தசமஹாவித்யா 01 : காளி

தசமஹாவித்யா 01 : காளி

காளி என்றால் காலம், காலத்தை கட்டுப்படுத்தும் மகா சக்தி எனப் பொருள். காலத்தை கடந்து நிற்பவள் என்றும் பொருள். அது இருளைக் குறிக்கும் சொல்லாகவும் அறியப்படும். இருள் என்றால் இங்கு அறியாமை அல்ல, அது எல்லாம் அறிந்து இயக்கும் அபாரமான மகா சக்தியின் அடையாளம்.

இந்த உலகில் எல்லாமே இருளில் இருந்தே பிறக்கின்றது. ஒளி என்பது இருளில் இருந்தே வரும், இந்தப் பிரபஞ்சத்தின் 90% கருமையானது, உயிர்கள் ஜெனிக்கும் தாயின் கருவறை முதல் நீர்கொடுக்கும் மேகம் வரை இங்கு எல்லாமே கருமை.

இதனாலேதான் ஆலயக் கருவறைகளும் இருள் சூழ்ந்தே அமைக்கப்பட்டன. எல்லாமே கருமையிலிருந்து தொடங்குவதால் இந்த மகா சக்தியும் கருமை என இந்து ஞானியரால் சொல்லப்பட்டது

இந்த அன்னையின் தோற்றமும் சிறப்பும் மது கைடப வதத்தில் இருந்து தேவி பாகவதத்தில் சொல்லப்படுகின்றது. அப்படியே பல புராணங்களிலும் சொல்லப்படுகின்றது. நைமிசாரண்ய முனிவர்களுக்கு உடைக்கப்பட்ட புராணம் முதல் பல புராணங்களில் இது விளக்கப்படுகின்றது.

மார்கண்டேய மகரிஷி உள்ளிட்ட பலர் இதனை விளக்குகின்றார்கள்.

அதன்படி இந்தப் பிரபஞ்சம் ஒரு ஊழிகாலத்தில் ஒடுங்கியபோது எங்கும் நீர் நிறைந்திருந்தது, விஷ்ணுவோ அயர்ந்த நித்திரையில் இருந்தார், அவரின் நித்திரை இந்த உலகுக்கு நல்லதல்ல, உலகம் இயக்கப்பட அவர் நித்திரை களையப்பட வேண்டும்.

அங்கேதான் அன்னை ஒரு மாயம் செய்தாள், பகவானின் காதில் இருந்த அழுக்கினை எடுத்து சமுத்திரமாக பெருகியிருந்த நீரில் இட்டாள், அதிலிருந்து மது கைடபர் என இரு அசுரர்கள் தோன்றினார்கள்.

கடலிலே வளர்ந்து வந்த‌ அவர்களுக்கு “ஐம்” எனும் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது. பிரபஞ்ச நாதமான அதனை ஆயிரம் ஆண்டுகள் கேட்டதால் திரும்ப திரும்ப சொல்லவும் தொடங்கினார்கள். அது சரஸ்வதியின் மந்திரமாதலால் அவர்களுக்கு அவளே காட்சியளித்து வேண்டியன என்ன எனக் கேட்டாள்.

அவர்கள் மகிழ்ந்து “அன்னையே நாங்கள் விரும்புபடி விரும்பும் நேரமே மரணம் சம்பவிக்க வேண்டும்” எனச் சொல்லிக் கேட்டார்கள், அன்னையும் அவர்களுக்கு வரமருளினார்.

அந்த வரம் பெற்றபின் இரு அசுரர்களின் ஆட்டம் எல்லை மீறிற்று, அவர்கள் பிரம்மனை அதட்டி அவர் கையிலிருந்த சுவடிகளைப் பிடுங்கி இந்த உலகை இனி நாங்களே படைப்போம் எனக் கிளம்பினார்கள், பெரும் அனர்த்தனம் ஆரம்பமாயிற்று.

பிரம்மன் விஷ்ணுவிடம் ஓடிச் சென்று தன்னையும் உலகையும் காக்கும்படி அடைக்கலமானான், பகவானும் அவர்களோடு யுத்தம் புரிந்தார். ஆனால், சரஸ்வதியிடம் பெற்ற வரம் காரணமாக அவரால் அவர்களை வெல்லமுடியவில்லை. அழிக்கமுடியவில்லை.

இந்த யுத்தம் 5000 ஆண்டு நடந்தது, மிகக் களைத்துப் போன விஷ்ணு தேவியினை அழைத்தார், இதனைத் தேவி மஹாத்மியம் தெளிவாகச் சொல்கின்றது.

அங்கே அன்னை ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் துயிலெழுவதற்கும், அவரின் கண்கள், வாய், மூக்கு, கைகள், இதயம் ஆகிய இடங்களிலிருந்து வெளிப்பட்டு எட்டு கைகளும், சங்கு, சக்கரம், வாள், கதை ஏந்திய கரங்களுமாய் வந்து நின்றாள்.

அந்த மகா லஷ்மி கோலத்தைக் கண்டு விஷ்ணு பணிந்தார். அவருக்கு அன்னை உரைத்தாள், “இந்த இரு அசுரர்களும் சரஸ்வதியிடம் வரம் வாங்கியவர்கள். அதனால் அவர்களை அழிக்க ஞானம் அவசியம், நான் உனக்கு அதை தந்தேன், இனிப் போரிடச் செல்” எனச் சொல்லி ஆசீர்வதித்தாள்.

விஷ்ணு அந்த அசுரர்களைத் தந்திரமாக வெல்லும்படி அன்னை அவர் மனதைத் தூண்டினாள். அதன்படி விஷ்ணு அவர்களிடம் சரணடைவது போல் நடித்து “உங்களைப் போல் பெரும் வீரர்களை நான் கண்டதே இல்லை, என்ன வரம் வேண்டுமோ கேளுங்கள்” எனச் சமாதானம் பேசினார்.

அவர்களோ, “என்ன வரம் நீர் தருவது, உமக்குத் தேவையான வரத்தை எம்மிடம் கேளும்” என நகையாடினார்கள், அந்த வாய்ப்புக்குக் காத்திருந்த விஷ்ணு, “என் கையால் உங்களை கொல்ல வேண்டும்” எனக் கோரினார்.

தாங்கள் வசமாகச் சிக்கிவிட்டதை உணர்ந்த இரு அசுரர்களும் திகைத்தனர், ஆனாலும் தந்திரசாலிகளான அவர்கள் நீரால் நிரம்பிய உலகம் என்பதால் சொன்னார்கள், “இங்கு நீரே இல்லாத உலர்ந்த இடத்தில் எங்களைக் கொல்லலாம்”

அப்படி ஒரு இடம் இல்லை என்பதால் அப்படிப் சொன்னார்கள். ஆனால், விஷ்ணு தன் தொடையில் அவர்களை அமரவைத்து சம்ஹாரம் செய்தார்.

அப்போது அன்னை காளி தன் விஸ்வரூபம் காட்டி நின்றாள், எல்லாம் அவள் செயல் என்பதை அறிந்து கொண்டார், அதாவது இந்த உலகைப் படைப்பதும் இயக்குவதும் காப்பதும் அவளே என்பதை உணர்ந்து கொண்டார்.

அந்த அசுரர்கள் அழிக்கப்பட்டபின் அன்னை புதிய உலகை உருவாக்கினாள். அங்கே நீரெல்லாம் வற்றியிருந்தது, மழையில்லை, அந்நேரம் ரிஷிகளெல்லாம் சேர்ந்து அவளைத் துதித்தார்கள்.

அப்போது அன்னை காய்கறிகளை அணிந்து சாகம்பரி தேவியாக வந்தாள். முனிவர்கள் அவளின் தோற்றத்தை இரு கண்ணால் காணமுடியாமல் தவிக்க அவள் 100 கண்களைக் கொடுத்தாள், இதனால் அவளை “சதவர்ஷினி” என முனிவர்கள் கொண்டாடினார்கள்.

அதன்பின் அன்னை தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த துர்க்காசுரன் என்பவனை ஒழித்தாள். அதனால் துர்க்கா என்றானாள். பின் சண்ட முண்டன், சும்ப நிசும்பன், மகிஷாசுரன், பாணாசுரனையெல்லாம் வதம் செய்து எல்லோரையும் காத்தாள், இன்றுவரை இந்த லோகத்தை அவளே காக்கின்றாள்.

இதுதான் தசமஹா வித்யாவின் முதல் தேவியான காளி பற்றிய மிக மிகச் சுருக்கமான வரிகள் எனப் புராணம் சொல்வது. இதனை ஒவ்வொரு காட்சியாக, ஒவ்வொரு வரியாக கவனித்தால் அன்னையின் பெரும் தத்துவம் புரியும்.

இந்தப் பிரபஞ்சம் அவளில் இருந்தே தொடங்கி அவளிலே முடிகின்றது, எல்லாமே அவளில் இருந்துதான் தொடங்குகின்றது பின் பிரபஞ்சமாய் விரிந்து ஊழிகாலத்தில் அவளிடமே ஒடுங்குகின்றது.

அவளே இந்த உலகைப் படைக்கின்றாள், அவளே எல்லா மாயமும் செய்கின்றாள், அவளிடமிருந்தே சுத்த மாயை, அசுத்தமாயை என இரண்டும் பிறக்கின்றது.

சுத்த மாயை தேவர்கள் தெய்வ குணங்கள் என்றும், அசுத்த மாயை அசுரர் அசுர குணம் என்றும் பிரிகின்றது. அவளே தர்மத்தின் பொருட்டு எல்லாவற்றையும் இயக்குகின்றாள், அதே நேரம் முழு ஞானத்துடன் இயக்குகின்றாள்.

படைப்பின் ஞானம் அவளே, இந்தப் பிரபஞ்சத்தின் எல்லா அதிசயமும் அவளின் ஞானமே. அதனாலேதான் இங்கு எல்லாமே தன் அளவில் மிகுந்த தர்மத்துடன் ஞானத்துடன் செயல்படுகின்றது. வானத்துக் கோள்முதல் சிறிய எறும்பு வரை அதனதன் ஞானத்தில் நிற்பது அவளாலே.

அந்த அறிவாலே அவள் விஷ்ணுவினைக் கொண்டு அசுரர்களை அழித்தாள், இந்த உலகை நல்லமுறையில் படைக்கப் பிரம்மனுக்கு துணையாய் வந்தாள்.

அந்தக் காட்சியினைக் கவனியுங்கள். விஷ்ணுவின் உடல்பாகங்களில் இருந்தே மஹாலஷ்மியாய் அவள் தோன்றினாள் என்பதிலே அவள் விஷ்ணுவின் சக்தியாய் இருந்தாள் என்பது தெரியும்.

இந்துப் புராணம் இந்தப் பிரபஞ்சம் உருவான விஞ்ஞான தத்துவத்தை அழகாகச் சொல்கின்றது. அதாவது, முதலில் ஒன்றுமே இல்லை, பின் நீருடன் கூடிய உலகம், பின் நீரற்ற வறண்ட உலகம், பின் காய்கறிகள் தோற்றம் என ஒவ்வொன்றாய் அதன் படிநிலையினைச் சொல்கின்றது.

அதாவது. இன்று விஞ்ஞானம் உலகம் தோன்றிய படிநிலையினை விளக்குவதை அன்றே அன்னையின் தத்துவம் சொல்லி. அவள் மூலம் உருவான உலகு என இந்த உலகைப் படைத்து காக்கும் மகா காளி பற்றி மிகத் தெளிவாக அன்றே சொன்ன மதம் இந்துமதம்.

இந்தக் காளிதான் படைக்கும் சக்தி; இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவள் அவளே; அதைக் காப்பவளும் அவளே; ஞானமாய் வழிநடத்துபவளும் அவளே.

முன்பே சொன்னபடி அவள் கருநிறம் என்பதன் பொருள் இங்கு அந்த மாபெரும் பிரபஞ்சம் அவளில்தான் கருமையில் ஒடுங்கியிருந்தது, தாயின் கருவறையினைப் போல் எல்லாமே அவளில்தான் ஒடுங்கியிருந்தது.

பின் அவளாலே இந்தப் பிரபஞ்சம் உருவானது. அங்கு எல்லாமும் கருமையில் இருந்தேதான் தோன்றின, அதனாலே அவளுக்குக் கரும் நிறம் கொடுக்கப்பட்டது. எங்கே படைப்பு உருவாகின்றதோ அங்கே இருக்கும் முதன்மை சக்தி கருப்பு.

அது நெருப்பின் புகை முதல் மூடப்பட்ட சக்திமிக்க எந்திரம் வரை கவனியுங்கள் புரியும். எல்லாச் சக்தியும் உருவாகும் இடம், படைப்பும் சக்தியும் தொடங்குமிடம் கருப்பாகத்தான் இருக்கும்.

கருப்புத்தான் படைக்கும் சக்தியின் நிறம், இதனாலேதான் படைப்பாளி எனும் உற்பத்தியாளனுக்குக் கருநிறம் கொடுத்தது இந்துமதம், அது சாதிபிரிவினை அல்ல, உயர்வு தாழ்வு அல்ல அது மாபெரும் ஞான தாத்பரியம்.

இந்தப் படைக்கும் அன்னையினை மூலத்தாயினை ஞானத்தோடு இந்த உலகை இயக்கும் மகா சக்தியினைக் காளி எனச் சொன்னது இந்துமதம், முதல் வித்யை அவள்தான்.

அவளை வழிபட்டால் படைக்கும் சக்தியும் ஞானமும் பெருகும். படைப்புத் தொழில் மிக எளிதில் கைவசமாகும், அது ஞானத்தோடு அமையும். அதோடு எல்லாச் சூழலிலும் தன்னைத் தற்காக்கும் ஞானமும் அவளே தருவாள்.

அவள் மது கைடபனை உருவாக்கிய காட்சியினைக் கவனியுங்கள், விஷ்ணுவின் காதில் இருந்த அழுக்கில் இருந்து அவர்கள் உருவானார்கள், எத்தனையோ உறுப்பு இருந்தும் காதில் இருந்து ஏன் அவர்கள் வந்தார்கள்?

காதுதான் ஒருவனால் கட்டுப்படுத்தமுடியா உறுப்பு. ஒருவனால் கண்ணை மூட முடியும், மூச்சை நிறுத்தமுடியும், வாயினை மூட முடியும், ஆனால் காதினைக் கட்டுப்படுத்த முடியாது.

எது ஒருவனால் கட்டுப்படுத்தமுடியாதோ அதுவே அவன் பலவீனம், அவனுக்கான ஆபத்து அங்கிருந்தேதான் வரும். அப்படிச் சிக்கிக் கொண்டவன் அன்னையினை நாடி நின்றால் அவளே வந்து காப்பாள் என்பது அதன் தாத்பரிய போதனை.

அன்னைக்குக் கருமை நிறம் அவள் படைப்புத் தொழிலால் கொடுக்கப்பட்டது, நீளமான நாக்கு ஏன் கொடுக்கபட்டது?

மானிட உறுப்பில் சுவையில் நல்லது கெட்டது தருவது நாவே; ஒருவனின் செல்வாக்கு, சொல்வாக்கு எல்லாம் நிர்ணயிப்பது நாவே; ஒருவனின் அறிவும் ஞானமும் அந்த நாக்கின் மூலமே வெளிப்படும்.

அந்தப் பெரும் வரத்தை ஞான வரத்தை அன்னை தருவாள் என்பதைச் சொல்லும் தத்துவம் இது.

அன்னைக்கு மண்டை ஓடுகளை கபால மாலையாகத் தொடுத்துப் போட்டார்களே ஏன்?

எல்லா மானுடரும் அவளில்தான் முடிகின்றார்கள், சுடுகாட்டில் முடியும் மானிட வாழ்வு அவளோடேதான் கலக்கின்றது. அவளே முடிவு என்பதைச் சொன்னார்கள், இன்னும் ஆழமாக யோக ரகசியங்களைச் சொன்னார்கள்.

கபாலத்தில் இருக்கும் உச்சந்தலை சக்கரம் துலங்குவதே ஞானத்தின் தொடக்கம், அது துலங்கப்பட்டவனே ஞானி எனும் ரிஷி நிலையினை அடைவான். அன்னை அந்த வரத்தைத் தருவாள். சகஸ்ர சக்கரத்தைத் துலக்கி ஞானம் தருவாள் என்பதைச் சொன்னார்கள்.

பத்ரகாளி, ச்மசான காளி, கால காளி, குஹ்ய காளி, காமகலா காளி, தன காளி, சித்தி காளி, சண்டி காளி, டம்பர காளி, கஹனேச்வரீ காளி, ஏகதாரா காளி, சாமுண்டா காளி, வஜ்ராவதி காளி, ரக்ஷா காளி இந்தீவரீ காளி, தனதா காளி, ரமண்யா காளி, ஈசான காளி, மந்த்ரமாலா காளி, ஸ்பர்சமணி காளி, ஸம்ஹார காளி, தக்ஷிண காளி, ஹம்ஸ காளி, வீர காளி, காளி, காத்யாயனி, சாந்தா, சாமுண்டா, முண்டமர்தினி, பத்ரா, த்வரிதா, வைஷ்ணவி என எல்லாமும் அவள் வடிவமே.

இந்தக் காளி என்பது பெரிய சக்தி, பிரபஞ்சம் முதல் அணுவரை வியாபித்திருக்கும் சக்தி. அவளைச் சிவமரபில் அன்னை பார்வதி சக்தி என்றும், வைஷ்ணவ மரபில் மகாலஷ்மி என்றும் சொன்னார்களே அன்றி மூல சக்தி ஒருத்தியே.

அதுதான் சாக்தம் என அன்னையினை வழிபடும் மரபின் மூலமாக இருந்தது. அவளைத்தான் சிவனோடு உஜ்ஜைனி காளி என்றும் இன்னும் பல இடங்களில் மகா காளியாகச் சொன்னார்கள்.

வங்கத்தில் காளி எனத் தனித்து வணங்கினார்கள், விஷ்ணுவோடு வரும் எல்லாத் தாயார் அம்சங்களும் காளியின் அம்சமே.

வேதங்கள் அவளைப் பாடின. எல்லாக் கவிஞர்களும் பாடினார்கள், எல்லாத் தேவர்களும் தெய்வங்களும் அவளை வணங்கினார்கள்.

அன்றைய சப்தரிஷிகள் முதல் காளிதாசன், சீனிவாச ராமானுஜம் வரை அவளே மூலமாய் இருந்தாள், அவளின் பராக்கிரமமே. திருமூலரும் அவளைப் பாடுகின்றார்.

சௌந்தர்ய லஹரி அவளைப் பாடுகின்றது “சர்வ சக்தி சுதந்தரி” என அவள் யாருக்கும் கட்டுப்படாத தனித்துவமானவள் எனச் சொல்கின்றது, அதாவது காலங்களைக் கடந்தவள்.

லலிதா சஹஸ்ரநாமம் சொல்லும் “ராகினி” அவளே, கலியில் அவளே தெய்வம், கலி காலத்தை கடக்க அவள் அருள் அவசியம் என்பதை விசிலா தந்திரம் சொல்கின்றது.

மஹா காலசம்ஹிதை, மஹா நீல தந்திரம், மஹா நிர்வாண தந்திரம், சக்தி சங்கம தந்திரம், கோடல தந்திரம், நிருத்தர தந்திரம், குலார்ணவ தந்திரம், குல சூடாமணி தந்திரம், காளி குல சூடாமணி தந்திரம், மஹா சீனஸாரக்ரமம், புரச்சர்யார்ணவம், காலி கற்பூராதிஸ்துதி, யோகிநீ தந்திரம், முண்டமாலா தந்திரம், சியாமளா இரகசியம் என எல்லாமே அவளின் பெரும் கீர்த்தியினைச் சொல்கின்றது.

அவளே வித்யாரட்சை. அவளே ஒவ்வொருவரின் வித்தைக்கும் ஞானத்துக்கும் அதிபதி என்கின்றது காளி தந்திரம். தட்சனா என்றால் எல்லாம் வல்லவள் அறிந்தவள் எனப் பொருள், அதனால் அவளே தட்சனா தேவி என்கின்றது காமாக்யா தந்திரம். அவளே எல்லாத் தெய்வத்தையும் விட அதிக வரம் தருபவள் என்கின்றது சக்தி தந்த்ரா யோகம்.

அவள் நித்யை என்றும் முடிவில்லாதவள் அவளுக்கு பிறப்பு இறப்பில்லை என்றும் சுமங்கலி என்கின்றது மகாநிர்வாண தந்திரம். தன் பக்தர்களுக்கு அவள் ஒரு வசீகரம் கொடுப்பாள் என்கின்றது மூர்த்தி ரகசியம்.

அவள் உடலின் ரத்தமாக இருப்பதாலே ரத்தகாளி, அதனாலே அவள் செவ்வரளி பூக்களால் அர்ச்சிக்கப்படுகின்றாள். காளி ஒருத்தியினை வணங்கினால் எல்லாத் தெய்வத்தையும் வணங்கிய பெரும் பலன் கிடைக்கும், அவன் காலத்தைத் தாண்டி நிற்பான்.

காளியின் பக்தன் எந்த ஆபத்தையும் சந்திப்பதில்லை. எல்லாவற்றிலும் காக்கப்படுகின்றாள். அவளை வழிபடுபவன் காலத்தைக் கடந்து நிற்பான்.

சாக்த மரபில் வரும் காளராத்ரி அன்னைக்குரிய காலம் என்றாலும் அதாவது தீபாவளி ஒட்டி வந்தாலும் இந்த நவராத்திரி காலம் அவளுக்கு முக்கியமானது.

காளி என்பவள் அஞ்சதக்க தெய்வம் அல்ல, அவள் மிக மிக உக்கிரமானவளும் அல்ல, அவளின் முழுத் தோற்றமும் கவனமாகக் கண்டால் அவளே காவல், அவளே கல்வி, அவளே செல்வம், அவளே ரிஷி, அவளே வீரம், அவளே சகலமும் என்பது விளங்கும்.

ஆன்மீகமாக அவள் தெய்வம். எல்லா வகையிலும் மானுடனைக் காத்து நடத்தி கர்மம் கழிக்கச் செய்யும் தெய்வம், மானுட உடலில் அவளே இதயத் துடிப்பு. இதயவெளியில் இருப்பவள் அவளே. அனாஹத சக்கரம் அவளுடையது.

கிரகங்களில் அவள் சனியின் சாயல், அதாவது கர்மத்தை செய்ய வைக்கும் சக்தி அவளே. நல்லது கெட்டது தாண்டி நடுநிலையாக ஒருவனின் கர்மத்தை விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு எதிலும் அவன் சிக்காமல் செய்யவைப்பவள் அவளே.

இதனாலேதான் அவளை வணங்கிய எல்லோரும் கர்மத்தைச் சரியாகச் செய்தார்கள். அது அவளை வழிபட்ட தேவர்கள் முதல் விக்ரமாதித்தன் போன்ற மன்னர்களும், காளிதாசன், பாரதி எனக் கவிஞர்களும் இப்படிக் கர்மத்தைச் செய்து காலத்தை வென்றவர்களே.

நாயக்க மன்னர்கள் வீரசிவாஜி போன்ற இந்துமன்னர்கள் உருவாகி வந்ததும் அவளாலே.

அவள் கர்மத்தைச் செய்யவைப்பவள் என்பதாலே கண்ணனில் அவள் அம்சமும் இருந்தது. கிருஷ்ண அவதாரம் அவள் அருளிலே நிகழ்ந்தது. கருமை நிறம் முதல் அவரின் தந்திரம் வரை எல்லாமே அவர் கர்மத்தைச செய்து எதிலும் ஒட்டாமல் இருந்தது அவள் அருளே.

கண்ணனின் சகோதரியாக வந்ததும் அவளே.

அவள் சிவன் முன்னால் வடதிசையில் நின்றாள் என்பதும் கவனிக்கத்தக்கது. பூமியில் வடபாகம்தான் பெரியது, நிலம் மிகுந்தது, மக்களும் வளமும் கொண்டது. காந்தபுலம் வடக்கே இருந்துதான் தெற்கே பாயும், அவ்வகையில் அவள் அந்தப் பெரும் சக்தியாய் நிற்கின்றாள் என்பதே அந்த வடதிசை தத்துவம். ஒளிபடாத இடமும் இருள் சூழ்ந்த இடமும் அதுதான்.

அந்த மகா காளி அண்டத்தில் உண்டு, நம் உடலில் உண்டு, உலக இயக்கத்தில் உண்டு, படைப்பில் எல்லாமும் உண்டு.

தாயின் கருவறை அவளே, உலகம் கொடுக்கும் எல்லாமும் அவளே, எல்லாம் உருவாகி வருவதும் பின் ஒடுங்குவது அவளிடமே, எல்லா ஞானமும் அவளே.

அணுவினுள் இருக்கும் கரும் இடம் எனும் வெற்றிடம் அவளே. அணுத்துகளின் இயக்கமும் சக்தியும் அவளே.

மானுடன் உருவாக்கிய எந்திரங்களின் உள்ளே இருக்கும் கருப்பு அறையின் சக்தி அவளே, கணினிச் சில்லின் கருப்பு ஞானமும் அவளே.

இந்த மகா பிரபஞ்சத்தின் 2% மட்டுமே மானுடன் அறிந்தது, மீதி எல்லாமே கரும் சக்தியும் கருமை நிறமும் நிரம்பியது. இந்தக் கறுமை வெளி என்பது சக்தி மிக்கது, கருந்துளை போன்ற மகா சக்திகள் அங்குதான் உண்டு.

இந்தக் கரும் சக்திதான் இந்தக் கரும் வெளியில் உள்ள ஒரு சக்திதான் கோள்களை, சூரிய சந்திரனை இயக்குகின்றது.

இன்றைய விஞ்ஞானம் சொல்லும் ஒரு விஷயம் அண்டவெளி எங்கும் டார்க் எனர்ஜி எனும் “கரும் சக்தி” நிரம்பியுள்ளது, அதன் சக்தி எப்படியானது என்றால் ஒரு கிலோ கருப்பு சக்தியினை அள்ளி வந்தால் இந்தப் பூமியில் 100 ஆண்டுகாலம் எரிபொருளாக இயக்கு சக்தியாகப் பயன்படுத்தலாம் என்கின்றது.

ஆம், அதைத்தான் அண்டவெளி முதல் அணுமுதல் தாயின் வயிறு முதல் அணுசக்தி முதல் எங்கும் ஊடுருவி நடத்தும் அந்த மகா சக்தியினைத்தான் காளி என்றார்கள் இந்துக்கள். காலத்தைக் கடந்து நிற்பவள் என அவள் அண்ட சராசரமாக இந்தப் படைப்புக்களாக நிரம்பியிருப்பதைச் சொன்னார்கள்.

இதைத்தான் “யாதுமாகி நின்றாள் காளி” என்றான் பாரதி.

“காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீது
காளிசக்தி யென்றபெயர் கொண்டு ரீங்
காரமிட் டுலவுமொரு வண்டு தழல்
காலும்விழி நீலவண்ண மூல அத்து வாக்களெனும்
கால்களா றுடையதெனக் கண்டு மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு.
மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி
விண்ணுமண்ணு மானசக்தி வெள்ளம் இந்த
விந்தையெல்லா மாங்கது செய் கள்ளம் பழ
வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம் ஆக
வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம். “

எனப் பாடியவனும் அவனே.

அவளைக் காளிதாசனும் அதே மொழியில் போற்றினான், காளமேகப் புலவனும் இன்னும் பலரும் பாடினார்கள்.

அவளை இந்நாளில் மனதார தொழுங்கள், எல்லா வரமும் அருளும் அவள் தருவாள். இந்நாளில் அவளை மனமார வணங்குங்கள் அவள் உங்கள் குறையெல்லாம் தீர்த்துக் கர்மத்தை செய்யவைத்து காலம் கடந்து நிலைக்க வைத்து வாழவைப்பார்.

“ஓம் காளிகாயை வித்மஹே ச்மசானவாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்”

என்பது அவளுக்கான காயத்ரி மந்திரம். அதைச செய்யலாம், அப்படியே “ஓம் ஸ்ரீகாளீதேவ்யை நம” என்ற மந்திரத்தினையாவது இன்று தவறாமல் சொல்லுங்கள், இந்த இரவில் சொல்லுங்கள்.

கருமைக் கொண்டவளும், கர்மத்தைச் செய்யவைப்பளுமான அந்தத் தாய் அந்தப் புனிதமான கரும் இருளில் உங்களுக்கு எல்லா நன்மையும் அருளும் வரமும் தருவாள், அவளால் இத்தேசம் இன்னும் இன்னும் உயர அவள் வரமருளட்டும்.