே மூன்று பெண்கள் வந்தார்கள் காண சகிக்காத கோலத்தில் முழு அழுக்குடன் கரியேறிய தோற்றத்தில் அவர்கள் வந்தார்கள்

முனிவர் ஆசிரமத்தில் நள்ளிரவில் பெண்களா? அதுவும் அழுக்கேறிய இப்பெண்களா என குழம்பியவன் மறைந்திருந்து பார்த்து கொண்டிருந்தான்

அவர்களில் ஒருத்தி வீட்டை சுத்தம் செய்தாள், ஒருத்தி முனிவரின் பாதத்தை நீரிட்டு கழுவி வணங்கினாள் ஒருத்தி வாசலை சுத்தபடுத்தி கோலமிட்டு எல்லாமும் அழகு செய்தாள், முனிவர் குடிலின் பாத்திரம் முதல் எல்லாம் கழுவி அழகுபட வைத்தாள்

மூவரும் முனிவரை வணங்கிவிட்டு வெளிவந்தனர், அவர்களை இப்போது கூர்ந்து நோக்கிய புண்டரீகன் வியந்து போனான் காரணம் மூவரும் தெய்வீக அழகுடன் மின்னும் தேஜஸுடன் வந்தார்கள், அவ்வளவு அழகான பெண்கள் பூமியில் இருக்க வாய்ப்பில்லை எனும் அளவுக்கு அவன் வியந்து அவர்களை கண்டான்

“யார் நீங்கள்?” என பின்னால் ஓடினான், அவர்கள் அவனை கோபத்துடன் திரும்பி பார்த்தார்கள், அவர்கள் பார்வையில் வெறுப்பும் கோபமும் இருந்தது, அவர்களில் ஒருத்தி சொன்னாள்

“நாங்கள் கங்கா, யமுனா, சரஸ்வதி எனும் புண்ணிய நதிகள். நாள்தோறும் மக்கள் எங்களிடம் தரும் பாவத்தால் நாங்கள் அவ்வளவு அழுக்காகின்றோம், கோரமாகின்றோம். அந்த பாவத்தை முனிவருக்கு சேவகம் செய்து இரவில் கழிப்போம், ஒவ்வொரு நாளும் இதனால் நாங்கள் சுத்தமாவோம்” என்றாள்

அவன் ஏதோ சொல்ல வரும்போது அவள் சொன்னாள் “என்ன கேட்க வருகின்றாய் என்பது தெரியும், அப்படி முனிவர் என்ன புண்ணியம் தவம் செய்துவிட்டார் என நினைக்கின்றாய், அவர் தன் தாய்தந்தையரை தெய்வமென வணங்குபவர், பெரிய தவசி என்றாலும் தன் கடமையில் இருந்து தவறியதில்லை

தினமும் தன் தாய் தந்தையினை பூஜித்து அவர்கள் பாதம் கழுவி நீரை அருந்தி தன் தாய் தந்தை கையால் ஆசிவாங்கி தன் நாளை துவங்குவார், அவர்களுக்காகவே எல்லா வேலையும் செய்வார், அவர்களை தெய்வமென கொண்டாடுவார், அவர்களுக்கு அவர் செய்யும் பணிவிடைதான் பெரும் ஞானபலனை அவருக்கு கொடுத்திருக்கின்றது

தாய தந்தைக்கு சேவை செய்வது அவ்வளவு பெரிய புண்ணியம், அவ்வகையில் உலகிலே பெரும் பாவி நீ, உன் பாவம் எங்களை சேர்ந்தால் அதை முனிவரிடமே சேர்ப்போம் , அவர் அதை விரும்பாமல்தான் காசிக்கு உனக்கு வழிசொல்லவில்லை

ஆனால் நீ முன் ஜென்ம புண்ணியமிக்கவன், அதனாலே முனிவர் மகனாய் பிறந்தாய் இங்கே எங்களையும் கண்டு பேசிவிட்டாய். அந்த புண்ணியத்தின் பலனால்தான் இன்றும் உயிரொடு இருக்கின்றாய், அதை கொண்டு அடுத்த பிறப்புக்கான பாவத்தை சேர்க்காதே, உன் தாய் தந்தை இருக்குமிடம் நான் உரைப்பேன் அவர்களை அழைத்து சென்று புண்ணியத்தை சேர்த்துகொள்” என சொல்லி அவன் தாய் தந்தை இருக்குமிடம் சொல்லிவிட்டு மூவரும் சென்றுவிட்டனர்

அந்நேரம் அவன் மனம் அபப்டியே நொறுங்கியது, அதுவரை அவன் மனதில் இருந்த அந்த பெரும் மாய அகங்கார சுவர் தகர்ந்தது, அவன் அப்படியே பித்து பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான், தாய் தந்தை என்பதும் அவர்ளுக்கான கடமை என்பதும் அப்போதுதான் அவனுக்கு புரிந்தது

எவ்வளவு பெரிய கொடுமை செய்துவிட்டோம் என ஒவ்வொன்றாய் எண்ணியவனுக்கு பெரும் கண்ணீர் கொட்டிற்று, அந்த கண்ணீர் அவன் மனம் ஒரு நொடியில் மாறிற்று என்பதை காட்டிற்று, உடனே முனிவர் குடிசை நோக்கி விழுந்தவன் அவர் கால்பட்ட மண்ணை எடுத்து பூசிகொண்டு மடியிலும் முடிந்து கொண்டு காசி நோக்கி விரைந்தான்

காசியில் அவனை கண்டதும் பெற்றோர் நடுங்கினார்கள், இங்கும் அவமானம் தேடி தர வந்துவிட்டான் என அஞ்சி “எங்களை இங்கே நிம்மதியாக சாகவிடு”என கைஎடுத்து கும்பிட்டார்கள்

“அம்மா” என கதறி அவர்கள் காலடியில் விழுந்து வணங்கினான், முனிவர் கரத்தில் முகம் புதைத்து அழுதான், பெரும் மன்னிப்பை கோரினான், பிள்ளை திரும்பி திருந்தி வந்தால் எந்த பெற்றோர்க்கு மனம் மகிழாது?

அவர்கள் பெரும் பெரும் மகிழ்வு கொண்டு காசி விஸ்வநாதனை வணங்கினார்கள், அவன் கங்கையில் மூழ்கி “கங்கை தாயே ஒருமுறை மட்டும் என் பாவத்தை வாங்கிகொள், இதை முனிவரிடம் சேர்த்துவிடு. எப்படி அந்த முனி அவர் தாய் தந்தையரை கவனித்துகொள்கின்றாரோ, அப்படி இனி நானும் இவர்களை கவனிப்பேன் இதுதான் இனி என் வாழ்க்கை, என்னை திருத்திய நீ வாழ்க” என சொல்லி மூழ்கினான்

கங்கை அலை அடித்து அவனை வாழ்த்தி அனுப்பிற்று

வண்டியில் பெற்றோரை வைத்து அழைத்து வந்தான், ஊரை நெருங்கும்போது அவனே மாட்டுக்கு பதிலாக வண்டியினை இழுத்து வந்தான், வந்தவன் ஊர் அறிய தன் தாய் தந்தையர்க்கு ஊழியனானான்

காசியில் எல்லொர்க்கும் வாழ்வு முடியும் ஆனால் தங்களுக்கு வாழ்வு அங்குதான் தொடங்கிற்று என மகிழ்ந்த பெற்றோர் பகவானுக்கு நன்றி சொல்லி கொண்டே இருந்தார்கள், அவன் அவர்களுக்கு எல்லா சேவகமும் செய்தான்

இதே நேரம் நாரதர் வானலோகத்தில் சஞ்சரித்து பெருமாளிடம் வந்தார், வந்தவர் வழக்கமான கலகத்தை தொடங்கினார் “ம்ம் உம்மைத்தான் எல்லோரும் தேடி தேடி வருகின்றார்கள், உமக்கென்ன நீர் யாரைத்தான் தேடி செல்லும் அவசியம் உண்டு” என இழுத்தார்

நாராயணனும் “நான் தேடி செல்லும் அளவு உலகில் யாரும் உண்டா என்ன?” என கேட்டார்

“ஒருவன் இருக்கின்றான், புண்டரீகன் என பெயர். ஆனால் அவன் உங்களை அல்ல அவர்கள் பெற்றோரைத்தான் வணங்குவான், அப்போது தெய்வமே வந்தாலும் திரும்பி பார்க்கமாட்டான்” என்றார்

பாற்கடலில் எல்லோரும் மகாலட்சுமிக்கு ஆசைபட்டபோது அவளை எதிர்பாராமல் தனித்து நின்றவர் பகவான் அதனாலேதான் அவள் அவருக்கு மாலையிட்டார், அப்படியான பகவான் ஆச்சரியமாக கேட்டார் “யார் அவன்? நான் சென்றாலும் பார்க்கமாட்டானா?”

“ஆம் , வேண்டுமானால் சென்று பாரும்” என சொல்லிவிட்டு தன் போக்கில் சென்றுவிட்டார்

பகவான் அவனை காண விழைந்தார், அது ஒரு மழைக்காலம் அன்று ஆஷாட‌ ஏகாதசியாகவும் இருந்தது, ஆஷாடம் எனும் ஆனி ஆடிமாத காலம் அங்கு கடும் மழைகாலம், அப்போது இரவில் மழை கொட்டு உள்ளே தன் தாய் தந்தைக்கு சுடுநீர் வைப்பதும், குளிருக்கு இதமாக அவர்களுக்கு போர்த்திவிட்டு கால்களை அழுத்தியும் சேவகம் செய்து கொண்டிருந்தான்

அந்நேரம் வெளியில் வந்த பகவான் “புண்டரீகா” என குரல் கொடுத்தார்

அவனோ “இது என் தாய் தந்தைக்கு நான் சேவகம் செய்யும் நேரம், யாராக இருந்தாலும் காத்திருங்கள்” என சொன்னான்

பகவானோ “இங்கு மழையால் சேறும் சகதியுமாக கிடக்கின்றது, நான் எப்படி நிற்படு?” என கேட்டார்

“அப்படியா, இதோ இந்த செங்கல் மேல் நின்றுகொள்ளுங்கள், நான் கடமை முடித்து வருகின்றேன்” என செங்கல்லை இருளில் வீசிவிட்டு அவன் தாய் தந்தையிடம் சென்றுவிட்டான்

பகவான் அந்த செங்கல் மேல் ஏறி நின்றார், தாய் தந்தையர் உறங்கிபோனதும் அவன் வெளியில் நிற்பது யார் என காண வந்தான், வந்தவன் செங்கல் மேல் பகவான் கண்ணனும் ருக்மணியும் நின்று கொண்டிருந்தார்கள், இடுப்பில் கை வைத்தபடி புன்னகையுடன் நின்றிருந்தான் கண்ணன்

‘பகவானே, நீங்களா? உங்கள் பெயரை சொல்லியிருக்கலாமே நான் பெரும் பாவியாகிவிட்டேனே, உங்களையா செங்கல்மேல் நிறுத்தினேன்” என அழுதவன் சகதியிலே அவர் பாதம் வீழ்ந்தான்

“நான் செங்கலில் இருந்து வர மாட்டேன், காரணம் நீ என்னை இங்கே நிற்க சொல்லியிருக்கின்றாய், உன் குரலுக்கு நான் கட்டுபட்டவன் அதனால் நீயே எழுந்துவா” என்றார் கண்ணன்

அவன் முழங்காலில் நின்று கதறி அழுது என்ன பாக்கியம் செய்துவிட்டேன் என அவனை அறியாமல் ஆனந்த கண்ணீரில் கேட்டான் , அவர் சொன்னார்

“தாய் தந்தையர்க்கு செய்யும் சேவை எனக்கே செய்தது அல்லவா? இதவிட நீ என்ன புண்ணியம் தேடமுடியும், இரு தாய்க்கு சேவை செய்த புண்ணியமல்லவா என்னை காத்தது?” என்றான் கண்ணன்

புண்டரீகனிடம் வார்த்தை இல்லை, அவன் மனம் கரைந்தே போனது மனமற்ற நிலையில் கண்கள் பகவானை நோக்கி நிற்க அவர் கேட்டார், “உனக்கு இருவரம் தருவேன் கேள்”

அவன் சொன்னான் “கண்ணா, பீமா நதி தொலைவில் ஓடுகின்றது, எம் பெற்றோர் அங்கு செல்லமுடியவில்லை அவர்களுக்கு நீர் எடுத்து வரவும் எனக்கு கடினமாக உள்ளது, அந்த நதி என் வீட்டருகே என் பெற்றோருக்காய் ஓடட்டும்

இன்று செங்கல்மேல் நின்றிருக்கும் நீ எக்காலமும் இங்கு நின்று பக்தர்களை காக்க வேண்டும், எந்த பக்தனாயினும் அவன் யாராய் எப்படியான பாவியாய் இருந்தாலும் உன்னை கண்டு பணிந்தால் அவனை நீ காக்க வேண்டும், காலமெல்லாம் நீ இங்கு நின்று எல்லா மக்களுக்கும் அருள்பாலிக்க வேண்டும்” என கெஞ்சினான்

“இப்போதும் உனக்காக அல்லாமல் உன் பெற்றோர்க்கும் இம்மக்களுக்கும் நீ வரம் கேட்டதால் நான் மகிழ்ந்து அதனை தருகின்றேன், இங்கே என்னை தேடிவருவோர்க்கு எதுவும் குறைவுபடாது, நான் அவர்களை காப்பேன் என உறுதிதருகின்றேன்” என்றார்

அப்படியே அவர் அங்கு சிலையானார், அந்த இடம் புண்டரீகன் பெயரால் புண்டரீகம் என்றாகி பின் பண்டரிபுரம் என்றானது, அந்த கண்ணன் பாண்டுரங்கன் என்றானார்

பாண்டுரங்கன் என்றால் அவர்கள் மொழியில் நிறம் என பொருள்,ஆற்றங்கரையில் பல வண்ணத்தில் அவன் நின்றதால் பாண்டுரங்கன் என்றானார்

ரங்கோலி, ரங்கவல்லி எனும் பெயர்களெல்லாம் இந்த சாயலே, வண்ண வண்ண கோலம் ரங்கோலி என்பதெல்லாம் இந்த பெயர்களில் இருந்து வந்ததே

விட் என்றால் அவர்கள் மொழியில் செங்கல், பக்தனுக்காக செங்கல் மேல் நின்றதால் அவர் விட்டல் என்றுமானார், அப்பெயரும் நிலைத்துவிட்டது

பாரத கண்டத்தில் கண்ணன் தன் பக்தனை தேடி வந்து நின்ற இந்த ஆலயம் காலம் காலமாக சக்திமிக்க ஆலயமாக பக்தனுக்கு பரமன் ஓடிவரும் ஆலயமாக ஆலமரமாக நிற்கின்றது

காலத்தை தாண்டி நிற்கும் இந்த பகவானின் ஆலமரத்தில் எத்தனையோ ஞானபறவைகள் காலம் காலமாய் வாழ்ந்து அவரிலே கலந்தும் போயின‌

அந்த வரிசை மிக பெரிது, மதுரை திருவாரூரில் சிவனுக்காய் வாழ்ந்த அடியார்கள் போல இங்கு இந்த பாண்டுரங்கனுக்காய் வாழ்ந்து அவனின் சாட்சியாய் நின்ற அடியார்கள் ஏராளம்

அவர்கள் குரலுக்கு அவனும் ஓடிவந்து சேவகனாய் பணிந்து நின்று அவர்கள் பக்திக்கு சாட்சி சொன்ன வரலாறுகள் ஏராளம், பக்தனுக்காய் அவன் ஓடி வந்து நிற்பது அங்கு இயல்பு

அந்த பக்தர்கள் வரிசை மிக பெரிது என்றாலும் ஒரு சிலரை மட்டும் இங்கு காணலாம், இவர்கள்தான் “அபங்” எனும் பாண்டுரங்கன் மேலான உருக்கமான பாடல்களை தமிழக மாணிக்கவாசகர் போல அவர்கள் மொழியில் கொடுத்தார்கள், அவர்களை அடுத்து பார்க்கலாம்

(அடுத்த பாகம்)

பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலய ஆஷாட ஏகாதசி : 02

நாமதேவர் அவர்களில் முக்கியமானவர், பாண்டுரங்கன் நாமம் ஒன்றையே பாடியதால் நாமதேவர் என்றானார், கிட்டதட்ட தமிழக கம்பன் காலத்தில் இவர் வாழ்ந்தவர், பகவானின் நாமம் ஒன்றையே பஜனையாக அவனின் பெருமையினையே பஜனையாக் பாடியவர்

பகவானை தவிர எதுவும் அவருக்கு முக்கியமல்ல, இவருடன் பஜனையில் பாடிய பாகவதர் ஒருவர் மகாலட்சுமி யாகமெல்லாம் செய்து சித்தி அடைந்து லட்சுமி கொடுத்த கல்லை கொண்டு இரும்பை தங்கமாக்க தொடங்கினார், அதன்பின் பஜனைக்கு வருவதில்லை

பாகவதரின் நடவடிக்கைகளை கண்ணுற்ற நாமதேவர் அந்த பாகவதர் மனைவியிடமிருந்து தன் மனைவி மூலம் அந்த கல்லை வாங்கி ஆற்றில் வீசிவிட்டார்

கல் பறிபோனதில் கலங்கிய பாகவதன் ஆத்திரமாகி “ஏன் இப்படி செய்தீர்?” என சாடினான், நாமதேவர் பகவானை நோக்கி புன்னகைத்தார், வேகத்தில் பாண்டுரங்கனையும் மோசமாக வசவுபாடினான் பாகவதன்

“பார் பாண்டுரங்கா, பணத்தின் மேலான வெறி இவனை உன்னை திட்டும் அளவு மாற்றிவிட்டது, இவன் இன்னும் பாவம் சேர்க்காமல் இருக்க நீயே அருள்புரி” என்றவர் ஆற்றை நோக்கி கையினை நீட்டினார்

அந்த கல் ராமதேவரிடம் வந்தது அதை பாகவதரிடம் கொடுத்து சொன்னார் நாமதேவர், “பாகவதா, பாண்டுரங்கனிடம் கேட்டால் ஆயிரம் மடங்கு பொன் பொருள் தருவான், நான் கேட்டாலும் தருவான் நீ கேட்டாலும் தருவான், இப்படி ஒரு கல்லை எனக்கும் தருவான் ஆனால் இதையெல்லாம் விட அவன் நமக்கு முக்கியமல்லவா? அவனை பற்றிகொண்ட நமக்கு இந்த பொன்னெல்லாம் விஷயமா?

ஆனால் நீ அவனை மறந்து இந்த உலகையே தங்கமாக்கினாலும் உனக்கு பலன் என்ன?”

பாகவதன் தவற்றை உணர்ந்து அவர்பாதம் பணிந்து மறுபடி பாண்டுரங்கனை பாடினான், நாமதேவரின் பாடல்கள் அவ்வளவு உருக்கமானவை, அவற்றின் உருக்கம் கருதி சீக்கிய கிரந்த சாஹிப்பில் கூட அவை சேர்க்கபட்டிருக்கின்றன‌

ஞானேஷ்வரர் என்றொரு ஞானியும் முக்கியமானவர், இவர் மஹாராஷ்ட்ரா பக்கம் விடோபா என்பரின் இரண்டாம் மகனாக அவதரித்தார், விடோபாவுக்கு திருமணமாகியிருந்த நிலையிலும் சன்னியாசம் பெற்றார் ஆனால் அவரின் மனைவி கணவரின் குரு ராமனந்தரிடம் சென்று அழுததில் அவர் இவரை இல்லறத்துக்கே திருப்பினார்

இதனால் விடோபாவினை அந்த ஆச்சாரிய சமூகம் தள்ளிவைத்தது, விடோபாவின் இரண்டாம் மகனாக பிறந்தவர் ஞானேஸ்வரர், 12 வயதில் அவர் உபதேசித்தபோது ஆச்சாரமில்லா குலத்தவன் இவன் என ஆச்சாரிய சமூகம் இவரை ஒதுக்க இவர் ஒரு எருமை மேல் கைவைத்தார்

“`கர்ம வினைகளாலும், நடத்தையாலும்தான் ஒருவன் உயர்ந்தவனாகிறான்’ என்று உணர்த்தும்படியான வேதப் பாடலை வரி பிசகாமல் பாடியது எருமை

அத்தோடு எல்லோரும் பணிந்தார்கள், பாண்டுரங்கனால் ஆட்கொள்ளபட்டு அவர் ஆலயத்திற்கு வந்து ஞானேஷ்வர் பெரும் ஞானியாக போதித்தார்

அப்போது சாங்கதேவர் எனும் சித்தர் இவரை உலகுக்கு அடையாளம் காட்ட எண்ணி சிறுத்தைமேல் ஏறி பாம்பை கழுத்தில் சுற்றிகொண்டு இவர் முன்னால் வந்து நின்றார்

ஞானேஷ்வரரோ தன் கல் ஆசனத்தையே பின்னால் நகர செய்தார்

“நான் உயிருள்ளவற்றை கட்டுபடுதுகின்றேன், நீர் உயிரில்லாததையும் கட்டுபடுத்துகின்றீர், மக்களே இவரே சிறந்தவர்” என இவரை அடையாளம் காட்டினார் சித்தர்

இப்படி பெரும் அதிசயங்களை செய்தவர் தன் 21ம் வயதில் பகவானுடன் கலந்தார்

இன்னொரு அடியார் ரோஹித தாசர், இவர் செருப்பு தைக்கும் தொழிலாளி மிக்க வறுமையில் உழன்றவர் ஆனால் தம்புரா எடுத்து பாண்டுரங்கன் வாசலில் நின்று பாடினால் தன்னையே மறந்துவிடுவார்

ஏகாதசி தோறும் பாண்டுரங்கனை பாடுதல அவரின் வழமை, என்ன வேலை என்றாலும் அவர் அதை தவறவிடுவதே இல்லை, அன்று பட்டினி கிடந்தாலும் அதனை தவறாமல் செய்வார்

மனமெல்லாம் விட்டலன் வீடெல்லாம் வறுமை என வாழ்ந்தவரை இன்னும் சோதித்தான் பாண்டுரங்கன்

அந்த பகுதி மன்னனுக்கு படை திரட்டும் அவசியம் வந்தது, அதனால் நிறைய செருப்புக்களை செய்ய ஆளை தேடியவன் இவரிடம் ஆயிரம் செருப்புக்களை செய்ய சொன்னான் சில நாளே அவகாசம் கொடுத்தான்

ஆனால் பாண்டுரங்கனை பாடியதில் இவரால் செருப்பு தைக்க முடியவில்லை , இன்னும் இருநாளில் அதை செய்துமுடிக்காவிட்டால் மன்னன் கொன்றே விடுவான், ஆனாலும் இவரோ ஏகாதசிக்கு பாண்டுரங்கனை பாடிவிட்டு மன்னன் கையால் சாவது என முடிவெடுத்தார்

பாண்டுரங்கனை பாடி போகும் உயிர் ரங்கனுக்கே என சொல்லி பாடினார், அவரை பொறுத்தவரை பாண்டுரங்கனுக்கு பாடிவிட்டு சில செருப்புக்களை செய்வார் அவ்வளவு போதும், மன்னன் உத்தரவிட்டு இதையே செய்து சாக தயாரானார்

நாளை சாவு எனும் நிலையில் அவர் தன் விதி நினைத்து கலங்கியபோது ஒருவன் வந்தான் வந்தவன் அய்யா நான் செருப்பு தைப்பேன் எனக்கு சாப்பாடு மட்டும் போதும் என்றான், அவரும் உணவு கொடுத்து அமர சொன்னார்

அவன் செருப்பு தைக்க தயாராகிகொண்டே சொன்னான் “அய்யா எனக்கு அலுப்பு தெரியாமல் இருக்க நீர் பாடும்”

ரோகித தாசர் பாட ஆரம்பித்தார், தன்னையே மறந்து அவர் பாடி முடித்தபோது ஆயிரம் செருப்புகள் தைக்கபட்டு மூட்டையில் இருந்தன, அவனை காணவில்லை

அவர் அதிசயித்துபோனார், நம்பமுடியா அதிசயமாக க்லங்கி போனார் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கேட்டார் “நீர் பாடி கொண்டிருந்தீர், அவன் வேலையினை முடித்து கோவிலுக்கு செல்கின்றேன் இவரை அங்கு வரசொல்லுங்கள் என சொல்லி சென்றான்” என்றார்கள்

பாண்டுரங்கா என ஓடியவர் அங்கே வீழ்ந்து வணங்கினார், நடந்ததை அறிந்த அரசன் அவரை கோவிலிலே பாட ஏற்பாடு செய்தான் அவரின் பாடல்கள் இன்னும் உண்டு

இன்னொருவர் ஏகநாதர், இவர் 10 வயதிலே சூரியநாராயணர் ஆலயத்தில் நாராயணரிடம் ஞானப்பால் பெற்று ஞனையானவர், தாத்ரேயரே ‘ஏகநாதா! வால்மீகி இராமாயணத்தையும், வியாச பாகவதத்தையும் மராட்டிய மொழியில் இயற்றி நிலைத்த புகழைப் பெறுவாய்’ என சொன்னதால் வறுமையிலும் அதனை எழுதி பண்டரிபுரம் கோவிலில் அரங்கேற்றம் செய்தவர்

அந்த கோவிலில் ஒரு சிறுவன் அவரிடம் வந்து வேலை கேட்டான் அவரும் சேர்த்து கொண்டார், 12 வருடம் அச்சிறுவன் அவருக்கு சேவகம் செய்தான், மாலை தொடுப்பது தோட்டவேலை நூல்கள் எழுதுவது என எல்லா வேலைகளையும் செய்து கொடுத்தான்

ஒருநாள் பக்தர் ஒருவர் பாண்டுரங்கன் ஆலயத்தில் தரிசிக்க வந்தபோது ருக்மணி மட்டும் இருக்க கண்டு திடுக்கிட்டார், அதாவது அவர் கண்ணுக்கு பாண்டுரங்கன் இல்லை ருக்மணி மட்டும் தெரிந்தாள்

என்ன இது என அவர் சிந்தித்தபோது “கண்ணன் எகநாதர் வீட்டில் வேலை செய்ய சென்றுவிட்டான்” என்றாள் ருக்மணி

அலறி அடித்து ஓடிய பக்தர் ஏகநாதரிடம் கிருஷ்ணன் எங்கே என்றார், அவரோ “கிருஷ்ணன் நீர் கொண்டுவர சென்றான” என இயல்பாய் சொன்னார்

“அய்யா அது சாட்சாத் கண்ணன், 12 வருடம் பகவானே உமக்கு சேவகம் செய்திருக்கின்றார்” என்றதும் ஆடிபோனார் ஏகநாதர், அச்சிறுவனை காணவில்லை, கோவிலில் பக்தன் கண்ணுக்கு கண்ணன் புன்னகைத்தார்

இன்னொருவர் சோகாமேளர், இவர் தாழ்த்தபட்டவர் என்பதால் இவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை இன்னும் இவர் பாடிய பாடலையும் பலர் அங்கிகரிக்கவில்லை

ஆனால் ஒரு குறிப்பிட பொழுதில் கோவிலில் கண்ணன் சிலை மாயமாவதும் அந்நேரம் இவர் குடிசையில் சோகாமேளர் கண்ணனுக்கு அமுது படைப்பதும் நடந்தது

அதாவது அவர் உணவுபடைக்கும் வேளை கண்ணனே வந்து மாயமாய் உண்டுவிட்டு சென்றார், இது கோவிலில் உள்ளோர்க்கு தெரிந்தது ஆனாலும் இவர்பால் நம்பிக்கை கொள்ளாமல் வெறுப்பு கொண்டார்கள்

ஒருநாள் இவரை கடுமையாக தாக்கி காயபடுத்தினார்கள் முகத்தில் குத்தினார்கள் ரத்தம் வழிய வழிய விட்டு சென்றார்கள் மறுநாள் கோவிலை திறந்தால் பாண்டுரங்கனுக்கு அதே காயம் இருந்தது

பின் இவரிடம் மன்னிப்பு கேட்டு ஆலயத்துக்கு அழைத்து சென்று அவர் கையாலே பகவான் முகத்தில் வடியும் ரத்தத்தை துடைக்க சொன்னார்கள் அதன்பின் ரத்தம் நின்றது , சோகாமேளர் இதன்பின் கோவிலில் தலமை பாடகராக அமர்த்தபட்டார்

இன்னும் இரு பெண் அடியார்கள் உண்டு அவர்கள் ஜனாபாய் மற்றும் ஜக்குபாய்

ஜனாபாய் நாமதேவரின் சீடராக 13ம் வயதில் வந்தார், பண்டரிபுரம் பாண்டுரங்கனை பாடி ஏங்கி ஏங்கி அவனோடு கலந்தவள், தமிழக ஆண்டாள் வடநாட்டு மீரா போன்றோரின் சாயல் இது

ஜக்குபாய் இன்னொரு பெரும் சாட்சி அவள் சோலாப்பூரை சேர்ந்தவள், அவளுக்கு சிறுவயதிலே விட்டல் மேல் பற்று அதிகம், சிறுவயதிலே அவளுக்கு திருமணமும் முடிந்தது

சில ஆண்டுகளில் அவள் பண்டரிபுரம் செல்ல விரும்பினாள் கணவனோ தடுத்தான், அவளோ பண்டரிபுர யாத்திரை செல்ல விரும்பினாள், சென்றே தீருவேன் என்றவளை தூணில் கட்டிவைத்தான் கணவன்

நள்ளிரவில் வீட்டு வேலைக்காரன் வந்து அவள் கட்டை அவிழ்த்துவிட்டு “எஜமான் உன்னை போக சொன்னார், ஆனால் அவரை சந்திக்காமல் போக சொன்னார்” என்றான் அவளும் சென்றுவிட்டாள்

ஓரிரு வாரம் கழித்து அவள் வந்தபோது வாசலில் எல்லோரும் அசந்துபோனார்கள் காரணம் உள்ளே தூணில் சில வாரம் அவள் கட்டபட்டநிலையிலே கிடந்தாள்

கண்ணனே அவள் உருவில் அவளுக்காய் அங்கு தூணில் சிக்கி கிடந்தான், அவளின் பக்தி கண்டு கணவன் வீழ்ந்து வணங்கி பண்டரிபுரம் பக்தனானான்

இவை எல்லாம் அங்கு நடந்த அதிசயங்களில் பக்தர்களின் வாழ்வில் பகவான் செய்த சாட்சியின் சில வரலாறுகள், எல்லாம் எழுதினால் ஏடு தாங்காது பூமி தாங்காது

இந்த ஆலயம் காலம் காலமாய் நின்றது என்றாலும் இது ஆப்கானியர் இந்தியாவில் அட்டகாசம் செய்த காலங்களில்தான் மிக பிரசித்தியானது

13ம் நூற்றாண்டில் ராமதேவர் பாண்டுரங்கனை பாடியபோதுதான் டெல்லியில் ஆப்கானிய ஆட்சி வந்தது

இந்த ராமதேவரின் சாயலில் இன்னொருவர் வரும்போதுதான் இனி இந்துஸ்தான் மொகலாயர் ஆட்சியில் முழு இஸ்லாம் நாடாகும் எனும் அச்சம் எழுந்தது,அதை கொடுத்தவன் அவுரங்கசீப்

அவனின் அட்டகாசம் தொடங்கியபோது இங்கு ராமதேவரின் மறுவடிவமாக வந்தவர் துக்காராம்

இந்த துக்காராம் வரலாற்றிலிருந்துதான் இந்தியாவின் தலைவிதி மாறிற்று , பகவான் கண்ணனின் சூட்சும நாடகம் இவர் வழியாகவே வந்தது

13ம் நூற்றாண்டில் பாமினி சுல்தான்கள் ஆள தொடங்கிய மராட்டியத்தில் இந்துமதம் நிலைத்து நிற்க இந்த பண்டரிபுர ஆலயம் பெரும் சாட்சி, எந்த சுல்தானானாலும் பண்டரிபுர மகிமையினை கட்டுபடுத்த முடியவில்லை கைவைக்க முடியவில்லை அடங்கித்தான் போனார்கள்

ஆனானனபட்ட துக்ளக்கே அஞ்சினான், அவனின் தலைநக்ரான தேவகிரி இதன் அருகில் அமைந்திருந்தும் பாண்டுரங்கனின் ஆலயத்தை அவனால் தொடமுடியவில்லை, பக்தர் கூட்டம் அப்படி இருந்தது ராமதேவர் முதல் பலர் அங்கு பெரும் அதிசயமாய் நின்றார்கள்

16ம் நூற்றாண்டில் மொகலாயம் வலுத்தபோது இந்த பகுதி பிஜப்பூர் சுல்தான் அகமதுநகர் சுல்தானிடம் மாறி மாறி சிக்கியபோதும் பாண்டுரங்கன் தனி ஆட்சி நடத்தினார்

அந்த 16ம் நூற்றாண்டில் வடக்கே ஷாஜஹான் இந்திய சக்கரவர்த்தியாக தாஜ்மஹால் எல்லாம் கட்டியபோது இங்கு ஒரு பக்தனை பாண்டுரங்கன் ஈர்த்து கொண்டார் அவர் பெயர் துக்காராம்

அவர் வியாபார வைசிய சாதி, ஆனால் விட்டல் என்றாலோ பாண்டுரங்கன் என்றாலோ மனிதர் அழுதேவிடுவார், அப்படியே உருகி பெரும் பாடலை எழுதுவார்

தானிய வியாபாரியான அவர் அப்பக்கம் செல்லும் போதெல்லாம் கொவில்முன் பாடுவார் உருகி உருகி பாடுவார்., ஒருமுறை ஒரு பாடலை கோவிலுள் பாட முயன்றபோது ஒரு ஆச்சாரியன் வந்து அவமானபடுத்தினான்

கல்வி இல்லா நீர், ஆகமம் வேதம் அறியாத நீர் எப்படி பாடலாம்? நீர் பகவானை அவமானபடுத்துகின்றீர் என அவன் சொல்லிவிட எழுதிய அத்தனைபாடலையும் மூட்டைகட்டி ஆற்றில் போட்டுவிட்டார் துக்காராம்

மறுநாள் அர்ச்சகர் கோவிலை திறந்தால் அந்த மூட்டை பகவானின் தலையில் இருந்தது உள்ளே பாடல் அனைத்தும் இருந்தன, பகவானே அந்த பாடல்களை மீட்டு வந்து நின்றார்

இந்த அதிசயம் நடந்தபின் துக்காராம் கோவிலில் பெரும் இடம் பெற்றார், கண்ணனும் அடிக்கடி அவரிடம் வேலைக்காரன் வியாபாரி என உறவாடினான்

இந்த பண்டரிபுரம் கோவிலில் ஆஷாட ஏகாதசி எக்காலமும் உண்டு, ஆனால் பாமினி சுல்தானிய படையெடுப்பில் பாதுகாப்பு கருதி அது நடக்காமல் இருந்தது, இந்த துக்காராம் அதை மீட்டெடுத்து புனித யாத்திரையினை இந்த ஏகாதசி யாத்திரையினை மீள தொடங்கினார்

அதனால் கராச்சி காசி அசாம் தமிழகம் என எல்லா இடங்களில் இருந்தும் அந்த யாத்திரைக்கு மக்கள் சென்றார்கள் ,பண்டரிபுரம் வடக்கு தெற்கின் இணைப்புமாயிற்று

இவர் காலத்தில்தான் வீரசிவாஜி எழுந்து இந்து ராஜ்ஜியம் அமைத்து கொண்டான், அவன் துக்காராமின் பாடலை கேட்க வந்து பல அதிசயங்களை கண்டதும் உண்டு

துக்காராமை அவன் ஒரு அவதாரமாகவே கருதினான், ஒருமுறை துக்காராமோடு சேர்ந்து எதிரிகள் அவனை வளைத்தபொது பகவானே சிவாஜி வேடத்தில் எதிரிகளை மடைமாற்றி இழுத்து சென்று சிவாஜியினை தப்ப வைத்த அதிசயமும் நடந்தது

இப்படிபட்ட துக்காராமும் பாண்டுரங்கனும் திருவாரூர் கோவிலில் சுந்தரரும் சிவனும் விளையாடியது போல் நட்ம்பும் பந்தமுமாய் குரு சிஷ்ய பாவம் கொண்டிருந்தார்கள்

கடைசியில் கருடனே வந்து துக்காராமை வைகுண்டத்துக்கு அழைத்து சென்றது

துக்காராம் ஏற்படுத்திய இந்து எழுச்சி கொஞ்சமல்ல அவரால் மராட்டியமே பாண்டுரங்கன் பக்தியில் பெரிதாக எழுந்தது, அதொடு ஸ்மார்த்த ராமதாசரும் சேர்ந்து எழுப்பிய நெருப்பு இன்னும் எரிந்தது

இந்த அணலில்தான் வீரசிவாஜி இந்துராஜ்யம் அமைத்தான்

இதனை எல்லாம் டெல்லியிலும் ஆக்ராவிலும் இருந்து கவனித்து கொண்டே இருந்தான் அவுரங்கசீப், அவனுக்குள் இந்துஸ்தானை மொத்த இஸ்லாமிய நாடாக்கும் பெரும் கனவு எரிந்து கொண்டே இருந்தது

அவன் வடக்கே காசியினை இடித்து மசூதி, மதுராவில் மசூதி என பெரும் பெரும் அடையாளத்தை ஒழித்து கொண்டிருக்க இங்கே பாண்டுரங்கன் சன்னதியில் கூட்டம் குவிந்து கொண்டே இருந்தது

அவுரங்கசீப் தன் வாழ்வின் முதற்பாதியில் அதாவது அரசை கைபற்றியபின் தெற்கே வரவில்லை அவன் சிந்து நதிகரை, பஞ்சாப், சீக்கியர் வங்கம் என போரை செய்தான், காசி மதுரா என இந்துக்களின் எல்லா அடையாளங்களையும் அழித்துபோட்டான்

வடக்கே எல்லாம் அடக்கி அழித்தபின், இந்துக்களை ஒடுக்கியபின்பே தெற்கே வந்தான்

அப்போது வீரசிவாஜி இல்லை, சாம்பாஜி கொல்லபட்டிருந்தான் துக்காராம் இல்லை, அந்த 1690களில்தான் தெற்கே வந்து அவுரங்கபாத்தில் அமர்ந்தான் அவுரங்கசீப்

பண்டரிபுரத்துக்கும் அவன் இருந்த அவுரங்கபாத்துக்கும் தொலைவு 250 கல், அதிக தொலைவு இல்லை

அவன் அந்நேரம் ஹைதரபாத் தமிழகம் மதுரை என கைபற்றியிருந்தான் அவனின் அடியாளாக ஆற்காடு நவாப் நியமிக்கபட்டிருந்தான்

மொத்த தென்னிந்தியாவினையும் இஸ்லாமியமயமக்க அவவுரங்கசீப் முயன்றபோது அவனின் முக்கிய இலக்கு புரி ஜெஜநாதர் ஆலயமும் பண்டரிபுரம் பாண்டுரங்கன் ஆலயமுமாகவும் இருந்தது

இந்த முயற்சியினை வாழ்வின் கடைசி 25 வருடங்கள் செய்தான் அவுரங்கசீப், காசியில் மதுராவில் செய்ததை ஏதேனும் ஒருவழியில் இங்கும் இந்த இரு இடங்களிலும் செய்துவிட தன்னால் முடிந்த அனைத்தும் செய்துபார்த்தான்

ஆனால் பண்டரிபுர நாதனின் மாயவிளையாட்டில் அவுரஙகசீப்பால் வெல்லமுடியவில்லை, 90 வயது வரை வாழ்ந்தவன் முதலில் தன் நீண்ட ஆயுள் இங்கு தன் மதத்தை நிறுவ இறைவனால் தரபட்டது அதனாலே தனக்கு அதிகாரமும் கிடைத்தது என மனமார நம்பினான்

அவன் நம்பிக்கைக்கு ஏற்ப அவனை எதிர்த்தோரும் விரைவில் அகன்றனர், அவனுக்கு பெரும் சவால் கொடுத்த வீரசிவாஜியும் 50 வயதில் காலமானபோது இனி இந்தியா தனக்கானது என மனமார நம்பினான்

அப்படிபட்டவன் தாராபாயுடன் மோதல் இன்னும் பல மோதல்களால் தன் இலக்கை எட்டமுடியாமல் தோற்றான், கடைசிவரை அவனால் பாண்டுரங்கன் பக்கம் வரமுடியவில்லை, முடிந்தவரை முயற்சித்தவன் தன் நீண்ட ஆயுளில் பாண்டுரங்கனிடம் தோற்றுவிட்டே மறைந்தான்

வடக்கே எவ்வளவோ அட்டகாசங்களை செய்த அவனால் இங்கு முடியவில்லை ஒருவகையில் அவனை இழுத்து வந்து தொல்வியுற செய்து அவன் ஆணவம் அடக்கியது பாண்டுரங்கன் அருள், அவுரங்கசீப் அதே அவுரங்கபாத்தில் மரித்தான் அவன் கல்லறை அங்குதான் உண்டு

மாபெரும் சூட்சும ரகசியங்களை கொண்டது அந்த ஆலயம், இந்திய வரலாற்றில் மொகலாயரால் தொடமுடியா ஆலயத்தில் அதுவும் ஒன்று, மொகலாயரின் முடிவு அங்கிருந்துதான் தொடங்கிற்று

அந்த மண்ணில் அடித்த பெரும் அலைதான் தாதாபாய் நவ்ரோஜி,திலகர், சாவர்க்கர் என பெரும் அடையாளங்களையும் தந்தது, நாட்டின் விடுதலை எழுச்சி அங்கிருந்துதான் வந்தது

இன்று ஆஷாட ஏகாதசி , விட்டலா பாண்டுரங்கா என பெரும் யாத்திரை செல்லும் நாள், மாபெரும் மக்கள் கூட்டம் பாதயாத்திரையாக அவனை சந்திக்க செல்லும் நாள்

பாண்டுரங்கன் எக்காலமும் அங்கிருந்து தன் பக்தனுக்கு அருல்பாலித்து கொண்டே இருக்கின்றான், நம்பி அவனை அழைத்தால் நிச்சயம் அவனை உணரலாம், அது உறுதி

நீங்கல் எந்நிலையில் இருந்தாலும் அவனை அழைத்தால் ஓடிவருவான்

செங்கல்மேல் அவன் நிற்பதிலும் அர்த்தம் உண்டு, மண் கரையும் சுட்ட மண் செங்கலான பின் கரையாது, அப்படி அவனை ஏற்றுகொண்டோர் மனம் கலங்காது, கரையாது அவனால் அவர்கள் மனமும் வாழ்வும் உறுதிபெறும்

இதனாலே அந்த பாண்டுரங்கன் “செங்கல்வராயன்” என தமிழிலும் கொண்டாடபட்டான்

பாண்டுரங்கன் ஆபத்பாந்தவன், அனாத ரட்ச்ககன், கோகுலத்தில் செய்த அத்தனை விளையாட்டுக்களை இப்போதும் செய்பவன், அவன் துவாரகை போல் அங்கிருந்து ஆள்பவன்

அவன் சன்னதியில் நின்று கதறுவோர்க்கு, தொலைவில் இருந்து அவனை தேடுவோர்க்கு அவன் ஏதோ ஒருவடிவில் வருவான்

தன் பக்தருக்கு எது அவசியமோ அந்த வடிவில் வந்து அவன் காப்பான், அவன் சேவகனாய் வருவான், சிறுவனாய் வருவான் , குருவாய் வருவான், நண்பனாய், ஆசிரியனாய் ,முதியவனாய், அரசனாய், ஏதோ ஒரு உருவில் வருவான்

இந்த பாண்டுரங்கனின் புகழில் அவனின் ஆடல்களில் மயங்கித்தான் பாரதி எழுதினான், நாமதேவர், துக்காராம், ஏகநாதர், ஜக்குபாய் என எல்லா அடியார் வாழ்விலும் பாண்டுரங்கன் தானே வந்து செய்த திருவிளையாடல்களை கொண்டே எழுதினான்

“ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்

வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப்

பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான்”

ஆம், சாட்சாத் அந்த பாண்டுரங்கனையே பாடினான் பாரதி

இன்று ஆஷாட ஏகாதசி இன்றைய நாள் பாண்டுரங்கனுக்கானது, இன்று அவனை நினைந்து பிரார்த்திப்போருக்கு அவனிடம் வேண்டுவோர்க்கு எல்லா நலமும் வந்து சேரும்

இந்த ஏகாதசி அவ்வளவு முக்கியமானது, அவன் அங்கு குடியேறியதும் தன் அடியார்கள் வாழ்வில் அற்புதமெல்லாம் செய்ததும் இந்த ஏகாதசியிலே, அந்த அதிசயம் அந்த பாண்டுரங்கனை ந்ம்பி இன்று வேண்டினால் உங்கள் வாழ்விலும் நடக்கும்

கட்டாயம் நடக்கும் மகா உறுதியய் நடக்கும் இது சத்தியம்

தாய் தந்தைக்கு செய்யும் சேவை பெரும் புண்ணியம் என தொடங்கும் இந்த ஆலவரலாறு அப்படியே தாய் தந்தை வாழும் இந்நாட்டையும் நாட்டு மக்களையும் தெய்வமாக கருதி செய்தாலும் வரும் என்பதை சொல்கின்றது

தாயும் தந்தையும் முக்கியம், அவர்களை தந்த நாடு அவர்களை எல்லாம் விட முக்கியம்

அதனாலே பாண்டுரங்கன் பிஜப்பூர் சுல்தான் காலத்திலே தன் அற்புதங்களை தொடங்கி, அவுரங்கசீப் காலத்தில் பெரும் மக்களை திரட்டி அவனை தோல்வியுற செய்து தேசத்தை காத்தான், மொகலாயத்தின் வீழ்ச்சி இங்குதான் தொடங்கிற்று, பாண்டுரங்கனே தொடங்கி வைத்தான்

இந்நாட்டை நேசிப்போரை அவனும் நேசிப்பான், இந்நாட்டுக்காகவும் அதன் மக்களுக்கும் அருமை தலைவனுக்காக வேண்டினால் அவன் நிச்சயம் வந்து அற்புதம் செய்வான்

இந்த நாளில் அவனால் காக்கபடும் இந்த இந்து இனத்துக்கும் இந்த நாட்டுக்கும் நாட்டில் வாழும் எல்லா குடிமக்களுக்குமாக வேண்டி கொள்வோம், தன்னை அண்டிய பக்தர்களை எல்லாம் காக்கும் அந்த பாண்டுரங்கன், அந்த பதர்கள் வாழும் இந்த தாய்நாட்டையும் காக்க வேண்டிகொள்வோம்

பாண்டுரங்கனிடம் அந்த புண்டரீகன் கேட்ட வரத்தை நாமும் கேட்போம் “கண்ணா, எமக்கென எதுவும் வேண்டாம், உன்னை நம்பிவரும் இம்மக்களையும் அவர்களின் தாயான இந்த திருநாட்டையும் ஆசீர்வதித்து வளத்தோடும் பலத்தோடும் ஞானத்தோடும் வாழசெய்வாய், அதைவிட எம்மிடம் வேறு என்ன வேண்டிவிட போகின்றோம்”

செங்கல் மேல் நிற்கும் அந்த கண்ணன், பாராளுமன்றத்தின் செங்கல் கட்டடம் மேல் நின்று இந்த நாட்டை முழுக்க காக்க பிரார்த்திப்போம், அவனின் விருப்பமும் அதுவாகவே இருக்கட்டும்

“பண்டரிநாத் மஹராஜ் கி ஜெய்!
பண்டரி ஷேத்ர கி ஜெய்!!
சந்த்ர பாஹா தீர்த்த கி ஜெய்!!!
ரகுமாயி சமேத பாண்டுரங்க மூர்த்தி கி ஜெய்”