அகத்தியர் திருமகள் துதி : 05
அகத்தியர் திருமகள் துதி : 05
“மல்லல்நெடும் புவியனைத்தும் பொது நீக்கித்
தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில்
நிகரில்லாக் காட்சி யோடும்.
வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில்
வாகைபுனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின்
அருள் நோக்கம் அடைந்து ளாரே”
அதாவது மிக மிக செழுமையான பூமியினை பெற்று ஆட்சி செயும் அரசர்களும், மாபெரும் கல்வியாளர்களும், அறிவிலும் அழகிலும் சிறந்து விளங்குவோரும், மிக திறமையான படையினால் பகைவர்களை வெற்றி கொள்வோரும் தாமரை முகட்டில் இருப்பவளும் அழகிய அணிகலன்கள் அணிந்தவளுமான அன்னையின் அருள் பெற்றவர்கள் ஆவர் என்பது பாடலின் பொருள்
அன்னை மகாலட்சுமியே பூமியின் தாய், பூமியின் எல்லா அதிகாரங்களும் அவளுக்கு அருளபட்டுள்ளன. அவள் தனக்கு விருப்பமானவர்கள் யாரோ அவர்களுக்கு எல்லா வளங்களையும் கொடுக்கின்றாள்
அவளின் அருள் பெற்றோர் யாரென்றால் மிக மிக செழிப்பான நாட்டை ஆளும் மன்னர்கள் என செல்வாக்கும் அதிகாரமும் பெற்றவர்கள்
பெரிய கல்வியாளர்கள் என அறிவும் திறனும் பெற்றவர்கள், மிக அழகானவர்கள் என பிறர் பெறமுடியா தனி சிறப்பை பெற்றவர்கள்
அடுத்து பெரும் வீரமான படையுடன் பகை அடைக்கி வாழ்பவர்கள்
ஆக செல்வம், கல்வி, வீரம், புகழ், தனித்த சிறப்பு என எல்லா ஐஸ்வர்யத்தையும் அன்னையே தருகின்றாள், அவளே எல்லாவற்றையும் தந்து வளமுடன் வாழவைக்கின்றாள் என்பது அகத்தியர் சொல்வது
ஆம், இந்த உலகில் எல்லாமே ஒரு வரம் கல்வி, செல்வம், வீரம், அழகு, அறிவு என எல்லாமே வரம். அன்னையே அந்த வரங்களின் ஊற்றானவள் அவளே மூலம் அவளாலே எல்லாம் சாத்தியம் என்பது அகத்திய முனியின் வாக்கு
இதைத்தான் பாரதி தன் மஹாலஷ்மி கவிதையிலும் பாடினான்
“தோரணப் பந்தலிலும் – பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்
வீரர்தன் தோளிலும் – உடல்
வெயர்ந்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் – ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள்
பொன்னிலும் மணிகளிலும் – நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் – செழுங்
காட்டிலும் பொழிவிலும் கழனியிலும்
முன்னிய துணிவினிலும் – மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி – அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம் பெறுவோம்.”
அதையே மஹாலஷ்மி அஷ்டகமும் சொல்கின்றது
“திருமகளே வறுமையெனை விட்டோட அருள்வாய்
அருணன் நிறத்தவளே நின்தவத்தால் மரங்களின்
தலைவன் வில்வம் தோன்றியவரா தன்கனிகள்
அறியாமை அமங்கலம் அகப்புறத் தடையாவையும்
அழித்து மங்களம் உண்டாக்க வேண்டுகிறேன்.
பொருளரசன் குபேரனும் புகழரசனும் செல்வங்களுடன்
பணியரசன் எனைநாடி வருகவே நினதருள்
நிறைசேர் பூதலம் உதித்த யெனக்கு
நிறைமிகு செல்வம்புகழ் பெருமை தந்தருள்வாய்”
அகில உலகை ஆளும் அரசியாய் அள்ள அள்ளிக்
குறையா பெருநிதி தருபவளாய் அனைவரையும்
தாயாய்க் காக்கு மவளால் என்குலமே எழுந்தருளட்டும்.
பொன்மகளின் தண்ணருளால் பூலகில் தண்ணீரால்
உயிர்வளர் தானியங்கள் உற்பத்தி மிகவாகி
என்னில்லை நிரப்பட்டும் உலக அன்னை திருமகளாம்
உதாராங்கா யெம்குலமே ஏகிவாழ அருள்வாய்
சித்தம் சிந்திப்பதை நிறைவேற்றி யருளும்
சித்தலட்சுமி யாய்வெற்றி தரும்ஜெயலட்சுமியாய்
பெரும்தனம் தரும் தன லட்சுமியாய் வேண்டியது
வேண்டியாங்கு தரும்வர லட்சுமியாய் அறிவுதரும்
சரஸ்வதியாய் முக்திதரும் மோட்ச லட்சுமியாயுள்ள
மகாலட்சுமியே நான்வேண்டும் வரந்தந் தருள்வாய்”
என்பது மஹாலஷ்மி அஷ்டகம் சொல்லும் வரிகள்
ஆம், அன்னையே எல்லா கலைக்கும் செல்வத்துக்கும் வீரத்துக்கும் மோட்ச பாக்கியத்துக்கும் வேண்டிய வரங்களை தருவாள் என்பது மகால்ஷ்மி அஷ்டகம் சொல்லும் போதனை
இதே வரிகளை அபிராமி பட்டரும் தன் பாடலில் பாடுகின்றார்
“வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே”
அவரின் பாடல் படி இவ்வுலகில் பொருள் மிக்கோர் குறைவு அப்படியே தவம் செய்வோரும் குறைவு . அப்படி இப்பொழுது செல்வம் பெற்றிருப்பவர்கள் முற்பிறவியில் தவம் செய்தவர்கள், இப்பொழுது தவம் செய்து அன்னை அருளை பெறுவோர் அடுத்த பிறவியில் செல்வராய் பிறப்பர்
அதாவது முற்பிறவியில் அன்னையின் அருள் பெற்றவர்கள், அன்னையினை நோக்கி தவமிருந்தவர்களை இப்பிறப்பில் எப்படி கண்டுகொள்ளாலாம் என்றால் சில அடையாளங்களோடு கண்டு கொள்ளலாம் என சொல்லும் பட்டர் அந்த அடையாளங்களை வரிசைபடுத்துகின்றார்
அவர்கள் ஆளுகையில் பெரும் பூமி இருக்கும், குதிரை பூட்டிய தேரில் பவனி வருவார்கள், பெரும் பலமான யானைகள் வைத்திருப்பார்கள், முத்து பல்லக்கு கொண்டிருப்பார்கள்
தங்கம் மழைபோல் அவர்கள் முன் கொட்டபடும், விலை உயர்ந்த மணிமாலைகள் சூட்டபடும் என்கின்றார்
சுருங்க சொன்னால் இப்பிறவியில் பெரும் மன்னனாகவும், மன்னனுக்குரிய செல்வாக்குடனும் செல்வத்துடனும் வலம்வருவோரின் செல்வமும் செல்வாக்கும் இப்பிறவியில் வந்ததல்ல அது முற்பிறவியில் செய்த தவத்தால் வந்தது அவர்கள் அரசனாக அரசுக்குரிய எல்லா அடையாளங்களையும் பெற்றிருப்பார்க்ள் என்பது பொருள்
கலைமாம கள்என்றும் கருடக்கொ டியானின்
அலைமாம கள்என்றுமாய்
நிலமாளும் சாகம்ப ரிஎன்றும் பிறைசூடும்
பெம்மானின் மலைமகளுமாய்
உலகத்திலே நின்று உயிர்படைத் துக்காத்து
முடிப்பதை விளையாட்டென
செய்பவள் மூவுலகம் ஆளும்நா ராயணனின்
நாயகியே போற்றிபோற்றி
செல்வங்கள் தருபவளே ஐம்புலனும் ஆனந்தம்
பெற்றிடச் செய்யும்தாயே
பல்வகைப் பதவிகள் அரியாச னங்களைத்
தருகின்ற கமலநயனீ
அல்லல் வினைகளைப் போக்குபவ ளேஎங்கள்
அஞ்ஞானம் நீக்குபவளே
செல்வியே தொழுகிறேன் உன்னையே அன்னையே
என்னையே என்றுங்காப்பாய்”