அகத்தியர் திருமகள் துதி : 03
அகத்தியர் திருமகள் துதி : 03
“கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி
செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலோன்
தனையீன்ற விந்தை தூய
அமுதகும்ப மலர்க் கரத்தாய் பார்கடலுள்
அவதரித்தோய் அன்பர் செஞ்சத்
திமிரமகன் றிட வொளிருஞ் செஞ்சுடரே
எனவணக்கஞ் செய்வான் மன்னோ…..”
இப்பாடல் இப்படி பிரிந்து பொருள் தரும்.
“கமலை திரு அமரும் மார்பன் மனை கிழத்தி
செங்கழு கமலம் கையாய் செய்ய
விமலை பசங்கழை குழைக்கும் வேனிலோன்
தனை ஈன்ற விந்தை தூய
அமுத கும்ப மலர் கரத்தாய் பார் கடலுள்
அவதரித்தோய் அன்பர் செஞ்சத்து
திமிர் அகன்றிட உள்ளிருக்கும் செஞ்சுடரே
என வணக்கம் செய்வான் மன்னோ”
அதாவது திருமகளே, செல்வமெல்லாம் வாழும் மார்பினை உடையவனாகிய திருமாலை ஆள்பவளே, செழுமை வாய்ந்த தாமரை மலர்போன்ற கைகளை உடையவளே.
பரசுத்தமானவளே, பசுமையான கரும்பினை வில்லாக வளைக்கின்ற வேனிற் காலத்துக்கு உரியவனாகிய மன்மதனைப் பெற்ற திருமகளே, தூய்மை வாய்ந்த அமுதம் நிறைந்த குடத்தை ஏந்திய தாமரை மலர் போன்ற கைகளையுடையவளே.
திருப்பாற்கடலில் பிறந்தவளே! அன்பர் நெஞ்சத் திமிராகிய இருள் அகன்றிட விளங்குகின்ற செழுமையான பேரொளியே என்று வணங்குகின்றேன் எனப் பொருள்.
இப்பாடலில் அன்னையின் பெருமைகளை இன்னும் சொல்கின்றார் அகத்திய மாமுனி.
அன்னை யார் என்றால் செல்வம் வாழும், உலகின் எல்லா வகை செழுமையும் ஐஸ்வர்யமும் கொண்டிருக்கும் திருமாலின் மார்பில் உறைபவள், அவளே பாற்டல் வாழ் பகவானின் வீட்டு எஜமானி. அவள்தான் வைகுண்டத்திலும் ஆட்சி செய்கின்றாள். அவளே எல்லா செல்வத்தின் ஐஸ்வர்யத்தின் உறைவிடம், களஞ்சியம். அவளாலே உலகம் செல்வமும் வளமையும் பெறுகின்றது.
அவள் தாமரை மலர் போன்ற கைகளை உடையவள் என்பது அவள் விரிந்த கரங்களைக் கொண்டிருக்கின்றாள். அள்ளி அள்ளித் தரும் கரங்களைக் கொண்டிருக்கின்றாள் எனும் கருணை உள்ளத்தைச் சொல்வது.
அடுத்து அவளை விமலை என்கின்றார். விமலை என்றால் மகா பரிசுத்தமானவள். ஒரு சிறிய குற்றம் கூட சொல்ல முடியாதவள் என்பது பொருள். அதை சொல்கின்றார் அகத்தியர்.
அடுத்து அவளை மன்மதனின் தாய் என்கின்றார்.
ஆம், மன்மதன் என்பவன் கரும்பு வில் ஏந்தி நிற்பவன். அவனே காதல் இன்பத்துக்கும் அதனால் ஏற்படும் மானுடச் செல்வம் முதல் பல இன்பங்களுக்கும் அதிபதியாகின்றான்.
அந்த மன்மதன் அன்னையின் மகன். அன்னையில் இருந்தே அனங்க தேவன் எனும் மன்மதன் உலக இன்பங்களுக்காக உயிர்களிடையே பாசபந்த பிணைப்பை ஏற்படுத்த உதித்தான். அவ்வகையில் அன்னையே அவனை மானிட இன்ப வாழ்க்கைக்கு படைத்து அனுப்பினாள் என்கின்றார் அகத்தியர்.
அடுத்து அவள் அமுதக் குடத்தை போன்ற கரங்களைக் கொண்டவள் என்கின்றார். அதாவது அன்னையின் கரம் அமுதக் குடம் போல எல்லா நலன்களையும் வரங்களையும் தரவல்லது என்கின்றார்.
கடைசியாக திருப்பாற்கடலினைக் கடையும் போது உதித்த திருமகளே, அடியார் நெஞ்சத்து அகங்கார இருளை எல்லாம் அகற்றி ஒளி கொடுப்பவளே என்பது பொருள்.
பாற்கடலை கடையும் போது வெளிவந்தவள் அன்னை மகாலட்சுமி. அவள் தங்களை நோக்கி வருகின்றாள் தாங்களே சிறந்தவர்கள் என ஒவ்வொரு தேவரும் அகங்காரத்தோடு நிற்க, எதையும் எதிர்பாராமல் தன் போக்கில் இருந்த விஷ்ணுவிடம் வந்து அவள் அடைக்கலமானாள். இது புராண செய்தி.
அதாவது அகங்காரிகளிடம் அன்னை வரமாட்டாள். யார் மனம் அகங்காரமற்று நிற்கின்றதோ அங்கு வந்து அருள் வழங்குவாள். அவள் இருக்குமிடம் ஒளிமட்டுமே இருக்கும் என்கின்றார்.
இப்படியான அன்னையினை வணங்குகின்றேன் என்கின்றார் அகத்திய மாமுனி.
இங்கே அவர் சொல்லும் விஷயம் அன்னை எல்லா லோகத்தையும் காக்கும் திருமாலின் மார்பில் இருக்கின்றாள். வைகுண்டத்தை ஆள்கின்றாள்.
அதாவது மூவுலகின் செல்வத்துக்கும் வாழ்வுக்கும் அவளே மூலம். அப்படியே அவளே மன்மதனை படைத்தாள். அதனால் பூலோக இன்ப வாழ்வுக்கும் அவளே பொறுப்பு. இன்ப வாழ்வினைத் தருபவள் அவளே எனப் பாடுகின்றார்.
இப்படிச் செல்வம், இன்பம் என எல்லா சுகங்களையும் தரும் அன்னை இன்னும் கேட்ட வரத்தையெல்லாம் தர விரிந்த தாமரை போன்ற கைகளுடன் தயாராக இருக்கின்றாள்.
அமுதக் குடங்களை மூடிய தாமரை போன்ற கைகளை உடைய அன்னை அழியா வரங்களைத் தருபவள். அவள் அகங்காரிகள் நெஞ்சுக்கு வரமாட்டாள். அகங்காரமின்றி அவளைப் பணிந்தால் செல்வமெல்லாம் பெறலாம் எல்லா வரங்களையும் பெறலாம். அத்தகைய அன்னையினை நான் வணங்குகின்றேன் என வணங்குகின்றார்.
மூவுலக வாழ்வு, இவ்வுலகச் செலவ்ம், இன்பம், வேண்டும் வரம், நீண்ட ஆயுள் என எல்லாமும் தருபவள் அன்னை. தன்னை பணிவோர்க்கு எல்லாம் தருபவள் அன்னை என்கின்றார் அகத்திய முனி.
இதைத்தான் மகாலஷ்மி அஷ்டகம் சொல்கின்றது.
“அகில உலகை ஆளும் அரசியாய் அள்ள அள்ளிக்
குறையா பெருநிதி தருபவளாய் அனைவரையும்
தாயாய்க் காக்கு மவளால் என்குலமே எழுந்தருளட்டும்.”
“மகாலட்சுமியே! எப்பொழுதும் ஆற்றல் ஆரோக்கியம்
வளமிகு வாழ்வுதந்தவாறே காற்று வீசட்டும்
எனக்கு தனதான்யம் கால்நடை மக்கள் செல்வம்
நூறாண்டு வாழ்வு நீள் ஆயுள்
தந்துஎன் கடன்பசி நோய்வறுமை அகால மரணம் பயம்
கவலை மனத்துன்பம் இவையாவையும் அழிப்பாய்
ஸ்ரீதேவி சென்றடையும் பாக்கியவான் புவியினில்
செல்வங்களை பெற்று வெற்றி நீள் ஆயுள்
மகிழ்வு புகழுடன் சுகவாழ்வு வாழ்ந்து
மரணமில்லா பெரும்பேற்றை எளிதில் அடைகிறான்.
எல்லாநலன்களும் திருமகளே என்றறிந்து
மந்திரங்கள் வேள்விகள் இடையின்றிச் செய்பவர்
அம்ருதாவை அடைந்து அவளருளால் வாழ்வில்
மக்கள் கால்நடை மிகு செல்வம் சேரவாழ்வர்.”
எனச் சொல்வதும் அதே மகாலஷ்மி அஷ்டகமே.
இந்தப் பாடல்தான் பின்னாளில் ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தில் அழகாகப் பாடப்பட்டது.
“ஆமீலிதாக்ஷ மதிகம்ய முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ மநங்க-தந்த்ரம் |
ஆகேகர ஸ்தித கனீனிக பக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேன்மம புஜங்க சயாங்கனாயா: || “
ஆமீலித என்றால் மலர்ந்த (அன்னையில்), அக்ஷ என்றால் கண்கள், அதிகம்ய என்றால் பெறுதல் / அடைதல் (காணுதல்)
முதா என்றால்மகிழ்ச்சியான / இன்பமான. முகுந்தம் என்றால் முகுந்தணை
ஆனந்த கந்தம் என்றால் ஆனந்தம் அநிமேஷ என்றால் இமைக்காத, அநங்க-தந்த்ரம் என்றால் அனங்கன் / மன்மதனின் சாயல் (மோகத்தை)
ஆகேகர என்றால் ஓரத்தில், ஸ்தித என்றால் இருக்கும், கனீனிக என்றால் கண்மணி (அருள்)
நேத்ரம் என்றால் கண்கள், பூத்யை பவேத் என்றால் கிடைக்கட்டும்
மம என்றால் எனக்கு, புஜங்க சய என்றால்பாம்பில் படுத்திருக்கும் (திருமாலின்)
அங்கனா என்றால் அங்கத்தில் / மார்பில் இருப்பவளே (எனக்கு அருள்வாயாக)
“ஆனந்த மாய்ச்சற்று விழிகளை மூடிய
முகுந்தனைக் காணும்விழிகள்
ஆனந்தம் தந்தபடி இமைசிறிதும் அசையாது
இனிமையை வார்க்கும்விழிகள்
மன்மதச் சாயலைத் தன்னிலேற் கும்விழிகள்
பள்ளிகொள் ளும்பரமனின்
மனைவியாம் திருமகளின் பாதிமூடும் விழிகள்
செல்வசுகம் யாவுமருள்க”
ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதினி மன் மதேந |
மய்யாபதேத் ததிஹ மந்தர மீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் சமகராலய கந்யகாயா: ||
ப்ராப்தம் என்றால் (அன்னையால்) கிடைத்தது, பதம் -என்றால்பதவி
ப்ரதமதஎன்றால் முதலில் , யத் ப்ரபாவாத் என்றால் இந்த ப்ரபாவம் / சக்தி , மன்மதேந என்றால் மன்மதனுக்கு
மாங்கல்ய என்றால் மங்கல,பாஜி என்றால் உருவானவளே, மது மாதினி என்றால் மதுவை கொன்ற (திருமாலின்), மய்யா பத என்றால் என் மீதும் விழட்டும் (அந்த பார்வை), தத் இஹ என்றால்அது இப்பொழுது இங்கு மந்தர என்றால் மந்தமான
ஈக்ஷண என்றால் பார்வை , அர்த்தம் என்றால் பாதி (மூடிய), மகர-ஆலய என்றால் முதலைகளின் இருப்பிடம் (கடல்) , கந்யகா என்றால் கன்னிகை / பெண்.
ஆக பாடல் இப்படி ஒலிக்கின்றது
“மங்கலங் கள்யாவும் தன்னிடத் தில்கொண்ட
மாயன்வை குந்தன்நெஞ்சில்
மதுகைட பர்யெனும் வலிமைமிகு அசுரரை
மாய்த்தத்திரு மாலின்நெஞ்சில்
மன்மதன் சென்றமர வழிசெய்த வைஅந்த
கடல்குமரித் திருவின்பார்வை
புன்சிரிப் பேந்திடும் அந்தகடை கண்பார்வை
என்னையும் அருளட்டுமே”