அபிராமி ஆலயங்கள் 05 : வாணாபுரம் பாணபுரீஸ்வரர் ஆலயம்.

அபிராமி ஆலயங்கள் 05 : வாணாபுரம் பாணபுரீஸ்வரர் ஆலயம்.

மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கோவிந்தபுரத்தில் இருந்து வடக்கே சில நூறு மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம், இதன் வரலாறு ராமாயண காலத்தில் இருந்தே தொடங்குகின்றது.

ராமபிரான் வனவாசத்தின் போது சிவபூஜைக்காக உருவாக்கிய தலம் இது, அவர் தன் பித்ரு கடனுக்காக சில பூஜைகளைச் செய்ய வேண்டி இந்த லிங்கத்தை ஸ்தாபனம் செய்து தன் அம்பால் அருகிருக்கும் தீர்த்தத்தை உருவாக்கினார், ராமபிரானின் பாணம் உருவாக்கிய ஸ்தலம் என்பதால் அந்தச் சிவன் பாணபுரீஸ்வரர் என்றானார்.

இதன் அருகிலே கோவிந்தபுரம் எனும் இடத்தில் விஷ்ணு ஆலயம் உண்டு, அங்கிருந்து சில நூறுமீட்டர்கள் தெற்கே அந்த ஆலயம் அமைந்திருக்கின்றது, ராமபிரான் பித்ருகடன் கொடுக்க உகந்த இடம், வடக்கே கயாபோல இங்கு இது மிகச் சரியான இடம் எனக் கருதினார். பல்குனி ஆறு பெரிய மரம் கயாவில் உள்ளதைப் போல இங்குப் பெரிய அரசமரமும் ஆறும் இருந்ததால் அங்கே அவர் முன்னோர்களுக்கான பித்ருபூஜையினைச் செய்தார், அதனை விஷ்ணுபகவானே வந்து ஆசீர்வதித்தார், கதாதரன் என அந்தப் பகவான் இன்றும் அங்கு அருள்பாலிக்கின்றார்.

கயாவில் செய்யப்படும் பித்ருகாரியத்துக்கு ஈடான பலன் இந்தக் கோவிந்தபுரம் தலத்தில் செய்தாலும் நிச்சயம் கிடைக்கும், இதனால் பித்ருபூஜைக்கு பிரசித்தியான தலம் இது,, மிகப்பெரிய ராமபக்தரான போபேந்திரர் இங்குதான் ஜீவசமாதி கொண்டிருக்கின்றார், இன்றும் ‘ராம் ராம்” எனும் சப்தம் அவர் ஜீவசமாதியில் சிலரால் உணரப்படுகின்றது.

இப்படி இரட்டை கோவில்களாக உள்ள தலத்தில் வடக்கே முதல் தலமாக ராமபிரான் ஸ்தாபித்த லிங்கம் இருக்கும் பாணபுரீஸ்வரர் ஆலயமே அபிராமி அன்னையின் ஐந்தாம் தலமாகும். இங்குத் தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றாள் அன்னை.

இந்தத் தலம் விசுத்தி எனும் ஐந்தாம் சக்கரத்தை துலக்கித் தரும் அற்புதமான தலம், அந்தச் சக்கரம் அனாஹதத்துக்கு மேல் கழுத்து பக்கம் அமைந்திருக்கும் ஐந்தாம் சக்கரம் விசுத்தி, இதுபற்றி சித்தர்களும் ஞானியர்களும் நிரம்பச் சொல்லியிருக்கின்றார்கள்.

“ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம்
அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு
மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம்
பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும்
பாலகனே அட்சரந்தான் வகாரமாகும்
வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே.”

என்பது அகத்தியர் பாடல்.

“எறியே பன்னிரண்ட.டங்குல மேதாண்டி
யேறமாம் விசுக்க்தி என்ற தலமதாகும்
மாறவே யறுகோண வளையமொன்று
மகத்துவமாம் பதினாறு இதழு மாகும்”
என்பது போகர் சொல்லும் போதனை

அநாகத தளத்தில் இருந்து மேலே 12 விரற்கடை உயரத்தில் இந்தச் சக்கரம் அமைந்துள்ளது, கழுத்தின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளது.
கழுத்தில் அமைந்துள்ள இந்தச் சக்கரம்தான் காற்று தத்துவத்தின் உச்சச் சக்கரமாகும், இதன் தாத்பரியம் முக்கியமானது.

இதுதான் தலைக்கும் உடலுக்குமான இணைப்பினைக் கொடுக்கும், அதாவது தலை என்பது கட்டுப்பாடு கொண்ட இடம், மூளை உள்ளிட்ட கட்டளைகள் உருவாகும் இடம், முழுக் கட்டுப்பாடு இருக்கும் இடம் அதுதான்.

தலைக்கு ஒன்று என்றால் உடல் இயங்காமல் போவதும் அப்படித்தான், உடல் என்பது செயல்படும் எந்திரம், எல்லா இயக்கமும் இங்கிருந்துதான் நடக்கும்.

ஆக இயக்கும் இடத்தையும் இயங்கும் சக்தியும் ஒன்றாக சேரும் இடம் கழுத்து, இதுதான் இயக்கு சக்தியினை இயங்கு சக்தியாக மாற்ற எல்லா வேலைகளையும் செய்து இணைக்கின்றது.

இந்த இணைப்பை கொடுப்பதுதான் விசுத்தி.

இந்தச் சக்கரம் சரியாக இருந்தால் மனநலம் சரியாக இருக்கும். அப்போது நேர்மையான, வெளிப்படையாகப் பேசும் தன்மை, பிறரின் பேச்சை கவனமுடன் கேட்கும் தன்மை, பிறருடன் இயல்பாகக் கலந்து பழகும் தன்மை நன்றாகப் பாடுதல், கலைபடைப்புக்களைக் கொடுத்தல் போன்ற கலைத் திறன்கள், படைப்பாற்றல் தன்னம்பிக்கை, அமைதியான மனநிலை ஆகியன வரும்.

கலைஞர்கள், பாடகர்கள் இன்னும் ஆன்மீக சொற்பொழிவாளர்கள், இசை அமைப்பாளர்கள் எனப் பெரும் பெரும் கலைஞர்களுக்கெல்லாம் இச்சக்கரம் சரியாகத் துலங்கியிருக்கும்.

உண்மையில் இந்துக்களின் ஏழு ஸ்வரங்களும் ஏழு சக்கரங்களைத் துலக்கும் உத்திகள்.

அவ்வகையில் ஐந்தாம் ஸ்வரம் தாண்டி யாரும் அதிகம் பாடுவதில்லை, ஐந்தாம் ஸ்வரத்துகான பலன் இச்சக்கரம் துலங்குவது, மேற்கொண்டு பாடிக்கொண்டே இருந்தால் அவர்களுக்கு ஏழு சக்கரமும் துலங்கும்.

நாயன்மார் பாடினார்கள் ஆழ்வார்கள் பாடினார்கள், சங்கீத மும்மூர்த்திகள் பாடினார்கள், எல்லோரும் பாடி இறைவனை அடைந்தார்கள் என்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஏழு ஸ்வரங்களைப் பாட பாட ஏழு சக்கரமும் சரியாகும். அந்நிலையில் இறைநிலை எளிதில் வாய்க்கும்.

இசை இறைவனையே வசப்படுத்தும் என்பது இந்தச் சூட்சுமமே.

ஒரு மனிதன் எவ்வளவு பெரும் திறமையானவனாக அறிவாளியாக பெரும் ஞானம் கொண்டவனாக இருந்தாலும் சரியாக அதை வெளிப்படுத்தாவிட்டால் பலனில்லை.

அந்த வெளிப்படுத்தும் கலை, அது பேச்சு , பாடல், எழுத்து, ஓவியம் என எவ்வகையிலாவது ஒருவன் தன்னை வெளிப்படுத்தும் அந்த நல்ல தன்மையினை இந்தச் சக்கரம் தரும்.

விசுத்தி என்றால் சுத்தமான எனப் பொருள், யாரால் தன்னை அச்சமின்றி கொஞ்சமும் தயக்கமுமின்றி வெளிப்படுத்தமுடியும் என்றால் தன்னிடம் உண்மையும் சத்தியமும் இருப்பவன் அதனை வெளிப்படுத்துவான்.

யார் தன்னை வெளிப்படுத்தமுடியும் என்றால் மனம் முழுக்க நல்ல விஷயம் கொண்டவன், யாரும் குற்றம் சொல்லமுடியாதவன் தன்னை வெளிப்படுத்துவான்.

இந்தச் சக்கரமே ஒருவனுக்கு அடையாளமும் அங்கீகாரமும் கொடுக்கும், அழியாப் புகழ்பெற்றவர்கள் பெரும் அடையாளம் பெற்றவர்களெல்லாம் இச்சக்கரம் துலங்கியவர்களே.

அச்சக்கரமில்லாமல் தலையும் உடலும் இணையாது என்பது போல பிரபஞ்சத்தினை ஆளும் ஈர்க்கும் ஒரு சக்தி ஒருவனுக்கு கிடைக்கும். அது அவன் திறனை, ஆற்றலை பிறர் வசீகரிக்கும் அளவில் வெளிப்படுத்தும்.

வியாபாரம் மட்டுமல்ல ஒவ்வொருவனின் வார்த்தையிலும் உணர்வுகளை வெளிபடுத்தும் விஷயத்திலும் அழகுணர்ச்சி வசீகர தன்மை உண்மை அழகு என எல்லாமே அவசியம்.

ஒரு ஈர்ப்பினை அது கொடுத்தல் வேண்டும்.

எல்லோரும் பேசுவார்கள், எழுதுவார்கள், பாடுவார்கள் ஆனால் எல்லோரும் உச்சம் தொடமுடியுமா, பெரும் மக்களை ஈர்க்கமுடியுமா என்றால் முடியாது.

அதற்கு ஒரு பிரபஞ்ச சக்தி அவனில் இயங்கவேண்டும். அதுதான் அவனை இந்த உலகில் தனித்துக் காட்டும் சக்திவாய்ந்தவனாக காட்டும், பெரும் பெரும் ஆற்றலை அழியா இடத்தை அவனுக்குக் கொடுக்கும்.

இங்கு வந்து வணங்குவோர்க்கு அந்த விசுத்தி சக்கரம் துலங்கும், அப்போது இருந்து அவர்கள் சொல்லுக்கு ஒரு தனி செல்வாக்கு கிடைக்கும்.

ராமபிரானுக்கு இந்த அத்தனை அம்சங்களும் இருந்ததை அவதானிக்கலாம், அவர் எங்கும் யாருக்கும் அஞ்சவில்லை, ஒரு சொல் ஒரு வில் என அவன் எங்கும் எதற்கும் கலங்காதவனாய் இருந்தான், எல்லோரையும் ஈர்க்கும் பெரிய வசீகர சக்தி ராமபிரானுக்கு இருந்தது.

இச்சக்கரம் தூய மனநிலையினைத் தரும், மனதைரியம் தரும், வெல்லும் சொல்லையும் இதர பெரும் பலத்தையும் தரும், ஞான நிலையில் நின்று சரியானதை மட்டும் செய்யும் பெரும் பலத்தையும் பெரும் துணிச்சலையும் தீராப் புகழையும் இதுதரும்.

விசுத்தி சக்கரத்தை துலக்கி சுத்தமான பரிபூரண தூய நிலையினைத் தந்து சொல்லுக்கும் செயலுக்கும் பெரும் ஈர்ப்பினைப் பெற்றுத்தரும் ஆலயம் இது.

தெளிவாகச் சொன்னால் தெய்வ நிலை நோக்கி ஒருவனை இது அழைத்துச் செல்லும் ஆலயம் இது, இன்னும் ஆழமாகச் சொன்னால் “ராம்” என்பதே ஒரு மந்திரச் சொல், அதைச் சரியாகச் சொல்ல சொல்ல ஒவ்வொருவரும் விசுத்தி சக்கரம் துலங்கி பெரும் இடம் அடைந்தார்கள்.

வானரமாக இருந்த அனுமன் அந்த நாமத்தாலே தெய்வ நிலையினை அடைந்தான், வால்மீகி எனும் காட்டுக் கொள்ளையன் அந்த நாமத்தாலே பெரும் ஞானியாக அழியா இடம் பெற்றான்.

இன்னும் எத்தனையோ அடியார்கள் வாழ்வில் அதைக் காணமுடியும், திருவையாறு தியாகராயர் வரை, துளசிதாசர் முதல் ராமதாஸர் வரை எவ்வளவோ உதாரணம் காட்ட முடியும், “ராம்” எனும் அந்த மந்திரம் விசுத்தி சக்கரத்தைத் துலக்கித் தரும், அதைத்தான் இந்த ஆலயம் சொல்கின்றது, அந்தத் தாத்பரியத்தைத்தான் மறைமுகமாக இந்தத் தலம் போதிக்கின்றது.

ராஜகோபுரம் கொண்ட இந்த ஆலயத்தில் மேற்கு நோக்கி அருள் பாலிக்கின்றார் ராமன் வழிபட்ட‌ பாணபுரீஸ்வரர். இறைவி அபிராமி தெற்கு நோக்கி சந்நிதி கொண்டுள்ளார்.

மேற்கு நோக்கி அமர்ந்த லிங்கம் கர்மத்தைச் செய்யவைக்கும் என்பதும், தெற்கு நோக்கி நிற்கும் அம்பாள் தட்சணாமூர்த்தி போல ஞானம் தருவாள், அப்படியே பித்ருக்களின் ஆசியினைப் பெற்றுத்தருவாள் என்பதும் எல்லோரும் அறிந்தது.

வடமேற்கில் விஸ்வலிங்கம் வாயுலிங்கம், விஸ்வநாதர், முருகன், லட்சுமி சந்நிதிகள் உள்ளன. தென்மேற்கில் விநாயகர், உள்ளே கருவறை சுற்றி ஓர் பிரகார அமைப்பு உள்ளது. துர்க்கை, பிரம்மன், விஷ்ணு, தென்முகன் விநாயகர் ஆகியோருக்குக் கோட்டங்கள் உள்ளன.

தென்கிழக்கு மூலையில் பெரிய வில்வமரம் ஒன்று உள்ளது. வடகிழக்கில் பெரிய யாகசாலை மண்டபம் உள்ளது. ஒதலவிருட்சம் அரசமரம். மூலவர் பாணபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக மேற்கு நோக்கி கம்பீரமாகக் காட்சி கொடுக்கிறார்.

சுவாமிக்கு வலப்பக்கத்தில் அம்பாள் அபிராமி என்ற பெயரோடு தனிச் சந்நிதியில் தெற்கு நோக்கி, நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள்கிறாள். இங்கு ஐயனார் எனும் சாஸ்தாவுக்கும் முக்கிய இடம் உண்டு.

திருக்கடையூர் செல்லும்போது இந்தத் தலத்தைத் தரியுங்கள், அப்படியே வாய்பிருந்தால் கதாகரனாக விஷ்ணு பகவான் அருள்பாலிக்கும் தலமும் தென்னக கயாவுமான அந்தக் கோவிந்தபுரத்தில் முன்னோர் வழிபாட்டை செய்யுங்கள். அது கயாவில் செய்யப்படுவதற்கு ஈடானது.

இங்குதான் தென்னகத்தின் ஒரே பாண்டுரங்கன் கோவிலும் அமைந்துள்ளது.

இந்தத் தலம் முன்னோரின் அருளோடு விசுத்தி சக்கரத்தைத் துலக்கி பரிபூரண நிலையில் உங்களை அடுத்த நிலைக்கு உயர்த்தும். முன்னோர் சம்பத்து, தெய்வ சம்பத்து எல்லாம் தரும்.

இதை அடுத்த ஆறாம் தலமே திருக்கடையூர் அபிராமி ஆலயம். அது ஆக்ஞா சக்கரம் எனும் ஆறாம் சக்கரத்தை துலக்கி இறைநிலை எனும் மாபெரும் யோகநிலையினை உங்களுக்குத் தரும்.

திருக்கடையூர் செல்லுமுன் இந்த ஐந்து தலங்களையும் தரிசித்துவிட்டு, இந்த ஐந்து அபிராமி தலங்களையும் தரிசித்துவிட்டு சென்றால் அன்னையின் முழுப் பலனும் முழு அருளும் கிடைக்கும், மார்கண்டேயர் காட்டிய வழி இதுதான், அவளை முறையாக தரிசிக்கும் வழியும் இதுதான். முயன்று பாருங்கள் நிச்சயம் பெரும் அருள் கிட்டும்.

இந்த வசந்த நவாராத்திரி நிறைவு காலங்களில் இந்த ஆறு அபிராமி தலங்களை மீண்டும் ஒருமுறை நினைத்து வழிபடுங்கள். அந்தக் கருணைமிகு அபிராமி நிச்சயம் உங்களைத் தேடிவருவாள். இது சத்தியம்.