அகத்தியர் திருமகள் துதி – முன்னுரை.
அகத்தியர் திருமகள் துதி – முன்னுரை.
முப்பெரும் தேவியரில் மகாலட்சுமி ஒன்று எனச் சொல்லபட்டாலும், “தேவி மஹாத்மியம்” எனும் நூல் மகாலட்சுமியின் பெருமைகளைத் தெளிவாக அழுத்தமாக எடுத்துரைக்கின்றது.
மஹாலட்சுமியினை வணங்காமல் ஒரு காரியம் முழுமை அடையாது, புத்தி முக்தி இரண்டும் ஒருசேர அருள்பவள் அன்னை என்பது அவளுக்கான சிறப்பு, அவளே பூமாதேவி எனும் வகையில் பூமியில் பிறந்துவிட்ட எல்லோரும் அவளை வணங்காமல் முழு பலன்களை அடைந்துவிடமுடியாது, இந்தப் பூலோகம் அவளுக்கானது.
அப்படியான அன்னை மஹாலட்சுமிக்கு இத்திருநாட்டில் பல பெரும் ஆலயங்கள் உண்டு. அதில் முக்கியமானது கோலாப்பூர் மஹா லட்சுமி ஆலயம், மராட்டிய மாகாணத்தில் பிரசித்தியான பன்ஹாலா கோட்டை அருகே அது அமைந்துள்ளது அந்த அருள்மிகு ஆலயம்.
அது சக்திபீடமும் கூட.
அந்த ஆலயத்தின் வரலாறு புராணக் காலத்தில் இருந்து தொடங்கிற்று, முப்பெரும் மூர்த்திகளில் யார் பொறுமைசாலி என நடந்த நாடகத்தில் ப்ருகு மஹரிஷி வைகுண்டம் சென்றபோது பெருமாள் உறங்குவது போல் பாசாங்கு செய்தார், தன்னை மதிக்காமல் பகவான் உறங்குவதாக எண்ணி அவர் நெஞ்சில் மிதித்தார் ப்ருகு மஹரிஷி.
“என்னை மிதித்த கால்கள் நோகுமே” என்றபடி கண்விழித்தார் பகவான், “இவரல்லவோ சாந்தமூர்த்தி” எனப் பணிந்தார் ப்ருகு மஹரிஷி.
இப்போது அன்னை கொதித்தாள், திருமாலின் திருமார்பில் நான் வாழ்கின்றேன் அந்த இடத்தில் விழுந்த அவமானம் தனக்கு, அதைக் கண்டுகொள்ளாப் பகவானுடன் இருக்கமாட்டேன் எனப் பூமிக்க்கு வந்து தனக்கொரு இடம் அமைக்கின்றாள்.
அப்போது பெரும் ஊழிக்காலம் வந்தாலும் தன் கரங்களால் அந்த இடத்தை உயர்த்தி காக்கின்றாள், கரம்வீர் என அந்த இடம் ஆனது, அவள் அங்கே நின்று ஆட்சி செய்கின்றாள்.
அப்போது கோலாசுரன் எனும் அசுரன் பெரும் அட்டகாசம் செய்து அப்பக்கம் பெரும் அதகளம் செய்ய அன்னை தன்னைப் பகவான் எதற்கு அனுப்பினார் என்பதை உணர்ந்து சிம்மவாகனத்தில் அவனை அழித்துப்போடுகின்றாள்.
அப்போது அந்த இடம் குளமும் சேறும் கொண்ட இடமாகின்றது, குளபுரம் கோலபுரமாகி பின் கோலாப்பூர் என்றாயிற்று என்கின்றது புராணம்.
அந்த இடத்தில் நின்று தன்னை அண்டிவருவோர்க்கெல்லாம் அள்ளி அள்ளி கொடுக்கின்றாள் அன்னை.
யார் என்ன வரம் கேட்டாலும் அதைத் தவறாமல் கொடுப்பவள் கோலாப்பூர் மகாலட்சுமி.
ஒருமுறை காசி பெரிதா, கோலாப்பூர் பீடம் பெரிதா என வந்த சர்ச்சையில் விவகாரம் பெரிதாகி காசியில் வேண்டுதலை போல கோலாப்பூரில் வேண்டுதலும் பெரும் பலனளிக்கும், காசியினைக் கண்டவர் கோலாப்பூரையும் கண்டாலே முழுப் பலன் கிடைக்கும் எனத் தேவலோகத்திலே முடிவானது.
பல காரணங்களுக்காக அகத்தியர் தெற்கே வந்தபோது விந்திய மலையின் செருக்கை அடக்கி அதனை உயரம் குறைத்தார், அப்படியே தென்னகம் நோக்கி வரும்போது கோலாப்பூர் பெருமை அறிந்து அங்குச் சென்று வணங்கினார்.
சிவனடியார்களான புலிக்கால் முனிவர், பதஞ்சலி முனிவர் என இருவருக்கும் சிதம்பரத்தில் சிவன் இட்ட கட்டளை எல்லாச் சிவன் கோவிலையும் தரிசித்து திருவரங்கம் தரிசித்தால்தான் முத்தி என்பது.
ஆம் , எங்கே சுற்றினாலும் ரங்கனை சேர் என்பது சிவனே சொன்னது.
சிவனடியாரான அகத்தியருக்கும் அந்தப் போதனை புரிந்திருந்தது, இதனால் மேற்கொண்டு தென்முனை வரும்முன்னால் தன் காரியம் சித்தியாக வேண்டி தன் மனைவி லோபமுத்திராவுடன் இந்தக் கோலாப்பூருக்கு வந்தார்.
அங்கே அவர் பாடியதுதான் “அகத்தியர் திருமகள் துதி”
மஹாலட்சுமிக்கு முதன்முதல் பாடல் பாடியவர் அகத்தியர்தான், ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் அதை விடப் பிந்தையது.
கனகதாரா ஸ்தோத்திரம் போலவே எல்லோரும் அறிந்திருக்கவேண்டியது இந்த அகத்தியரின் திருமகள் துதி.
அது அதிகமில்லை மொத்தமே 7 பாடல்கள் கொண்ட துதிதான், அதை முடிந்தவரை விளக்கி ஒவ்வொரு பாடலாக தர முயற்சிக்கின்றோம்.
ஒவ்வொரு இந்துவும் அனுதினமும் காலையிலும் மாலையிலும் அதைச் சொல்லி வழிபடவேண்டி அகத்திய பெருமானே அதைக் கொடுத்தார், அதை அர்த்தததோடு பாடும்படி பார்க்கலாம்.