அகத்தியர் திருமகள் துதி : 02

அகத்தியர் திருமகள் துதி : 02

“கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென்
பொகுட்டிலுரை கொள்கைபோல
மழையுறழுத் திருமேனி மணிவண்ணன்
இதயமலர் வைகு மானே…
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே
கரகமலம் முகிழ்ந்தெந் நாளுங்
கழிபெருங்கா தலில்தொழுவோர் வினைதீர
அருள்கொழிக்குங் கமலக்கண்ணாய்”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்.

“கொழுது இசை அளி முரலும் தாமரை மென்
பொகுட்டில் உரை கொள்கை போல‌
மழையுற உழு திருமேனி மணிவண்ணன்
இதயமலர் வைகும் மானே
முழுது உலகும் இனிது ஈன்ற‌ அருள் கொம்பே
கர கமலம் முகிழ்ந்தெங்கு நாளும்
கழி பெருங்காதலில் தொழுவோர் வினைதீர‌
அருள் கொழிக்கும் கமலக்கண்ணாய்.”

தாமரையின் பொகுடு எனும் உள் மொட்டில் இருக்கு தேனைப் பருக வரும் வண்டுகளின் ரீங்கார இசை பெருகி நிற்கும் காட்சி போல மழைக்கான கருமேகம் போல நிறத்தினை உடைய திருமாலின் உள்ளமாகிய தாமரை மலரில் வாழும் மான் போன்றவளே!

உலகம் முழுதும் உன் இனிமையான செல்வத்தை கொடுக்கும் அருட்கொடியே, மிகுந்த அன்போடு உன்னை தாமரை போல் கரம் கூப்பி வணங்குவோர் தீவினை எல்லாம் தீர்த்து அருள் பொழியும் தாமரை மலர் போன்ற கண்களை கொண்ட தாயே என்பது பொருள்.

அகத்திய மாமுனி மிக மிக கவித்துவமாக இப்பாடலை பாடுகின்றார்.

எது இனிமையோ அதைச் சுற்றி ஒரு கூட்டம் இருப்பது இயல்பு. எது இன்பம் தருமோ எது வாழ்வுக்கு முக்கியமானதோ அதைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

தாமரை மலரில் இருக்கும் இனிமையான தேனைப் பருக வண்டுகள் குவியும், நீர் நிலையினைச் சுற்றி பறவைகள் குவியும், வயல்களை சுற்றி பல உயிர்கள் குவியும், செல்வர்களைச் சுற்றி வறியவர்கள் குவிவார்கள்.

அப்படி அன்னையினை நோக்கி உலக மானுடர்களெல்லாம் செல்வத்துக்காக நல் வாழ்க்கைக்காக துதி பாடி நிற்கின்றார்கள் என்பதை கவித்துவமாகச் சொல்கின்றார் அகத்திய முனி.

அன்னை அப்படியானவள் என்பதைச் சொல்பவர் அவள் இருக்கும் தாமரையினை இன்னும் உருவகமாகச் சொல்கின்றார்.

தாமரை நீர் இன்றி வாழாது, நீர் நிலையில்தான் வாழும்.

அப்படி மழைமேகம் போன்றவனான பகவானின் உள்ளத்தில் பூத்த தாமரையில் வாழ்கின்றாள். அந்த அன்பெனும் நீரில் பூத்த தாமரையில் அவள் வாழ்கின்றாள், மான்போன்ற சாயலில் வாழ்கின்றாள் என கவிதையாகச் சொல்கின்றார் அகத்தியர்.

அப்படியான அன்னை உலகெல்லாம் எல்லா மக்களுக்கும் நல்ல செல்வமும் அருளும் கொடுக்கின்றாள். அவளிடமிருந்தே இனிமையான ஆனந்தமான விஷயமெல்லாம் வருகின்றன.

லலிதா சகஸ்ர நாமம் அவளை இப்படி சொலின்றது

அவள் வசுதா அதாவது சுபிக்ஷத்தை, செல்வத்தை அருள்பவள்

அவள் ராஜ்யலக்ஷ்மி பிரபஞ்ச ராஜ்ஜியத்தின் அனைத்து செல்வ வளங்களுக்கும் உரிமை உள்ளவள்

அவள் தன-தான்ய விவர்தினீ அதாவது ஐஸ்வர்யத்தையும் தான்ய களஞ்சியங்களையும் அபிவிருத்தி செய்து, சுபிக்ஷம் அளிப்பவள்

அவள் மங்களாக்ருதி(ஹி)அதாவது சுபிக்ஷம் மற்றும் நன்மையின் உருவகமானவள்

அவள் தன்யா அதாவது அனைத்து வகை செல்வங்களுக்கும் அதிபதி

அவள் லோக யாத்ரா விதாயினீ அதாவது உலக நடவடிக்கைகளுக்கு காரணமானவள்.

அவள் விஷ்வமாதா அதாவது பிரபஞ்சத்தின் அன்னை

அவள் ஜகத் தாத்ரீ அதாவது பிரபஞ்சத்தை ரக்ஷிப்பவள் என்கிறது.

அப்படியான அன்னையினை போற்றி நிற்கின்றார் அகத்திய முனி

உன்னை தாமரை போல கரம் கூப்பி வணங்குவோரின் கர்ம வினை எல்லாம் தீர்த்து செல்வம் வழங்குபவள். தாமரைப் போன்ற கண்களைக் கொண்டவள் என்கின்றார்.

இங்கே தாமரையினை அவர் ஏன் திரும்பத் திரும்பச் சொல்கின்றார் என்றால் விஷயம் இல்லாமல் இல்லை.

தாமரை என்பது இந்து ஞானமரபில் மலர்ந்த அறிவின் அடையாளம், ஞானத்தின் அடையாளம், அறிவும் ஞானமுமே எல்லா காரியங்களிலும் வெற்றி தரும்.

திருமகளின் அருள் மழை என்றாலும் நல்ல நிலத்தில் விழும் மழைதான் பலனைத் தரும். அப்படி வாழ்வில் நல்ல செல்வமும் அந்தஸ்தும் செல்வாக்கும் பெற நுணுக்கமான அறிவு அவசியம்.

ஒரு விழிப்பும் நல்ல ஆற்றலும் அறிவும் அவசியம். அப்படி நல்ல அறிவும் திறனும் வாய்க்கப் பெற்றவர்களே செல்வம் குவிக்க முடியும்.

சிலருக்கு கர்மவினையால் பரம்பரையாக செல்வம் வரலாம். ஆனால் தனி ஒருவனாக ஒருவன் செல்வம் குவிக்க ஒரு விதமான தனித்துவ அறிவும் கவனமும் அவசியம்.

அந்த அறிவை அன்னை வழங்குவாள், அவளின் அந்த அருள் கிடைத்தால் ஏழை நொடியில் பணக்காரனாவான், வறியவன் செல்வனாகி விடுவான்.

அவள் அஞ்ஞான த்வாந்த தீபிகா – அஞ்ஞானமெனும் இருளை நீக்கும் ஒளிவிளக்காக சுடர்விடுபவள்

என சகஸ்ர நாமம் சொல்லும்.

சந்தர்ப்பத்தை பயன்படுத்துதல், அறிவாய் யோசித்தல், சரியான இடத்தில் சரியான படி செயல்பட்டு செல்வம் குவித்தல் என்பதெல்லாம் அன்னையின் அருள்.

இதையே பகவத் கீதையில் யோகம், க்ஷேமம் என இரு பதங்களை பகவான் கண்ணன் குறிப்பிடுகிறார்.

“அனன்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜனா பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம்யஹம் ||”

அதாவது “என்னை எப்பொழுதும் நினைக்கும் பக்தனுக்கு யோகத்தையும் (அவர்களிடம் இல்லாததைக் கொடுத்து), க்ஷேமத்தையும் (ஏற்கனவே அவர்கள் உடைமையாக பெற்றிருப்பதை பாதுகாத்தும்) அருள்கிறேன்”.

அதை பாடிச் சொல்கின்றார் அகத்தியர்.

அரசியல், வியாபாரம், விஞ்ஞானம், கல்வி, தொழில் என எதை நோக்கினாலும் இந்த விஷயத்தை அவதானிக்க முடியும், தனித்துவமான கவனமும் தொழில் கவனமும் கொண்டோர் வெற்றி பெறுவார்கள். இது அன்னையின் அருள்.

நல்ல சிந்தனை, நல்வாய்ப்பு, நல்ல காலம் என எல்லாமும் அவளால் வருவது எனப் பாடுகின்றார் அகத்தியர்.

அங்கே தாமரையினையும் வண்டையும் சொல்லி அழகான உவமையும் சொல்கின்றார்.

தாமரையில் தேன் இருக்கின்றது என்பது வண்டும், தேனிக்களும் மட்டும் அறிகின்றன, மற்ற உயிர்கள் அறிவதில்லை.

அவையே மலரை நாடிச் சென்று தேனை எடுத்து கூடு கட்டுகின்றன. அந்த தேன் பலருக்கு பயன்படுகின்றது. அப்படி அன்னையின் பக்தர்கள் அன்னையிடம் அருள் பெற்று உலக நன்மைக்கு கொடுக்கின்றார்கள். அன்னை அந்த இயக்கத்தை தன்னை நாடிவருவோர் மூலம் உலகுக்குச் செய்கின்றாள் என்பதையும் சொல்கின்றார் அகத்தியர்.

அன்னை லோகமாதா, மகாலட்சுமி என்பவள் எட்டுவகை லட்சுமி என விஸ்வரூபமெடுப்பவள். அப்படியான நிலையில் உலகுக்கு தானியம், செல்வம், தங்கம் என எல்லா மங்களமான செல்வங்களையும் அவளே கொடுக்கின்றாள்.

அன்னையின் துதி பாடும் லலிதா சகஸ்ர நாமத்தில் அவள்

அவளே உலக வாழ்வின் ஆதாரம், அவளே உலக வாழ்வின் மூலம், அவளே உலக வாழ்வின் அஸ்திபாரம். அவளாலேயே உலகம் இயங்குகின்றது என்பதைச் சொல்கின்றார்.

மகா முக்கியமான விஷயம் ஒன்றையும் போதிக்கின்றார் அகத்தியர் அது கர்மவினை.

ஒருவன் உலகில் படும் துன்பத்துக்கெல்லாம் காரணம் அவன் முன் ஜென்ம கர்மா அல்லது தீவினை, அந்த நிலையில் அவன் அன்னையினை கைகூப்பி வணங்கி நின்றால் அன்னை அவன் கர்ம வினை எல்லாம் தீர்த்து பெரும் வாழ்வு தருகின்றாள் என்கின்றார்.

அதுவும் தாமரை போன்ற கண்களை உடைய அன்னை என்கின்றார்.

அவள் “புஷ்கரேக்ஷணா”, “பத்ம நயனா”, “ராஜீவ லோசனா” தாமரை போன்ற கண்கள் உடையாள்.

அதாவது இரக்கமும் அன்பு நிறைந்த, அன்பு கண்ணீர் சிந்தும் தன்மை கொண்ட கண்களின் கருணையால் அன்னை தன்னை அண்டியோர்க்கு பெரு வாழ்வு வழங்குகின்றாள் என்கின்றார்.

இதைத்தான் ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரப் பாடலும் சொல்கின்றது.

முக்தா முஹீர்விதததீ வதனே முராரே(ஹே)
ப்ரேமத்ர பா ப்ரணிஹிதானி கதாகதானி |
மாலா த்ருசோர் மது கரீவ மஹோத்பலே யா
ஸாமே ச்ரியம் திசது ஸாகர ஸம்பவாயா(ஹா) ||

முக்தா என்றால் ஆசையுடன், முஹீர்விதததீ என்றால் இடைவிடாத, வதனே முராரே(ஹே) என்றால் முராரி (விஷ்ணு) முகத்தை

ப்ரேம என்றால் ப்ரேமையுடனும், த்ரபா என்றால் நாணத்துடனும், ப்ரணிஹிதானி என்றால் உற்று நோக்க
கதாகதானி என்றால் (அன்னையின் பார்வை) சென்று சென்று வருவது

மாலா என்றால் தொடர்ந்து த்ருசோர் என்றால் பார்த்தால், மதுகரி இவ என்றால் வண்டுகள்
மஹோத்பலே யா என்றால் நீலத்தாமரை மலரை (சுற்றி வருவதைப் போல் உள்ளது)

ஸா என்றால் அவள் (அப்படியான அந்த கடைக்கண் பார்வை) , மே என்றால் எனக்கு
ச்ரியம் என்றால் செல்வங்களை, திசது என்றால் அருளட்டும்

ஸாகர ஸம்பவாயா(ஹா) என்றால் சாகரத்தில் சம்பவித்தவளே! (பாற்கடலில் பிறந்தவளே) என பொருள்

“மரகதத் தமாலமலர் மொட்டுகளை மொய்க்கின்ற
பொன்னிறக் கருவண்டுபோல்
மாதவன் மார்பினில் வாசம் புரிந்தங்கு
மெய் சிலிர்ப் பேற்றும் விழிகள்
பரவும் பல் வடிவத்தின் செல்வ வள மாகிடும்
திருமகளின் அழகுவிழிகள்
பரிவோடு தந்த இரு விழிகளின் கடைநோக்கு
மங்களமெ னக்கருள்கவே”

இந்த வரிகளைத்தான் அகத்திய மாமுனி தன் பாடலிலும் பாடுகின்றார்

“தாமரையன்ன முகமும் கண்ளும் கால்களும்
எழிலாய் பெற்றுச் செந்தாமரையில் தோன்றி யவளே”

என்பது மஹாலஷ்மி அஷ்டக பாடல்.

அன்னை இந்த உலகத்தை இயக்குபவள். பூமாதேவி என இந்த பூலோகம் அவளுக்கு கட்டுப்பட்டது, இங்கு எல்லாமும் இயக்குபவள் அவள்.

மழைமுகில் வண்ணன் இந்த பூமியினை காக்கும் பொறுப்பை ஏற்றிருக்கின்றார் என்றால் அவர் நெஞ்சில் வாழும் தேவியானவள் எல்லா உயிரையும் வாழவைக்கும் பெரும் பொறுப்பை கொண்டிருக்கின்றாள்.

அவளிடம் கைகூப்பி மன்றாடினால் எல்லா செல்வமும் தருவாள், மலர்கள் அனுதினமும் வண்டுகளுக்கும் தேனிக்களுக்கும் தேனை தருவது போல் இன்பம் அனைத்தும் தருவாள், கர்ம வினை எல்லாம் தீர்த்து நலம் தருவாள் என்பது பாடலின் பொருள்.

வண்டுகள் ரீங்காரமிடும் தாமரை என்பது ஒருவித தியான வழிபாட்டைச் சொல்லும் காட்சியும் கூட, வண்டுகள் இடைவிடாது மலரைச் சுற்றிவருவது போல அன்னையின இடைவிடாது சுற்றிவந்து வரம் வாங்கி வாழவேண்டும் என்பதே அந்த காட்சியின் விளக்கம்.

முதல் பாடலில் அன்னையின் பாதம் பணிந்து வேண்டச் சொல்லும் அகத்தியர் இரண்டாம் பாடலில் அவளின் விழிகள் நோக்கி கரம் கூப்பி கேட்கச் சொல்கின்றார்.

அன்னை இரக்கமே மழைமேகமாய் கொண்ட விஷ்ணுவின் மனதில் வசிப்பவள், அதனால் அவளும் பெரும் இரக்கமும் கருணையும் கொண்டவள்.

தரஸ்மேர முகாம்புஜா எனும் அலர்ந்த அழகிய தாமரையைப் போன்ற புன்னகைத் தவழும் முகத்தினள்.

விசாலாக்ஷீ எனும் அகண்ட விசாலமான விழிகள் உடையவள் (உலகையே காக்கும் விழிகள்)

அந்த இரக்கத்திலும் தாய்மையின் கருணையிலும் தன்னிடம் கையேந்தி நிற்கும் பக்தனை வாழவைப்பாள் என்பது இப்பாடலின் போதனை